Tuesday, August 23, 2016

மலை நாட்டு திவ்ய தேச யாத்திரை -3


அன்பர்கள் அனைவருக்கும்   குட்டிக் கிருஷ்ணன் பிறந்த நாள் வாழ்த்துகள்! 


திருவித்துவக்கோட்டில்  பஞ்ச பாண்டவர்கள் வழிபட்ட பெருமாள்களை சேவிப்பதற்கு முன்னர் ஸ்ரீகிருஷ்ணன் தரிசனம் பெற இங்கு செல்லுங்கள் அன்பர்களே . . . . . .; கண்ணன் கேசவன் நம்பி பிறந்தனன்

**********


திருவித்துவக்கோடு – உய்யவந்த பெருமாள்




அடுத்து அடியோங்கள் சேவித்த திவ்ய தேசம் திருவித்துவக்கோடு ஆகும். பள்ளியில் தமிழ் படித்த அனைவரும் இந்தச் செய்யுளை நிச்சயம்  படித்திருப்பர்.  “வாளால் அறுத்து சுடினும்”  என்ற அந்த செய்யுள், அடியேன் மனதில் அப்படியே பசுமரத்தாணி போலப் பதிந்துள்ளது. அந்த பிறவிப்பிணி அறுக்கும் வைத்தியரைச் சேவிக்கச் செல்கின்றோம் என்று மனத்தில் மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. வாருங்கள் முதலில் குலசேகராழ்வாரின் அந்த பாசுரத்தை சேவிப்போம்.

வாளால் அறுத்து சுடினும் மருத்துவன் பால்
மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால்
மீளாத் துயர் தரினும் வித்துவக்கோட்டு அம்மா நீ
ஆளா உனது அருளே பார்ப்பன் அடியேனே. (பெரு. தி 5-4)

பொருள்:வித்துவக்கோட்டம்மா! வைத்தியர் கத்தியைக் கொண்டு அறுத்தாலும், ஊசியைக் காய்ச்சிச் சூடு போடுதலுமாகிய அறுவை சிகிச்சைகளைச் செய்தாலும், அம்மருத்துவனிடத்து நீங்காத அன்புடைய நோயாளியைப் போல உன் மாயையினால்நீ, நீங்காத துன்பத்தை எனக்கு விளைவித்தாலும், உனது அடியவனான நான் அவ்வடிமைத் திறம் முற்றும் வந்தெய்வதற்காக  உன்னுடைய கருணையையே நோக்கியிரா நின்றேன்” என்கிறார் சேரநாட்டு அரசராக இருந்து ஆழ்வாராகிய குலசேகரப்பெருமாள் "அனன்ய கதித்வம்" எனப்படும்,  ”உன் சரணல்லால் எனக்கு வேறு சரணில்லை” என்பதை ஆழ்வாரின் பாசுரங்கள் உணர்த்துகின்றன.

இவ்வாறு எனக்கு வேறு புகலில்லை நீயே உன் கருணையினால் மோட்சம் அளிக்க வேண்டும் என்று நாம் சரணடைய, மோட்சம் என்ற ஸ்ரீவைகுண்டத்தையும் இப்பூவுலகிலேயே தன்னையும் கொடுத்து தனக்கு தொண்டு புரிய வைப்பான்.  

இந்த நான்காவது பாசுரத்தில் பரமாத்வான பெருமாளுக்கும், ஜீவாத்மாவான நமக்கும் உள்ள உறவு ஒரு வைத்தியனுக்கும் நோயாளிக்கும் உள்ள உறவு என்று  பாடியது போல ஒவ்வொரு பாசுரத்திலும் ஒவ்வொரு உறவை பாடியுள்ளார் குலசேகராழ்வார், அவையென்னவென்று சுருக்கமாக பார்க்கலாமா அன்பர்களே. 

