Tuesday, May 14, 2013

இமயமலையில் ஒரு இனிய யாத்திரை -38


லோக்பால் / ஹேம்குண்ட் சாஹிப் தரிசனம்


லோக்பால் லக்ஷ்மணர்

சீக்கிய குருக்களின் கடைக்குட்டி மனித குரு  ஸ்ரீ குரு கோவிந்த் சிங்(1666-1708) சீக்கியத்தின் பல கூறுகளை உறுதிப்படுத்தியதுடன் சீக்கிய மதநூலான  குரு கிரந்த சாஹிப்பை சீக்கிய மதத்தின் வாழும் குருவாக்கினார். 1698 ஆம் ஆண்டில் பச்சிட்டார் நாடக்எனும் தன் வரலாற்று நூலை எழுதிய இவர் 1699 ஆம் ஆண்டில் சாதி, மத, இன மற்றும் பால்வழிப் பாகுபாடுகளையும் பிரித்து ஆள்வதையும் முடிவுக்குக் கொண்டு வர பைசாகி தினத்தன்று  சீக்கிய மதத்தை வீரர்களின் திருக்கூட்டமாக மாற்றியமைத்து அதற்கு கால்சா என்று பெயரிட்டார்நீலக்குதிரையும், கையில் உள்ள கழுகும் இவரது தனி அடையாளங்கள்.



 நட்சத்திர வடிவத்தில் ஹேம்குண்ட் சாஹிப் குருத்வாரா

இவர் தனது முற்பிறவியில் தவம் செய்த புண்ணிய ஸ்தலம்தான் ஏழு சிகரங்கள் சூழ்ந்த இந்த ஹேம் குண்ட் சாஹிப். ஹேம் என்றால் பனிகுண்ட் என்றால் குளம். ஆம் மஞ்சு கொஞ்சும் மலைசிகரங்களில்  சீக்கியர்களின் நிஷான்- ஏ- சாஹிப் என்னும்  சின்னங்கள் ஸ்படிகம் போன்ற தண்ணிரில் பிரதிபலிக்க 4329மீ உயரத்தில் எழிலாக அமைந்துள்ளது  இத்தலம்ஹேம்குண்ட தலத்தின் மகிமையை குரு கோவிந்த சிங் அவர்கள் தமதுதசம்கிரந்த்என்ற நூலில் இவ்வாறு கூறுகின்றார்.
அப் மை அப்னி கதா பகானோ.
(
இப்போது நான் என்னுடைய கதையை விவரிக்கின்றேன்)

ஹேம்குண்ட் பர்பத் ஹே ஜஹான் சபத் ச்ருங் சோபித் ஹே
(ஹேம்குண்ட் பர்வதத்தை ஏழு சிகரங்கள் அலங்கரிக்கின்றன)

பாண்டராஜ் ஜக் ஜோக் கமாவா
(பாண்டு மன்னர் இங்கு தவம் செய்தார்)

  ஹம் அதிக் தபாசியா சாதி.
(
முற்பிறவியில் நான் அங்கு ஆழ்ந்த யோகத்தில் அமர்ந்திருந்தேன்)……..

 தின் ப்ரப் ஜப் ஆசிஸ் முஜே தியா தப் ஹம் ஜனம் கல்லூ மெஹ் லியா
(
பின் உங்களை ஈடேற்ற இந்த கலியுகத்தில் நான் மீண்டும் பிறப்பெடுத்தேன்)

சத்ய யுகத்தில்  நான் ஆழ்ந்த யோகத்தில் இருந்த போது இறைவனால் இங்கு கொண்டு வரப்பட்டேன். இந்த புண்ணிய தலத்தின் பெயர் ஹேம்குண்ட் சுற்றிலும் ஏழு மலைச் சிகரங்கள் அலங்கரிக்கின்றன. பாண்டு மன்னர் தவம் செய்த , பாண்டவர்கள் யோகம் பயின்ற இந்த புண்ணிய பூமி இது, சப்த் சிருங்கி என்றும் அழைக்கப்படுகின்றது. இவ்விடம் நான் யோகாப்பியாசம் செய்து இறைவனுடன் ஒன்றானேன். (அப்போது என் பெயர் நாமம் துஷ்ட்தமன் அதாவது துஷ்டர்களை அழிப்பவர்.) அரக்கர்களை அழித்த பின் நான் இங்கு தவம் செய்து இறைவனுடன் ஒன்றானேன். பின் இருண்ட காலமாம் கலியுகத்தில் இறைவன் வேண்ட, உங்களையெல்லாம் ஈதேற்ற மீண்டும் பத்தாவது குருவாக  அவதாரம் செய்தேன் என்று கூறுகின்றார் குரு கோவிந்த் சிங்.
 ஹேம் குண்ட் ஏரி
ஸ்படிகம் போன்ற தூய சீதள நீர்

குருவின் "தப் ஆசன் ( தவம் செய்த பூமி)"  என்ற இந்த புண்ணிய தலத்தை 1933 ஆண்டாம் நூற்றாண்டில் சந்த் சோஹன் சிங் என்ற சீக்கியர் தனது நண்பர்களுடன்  குருவின் திருவருளால் கண்டறிந்தார்.    குரு கூறியது போல எழு மலைசிகரங்களில் உள்ள சீக்கிய சின்னங்கள் இவ்விடத்தை அறிய இவர்களுக்கு உதவியது. 60களில் ஹர்கிரட் என்னும் படைத்தளபதி தற்போது உள்ள குருத்வாரத்தை கட்டினார். பனிக்காலத்தில் பனி  30  அடி வரை விழும் என்பதால் நட்சத்திரவடிவில் ஹேம் குண்ட குருத்வாரா அமைந்துள்ளது.   ஹேம் குண்ட சாஹிபின் மூன்று புறங்களில்  1. ருத்ர ஹிமாலயம், 2.பிஷன்புரி, 3.உத்கரி, 4. ஸ்வர்காரோஹண் 5.பிரம்மபுரி,6.மேரு, 7.சுமேரு ஆகிய ஏழு  மலைச் சிகரங்கள்  உள்ளன. நான்காவது பக்கம் நீலகண்ட பர்வதம் உள்ளது.  ஸ்படிகம் போன்ற தெளிந்த சீதள  நீரைக் கொண்டுள்ள ஹேம் குண்ட்டின் (பனிக்குளம்சுற்றளவு சுமார் 2 கி.மீ தூரம் ஆகும். இதிலிருந்து லக்ஷ்மண் கங்கா நதி உற்பத்தியாகி ஓடி வருகின்றது. இந்நதி புயாண்டர் சமவெளியில் பாய்வதால் புயாண்டார் கங்கா என்றும் அழைக்கப்படுகின்றதுஒவ்வொரு வருடமும் ஜூன் மாதம் ஒன்றாம் தேதி ஹேம்குண்ட யாத்திரை  துவங்குகின்றது பின்னர் அக்டோபர் 5ம்தேதியன்று நிறைவு பெறுகின்றது. பனி காலத்தில் குருத்வாரா முழுவதும்  பனியால் மூடப்பட்டிருக்கும். 
 இந்துக்கள் இவ்விடத்தை லோக்பால் என்று அழைக்கின்றனர், இராமாயண காலத்தில் ஆதிசேஷன் அவதாரம் இலக்ஷ்மணன் தவம் செய்த புண்ணிய பூமியாகும் இது . ஹேம்குண்டின் கரையில் லக்ஷ்மணருக்கு ஒரு ஆலயம் உள்ளது. இங்கு சீக்கியர்களின் குருத்வாரா வருவதற்கு முன்னரே இவ்விடம் இங்குள்ள மலை வாசிகளுக்கும் திபெத்தின் போட்டியா இன மக்களுக்கும் இவ்விடம் புனித தலமாக இருந்துள்ளது. ஆதி காலத்தில் ஆதி சேஷன்  இந்த குளத்தில் தங்கியிருக்க உலகை காத்து ரட்சிக்கும் (லோக் பால்) விஷ்ணு இதில் சயனித்திருந்தார் என்பது ஐதீகம்மேலும்  இராமாயணப்போரில் காயப்பட்ட லக்ஷ்மணர் இக்குளக்கரைக்கு கொண்டு வரப்பட்டார் பின்னர் ஹனுமன் சஞ்சிவீ மலையை கொண்டு வந்த பின் அவர் நினைவு பெற்று எழுந்தார் அப்போது தேவர்கள் தூவிய மலர்களால் இவ்விடம் மலர் சமவெளியானது என்ற சுவையான ஒரு ஐதீகமும் கூறப்படுகின்றது.  



