Wednesday, August 31, 2016

மலை நாட்டு திவ்ய தேச யாத்திரை - 7

திருக்கடித்தானம் -  அற்புத நாராயணன் 




சோட்டாணிக்கரையிலிருந்து  தெற்காக  செல்லும் Main City Road (MC Road) வழியாக இன்றைய தினம் பயணம் செய்து கோட்டயம் மார்க்கமாகச் செங்கண்ணூரை அடைந்தோம். ந்த மலை நாட்டு திவ்விய தேச யாத்திரையின் இரண்டாம் நாள் அடியோங்கள் சேவித்த திவ்ய தேசங்கள் அனைத்தும்  கோட்டயம் மாவட்டத்தில் செங்கண்ணூருக்கு அருகில் அமைந்துள்ள ஆலயங்கள் ஆகும். பஞ்ச பாண்டவர்கள் ஆராதித்த ஆலயங்கள் இவற்றில் அடங்கும். இவை ஞ்சாலயங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.  அடியோங்கள் முதலில் சேவித்த திவ்யதேசம் திருக்கடித்தானம் ஆகும். வாருங்கள் அன்பர்களே திருக்கடித்தானத்துறை அற்புதனையும் கற்பகத்தையும் சேவிக்கலாம்.

பூமி தீர்த்தம் 

ந்அறுபது ஆண்டுகளுக்கு ஒரு முறை அற்புத சக்தி பெறும் அற்புதப் பெருமாள் ஆலயம் திருவல்லா கோட்டயம் சாலையில் செங்கணச்சேரியிலிருந்து 3கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. பஞ்ச பாண்டவர்களில்  சகாதேவன் ஆராதித்த ஆலயம் இத்தலம்.

அற்புதன் நாராயணன் அரிவாமனன்
நிற்பது மேவி இருப்பதென்னெஞ்சகம்
நற்புகழ் வேதியர் நான்மறை நின்றதிர்
கற்பகச்சோலைத் திருக்கடித்தானமே. (தி.வா 8-6-10)

பொருள்: அற்புதனும், நாராயணனும், அரியும் வாமனனுமான எம்பெருமான் பொருந்தி வீற்றிருப்பது அடியேனுடைய நெஞ்சமாகும். நின்று கொண்டிருப்பது, நல்ல புகழ் நிறைந்த  பிராமணர்களுடைய நான்கு வேதங்களும் நிலைபெற்று  முழங்கிக்கொண்டிருக்கிற, கற்பகச் சோலை சூழ்ந்த திருக்கடித்தானம் என்னும் தலமாகும்,  என்று ம்மாழ்வார் தமது பாசுரத்தில் இப்பெருமானை அற்புதன்,  நாரணன், அரி,  வாமனன் என்று மங்களாசாசனம் செய்துள்ளார்.

முன் வாயில் 


நாராயணன் என்பதால் வாத்சல்யம் உடையவன்,   மது  குற்றங்களையும் குணமாகக் கொள்வதால் அற்புதன், அரி அதாவது  பகைவர்களை வெல்வதால் அற்புதன், (பகைவர்களாவன காம, குரோதம், லோப, மத மாச்சர்யங்கள் முதலியன ஆகும்). எல்லாருக்கும் எல்லாவற்றையும் வழங்குபவன் வாமனனாக வந்து மஹாபலியிடம் மூன்றடி நிலம் தா என்று வேண்டியதால் அற்புதன் என்று  ஆழ்வார் பாடியுள்ளார் என்று இப்பாசுரத்திற்கு  விளக்கம் அளிப்பார்கள் பெரியோர்.


முன் வாயில் ஓவியம் 

கடி என்ற சொல் கடிகை என்ற சொல்லில் இருந்து வந்ததாகும், மூன்று திவ்யதேசங்கள் இச்சொல்லை கொண்டுள்ளன. அவையாவன பெருமாள் யோகநரசிம்மராக சேவை சாதிக்கும் திருக்கடிகை என்னும் சோளிங்கர், வடநாட்டு திவ்யதேசமான கண்டம் என்னும் கடிநகர்,  மற்றும் இந்த மலைநாட்டு திவ்ய தேசமான திருக்கடித்தானம் ஆகும்கடிகை என்ற சொல்லுக்கு ஒரு நாழிகை என்று பொருள், கடிகை தடங்குன்றில் சப்த ரிஷிகள் ஒரு கடிகைக் காலம் தவம் செய்து அக்காரக்கனி எம்பெருமான் அருள் பெற்றனர். இங்கு கடித்தானத்தில் சஹாதேவன் ஒரு கடிகை நேரம் ஆராதித்து பெருமாள்  அருள் பெற்றார் என்பார்கள். எனவே ஒரு கணப்போதாவது தூய்மையான மனதுடன் பெருமாளை நினைத்து இத்தலங்களில் பிரார்த்தனை செய்ய எடுத்த காரியத்தில் வெற்றியும் மோட்சமும் நிச்சயம்.

பூதங்கள் ஓரிரவில் கட்டிய மதில் 

கடி என்றால் மணம் என்ற பொருளும் உண்டு, கற்பக சோலை சூழ்ந்த  என்று நம்மாழ்வார் பாடியது போல றுமணம் நிறைந்த சோலைகள் சூழ்ந்த ஸ்தானம் அதாவது இடம் என்பதால் கடித்தானம் ஆனது என்பாரும் உண்டு. தற்போது திருக்கொடித்தானம் என்றழைக்கப்படுகின்றது இன்றும் பச்சைப் பசேலென செடி கொடிகள் நிறைந்த அருமையான சூழலில் ஆலயம் அமைந்துள்ளது.

ஒரு காலத்தில் கடிகைகள் என்னும் கல்விச்சாலைகள் இருந்ததனாலும், கடி ஸ்தானம் என்பது கடித்தானம் ஆகிவிட்டது என்றொரு ஐதீகமும் உண்டு.






இத்தலப்பெருமாள் அறுபது ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய சக்தி பெறுவதாகவும், கலியுக முடிவில் ஓளியாக மாறி விண்ணில் கலந்து விடுவார் என்பது ஐதீகம். பூதங்கள்  ஒரே இரவில் கட்டிய நெடிதுயர்ந்த மதில், நரசிம்மருக்கு  தனிச் சன்னதி மற்றும்  இரண்டு கொடி மரங்கள், கோவிலுக்கும் பூமி தீர்த்தத்திற்கும் இடையில்  தண்டனை பெற்ற காவலாளி சிலை, என்று எண்ணற்ற அதிசயங்கள் உள்ள, செல்வர்கள் வாழ் திருக்கடித்தானம் என்று   ஆழ்வார் பல்லாண்டு பாடிய ஆலயத்தைச் சேவிக்கலாம் வாருங்கள் அன்பர்களே.

கோயில் கொண்டான் திருக்கடித்தானத்தை
கோயில் கொண்டான் அதனோடு என்னெஞ்சகம்
கோயில் கொள் தெய்வமெல்லாம் தொழ வைகுந்தம்
கோயில் கொண்ட குடக்கூத்த அம்மானே ( திரு.மொ 8-6-5 )

பொருள்: ஒவ்வொரு கோயிலிலும் தங்கி இருக்கின்ற தெய்வங்கள் எல்லாம் தொழும்படியாக ஸ்ரீவைகுண்டத்தைக் கோயிலாகக் கொண்ட குடக்கூத்து ஆடிய அம்மான், திருக்கடித்தானத்தைத் தனக்கு கோயிலாகக் கொண்டான்;  திருக்கடித்தானத்துடனே கூட வந்து அடியேனுடைய நெஞ்சினைக் கோயிலாகக் கொண்டான், என்று நம்மாழ்வார் மங்களாசாசனம் செய்த இந்த திவ்ய தேசத்தின்

மூலவர் :அற்புத நாராயணர்/ அம்ருத நாராயணர், சதுர்புஜம், நின்ற கோலம்  கிழக்கு நோக்கிய திருமுக மண்டலம், காதேவன் ஆராதித்தப் பெருமாள் ஆவார்.
சன்னதியின் பின் பக்கம் மேற்கு நோக்கியத் திருமுக மண்டலத்துடன் நரசிம்மர் சத்ரு சம்ஹார மூர்த்தியாஅருள் பாலிக்கின்றார்.
சன்னதியில் தெற்கு நோக்கிய  விநாயகரையும் லிங்க ரூபத்தில் தக்ஷிணாமூர்த்தியையும்  மரச்சாளரம் வழியாகச் சேவிக்கலாம்.
தாயார்: கற்பகவல்லி.
தீர்த்தம் : பூமி தீர்த்தம்
விமானம் : புண்யகோடி விமானம்
பிரத்யக்ஷம்: ருக்மாங்கதன்
மங்களாசாசனம்: நம்மாழ்வார்
மற்றும் சாஸ்தா, சுப்பிரமணியர் ஆகியோருக்கு சன்னதிகள் உள்ளன

