Tuesday, August 9, 2016

நானேயோ தவம் செய்தேன் - 8

திருமலைஆர்ஜிதசேவைகள்

 பூங்காவில்   கீதோபதேச காட்சி


அதிகாலை சுப்ரபாதம், தோமாலசேவா, அர்ச்சனை என்று தொடங்கி, பின்னர் கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், வசந்தோற்சவம், சகஸ்ர தீபாலங்கார சேவா, ஏகாந்த சேவை என்று தினமும் பல ஆர்ஜித சேவைகள்  திருமலையில் நடைபெறுகின்றன.

வார ஆர்ஜித சேவைகளில் திங்கட்கிழமைகளில் விசேஷ பூஜையும், செவ்வாய்க்ழ்மைகளில் அஷ்டதள பாத பத்மார்ச்சனை, புதன் கிழமைகளில் சகஸ்ர கலசாபிஷேகம், வியாழக்கிழமைகளில் திருப்பாவாடை சேவை, வெள்ளிக்கி ழமைகளில் வஸ்தலங்கார சேவை, பூராபிஷேகம்,  நிஜபாத தரிசனம் என்று பல ஆர்ஜித சேவைகள்  திருமலையில் நடைபெறுகின்றன.

வருடத்தில் ஒரு முறை தெப்போற்சவம், வசந்தோற்சவம், பத்மாவதி பரிநயனம், ஜேஷ்டாபிஷேகம், புஷ்பப் பல்லக்கு, பவித்ரோற்சவம், புஷ்ப யாகம் முதலிய ஆர்ஜித சேவைகளும், கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் வருடத்திற்கு நான்கு முறையும் நடைபெறுகின்றது.



ஒவ்வொரு சேவைக்கும் குறிப்பிட்ட கட்டணம் மற்றும் சமயம் உள்ளது.  இந்த ஆர்ஜித சேவைகளுக்கு முதலிலேயே இணையம் மூலமும்,   திருமலை-திருப்பதி சேவா மையங்கள் மூலமாகவும் முன்பதிவு செய்து கொள்ளலாம்.  திருமலையில் விஜயா வங்கி கவுண்டரிலும் சில டிக்கெட்கள் வழங்குகின்றனர். அடியோங்கள் ஸ்ரீவாரி சேவையின் போது வசந்தோற்சவம் மற்றும்  சகஸ்ர தீபாலங்கார சேவையையும், எங்கள் குழுவில் ஒருவர் திங்கட்கிழமை காலை விசேஷ பூஜையிலும் கலந்து கொள்ளும் பாக்கியம் கிட்டியது.

இந்த ஆர்ஜித சேவைகள் எல்லாம் உற்சவ மூர்த்தி மலையப்ப சுவாமிக்கான சேவைகள். சேவை முடிந்தவுடன் மூலவரின் தரிசனமும் கிட்டுகின்றது. வைகுண்ட துவாரம் -1  வழியாக சென்று அரை மணி நேரத்தில்மூலவரை தரிசித்து வரமுடிகின்றது.  ரூ 300/- சிறப்பு டிக்கெட்வாங்கி மூலவரை மட்டும் சேவித்து வருவதை விட வசந்தோற்சவ டிக்கெட் வாங்கி மூலவர், உற்சவர் இருவரையும் சேவிப்பதுடன் குறிப்பிடப்பட்ட சமயத்தில் தரிசனமும் கிட்டுகின்றது. ஆனால் குறிப்பிட்ட அளவு டிக்கெட்டுகள்தான் உள்ளன என்பதால் முன்பதிவு ஆரம்பிக்கும் நாளில் முன்பதிவு செய்தால்தான் டிக்கெட் கிட்டும்.


கருடாழ்வார் 

இனி அடியோங்களின் அனுபவம். தினமும் விஜயா வங்கிக் கவுண்டருக்கு சென்று  மறுநாள் அடியோங்களுக்கு ஏற்றவாறு       (சேவை இல்லாத நேரத்தில்) ஏதாவது ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் உள்ளனவா என்று பார்ப்போம். ஒரு நாள்வசந்தோற்சவத்திற்கான டிக்கெட் கிட்டியது. இந்த சேவை வசந்தோற்சவ  மண்டபத்தில் நடைபெறுகின்றது. மாலை 3 மணிக்கு இந்த சேவை துவங்குகின்றது என்றாலும் 1 மணிக்கே வந்துவிட வேண்டியிருந்தார்கள். காலையில் கல்யாணோற்வம், ஊஞ்சல் சேவை கண்டருளி,  உபய நாச்சியார்களுடன் மலையப்பசுவாமி வசந்தோற்சவ  மண்டபத்திற்கு எழுந்தருளி, ஆர்ஜித பிரம்மோற்சவமும், வசந்தோற்சவமும் கண்டருளுகின்றார். அந்த மண்டபத்தில் மேடைக்கு அருகில்  ஆர்ஜித பிரம்மோற்சவ உபயதாரர்களையும்,   அவர்களுக்குப் பின்னால் வசந்தோற்சவ உபயதாரர்களையும் அமர வைக்கின்றனர்.  எனவே அடியோங்களுக்கு இரு சேவைகளையும் சேவிக்கும் பாக்கியம் கிட்டியது.

இம்மண்டபத்தில் மலையப்பசுவாமி உலா வரும் வாகனங்கள் எல்லாம் வைக்கப்பட்டுள்ளன மற்றும் பிரம்மோற்வத்தின் அருட்காட்சிகள் எல்லாம் எழிலார்ந்த தஞ்சாவூர் ஓவியங்களாக மிளிர்கின்றன.  ஆர்ஜித பிரம்மோற்சவத்தில் மலையப்பசுவாமி, கருட வாகனம், ஹனுமந்த வாகனம் மற்றும் பெரிய சேஷ வாகனத்தில் சேவை சாதித்தருளுகின்றார். ஒவ்வொரு வாகனத்திலும்  பெருமாள் எழுந்தருளும் போது ஆரத்தி காட்டப்படுகின்றது அனைவரும் திவ்யமாக பெருமாளை சேவிக்கின்றனர். ஆர்ஜித பிரம்மோற்சவம் நிறைவடைந்தவுடன் அதன் உபயதாரர்கள் மூலவரை தரிசிக்கச் செல்கின்றனர். அதன்பிறகு வசந்தோற்சவ உபயதாரர்கள் பெருமாளின் அருகில் வந்து அமர்ந்து கொண்டு பெருமாளுக்கும், உபய  நாச்சியார்களுக்கும் நடைபெறும் திருமஞ்சனத்தைக் கண் குளிர, மனம் குளிர சேவிக்கின்றனர், பால், தயிர், தேன், இளநீர், மஞ்சள், சந்தனம் என்று விரிவாக திருமஞ்சனம் நடைபெறுகின்றது. அப்போது வேத பண்டிதர்கள் புருஷ ஸூக்தம், ஸ்ரீ ஸூக்தம் விண்ணப்பம் செய்கின்றனர். அதுவும் பெருமாளுக்கு சந்தனத்தால் அருமையாக அலங்காரம் செய்து, துளசி மாலை சார்த்தி  பின்னர் புனித நீரினால் சகஸ்ரதாரா தட்டின் வழியாக திருமஞ்சனம் செய்யும் போது உண்மையிலேயே ஒரு தெய்வீக உணர்வை பெறுகிறோம். எத்தனையோ முறை தொலைக்காட்சியில் பார்த்திருந்தாலும், நேரில்சேவிக்கும்போது அப்படியே மெய்சிலிர்க்கின்றது.



பின்னர்அலங்காரம் நடைபெற்றது, பெருமாளின்  கற்பூர ஆரத்தி சேவித்து மகிழ்ந்தோம்.  அனைவருக்கும், புனித நீர் தெளித்தனர் அதை பெற்று ஜென்ம சாபல்யம் அடைந்தோம். திருமஞ்சன மஞ்சளும், சந்தனப் பிரசாதமும் கிட்டியது. இவ்வாறு இரண்டு ஆர்ஜித பிரம்மோற்வங்களையும் சேவித்து, திருமலையப்பனையும் அரை மணி நேரத்தில்அருமையாகசேவித்துமிகவும்மனதிருப்தியுடன்சேவாசதன்திரும்பினோம்.

மறு நாளும் காலையில் சேவை என்பதால் மாலை சகஸ்ரலங்கார தீபோற்சவத்திற்கான டிக்கெட் கிட்டியது அதை சேவித்தோம். ஆர்ஜித பிரம்மோற்சவம், வசந்தோற்சவம் கண்டருளி, அந்தி சாயும் நேரத்தில் மலையப்பசுவாமி சகஸ்ரலங்கார மண்டபத்திற்கு எழுந்தருளுகின்றார். அதற்கு முன் அந்த மண்டபம் மலர்களால்  நேர்த்தியாக அலங்கரிக்கப்படுகின்றது. அனைத்து அகல் விளக்குகளும் ஏற்றப்பட்டு மாலை கங்குலில் மண்டபம் எழிலாக ஒளிர்கின்றது. அந்த அற்புத சூழலில் மலையப்ப சுவாமியும் உபய நாச்சியார்களும் நாம் எல்லோரும் உய்ய  பொன்னூசல் கண்டருளுருகின்றனர். முதலில் வாய்ப்பாட்டு இசையுடன் முன்னும் பின்னுமாக ஆடி அருளுகின்றார், அடுத்து நாதஸ்வர இசையை இரசித்துக்கொண்டே பக்கவாட்டில் ஆடி அருளுகின்றார். சுமார் 15  நிமிடங்களுக்கு மேல் இச்சேவை  நடைபெறுகின்றது.  பக்தர்கள் அனைவரும் பக்தியும் எம்பெருமானை கண்டு ஆனந்தப்பரவசம் அடைகின்றனர்.  நிறைவாக கோபுர ஆரத்தி தரிசனமும், கற்பூர ஆரத்தி தரிசனமும் கிட்டுகின்றது. பின்னர் மலையப்பசுவாமி மாடவீதி வலம் வந்து பக்தர்களுக்கு சேவை சாதித்து அருளுகின்றார்.

அன்னமாச்சார்யார்

சகஸ்ரதீபாலங்கார சேவையை சேவித்த அன்பர்கள் வைகுண்ட வளாகம்-1 வழியாகச் சென்று மூலவர் திருமலையப்பனை தரிசித்துவிட்டு வருகின்றனர். இவ்வாறு அடியோங்கள் மூன்றாவது முறையாக சுவாமியை தரிசனம் செய்தோம். அடுத்த இரு நாட்கள் அடியோங்களுக்கு வைகுண்ட வளாகம்-2 எழுமலையப்பனை சேவிக்கக் காத்திருக்கும் பக்தர்களுக்கு அன்னம் பாலிக்கும் சேவை செய்யும் பாக்கியம் கிட்டியது. அதில் ஒரு நாள் கூட்டம் குறைவாக இருந்ததால் சேவை நிறைவு பெற்ற பிறகு வரிசையில் என்று  நின்று சுமார் 2 மணி நேரத்தில் திருவேங்கடவனை நான்காவது முறையாக சேவிக்கும் பாக்கியம் கிட்டியது.

சேவையின் நிறைவாக திங்கட்கிழமையன்று  தேவஸ்தானத்தினர் ஏற்பாடு செய்த இலவச சேவையை ஐந்தாவது முறையாக சேவித்தோம். திருமலைக்கு சென்றும் கூட்டம் அதிகம், டிக்கெட் கிட்டவில்லை என்று சுவாமியை தரிசிக்காமல் திரும்பி வந்த நாட்களும் உண்டு ஆனால் அவன் அருளால் எட்டு நாட்களில் ஐந்து தடவை பெருமாளை சேவிக்கும் பாக்கியம் கிட்டியது என்பதனால்தான் இத்தொடருக்கு “நானேயோ தவம் செய்தேன்” என்று தலைப்பு.

ஸ்ரீவாரி சேவையின் போது அடியோங்களுக்கு  நாராயண இரதம் என்றழைக்கப்படும் இலவச பேருந்து சேவை

  சிறிய திருவடி - பெரிய திருவடி அலிப்பிரி 

மிகவும் உதவியாக இருந்தது. ஆகவே அந்த சேவையைப் பற்றிய ஒரு சிறு குறிப்பு. அதிகாலை ஐந்து மணிக்கு இந்த சேவை துவங்குகின்றது. இரவு 11 மணி வரை தொடர்ச்சியாக நடைபெறுகின்றது.  தரிசனத்திற்காக  பக்தர்கள் செல்ல வேண்டிய வைகுண்ட வளாகங்கள், பேருந்து நிலையங்கள், அனைத்து தங்கும் விடுதிகள், டிக்கெட் கவுண்டர் என்று அனைத்து முக்கிய இடங்களையும் இணைக்கும் வகையில் சுற்றிக்கொண்டு வருகின்றது பேருந்துகள்.    ஒரு சுற்று முடித்தபின் சுமார் பத்து நிமிடம் ஓய்வு. பின்னர் அடுத்த சுற்று, பேருந்தில் ஒரு நடத்துனரும் உள்ளார் அவர் பக்தர்களுக்கு வழிகாட்டியாகவும் விளங்குகின்றார். திருமலை செல்லும் அன்பர்கள் குறிப்பாக வயோதிகர்கள், முடியாதவர்கள் இச்சேவையை பயன்படுத்திக்கொள்ளுமாறு  வேண்டிக்கொள்கிறேன்.


இத்தொடரின் நிறைவாக சுவாமி புஷ்கரிணி தீர்த்தமாடல் மற்றும், பத்மாவதித்தாயார் தரிசனத்தையும் பற்றிக்காணலாம் அன்பர்களே.

No comments: