Thursday, October 31, 2013

முத்தான முத்துக் குமரன் கும்பாபிஷேகம் -3

முன் பதிவில் மூலவர் கந்த சுவாமி எவ்வாறு தானே தன் அன்பனுருக்கு கனவில் வந்து தன்னை காட்டி இங்கு வந்து கோவில் கொண்டார் என்பதையும், மஹா கும்பாபிஷேகத்தன்று மாலை வன வள்ளி திருக்கல்யாண காட்சிகளையும், உற்சவ மூர்த்திகளின் அலங்காரத்தையும் கண்டு களித்தீர்கள்.  

இப்பதிவில் உற்சவர் முத்து குமார சுவாமி ஏன் முத்துக்களுடன் விளங்குகின்றார் என்ற உண்மையையும், அனைத்து மூர்த்திகளின் தங்க வாகன சேவைகளையும் கண்டு களியுங்கள்.  

அன்பர்களின் தோளில் ஆடி ஆடி புறப்பாடு கண்டருளும் 
சிவசக்தி


முத்துக்குமார சுவாமி புறப்பாடு


புதிதாக வர்ணம் தீட்டப்பட்டுள்ளதால் எழிலாக ஒளிரும் சுதை சிற்பங்களை காணுங்கள் அன்பர்களே.


தங்க சிம்ம வாகனத்தில்   விநாயகர்  முன் செல்ல ....

தங்க யாணை வாகனத்தில் அம்மையப்பர் திருவீதி உலா 


எழிலாக மலர்கள்களால் அமைக்கப்பட்டுள்ள பிரபையை பாருங்கள், கால புருஷன் மற்றும் பறக்கும் பச்சை கிளிகள் அருமையோ அருமை. படங்களை  பெரிதாக்கிப் பாருங்கள்.





தங்க கேடயத்தில் மீனாக்ஷி அம்பாள் 
அம்மனுக்கு வேறு மலர் அலங்காரம் 




சிறந்த சிற்பத்திற்காக ஜனாதிபதி பரிசு பெற்ற சூரபத்மன் வாகனம். வாகனத்தின் சிரசிலிருந்து பாதம் வரை செய்துள்ள வேலைப்பாட்டை கவனியுங்கள் அன்பர்களே. 


சூரபத்மன் வாகனத்தில் வீரபாகு

முருகனுக்காக சூரபதமனிடம் தூது சென்ற  நவ வீரர்களின் முதல்வரான வீரபாகு தேவர் இன்றைய தினம் சூரபத்மன் வாகனத்தில் திருவீதி உலா கண்டருளுகிறார்.  



சூரபதமன் வாகனத்தின் பின்னழகு


மூலவராக எம்பெருமான் இக்கோவில் வந்து எழுந்தருளியதும் ஒரு அற்புத லீலை, அதே போல உற்சவராக முத்துக்குமார சுவாமியாக எழுந்தருளி அருள் பாலிப்பதும் ஒரு அற்புத லீலைதான். அந்த அழகன் முருகனை, சிங்கார வேலனை, உற்சவராக வார்த்தெடுத்து எழில் கொஞ்சும் அந்த திருமுகத்தை அமைக்க தலைமை சிற்பி உளி கொண்டு செதுக்க முற்பட்டார், ஆனால் அவருக்கு கிடைத்ததோ ஒரு மின்னல் அதிர்ச்சி, அலமலந்து விட்டார் அவர் அப்படி ஒரு அதிர்ச்சி அவருக்கு கிடைத்தது. எனவே அவர் சிலையை செப்பனிடுவதை விடுத்து அப்படியே கோவில் அதிகாரிகளிடம் ஒப்படைத்து விட்டார். அவர்களும் உற்சவர் உக்ரமாகவும், சக்தி உடையவராகவும் அமைந்து விட்டார் என்று எண்ணி அவரை வணங்க அஞ்சி ஒரு அறையில் வைத்து வெகு நாட்கள் பூட்டி வைத்து விட்டனர். பின்பு அந்த எம்பெருமானின் அருளால் ஒரு முருக பக்தர் வந்து பல் வேறு பூஜைகள் சாந்திகள் செய்து முத்துக் குமார சுவாமியின் உக்ரத்தை குறைத்த பின் மீண்டும் அவரை வழிபடத் தொடங்கினர். இன்றும் முத்து குமார சுவாமியின் உடம்பு முழுவதும் முத்துக்களாக இருப்பதையும், வலது கண் அப்படியே முழுமை பெறாமல் இருப்பதையும் இன்றும் நாம் காணலாம். தாயார் இருவரும் அவ்வாறே சிறு சிறு முத்துக்களுடன் விளங்குவதையும் காணலாம். எனவே மூலவரைப் போலவே இத்தலத்தில் உற்சவரும் சிறப்பு வாய்ந்தவர். திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள், கச்சி வரதராஜப்பெருமாள்கள் ஆகியோரின் திருமுக மண்டலங்களில் முத்துக்கள் உள்ளது போல அந்த மால் மருகன் முகத்திலும் முத்துக்கள், எனவே அந்த அழகன் முருகனை தங்கக் கவசம் பூட்டி பாதுகாக்கின்றனர் இத்தலத்தில், கந்த வேளுக்கு வருடத்தில் ஒன்பது நாட்கள் மட்டுமே முழு அபிஷேகம் மற்ற நாட்களில் ஐயனின் பாதங்களில் மட்டும் பன்னீர் அபிஷேகம் செய்யப்படுகின்றது. அபிஷேகம் நடக்கும் சில நாட்கள் சித்திரை வருடப்பிறப்பு, ஆனி திருமஞ்சனம், ஆவணி அவிட்டம், கார்த்திகை ஏகாந்த சேவை தை பிரம்மோற்சவத்தின் முதல் நாள், தேரிலிருந்து இறங்கிய பின் , பிரம்மோற்சவம் முடிந்து உற்சவ சாந்தி அபிஷேகம் முதலியனஇனி இவ்வளவு சிறப்புப் பெற்ற இக்கோவிலை வலம் வரலாமா?

வாகன சேவை தொடரும்............

Tuesday, October 29, 2013

முத்தான முத்துக் குமரன் கும்பாபிஷேகம் -2

முத்துக்குமார சுவாமி தேவஸ்தானம்


இப்பதிவில் கும்பாபிஷேகத்தன்று மாலை நடைபெற்ற வள்ளி நாயகி திருக்கல்யாணம் மற்றும் அனைத்து மூர்த்திகளின் தங்க வாகன சேவை காட்சிகளையும் இப்பதிவில் காண்கின்றீர்கள்.  அத்துடன் இவ்வாலயத்தின் சிறப்புகளையும் படியுங்கள் அன்பர்களே.