ஒரே இரவில் பூதங்கள் கட்டிய மதில் பிரம்மாண்டமாக அமைந்துள்ளது. நரசிம்மர் உக்ர நரசிம்மராக சேவை சாதிப்பதால் அவருக்கு பால் பாயசம் நைவேத்யம் செய்யப்படுகின்றது, இவருக்கு  ஆராதனை நடைபெறும்  போது நாராயணீயத்தில் வரும் ஆறு பாடல்கள் (நரசிம்மர் தூணைப் பிளந்து கொண்டு வரும் கோலம்) சேவிக்கப்படுகின்றது.


தங்கக்கவசம் பூண்ட நெடிதுயர்ந்த கொடி மரம் 

பூமி தீர்த்தம் கோவிலுக்கு எதிராக உள்ளது. கேரள பாணி இரண்டடுக்கு முன் கோபுரம். அதன் சுவற்றில் அருமையான ஓவியங்கள். கோயிலினுள் நுழைந்தால் வலப்பக்க மண்டபத்தில் கிருஷ்ணர் நம்மை வரவேற்கிறார். கொடிமரம், பலிபீடத்தைக் கடந்து உள்ளே சென்று ஸ்ரீகோவிலை (கருவறையை) அடையலாம்.

ஸ்ரீகோவிலின்  இரண்டடுக்கு   தொப்பி் விமானம்    

வட்ட வடிவ ஸ்ரீகோவில்லின் கூரை துவி தளம் அதாவது இரண்டு அடுக்குகளாக அமைந்துள்ளது. இரண்டு அடுக்குகளுக்கும் இடையில் தசாவதார சிற்பங்கள்  மிகவும் அருமையாக அமைந்துள்ளன. தொப்பி போல கூரை, கூரைக்கு செப்புத்தகடு வேய்ந்துள்ளனர்.  மூலவர், விநாயகர், தக்ஷிணாமூர்த்தி மற்றும் நரசிம்மர் சன்னதிகள் ஒரே கருவறையில் அமைந்துள்ளது ஒரு சிறப்பு. கேரளபாணியில் சிவதாண்டவம், விநாயகர், சாஸ்தா, யோக நரசிம்மர், இராமர் பட்டாபிஷேகம், மோகினி, மஹிஷாசுரமர்த்தினி, ஸ்ரீவேணுகோபாலன், அனந்தசயனன், அர்ச்சுனன் தவம் ஆகிய 16 அருமையான  ஓவியங்கள் கர்ப்பகிரகச் சுற்றுச்சுவரை எழிலாக அலங்கரிக்கின்றன. சோபனத்தின் சுவற்றில் குடைக் கூத்து சிற்பங்கள் உள.

இத்தலத்தில் கார்த்திகை பெருவிழா மிகவும் விசேஷமாகக் கொண்டாடப்படுகின்றது.10 நாள் திருவிழாவின் 9ம் நாள் 1008 தீபங்கள் ஏற்றப்படுகின்றன. இந்த  தீபங்கள் மறு நாள் காலை வரை  எரிந்து கொண்டிருக்கும், இதை சேவிக்க பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூடுகின்றனர்.  சகாதேவனின் தாயார் மாத்ரி பாண்டு இராஜாவுடன் இங்கு தங்கி இருந்த போது பாண்டு வைகுண்டம் ஏக,   மாத்ரி உடன் கட்டை ஏறுவதை குறிக்கும் வகையில் சொக்கப்பனை இரவில்  ஏற்றப்படுகின்றது. இந்த நிகழ்ச்சி திருக்கார்த்திகை தினத்தன்று  நடந்ததாக ஐதீகம். இவ்விழாசங்கேதம் என்றழைக்கப்படுகின்றது.

அறுபது ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய சக்தி பெறும் பெருமாள் கலியுகத்தின் முடிவில் ஓளியாக மாறி விண்ணில் கலந்துவிடுவார் என்பதை உணர்த்தும் வகையில் தீபம் ஏற்றப்படுகின்றது என்பாரும் உண்டு. மேலும் நரசிம்மஜெயந்தி, ஜென்மாஷ்டமி சிறப்பாகக்  கொண்டாடப்படுகின்றது.