மஞ்சு கொஞ்சும் மலைச் சிகரங்கள்  ஏழு உள்ளன 


இங்குள்ள  மலை வாசிகள் வேனிற் காலத்தில் மூன்று முறை இங்கு வந்து பூஜைகள் நடத்தி செல்கின்றனர்அப்போது பெண்கள் தாங்கள் அணிந்திருக்கும் காக்ரா என்னும் உடையையும் செருப்பையும் கீழே ஒரு இடத்தில் வைத்து விட்டு வெள்ளை வேஷ்டி அணிந்து லோக்பால் வருவார்களாம். இவ்வாறு அவர்கள் தங்களது காக்ராவை விட்டு சென்ற இடமே கங்காரியா ஆனது என்கிறார்கள்.


ஹேம் குண்ட் கரையில் சிரசாசனம் செய்யும் தேஷ்பாண்டே அவர்கள்

இவ்வாறு ஹேம் குண்ட் சாஹிப் பற்றி  சில தகவல்களை உங்களுக்கு கூறிக் கொண்டிருக்கும் போதே கங்காரியாவை நெருங்கிவிட்டோம்சிலர் இவ்விடத்தில் தங்கி விட்டு மறு நாள்  ஹேம்குண்ட் சாஹிப் செல்லுவார்கள்நடை பயணத்தை நாங்கள் ஆரம்பித்த போது மழை இருந்தாலும் பின்னர் சீதோஷ்ண நிலை மாறி வெயில் வந்து விட்டதால் அப்படியே ஹேம்குண்ட் சாஹிப்பை இன்றே தரிசனம் செய்து விடலாம் என்று முடிவு செய்தோம். மலைப் பிரதேசங்களில் சீதோஷ்ண நிலை எவ்வாறு மாறும் என்று கணிக்க முடியாது ஆகவே காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்பது போல வெயில் உள்ள் போதே கடினமான அதே சமயம் முக்கியமான ஹேம்குண்ட சாஹிப் தரிசனத்தை முடித்து விடுவது நல்லது என்று இந்த முடிவை எடுத்தோம்.
 கோவிந்த் தாம் என்றும் அறியப்படும் கங்காரியா ஒரு சிறிய கிராமம் தன் இங்கும்  ஒரு குருத்வாரா உள்ளது. இங்கிருந்து ஹேம்குண்ட் சாஹிப்பிற்கும் பூக்களின் சமவெளிக்குமாக இரு பாதைகள் செல்லுகின்றன. ஹேம்குண்டில் இருந்து ஓடி வரும் லக்ஷ்மண் கங்கா நதியும். பூக்களின் சமவெளியில் இருந்து ஒடி வரும் புஷ்பவதி என்னும் நதியும் இங்கு சங்கமம் ஆகின்றன. கோவிந்த் காட்டிலிருந்து ஹெலிகாப்டர் மூலமாகவும் கங்காரியா வர முடியும் Deccan Charters என்னும் ஹெலிகாப்டர் நிறுவனத்தினர்  ஹெலிகாப்டர்களை இயக்குகின்றனர். தெல்லி. டேராடுன் மற்றும் கௌச்சார் என்னும் இடங்களில் இருந்தும் ஹெலிகாப்டர் மூலமாக கங்காரியா வரை பயணம் செய்ய முடியும்மேலும்  இயற்கை ஆர்வலர்களுக்காக   கூடாரத்தில்  தங்கும் வசதியை சில  சுற்றுலா நிறுவனங்கள் ஏற்பாடு செய்து தருகின்றனர் இவர்கள் இங்கு தங்கி பூக்களின் சமவெளியை விரிவாக பார்த்துவிட்டு பூக்களைப் பற்றி ஆராய்ச்சி செய்கின்றனர்நாங்கள் சென்ற போது இவ்வாறு பல கூடாரங்களை கண்டோம். கங்காரியாவிலும் பல கடைகள் உள்ளன. கங்காரியாவிலிருந்து ஹேம்குண்ட் சாஹிப் சுமார் 6 கி.மீ  தூரத்தில் அமைந்துள்ளது.


ஹேம் குண்ட் சாஹிப் 15000 அடி உயரத்தில்  மலை உச்சியில் அமைந்துள்ளதால் இரவில் மிகவும் குளிராக இருக்கும்  எனவே   மாலை 3 மணிக்கு மேல் அங்கு யாரையும் தங்க அனுமதிப்பது இல்லை. குருத்வாராவில் பணி செய்யும் சில அன்பர்கள்  மட்டுமே அங்கு தங்குகின்றனர் எனவே அப்படியே குருத்வாராவில் சென்று அறை எடுக்காமல்  வேறு குதிரையை கங்காரியாவில் வாடகைக்கு அமர்த்திக்கொண்டு ஹேம்குண்ட் சாஹிப்பிற்கு  புறப்பட்டோம். இது வரை கடந்து  வந்த பாதையை விட இந்த பாதை இன்னும் செழிப்பாக இருந்தது செங்குத்தாகவும் இருந்ததுமழை எப்போதும் பெய்து கொண்டிருப்பதாலும் அடர்ந்த காடானதால் வெயில் அதிகமாக இல்லாததாலும் நெடிதுயர்ந்த மரங்களில் பாசி படர்ந்திருந்தன காளான்கள் முளைத்திருந்தன. தேனீக்கள் தேனை சேகரித்துக்கொண்டு ஆனந்தமாக ரீங்காரத்துடன் பறந்து கொண்டிருந்தனபல வர்ண  இமயமலையின் பறவைகள் கூவிக்கொண்டு பறந்து கொண்டிருந்தன.   மலைச் சரிவுகளில் மலையரசன் பொற்பாவையாம் அன்னை பார்வதிக்கு இயற்கையரசன் அருமையான  மலர் பாவாடை அணிவித்திருப்பது போல  பல வண்ண மலர் வனங்கள் அருமையாக காட்சி தந்தன. திருமயிலையில் அன்னை கற்பகாம்பாளுக்கு மலர்ப்பாவாடை சார்த்துவது சிறந்த  நேர்த்திக்கடன் ஆகும் அது போலவே  இங்கே இயற்கையரசன்  அன்னை கற்பகாம்பாளுக்கு மலர்ப்பாவாடை  அணிவித்து வணங்கிக் கொண்டிருப்பதாக மனதில் பட்டதுமலையின் உச்சியை நெருங்குவதால் பாதை செங்குத்தாகவும் வளைந்து வளைந்தும் சென்று கொண்டிருந்தது. குதிரைக்காரரிடம் பேச்சு கொடுத்துக் கொண்டே  மெதுவாக மலையேறினோம்.


 மலையரசன் பொற்பாவைக்கு மலர்ப்பாவாடை

ஆறு மாதம் பனியால் இப்பகுதி மூடப்பட்டிருக்கும்ஏப்ரல் மாதம் பனி உருகத் தொடங்கியவுடன் கீடா ஜடி எனப்படும் பனியில் அடியில் முளைத்திருக்கும்   ஒரு  மூலிகைச்செடியை பறிக்க செல்வார்களாம் இது தங்கத்தை விட அதிக விலையானது சீனர்கள் இம்மூலிகையை  தங்கள் மருத்துவத்தில் இதை பயன்படுத்துகின்றனர். இதை பறித்து கொள்முதல் வியாபாரிகளிடம் விற்று பணம் சம்பாதிப்பார்களம். அவரவர்   அதிர்ஷ்டத்தைப் பொறுத்து இந்த மூலிகையும் அதற்கேற்றவாறூ பணமும்  கிடைக்கும் என்றார்பின்னர் ஹேம் குண்ட யாத்திரை துவங்கியவுடன்  குதிரையை இங்கு  இயக்கிக் கொண்டிருந்து  விட்டு பின்னர் கேதார்நாத் செல்வோம் அங்கும் திருக்கதவம்  அடைத்தபின் பின்னர் பனிக் காலத்தில் ஒன்றும் செய்ய முடியாது. இது வரை சம்பாதித்ததை வைத்துக்கொண்டு தான்  ஆறு மாத காலத்தை ஓட்ட வேண்டும்  இவ்வாறு  கஷ்ட ஜீவனம் செய்து கொண்டிருக்கிறோம், நாங்கள் படிக்கவில்லை எங்கள் குழந்தைகளையாவது பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்று ஏக்கத்துடன் கூறினார்ஒரு நாளைக்கு ஒரு தடவை மேலேறி வந்து பின்னர் கீழிறங்கி செல்லத்தான் முடியும் நாங்களும் மனிதர்கள்தானே( ஏனென்றால் குதிரையை நடத்திக்கொண்டு இவர்கள்  முழுவதும் நடந்தே வருகின்றனர்) என்றார். மேலும்  சில நாட்கள் சவாரி கிடைக்காமல் கூட போய்விடுவது உண்டு  சில சமயம் சவாரி கிடைத்தாலும்  குறைந்த வாடகையே கிடைக்கும் என்று வருத்தத்துடன் கூறினார்.


மலை உச்சி முழுவதும் பிரம்ம கமல் மலர்கள்

 நாங்கள் மேலேறி சென்று கொண்டிருந்த போது தரிசனம் செய்த பலர் திரும்பி வந்து கொண்டிருந்தனர். செல்லும் வழியில் சில இடங்களில் இன்னும் லக்ஷ்மண் கங்கா நதிமேலே பனியாகவே  இருப்பதை பார்த்தோம். மேலே செல்ல செல்ல மலைச்சரிவுவுகளில் ஆயிரக்கணக்கில்  பிரம்ம கமல் என்னும் அற்புத தாமரை மலர் பூத்திருப்பதைப் பார்த்தோம். இம்மலர்தான் உத்தராக்கண்ட் மாநிலத்தின் மலர் ஆகும். கேதாரீஸ்வரருக்கு மிகவும் பிரீத்தியான மலர் இம்மலர். ஆவணி மாதம்  ஒரு மாதம் மட்டுமே அதுவும் 4000 மீ உயரத்திற்கு மேலே மட்டுமே பூக்கும். இம்மலரை பற்றி அடியேனுடன் பணி புரியும் திரு. கபுர்வன் அவர்கள் கூறியிருந்தார். இயற்கையில் ஆயிரக்கணக்கான பிரம்ம கமல்  மலர்களைக் கண்டு மனது மிகவும் மகிழ்ச்சியடைந்ததுபிரம்மகமலை காண புண்ணியம் செய்திருக்கவேண்டும். அதுவும் அதை பறித்து வந்து ஈசனுக்கு சாற்றுபவர்கள்  மஹா புண்ணியம் செய்தவர்கள் என்பதில் ஐயமில்லை. நாங்கள் குதிரைக்காரரிடம் சொல்லி சில பிரம்ம கமல் மலர்களை பறித்து தரச்சொல்லி அதை பத்ரி நாதருக்கும், சென்னையில் கபாலீஸ்வரருக்கும் சார்த்தும் பாக்கியம் கிட்டியது. பறித்த பத்து நாள் கழித்து கபாலீஸ்வரருக்கு சார்த்த சொல்லி குருக்களிடம் கொடுத்த போது அவர்  என்ன மலர்  வாடி இருக்கின்றதே? என்று பார்த்தார் ஐயா இது இமய மலையில் கிடைக்கும் அரிய மலர் சிவபெருமனுக்கு மிகவும் பிரீத்தி ஆனது என்று கூறியவுடன் ஐயனின் திருமுடியில் சார்த்தி அருமையான தரிசனம் செய்து வைத்தார் எல்லாம் அந்த ஈசன் செயல். இவ்வாறாக  மலை உச்சியை நெருங்கும் போது நடுவில் ஒரு கிராமத்தில் தேநீர் அருந்த சிறிது நேரம் நின்றோம், அப்போது ஒரு வயதான மூதாட்டி இன்றைய நிறைவு அர்தாஸ் நடக்கப்போகின்றது சீக்கிரம் செல்லுங்கள் என்று மிகவும் கரிசனமாக கூறினார்.


பிரம்ம கமல் மலர்

நாங்கள் ஹேம்குண்ட சாஹிப்பை அடைந்த போது சமயம் மதியம் சுமார் 1 மணி ஆனாலும் நல்ல குளிர் காற்று வீசிக்கொண்டிருந்தது. முதலில் ஹேம்குண்டின் சீதள நீரில் நீராடினோம்சென்ற தடவை கங்கோத்ரியில் நீராடிய போது திரு முட்கல் அவர்கள் இதை விட ஹேம்குண்ட்  நீர் குளிர்ச்சியுடையது என்று கூறியது உண்மை என்று புரிந்தது.
இங்கு நீராடும் போது
  ஆர்த்தப்பிறவி துயர் கெட நாம் ஆர்த்தாடும் தீர்த்தன்
நற் தில்லை சிற்றம்பலத்தே தீயாடும் கூத்தன்   என்னும் திருவெம்பாவை பாடல்தான் மனதில் தோன்றியது. நம்முடைஐய பிறவிப்பிணி தீர இங்கே இறைவனே தீர்த்தமாக உள்ளான்.
 ஸ்படிகம் போன்ற அதன் தூய சீதள நீரில் மலைச்சிகரங்களின் பிரதிபிம்பத்தை கண்ணுற்று மகிழ்ந்தோம். எப்போதும் போல் திரு தேஷ்பாண்டே அவர்கள் ஹேம்குண்டின் கரையிலும் சிரசாசனம் செய்தார், பலர் அதை ஆச்சரியமாக பார்த்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இங்கும் மிக அருகிலேயே பிரம்ம கமல் பூத்திருந்து. எங்களுக்கு நிஶான்--சாஹிப் எனப்படும் சீக்கிய சின்னங்களில் இரண்டை மட்டும் தரிசிக்கும் பாக்கியம் கிட்டியது மற்ற சிகரங்கள் எல்லாம் மேகத்தால் மூடப்பட்டிருந்தன. . பின்னர் குருத்வாராவிற்குள் சென்றோம்.


குருவுக்கு சந்தன மாலை சமர்பிக்கும் தேஷ்பாண்டே அவர்கள்

மேல்மாடி குரு அற்புத அலங்காரம்

இரண்டடுக்காக உள்ளது இந்த குருத்வாரா சாஹிப்  கீழ் சன்னதியில் அர்தாஸ் முடிந்து விட்டிருந்தது. ஆயினும் தேஷ்பாண்டே அவர்கள் பெங்களூரிலிருந்து கொண்டு வந்திருந்த சந்தன மாலையை குருவுக்கு அணிவிக்க அனுமதி அளித்தனர், மேலும் குருவுக்கு சாமரம் வீசவும், புகைப்படம் எடுக்கவும் அனுமதித்தனர். பொதுவாக இவர்கள் குருவை புகைப்படம் எடுக்க அனுமதி தருவதில்லை. கங்காரியாவில் இது சம்பந்தமான அறிவிப்பு கேட்டிருந்தோம் எங்கள் அதிர்ஷ்டமோ என்னவோ அல்லது நாங்கள் சீக்கியர்கள் அல்ல அதுவும் தென் இந்தியர்கள் என்பதாலோ அவர்கள் எந்த ஆட்சேபமும் தெரிவிக்கவில்லை.   அவர்களே மேலே உள்ள சன்னதியில் அர்தாஸ் நடந்து கொண்டிருக்கின்றது சீக்கிரம் செல்லுங்கள் என்று  சொல்லி அனுப்பினர். மேலே சென்று அர்தாஸில் கலந்து கொண்டு அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் என்று குருவிடம் வேண்டிக்கொண்டோம். சுஜி அல்வா பிரசாதமும்  சுவிகரித்துக்கொண்டு பின்னர் லட்சுமணர் ஆலயத்திற்கு சென்றோம்.


சிவபெருமான் லக்ஷ்மணர் துர்காதேவி
அங்கு இருந்த குருக்கள் அற்புதமாக தரிசனம் செய்துவைத்தார், லக்ஷ்மணர் நேராக பத்ரிநாத்தை பார்த்தவாறு உள்ளார் என்று கூறினார்மேலும் சிவன் மற்றம் துர்கா தேவி, ஹனுமனின் திருமூர்த்தங்களும் இவ்வாலயத்தில் உள்ளன. அற்புதமாக அலங்காரம் செய்திருக்கின்றார்கள். பின்னர் பிரசாதம் சுவீகரித்துக்கொண்டு அவரிடம் ஆசி வாங்கிக்கொண்டு  குருத்வாரா வந்து லாங்க்ரில  இனிப்பும் பாயாசமும் சுவீகரித்துக் கொண்டு கீழே  இறங்கி கங்காரியவை மாலை 4 மணியளவில் அடைந்தோம்



கங்காரியாவை திரும்ப  அடைந்து விட்டோம்

கங்காரியாவில் உள்ள ஒரு இனிப்புக் கடை
கங்காரியாவில் மூலிகை எண்ணெய் தேய்த்து மாலிஸ் செய்துவிடும் கடைகள் உள்ளன. மலையேறி களைத்து வருக் கால்களுக்கு இதமாக வேண்டியவர்கள் மாலிஸ் செய்து கொள்கின்றனர். பல சிற்றுண்டிக் கடைகள் மற்றும் மலையேற்றத்திற்கு வேண்டிய பொருட்களை விற்கும் கடைகளும் உள்ளன.  கோவிந்தாமின் குருத்வாரில் வந்து தங்க இடம் பெற்றுக்கொண்டோம். பஜ்ஜிகளும் சூடான  தேநீ௫ம் எல்லோருக்கும் வழங்கிக்கொண்டிருந்தார்கள் . காலையில் இருந்து குதிரையில் பயணம் செய்த அலுப்பு தீர சிறிது நேரம் ஓய்வெடுத்துக்கொண்டு. பின்னர் குருத்வாரா சென்று அர்தாஸில் கலந்து கொண்டோம். குருத்வாரா வளாகத்தில் ஒரு பிர்  மரத்தில் கொடிகள் கட்டி இருக்கக்ண்டோம், அதை அனைவரும் வணங்கிச்சென்று கொண்டிருந்த போது என்ன விஷேசம் என்று வினவிய போதுஆதி காலத்தில் அதாவது 1930களில் ஹேம்குண்டை அடையாளம் காட்டிய திரு. சோஹன் சிங் அவர்கள்  தமக்குப்பின்  ஹேம்குண்ட  குருத்வாராவை விரிவுபடுத்த நியமித்த  ஹவில்தார் மோகன் சிங் அவர்கள் மழையிலும்  குளிரிலும், துஷ்ட  மிருகங்களிடமிருந்தும்  தப்பிக்க தங்கிய இடம் இந்த மரப்பொந்து என்று பெருமையாக கூறினார்கள்பின்னர் லங்காரில் இரவு உணவை முடித்துவிட்டு உறங்க சென்றோம். இங்குள்ள இரண்டு நான்கு மாடி கட்டிடங்களில் சுமார் 3000 பேர் தங்க வசதி உள்ளது.

No comments: