Tuesday, February 25, 2020

திருப்பாத தரிசனம் - 10



திருவாரூர் திருத்தலத்தின் சிறப்புகள்

சுந்தரரும் பரவையாரும் தியாகராஜப்பெருமானை 
வணங்கும் கோலம்


நாம் முதலில் தரிசிக்கின்ற தலம் சப்தவிடங்க தலங்களில் முதன்மைத் தலமான திருவாரூர் ஆகும். நுண் மணலால் ஆன புற்றாக சுயம்புவாக மூலவராக அருள் பாலிக்கின்றார். திருமாலும், வாசவனும்  பூசித்த மூலமூர்த்தி உற்சவராக இத்தலத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றார்.வாருங்கள் திருவாரூரின் சிறப்புகளை முதலில் காணலாம்.  

பாடிளம் பூதத்தினானும் பவளச்செவ்வாய் வண்ணத்தினானும்
கூடிளமென் முலையாளைக் கூடிய கோலத்தினானும்
ஓடிளவெண் பிறையானும் ஒளிதிகழ் சூலத்தினானும்
ஆடிளபாம் பசைத்தானும் ஆரூர் அமர்ந்த அம்மானே.

என்று அப்பர் பெருமான் பாடிய சிவபெருமான், நம்மை எல்லாம் உய்விக்க ஆலமுண்ட நீலகண்டனாக, தியாகராஜ மூர்த்தியாக,  அம்மையுடனும், ஸ்கந்தனுடனும் அருள் பாலிக்கும் தலமே திருவாரூர். சப்தவிடங்க ஸ்தலங்களுள் முதன்மையானது இத்தலம். சைவ சமய மரபில் பெரிய கோவில் என்றால் அது திருவாரூரைக் குறிக்கும்.

விராட் புருஷனுடைய மூலாதாரத் தலமாகவும், பூமிதேவியின் ஹிருதய கமல தலமாகவும் விளங்கும் தலம்.  

திருமாலும் நான்முகனும் காண முடியாத திருவடிகளால் ம்மண்ணுலகில் தன் தோழனான சுந்தரருக்காக  எம்பெருமான் பரவையாரிடம்  தூது சென்ற  பெருமையுடையது சைவ சமயத்தின் தலைமை பீடமாக விளங்குகின்ற இத்தலம்.

முக்தி தலங்களுள் பிறக்க முக்தி தரும் தலம். எனவே வன்தொண்டரும், எம்பிரான் தோழருமான சுந்தர மூர்த்தி நாயானார் "திருவாரூர் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன்"  என்று தனது திருத்தொண்டர் தொகையிலே பாடுகின்றார்.

மாணிக்கவாசகரும்
திருவார் பெருந்துறை மேய பிரான் என்பிறவிக்
கருவேரறுத்தபின் யாவரையுங் கண்டதில்லை
அருவாய்ரூருவமுன் ஆய பிரான் அவன் மருவும்
திருவாரூர் பாடி நாம் தெள்ளேணம் கொட்டாமே
என்று கொண்டாடுகிறார். திருவாரூர் பிறந்தவர்களிடம் எமன் வரமாட்டான். முக்திப்பேறு தந்து இறைவனே அழைத்துக்கொள்வார் என்பதால் திருவாரூர் பிறக்க முக்தித்தலம் ஆகும். ஆம் ஆரூர் பெருமானை வழிபட்டால் எல்லாம் கிட்டும் அவர் ஒன்றை மட்டும் அளிக்க இயலாதவராய் இருக்கிறார். என்ன அது மறு பிறவி!. எனவே இது முக்தித் தலம். ஆம் “உதித்தவர் உதித்திடாத ஆரூர்” ஆகும்.

நமி நந்தி அடிகளுக்கு இறைவன் திருவாரூரில் பிறந்தவர்கள் அனைவரையும்  சிவகணங்களாகக் காட்டினார், இதனை   “ஞான மறையோய்! ஆரூரில் பிறந்தாரெல்லாம் நம் கணங்கள் ஆன பரிசு காண்பாய்” என்றருளிச் செய்கின்றார் பெரிய புராணத்தில் சேக்கிழார் பெருமான்.

மற்ற முக்தித்தலங்கள் தில்லையில் தரிசிக்க முக்தி, திருவண்ணாமலையை நினைக்க முக்தி, காசியில் இறக்க முக்தி. மற்ற தலங்களில் நாம் முயன்றால் முக்தி பெறுவது சாத்தியம். திருவாரூரில் பிறந்து முக்தி பெறுவதென்பது பூர்வ ஜென்ம புண்ணியத்தால் மட்டுமே சாத்தியம். ஏனெனில் பிறப்பினை நிர்ணயிப்பது,  மது நிலைக்கு அப்பாற்பட்டது. இதனால்தான் திருவாரூர் பிறந்தார்கள் அனைவரும் தொகையடியார்களாக போற்றி வணங்கப்படுகின்றனர்.

மக்கள் கல்லாலும் உலோகத்தாலும் கடவுளர் உருவத்தை அமைத்து வழிபடுவதற்கு முன்னர் மரத்தையும், புற்றுகளையும் வழிபட்டனர். ஆதலின் புற்று வழிபாடு தொன்மையானது.  எனவே 
சொன்ன நாட்டிடைத் தொன்மையில் மிக்கது
மன்று மாமலராள் வழிபட்டது
வன்னி யாறு மதி பொதி செஞ்சடைச்
சென்னியார் திருவாரூர் திருநகர் - என்று பாடல்பெற்ற திருவாரூர்   பஞ்ச பூதத்தலங்களில் பிருத்வி தலம் ஆகும்.