ருக்மாங்கதன் என்ற சூரிய வம்சத்து மன்னன் இப்பகுதியை   ஆட்சி செய்த போது ஒரு அற்புதமான நறுமணம் மிக்க  பூஞ்சோலை அமைத்து பராமரித்து வந்தான். ஒரு சமயம் நாரதமுனிவர் அவனது அரசவைக்கு விஜயம் செய்தார், அப்போது ருக்மாங்கதன் அவருக்கு ஒரு அரிய மலர்களால் ஆன ஒரு  மாலையை அணிவித்தான். அந்த மலர் மாலையை அணிந்து கொண்டே தேவ சபைக்கு சென்றார். அதன் வனப்பில் மயங்கிய தேவேந்திரன், இரவில் தேவர்களை அனுப்பி மலர்களை பறித்து வரச்செய்தான். காலையில் மலர்களை காணாமல் அரசன் திகைத்தான்.


எப்படியாவது மலர்களைப் பறித்துச் செல்பவர்களை பிடிக்க அரசன் காவலாளிகளை நியமித்தான். தேவர்கள் தங்களின் சக்தியால் காவலாளிகளின் கண்ணில் படாமல் மலர்களை பறித்துக் கொண்டு சென்று கொண்டிருந்தனர். அரசன் பெருமாளிடம் சென்று வேண்ட, அவரும் கத்திரி பூண்டுகளைக் கொண்டு  தீ மூட்டினால் அவர்களை பிடிக்கலாம் என்று உபாயம் கூறினார்.   தேவர்கள் அந்த புகையால் தங்கள் சக்தியை இழந்து பிடிபட்டனர். அவர்களை அரசன் முன்பு நிறுத்திய போது உண்மையை அறிந்த மன்னன் அவர்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டு அவர்களை விடுவித்தான். ஆயினும் மனிதர்களால் கைது செய்யப்பட்ட அவர்கள் தங்கள் சக்தியை இழந்தனர், அவர்களால் வானுலகம் செல்ல முடியாமல் போனது. தேவர்களிடம் மன்னன் தாங்கள் இனி எவ்வாறு தேவலோகம் செல்ல முடியும் என்று வினவ, அவர்களும் யாராவது தங்களுடைய ஏகாதசி விரத பலனை எங்களுக்கு அளித்தால் மட்டுமே தாங்கள் திரும்பி செல்ல முடியும் என்று உரைத்தனர். அரசனும் தனது  நாட்டில் தேடிய போது ஒரு மூதாட்டி தனது ஏகாதசி பலனைத் தர,  தேவர்களும் வானுலகம் சென்றனர். அப்போது பெருமாள் ருக்மாங்கதனுக்கு பிரத்யக்ஷமாகி சேவை சாதித்தார்.  பின்னர் அரசன் ஏகாதசி விரதத்தின் மேன்மையை உணர்ந்து, அவனும் முறையாக ஏகாதசி விரதத்தை கடைப்பிடித்து  தன் நாட்டில் உள்ள பிரஜைகள் அனைவரும் அந்த  விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும் என்று ஆணையிட்டான்.


இத்தலத்துப் பெருமாளை சகாதேவன் பின்னர் புனர் நிர்மாணம் செய்ததாகவும் கூறப்படுகின்றது. சகாதேவன் இப்பகுதியில் பிரதிஷ்டை செய்ய விக்ரகம் கிடைக்காமல் மனம் வருந்தி அக்னி பிரவேசம் செய்ய முற்பட்டபோது அவ்விடத்தில் பெருமாள் சிலை தோன்றி அவன் துயர் தீர்த்தார். எனவே பெருமாள் அற்புத  நாராயணன் என்றழைக்கப்படுகின்றனர் என்றொரு கதையும் வழங்கப்படுகின்றது. இப்பகுதியில் உள்ள மக்கள் சகாதேவன் கட்டிய கோவில் என்றே அழைக்கின்றனர்.