1.   ஒரு தாய்க்கும் அவளது சேய்க்கும் உள்ள உறவு.
2.   ஒரு கணவனுக்கும் அவன் மனைவிக்கும் உள்ள உறவு.
3.   ஒரு அரசனுக்கும் அவனது பிரஜைகளுக்கும் உள்ள உறவு.
4.   ஒரு மருத்துவருக்கும் நோயாளிக்கும் உள்ள உறவு.
5.   கதிரவனுக்கும் தாமரைக்கும் உள்ள உறவு.
6.   நடுக்கடலில் பாய்மரக் கப்பலுக்கும் தனிப் பறவைக்கும் உள்ள உறவு.
7.   சமுத்திரத்திற்கும் நதிக்கும் உள்ள உறவு.
8.   மழை வழங்கும் கருமேகங்களுக்கும் பயிருக்கும் உள்ள உறவு.
9.   செல்வந்தனுக்கும் அவனது செல்வத்திற்கும் உள்ள உறவு
10. பலசுருதியாக இந்த உறவுகள் போல பரமாத்மாவிற்கும் ஜீவாத்மாவிற்கும் இடையே உள்ள உறவு பிரிக்கமுடியாதது என்று பாடுகின்றார் குலசேகராழ்வார்

திருநாவாயிலிருந்து தற்போது திருமிற்றக்கோடு என்று அழைக்கப்படும்  திருவித்துவக்கோடு தலம் சுமார் 40 கி.மீ தூரத்தில் உள்ளது. திருவிஞ்சிக்கோடு என்னும் இன்னொரு பெயரும் இத்தலத்திற்கு உண்டு. திருவித்துவக்கோடு என்றால் அழகிய இடம் என்று பொருள். அடியோங்கள்  குட்டிபுரம், மானூர், எடப்பல் வழியாக திருவித்துவக்கோட்டை அடைந்தோம். வழி விசாரிக்கும் போது திருவித்துவக்கோடு என்ற போது  யாருக்கும் தெரியவில்லை. திருமிற்றக்கோடு என்று திருத்தி பின் வழி கூறினர். நெடுஞ்சாலையிலிருந்து சுமார் 5 கி.மீ உள்ளே தள்ளி உள்ளது இத்தலம். அந்தப் பாதை ஒற்றைப் பாதைதான் ஆனால் இயற்கை எழில் கொஞ்சும் பாதை. கேரளாவிற்கே உரிய பச்சை மரங்களும், சிவப்புக்கற்களால் கட்டப்பட்ட வீடுகளும், சாய்ந்த  ஓடுகள் வேய்ந்த கூரைகளும் கண்ணுக்கு விருந்து.


பாரதப்புழை   ஆறு 

புகை வண்டியில் வரும் போது இத்தலமும் சென்னை - ஷொரனூர் கள்ளிக்கோட்டை மார்க்கத்தில் அமைந்துள்ளது. குருவாயூர் அல்லது பட்டாம்பி புகைவண்டி நிலையத்தில் இறங்கி பின்னர்  அங்கிருந்து  சிறு பேருந்து அல்லது ஆட்டோ  மூலம் பாரதப்புழை ஆற்றைக் கடந்தும்  இத்தலத்தை அடையலாம். பேருந்தின் மூலமாக வரும் போது பாலக்காடு குருவாயூர் முதலிய ஊர்களிலிருந்து முதலில் பட்டம்பி வந்து பின்னர் அங்கிருந்து இத்தலத்தையும் திருநாவாய் தலத்தையும் ஆட்டோ அல்லது பேருந்து மூலம் அடையலாம்.   திருவித்துவக்கோட்டில் தங்கும் வசதிகள் எதுவும் கிடையாது.

ஆதி காலத்தில் நான்கு மூர்த்தி தலமாக இருந்த இவ்வாலயம் பின்னர் ஐந்து மூர்த்தித் தலமானது. பஞ்ச பாண்டவர்களும் விஷ்ணு மூர்த்தியை  பிரதிஷ்டை செய்து வழிபட்டுள்ளனர். பரசுராமர் ஸ்தாபித்த 108 சிவாலயங்களில் இத்தலமும் ஒன்று என்னும் சிறப்பும் இத்தலத்திற்கு உண்டு.  அஞ்சுமூர்த்தி கோவில் என்றழைக்கப்படும் இத்தலத்தின் சிறப்புகளைப் பற்றி காணலாம் வாருங்கள் அன்பர்களே.

சிவபெருமானும்  மஹா விஷ்ணுவும் ஒரே வளாகத்தில் அமைந்துள்ள தலம். சிவன் சன்னதியும் அர்ச்சுனன் வழிபட்ட பெருமாளும் ஒருவர் பின் ஒருவராக சேவை சாதிக்கின்றனர். சிவன் காசி விஸ்வநாதராக எழுந்தருளி  அருள் பாலிப்பதாலும், தக்ஷிண கங்கை எனப்படும் பத்து நதிகள் இணையும்  பாரதப்புழை ஆற்றின் கரையில் அமைந்துள்ளதாலும். இங்கும் காசி போல  நீத்தார் கடன் செலுத்த உகந்த தலமாக விளங்குகின்றது.

தருதுயரம் தடாயேல் உன்சரணல்லால் சரணில்லை
விரைகுழுவும் மலர்ப்பொழில்சூழ் விற்றுவக்கோட்டம்மானே!
அரிசினத்தால் ஈன்றதாய் அகற்றிடுனும் மற்றவள்தன்
அருள்நினைந்தே அழுங்குழவி யதுவேபோன் றிருந்தேனே. (பெரு.தி. 5 - 1)

பொருள்: நறுமணங்கமழும் மலர்கள் நிறைந்த சோலைகளால் சூழப்பட்ட  திருவித்துவக்கோட்டில் எழுந்தருளியுள்ள தலைவனே! நீயே எனக்குத் தந்த இத்துன்பத்தை நீயே களைந்திடாவிட்டாலும் உனது திருவடிகளே அன்றி எனக்கு வேறு புகலில்லை; பெற்ற தாயானவள் பெருங்கோபம் கொண்டதனால் தனது குழந்தையை வெறுத்துத் தள்ளினாலும் பின்பும் அத்தாயினுடைய கருணையையே வேண்டிக்கதறி அழுகின்ற இளங்குழந்தையை ஒத்து நின்றேன் என்று  பெருமாளிடம்  சரணமடைந்த குலசேகரப்பெருமாள் மங்களாசானம் செய்த திருவித்துவக்கோட்டில்

மூலவர் : உய்ய வந்த பெருமாள், அபயப்ரதன்,  நின்ற கோலம், கிழக்கே திருமுக மண்டலம்.
தாயார் : வித்துவக்கோட்டுவல்லி, பத்மாசனி நாச்சியார். 
விமானம்: தத்வ காஞ்சன விமானம்.
தீர்த்தம் : சக்ர தீர்த்தம்.
பிரத்யக்ஷம் :அம்பரீசன்
மங்களாசாசனம் : குலசேகரப்பெருமாள்.
பெருமாள் அபயப்பிரதராகவும் சிவபெருமான் ஆபத்சகாயராகவும்  எழுந்தருளி அருள் பாலிக்கின்றனர்.

தலவரலாறு: பல புராணங்களில் இத்தல வரலாறு இவ்வாறு பேசப்படுகின்றது. அம்பரீசன் என்ற அரசன் சிறந்த விஷ்ணு பக்தர். தவறாமல் ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பவர். தன் பிரஜைகளையும் அவ்விரதம் அனுஷ்டிக்குமாறு செய்தவர்.  ஒரு சமயம் இவர் ஏகாதசி விரதம் இருந்த போது  இவர் விரதத்தை முடிக்கும் பாரணை சமயத்தில்  கோப முனி துர்வாசர் வந்து தான் தனது காலைக்கடனை முடித்து விட்டு வரும்வரை காத்திருக்குமாறு கூறிவிட்டு சென்றார். அம்பரீசன் தனது விரதத்தை முடிக்க வேண்டி துளசி தீர்த்தம் மட்டும் அருந்தி விரதத்தை பூர்த்தி செய்தார். திரும்பி வந்த துர்வாசர் மன்னன் மேல் கோபம் கொண்டு சபிக்க முயல, மன்னன் மஹாவிஷ்ணுவை தியானம் செய்ய பரம கருணா மூர்த்தி பெருமாள் தனது பக்தனைக் காக்க சக்கரத்தாழ்வாரை ஏவினார். சுதர்சனமும் துர்வாசரை துரத்தத் தொடங்கியது. துர்வாசர் எங்கு சென்றாலும் சுதர்சனமும் பின் தொடர்ந்தது, வேறு வழியில்லாமல் முனிவர் ஸ்ரீமந்நாராயணனையே சரணடைய அவரும் அம்பரீசனை சரண் அடையுமாறு அறிவுறுத்தினார். முனிவரும் அம்பரீசனை சரண் அடைய  அவன் வேண்டிக்கொண்டபடி சுதர்சனாழ்வார் திரும்பச்சென்றார். ஒரு தூய பாகவதனின் ஏற்றத்தையும், ஏகாதசி விரதத்தின் பெருமையையும் விளக்கும் ஐதீகம் இது.