இறைவன் வெள்ளை மணலாலான இலிங்க ரூபத்திலேயே சுயம்புவாக  இத்தலத்தில் தோன்றியதால், இத்தலம்  பஞ்ச பூதத்தலங்களில் பிருத்வி (நிலம்) தலமாகும்.  திருவாரூரில் உள்ள ஆர் என்னும் விகுதி -பிருத்வி (பூமி)  இதையே குறிக்கின்றது. தேவேந்திரன் அமைத்த அயிர் எனும் ஒருவகை நுண்மணல் புற்றில் தோன்றியவரே மூலவர் வன்மீகநாதர். “அயிராவணமே எம் அம்மானே” என்பது அப்பர் வாக்கு.

ஆறதனில் மணல் குவித்து   காமாட்சி அம்பாள்   அரிய தவம் புரிந் திருக்கச்சி என்னும் காஞ்சி தலத்தையும் பிருத்வி தலமாக கருதுகின்றனர். அத்தலத்திலும் ஐயன் சுயம்பு, மணலால் ஆனவர்.  மற்ற பஞ்சபூத்தலங்கள் அப்புத்தலம் (நீர்) - ஜம்புகேஸ்வரம் என்னும் திருவானைக்கா, அக்னித்தலம் - திருவண்ணாமலை, ஆகாயத்தலம் – சிதம்பரம், வாயுத்தலம் – திருக்காளத்தி ஆகும்.

ஆதாரத் தலங்களுள் குண்டலினி சக்தியின் மூலாதாரமாக விளங்கும் தலம் திருவாரூர். பூமியாகிய விராட புருஷனின் மூலாதாரச் சக்கரமாக இத்தலம் விளங்குகின்றது. எனவே இத்தலம் திருமூலட்டானம் என்றும் வழங்கப்படுகின்றது. மற்ற ஆதாரத்தலங்கள் சுவாதிஷ்டானம் - திருவானைக்காவல், மணிபூரகம் (நாபி) - திருவண்ணாமலை, அநாகதம் (இதயக் கமலம்) - சிதம்பரம், விசுத்தி (கழுத்து) - திருக்காளத்தி, ஆக்ஞை (புருவ மத்தி) - காசி, சகஸ்ராரம் (உச்சி) - திருக்கயிலாயம்.

நமது பாரதநாடு முழுவதும் சக்தி பீடங்களென்று அம்பிகை சிறப்புடன் விளங்கும் 64 பராசக்தி பீடங்களுள் முதன்மையானதாகவும் ஆதார பீடமாகவும் போற்றப்படுகின்றது திருவாரூர். மேலும் அம்பாளின் அக்ஷித்தலங்களுள் ஒன்று. அம்மை இத்தலத்திலே கமலாம்பாளாக யோக நிலையிலே கோவில் கொண்டுள்ளாள். திருமகளும் அலைமகளும் வழிபட்டதால் கமலாலயபுரம் என்று புகழ் பெற்ற தலம்.

திருவாரூர் ஆழித்தேர்

இத்தலத்தின் விரிந்து பரந்த திருக்குளமான கமலாலயத்தின் பரப்பளவு கோவிலின் அளவே. கோவில் ஐந்து வேலி, குளம் ஐந்து வேலி, செங்கழுநீர் ஓடை நந்தவனம் ஐந்து வேலி என்பது பழமொழி. (ஐந்து வேலி என்பது 1000 அடி நீளம், 700 அடி அகலம் ஆகும்)
மூர்த்தி, தலம், தீர்த்தம் என்னும் முப்பெருமைகள் மட்டுமல்ல தமிழகத்திலேயே மிகப்பெரியதான ஆழித்தேரை உடைய தலம். பெரிய தேரான ஆழித்தேரில் அஜபா நடனமிட்டு தியாகேசர்  உலா வரும் தலமும் இதுவே.

சங்கர சேவகனென்னும் சோழ அரசனது வேண்டுகோளின்படி ஸ்ரீதியாகேசர் அரச வடிவங்கொண்டருளி பல வருடங்கள் அரசாட்சி செய்த தலம்.

திருமால், திருமகள், பிரம்மா, மன்மதன், இந்திரன், யமன், அகத்தியர், விசுவாமித்திரர், மகாபலி, துர்வாசர், முசுகுந்தன், தசரதன், ஸ்ரீராமன், லவ-குசர். புரூரவசு, தேவர், யட்சர், கின்னரர், கிம்புருடர், சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர்,  மாணிக்க வாசகர், தண்டி அடிகள், சோமாசி மாற நாயனார், விறண்மிண்டர் என பலரும் தியாகேசரை வழிபட்டு வரம் பெற்ற திருத்தலம்.

திருவந்திக்காப்பழகர் என்ற திருநாமத்திற்கேற்ப தியாகராஜப் பெருமானுக்கு செய்யப்படும் அறுகால பூசைகளுள் சாயரட்சை பூஜை மிகவும் சிறப்பானது. இப்பூசை நித்திய பிரதோஷ பூசை எனறழைக்கப்படுகிறது இப்பூசையின் போது தேவேந்திரன், தேவர் குழாத்துடன் கலந்து கொள்கிறான் என்பது ஐதீகம். தியாகராஜப்பெருமானின் மாலை பூஜை பிரதோஷ பூஜைக்கு இணையானது.  எனவே த்தலம் நித்ய பிரதோஷ தலம் ஆகும். அர்ச்சகர் நீண்ட அங்கி, தலைப்பாகை அணிந்து தேவேந்திரன் கோலத்தில் பூசிக்கின்றார். மற்ற தலங்களின் சிறப்பு பூசைகள் திருக்குற்றாலத்தில் திருவனந்தல் பூசையும், இராமேஸ்வரத்தில் காலை பூசையும், திருவானைக்காவில் மதிய பூசையும், மதுரையில் இராக்கால பூசையும், தில்லையில் அர்த்தஜாம பூசையும் சிறப்பு.


33 ஏக்கர் பரப்பளவில் (14 லட்சம் சதுர அடி) நிலப்பரப்பில் அமைந்துள்ள இவ்வாலயம் இந்தியாவின் மிகப்பெரிய பரப்பளவு கொண்ட ஆலயம் ஆகும்.

திருவாரூர் கோபுரங்கள்

திருவாரூரில் கோவிலில் மொத்தம் 84 விநாயகர்கள் உள்ளனர். அம்மன் சன்னதி பிரகாரத்திலுள்ள நடுக்கம் தீர்த்த விநாயகர் நரம்பு தளர்ச்சி உள்ளவர்கள், மனப்படப்பு இருப்பவர்கள் வழிபட நன்று.  கமலாலய குளக்கரையில் உள்ள மாற்றுரைத்த பிள்ளையாரை பெண்கள் பொன் நகை வாங்குவதற்கு முன் வணங்குகின்றனர். சிவன் சன்னதி முதல் பிரகாரத்தில் ஐந்து தலை நாகத்தின் நடுவில் விரிந்த தாமரைப்பூவின் மீது நடனம் ஆடும் நிலையில் உள்ள மூலாதார விநாயகரை யோகம் பயில்பவர்கள் வழிபட நன்று. மூலாதாரத்தின் அதி தெய்வமான கணபதியே, பரமானந்தத்தின் உருவகமான ஆடல்வல்லான் போன்று நடனமாடி மூலாதாரத்தின் (குண்டலியின்) poruபெருமையை உலகுக்கு உணர்த்துகின்றார்.   வாதாபி கணபதி முத்துசுவாமி தீட்சிதரின் பாடல் பெற்றவர். சேரமான் பெருமாள் அளித்த 120 பட்டிணப்படி பொற்காசுகளால் உருவானவர் ங்கலக்காசு பிள்ளையார் இவர் தியாகராஜஸ்வாமிக்கும் வான்மீகநாதருக்கும் இடையில் அமர்ந்திருக்கின்றார். பிரம்மோற்சவத்தின் போது பஞ்சமூர்த்தியாக வலம் வருபவர் இவரே.  ஆகாய விநாயகர் மூன்றாம் சுற்றில் தென்புற   வளாகத்தில் எழுந்தருளியுள்ளார். சுந்தரர் வெள்ளை யானையில் கயிலை செல்வதை அறிந்த பரவை நாச்சியார் விநாயக அவசர அவசரமாய்   பூசை செய்ய   பிள்ளையார் எப்போதும் போல பூசிக்கப் பணிந்தார். பூசை முடிந்த பின் பரவையை துதிக்கையால் தூக்கி   கயிலையின் வாயிலில் சேர்ப்பித்தாராம். தட்டஞ்சுற்றி மண்டபத்தில் பத்து திருக்கரங்களுடன் மடியில் தேவியை அணைத்த வண்ணம்  அருட்காட்சி நல்குகிறார் வல்லப கணபதி.  மேலும் வீதி விடங்க விநாயகர், வாதாபி கணபதி, ஆசை விநாயகர், உச்சிஷ்ட கணபதி, பொற்கம்ப விநாயகர், ஆகியோர் சிற்ப சிறப்பாலும், பக்திச் சிறப்பாலும் போற்றப்படுகின்றனர்.

திருவாரூர் ஆலயத்தில் 8 துர்க்கைகள் அருள் பாலிக்கின்றனர். முதல் பிரகாரத்திலுள்ள மகிசாசுரமர்த்தினியே முக்கிய பிரதான துர்க்கை. இத்துர்க்கை நுளம்பபாடியிலிருந்து வெற்றிச் சின்னமாகக் கொண்டு வரப்பட்ட அம்மன். மேலும் இரண்டு துர்க்கை சன்னதிகள் முதல் பிரகாரத்திலும், இரண்டாம் பிரகாரத்தில் நான்கு துர்க்கைகளும், கமலாம்பாள் சன்னதியில் ஒரு துர்க்கையுமாக எட்டு துர்க்கை சன்னதிகள் சிறப்பாக திருவாரூரில் அமைந்துள்ளன.

எம்பெருமான் இத்தலத்திலே விடங்கராகவும், இருந்தாடும் அழகாராக, தியாகராஜப் பெருமானாக எழுந்தருளி அருள் பாலிக்கின்றார். டங்கம் என்றால் உளி, உளியால் செதுக்கப்படாமல் தானே தோன்றியதால் இவர் விடங்கர். திருவாரூர் வீதி விடங்க செண்பக தியாகர்,  மரகத மேனியர் ஆவார். திருவீதியில் வரும் இறைவன் அழகைக் கண்டு பக்தர்கள் காமுறும் செயலைக் கொண்டே இறைவனுக்கு வீதி விடங்கர் என்ற பெயர் ஏற்பட்டிருக்கவேண்டும் என்பது ஆன்றோர் கருத்து.

நித்தியப்படி அபிஷேகம் இவருக்குத்தான்.  தினமும் மூன்று முறை காலை, உச்சிக்காலம் மற்றும் அர்த்தசாம பூசையின் போது மரகத வீதி விடங்கருக்கு அபிஷேகம் நடைபெறுகின்றது. இவருக்கு வெள்ளிக் கவசம் சார்த்தி பாதுகாத்து வருகின்றனர்.

சேலை யுடையழகா தேவரகண் டாகழுநீர்
மாலை யழகா மணிமார்பா - வேலை
அடங்கார் புரமெரித்த வாரூரா வீதி
விடங்கா பிரியா விடை -   என்று காளமேகப்புலவர் தியாகேசனைப் போற்றுகின்றார்.

மதுரையில் எம்பெருமான் 64 திருவிளையாடல்கள் புரிந்தருளினார், திருவாரூரிலோ எம்பெருமான் 364 திருவிளையாடல்கள் புரிந்து அருளியுள்ளார்.

ஆழித்தேர் - கமலாலய குளம் - மேற்கு கோபுரம்


நந்தி இத்தலத்திலே தியாகராஜபெருமானுக்கு எதிரிலே மற்ற சிவாலயங்களில் உள்ளது போல் படுத்த கோலத்தில் இல்லாமல் நின்ற கோலத்திலே விளங்குகின்றார் தியாகராஜபெருமானுக்கு முன்னால் படுக்கக்கூடாது என்ற மரியாதையின் நிமித்தம் இவ்வாறு நின்ற நிலையில் உள்ளார் என்பர். இவ்வாறு நந்தியெம்பெருமான் நிற்பதைக் கண்டு மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள்

பிணை அடியார் குறைக்கிரங்கிப் பெருமான்நீ எழுந்தருளின்
துணையடிகள் கன்றமுனம் தூது சென்றார் போலடையாது
அணைகுதியென் வெரிநிவர்ந்தென் றருள்நோக்கி நிற்பது போல்
இணையில் விடங் கப்பெருமான் எதிர்நிற்கும் மால்விடையே

பெருமானே! முன்பொருகால் தோழன் சுந்தரருக்காக பாத மலர்கள் நோக, மண் தோய தூதுவனாய் நடந்து சென்றாயே! அது போல் இனி நடந்து போகக் கூடாது. அப்படி செல்வதென்றால் என் முதுகில் ஏறிக்கொண்டுதான் செல்ல வேண்டும்” என்கிற குறிப்போடு நின்ற கோலத்தில் நந்தியெம்பெருமான் காட்சி தருகின்றார் என்று பாடுகின்றார்.

நவக்கிரகங்கள் தியாகராஜரின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் தலம். இப்பதி பூலோக கயிலாயம் என்பதால் இத்தலத்தில் நவக்கிரகங்களும் ஒரே வரிசையில் கிழமைக்கேற்ப தியாகராஜரை வழிபடும் நிலையில் விளங்குகின்றன. தியாகேசர் சன்னதியில் மேல் வரிசையில் ஒன்பது விளக்குகள் உள்ளன. நவக்கிரகங்கள் இவ்வாறு தீபவடிவில் தியாகேசரை வழிபடுவதாக ஐதீகம்.

சதயகுப்தன் என்ற அசுரன், தேவர்களுக்கு தொந்தரவு கொடுத்தான். இவனை சனிதோஷம் பிடித்தது. எனவே அவன்  நவக்கிரகங்களை எதிர்த்து போரிட்டான். பயந்து போன கிரகங்கள் திருவாரூர் சிவனிடம் முறையிட்டனர். சிவன், “என்னை நாடி வரும் பக்தர்களுக்கு த்தொந்தரவும் கொடுக்கக்கூடாதுஎன்ற நிபந்தனையின்படி நவக்கிரகங்களைக் காப்பாற்றினார். எனவே, நவக்கிரகங்கள் திருவாரூரில் நேர்கோட்டில் சிவனை நோக்கியபடி அமைந்துள்ளன. கிரகங்கள் பக்தர்களுக்குத் தொல்லை கொடுக்கிறதா?  என்பதைக் கண்காணிக்க விநாயகர் சிலை, கிரகங்களின் சன்னதியில் உள்ளது. எனவேதிருநள்ளாறு சென்றாலும் திருவாரூர் செல்ல வேண்டும்என்பார்கள் என்றொரு ஐதீகமும் உண்டு. நவகிரகத்தலங்களுள் திருவாரூர் சந்திரன் பரிகாரத்தலம்.
வ்வாலயத்தில் இரண்டு சண்டிகேஸ்வரர்கள் சன்னிதி உள்ளது. இத்தலத்தில் பிறக்க முக்தி என்பதால் எமனுக்கு இங்கு வேலையில்லை என்பதால் எமனே இங்கு சண்டிகேஸ்வரராக எமசண்டிகேஸ்வரராக எழுந்தருளியுள்ளான். எமசண்டிகேஸ்வரரின் திருவுருவம் ஜடாமுடி தாடியுடன் உள்ளது.  