வாருங்கள் அற்புத நாராயணரை சேவிக்கலாம். ஆலயத்தை நெருங்கும் போதே  பூதங்கள் கட்டிய நெடிதுயர்ந்த (12 அடி) மதில் கண்ணில் படுகின்றது. பாசி படர்ந்து பசுமையாக காட்சி தருகின்றது.  திருக்கோவிலுக்கு எதிரிலேயே பூமி தீர்த்தம் என்னும்  திருக்குளம் உள்ளது. அதிகாலை இளங்கதிரில் பொன் மயமாக விளங்குகிறது குளத்து நீரும் முன் வாயிலும். இரண்டுக்கும் இடையில் குளத்திற்கு அருகில் ஒரு நடு கல்லின் மேல் ஒரு  வானத்தை நோக்கியவாறு  படுத்துள்ள மனித கற்சிலையை கண்டோம், அவன் ஒரு கரத்தில் சங்கு உள்ளது. பின்னர் விசாரித்த போது இந்த சுவையான  கதையை கூறினார்கள்.

தண்டனை பெற்ற காவலாளி

பொதுவாக காவலாளிகள் சங்கு ஊதும் போது கோவிலை போத்திகள் திறக்க வேண்டும் என்பது நியதி.  ஒரு சமயம் கோவில் டை அடைத்த பிறகு ஒரு அரசன் இந்தக் கோவிலுக்கு வந்தாராம். இந்த காவலாளி சங்கை ஊத   போத்தியும்  ஆச்சரியத்துடன் வெளியே வந்த போது அந்த காவலாளி   கீழே விழுந்து மாண்டானாம். இனி மேல் இவ்வாறு டை பெறக்கூடாது  என்பதற்காக அவன் சிலையை இங்கு அமைத்தாராம். இதனாலோ என்னவோ,  யாராக இருந்தாலும் டை அடைத்த பிறகு கேரள ஆலயங்களில், எந்தக் காரணத்தைக் கொண்டும் பூஜை நேரம் மட்டுமல்லாமல்   இடையில் திறக்கப்படுவதில்லை.

உள்ளே நுழையும் போதே நுழைவாயிலின் இரு பக்கமும் அழகிய மூலிகை வர்ண ஓவியங்களைக் காண்கிறோம். எதிரே நெடிதுயர்ந்த தங்கக் கொடிமரம் பளப்பளவென மின்னுகின்றது. கீழ்ப்பகுதியில் சிறிய அளவில் திருவாசியுடன் அஷ்ட லக்ஷ்மிகள் எழிலாக சேவைச் சாதிக்கின்றனர்.  சுமார் 60 அடி உயர கொடி மரத்தை இவ்வளவு மழை பெய்கின்ற ஊரில் எவ்வாறு பள பளவென்று சுத்தமாக வைத்திருக்கின்றார்கள் என்று வியக்காமல் இருக்க முடியவில்லை. 

வெளி சுற்றில் வலம் வரும்  போது  சாஸ்தா, சுப்பிரமணியரை  சேவித்தோம்,  பின் புறம் தனி வாயில் கொடிமரம், பலிபீடம், மண்டபம் எல்லாம் உள்ளது நரசிம்மரை திவ்வியமாகச் சேவித்தோம், பின் பகுதியில் மலர் சோலையின் நடுவே ஒரு சிறு செயற்கை குளத்தின் டுவே குழலூதும் கிருஷ்ணனுக்கு ஒரு சன்னதி அமைத்துள்ளனர்,  பின்னர்  வலத்தை தொடர்ந்தோம். முன் மண்டபம் வழியாக உள்ளே சென்று நமஸ்கார மண்டபத்தில் கருடனை சேவித்து விட்டு, வட்ட வடிவ கருவறையில் சதுர்புஜத்துடன் அற்புத நாராயணரை திவ்யமாக சேவித்தோம். அஞ்சனக்கல் என்னும் கல்லால் ஆனவர்  எம்பெருமான். உள் சுற்றில்  தெற்கு பக்கத்தில் மர ஜன்னல் வழியாக விநாயகர் மற்றும் தக்ஷிணாமூர்த்தியை சேவித்தோம் பின் பக்கம் நரசிம்மரையும் சேவித்தோம். இத்தலத்தில் பொதுவாக பலிக் கல்லாக பிரதிஷ்டை செய்யப்படும் நிர்மால்ய மூர்த்தியான விஸ்வக்சேனர் விக்கிரகமாக வடக்கில் எழுந்தருளியுள்ளார்.   கர்ப்பகிரக சுவற்றில் அருமையான ஓவியங்களைக் கண்டு இரசித்தோம்.


வெளியே வரும் போது  "அறுபது ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய சக்தி கூடும்  பெருமாள்"  என்று ஒருவர்  தமிழில் எழுதிய கட்டுரையை  மாட்டியிருந்தார்கள் அதை படித்து இரசித்தோம்.

ஒருவரிருவர் ஓர் மூவரென நின்று
உருவுகரந்து உள்ளுந்தோறும் தித்திப்பான்
திருவமர்மார்வன் திருக்கடித்தானத்தை
மருவியுறைகின்ற மாயப்பிரானே.  (திரு.வா 8-6-3)

பொருள்:  ஒருவர் இருவர் ஓர் மூவரென  உருப்புகுந்த  மூன்று ரூபங்களில் சேவை சாதிக்கும் பெரிய பிராட்டியை தனது மார்பில் கொண்ட  திருக்கடித்தானத்துப் அற்புதன் தான் அந்தர்யாமியாக தன் உள்ளத்திலும் எழுந்தருளியுள்ளார் என்று பாடுகின்றார்.

இவ்வாலயத்தில் வலம் வரும் போது பன்னீர் தெளித்துக்கொண்டே வலம் வரும் வழக்கம் உள்ளது. இத்தலத்தில் பெருமாள் ஆழ்வாருக்கு காட்டிய தன்மை ”செய் நன்றி அறிதல்” ஆகும்.  பெருமாள் தன் நெஞ்சில் வந்து குடி கொள்ள வேண்டும் என்று “ஒரு நாள் காண வாராயோ” என்று ஆழ்வார் வேண்டுகிறார். அதற்காக பெருமாள் முதலில் திருகடித்தானத்தில் வந்து முதலில் நின்றாராம். பின்னர் ஆழ்வார் இங்கு வந்தபோது அவர் நெஞ்சு நிறையப் புகுந்தாராம். ஆழ்வார் நெஞ்சில் புகுவதற்கு முன்  இங்கு நின்றதால் அந்த நன்றியை மறக்காமல் இன்றும் இங்கு கோவில் கொண்டுள்ளதாக  பெரியோர்கள் கூறுவர்.

காணவிரும்புமென்கண் கையும் தொழவிரும்பும்
பூணவிரும்புமென்தன் புன்தலைதான் – வாணன்
திருக்குஅடித்தான், நத்தான், திகிரியான், தண்டான்
திருக்கடித் தானத்தைச் சென்று. ( நூ.தி 70 )

பொருள்: வாணாசுரனது மாறுபாட்டை ஒழித்தவனும், சங்கம், சக்கரம், கதை ஏந்தியவனுமாகிய திருக்கடித்தானம் என்னும் திருப்பதியில் எழுந்தருளியுள்ள திருமாலைப் போய் அடைந்து எனது கண்கள் தரிசிப்பதற்கு ஆசை கொள்ளும்; கைகளும் கூப்பி வணங்குவதற்கு விரும்பும்; எனது இழிவான தலையும் அவரது திருவடி மலர்களை சூடிக்கொள்வதற்கு விரும்பும் என்று திவ்வியக்கவி பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் தமது நூற்றெட்டு திருப்பதி அந்தாதியில் இத்தலத்தைப் பற்றி பாடியுள்ளார்.


“ஸ்ரீகடிஸ்தான க்ஷேத்ரே ஸ்ரீபூதீர்த்த புஷ்கரணி தடே புண்யகோடி விமானச்சாயாயாம் ஸ்திதாய பூர்வாபிமுகாய ஸ்ரீமதே கல்பகவல்லி சமேத ஸ்ரீஅம்ருத நாராயண (அற்புத நாராயண)  பரப்ரஹ்மணே நம:” என்னும் தியான ஸ்லோகத்தை ஜபித்துக்கொண்ட  திருக்கடித்தானத்தில் அற்புதனையும் கற்பகத்தையும் திவ்யமாக சேவித்தபின்  திருவாழ் மார்பனை தரிசிக்க திருவல்லா கிளம்பினோம்

 மற்ற தலங்களை இங்கே சேவியுங்கள்  : 

  குருவாயூர்           கொடுங்கல்லூர்           திருஅஞ்சைக்களம்         குலசேகரபுரம்  

 சோட்டாணிக்கரை        வர்க்கலா            நெய்யாற்றங்கரை             திருப்பிரயார்        

 இரிஞ்ஞாலக்குடா        பாயம்மல்

மலை நாட்டு திவ்ய தேச யாத்திரை தொடரும் . . . . . .