எண் ஏழின் சிறப்புகள்
எம்பெருமான் தியாகராஜராக சப்த அதாவது ஏழு தலங்களில் எழுந்தருளி
அருள் பாலிப்பதால் ஏழு என்னும் எண்ணின் சிறப்புகளை முதலில் காணலாமா அன்பர்களே. சப்த என்ற வடமொழி சொல்லுக்கு ஏழு என்றொரு பொருள் உண்டு. ஏழு என்பது, வேத மரபில்
ஒரு முக்கிய எண். ஏழு
என்பதற்கு முழுமை அல்லது பரிபூரணம் எனப் பொருள். ஏழு என்பது இந்தியப்
பண்பாட்டில் சிறப்பிடம் பெற்ற எண் ஆகும். காலத்தைக் கணிக்கும் முறையில்
எண் ஏழு பழங்கால மக்களிடையே மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்துள்ளது. ஏழு என்பது
தமிழ் எண்களில் '௭' என்று
குறிக்கப்படுகின்றது. ஏழு என்பதற்கு அளவில்லாது என்றொரு பொருளும் உண்டு. ஆகவே
எண்ணற்றப் பிறப்புகளை ஏழு பிறவிகள் என்று ஆன்றோர்கள் வகுத்தனர். சப்த ரிஷிகள், சப்த மாதர்கள், சப்த ஸ்வரங்கள், சப்த கன்னியர், சப்த கிரி என ஏழின் பெருக்கங்கள் பல உள்ளன அவைகளில் சிலவற்றைப்
பற்றிக் காணலாம்.
அப்பர் பெருமான் அப்பூதி
அடிகளின், பாம்பு தீண்டி இறந்த மகனை எழுப்பிய
பதிகத்தில் எண் ஏழின் சிறப்பை இவ்வாறு பாடுகின்றார்.
ஏழுகொலாம் அவர்
ஊழி படைத்தன
ஏழுகொலாம் அவர்கண்ட
இருங்கடல்
ஏழுகொலாம் அவர்
ஆளும் உலகங்கள்
ஏழுகொலாம் இசையாக்கின
தாமே – ஒவ்வொரு ஊழிக் காலத்தின் தொடக்கத்திலும் இறைவன் படைக்கும் உயிரினங்கள்
ஏழு வகைப்பட்டன. அவர் படைத்த கடல்கள் ஏழு வகை,
அவர் ஆட்சி செய்வன ஏழு உலகங்கள், அவர் தோற்றுவித்த இசை ஏழு வடிவமுடையவை.
சப்த
மாதர்கள் என்று வணங்கப்படும் அன்னையர்கள் எழுவர் ஆவர். சண்ட முண்டர்கள் என்னும் அரக்கர்களை அழிக்க வேண்டி மனித கர்ப்பத்தில் பிறக்காமலும் ஆண் பெண் இணைப்பில்
பிறக்காமலும் அம்பிகை எனப்படும் சக்தியின் அம்சத்தில் இருந்து தோன்றியவர்கள் இந்த
சப்த மாதர்கள். இவர்கள் சப்த கன்னியர் என்றும்
அழைக்கப்படுகின்றனர். பிராம்மி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வாராஹி, இந்திராணி, சாமுண்டி
என்ற ஏழு கன்னியர் சப்தமாதர்கள் என்றும் அழைக்கப்படுகின்றனர். பிராம்மி தோலுக்கும்,
மகேஸ்வரி நிணத்திற்கும், கௌமாரி இரத்ததிற்கும், நாராயணி சீழிற்கும், வாராஹி
எலும்பிற்கும், இந்திராணி தசைக்கும், சாமுண்டி நரம்பிற்கும் அதிதேவதைகள் என்றும் புராணங்கள் பகர்கின்றன. மகேஸ்வரி சினத்தையும், வைஷ்ணவி
பேராசையும், பிராஹ்மி காமத்தையும், கௌமாரி மாயையையும், இந்திராணி குற்றம் கண்டுபிடித்தலையும்,
சாமுண்டி கோள் சொல்லுவதையும், வாராஹி பொறாமையையும் அழிக்கும் தெய்வங்கள். சப்த கன்னியரையும்
வழிபட இவ்வேழு தீய குணங்களும் அழியும்.
மோட்சபுரிகள்
என்று காசி காண்டம் போற்றும், இறைவனின் தொடர்பினால் முக்தி அளிக்கும் நகரங்கள் காசி, அயோத்தி, மதுரா, மாயாபுரி என்னும் ஹரித்வார், காஞ்சி, உஜ்ஜயினி, துவாரகை என்று ஏழு.
அனுமன், விபீஷணன், மகாபலிச் சக்கரவர்த்தி, மார்க்கண்டேயர், வியாசர், பரசுராமர், அசுவத்தாமன் ஆகியோர் சப்த சஞ்சீவிகள். அனுமன் தன்னலம் பாராமல் இராமருக்கு சேவை புரிந்ததற்காகவும், விபீஷணன் அண்ணன் என்றும் பாராமல் இராவணனுக்கு நியாயத்தை உணர்த்தியதற்காகவும், மகாபலி தன்னையே தானமாக இறைவனிடம் ஒப்படைத்ததற்காகவும், மார்க்கண்டேயர் இறைவன் மேல் கொண்ட பக்தியின் காரணமாக எமனையே வென்றதாலும், வியாசர் மகாபாரதம் என்னும் அழியா காவியத்தை
எழுதி அதை வாசிப்பவர்களின் பாவங்களைப் போக்கி அருள் புரிந்ததாலும், பரசுராமர் தான் கொண்ட கடமையில் இருந்து விலகாமல் தந்தை சொல்லை மந்திரமாக கொண்டதாலும், அசுவத்தாமன் இறுதி வரை கட்சி மாறாமல் கவுரவர்களுக்கு
விசுவாசமாக இருந்ததாலும் சஞ்சீவி நிலையை அடைந்தனர். இவ்வாறு சாகா வரம் பெற்ற சஞ்சீவிகள் ஏழு.
நமது பாரத நாட்டை
வளப்படுத்தும் சப்த நதிகள் கங்கை, யமுனை, கோதாவரி,
சரஸ்வதி, நர்மதா, சிந்து,
காவிரி ஆகியவை ஆகும். தினமும் நாம் நீராடும்
போது, நாம் அந்நீரை கங்கையாகக் கருதிக் குளிக்க
வேண்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. எனவே நீராடத் துவங்கும் முன் கிழக்கு அல்லது வடக்கு முகமாக நின்று கொண்டு “கங்கேச யமுனா சைவ கோதாவரி சரஸ்வதி நர்மதா சிந்து காவேரி
ஜலேஸ்மின் சந்நிதம் குரும்” என்று கூறிவிட்டு நீராடினால் சாதாரண குளியல் கூட புனித
நீராடல் ஆகிவிடும் என்பது ஐதீகம். புண்ணிய நதிகள் ஏழு.
அகத்தியர், காஷ்யபர், அத்திரி,
பரத்வாஜர், வியாசர், கவுதமர்,
வசிஷ்டர் என்று சப்த ரிஷிகள் எழுவர் ஆவர்.
தேவர், மக்கள், விலங்கு, பறப்பன, ஊர்வன, நீர்
வாழ்வன, தாவரம் என்று தோற்றங்கள் ஏழு.
பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம் பெண்
என்று பெண்களின் பல்வேறு பருவங்கள் ஏழு.
'கடுகைத் துளைத்தேழ் கடலைப்
புகுத்தி குறுகத் தெரித்த குறள்' - ஒளவையார். பாடியபடி, உப்பு, தேன், கள், தயிர், பால், கருப்பஞ்சாறு, தண்ணீர் என கடல்கள்
ஏழு.
ஊதா, கருநீலம், நீலம், பச்சை, மஞ்சள், இளஞ்சிவப்பு, சிவப்பு
என்று வானவில்லின் நிறங்கள் ஏழு. (இவை ஏழும் சூரியனின் ஒற்றைத் திகிரியை இழுக்கும் ஏழு குதிரைகள் என்று கூறுவர்).
மானிட உடல் உருவாக காரணமான தாதுக்கள்;
இரசம், உதிரம், மாமிசம், கொழுப்பு மஜ்ஜை, மூளை சுக்கிலசுரோணிதம் என்று தாதுக்கள் ஏழு.
எண்களில் மிகப்பெரிய ஓரிலக்கா
பகா எண் (Prime Number) ஏழு.
வால்மீகி இராமாயணத்தில் பால காண்டம், அயோத்தியா காண்டம், ஆரண்ய காண்டம், கிஷ்காந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம், உத்தர காண்டம் என்று காண்டங்கள் ஏழு.
வால்மீகி இராமாயணத்தில் பால காண்டம், அயோத்தியா காண்டம், ஆரண்ய காண்டம், கிஷ்காந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம், உத்தர காண்டம் என்று காண்டங்கள் ஏழு.
ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, அண்டார்டிக்கா என்று இப்பூவுலகின் கண்டங்கள் ஏழு.
உத்தமோத்தம தலங்களுக்கு வனம், நதி, கடல், நகரம்,
தீர்த்தம், விமானம் என்று அமைய வேண்டிய புண்ணியங்கள் ஏழு.
மூலாதாரம்,
ஸ்வாதிஷ்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்ஞை, சகஸ்ராரம் (அ) பிரம்மாரந்திரம் என்று உடலை கட்டுப்படுத்தும்
சக்கரங்கள் ஏழு.
நாம் - முதல் தலைமுறை, தந்தை + தாய் - இரண்டாம் தலைமுறை, பாட்டன் + பாட்டி - மூன்றாம் தலைமுறை, பூட்டன் + பூட்டி - நான்காம் தலைமுறை, ஓட்டன் + ஓட்டி - ஐந்தாம் தலைமுறை , சேயோன் + சேயோள் - ஆறாம் தலைமுறை , பரன் + பரை - ஏழாம் தலைமுறை என்றொரு ஏழு தலைமுறைக்கு ஒரு கணக்கு உண்டு.
தன்னை ஒன்றாவதாக எண்ணிக் கொண்டு தகப்பன், பாட்டன், பெரிய
பாட்டன் மூவரை மேலேயும், மகன்,
பேரன், கொள்ளுப் பேரன்
என கீழே மூவரையும் கணக்கிட்டால் ஏழு தலைமுறை ஆகும் என்றொரு கணக்கும் உண்டு. இவ்வாறு தலைமுறைகள் ஏழு.
இசையில் ஏழு ஸ்வரங்கள் ச,ரி,க,ம,ப,த,நி என்று ஏழு. தமிழிசையில் இவை குரல், தத்தம்,
கைக்கிளை, உழை, இளி, உளரி, தாரம் என்றழைக்கப்படுகிறது. தவிலுக்குரிய தாளச்சொற்கள் தா, தீ, தொம், நம், கி, ட, ஜம் என்று ஏழு.
திருக்குறளில் மொத்தம் 1330 குறட்கள், 133 அதிகாரங்கள் உள்ளன. அதனுடைய கூட்டுத்தொகையும் ஏழு. ஒவ்வொரு திருக்குறளிலும் உள்ள சீர்கள் ஏழு. அதுமட்டுமா, ஒன்றே முக்கால் அடிக் குறளைக் காற் காற் பகுதியாக
வெட்டினால் அதுவும் ஏழுபகுதிகளாக வரும். திருக்குறளில் "கோடி' என்ற சொல் பயின்று வந்துள்ள இடங்கள் ஏழு.
மேலுலகங்கள், சத்யலோகம், தபோலோகம், ஜனோலோகம், மஹர்லோகம், சுவர்லோகம், புவர்லோகம், பூலோகம் என்று ஏழு. கீழுலகங்கள் அதலலோகம், விதலலோகம், சுதலலோகம், தலாதலலோகம், மகாதலலோகம், ரஸாதலலோகம், பாதாளலோகம்
என்று ஏழு. (இவையிரண்டையும்
சேர்த்து ஈரேழு பதினாலு லோகம் இப்பிரபஞ்சத்தில் உள என்பது மரபு.)
மயிலுக்குப் போர்வை அளித்த பேகன்
மயிலுக்குப் போர்வை அளித்த பேகன், முல்லைக்குத் தேர் தந்த பாரி, ஈர நன்மொழி கூறிய காரி, நீலநாகம் நல்கிய கலிங்கத்தை ஆலமர் செல்வனுக்கு (குற்றாலநாதருக்கு) அணிவித்த ஆய், நெல்லிக் கனியை ஔவைக்கு அளித்த அதியமான், துளிமழை பொழியும் நளிமலை (நீலகிரி) நாடன். நட்டோர் உவப்ப நடைப்பரிகாரம் நல்கியவன். (நண்பர்கள் வாழ்க்கை நடத்துவதற்கு வேண்டிய அனைத்து வசதிகளையும் நல்கிய நள்ளி, தன் குறும்பொறை நாடு முழுவதையும் கோடியர்க்கு (யாழ் மீட்டும் பாணர்க்கு) அளித்தவன். ஓரி என்று கடை வள்ளல்கள் எழுவர்.
ஏழு இடங்கள் என்பது
சப்தஸ்தானம் என்பது வடமொழியில் அழைக்கப்படுகின்றது.
தமிழகத்தில் பல இடங்களில் சப்தஸ்தான
திருவிழாக்கள் அல்லது ஏழூர்த்
திருவிழா எனப்படும், ஏழு ஊர்கள் இணைந்து கொண்டாடும்
திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. அவற்றுள்
தஞ்சாவூர் மாவட்டத்தின் திருவையாறு சப்த
ஸ்தான திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. நந்திகேஸ்ரரின்
திருமண விழாவைக் கொண்டாடும் விதமாக திருவையாறு ஐயாரப்பர் திருப்பழனம், திருசோற்றுத்துறை, திருவேதிக்குடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, திருநெய்த்தானம் ஆகிய ஆறு தலங்களுக்கும் சென்றுவிட்டு இறுதியாக
திருவையாற்றுக்குத் திரும்பும் சப்தஸ்தான திருவிழா
சிறப்பானது.
திருவையாற்றை மையமாகக் கொண்டு திருவையாறு
சப்தஸ்தான விழா நடப்பதைப் போல தமிழகத்தில் பல இடங்களில் சப்தஸ்தான விழா நடைபெறுகிறன.
அவை சக்கராப்பள்ளி சப்தஸ்தானம், மயிலாடுதுறை சப்தஸ்தானம்,
கும்பகோணம் சப்தஸ்தானம், கரந்தட்டாங்குடி
சப்தஸ்தானம், திருநல்லூர் சப்தஸ்தானம், திருநீலக்குடி சப்தஸ்தானம், கஞ்சனூர்
சப்தஸ்தானம், நாகப்பட்டினம் சப்தஸ்தானம் ஆகியவை ஆகும்.
தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகே மலை மகள் பார்வதி, சப்த மாதர்கள் மற்றும் அநவித்யநாதசர்மா, அனவிக்ஞை தம்பதியினர் வழிபட்ட சப்த மங்கை தலங்கள் அமைந்துள்ளன. அவையான திருச்சக்கராப்பள்ளி, அரியமங்கை, சூலமங்கை, நந்திமங்கை, பசுமங்கை, தாழமங்கை, புள்ளமங்கை ஆகிய சப்த மாதர் தலங்கள் ஏழு.
கண்கண்ட தெய்வமாய் கலியுக வரதனாய் திருவேங்கடவன் அருள் பாலிக்கும் திருமலையில்
அடங்கியுள்ள மலைகள் சேஷாத்ரி, அஞ்சனாத்ரி, நாராயணாத்ரி, விருஷபாத்ரி, கருடாத்ரி, வேங்கடாத்ரி, நீலாத்ரி என்று ஏழு.
திருமயிலையில்
சிவபெருமான் கபாலீஸ்வரர், வெள்ளீஸ்வரர், காரணீஸ்வரர், மல்லீஸ்வரர், விரூபாட்சீஸ்வரர், வாலீஸ்வரர், தீர்த்தபாலீஸ்வரர் என்று அருள் பாலிக்கும் தலங்கள்
ஏழு.
ஆலமுண்ட நீலகண்டனாக, விடங்கராக, புண்ணியபுரி நாதனாக, மறை தேடும் பிறையனாக, சர்வலோக நாயகனாக, வேதாந்தச் சுடராக,
ஆனந்த ஸ்வரூபியாக, ஏழைகளின் கற்பகமாக, பரஞ்சுடராக, கருணைக் கடலாக, மாசற்ற மணி
விளக்காக, தயாநிதியாக தியாகராஜனாக சிவபெருமான்
எழுந்தருளி அருள்பாலிக்கும் தலங்களும் ஏழு.
இது வரை எண்
ஏழின் சிறப்புகளைக் கண்டோம், வாருங்கள் அன்பர்களே அடுத்து விடங்கம் என்றால் என்ன என்று காணலாம்.
தரிசனம் தொடரும் . . . . . .
2 comments:
ஏழின் சிறப்புகள் பலதும் உங்கள் பதிவு மூலம் தெரிந்து கொள்ள முடிந்தது. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
மேலும் தொடரட்டும் திருப்பாத தரிசனம்.
மிக்க நன்றி.
Post a Comment