சிவன்-அபயப்பிரதன் சன்னதி நுழைவாயில் 

அம்பரீஷனை பரிசோதிக்க பெருமாள் இந்திரன் போல வெள்ளை யானையாம் ஐராவதத்தில் வந்து என்ன வரம் வேண்டும் என்று வினவ, அம்பரீசன் நான் ஸ்ரீமந்நாராயணனை குறித்து தவம் செய்கின்றேன். அவர் அநுகிரகத்தால் அவர் தரும் வரத்தைப் பெற்றுக் கொள்வேன். வேறு யார் கொடுத்தாலும் பெற்றுக் கொள்ள மாட்டேன். என் மனம் பகவான் திருவடிகளைத் தவிர வேறு எதையும் நினையாது. என் கைகள் அவனையே தொழும், வாக்கு அவன் சரிதத்தையே சொல்லும், காது அவன் கதைகளை மட்டுமே கேட்கும், நாக்கு அவன் அணிந்த துழாயை மட்டுமே அருந்தும். கைகள் அவன் ஆலயத்தையே சீர்படுத்தும், இந்த உடலால் அவனடியார்களையே வழிபடுவேன். இந்த அவயவங்கள் மஹாவிஷ்ணுவிற்கு இவ்வாறு அர்ப்பணம் செய்த நான் பிறரைக் குறித்து தவம் செய்ய மாட்டேன். தாங்கள் சென்று வரலாம் என்று அம்பரீசன் உறுதியாக கூற பெருமாளும் இவருக்கு சங்கு சக்கர தாரியாய் திவ்யமாக சேவை சாதித்தார். அம்பரீசனது வேண்டுகோளுக்கிணங்கி  வாசுதேவன், சங்கர்ஷணன், ப்ரத்யும்னன்அநிருத்தன் என்னும்  நான்கு வியூக  கோலங்களில் இங்கு கோவில் கொண்டார். அம்பரீசன் காட்டியதும் ”அனன்ய கதித்வம்” எனப்படும் ”உன் சரணல்லால் வேறு சரணில்லை” என்னும் தன்மையாகும்.

அம்பரீசனும் புத்திரப்பேறு வேண்டி தவம் செய்ததால் பெருமாளின் அருளினால் முதலில் குமாரத்தி பிறந்தாள், ஸ்ரீமதி என்னும் அவளை பெருமாளுக்கே மனையாளாக அளித்தார். பின்னர் மூன்று மகன்கள் பிறந்தனர் அவர்கள் வளர்ந்தபின் அவர்களிடம் இராச்சியத்தை ஒப்படைத்துவிட்டு மஹாவிஷ்ணுவின் திருவடி அடைந்தார்.

பின்னர் துவாபர யுகத்தில் பஞ்சபாண்டவர்களின் வனவாசத்தின் போது  எம்பெருமான் அவர்கள் கனவில் தோன்றி நீளா நதிக்கரையோரம், அழகும் தெய்வீகமும் நிறைந்த இவ்விடத்தில் தவம் செய்யுமாறு பணித்தார். அவர்களும் தாங்கள் வழிபாடு செய்ய விஷ்ணுவின் சிலைகளை நிறுவினர். முதலில் அர்ஜூனன் மஹாவிஷ்ணுவின் மூர்த்தியை பிரதிஷ்டை செய்தான். அதற்கு வடக்கே தர்மர் ஒரு மூர்த்தியையும் தென் புறத்தில் பீமன் ஒரு மூர்த்தியையும், அதற்கு பின்புறம்    (தெற்கே)   நகுலன் ஒரு மூர்த்தியை நிறுவி வழிபட,  எல்லா மூர்த்திகளும் ஒன்றே என்று  சகாதேவன் அதே  மூர்த்தியை வழிபாடு செய்தான். வனவாசம் முடியும் வரை அவர்கள் இங்கிருந்து இப்பெருமாள்களை ஆராதித்ததாக ஐதீகம்.

பின்னர் பல நாள் கழித்து காசி விஸ்வநாதரும் இத்தலம் வந்து சேர்ந்தார். எனவே தற்போது இத்தலம் நான்கு விஷ்ணு மூர்த்திகள், ஒரு சிவ மூர்த்தியுடன் அஞ்சு மூர்த்தித்தலம்” என்றும் அழைக்கப்படுகின்றது. நான்கு பெருமாள் மூர்த்தங்களும் நின்ற திருக்கோலத்தில், கிழக்கு நோக்கிய திருமுகத்தோடு எழிலாக சேவை சாதிக்கின்றனர். சங்கு, சக்கரம், கதாயுதம் மற்றும் தாமரையோடு பெருமாள்களின்  அழகே அழகு! 

இனி காசி விஸ்வநாதர் இத்தலத்திற்கு வந்து சேர்ந்த வரலாறு. ஒரு சமயம் தென்னாட்டைச் சார்ந்த ஒரு முனிவர் இங்கிருந்து காசி சென்றார். அவர் அங்கேயே தங்கி விட்டார். அவரது தாயாரின் அந்திம காலத்தின் போது அவர் திரும்பி வந்தார். வரும் வழியில் அவர் சிவபெருமானையே நினைத்துக் கொண்டு இனியும் கைங்கரியத்தைத் தொடர முடியாமல் போனதே என்ற ஏக்கத்துடன் வந்தார்.   அவருக்கு தெரியாமல் அவரது தாழங்குடையில் காசி விஸ்வநாதரும் மறைந்து வந்தார். வழியில் நிலா நதியில் நீராடச் சென்ற போது குடையை பலி பீடத்தில் சாய்த்து வைத்து விட்டு சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது அந்த பலி பீடம் நான்காக வெடித்து அவ்வெடிப்பிலிருந்து சுயம்புவாக ஒரு சிவலிங்கம் தோன்றியிருப்பதைக் கண்டார். பின்னர் அவ்விடத்தில் சிவனுக்கு ஒரு சன்னதி அமைத்தார். சிவபெருமான் இங்கு  நமக்கு வரும் ஆபத்துக்களை எல்லாம் போக்கும் ஆபத்சகாயராக எழுந்தருளியுள்ளார். எனவே இப்போதும் சிவன் சன்னதிக்குள் நுழைந்து பின்னரே பெருமாளை நாம் சேவிக்க முடியும்.

பொதுவாக கேரளத்தில் லிங்க மூர்த்திக்கு சந்தனக் காப்பின் போது மூன்று கண்கள்,  மூக்கு மற்றும்  ஐந்து இதழ் மலர், வில்வம் வைத்து அருமையாக அலங்காரம் செய்கின்றனர் அதை இக்கோவிலிலும் காணலாம். அது போலவே இவர்கள் சிவன் சன்னதியை முழுவதுமாக வலம் வருவதில்லை, கோமுகி்யை தாண்டுவதில்லை, அங்கிருந்தே இடமாக திரும்பி வந்து விடுகின்றனர்.

வெங்கண்திண் களிறடர்த்தாய் விற்றுவக்கோட்டம்மானே
எங்குபோ யுய்கேனுன் இணையடியே யலல்லால்
எங்கும் போய்க்கரை காணா தெறிகடல் வாய்மீண்டேயும்
வங்கத்தின் கூம்பேறும் மாப்பறவை போன்றேனே (பெரு.தி. 5-5)

பொருள்: நடுக்கடலில் அகப்பட்டுக்கொண்ட பறவைக்கு அப்போது அங்கு வரும் கப்பலின் கூம்பை விட்டால் அதற்கு வேறு கதியில்லையோ, அது போல எம்பெருமானே உனது திருவடியை புகலிடமாகக் கொண்ட நான் எங்கு போய் உய்வேன். உனது திருவடியே எனக்கு புகலிடம். கப்பலின் கூம்பை நாடிச்செல்லும் நடுக்கடல் பறவை போல இந்த சம்சார சாகரத்தில் சிக்கி ஜீவாத்மாவாகிய நான் நின் திருவடியே சரணம் என்று புகாமல் எங்கு செல்வேன், வித்துவக்கோட்டம்மானே! நீயே எனக்கு புகலிடமென்று சரண் புகுகிறார் அரச பதவியை துறந்த குலசேகராழ்வார். வாருங்கள் தாயாகவும், கணவனாகவும், பிறவிப்பிணி தீர்க்கும்  மருத்துவனாகவும் விளங்குகின்ற வித்துவக்கோட்டம்மானை சேவிக்கலாம்.

கேரளத்தின்  கிராமத்தின் இயற்கை அழகை இரசித்துக்கொண்டே சுமார் 4 கி.மீ தூரம்  நெடுஞ்சாலையிலிருந்து பயணம் செய்த பின் திருக்கோவில் வளாகம் கண்ணில் பட்டது. கவிழ்த்த தொப்பியை போல கூம்பு வடிவ விமானங்களும், கேரளத்திற்கே உரிய பிரமிட் வடிவ  விமானங்களுடன் கூடிய பல சன்னதிகளுடன் திருக்கோவில் வளாகம் அமைந்துள்ளது. கோவிலை நெருங்கியவுடன் பாண்டிய மன்னன் கட்டிய நீண்ட மதில் சுவற்றைக் காணலாம். திருநாவாய் போலவே இவ்வாலயத்தின் முன்புறமும் பெரிய அரச மரம் உள்ளது.  வாயிலின் அருகினில் வண்டியை நிறுத்தி பெருமாளை சேவிக்க விரைந்தோம். சிறு கிராமக்கோவில் என்பதால் சீக்கீரமே நடையை அடைத்து விடுகின்றனர், எனவே சீக்கிரம் செல்வது நல்லது.

வாயிலின் எதிரே விநாயகர் சன்னதி,    தக்ஷிணாமூர்த்தியும்  லிங்க ரூபத்தில் உடன் எழுந்தருளியுள்ளார். சதுர வடிவ ஸ்ரீகோவில் முன் மண்டபமும் உள்ளது. முழு முதல் கடவுளையும், ஆதி குருவையும் முதலில் சேவித்தோம். பொதுவாகவே கேரளாவில் சைவ வைணவ பாகுபாடுகள் இல்லைஅனைத்து திவ்ய தேசங்களிலும் கணபதி, சிவன், ஐயப்பன், பகவதி(துர்க்கை), நாகர் சன்னதிகள் உள்ளன. அடுத்து நாங்கள் சேவித்தது நகுல சகாதேவர்கள் ஸ்தாபித்த மூர்த்தி, அதற்கடுத்து தர்மர் பிரதிஷ்டை செய்த மூர்த்தியை சேவித்தோம்.

அதற்கடுத்து சிவன் கோவிலும் அர்ச்சுனன் பிரதிஷ்டை செய்த மூல மூர்த்தியையும் சேவித்தோம், கிழக்கு நோக்கிய சன்னதி முன் வாயிலை அடைத்து வைத்துள்ளனர். இடது பக்க வழியாகத்தான் உள்ளே செல்ல வேண்டும். நுழைந்தவுடன் பகவதி சன்னதி. போத்தி பகவதியை பூஜித்த புனித சங்கு தீர்த்தத்தை தெளிக்கும் சமயம் உள்ளே நுழையும் பாக்கியம் கிட்டியது.  முதலில் காசி விஸ்வநாதரை லிங்க ரூபத்தில்  சேவித்தோம். கர்ப்பகிரகத்தின் சுவற்றில் அற்புதமான கேரளபாணி  மூலிகை வர்ண  ஓவியங்கள் வரைந்துள்ளனர், சிவன் சன்னதியில் தசாவதார காட்சிகள் சைவ வைணவ ஒற்றுமையை குறிக்கின்றனகூரையைத் தாங்கும் மர உத்தரங்களில்  அழகிய மர சிற்பங்கள்  செதுக்கி உள்ளனர். பின்னர்   சிவன் சன்னதிக்கு பின்னே அமைந்துள்ள அர்ச்சுனன் பிரதிஷ்டை செய்த  உய்யவந்த பெருமாளைச் சேவித்தோம் இவரது ஸ்ரீகோவில் சுவற்றிலும் அற்புதமான ஓவியங்கள் வரைந்துள்ளனர் குறிப்பாக அர்ஜுனன் தவம்  செய்யும் காட்சி, கிருஷ்ணனின் பால லீலைகளான  புள்ளின் வாய் கீண்டல், மாவாய் பிளத்தல், வல்லானை கொன்றல், காளிய நர்த்தனம், பேய்ச்சி முலை உண்ணல், குசேலரின் அவல் உண்ணல்குருஷேத்திரப் போரில் சதுர் புஜராக  சங்கு சக்கரகளுடன் அர்ச்சுனனுக்கு  கீதோபதேசம், உண்ணி கிருஷ்ணன் பசுவிடம் பால் அருந்துதல், தசாவதார கோலங்கள்  ஆகிய  ஓவியங்கள் மிகவும் அருமை.