விநாயகப் பெருமான் 

 உற்சவர் முத்துக் குமார சுவாமி 

முத்துக் குமார சுவாமிக்கு சிறப்பாக பாதாம் பருப்பால் ஆன  மாலையையும்  அம் பாள் இருவருக்கும்  கூடுதலாக ஆப்பிள்ப் பழங்களுடன் கூடிய மாலையையும்  கவனியுங்கள் அன்பர்களே. ( படத்தை பெரிதாக்கி பார்க்கவும்)

வடிவேல் அரசே சரணம் சரணம்
கோலக் குறமான் கணவா சரணம்
ஞாலத்துயர் நீர் நலனே சரணம்
கந்தா சரணம் சரணம் சரணம்

ஸ்ரீ அகண்ட பரிபூரண சச்சிதானந்த திவ்ய தேஜோமய சொரூபியாய் விளங்கும் மணிமிடற்றண்ணலாம் சிவபெருமானது பால நேத்ர உத்பவராய்சரவணப் பொய்கையிலே திருஅவதாரம் செய்துகார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டுதிருவிளையாடல் புரிந்துஅம்மை உமாதேவியாரிடம் சக்தி வேல் பெற்று சூரர் குலத்தை கருவறுத்து தேவர் குழாத்தைக் காத்தருளித் தம்மை வழிபடும் அடியவர் துயர் நீங்க போகாங்க மூர்த்த மாஞ்சகஉருவந்தாங்கி ஆங்காங்கு திருக்கோவில் கொண்டருளியிருக்கும் படைவீடு முதலான தலங்களைப் போல தொண்டைமண்டலத்திலேதருமமிகு சென்னையிலேஇராசப்ப செட்டி தெருவிலேஅருட்பெருஞ்ஜோதி, அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதிதனிப் பெருங்கருணை என்றும் வாடிய பயிரைக் கண்ட போது வாடினேன் என்று பாடியவள்ளலார்சுவாமிகளால் " திரு ஓங்கு புண்ணிய செயல் ஓங்கி " என்று பாடல் பெற்ற தலம் தான் சென்னை ஸ்ரீ கந்தசுவாமி கோவிலென வழங்கப்படும் ஸ்ரீ முத்துக்குமார சுவாமிதேவஸ்தானம்ஸ்ரீ மத் பாம்பன் சுவாமிகள்வண்ண சரபம் தண்டபாணி சுவாமிகள்சிதம்பரம் சுவாமிகள் முதலாய ஞானியர்களால் பெரிதும் புகழ்ந்து பாடல் பெற்ற தலம். இத்தலத்தில் முருகப்பெருமான் கஜவல்லிவனவள்ளி சமேதராய் கந்தசுவாமி என்னும் திருப் பெயருடன் மூலவராகவும்உடம்பு முழுவதுடம் முத்துக்கள் பெற்றிருப்பதால் முத்துக் குமார சுவாமி என்ற திரு நாமத்துடன் உற்சவராகவும் எழுந்தருளி அருள்பாலிக்கின்றார்

வன வள்ளி திருக்கல்யாணம் 


கஜவள்ளி -  வன வள்ளி

இந்த ஆலயம் சுமார் 360 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய வரலாறு மிகவும் சுவையானது, அவரது திருவிளையாடல் மூலமாகவே இவ்வாலயம் இங்கு உண்டானது, அதற்கு அவர் தேர்ந்தெடுத்தவர்தான் பேரி செட்டியார் வகுப்பைச் சார்ந்த மாரி செட்டியார். மாரி செட்டியார் தனது நண்பர் கந்தப்பச்சாரி செட்டியாருடன் ஒவ்வொரு கிருத்திகை தோறும் சென்னையிலிருந்துதிருப்போரூர் சென்று ஒரு கை முகன் இளவலை, கந்தக் கடம்பனை, கார் மயில் வாகனனை, விளங்கு வள்ளி காந்தனை, மாயோன் மருகனை, பாம்பன் சுவாமிகள் வழிபடும் சுயம்பு கந்தவேளை வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். தன்னைக் காண வரும் அன்பனின் அருகிலேயே கோவில் கொள்ள விரும்பிய அழகன் ஒரு திருவிளையாடலை நடத்தினான். ஒரு கார்த்திகையன்று மாரி செட்டியாரும் அவரது நண்பர் கந்தசுவாமி தம்பிரானும் ஒரு மரத்தடியில் உறங்கிக் கொண்டிருந்த போது வெகு காலமாக ஒரு புற்றில்  தான் இருப்பதாகவும் தன்னை எடுத்துச் சென்று ஒரு கோவில் கட்டுமாறும் அசரீரியாக கூறினார். உறக்கத்தில் இருந்து எழுந்த இருவரும் அருகில் இருந்த புற்றில் அடியில் கந்த வேளை தேவியர் இருவருடனும் கண்டெடுத்தனர். முருகன் மயிலுடன் நின்ற கோலத்தில் தன் தேவியருடன் இருந்ததைக் கண்டு அதிசயித்து விழுந்து வணங்கி அந்த விக்கிரகத்தை பயபக்தியுடன் சென்னை கொண்டு வந்து தற்போது கோவில் உள்ள இடத்தில் பிரதிஷ்டை செய்தார்.

ஆறுமுகப் பெருமான்

பால சுப்பிரமணியர் 

சுந்தரேஸ்வரர்


மீனாக்ஷி அம்பாள்

அன்பர் ஒருவர் தன்னுடைய பூந்தோட்டத்தை கோவில் கட்ட இலவசமாக கொடுத்தார், ஆதிகாலத்தில்  குளக்கரை சித்தி விநாயகர் ஆலயம் மட்டும் தான் இவ்விடத்தில் இருந்தது. தன் மனைவியின் நகைகளை விற்று இத்திருக்கோவிலை உண்டாக்கினார் மாரி செட்டியார். பிறகு ஆயிர வைசிய பேரி செட்டியார் சமூகத்தினரிடம் கோவிலை ஒப்படைத்தார். அவர்களும் இராஜ கோபுரத்தைக் கட்டி கோவிலுக்கு நித்ய கட்டளைகள் ஏற்படுத்தி கோவிலை மேலும் விரிவு படுத்தினர். தொடர்ந்து இவர்களின் வாரிசுகள் இன்றும் எண்ணற்ற திருப்பணிகள் செய்து வருகின்றனர். மேலும் தங்களுக்கு வாரிசு இல்லாதவர்கள் பலர் தங்கள் சொத்தை இக்கோவிலுக்கு எழுதி வைத்து அறப்பணிக்கு தங்களை அர்ப்பணித்துக் கொண்டார்கள். பள்ளிகள், கல்லூரிகள், நூல் நிலையம், கலாலயம், மருத்துவமனை, கருணை இல்லம் என்று பல் வேறு சமுதாயப்பணிகள் இத்திருக்கோவில் சார்பாக நடத்தப்பட்டு மக்களுக்கு சேவை செய்து வருகின்றனர் என்றால் அது அந்த முருகனின் அபார கருணையினால்தான். இவ்வாறு ஒரு திருவிளையாடல் புரிந்து தானே வந்து கோவில் கொண்டார் கந்தவேள். கந்தன் வந்து குடி கொண்டதால்  இவ்வாலயம் கந்த சுவாமி என்றும், குமரன் குடி கொண்ட கோவில் என்பதால் கந்த கோட்டம் என்றும் அழைக்கப்படுகின்றது.   


வீரபாகுத் தேவர்

சுமித்ர  சண்டிகேஸ்வரர் 

குலகுரு - மாரி செட்டியார்


உற்சவ  மூர்த்திகள் பூரண அலங்காரத்தில் விளங்கும் அழகை இப்பதிவில்  கண்டீர்கள் இனி அவர்களின் வாகன சேவைகளை அடுத்த பதிவில் காணலாம் அன்பர்களே. 

Monday, October 28, 2013

முத்தான முத்துக் குமரன் கும்பாபிஷேகம் -1

கந்த கோட்டம்

பஞ்ச வர்ணத்தில் மிளிரும் இராஜகோபுரம்
 (பின்புறத் தோற்றம்)

தருமமிகு சென்னை பாரிமுனை பூங்கா நகர் "கந்தசுவாமி கோவில்" என்றும்      "ஸ்ரீ கந்த கோட்டம்" என்றும் அன்பர்களால் அழைக்கப்படும் "முத்துக்குமாரசுவாமி தேவஸ்தான ஆலயத்தில்" அண்மையில் பன்னிரு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் புனராவர்த்தன  கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. அன்றைய தினம் மாலை   வன வள்ளி திருக்கல்யாணமும், அனைத்து மூர்த்திகளும் தங்க வாகனங்களில் புறப்படும் நடைபெற்றது. அந்த தெய்வீக அனுபவத்தை சென்று கண்ணுறும் சிறந்த பாக்கியம்  அவனருளால் அடியேனுக்கு கிட்டியது. அருமையான அனுபவம் அது. அதை அன்பர்களாகிய தங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இப்பதிவு. இப்பதிவில் கும்பாபிஷேகம் அதன் தாத்பரியம் மற்றும் என்ன என்ன கிரியைகள் ஒரு கும்பாபிஷேகத்தின் போது நடைபெறுகின்றது என்பதையும் காணலாமா அன்பர்களே?  

இறைவன் தனக்கென ஒரு நாமமும் (பெயர்) வடிவமும் இல்லாதவன். என்றாலும் உருவமில்லாத ஒரு பொருளை நம் உள்ளத்தில் நிலை நிறுத்தி வழிபாடு செய்வது அவ்வளவு எளிதாக  முடியாது.  எனவே  உருவ வழிபாடு மிகவும் முக்கியமாகிறது. இந்த இறை உருவங்கள் "விக்ரஹங்கள்" எனப்படுகின்றன. உலகத்தின் சக்திகள் யாவும் உறையும் இடம் என்று பொருள் தருவதே விக்ரஹம் என்ற சொல். ’வி’ என்றால் விஷேசமான, சிறப்பான, இறைத்தன்மையுள்ள என்று பொருள். க்ரஹிப்பது என்பது ஈர்த்துக்கொள்வது. பல்வேறு மந்திர, தந்திர யந்திர வழிபாட்டு முறைகளினால் ஆராதிக்கப்படும் போது, இறையருளை  முன் வைத்து, இறைத்தன்மையை ஈர்த்து தன்னுள் தேக்கி வைத்துக்கொண்டு, தன்னை வணங்குவோர்க்கு  அருள் புரியும் வல்லமையுடையவை விக்ரஹங்கள். கல்லாலும், மண்ணாலும், சுதையாலும்  இவ்வாறு செய்யப்பட்ட விக்ரஹங்களில் இறைவனின் வடிவம் செதுக்கிய  தெய்வ உருவங்களில் சக்தியை உண்டு பண்ணுவதற்காக செய்யப்படும் பல வித யாகங்களுள் ஒன்று தான்  மஹா கும்பாபிஷேகம்.



கொடி மரம் மூலவர் கோபுரம் மற்றும் இராஜ கோபுரம்

சக்தி வாய்ந்த மந்திரங்களை ஓதி யாகத்தில் அக்னி வளர்த்து  அதில் அரிய மூலிகைகளை சேர்த்து அதில் தோன்றும் சக்தியை கும்பத்தில் சேர்க்கின்றனர்.  பின்னர் தெய்வ சக்திகள் உருவேற்றப்பட்ட இந்த புண்ணிய கலச நீரினால், கருவறையில் யந்திரங்கள் பதித்து பிரதிஷ்டை செய்யப்பட்ட சுவாமி  விக்ரஹங்களுக்கு அபிஷேகம் செய்து  கும்பத்தில் உள்ள சக்தியை பிம்பத்திற்கு மாற்றுகின்றனர். அது போலவே  கோபுரத்தின் மேலும், விமானங்களின் மேலும் உள்ள கலசங்களுக்கும் உயிரூட்டப்பட்ட சக்தி வாய்ந்த கும்ப தீர்த்தத்தினால் அபிஷேகம் செய்யப்படுகின்றது.  இவ்வாறு ஆகமவிதிப்படி அங்கிங்கெனாதபடி எங்கும் நிறை பரமானந்தமாகிய பரம்பொருளை மந்திரம், பாவனை, கிரியைகள் மூலம் திருவுருவில் நிலைபெற்றிருந்து சர்வான்மாக்களுக்கும் அருள்புரியும் வண்ணம் செய்தலே மஹாகும்பாபிஷேகம் ஆகும்.


இராஜ கோபுரத்தின் பக்கவாட்டுத் தோற்றம் 

ஆகாயவடிவில் எங்கும் பரந்திருக்கும் இறைவன், வாயுவாகவும் அக்னியாகவும் மிளிர்கின்றான். நீராகவும் மண்ணாகவும் அவன் காட்சி கொடுக்கிறான். எனினும் அவனை மண் உருவில் நாம் உணர்தல் இலகுவாக இருப்பதால் மண்ணோடு தொடர்புற்று இருப்பதாகிய செம்பு, பொன் முதலிய உலோகங்களிலும், கல்லிலும் இறைவனை ஆவாஹனம்  செய்து தெய்வ மூர்த்தங்களாக வழிபடுகின்றோம்.. கும்பாபிஷேகத்தின் போத ஆகாய வெளியில் இருந்து காற்றின் துணையுடன் சூர்யாக்னி எடுக்கப்பெற்று, கும்பாபிஷேக யாகசாலையில் அக்னி ஆவாஹனம் செய்யப்பெற்று உரிய வேதாகமப் பிரகாரம்  அக்னி வளர்த்து  வழிபாடு நடக்கின்றது. அக்னியில் இருந்து  கும்பத்தில் உள்ள புனிதநீரிலும் இறைவனை உருவேற்றி செம்மைசால் ஆராதனைகள் நடைபெற்றுப் பின் அங்கிருந்து இறைமூர்த்தத்துடன் ‘ஸ்பர்ஸாஹூதி’ என்ற உன்னதமான கிரியையூடாகவும் கும்பாபிஷேகம் மூலமாகவும் விக்கிரகத்தில் இறையருட் பிரவாகம் ஏற்படுத்தப் பெறுகின்றது. இதன் பிறகு  வெறும் சிலையானது மந்திர பாவனை மற்றும் கிரியைகளினால் சிவமாக சங்கரனாக (இறைவனாக) மாற்றம் பெறுகிறது. 
அறம், பொருள், இன்பம், வீடு எனும் நால்வகைப் பேறுகளையும் அருளவல்லது கும்பாபிஷேகம். சிவாகமங்கள் கும்பாபிஷேகத்தை நான்கு வகையாக கூறுகின்றன. அவையாவன   ஆவர்த்தனம், அநாவர்த்தனம், புனராவார்த்தனம், அந்தரிதம்  ஆகும்.

அநாவர்த்தனம்: ஆலயம் இல்லாத இடத்தில் புதிதாக ஓர் ஆலயம் அமைத்து, புதிதாக மூர்த்தியைப் பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் செய்வது .

ஆவர்த்தனம்: முன்பிருந்த ஆலயம் முற்றாக அழிந்து விட்டால் அவ்விடத்தில் மீள ஆலயம் செய்து பிரதிஷ்டை செய்வது . 

அந்தரிதம்: ஆலயத்தினுள் கொலை, கொள்ளை முதலியன நடைபெற்றால் அங்கே மூர்த்திகரம் குன்றாமலிருக்க, பிராயச்சித்தமாகச் செய்யப்பெறுவது .

புனராவர்த்தனம்: பூஜை, உத்ஸவங்கள் நடைபெறக் கூடிய கோயிலில் திருத்த வேலைகளின் பொருட்டு பாலஸ்தாபனம் செய்து செய்யப் பெறும் கும்பாபிஷேகம்   இவை சம்ரோக்ஷண புனராவர்த்தனப் ப்ரதிஷ்டா மஹாகும்பாபிஷேகம் என்றும் அழைக்கப்படுகின்றன. பொதுவாக இத்தகு கும்பாபிஷேகங்கள் நடைபெறுவதையே பலரும் தரிசித்திருக்கக் கூடும். இந்த மாதிரி கும்பாபிஷேகங்கள் பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகின்றது. கந்த கோட்டத்தில் அடியேன் தரிசித்தது புனராவர்த்த கும்பாபிஷேகம் ஆகும். 


ற்சவர் விமானம்


இவ்வாலயத்தில் வனவள்ளி கஜ வள்ளி உடனுறை முத்துகுமார சுவாமிக்கு தனி சன்னதி உள்ளது.  அந்த  உற்சவர் சன்னதி விமானத்தை தரிசனம் செய்கின்றீர்கள் அன்பர்களே. உற்சவர் விமானம் மூலவர் விமானத்தை விட உயரமானது. 

பூரணமான மஹாகும்பாபிஷேகம் மொத்தம் 64 கிரியைகளை கொண்டது என்று ஆகமங்கள் விவரிக்கின்றன. இவ்வளவு விரிவாக  கும்பாபிஷேகம் பல ஆண்டுகளுக்கு(பொதுவாக பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை) நடைபெறுவதால் அதனைப் பார்ப்பது, கலந்து கொள்வது, பங்கேற்று சேவை செய்வது பெரும் புண்ணியமாகும். இனி கும்பாபிஷேகங்களின் போது நடைபெறும் கிரியைகள் அதாவது கர்ஷணாதி பிரதிஷ்டா கிரியைகள் என்ன என்று பார்க்கலாமா அன்பர்களே.?

விக்னேஸ்வர பூஜை: கும்பாபிஷேகம் தொடங்குவதற்கு முன்பு, முதலில் “அச்சது பொடி செய்த அதிதீரன்” மகாகணபதியைப் பிரார்த்திக்க வேண்டும்.  கும்பாபிஷேக நிகழ்ச்சி ஆரம்பிக்கப்படுவதிலிருந்து பூர்த்தியாகும் வரையில் எந்தவிதமான இடர்களும் வராமல் இருக்க, மஞ்சள் பொடியால் பிள்ளையார் பிடித்து பூஜை செய்வதே விக்னேஸ்வர பூஜை.

பாலாலயம்: தற்காலிகமாக அமைக்கப்பெறும் இரைவனின் ஆலயங்கள் பாலாலயம் அதாவது இளங்கோயில்  என்று அழைக்கப்படுகின்றன. புதிதாக  ஆலயம் அமைக்கும் போதும், பிற்காலத்தில் மூலாலயம் , பீடம், சிவலைங்கம், பிம்பங்கள் இவை ஜீர்ணம், பின்னம் அடையும் போது இவைகளை கும்பத்தில் ஆவாஹனம் செய்து பின்னர் பால பிம்பத்தில் சேர்த்து பாலாலயத்தில் வணங்குகின்றனர்.

அனுக்ஞை: விநாயகர், இறைவன், மூலமூர்த்தி முதலாக சண்டேஸ்வரர் ஈறாகவுள்ள அனைத்து தெய்வங்கள், குருமார்கள், பெரியோர்கள், முதியோர்கள் ஆகியோரது அனுமதியைக் கோரிப்பெறும் “உத்தரவு பெறுதல்” என்னும் நிகழ்ச்சியே அனுக்ஞை.

புண்யாக வாசனம்: வருணபகவானை வேண்டி கும்பாபிஷேகம் நடைபெறுகின்ற இடம் சுத்தமடைய வேண்டுவதே புண்யாக வாசனம். புண்யாகம் என்றால் புனிதம், வாசனம் என்றால் மங்களகரமான வாக்கியங்கள் என்றும் பொருள்.

பஞ்சகவ்ய பூஜை: அனைத்து தெய்வங்களும் உறைந்திருப்பதாகக் கருதப்படுகின்ற  கோ மாதவிடமிருந்து  கிடைக்கப் பெறும் ஐவகைப் பொருட்களாகிய சாணம், கோமியம், பால், தயிர், நெய் ஆகியவற்றை தனித்தனியாக பூஜித்து மந்திரார்த்தமாக ஒன்றாகக் கலந்து பஞ்சகவ்யமாக்கி அதை யக்ஞத்தில் கலந்து விடுவர்.
 

மஹா கணபதி ஹோமம்: பூதகணங்களால் இடையூறுகள், தாக்குதல்கள் ஏற்படாதவாறு கணங்களின் தலைவனாகிய மகாகணபதியை நினைத்து அவருக்குப் பிரியமான பொருளை அக்னியில் சமர்ப்பிக்கும் வேள்விதான் மகாகணபதி ஹோமம் ஆகும்.

நவகிரஹ ஹோமம்: கிரகங்கள் நன்மையே செய்யவேண்டி ஒன்பது கிரகங்களுக்கும் உரிய ரத்தினம், வஸ்திரம், தான்யம் ஆகியவற்றை அதற்குரிய திசைகளில் வைத்து மூல மந்திரங்களைச் சொல்லி ஹோமம் செய்தல்.
 

மஹா சங்கல்பம்: எல்லாவிதமான தெய்வ கார்யங்களும் ஒரு குறிக்கோளோடுதான் செய்யப்படுகின்றன. அப்படி, ‘இந்தக் கும்பாபிஷேகம் நடைபெறுவதால், பக்தர்களின் நலன்கள் காக்கப்பட வேண்டும். அதாவது கோவிலில் வழிபடும் பக்தர்கள், கோவிலை உருவாக்கியவர்கள் மற்றும் அக்கோவில் அமைந்துள்ள கிராமம்/ நகர மக்கள் மற்றும் உலக மக்கள் அனைவரின் மனதிலுள்ள விருப்பங்கள் நிறைவேறட்டும். அதற்கு இறைவனுடைய திருவருள் துணை புரியட்டும்’ என்று நல் வாக்கியம் சொல்வதே மஹாசங்கல்பம் எனப்படுகிறது.
 

தனபூஜை: கும்பாபிஷேக நிகழ்ச்சிக்காகச் செலவிடப்படுகின்ற பணத்தினை சுத்தமான இடத்தில் வைத்து, மகாலட்சுமியை நினைத்து பூஜை செய்வது வழக்கம். இந்த தன பூஜையைப் பார்ப்பதால், வீட்டில் தனம் சேரும் என்பது ஐதீகம்.

கோபூஜை: சகல தெய்வங்களும் உறையும் கோமாதா என்று போற்றப்படுகிற பசுவை அலங்கரித்து இந்த பூஜையைச் செய்வதால், தேவர்கள், ரிஷிகள், முனிவர்கள், சித்தர்களின் ஆசி கிடைக்கும்.
 

ஆலயக்கதவுகள் திறப்பு: இந்த பூர்வாங்க கிரியைகளுக்குப் பின்னர் புனரமைக்கப்பட்ட கோயிலின் கதவினை நல்ல முகூர்த்த வேளையில்தான் திறக்க வேண்டும். கணபதி பூஜை, நவகிரக பூஜை செய்த பிறகு, மங்கள வாத்யம், வேத கோஷங்கள் முழங்கிட, பக்தர்கள் இறைவன் திருநாமத்தைச் சொல்லிக் கொண்டிருக்க, கோயில் கதவுகள் திறக்கப்பட வேண்டும். முதலில் கோயிலுக்குள் கன்றுடன் பசுவும், மங்களப் பொருட்களும், தீபங்களை ஏந்திய பெண்களும், அர்ச்சகர்கள், வேதவிற்பன்னர்கள், பக்தர்கள் ஆகியோரும் பிரவேசித்து, பிராகாரத்தில் வலம் வந்து, கருவறையை அடைந்து நமஸ்கரிப்பர்.




உற்சவர் விமானம் 

வாஸ்து சாந்தி: வாஸ்து என்கிற சொல்லுக்கு, வசிக்கும் இடம் என்றும், பூமி, நிலம் என்றும் பொருள் ஆகிறது. அந்தகன் என்கிற அசுரன், சம்காரம் செய்யப்பட்ட காலத்தில், சிவபெருமானின் நெற்றியிலிருந்து விழுந்த வியர்வைத் துளி பூமியில் விழுந்து மீண்டும் ஓர் அசுரனாக மாறி பூமியை விழுங்க முற்பட்டபோது, சிவபெருமான், வீரபத்திரரை அனுப்பி அந்த அசுரனை கீழே தள்ளச்செய்து, அவன் மீது பிரம்மன் முதலான ஐம்பத்து மூன்று தேவதைகளை வசிக்கும்படி பணித்தார். அவனது கோரப்பசி தீர்வதற்காக, உலக வடிவமான பூசணிக்காயை உணவாகக் கொடுத்தார். அந்த அரக்கன்தான் வாஸ்து புருஷன். வாஸ்து புருஷனையும் அவரது அதிதேவதையான பிரம்ம தேவரையும், சக்திகளையும் பூஜித்து ஏனைய தெய்வங்களையும் வழிபட்டு திருப்திசெய்வதே வாஸ்து சாந்தி. மகிழ்வித்த வாஸ்து புருஷனை ஹோமாக்னியால் எரியூட்டி, ஆலயம் முழுவதும் இழுத்து சென்று  சுத்திகரித்து இறுதியாக புண்யாஹவாசன நீரினால் அவ்விடங்களை சுத்தி செய்கின்றனர்.

பிரவேச பலி: ஓரிடத்தில் கோயில் எழுப்பப்பட்டிருக்கும்போது, சுற்றியுள்ள எட்டுத் திசைகளிலும் உள்ள  பூத பிசாச பிரம்மராக்ஷஸர்கள், துர்தேவதைகளுக்கு பலி கொடுத்து அவற்றை ஏற்றுக்கொண்டு வேறு இடம் செல்லுமாறு அவர்களை வேண்டி, இடையூறுகளை நீக்கிக்கொண்டு பிறகு எண் திசைக் காவலர்களான இந்திரன், அக்கினி, யமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் முதலானவர்களை அவரவர்களுக்குரிய திசைகளில் வரவழைத்து வழிபட்டு, ஆலயத்தைக் காத்திடும்படி வேண்டுவதற்கு பிரவேச பலி என்று பெயராகும்.

ரக்ஷோகண ஹோமம்: புறத்தே இருக்கும் தேவதைகளை அகற்ற பிரவேச பலி போல ஆலயத்தின் உள்ளே இருக்கக்கூடிய துர்தேவதைகளை சாந்தி செய்து அகற்றிட ரக்ஷோகண ஹோமம் செய்யப்படுகின்றது ரட்சோ _ அரக்கர்கள். க்ணம்_ஒடுக்குதல்.

ஸ்ரீசூக்த ஹோமம்: மகாலக்ஷ்மியைக் குறித்து செய்யப்படுகின்ற இந்த யக்ஞத்தை, ரிக்வேதத்திலுள்ள ஸ்ரீ சூக்த மந்திரங்களைச் சொல்லி, திருமகளின் கருணை வேண்டி வழிபடல் வேண்டும். இதனால் கும்பாபிஷேகப் பணிகளில் ஈடுபட்டிருப்போரின் வீடுகளில் லக்ஷ்மி கடாட்சம் ஏற்படுமென்பது ஐதிகம்.
 

சாந்தி ஹோமம்: அமைக்கப்பட்டுள்ள யாக குண்டங்களில் பாசுபதாஸ்திர மந்திரங்களைக் கூறி, கலசத்திலும் ஆவாஹனம் செய்து, அஸ்திர மந்திரங்களால் ஹோமம் செய்து, கலச நீரை அஸ்திர தேவருக்கு அபிஷேகம் செய்து, ஆலயக்கட்டுமானப் பணிகளில் குறைகள் ஏதும் இருப்பின், அவற்றிற்குப் பரிகாரமாக செய்வது சாந்தி ஹோமம்.


மூர்த்தி ஹோமம்: அடுத்ததாக கும்பாபிஷேகத்திற்கு முன்னதாக எழுந்தருளும் தெய்வ பிம்பங்களுக்கு சக்தியூட்டும் விதமாக ஹோமம் செய்வது, மூர்த்தி ஹோமம் எனப்படுகிறது. 

சம்ஹிதா ஹோமம்: சிவபெருமானுக்குரிய பெருமைகளைக் கூறி நடத்தும் இந்த யக்ஞம், இது பரிகார யக்ஞம் ஆகிறது.
 

மிருத்சங்கிரணம்: யாக சாலையில் அங்குரார்ப்பணத்திற்காக,  பூமிதேவியை பூஜித்து, அனுமதி பெற்று மண் எடுத்து முளை பயிரிடுதல் என்கிற அங்குரார்ப்பணம் நடத்துவது முறை. மிருத் என்றால் மண்; சங்கிரணம் _ எடுத்தல்; ஆற்றங்கரை, மலையடிவாரம், நந்தவனம் போன்ற பரிசுத்தமான இடத்திலிருந்து புது மண் எடுத்து வரும் நிகழ்ச்சியே மிருத்சங்கிரணம் ஆகும்.

அங்குரார்ப்பணம்: அங்குரம் என்பது முளைக்கின்ற விதை; அர்ப்பணம் என்றால் போடுவது என்று பொருள் எனவே முளையிடுதல் (பாலிகை) ஆகும். சிவாச்சாரியார் 5 அல்லது 9  நாள் முன்னதாக, மங்கள முறைப்படி 40,24,16 பாலிகைகளில் நன்முளையிட்டு காலை-மாலை பஞ்சகவ்ய நீர் வார்த்து, அவற்றின் முளைகளை நன்கு கவனித்து பயன்களை அறிந்து அவற்றின் சூசகத்தை எஜமானருக்கு உணர்த்திடுகின்றார்.

ஆசார்ய ரக்ஷாபந்தனம்: கும்பாபிஷேகத்தில் பங்கு பெறுகின்ற சிவாச்சார்யர்கள், பட்டாச்சார்யர்கள் மற்றும் ஆலய நிறுவனர்கள் இந்த சுபவைபவம் நிறைவு பெறும் வரை வேறு செயல்களில் ஈடுபடாமல் இருக்கவும், இடையூறுகள் நேராத வண்ணம் தங்களைக் காத்துக் கொள்ளவும் காப்பினைக் கட்டிக் கொள்ளுதல் அவசியம். மூலமூர்த்திகளுக்கும் ஏனைய பரிவார மூர்த்திகளுக்கும் அவரவர்களுக்குரிய ஸ்தானத்தில் ரக்ஷாபந்தனம் செய்ய வேண்டும்.  இதை மந்திர வேலி என்றும் சொல்லலாம்.

பூதசுத்தி: இறைவனுக்கு பூஜை செய்யும் முன்பு மந்திரார்த்தமாக இந்தப் பூத உடலைச் சுத்தம் செய்தல் வேண்டும். இதைச் சுத்தமாக்குவதற்குரிய மந்திரங்களைக் கூறி வழிபடுதலையே பூதசுத்தி என்பர்.  
ஸ்தான சுத்திக்கு இடத் தூய்மை என்றும்; பூஜா திரவிய சுத்திக்கு பொருட் தூய்மை என்றும்; மந்திர சுத்தி என்பதற்கு எச்சில் வருகின்ற வாய் சொல்லும் மந்திரத்தை எண்ணத்தினால் தூய்மைப் படுத்துதல் என்றும்; கலசத் தூய்மை என்றும் பலவித சுத்திகள் உண்டு. 

ஸ்நபநம்: இறைவனை தற்காலிமாக உருவேற்றி பூஜிப்பதற்காக கும்பங்களை கலாகர்ஷண பொருளாக ஸ்தாபிப்பதே கடஸ்தாபனம் அல்லது ஸ்நபநம் ஆகும்.  இவ்வாறு ஸ்தாபிக்கப்பட்ட கும்பம் மூர்த்தியாகவே பாவிக்கப்படுகின்றது.



மூலவர் விமானம்,  சிவன் விமானம் முன்புறம்

 மூலவர் விமானம்,  சிவன் விமானம் பின்புறம்
மூலவர் சுயம்பு கந்தசுவாமி விமானத்தின் மேற்பகுதியில் பொன் தகடு வேய்ந்துள்ளதைக் கண்ணுறுங்கள் அன்பர்களே.

கும்ப அலங்காரம்:  மூலஸ்தான விக்ரஹத்தில் உறைந்துள்ள இறை சக்தியை வேள்விச் சாலையில் வைத்து யாகம் மற்றும் பூஜைகள் நிகழ்த்த வேண்டும். அதற்கு, கலசங்கள் மந்திரார்த்தமாக வர்ணனை செய்யப்பட்டப் பிறகு இறைவனுடைய உருவம் போல பாவனை செய்யப்படுகிறது.  கும்பத்தோடு சகஜமாக உள்ள மண் உடலுக்கு உரிய அம்சம். அதன் மேல் சுற்றப்படும் துணி சதை ஆகவும், வாசனை நீர் இரத்தம் மற்றும் மேதை எனப்படும் ஏழு தாதுக்கள், தர்ப்பையால் செய்யப்படும் கூர்ச்சம் எலும்பாகவும், நூல் சுற்றியிருத்தல் 72 ஆயிரம் நாடி நரம்புகள், கும்பத்துள் இடப்படும் நவரத்தினம், பொன் , வெள்ளி  முதலியன சுக்கிலம், மாவிலை சதை,  தேங்காய் கபாலம், வெளியே இடப்படும்  கூர்ச்சம் குடுமி.   நியாஸங்கள், பிராண பிரதிஷ்டை மற்றும் மந்திரக்கள் ஜீவன். கீழே பரப்பப்படும் தானியங்கள் மூர்த்திக்கு உரிய ஆசனம்.  வாசனை மலர்கள், சந்தனம், குங்குமத்தால் அழகூட்டப்படுவதற்கு கும்ப அலங்காரம் என்று பெயர். அடுத்ததாக கலாகர்ஷணம் என்ற நிகழ்ச்சி நடைபெறும். பதினாறு கலைகள் இறைவனுடைய திருமேனியில் இருப்பதால், வேள்விச் சாலையில் எழுந்தருளச் செய்யும்போது, மீண்டும் அந்தக் கலைகள் வடிவைக் கலசத்தில் வர்ணிப்பதற்குக் கலா ஆகர்ஷணம் செய்யப்படுகிறது.

யாகசாலை பிரவேசம் : மூலஸ்தானத்திலிருந்து இறைவனின் திருவடிவம் வேள்விச் சாலைக்குச் சென்று இடையூறுகள் இல்லாமல் நல்லவிதமாகத் திரும்ப, தெய்வங்களையும், நவகிரஹ தேவதைகளையும் எண்ணி யாத்திரை தானம் செய்து, யாகசாலைக்குள் கலசங்களைக் கொண்டு சென்று ஆகம விதியின்படி வைத்து தீப ஆராதனை செய்வர்.


யாக பூஜைகள்: ஆகம முறைப்படி அமைக்கப்பட்ட யாகசாலைப் பகுதிகளான மேடைகள், தூண்கள், கயிற்றுக் கட்டுகள், மேற்கட்டிகள், அலங்காரங்கள், ஒவ்வொன்றும் ஒவ்வொரு உபதேவதையின் வடிவினைக் குறிக்கிறது. அதோடு அஷ்டமங்களங்கள் எனப்படுகிற கொடி, கண்ணாடி, சக்தி, கதை, தண்டம், ஸ்வஸ்திகம், ஸ்ரீவத்ஸம், தீபம் ஆகியவற்றைப் பலகையில் வரைந்து வைப்பது வழக்கம்.

யாக சாலையில் அமைக்கப்பட்ட தெய்வ மூர்த்தங்களுக்கேற்ப, தோரண பூஜை, பஞ்ச ஆசனபூஜை, பஞ்சம ஆவர்ண பூஜை ஆகியன நடத்தப்பட்டு, ஹோம குண்டத்தில் அதற்கான மூல மந்திரம் கூறி, ஹோமப் பொருட்களை இட்டு யாகம் நடத்தி பூரண ஆகுதி செய்து வாழ்த்துரைகள் சொல்லுவர். இந்த யாக வேள்விகள், திட்டமிட்டபடி ஆறு காலம், நான்கு, இரண்டு காலங்கள் என்று நடத்தலாம். யாகம் நடத்துகின்ற உபகரணங்களுக்கு, ஸ்ருக் ஸ்ருவம் என்று பெயர். யாகம் நடத்தும் காலங்களில், வேதபாராயணம், தேவாரம் திருமுறை தெய்வத் திருக்கதைகள் நடத்தப்படுவது மரபு.

ஆசார்ய விசேஷ சந்தி: காலங்கள் இரண்டும் (இரவு பகல்) ஒன்று சேர்வதையே சந்தி என்கிறோம். இந்த வேளைகளில் காப்பிட்டுக் கொண்டவர்கள் அக்காலத்திற்குரிய தர்ப்பணங்கள், ஜபங்கள் செய்து தேவர்கள், பித்ருக்கள், ரிஷிகளின் அருளாசியைப் பெறுவர். இந்த நிகழ்ச்சிக்கு விசேஷ சந்தி என்று பெயர்.

தெய்வங்களுக்கு யந்திர ஸ்தாபனம்: கருவறையில் எழுந்தருளும் தெய்வங்களை விக்ரகங்களாக அமைக்கிறோம். அதன் உயிர் என்பது தாமிரத் தகட்டில் எழுதப்படுகிற மூலமந்திர வாசகங்களும், அதற்கு உரியதான வரைவுக் கோடுகளும்தான். இந்த யந்திர வடிவை விதிப்படி எழுதி, உரிய மரியாதைகள் செய்து, ஈர்ப்புத் தன்மையுடைய செப்புத் தகட்டில் பதித்து, அதனை சுவாமியின் ஆதார பீடத்தில் பதித்து, பஞ்சலோகக் காசுகளைப் போட்டு,
கல் (காவிப்பொடி) சுக்கான் பொடி, குங்கிலியம், செம்பஞ்சு, கொம்பரக்கு ஜாதிலிங்கம், வெள்ளை மெருகு எருமை வெண்ணெய் ஆகிய  எண்வகை மருந்துக் கலவையான "அஷ்டபந்தனம்" என்ற மருந்தைத் தயார்படுத்தி பீடத்தைச் சுற்றிலும் அதைக் காப்பாக இடுதல்.சில ஆலயங்களில் பொன்னால் ஸ்வர்ண பந்தனமும் செய்வர்.

யந்திரத்தை வைத்து மருந்து சாற்றிய பிறகு அஷ்டா தசக்ரியை எனப்படுகிற பதினெட்டு வகைக் கிரியைகளுக்கு தெய்வ உருக்கள் உட்படுத்தப்படுவதுண்டு. முக்கியமாக கண்திறப்பு என்கிற "நேத்ரோன்மீலனம்" நடத்தப்படும்போது, மங்களப் பொருட்களை ஏந்திய பெண்களை ஆலய வலம்வரச் செய்து, தெய்வ பிம்பங்களைச் செய்த சிற்பி பொன் ஊசி கொண்டு கண்களைத் திறக்கும் வைபவத்தை நடத்துவார். அடுத்ததாக நீர், மண், வாசனை மலர், மரப் பட்டைகள், வாசனைத் திரவியங்களைக் கலந்து பூஜை செய்து ஆலயம் முழுவதும் தெளித்து சுத்தப்படுத்துவர். இப்படிச் செய்வதற்கு பிம்பசுத்தி என்று பெயர். இந்த நேரத்தில் சிலைகளுக்கு கைப்பகுதியில் மஞ்சள் கயிற்றைச் சாற்றுவர்.

நாடி சந்தானம்: யாகங்கள் நடத்தப்பட்ட இடத்தில், முறைப்படி பூஜிக்கப்பட்ட தெய்வ சக்திகளைப் பட்டுக் கயிறு, வெள்ளிக் கம்பி,  தர்ப்பைகளின் வழியாக மூலஸ்தான சிலைக்குக் கொண்டு செல்லுதலை உயிர்தருதல்- நாடி சந்தானம் என்பர். அதுசமயம் ஒரு கலசத்தையும், நெய் நிரப்பிய ஹோமக்கரண்டியையும் யாகசாலையிலிருந்து மூலமூர்த்தி இருப்பிடம்வரை மூன்று முறை எடுத்துச் சென்று வருவார்கள் இது ஸ்பர்சாஹுதி எனப்படும்.

மஹா கும்பாபிஷேகம்: கலச பூஜை செய்து முடிந்ததும், பூரண ஆகுதி (யாக நிறைவு) செய்யப்பட்டு, கலசங்கள் புறப்படுவதற்கான யாத்திரை, தானம் என்ற ப்ரீதி பூஜை செய்தபின், யாக பூஜைகள் செய்த, சிவாச்சாரியார்கள் மங்கள வாத்யம், வேத கோஷங்கள் முழங்க ஆலயத்தில் வலம் வந்து விமானம் என்று அழைக்கப்படும் கருவறை கோபுரத்தில் ஏறி, முறையான தெய்வ பீஜ மந்திரங்களால் கோபுர கலசத்திற்கு அர்ச்சனை செய்து பூஜை நடத்தியபிறகு கலச நீரை கோபுரக் கலசத்தின் மீது மூல மந்திரங்கள் கூறியபடி அபிஷேகம் செய்வர்.
இந்த கலசங்களுக்குள் நெல், கேழ்வரகு போன்ற தானியங்கள்  இடியை தாங்கும் சக்தி உடையது என்பதால் நிரப்பிவைக்கப்பட்டு இருக்கும் ஆகும்.

பின்னர் கலசத்திற்கு தர்ப்பை, கொடி, வஸ்திரம், மாலை சாற்றித் திலகமிட்டு தேங்காய், பழம், தாம்பூலம், நிவேதனம் செய்து ஆரத்தி செய்வார்கள். புனிதக் கலசநீர் ஊற்றுவதைக் கண்களால் காண்பவர்களுக்கும் பன்னிரண்டு ஆண்டுகள் தலயாத்திரை, ஆலய தரிசனம் செய்த புண்ணியத்தைப் பெறுவதாக ஆகம சாஸ்திரம் தெரிவிக்கிறது. 

மஹா அபிஷேகம்
:  முதல் திருநீராட்டல்: மகாகும்பாபிஷேகம் நடத்தப்பட்டதும், கருவறையிலுள்ள தெய்வச் சிலைக்கு யாக சாலையில் வைக்கப்பட்ட உபகலசங்களாகிய வர்த்தனி கலசங்களிலுள்ள புனித நீரை ஊற்றுவர். அதன் பிறகு முதல் திருநீராட்டல் என்னும் மகா அபிஷேகம் நடத்தப்படுகிறது.
 

மாலை திருக்கல்யாணம் மற்றும் திருவீதி உலா சிறப்பாக நடைபெறும். அன்பர்கள் இப்பதிவில் காணும் படங்கள் கந்தகோட்டத்தின்  மாலை வள்ளி நாயகி திருக்கல்யாணம் மற்றும் அனைத்து மூர்த்திகளும் தங்க வாகனங்களில்  உலா வரும் நிகழ்ச்சி ஆகும்.

அதற்குப்பிறகு சுவாமிக்கு 48 நாட்கள் மண்டல பூஜை நடத்துவர்.  குலம் தழைக்க, வளம் பெருக, நலம் சிறக்க, ஆன்மாவை சுத்தப்படுத்துகின்ற ஆலய கும்பாபிஷேகம் எங்கு நடந்தாலும் சென்று தரிசித்து பிறவிப் பௌஅனை அடையுங்கள். 


கந்த கோட்டதில் மேலே சென்று இராஜ கோபுரத்தின் பின் பக்கத்தையும் மூலவர் மற்றும் உற்சவர் விமானங்களையு மாடிப்படி ஏறி சென்று எளிதாக  தரிசனம் செய்ய இயலும். அந்த காட்சிகளைத்தான் இப்பதிவில் காணுகின்றீர்கள். கும்பாபிஷேக மாலை திருவீதி உலா படங்கள் தொடரும்.