முத்துக்குமார சுவாமி தேவஸ்தானம்
இப்பதிவில் கும்பாபிஷேகத்தன்று மாலை நடைபெற்ற வள்ளி நாயகி திருக்கல்யாணம் மற்றும் அனைத்து மூர்த்திகளின் தங்க வாகன சேவை காட்சிகளையும் இப்பதிவில் காண்கின்றீர்கள். அத்துடன் இவ்வாலயத்தின் சிறப்புகளையும் படியுங்கள் அன்பர்களே.
விநாயகப் பெருமான்
உற்சவர் முத்துக் குமார சுவாமி
முத்துக் குமார சுவாமிக்கு சிறப்பாக பாதாம் பருப்பால் ஆன மாலையையும் அம் பாள் இருவருக்கும் கூடுதலாக ஆப்பிள்ப் பழங்களுடன் கூடிய மாலையையும் கவனியுங்கள் அன்பர்களே. ( படத்தை பெரிதாக்கி பார்க்கவும்)
வடிவேல் அரசே சரணம் சரணம்
கோலக் குறமான் கணவா சரணம்
ஞாலத்துயர் நீர் நலனே சரணம்
கந்தா சரணம் சரணம் சரணம்
ஸ்ரீ அகண்ட பரிபூரண சச்சிதானந்த திவ்ய தேஜோமய சொரூபியாய் விளங்கும் மணிமிடற்றண்ணலாம் சிவபெருமானது பால நேத்ர உத்பவராய், சரவணப் பொய்கையிலே திருஅவதாரம் செய்து, கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டு, திருவிளையாடல் புரிந்து, அம்மை உமாதேவியாரிடம் சக்தி வேல் பெற்று சூரர் குலத்தை கருவறுத்து தேவர் குழாத்தைக் காத்தருளித் தம்மை வழிபடும் அடியவர் துயர் நீங்க போகாங்க மூர்த்த மாஞ்சகஉருவந்தாங்கி ஆங்காங்கு திருக்கோவில் கொண்டருளியிருக்கும் படைவீடு முதலான தலங்களைப் போல தொண்டைமண்டலத்திலே, தருமமிகு சென்னையிலே, இராசப்ப செட்டி தெருவிலே, அருட்பெருஞ்ஜோதி, அருட்பெருஞ்ஜோதி, அருட்பெருஞ்ஜோதி, தனிப் பெருங்கருணை என்றும் வாடிய பயிரைக் கண்ட போது வாடினேன் என்று பாடியவள்ளலார்சுவாமிகளால் " திரு ஓங்கு புண்ணிய செயல் ஓங்கி " என்று பாடல் பெற்ற தலம் தான் சென்னை ஸ்ரீ கந்தசுவாமி கோவிலென வழங்கப்படும் ஸ்ரீ முத்துக்குமார சுவாமிதேவஸ்தானம். ஸ்ரீ மத் பாம்பன் சுவாமிகள், வண்ண சரபம் தண்டபாணி சுவாமிகள், சிதம்பரம் சுவாமிகள் முதலாய ஞானியர்களால் பெரிதும் புகழ்ந்து பாடல் பெற்ற தலம். இத்தலத்தில் முருகப்பெருமான் கஜவல்லி, வனவள்ளி சமேதராய் கந்தசுவாமி என்னும் திருப் பெயருடன் மூலவராகவும், உடம்பு முழுவதுடம் முத்துக்கள் பெற்றிருப்பதால் முத்துக் குமார சுவாமி என்ற திரு நாமத்துடன் உற்சவராகவும் எழுந்தருளி அருள்பாலிக்கின்றார்.
வன வள்ளி திருக்கல்யாணம்
கஜவள்ளி - வன வள்ளி
ஆறுமுகப் பெருமான்
பால சுப்பிரமணியர்
சுந்தரேஸ்வரர்
மீனாக்ஷி அம்பாள்
அன்பர் ஒருவர் தன்னுடைய பூந்தோட்டத்தை கோவில் கட்ட இலவசமாக கொடுத்தார், ஆதிகாலத்தில் குளக்கரை சித்தி விநாயகர் ஆலயம் மட்டும் தான் இவ்விடத்தில் இருந்தது. தன் மனைவியின் நகைகளை விற்று இத்திருக்கோவிலை உண்டாக்கினார் மாரி செட்டியார். பிறகு ஆயிர வைசிய பேரி செட்டியார் சமூகத்தினரிடம் கோவிலை ஒப்படைத்தார். அவர்களும் இராஜ கோபுரத்தைக் கட்டி கோவிலுக்கு நித்ய கட்டளைகள் ஏற்படுத்தி கோவிலை மேலும் விரிவு படுத்தினர். தொடர்ந்து இவர்களின் வாரிசுகள் இன்றும் எண்ணற்ற திருப்பணிகள் செய்து வருகின்றனர். மேலும் தங்களுக்கு வாரிசு இல்லாதவர்கள் பலர் தங்கள் சொத்தை இக்கோவிலுக்கு எழுதி வைத்து அறப்பணிக்கு தங்களை அர்ப்பணித்துக் கொண்டார்கள். பள்ளிகள், கல்லூரிகள், நூல் நிலையம், கலாலயம், மருத்துவமனை, கருணை இல்லம் என்று பல் வேறு சமுதாயப்பணிகள் இத்திருக்கோவில் சார்பாக நடத்தப்பட்டு மக்களுக்கு சேவை செய்து வருகின்றனர் என்றால் அது அந்த முருகனின் அபார கருணையினால்தான். இவ்வாறு ஒரு திருவிளையாடல் புரிந்து தானே வந்து கோவில் கொண்டார் கந்தவேள். கந்தன் வந்து குடி கொண்டதால் இவ்வாலயம் கந்த சுவாமி என்றும், குமரன் குடி கொண்ட கோவில் என்பதால் கந்த கோட்டம் என்றும் அழைக்கப்படுகின்றது.
வீரபாகுத் தேவர்
சுமித்ர சண்டிகேஸ்வரர்
குலகுரு - மாரி செட்டியார்
உற்சவ மூர்த்திகள் பூரண அலங்காரத்தில் விளங்கும் அழகை இப்பதிவில் கண்டீர்கள் இனி அவர்களின் வாகன சேவைகளை அடுத்த பதிவில் காணலாம் அன்பர்களே.
No comments:
Post a Comment