பூங்கோவில் என்றும் நடுவண நாதர் கோவில் என்றும் அழைக்கப்படும் இத்திருக்கோவிலில் 100 க்கு மேற்பட்ட சன்னதிகள், 5 திருச்சுற்றுகள் அவற்றில்  3 பெரிய பிரகாரங்கள், 12 பிரம்மாண்டமான மதில்கள்,  9 இராஜ  கோபுரங்கள், 80 விமானங்கள், வரலாறு கூறும் 13 மண்டபங்கள்,   14 மதில்கள், 15 தீர்த்தக்கிணறுகள், 3 நந்தவனங்கள், 84 விநாயகர்கள், 365 சிவலிங்ங்கள், 80 தனித்துவம் கொண்ட விமானங்கள், ஆயிரம் கற்தூண்கள்,  என்று 15 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்து அமைந்திருக்கின்றது. ஏழு கோபுரங்களையும் இந்திர லிங்கத்தின் அருகில் உள்ள கல்லின் மேல் நின்று தரிசிக்கலாம். இவ்வாலயத்திற்குள் சென்று விட்டால் குவிந்த கரங்களை விரிப்பதற்கு வழியே இல்லை. அவ்வளவிற்கு அடுத்தடுத்து நூற்றுக்கும் மேற்பட்ட சன்னதிகள் அமைந்துள்ளன. கும்பாபிஷேகத்தின் போது மூன்று நாட்களில்தான்  அனைத்து சன்னதிகளுக்கும் கும்பாபிஷேகம் செய்ய இயலும். அவ்வளவு சன்னதிகளை கொண்ட தலம்.

அரசர்களும் எண்ணற்ற பக்தர்களும் காலந்தோறும் திருவாரூர்ப் பெருமானைப் பூஜித்து வாழ்வும் வளமும் பெற்றுள்ளனர். இவ்வாறு ஆயிரக்கணக்கானவர்களால் நிறுவப்பட்டு பூஜிக்கப்பட்ட லிங்கங்களைக் காட்டும் வகையில் ஆயிரம் சிறு சிறுலிங்கங்களை கொண்ட சகஸ்ரலிங்கம் உட்பிரகாரத்தில் அமைந்துள்ளது.





சுந்தரமூர்த்தி நாயனார் இவ்வூர் இறைவர் தியாகராஜரிடம் தோழமை கொண்டு பழகினர் என்பது வரலாறு. இவரது தாயார் இசை ஞானியார் மற்றும் இல்லாள்  பரவை நாச்சியாரின் அவதாரத்தலமும் திருவாரூர். சுந்தரர் பரவையார் திருமணம் நடந்த தலம், பின்  திருவொற்றியூரிலே தான் இழந்த இடக்கண்ணை பதிகம் பாடி சுந்தரர் பெற்ற தலம். சுந்தருக்காக எம்பெருமானே தன் திருப்பாதம்  நிலத்தில் பதிய பரவையாரிடம் தூது நடந்த தலம். நட்பின் முக்கியத்தை உணர்த்த சுந்தரருக்கு தனி இடம் தந்த தலம்.
தேவார பாடல் பெற்ற அறநெறி என்னும் அசலேஸ்வரம், ஆனந்தேஸ்வரம், ஆடகேஸ்வரம், சித்தீஸ்வரம், விஸ்வகாமதேஸ்வரம் என்று எண்ணற்ற சிவ சன்னதிகளையும் கொண்ட தலம்.  ஸ்ரீகமலாம்பாள் திருவாரூக்கு எழுந்தருளி தவக்கோலம் கொண்ட போது தோன்றிய மூர்த்தமே ஆடகேஸ்வரம் ஆகும். அருகே பரவை நாச்சியார் மண்ணால் கட்டி வழிபட்ட பரவையுண் மண்டலி திருக்கோவிலும் உள்ளது.

சக்தி வாய்ந்த தியாகராஜ சக்கரம் தியாகேசரின் வலப்பக்கத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதால் நம்முடைய பாவங்களையெல்லாம் நீக்கி அருளும் விமோசன தலம்.

திருவாரூர் தலத்தின் தலவிருட்சம் சிவப்பு பாதிரி மரம் ஆகும். இம்மரம் பூக்கும் ஆனால் காய்க்காது. இம்மரம் விதையின்றி ஒரு கிழங்கிலிருந்து வெடித்து வந்து நான்கு கிளைகளாக அமைந்துள்ளன. நால் வேதங்களான ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களின் ஆணவத்தைக் களைந்து விருட்சமாகின.

திருவாரூர் ஆலயத்தில் யாக சாலை, மகா யாக சாலை, பிள்ளையார் யாக சாலை, முருகன் யாக சாலை என்று பல  யாக சாலைகள் உள்ளன.

அறுபத்து மூன்று நாயன்மார்களின் வரலாற்றைக் கூறும் காப்பியமான திருத்தொண்டர் புராணம் என்ற பெரிய புராணத்தின் மூலமான திருத்தொண்டர் தொகை பாடப்பட்ட தலம். இப்பாடலுக்கு “தில்லை வாழ அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்” என்று முதல் அடி எடுத்துக்கொடுத்தவர் ஆருர் தியாகேசர் ஆவார்.

இத்திருத்தலத்தின் தேரும் திருவிழாவும் திருக்கோயிலும் திருக்குளமும் இவ்வூர் பஞ்சமுக வாத்தியம் எனப்படும் குடமுழாவாத்தியமும் இவ்வூர்த் தேவாரங்களில் வைத்துப் பாடப் பெற்றுள்ளன.

திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய சைவசமய குரவர் நால்வராலும் பாடல் பெற்றது இத்தலம்.  330 தேவாரப் பாடல்களும், திருவாசகப் பாடல்களும் இத்தலத்தைப் போற்றுகின்றன.  மொத்தம் 41 திருப்பதிகங்கள் பெற்ற தலம், பதிகங்களின் எண்ணிக்கையில் சீர்காழிக்கு அடுத்ததாக இரண்டாவதாக விளங்குகின்ற தலம். காவிரித் தென்கரைத் தலங்களில் மிகவும் அதிகமான பாடல் பெற்ற தலம். அப்பர் பெருமானின் அதிகமான பாடல் பெற்ற தலம். எங்குமே கண்டறிய முடியாத எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்ட பரம்பொருளை திருவாரூரில் கண்டு கொண்டேன். கண்டவுடன் அவன் ஒருவனைத்தவிர மற்ற எல்லாவற்றையும் மறந்து விட்டேன் என்று அப்பர் பெருமான் இத்தலத்தைப் பாடிப் பரவுகிறார். ஒன்பது திருமுறைகளிலும் பாடல் பெற்ற தலம். மூவர் முதலிகள் பாடிய முதல் ஏழு திருமுறைகளில் இடம் பெற்ற  தலங்கள் மூன்றினுள் ஒன்று.  மற்ற தலங்கள் திருமறைக்காடு மற்றும் கச்சி ஏகம்பம் ஆகியவை ஆகும்.



இது தவிர திருவிசைப்பா, திருப்பல்லாண்டு பெரியபுராணம், பன்னிரு திருமுறைகளில் நெடுகிலும் போற்றி பாடப்பட்டு உள்ளது. அருணகிரிநாதர்,  சங்கீத மும்மூர்த்திகள் - தியாகையர், முத்துசாமி தீட்சதர், சியாமா சாஸ்திரிகள் ஆகியோரும் கயிலை ஞானப்பிரகாசர், குருஞானசம்பந்தர், இரட்டைப்புலவர், அந்தககவி வீரராகமுதலியார்,  மாமன்னர் சகாஜி,  வள்ளலார் ராமலிங்க அடிகள் ஆகியோரும் திருவாரூரைப் பாடியுள்ளனர். கலம்பகம், பிள்ளைதமிழ், குறவஞ்சி போன்ற மற்றும் எண்ணிறந்த செந்தமிழ் இலக்கியங்களிலும் இவ்வாலயம் போற்றிப் பாடி சிறப்பிக்கப் பெற்றுள்ளது.

அஜபா ரஹஸ்யம், ஆடகேச்வர மஹாத்மியம், கமலாலய மஹாத்மியம், நாகர கண்டம், தியாகராஜ லீலை, சமத்காரபுர மஹாத்மியம், தியாகராஜ மஹாத்மியம், தேவயாகபுர மஹாத்மியம், தேவாஸ்ரய மஹாத்மியம், முசுகுந்தபுர மஹாத்மியம், ரமாகயா மஹாத்மியம், ஸ்ரீபுர மஹாத்மியம், ஸ்கந்தபுர மஹாத்மியம், க்ஷேத்திரவர மஹாத்மியம் என்று பல சமஸ்கிருத நூல்கள் இத்தலத்தை பற்றி உள்ளன.  இது தவிர தெலுங்கு, மராட்டி ஆகிய மொழிகளிலும்  இத்தலத்தைப் பற்றி  நூல்கள் உள்ளன.

தேரூரார் மாவூரார் திங்களூரார்  திகழ் புன்சடைமுடி மேல் திங்கள் சூடி
கார் ஊரா நின்ற கழனிச்சாயல் கண்ணார்ந்த நெடு மாடம் கலந்து தோன்றும்
ஓரூரா உலகெலாம் ஒப்பக்கூடி உமையாள் மணவாளா என்று வாழ்த்தி
ஆரூரா! ஆரூரா!  என்கின்றார்கள் அமரர் தம் பெருமானே எங்குற்றாயே! – என்று தேவர்கள் யாவரும் உலகெங்கும் தேடி பல உலகத்தவரும் திருவாரூக்கே வந்து விட்டார்கள் என்று அப்பர் பெருமான் இத்தலத்தின் பெருமையை சம்பந்தப் பெருமானுக்கு விளக்குகின்றார். சம்பந்தர் தொலைவில் இருந்து திருவாரூரை தரிசித்த போது பொன்னுலகம் போல் அவருக்கு காட்சி தந்ததாம். சேக்கிழார் பெருமான் பெரிய புராணத்தில் திருமலை சிறப்பாக கயிலை மலையையும், திருநாட்டு சிறப்பாக சோழ நாட்டையும், திருநகர சிறப்பாக திருவாரூரையும் அதன் நடுநாயகமாக அமைந்துள்ள பூங்கோயிலையும் சிறப்பித்து பாடியுள்ளார். அதில் திருவாரூர் மிகவும் தொன்மையானது என்றும், திருமகளால் வழிபடப்பெற்றது, என்றும் சுந்தரர் பொருட்டு பரவையிடம் தூது சென்ற போது இறைவனின் தாமரையடிகளின் மணம் தெருவில் வீசுகின்றது என்றும் போற்றுகின்றார். 

திருவாரூரின் நடுநாயகமாக விளங்கும் பூங்கோவிலை
இனையவகை அரநெறியில் எண்ணிறந்தோர்க் கருள்புரிந்து
முனைவரவர் மகிழ்ந்தருளப் பெற்றுடைய மூதூர்மேல்
புனையும் உரை நம்மளவில் புகலலாந் தகமையதோ?
அனையதனுக் ககமலராம் அறவனார் பூங்கோயில் - என்று சிறப்பித்துப் பாடுகின்றார்.

சோழ மன்னர்களின் இராஜதானி அதாவது  தலைநகரங்கள் ஐந்தினுள் ஒன்று திருவாரூர். பிற்காலச் சோழர்கள் முடிசூடிக் கொள்ளுமிடமாகவும் விளங்கிய தலம். சோழர்கள் மட்டுமல்லாமல் பல்லவர்கள், பாண்டியர்கள், விஜயநகர மன்னர்கள், தஞ்சை நாயக்கர் மற்றும் மராட்டிய மன்னர்களும் தத்தம் ஆட்சியில் இவ்வாலயத்தை சிறப்பாக நிர்வகித்துள்ளனர்.

சோழ மண்டலத்தை ஒரு சிவாலயாமாகக் கருதினால் கருவறை (மகாலிங்கம்) திருவிடைமருதூர் என்றும் அதன் பரிவாரத்தலங்களில் சோமாஸ்கந்தர் தலமாக திருவாரூர் விளங்குகின்றது. மற்ற பரிவாரத்தலங்கள் திருவலஞ்சுழி – விநாயகர், சுவாமிமலை – சுப்பிரமணியர், சிதம்பரம் – நடராஜர், சீர்காழி – பைரவர், சேய்லூர் – சண்டிகேஸ்வரர், ஆலங்குடி – தக்ஷிணாமூர்த்தி, திருமாந்துறை – சூரியன்   என்பது ஐதீகம்.

மாணிக்க வாசகர் பாடிய திருவாசகத்தலங்கள் எழினுள் ஒன்று,  மற்றத் தலங்கள் தில்லை, திருவண்ணாமலை, திருக்கழுக்குன்றம், திருத்தோணிபுரம் என்னும் சீகாழி, திருப்பெருந்துறை, உத்திரகோச மங்கை ஆகும்.

நமிநந்தி அடிகள், செருந்துணை நாயனார், தண்டி அடிகள், கழற்சிங்க நாயனார், விறன்மிண்டர், போன்றோர் திருத்தொண்டு செய்து முக்தி அடைந்தது இத்தலத்தில்தான். 
சோழ மன்னர்களுள் தன்னிடம் சரணடைந்த ஒரு புறாவுக்காக தன் தசையையே அறிந்து கொடுத்த சிபி சக்கரவர்த்தியும், ஒரு பசுவின் துயர் துடைக்க தன் குலத்திற்கு ஒரே மகன் என்ற போதும் அவனையே  தேர்க்காலில் பலியிட்ட மனு நீதி சோழனும் தலை நகராகக் கொண்டு ஆண்ட தலம்.

ராஜராஜ சோழனின் பாட்டியார் செம்பியன் மாதேவி அவர்களால் மண்தளியாயிருந்த அசலேஸ்வரர் சந்நிதியை கற்றளியாகக்  கட்டப்பட்டதாக கல்வெட்டு செய்திகள் கூறுகின்றன.  ச்சந்நிதியை பார்த்தே பிற்காலத்தில் தஞ்சை பெரியகோயில் கட்டப்பட்டதாக ஆராய்ச்சி அறிஞர்கள் கூறுகிறார்கள்.

அனைத்து புகழ் மிக்க மன்னர்களின் கை வண்ணமும் கல்வெட்டும் இத்திருக்கோவிலில் உள்ளன. அவர்களின் 91 கல்வெட்டுகள் ஆரூரின் பெருமைகளையும், தியாகராஜரின் லீலைகளையும், கோயிலுக்கு அவர்கள் செலுத்திய நன்கொடைகளைப் பற்றியும், திருவிழாக்களின் சிறப்புகளைப் பற்றி அறியவும் உதவுகின்றன. செப்பேடுகளில் ஸ்ரீதியாகராஜ சுவாமிக்கு அளித்த  அறக்கட்டளைப் பற்றிய செய்திகள் உள்ளன.

இத்தலத்தில் தருமபுர ஆதீன குரு முதல்வர் ஸ்ரீஞானசம்பந்த சுவாமிகள், கமலை ஞானப்பிரகாசரை தம் குருவாக ஏற்றுகொண்டு உபதேசம் பெற்று சொக்கலிங்க மூர்த்தி பூசையினை ஏற்றுக்கொண்டார்கள்.

கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளான தியாகையர், சியாமா சாஸ்திரி மற்றும் முத்துசுவாமி தீக்ஷிதர் வாழ்ந்த தலம் திருவாரூர். முத்துசுவாமி தீக்ஷிதர் கமலாம்பாள் நவாவரண கீர்த்தனை இயற்றியுள்ளார். பராசக்தியை ஸ்ரீசக்கர வடிவில் வழிபடுவது மரபு.  ஸ்ரீசக்கரத்தின் ஒன்பது ஆவரணங்களையும் ஒவ்வொன்றாக பூஜிக்கும் முறைகளையும் அவற்றில் எழுந்தருளியிருக்கும் ஆவரண தேவதைகளின் சக்திகளையும் தெளிவாக விளக்குகின்றன நவாவரண கீர்த்தனைகள்.

தெய்வக் கைங்கரிய பணிகளுக்கு ஏற்ப ஆலயப்பணியாளர்களுக்கு பட்டப் பெயர்கள் சூட்டப்பட்டன.  தியாகரஜரை பூஜை செய்வோர் நயினார் எனவும், ஆபரணங்களை பாதுகாப்போரை பொற்பண்டார் எனவும், தீப விளக்கு கைங்கரியம் புரிவோரை பரமராயர், சுவாமி திருவுருக்களை சுமப்போரை விழா பிரமராயர், பாரி நாயனம் இசைப்போரை நயினார் அடியார், அபிஷேக தீர்த்தம் சுமந்து வருவோரை திருமஞ்சனர், நைவேத்தியம் தயாரிப்போரை பரிசாரகாரர் னவும்,. இறைவர்  முன் தேவாரம் ஓதுபவர்கள் கொண்ட சிறப்பு பெயர் திருப்பதிகம் விண்ணப்பிப்பார் னவும் அழைக்கப்படுகின்றனர்.  இத்தேவாரப் பதிகங்களின் சிறப்புப் பெயர்கல்வெட்டுகள் திருப்பதிகம்ஆகும்.

திருவாரூர் ஆலயத்தில் இன்றளவும் பணியாற்றி வரும் பணியாளர்கள் நாயன்மார் பெயர்களால் சுட்டப்பெறுவது மரபாக உள்ளது.


1. மெய்க்காவலர் – விறண்மிண்டர்
2. திருமாலைத்தொடுப்பவர் – செருந்துணைநாயனார்.
3. ஆலயத்தில் தீபமிடுபவர் – நமிநந்தியடிகள்.
4. ஆலய நிர்வாக அதிகாரி – தண்டியடிகள்.
5. அடியார் உபசரிப்பு – ஏயர் கோன் கலிக்காமர்
6. தூதுவளை இலை அளிப்பவர் – சோமாசி மாறனார்.  


தியாகேசர் அஜபா நடனமாடி  ஆலய உட்பவனி வரும் போது செண்டை மாலை (ஒரு ஜான் நீள மல்லி, செவ்வந்திப் பூ, மலர்களால் கட்டியது.) அணிந்திருக்க ஒவ்வொரு திசைக்குரிய தேவதை குறித்து, ஆலயத்தில் பணிபுரியும் ஒருவர் உரத்த குரலில் சொல்லி வரும் வழக்கம் இன்றும் தொடர்கிறது. அவர் கொண்ட பெயர் பூத நிருத்தம் என்பதாகும். இதன் தொடர்பாக ஈசான திசையில் உற்சவர் வரும்பொழுது ஆலய முட்டுக்காரர் என்பவர் சுத்த மத்தளத்தை தன் தலை மீது கட்டியுள்ள பரிவட்டத்தில் வைத்து மேலே இருகைகளையும் தூக்கியவாறு அதனை வாசிப்பார்.
எந்த மாதவம் செய்தனை நெஞ்சமே
பந்தம் வீடவை யாய பராபரன்
அந்த மில் பக ழாரூ ரானெறி
சிந்தை யுள்ளும் சிரத்துள்ளுந் தங்கவே – என்று அப்பர் பெருமான் பாடிய இத்தனை சிறப்புகள் பெற்ற திருவாரூரில்
இறைவர்: புற்றிடங்கொண்டார், தியாகராஜர், அசலேஸ்வரர்.
இறைவி: சோமகுலாம்பிகை, கமலாம்பிகை, நீலோத்பலாம்பாள், கொண்டி அம்மன்,  வண்டார்குழலி.
தல விருட்சம்: சிவப்பு பாதிரி மரம்.
தீர்த்தம்: கமலாலயம், சங்கு தீர்த்தம், காய தீர்த்தம், வாணி தீர்த்தம் முதலியன
ஆகமம் : காமிகம்
பாடியவர்கள்: திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர், பட்டினத்தார் மற்றும் பலர்.

                                                       திருப்பாத    தரிசனம் தொடரும் . . . . . .

2 comments:

வெங்கட் நாகராஜ் said...

திருவாரூர் பற்றிய சிறப்பான தகவல்கள்.

தொடரட்டும் திருப்பாத தரிசனம்.

S.Muruganandam said...

மிக்க நன்றி வெங்கட் ஐயா. திருப்பாத தரிசனம் தொடரும்.