வித்துவக்கோட்டம்மா என்று குலசேகராழ்வார் மங்களாசாசனம் செய்த மூலவர் சதுர்புஜங்களுடன் நின்ற கோலத்தில் சேவை சாதித்து அருளுகின்றார். பெருமாளின் முக அழகை தரிசிப்பதே ஒரு ஆனந்தம். ஒரே பிரகாரம், விமானம் கேரளா பாணி பிரமிட்  வடிவத்தில் உள்ளது. இக்கோவிலுக்கு இடப்புறத்தில் பாரதப்புழையின் கரையில் பீமன் பிரதிஷ்டை செய்த பெருமாள் சன்னதி. நான்கு விஷ்ணு  மூர்த்திகளும் நின்ற கோலத்திலேயே சேவை சாதிக்கின்றனர்.


தட்சிணா மூர்த்தி சன்னதி,
நகுல சகாதேவர்கள் வழிபட்ட பெருமாள் சன்னதி (தொப்பிக்கூரை)

அகண்ட  பாரதப்புழை ஆறு அமைதியாக ஓடிக்கொண்டிருக்கின்றது. வட்ட வடிவ ஸ்ரீகோவில் தொப்பி வடிவ விமானம்சதுர வடிவ ஸ்ரீகோவில் பிரமிட் வடிவ விமானம், பீமன் ஸ்தாபித்த பெருமாள் சன்னதி சிறிது  என ஒவ்வொரு சன்னதியின் கர்ப்பகிரகமும்  விமானமும் ஒவ்வொரு விதமாக  உள்ளது. விஸ்வநாதர் மற்றும் அர்ச்சுனன் ஸ்தாபித்த மூல மூர்த்தி இருவருக்கும் பொதுவான சுற்றம்பலம் தவிர மற்ற சன்னதிகளுக்கு சுற்றம்பலம் இல்லை. பாரதப்புழை ஆற்றில் இருந்து குளிர்ந்த காற்று வீசுகின்றது. எந்த வித அரவமும் இல்லாமல் ஆழ்வார் மலர்ப்பொழில் என்று பாடியபடி பல  மரங்கள்  செடிகள் நிறைந்த ஆலய வளாகம் மிகவும் அமைதியாக உள்ளது. அமர்ந்து தியானம் செய்ய அருமையான தலம்.

'காலை 5 மணிக்குக் கோயில் திறந்து 10:30 மணிக்கு சார்த்தப்படுகின்றது. மறுபடியும், பிற்பகல் 5 மணிக்குத் திறந்து இரவு 7:15 மணிக்கு நடை அடைக்கின்றனர். தினம் காலை 3 முறையும் மாலையில் 2 முறையும் பெருமாளுக்கு பூஜை செய்யப்படுகிறது. தினமும் காலையில் சிற்றுண்டியாக உப்புமா சாம்பாரும், மாதம் இரண்டு நாட்கள் அன்னதானமும் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.  
இத்தலத்துப் பெருமாளுக்கு தீபம் ஏற்றி, துளசி அர்ச்சனை செய்து வழிபடுவது மிகவும் விசேஷம்! கட்டணம் செலுத்தினால், ரிக் வேத ஸ்லோகங்களைச் சொல்லி பெருமாளை நமக்காகத் துதிப்பார் ஆலயத்தின் போத்தி. இதில் பங்கேற்றுப் பிரார்த்தனை செய்தால், திருமணத்தடை நீங்கும்; குழந்தை பாக்கியம் கிட்டும்; வேலை கிடைக்கும் என்று பக்தர்கள் நம்புகிறார்கள். சித்திரை மாதம் வருடாந்திரத் திருவிழா, மகா சிவராத்திரி காலத்தில் நான்கு நாள் உத்ஸவம் மற்றும் வைகாசி மிருகசீரிடம், பெருமாள் பிரதிஷ்டை தினங்கள் இங்கே விசேஷமானவை. அம்பரீஷனுக்குக் காட்சி தந்து, அவனைக் கொல்ல வந்த அரக்கனை வதம் செய்தவர் இந்தத் தலத்து பெருமாள் என்பதால்... இவரைத் தேடிவந்து வழிபட, துயரங்கள் தீரும்; நாடி வந்தோரை அபயம் தந்து காப்பாற்றுவார் இந்த அபயப்பிரத பெருமாள் என்பது இங்கு வரும் பக்தர்களின் நம்பிக்கை!'
ஒரு தாயார் தன் குழந்தையை தன் வயிற்றில் சுமக்கும் போது அது அவளுக்கு எண்ணற்ற துன்பத்தைக் கொடுத்தாலும், பிள்ளை பிறந்த பின் தான் அடையப்போகும் இன்பத்தை எண்ணி அவற்றையெல்லாம் பொறுத்துக் கொள்கிறாள். அது போலவே பக்தர்களாகிய மக்கு இறைவன் எவ்வளவு துன்பம் தந்தாலும் அவன் திருவடிப் பேறு தரும் இன்பத்திற்காக  நாம் அதை பொறுத்துக் கொண்டு அவனை சரணடைந்தால் மீளா இன்ப வீடாம் வைகுந்தம் அளிப்பது திண்ணம்.

வாய்த்த கருமம் இனி மற்று இல்லை; நெஞ்சமே!
தோய்த்த தயிர். வெண்ணெய், தொட்டு உண்ட – கூத்தன்
வித்துவக்கோடு சேர்ந்தால், பிறவிக்
கருவின் துவக்கு ஓடும் காண். (நூ தி. 69)

பொருள்: எனது மனமே! தோய்த்த தயிரையும், வெண்ணையையும் களவு செய்து புசித்த திருவிளையாடலை உடைய திருமாலினது திருவிற்றுவக்கோடு என்னும் திருப்பதியை சென்று சேர்ந்த அளவில்,  பிறப்பிற்கு காரணமான கருவின் சம்பந்தம் நீங்கும், எனவே நாம் செய்ய தொழில் வேறு ஒன்றும் இல்லை என்று  திவ்வியகவி பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்,  தமது நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதியில் இந்த திருவித்துவக்கோடு திவ்விய தேசத்தைப் பற்றி பாடியுள்ளார்.

"ஸ்ரீமிற்றக்கோடு க்ஷேத்ரே சக்ர தீர்த்த புஷ்கரிணி தடே. தத்வ காஞ்சன விமானச்சாயாயாம் ஸ்திதாய பூர்வாமிமுகாய, ஸ்ரீமதே பத்மாசனி நாயிகா சமேத ஸ்ரீஅபயப்ரத பரப்ரஹ்மணே நம:" என்ற தியான ஸ்லோகத்தை ஜபித்துக்கொண்டே அடுத்து,  இந்த இரு கோவில்களுக்கும் அருகில் உள்ள கேரளத்தின் மகிமை  பெற்ற கிருஷ்ண ஸ்தலமான குருவாயூருக்கு புறப்பட்டு சென்றோம். 

மலை நாட்டு திவ்யதேச வழிகாட்டி 
(படத்தை பெரிது செய்து பார்க்கவும்) 

 மற்ற தலங்களை இங்கே சேவியுங்கள்  : 

  குருவாயூர்           கொடுங்கல்லூர்           திருஅஞ்சைக்களம்         குலசேகரபுரம்  

 சோட்டாணிக்கரை        வர்க்கலா            நெய்யாற்றங்கரை             திருப்பிரயார்        

 இரிஞ்ஞாலக்குடா        பாயம்மல்

மலை நாட்டு திவ்ய தேச யாத்திரை தொடரும் . . . . . .

No comments: