Saturday, August 13, 2016

நானேயோ தவம் செய்தேன் - 9

சுவாமி புஷ்கரணி




திருமலை யாத்திரை செய்பவர்கள் முதலில் திருச்சானூரில் பத்மாவதித்தாயாரை சேவித்து விட்டு பின்னர் சுவாமி புஷ்கரணியில் தீர்த்தமாடி வராஹ சுவாமியை சேவித்து விட்டு நிறைவாக திருமலையப்பனை சேவித்தால்,  யாத்திரை முழுமையடையும் என்பது ஐதீகம். இன்றைய அவசர யுகத்தில் எத்தனை பேருக்கு இந்த வாய்ப்புக்கிடைக்கின்றது. ஆனால் அவரது திருவடி நீழலில் ஒரு வாரம் அமர்ந்திருந்த அடியோங்களுக்கு அந்த அருமையான வாய்ப்பு கிட்டியது. 

ஒரு நாள் அதிகாலை சுவாமி புஷ்கரணிக்கு சென்று தீர்த்தமாடினோம். ஸ்ரீவைகுண்டத்தின் எட்டு விமானங்களில் ஒன்றான கிரிடாசலத்தைத் திருமலைக்குக் கொண்டு வந்து, அதில் திருவேங்கடவனை எழுந்தருளச் செய்த போது,   கோவிலின் அருகில் உள்ள கோனேரியை (திருக்குளத்தை), கருடன்தான் வைகுண்டத்து விரஜா நதியில் இருந்து உருவாக்கினார் என்பது ஐதீகம். பிரம்மாவின் பத்தினியாகிய சரஸ்வதியே இத்தீர்த்தமாக இருப்பதாக தலவரலாறு கூறுகின்றது.



சுவாமி புஷ்கரணி என்பதை 1) சுவாமியின் புஷ்கரணி, 2) புஷ்கரணிக்கெல்லாம் சுவாமி அதாவது தலைமையானது தமிழில் கோனேரி 3) சுவாமி ஆக்கும் புஷ்கரணி என்று  பல  விளக்கங்கள் கூறுகின்றார்கள் பெரியோர்கள்.  சுவாமி புஷ்கரணியில் நீராட பாவங்கள் அனைத்தும் நீங்கும், அஸ்வமேத யாகம் செய்த பலன் கிட்டும். 


ஊனேறுசெல்வத்து உடற்பிறவியான்வேண்டேன்
ஆனேறேழ்வென்றான் அடிமைத்திறமல்லாமல்
கூனேறுசங்கமிடத்தான்தன் வேங்கடத்து
கோனேரிவாழும் குருகாய்ப்பிறப்பேனே. 


குலசேகராழ்வார்  தமது பாசுரத்தில் சுவாமியை புஷ்கரணியில் ஒரு பறவையாக பிறக்க வேண்டும் என்று  வேண்டுகிறார்.




வெங்கடேச சுப்ரபாதத்தில் உள்ள ஒரு ஸ்லோகம் சுவாமி புஷ்கரணின் சிறப்பை இவ்வாறு கூறுகின்றது

ஸ்ரீவைகுண்டவிரக்தாய ஸ்வாமிபுஷ்கரணி தடே,
ரமயா ரமமாணாய வேங்கடேசாய மங்களம்.


பொருள்: திருவைகுண்டத்தில்  பரவாசுதேவனாய்  பக்த ரக்ஷணம் செய்யும் எம்பெருமான், திருமலையில் சுவாமி புஷ்கரணி தீரத்தில் திருவேங்கடமுடையான்  உருவத்தில் அர்ச்சையாய் எழுந்தருளி பக்த ரக்ஷணம் என்னும் காரியத்தை சிறப்பாக செய்து கொண்டிருக்கின்றான். ஸ்ரீமஹாலக்ஷ்மியும் திருமலையில் தனிக்கோவில் கொண்டிராமல் திருவேங்கடமுடையான் திருமார்பையே தன்  கோயிலாகக் கொண்டான்   அத்தகைய திருவேங்கடமுடையானுக்கு எல்லா மங்களங்களும் உண்டாகட்டும்.

வருடத்தில் நான்கு நாட்கள் சுவாமி புஷ்கரணியில் தீர்த்தவாரி என்னும் சக்கரஸ்நானம் நடைபெறுகின்றது. புரட்டாசி பிரம்மோற்சவத்தின் நிறை நாள் திருவேங்கடவனின் திருவோணத்தன்று சக்கரஸ்நானத்தின் போது மலையப்பசுவாமி  உபய நாச்சியார்களுடன் எழுந்தருளி வராக சுவாமி ஆலய முகப்பில் சுவாமி புஷ்கரணி முன் மண்டபத்தில்  சுதர்சனருடன் திருமஞ்சனம் கண்டருளி பின் சக்கர ஸ்நானம் நடைபெறுகின்றது. 




மார்கழியில் வைகுண்ட துவாதசியன்று சக்கர ஸ்நானம் நடைபெறுகின்றது.   வைகுண்ட ஏகாதசிக்கு  அடுத்த நாளான  வைகுண்ட துவாதசியும் அதே அளவிற்கு புண்ணியமான நாள் எனவே  வைகுண்ட துவாதசி அன்றும் திருமலையில்  வைகுண்ட பிரதட்சணம் பக்தர்கள் தரிசனத்திற்காக திறந்திருக்கின்றது.  அன்று விசேஷமாக சக்கரஸ்நானம் நடைபெறுகிறது.திருமாலுடைய திவ்ய ஆயுதமான சுதர்சன சக்கரம் கர்ப்பகிரகத்திலிருந்து      வெளியே கொண்டு வரப்பட்டு ஆலயத்தின் வடகிழக்கு திசையில் இருக்கும் மிகவும் புனிதமான சுவாமி புஷ்கர்ணியில்  சக்கரஸ்நானம் நடைபெறுகின்றது. இது முக்கோடி துவாதசி சக்கர ஸ்நானம் என்று அறியப்படுகின்றது. 



இரத சப்தமி சக்கரஸ்நானம் 



தை மாத வளர்பிறை சப்தமி தினத்தன்று பெருமாள் சூரியனுக்கு அருளும் விதமாக  காலை முதல் இரவு வரை சூரிய பிரபை, சேஷ வாகனம், கருட வாகனம், ஹனுமந்த வாகனம், கற்பக விருட்ச வாகனம்,  சர்வ பூபால வாகனம், சந்திரப்பிரபை என்று  ஏழு வாகனங்களில் சேவை சாதித்து அருளுகின்றார். அன்றைய தினம் மதியம் சக்கரஸ்நானம் நடைபெறுகின்றது. அப்போது பக்தர்கள் தங்கள் உடம் மேல் ஏழு எருக்க இலை வைத்து உடன் நீராடுகின்றனர்.  வாகன சேவையுடன் சக்கரஸ்நானமும் நடைபெறுவதால் இது அர்த்த பிரம்மோற்சவம் (பாதி பிரம்மோற்சவம்) என்றழைக்கப்படுகின்றது. 







மேலும்  ஆவணி மாத சுக்லபட்ச சதுர்த்தசியான   அனந்த பத்மநாப சதுர்த்தசியன்று பகவான் நாராயணன் அனந்தன் அல்லது ஆதிசேஷன் என்ற பெயருடன் பாதாள லோகத்திலிருந்து  பூமியை தன் ஆயிரம் தலைகளால் தாங்கி கால சக்கரத்தை நடத்துகிறார். இவ்வாறு தன் தலைகளால் ஒரு கல்பத்தில் பூமியை தாங்க ஆரம்பித்த நாள் இது என்பது ஐதீகம். அனந்த பத்மநாப சதுர்த்தசியன்று சக்கர ஸ்நானம் நடைபெறுகின்றது. 

திருமலை செல்லும் அனைவரும் நேரத்துடன் சென்று சுவாமி புஷ்கரணியில் நீராடி உடலும், உள்ளமும் தூய்மையடைந்து பெருமாளை சேவிக்குமாறு வேண்டிக்கொள்கிறேன். 

இத்தொடரின் மற்ற பதிவுகளைக் காண இங்கு சொடுக்குங்கள்

சேவை தொடரும் . . . . . . . 

No comments: