Monday, August 22, 2016

மலை நாட்டு திவ்ய தேச யாத்திரை -2

திருநாவாய்நாவா முகுந்தன்


முதலில் அடியோங்கள் சேவித்த சேரநாட்டு திவ்யதேசம் “திருநாவாய்” ஆகும். சென்னை கள்ளிக்கோட்டை புகைவண்டி மார்க்கத்தில் இத்தலம் அமைந்துள்ளது. மிக அருகில் உள்ள புகைவண்டி நிலையம் திரூர் மற்றும்  குட்டிபுரம்  ஆகும். திரூரிலிருந்து சுமார் 1 கி.மீ தூரத்தில் திருக்கோவில்  அமைந்துள்ளது. ஷொரனூர், பொன்னானி,  பட்டாம்பி, குருவாயூர், பாலக்காடு ஆகிய ஊர்களில் இருந்தும்  குட்டிபுரம்  வழியாக பேருந்து மூலம் நாவாயை அடையலாம்.



எப்போதும் அமைதியாக அகண்டு  பாயும் தக்ஷிணகங்கை என்னும் பாரதப்புழா ஆற்றங்கரையின் வட கரையில் சுமார்  6000 வருடங்கள் பழமையான இந்த ஆலயம் அமைந்துள்ளது.  நிலா ஆறு என்றும் அழைக்கப்படும் இந்த ஆற்றின் முதன்மையான துணையாறு மேற்குத் தொடர்ச்சி மலையில் தமிழ்நாட்டு எல்லைக்குள் அமைந்துள்ள ஆனைமலையில் உற்பத்தியாகி பின் மேற்கு நோக்கி பாலக்காட்டுக் கணவாய் வழியாக பாலக்காடு, திருச்சூர், மலப்புரம் ஆகிய மாவட்டங்களின் ஊடாகப் பாய்கிறது. திரூர் ஆறு  உட்பட பல ஆறுகள் இடையில் சேர்கின்றன. பரளி என்ற இடத்தில் கண்ணாடிப்புழாவும் கல்ப்பாத்திப்புழாவும் இணைந்து பாரதப்புழா என்ற ஆறாக ஓடுகிறது. தூதப்புழா ஆறு பள்ளிப்புரம் என்ற இடத்தில் பாரதப்புழாவுடன் சேர்கிறது. இந்த ஆறு மேற்கு நோக்கி ஓடி பொன்னானி என்ற இடத்தில் அரபிக்கடலில் கலக்கிறது. 108 வைணவத் திருத்தலங்களில் திருநாவாயும், திருவித்துவக்கோடும் இந்த ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.


இங்கு  பெருமாளை “நாவா முகுந்தன்” என்று அழைக்கின்றனர். அடியோங்கள் அதிகாலை சென்று சேர்ந்த போதே ஜே.. ஜே.. என்று பக்தர்கள் கூட்டம்,  வெள்ளை முண்டணிந்த ஆண்களும் பெண்களும்,  தேன் கூட்டில் தேனீக்கள் மிகவும் வேகமாக  வந்து கொண்டும் சென்று கொண்டும் இருப்பது போல ஆற்றை நோக்கியும், ஆற்றிலிருந்து திருக்கோவிலை நோக்கியும் சென்று கொண்டிருந்தனர். அதிகாலையிலிருந்தே  கோவிலிலிருந்து பக்திப் பாடல்கள் ஒலி பெருக்கி  வழியாக  வந்து கொண்டிருந்தது. ஆற்றின் தென்கரையில் பெருமாளின் திவ்ய தேசமும் மறு கரையில் சிவன் மற்றும் பிரம்மாவிற்கான ஆலயமும் அமைந்துள்ளன. எனவே இத்தலம் மும்மூர்த்தி தலம்என்றும் அழைக்கப்படுகின்றது மற்றும் காசிக்கு இணையான தலமாகவும் கருதப்படுகின்றது. ஆகவே பித்ரு பூஜை  இத்தலத்தில் மிகவும் விசேஷம்.

துவாரபர யுகத்தில் ஸ்ரீகிருஷ்ணர் இங்கு வந்து பஞ்ச பாண்டவர்களுடன் சேர்ந்து தம் முன்னோர்களுக்கு பித்ரு பூஜை செய்தார் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது. இதனால் இத்தலத்தில் பித்ரு பூஜை செய்தால் அளவிடற்கரிய புண்ணியம் கிடைக்கும் என்று கருதப்படுகிறது. முதன் முதலாக ஜமதக்னி முனிவர் இத்தலத்தில் தர்ப்பணம்  செய்தார் என்றும் கூறப்படுகின்றது. அமாவாசை நாட்களில் தலவிருட்சத்தின் அடியில் பித்ருக்களுக்கு அன்னம் வைத்து வழிபடுகிறார்கள்.  ஆடி அமாவாசை (கர்க்கடக மாத வாவு) ஆயிரக்கணக்கானோர் இத்தலம்  வந்து நீத்தார் கடன் செலுத்துகின்றனர்.

 திருநாவாய் திவ்யதேசம் 


தை பூசம் தொடங்கி மாசி மகம் ஈறாக 30 நாட்கள் கங்கை, யமுனை, சரஸ்வதி முதலான புண்ணிய  நதிகள் பாரதப்புழையில் சேருவதாக ஐதீகம். எனவே அடியோங்கள் காலை நீராட  பாரதப்புழைக்கு  சென்றோம். அப்போது   ஆற்றின் படித்துறையில் வரிசையாக  அமர்ந்து பக்தர்கள் பித்ரு தர்ப்பணம் செய்வதை கண்ணுற்றோம். சுமார் 25 படிக்கட்டுகள் உள்ளன அதில் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் அமர்ந்து தர்ப்பணம் கொடுத்துக் கொண்டிருந்தனர். பெண்கள் கூட தனியாக அமர்ந்து தர்ப்பணம் செய்வதைக் கண்டோம். அவர்கள் முன் உள்ள  சிறு வாழை இலையில் அரிசி, எள், சாத உருண்டை,  பிரண்டை இலை, பத்ரம், மலர்கள், சிறு பித்தளைக் கிண்ணத்தில் நீர்.  ஒரே பட்டர் மந்திரம் சொல்ல அனைவரும் அவர் கூறிய படி சிரத்தையாக தங்கள் முன்னோர்களுக்கு சிராத்தம் செய்து கொண்டிருந்தனர்.  தர்ப்பணம் முடிந்த பிறகு பிண்டம், பூ, இலைகளை ஆற்றில் போட்டு குளித்து விட்டு கரையேறி பெருமாளை சேவிக்கின்றனர்.  அடியோங்களும் புனித பாரதபபுழா ஆற்றில் நீராடி விட்டு நாவாய் முகுந்தனை சேவிக்க சென்றோம்.

அருமையான இயற்கை எழில் கொஞ்சும் சூழ்நிலையில் அமைந்துள்ளது இத்தலம். சுற்றிலும் பச்சைப் பசேலென வாழை, கமுகு,  பலா மரங்கள் செழிப்பாக எழில் காட்டுகின்றது. அதிகாலை ஈரப்பதம் காற்றில் இருந்தது. சூரிய உதய காலம் என்பதால் பொன்னிறமாக சூரியன் வெளிப்போந்து கொண்டிருந்தான். வாருங்கள் நாவாயாக (கப்பல்) நம்மை சம்சார கடலை கடத்துவிக்கும் முகுந்தனைச் சேவிக்கலாம்.

முகுந்தன் என்ற பதத்திற்கு பெரியோர்கள் இவ்வாறு பொருள் கூறுவர். மு – என்றால் மோட்சம், கு – என்றால் பூமி, த(ததாதி) – என்றால் கொடுப்பவன். ஆகவே  நாவா முகுந்தன் இம்மை பலன்கள் மற்றும் முக்தி ஆகிய இரண்டும் அருள வல்லவன். எனக்கு வேறு புகலில்லை நீயே உனது கருணையினால் மோட்சம் வழங்க வேண்டும் என்று வேண்ட மோட்சம் என்னும் ஸ்ரீவைகுந்ததையும் இவ்வுலகிலே தன்னைக் கொடுத்து அவன் திருவடிகளுக்கு தொண்டு புரிய வைக்கும் சரண்ய முகுந்தன்.

கேரள பாணியில் அருமையாக உள்ளது முகப்பு மண்டபம், கோவிலின் முன்புறம் ஒரு பெரிய சர  விளக்குக் கம்பம் உள்ளது. ஆலய நுழைவாயில் அருகே  விசாலமான இரண்டு   அரச மரங்கள்  உள்ளன. அவைகளிலிருந்து வீசும் தென்றல் சில்லென்று மேனியில் பட திருக்கோவிலுக்குள் பெருமாளை சேவிக்க நுழைந்தோம்.  இரண்டு  பிரகாரங்கள்  கேரள பாணி மரச்சிற்பங்களுடன் எழிலாக அமைந்துள்ளது ஆலயம். உட்புற சுவர்களில் காலத்தினால் அழியாத பல அற்புத ஓவியங்களைக் கண்டோம். பிரகாரத்தில் கன்னி மூலையில்  ஆதி கணபதி, மஹாலக்ஷ்மித் தாயார் மற்றும் ஐயப்பன் சன்னதிகள் உள்ளன. விமானம் பிரமிட் வடிவத்தில் உள்ளது. கூரையை  தாங்குகின்றன அழகிய மரச்சிற்பங்கள்.  உள் பிரகாரத்தில் ஒரு தந்திரி அமர்ந்து கொண்டு சந்தனம் வழங்கிக்கொண்டிருந்தார்.


நம்மாழ்வாரும் திருமங்கையாழ்வாரும் மங்களாசாசனம் செய்த இந்த திருநாவாய் திவ்விய தேசத்தில்
மூலவர் : நாவாய் முகுந்தன், நாராயணன், நின்ற கோலம், கிழக்கே திருமுக மண்டலம்.
தாயார் : மலர் மங்கை நாச்சியார், சிறு தேவி.  தவத்தில் அமர்ந்த கோலம்.  தாயாருக்கு தனி சன்னதி உள்ள ஒரே  மலை நாட்டு திவ்ய தேசம்.
விமானம்: வேத விமானம்.
தீர்த்தம் : செங்கமல சரஸ்
பிரத்யக்ஷம் :மஹாலக்ஷ்மி, நவயோகிகள், கஜேந்திரன்.



இனி இத்தலத்துடன் தொடர்புடைய தல புராணங்களைப் பற்றிப் பார்ப்போமா?.  ஒரு காலத்தில் இத்தலம் வேத பாடசாலைகள் நிறைந்த  இடமாக திகழ்ந்திருக்கின்றது. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மாமாங்கம் என்ற பெயரில் சேரமான் பெருமாளுடன் அவர் ஆளுகைக்கு உட்பட்ட சிற்றரசர்கள்  அனைவரும் கூடி விழா நடத்தியுள்ளனர்.


பாரதப்புழை ஆறு 


முதலில் இவ்வூரின் பெயர் காரணத்திற்கான ஐதீகத்தைக் காணலாம். அயோத்தியின் மாமன்னர்  ரிஷபருக்கு, ஒன்பது மைந்தர்கள். அனைவரும் ஞானிகள்,  எனவே அவர்கள் நவயோகிகள் என்றழைக்கப்பட்டனர். அவர்கள் எப்போதும் தேச சஞ்சாரம் செய்து கொண்டிருந்த போது பாக்மதி மற்றும் கண்டகி நதி சங்கமத்தில் இவர்களில் மூத்தவரான கவி என்பவருக்கு ஒரு சாளக்கிராமம் கிட்டியது.  அதே சமயம் லோக கல்யாணத்திற்காக இந்த சாளக்கிராமத்தை உரிய தலத்தில் பிரதிஷ்டை செய்யுமாறு ஒரு அசரீரி கூறியது. 

கவியும் பாரத கண்டமெங்கும் சுற்றிய போது பிரம்மா யாகம்  செய்த பாரதப்புழையின் வட கரையில் உள்ள இத்தலத்தில் அந்த சாளக்கிராமத்தை சமர்பித்துவிட்டு தன் கடமை முடிந்துவிட்டது என்று நினைத்து சென்று விட்டார். ஆனால் அந்த சாளக்கிராமம்  பூமியில் மறைந்து விட்டது. அவருக்கு பின் அவரது இளையவர்கள் ஏழு பேர் சமர்பித்த சாளக்கிராமங்களும் இவ்வாறே மறைந்தது. ஒன்பது சகோதரர்களில் இளையவரான கரபாஜனன் தான் கொண்டு வந்த சாளக்கிராமத்தை உரிய முறையில்,  அனைத்து ஆகம விதிப்பிரகாரம் முக்தி அளிக்க வல்ல முகுந்தனாக பிரதிஷ்டை செய்தார், பெருமாளும் இங்கு கோயில் கொண்டார். பின்னர் நவயோகிகளும் இங்கு யக்ஞம் செய்து விஷ்ணுவை வழிபட்டனர். ஆகவே இத்தலம் நவயோகி என்றழைக்கப்பட்டு பின்னர் அது மருவி பின்னர் திருநாவாய் என்று ஆகியது.

இனி ஒரு ஐதீகமும் கூறப்படுகின்றது. அந்த நவ யோகிகள் சத்துவநாதர், சாலோகநாதர், ஆதிநாதர், அருளிநாதர், மதங்கநாதர், மச்சேந்திரநாதர், கடயேந்திரநாதர், கோரக்கநாதர், குக்குடநாதர் என்பர். பொதுவாக திருக்கோவிலின் சம்ப்ரோக்ஷணம் நிறைவடைந்த பிறகு ஒரு வாரம் பூட்டி வைப்பது மரபு. முதல் எட்டு யோகிகளும் பிரதிஷ்டை செய்த பெருமாள் ஒரு வாரம் கழித்து திருக்கோவிலை திறந்து பார்த்தபோது காணாமல் போயிருக்குமாம். ஒன்பதாவது யோகி ஒரு வாரம் வரை காத்திருக்காமல் மூன்று நாள் தாண்டிய உடனே திருக்கோவிலை திறந்து பார்த்தபோது பெருமாள் முழங்கால் வரைக்கும் பூமிக்குள் மறைந்து இருந்தாராம். பின்னர் யோகியார் வேண்ட முழு ரூபத்தில் இன்றும் சேவை சாதிப்பதாக ஐதீகம். மற்ற எட்டு மூர்த்தங்களும் இன்றும் கீழே உள்ளனர் என்பது ஐதீகம். இங்கே ஆழ்வார்கள் வைகுந்தன் என்பவன் ஒரு தோணி என்று பாடியபடி நம்மை இந்த சம்சார சாகரத்திலிருந்து ஈடேற்றும் நாவாயாக எழுந்தருளி சேவை சாதிக்கின்றார் பெருமாள் நாவா முகுந்தன்.

இனி பக்தர்களுக்கு நெகிழும் பரந்தாமனாக இத்தலத்தில் பெருமாள் சேவை சாதிக்கும் பாங்கைக் காணலாமா? கஜேந்திர மோக்ஷக் கதையை நாம் எல்லோரும் அறிவோமல்லவா?. இந்திரதும்யுனன் என்ற பாண்டிய மன்னன் சிறந்த விஷ்ணு பக்தன். அவன் ஒரு முறை அகத்திய முனிவர் வந்த போது அவரை கவனிக்காமல் பூஜை செய்து கொண்டிருந்தான், அதைக் கண்டு கோபம் கொண்ட முனிவர் என்னை மதிக்காமல் மதம் கொண்டு நடந்த நீ, மதம் கொண்ட யானையாக மாறக்கடவது என்று சாபம் கொடுத்தார். மன்னன் முனிவர் தாள் படிந்து, அடுத்த பிறவியிலும் தான் பெருமாள்  மேல் கொண்ட பக்தி தொடர வேண்டும் என்று வேண்ட, முனிவரும் அவ்வாறே வரம் கொடுத்து அந்த மஹாவிஷ்ணுவாலேயே உனக்கு மோக்ஷமும் கிட்டும் என்று சாப விமோசனமும் அளித்தார்.

ஹூஹூ என்னும் கந்தர்வன் ஒருவன் பொய்கைக்கு கால் கழுவ வருபவர்களின் காலைப் பற்றி இழுத்து விளையாடும் வழக்கத்தைக் கொண்டிருந்தான். ஒரு சமயம் தேவ முனிவரின் காலை இவ்வாறு இழுத்த போது முனிவர் அவனுக்கு தண்ணீரில் கிடந்து தவிக்கும் முதலையாக ஆகும் சாபம் அளித்தார். அவன் தன் தவறை உணர்ந்து சாப விமோசனம் வேண்ட மஹாவிஷ்ணுவின் சுதர்சன சக்கரம் பட்டு உனக்கு சாப விமோசனம் ஏற்படும் என்றார்.

பின்னர் ஒரு சமயம் கஜேந்திரன் பெருமாளுக்கு  சமர்ப்பிக்க தாமரை மலரை பறிக்க முதலை இருந்த தடாகத்திற்கு வர முதலை யானையின் காலைப் பற்றியது. யானை முதலையின் பிடியில் இருந்து தப்பிக்க எத்தனையோ ஆண்டுகள் முயற்சி செய்தது. ஆனாலும் முடியவில்லை, கூட இருந்த சுற்றத்தார்களும் விட்டு விலகி விட்டனர், தன்னுடைய பலமும் குறைந்து வருவதை உணர்ந்த கஜேந்திரன்,  நிர்க்கதியான நிலையில் பெருமாளை சரணடைந்து ”ஆதி மூலமே” என்றலறினான். அந்த ஆபத்பாந்தவன் பெரிய திருவடியில் ஆரோகணித்து வந்து சுதர்சன சக்கரத்தால் முதலையை கொன்று கஜேந்திரனைக் காப்பாற்றினார். இந்த கஜேந்திரனே கன்னி மூலையில் பெருமாளுக்கு வலப்புறத்தில் ஆதி கணேசராக சன்னதி கொண்டதாக ஐதீகம்.


ஐயப்பன் சந்நிதி 

பின்னர் கஜேந்திரன் தினமும் பாரதப்புழையில் நீராடி  தடாகத்தில் தாமரை மலரை பறித்து பெருமாளுக்கு சமர்பித்து வந்தது. அதே தடாகத்தில் இருந்து மஹாலக்ஷ்மியும் தாமரை மலர் பறித்து பெருமாளை ஆராதித்து வந்தார். ஒரு நாள் மஹாலக்ஷ்மி எல்லா தாமரை மலர்களையும் தானே முதலில் பறித்து வந்துவிட மலர் இல்லாமல் தவித்த கஜேந்திரன் பெருமாளிடம் முறையிட பெருமாளும் பக்தனுக்காக நெகிழ்ந்து, மஹாலக்ஷ்மியிடம் தேவி! நீ தனியாக என்னை ஆராதனை செய்யாமல் கஜேந்திரன் ஆராதனையை என்னோடு நீயும் சேர்ந்து ஏற்றுக் கொள்ளேன், எனக்குச் சமமாக உனக்கும் சேர்த்து அவன் வழிபாடு நடத்தட்டுமே’  என்று மகாலக்ஷ்மியை சமாதானம் செய்தார். பிராட்டியும் பெருமாளுக்கு இடப்புறத்தில் தனிச் சன்னதியில் கோவில் கொண்டாள். அதன்படி, இத்தலத்தில் முகுந்தனும், மகாலக்ஷ்மியும் தனித்தனியே சன்னதி கொண்டு, அந்நாளைய கஜேந்திரன் முதல் இப்போது அடியோங்கள் உட்பட அனைவரது  பக்தி உபசாரத்தையும் ஏற்றுக் கொள்கிறார்கள்!. அதனால்தான் மலை நாட்டு திவ்விய தேசங்களுள் இத்தலத்தில் மட்டும் தாயாருக்குத் தனி சன்னதி உள்ளது. மற்ற மலை நாட்டு  திவ்ய தேசங்கள் அனைத்திலும்  அகலகில்லேன் இறையும்”  என்று  எம்பெருமானின் திருமார்பிலேயே உறைகின்றாள் பிராட்டி. இவ்வாறு பக்தர்களே தனக்குப் பிரதானம் என்று பெருமாள் காட்டிய தலமாகும் இத்தலம். தாயார் அமர்ந்த கோலத்தில் இடக்கையை அபய கரமாகவும், வலக்கரத்தை தன் திருவடிகளை காண்பிக்கும் விதமாகவும் சேவை சாதிக்கின்றாள்

இத்தலத்தை மங்களாசாசனம் செய்த திருமங்கையாழ்வார் கஜேந்திர மோட்சத்தை  தமது  ஒரு பாசுரத்தில் பாடியுள்ளார் அப்பாசுரம்

தூவாய புள் ஊர்ந்துந்து துறை வேழம்
மூவாமை நல்கி முதலை துணித்தானை
தேவாதி தேவனை செங்கமலக்கண்ணானை
நாவாய் உளானை நறையூரில் கண்டேனே (பெ.தி. 6-8-3)

பொருள்: பரிசுத்தமான வாயை உடைய கருடாழ்வாரை வாகனமாகக் கொண்டு மடுவின் கரையிலே வந்து சேர்ந்து கஜேந்திராழ்வான் துன்பம் அடையாதபடி அருள்புரிந்து முதலையை இரு துண்டாக்கி ஒழித்தவனும், நித்திய சூரிகளுக்குத் தலைவனும், செந்தாமரை போன்ற திருக்கண்களை உடையவனும், திருநாவாய் என்னும் திருப்பதியில் உறைபவனுமான எம்பெருமானை நறையூரில் கண்டேன் என்று அதாவது இவ்வாறு ஆனைக்கு அருள் புரிந்த  நாவாய்  எம்பெருமானே தனது ஆச்சாரியன் நறையூர் நின்ற நம்பி என்று பாடுகின்றார்.

மார்க்கண்டேயனுக்கு சிரஞ்சீவியாக இருக்க வழிகாட்டிய பெருமாளாகவும் நாவா முகுந்தன் விளங்குகின்றார். பெற்றோர்கள் பெற்ற  வரத்தின்படி பதினாறு வயதானவுடன் எமன் மார்க்கண்டன் உயிரைப் பறிக்க வரும் போது மார்க்கண்டேயர் முகுந்தனை சரணமடைய அவரும் ஒரு சிவலிங்கத்தை சிறுவனிடம் அளித்து இந்த சிவலிங்கத்தை  பூஜை செய் என்று பின் வாசல் வழியாக அனுப்பி பின்னர் அந்த வாசலை மூடிவிட்டாராம். யமன் வெளியே செல்ல முடியாமல் போனதால் மார்க்கண்டன் உயிர் தப்பியது. மார்க்கண்டரை காத்த சிவபெருமான் சிவலிங்கமாக  மஹா சிவன் என்ற நாமத்துடன்  நாவாய்க்கு அருகில் உள்ள திருப்பிரங்கோடு என்ற தலத்தில் அருள்பாலிக்கின்றார்பராங்குச நாயகியாய் தன்னை பாவித்து  நம்மாழ்வார் 

மணாளன் மலர் மங்கைக்கும் மண் மடந்தைக்கும்
கண்ணாளன் உலகத்து உயிர்  தேவர்கட்கு எல்லாம்
விண்ணாளன் விரும்பி உறையும் திருநாவாய்
கண் ஆரக் களிக்கின்றது இங்கு என்று கொல் கண்டே? (தி.வா 9-8-5)

பொருள்: பெரிய பிராட்டிக்கும், பூமிப்பிராட்டிக்கும் நாயகனும், மக்களும், தேவர்களுமாகிய எல்லா உயிர்களுக்கும் நிர்வாகனும், பரமபதத்தில் எழுந்தருளியிருப்பவனுமான எம்பெருமான் விரும்பி எழுந்தருளியிருக்கின்ற திருநாவாயைக் கண்ணாரக் கண்டு களிப்பது என்றுதானோ அறிகிலேன்!. என்று மங்களாசாசனம்  செய்த  திருநாவாய் திருப்பதியில்  நாவாய் முகுந்தன்,  நின்ற திருக்கோலத்தில் சங்கு சக்கரம், கதை,  பத்மத்துடன், சதுர்புஜராய், மந்தகாச புன்சிரிப்புடன் சேவை சாதிக்கின்றார். நெய் விளக்கு வெளிச்சத்தில் பக்தவத்சலனை  சேவிக்கும் போது அப்படியே மெய் சிலிர்க்கின்றது. பால் பாயசம் இவருக்கு உகந்த நைவேத்யம், நெய் விளக்கும், தாமரை மாலையும் இவருக்கு மிகவும் உகந்தவை என்பதால் பல பக்தர்கள் இவற்றை பெருமாளுக்கு  சமர்ப்பிக்கின்றனர். இவரை திருமாலே! நாவாய் உறைகின்ற என்  நாரண நம்பீஆவா! அடியான் இவன்  என்று அருளாயே! சரணாகதி செய்தோம்.    
திருநாவாயை நம்மாழ்வார் பத்துப் பாசுரங்களால் மங்களாசாசனம் செய்துள்ளார், திருமங்கையாழ்வாரும் இரு பாசுரங்களால் பாடியுள்ளார் அவரின்  ஒரு பாசுரத்தை மேலே சேவித்தோம் அடுத்த பாசுரம்

கம்பமா களிறு அஞ்சிக் கலங்க ஓர்
கொம்பு கொண்ட குறை கழல் கூத்தனை
கொம்பு உலாம் பொழில் கொட்டியூர்க் கண்டுபோய்
நம்பனைச் சென்று காண்டும் நாவாயுளே. (பெ.தி 10-1-9)

பொருள்: கண்டார்க்கு நடுக்கத்தை விளைக்கக் கூடிய பெரிய குவலயாபீடம் என்னும் யானை பயப்பட்டுக் கலங்கி முடியுமாறு அதன் கொம்பை முறித்து எறிந்தவனும், வீரக்கழலை உடையவனும், விசித்திரமான நடை உடையவனும், அன்பர்களால் விரும்பத்தக்கவனுமான  எம்பெருமானை சோலைகள் உள்ள திருக்கோட்டியூரிலே சென்று வணங்கித் திருநாவாயில் சேவிப்போம் என்று பாடுகின்றார்.


குழுவினர் 

6000 வருடங்கள் பழமையான இவ்வாலயம் திப்பு சுல்தான் காலத்திலும், மாப்பிள்ளைக்  கலகங்களின் போதும் சேதமடைந்தது. பின்னர் வருடத்தில்  இரு முறை மலையாள  மேஷ மாதப் பிறப்பன்றும் (சித்திரை) கன்னி மாதப் பிறப்பன்றும் (புரட்டாசி) சூரியனது கதிர்கள் இறைவனின் திருமேனியில் படும்படி புனருத்தாரணம் செய்யப்பட்டுள்ளது.
திவ்யமாக பெருமாளை தரிசித்து விட்டு வெளியே கிளம்பியபோது அங்கிருந்த  ஆலய பணியாளர்கள் சாப்பிட்டுவிட்டு செல்லுமாறு அன்புடன் அழைத்தார்கள். ஆலயத்திற்கு அருகிலேயே ஊட்டுப்புரா என்னும் அன்னதானக்கூடம் அமைத்துள்ளனர். வருடம் 365 நாளும் வரும் பக்தர்களுக்கு “பிரசாத ஊட்டு” என்னும் அன்னதானம் இலவசமாக வழங்குகின்றனர்.  காலையில் எங்களுக்கு இட்லி,  சாம்பார், சாய் (டீ) பெருமாள் பிரசாதமாக கிடைத்தது.  

அறுக்கும் வினையாயின ஆகத்தவனை
நிறுத்தும் மனத்து ஒன்றிய சிந்தையினார்க்கு
வெறித்தண் மலர்சோலைகள்சூழ் திருநாவாய்
குறுக்கும் வகையுண்டு கொலோ? கொடியேற்கே. (தி.வா 9-8-1)

பொருள்: எம்பெருமானைத் தங்கள் உள்ளத்திலே நிலை நிறுத்தி வைத்துக் கொள்ள வேண்டும் என்கிற கருத்திலே ஒருமைப்பாடுடைய  எண்ணத்தையுடைய அடியார்களுக்கு வினை என்று பெயர் பெற்றவை அனைத்தையும் போக்குவான். அப்பெருமான் எழுந்தருளியுள்ள, மணம் பொருந்திய குளிர்ந்த மலர்கள் நிறைந்த சோலைகள் சூழ்ந்த திருநாவாய் என்னும் திருப்பதியைக் கொடியேனாகிய எனக்கு அணுகும் வகை உண்டோ? என்று நம்மாழ்வார்,  எம்பெருமான் வரக்காணாமையினால் தலைவித் தலைவனது நகரான திருநாவாயிற் செல்ல நினைந்தமை கூறும் முகத்தால்,  ஆழ்வார் எம்பெருமானை  டைவதில் விரைவை தெரிவிக்கும் இந்த பாசுரத்தில் அன்று பாடிய படி இன்றும் மா, பலா, வாழை தோட்டங்கள், மலர்ச்சோலைகள், பாரதப்புழை ஆறு சூழ்ந்திருக்க எழிலாக அமைந்துள்ளது திருநாவாய் திவ்யதேசம். இந்த திவ்யதேசத்திற்கு இராமனுஜர் விஜயம் செய்த போது திருக்கோவில் எங்குள்ளது என்று விசாரித்தபோது அவர்கள் குறுக்க.. குறுக்க.. அதாவது அருகில்தான் உள்ளது என்று பதிலிறுத்தார்களாம். நம்மாழ்வாரின் மேலே சேவித்த இந்த பாசுரத்திலும் குறுக்கு என்ற தொடர் வந்துள்ளதை ண்ணி இராமானுஜர்  வியந்தாராம்.

மலை தேச எம்பெருமான்கள் அனைவரும் ம்மாழ்வாருக்கு ஒவ்வொரு கல்யாண குணத்தை காட்டி அருளியதாக அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் என்ற ஆச்சாரியர் தமது ஆச்சார்ய ஹ்ருதயம் என்ற நூலில் கூறியுள்ளார்.  இந்த திவ்யதேசத்தில் எம்பெருமான் நம்மாழ்வாருக்கு காட்டும் தன்மை அடியார்களிடம் இருக்கும் மாப்பெரும்  கருணையாகும்
தன்னை சரணடைந்தவர்களை இந்த சம்சாரம் என்னும் பெருங்கடலை கடத்துவிக்கும் படகோட்டியாகவும்,  படகாகவும் எம்பெருமான் இந்த திவ்ய தேசத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றார்
   
தை மாத மகர சங்கராந்தியும், சித்திரை மாத விஷுக்கனியும் இத்தலத்தில் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. விஷுவை ஒட்டி பத்து நாட்கள் இங்கே தெய்வீக வைபவம்தான்.  அந்தப் பத்து நாட்களும், ஆலயம் முழுவதும் எண்ணெய் தீப ஒளியில் திருக்கோயிலே ஜகஜ்ஜோதியாகத் திகழுமாம். இத்தலத்தில்  விஷுக்கனி காண்போர், தம் வாழ்வில் எல்லா வளங்களையும், சிறப்புகளையும் பெறுவார்கள் என்பது இங்குள்ளோர் நம்பிக்கை. மேலும் ஏகாதசி தினத்தன்றும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. இத்திருக்கோவிலுக்கு அருகிலேயே ஐயப்பனின் தனி சன்னதியும் அமைந்துள்ளது.

பொதுவாக எல்லா மலை நாட்டு திவ்ய தேசங்களிலும்  யாத்திரிகளுக்கு உதவும் விதமாக அனைத்து ஆலயங்களிலும்   அறிவிப்புப் பலகை வைத்துள்ளனர். அதில் மலையாளம் மற்றும் ஆங்கில மொழிகளில் திவ்ய தேசத்தின் திவ்ய பிரபந்த  பெயர், தற்போது அறியப்படும் பெயர்இந்த திவ்ய தேசத்திலிருந்து எவ்வளவு தூரம், அருகில் உள்ள பெரிய ஊர் என்ற விவரங்களை அதில் தந்துள்ளனர். மேலும் கிருஷ்ணப்ரேமி சுவாமிகள் அந்த திவ்ய தேசத்திற்கு சமர்பித்துள்ள ஒரு   ஆழ்வார் பாசுரம் மற்றும்  த்யான ஸ்லோகம்  ஆகிய கல்வெட்டுகளையும்  அனைத்து   மலை நாட்டு திவ்யதேசங்களிலும் காணலாம்

அடியோங்களை யாத்திரைக்கு அழைத்து சென்ற  திருமலை சுவாமிகள் எப்போதும் முதலில் திருவித்துவக்கோடு தலம்தான் செல்வாராம். அங்கு பாரதப்புழையில் குளித்து விட்டு பெருமாள் தரிசனம் செய்துவிட்டு பின்னர் இரண்டாவதாக  இங்கு வருவார்களாம்.  ஆனால் அத்தலத்தில் தங்கும் வசதி எதுவும் இல்லை  என்பதால் எங்களை இந்தத் தடவை  திருநாவாய்  முதலில் அழைத்து வந்தாராம். அதுவும் நல்லதாவே அமைந்தது மூன்று அறைகள் வாடகைக்கு எடுத்தோம், அனைவரும் காலைக் கடன்களை முடிக்கவும், மூட்டை முடிச்சுகளை வைத்து விட்டு பாரதப்புழையில் நீராடிவிட்டுப் பெருமாளைச் சேவிக்கவும்  ஏதுவாக இருந்தது. அனுதினமும் அன்னதானம் நடக்கும் இத்தலத்தில் பெருமாளின் பிரசாதம் சுவீகரிக்கும் பாக்கியமும் கிட்டியது.

சிறிய கிராமம் என்றாலும் தர்ப்பணம் செய்ய வருபவர்கள் தங்குவதற்கு ஏதுவாக இங்கு தேவஸத்தினர் (தேவஸ்தானம்) அறைகள் கட்டியுள்ளனர் எனவே இங்கு தங்கும் வசதியுள்ளது. ஆன்-லைனில்  http://thirunavayatemple.org என்ற வலைத் தலத்தின் மூலம் அறைகளை முன் பதிவு செய்து கொள்ள முடியும். அடியோங்கள் சென்ற போது ஒரு மணி நேர வாடகை ரூ 100/-, ஒரு நாள் வாடகை ரூ.500/- ஆக இருந்தது.

திவ்வியக்கவி பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் அவர்கள் முதலில் அரங்கனைத் தவிர வேறு யாரையும் வணங்க மாட்டேன் என்று இருந்தார், பின்னர் திருமலையப்பன் அருளால் அனைத்து திவ்ய தேசங்களிலும் திருமால்தான்   உறைகின்றார் என்பதை உணர்ந்து நூற்றெட்டு திருப்பதி அந்தாதி பாடினார். ஒவ்வொரு திவ்விய தேசத்தின் அவரது பாடலையும் சேவிப்போம் அன்பர்களே.

பறந்து திரிதரினும் பாவியேன் உள்ளம்
மறந்தும் பிறிது அறியமாட்டா; சிறந்த
திருநாவாய் வாழ்கின்ற தேவனைஅல் லால், என்
ஒருநாவாய் வாழ்த்தாது உகந்து. ( நூ.தி 65 )

பொருள்: தீவினையுடைய எனது மனமானது ஒரு நிலையில் நில்லாது விரைந்து அலையும் தன்மையுடையதாயினும், மறந்தும் திருமாலையன்றி மற்றொரு தெய்வத்தை மதியாது; எனது ஒருபடிப்பட்ட நாவானது மேம்பட்ட திருநாவாய் என்னும் திருப்பதியில் நித்திய வாசம் செய்கின்ற திருமாலை அல்லாது மற்றொரு தெய்வத்தை விரும்பித் துதியாது.


பிறவி என்னும் பெருங்கடலை கடத்துவிக்கும் நாவாயாக விளங்கும் நாவா முகுந்தனின்  ”ஸ்ரீநவயோகி க்ஷேத்ரே ரக்தபங்கஜ புஷ்கரணி தடே வேத விமானச்சாயாயாம் பூர்வாபிமுகாய ஸ்ரீமதே பத்மாவதி சமேத  ஸ்ரீநாராயண(நாவா முகுந்த) பரப்பரமஹ்மனே  நம:” என்ற தியான ஸ்லோகத்தை  சேவித்துக்கொண்டே,  மருத்துவனாய் நின்ற மாமணிவண்ணன் உறையும்  தற்போது  மிற்றக்கோடு என்று அழைக்கப்படும் திருவித்துவக்கோடு திவ்யதேசத்தை சேவிக்கக் கிளம்பினோம்.
  

 மற்ற திவ்ய தேசங்களை இங்கே சேவியுங்கள்  :

திருவித்துவக்கோடு      திருமூழிக்களம்       திருக்காட்கரை    

திருக்கடித்தானம்       திருவல்லவாழ்       திருவண்வண்டூர்      திருப்புலியூர்  


திருசெங்குன்றூர்    திருவாறன்விளை    
திருவனந்தபுரம்   திருவாட்டாறு 

திருவண்பரிசாரம்     


 மற்ற தலங்களை இங்கே சேவியுங்கள்  : 
  குருவாயூர்              கொடுங்கல்லூர்            திருஅஞ்சைக்களம்         குலசேகரபுரம்  

 சோட்டாணிக்கரை            வர்க்கலா            நெய்யாற்றங்கரை             திருப்பிரயார்        

  இரிஞ்ஞாலக்குடா
பாயம்மல்

மலை நாட்டு திவ்ய தேச யாத்திரை தொடரும் . . . . . .

No comments: