Saturday, February 8, 2020

திருப்பாத தரிசனம் - 7


சப்த விடங்கத்தலங்களின் பொதுச் சிறப்புகள்

திருமால் தியாகரை மார்பில் வைத்து வணங்கும் காட்சி


சப்த விடங்கத் தலங்கள் அனைத்தும் திருவாரூரைச் சார்ந்தே அமைந்துள்ளன. திருவாரூரில் இருப்பது போலவே இந்த ஆறுsa தலங்களிலும் கருவறையின் தென்கிழக்கில் தனிச் சந்நதியில் பொற்சிம்மாசனத்தில் தியாகராஜர் இருந்தாடும் அழகராக, உமையம்மை மற்றும் ஸ்கந்தனுடன் சோமாஸ்கந்தராக முக தரிசனம் மட்டும் அருளியவாறு எழுந்தருளியுள்ளார். பெருமானின் திருமேனிகளின் உடல் மூடப்பட்டே வழிபாடு நடைபெறுகின்றது. திருமேனிகளின் ஆடை, அணிகலன்களை முற்றிலுமாக அகற்றக்கூடாது என்பதனை வழிபாட்டு நெறியாக கடைப்பிடிக்கின்றனர். உடனுறையும் நின்ற கோல அம்பாள் நீலோத்பலாம்பாளாக எழுந்தருளி அருள் பாலிக்கின்றாள். இத்தலங்களின் விநாயகரும் தியாக விநாயகராக அருளுகின்றார்.


சங்கிலியாருடன்  சுந்தரர் (திருவொற்றியூர்)


இரத்தின சிம்மாசன மேடையும், மேற்கட்டும் முன்புறம் வீரகட்கங்களும் நேர் எதிரில் உலோகத்தாலான நின்ற இடபமும், அவரைத் தொழுபவராக  (பரவையார் உடனாய) சுந்தரமூர்த்தி சுவாமிகளும் அமைந்துள்ளனர்.  இத்தலங்களில் தென்றல் வரும் வாயிலும் அமைக்கப்பட்டுள்ளன எம்பெருமான் விடங்கராகவும் எழுந்தருளி நித்தியப்படி அபிஷேகம் கண்டருளுகின்றார்.  

தேவலோகத்தில் தியாகராஜப் பெருமானுக்கு தேவர்கள் பூசை செய்ததன் நினைவாக ஓராண்டில் ஆறு நாட்கள் மட்டுமே தியாகராசருக்கு அபிஷேகம் செய்யப்படுகின்றது, இவ்வபிஷேக சமயத்தில்தான் ஸ்கந்தரை தரிசிக்கமுடியும். தினப்படி அபிஷேகம் விடங்கப்பெருமானுக்குத்தான்.     


அனைத்துத் தலங்களும் தேவாரப்பாடல் பெற்றவை. வக்கிரகங்கள் ஒரே வரிசையில் நின்ற கோலத்தில் அமைந்துள்ளன. வசந்தோற்சவம் கண்டருளுகின்றனர். தேரில் மட்டுமே உலா வருவர், நடனத்துடன் எழுந்தருளும் போது தியாகராஜ யந்திரம் என்னும் வாரையில் எழுந்தருளுவார். பெருவிழாக் காலங்களில் பட்டம் கட்டி அனுதினமும் உலா வருபவர் சந்திரசேகரர் என்பவை எம்பெருமான் தியாகராஜராக எழுந்தருளி அருள் பாலிக்கும் சப்த விடங்கத்தலங்களின் பொதுச் சிறப்புக்கள் ஆகும்.


தியாகராஜ யந்திரம்: தியாகேசர் எழுந்தருளும் போது வாரை, தண்டு என்றழைக்கப்படும் தியாகராஜ யந்திரத்தில் எழுந்தருளுகின்றார். பெருமான் டனம் நிகழ்த்த ஏதுவாக அமைந்தது வாரை எனப்படும் மாணிக்கத்தண்டாகும். இது பிள்ளைத்தண்டு என்றழைக்கப்படுகின்றது. மூங்கில் வாரைகளில் திண்டுகளில் வைத்து சிம்மாசனத்தை வைப்பதைத் தவிர, இறுக்கிக் கயிற்றால் கட்டுகிற வழக்கமில்லை. இம்மணித்தண்டை வாரைகளில் ரகசிய கயிற்றால் பொருத்தி பிறர் காணா வண்ணம் விழிப்பரமர் என்ற மரபைச் சேர்ந்தவர்கள் பெருமான் பீடத்தோடு வாரைகளை இணைக்கின்றனர். இதனைத் பிள்ளைத் தண்டு இரகசியம் என்பர். இம்மணித்தண்டு சிவராஜயோகியின் முதுகுத்தண்டு (Spinal Cord) ஆகும். அஜபா நடனம் யோக நெறி பற்றியதல்லவா? அன்பர்களே.


விடங்கத் தலங்களில் நவகிரகங்கள்: சிவாலயங்களில் நவகிரகங்களை நிலைப்படுத்தி வணங்க பலவகையான முறைகளைப் பூசாபத்ததி நூல்கள் குறிக்கின்றன. இவற்றில் இரண்டு முறைகள் உள்ளன. முதல்வகை ஆகம முறை என்றும் மற்றது வைதீக முறை எனவும் அழைக்கப்படும். ஆகமநெறிப்படி அமையும் நவகிரகப் பிரதிஷ்டையில் நடுவில் சூரியன் மேற்கு நோக்கியவாறு காட்சியளிக்கச் சுற்றிலும் அமைந்த கிரகங்கள் அவரை நோக்கியவாறோ அல்லது வெளிப்புறம் நோக்கியோ காட்சியளிக்கின்றார். வைதீக முறையில் அமையும் நவக்கிரக பிரதிஷ்டையில் நடுவில் சூரியன் கிழக்கு நோக்கி நிற்க சுற்றிலும் கிரகங்கள் நாற்திசைகளையும் நோக்கி ஒன்றையொன்று பார்க்காத வண்ணம் நிலைப்படுத்தப்படுகின்றது. இதற்கு முற்றிலும் மாறாகத் தியாகராஜ ஸ்தலங்களில் நவகிரகங்கள் ஒரே வரிசையில் தெற்கு அல்லது மேற்கு நோக்கியவாறு அமைக்கப்படுகின்றன.

திருவாரூர், திருக்குவளை, திருவாய்மூர், நாகப்பட்டினம் முதலிய தலங்களில் வ்வமைப்பைக் காணலாம். தியாகராஜர் உயிர்களின் கோள்களை நீக்கி இன்பமளிப்பவர். அவருடைய சந்நதியில் நவகிரகங்களின் செயல்பாடுகள் இல்லை. அதனால் அவர்களுடைய வக்கிரங்கள் இன்றி ஒரே வரிசையில் நிற்கின்றனர் என்பதொரு ஐதீகம். நவகிரகங்கள் தியாகராஜப்பெருமானின் கட்டுப்பாட்டில் இருப்பதால் அவை அனுக்கிரக நவக்கிரகங்கள் ஆகும்.

நின்ற நந்தி: பொதுவாக சிவாலயங்களில் நந்தியெம்பெருமான் முன், பின் கால்களை மடக்கிப் படுத்த கோலத்தில் அருள் பாலிப்பார். ஆனால் சப்த விடங்கத்தலங்களில் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கின்றார். தியாகராஜபெருமானுக்கு முன்னால் படுக்கக்கூடாது என்ற மரியாதையின் நிமித்தம் இவ்வாறு நின்ற நிலையில் உள்ளார் என்று கூறுவர்.

அனைத்து சப்த விடங்கத்தலங்களிலும் திருத்தேருக்கு எழுந்தருளுபவர் தியாகரே. இவருக்குரிய பெருந்திருவிழா வசந்த விழா என்றழைக்கப்படுகின்றது திருமறைக்காட்டில் மாசியிலும், திருவாரூரில் பங்குனியிலும், மற்ற தலங்களில் வைகாசியிலும் வசந்த விழா சிறப்பாக நடைபெறுகின்றது. வைகாசி மாதம் என்பது வசந்த காலம் எனப்படும் இளவேனிற் காலத்தின் பிற்பகுதி ஆகும். எனவே வைகாசி விசாகத்தில் கோவில்களில் வசந்தோற்சவ விழாக்கள் நடத்தப்படுகின்றன.  இதனால் மழை நன்றாகப்பொழியும் என்பது நம்பிக்கை. 
இனி திருவாரூரிலிருந்து மற்ற விடங்கத்தலங்களுக்கு இடையேயான தூரம்
திருவாரூரிலிருந்து திருநள்ளாறு 35 கி.மீ
திருவாரூரிலிருந்து நாகபட்டினம் 25 கி.மீ
திருவாரூரிலிருந்து திருக்கோளிலி 20 கி.மீ
திருவாரூரிலிருந்து திருவாய்மூர் 23 கி.மீ
திருவாரூரிலிருந்து திருக்காரவாசல் 10 கி.மீ
திருவாரூரிலிருந்து திருமறைக்காடு 60 கி.மீ


சப்த விடங்கத்தலங்களின் பொது சிறப்புக்களைக் கண்டோம் இனி எம்பெருமானுக்கு தியாகராஜர் என்னும் திருநாமம் ஏன் என்று காணலாமா? அன்பர்களே.


                                                                    தரிசனம் தொடரும் . . . . . .

2 comments:

வெங்கட் நாகராஜ் said...

சிறப்பான தகவல்கள். தொடரட்டும் திருப்பாத தரிசனம்.

S.Muruganandam said...

மிக்க நன்றி, வெங்கட் ஐயா, தங்களுடைய "முகம் காட்ட சொல்லாதீர்" மின்னூல் பார்த்தேன், பார்த்தேன், இரசித்தேன். மிகவும் அருமை.