Saturday, May 11, 2013

இமயமலையில் ஒரு இனிய யாத்திரை -35

பாகம் -3

பஞ்ச பத்ரிநாதர்கள் ஹேம்குண்ட் சாஹிப் தரிசனம்

பவிஷ்ய பத்ரிநாதர் (சுபாயி கிராமம்)
ஆதி சங்கரர் பூஜித்த மூர்த்தி

இரண்டு வருடங்கள் இமய மலைக்கு அடியோங்களை இழுத்து தரிசனம் அளித்த  அந்த இறைவன் மூன்றாவது தடவையும் அழைத்து அருமையான ஒரு தரிசனத்தை அளிப்பார் என்று கனவிலும் நினைக்கவில்லை. திடீரென்று ஒரு நாள் திரு.தனுஶ்கோடி அவர்களிடமிருந்து தொலைப்பேசி வந்தது, அதில் அவர் திரு தேஷ்பாண்டே அவர்கள் செப்டம்பர் மாதம், பத்ரிநாதம், ஹேம்குண்ட சாஹிப், பூக்களின் சமவெளி செல்லலாம் என்கிறார் நீங்களும் வருகின்றீர்களா? என்று கேட்டார். அடியேனுக்கு இந்த வருடம் அந்தப் பக்கம் செல்லும் எண்ணம் இல்லை என்பதால் அக்டோபர் மாதம் வேறு ஒரு யாத்திரைக்கு முன்பதிவு செய்து வைத்திருந்தேன். எனவே சிறிது அவகாசம் கொடுங்கள் யோசித்து சொல்கின்றேன் என்று கூறினேன்ஆனால் இமயமலை காந்தம் போல இழுத்தது எனவே அடுத்த நாளே செல்லாம் என்று சம்மதம் தெரிவித்தேன். செப்டெம்பர் மாதத்தில் மழை இருக்குமென்றாலும் முடிந்தவரை  தரிசனம் செய்யலாம் என்று முடிவு செய்து புறப்பட்டோம்.
ஹேம்குண்ட் சாஹிப் குருத்வாராமுதல் வருடம் சார் தாம் யாத்திரைக்கு  சென்னையில் இருந்து 13 பேர் சென்றோம் மழை காரணமாக பல துன்பங்கள் ஏற்பட்டது. இரண்டாம் வருடம்  சென்னையில் இருந்து ஆறு பேரும் பெங்களுரில் இருந்து 15 பேர் கொண்ட பெரிய குழு  என்று சுமார் 20 பேர் பயணம் செய்தோம் இந்த வருடம் எந்த சிரமமும் இருக்கவில்லை. திரு தேஷ்பாண்டே அவர்கள் தங்கும் வசதிகளை அருமையாக செய்திருந்தார் கேதாநாத்தில் கேதாரீஸ்வரரையும், பத்ரிநாத்தில் பத்ரிநாதரையும் அருமையாக தரிசனம் செய்தோம். இந்த வருடம் எந்த சிரமமும் இருக்கவில்லை..  மூன்றாம் ஆண்டான 2013ல் சென்னையிலிருந்து மூன்று பேரும் பெங்களூரிலிருந்து இரண்டு பேருமாக மொத்தம் ஐந்து பேர் மட்டுமே செல்வதாக இருந்தது அதிலும் ஒருவருக்கு அலுவலகப்பணியின் காரணமாக செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால்  நான்கு பேர் மட்டுமே யாத்திரை மேற்கொண்டோம்சென்னையில் இருந்து அடியேனும் திரு. தனுஷ்கோடியும் மற்றும் பெங்களூரிலிருந்து திரு. தேஷ்பாண்டே அவர்களும் அவருடன் பணி புரியும் திரு. தினேஷ் அவர்களுமாக மொத்தம்  நான்கு பேர்கள் மிகவும் அருமையாக இந்த வருட யாத்திரையை முடித்தோம்.

லோக்பால் - லக்ஷ்மணர் ஆலயம்

வழக்கம் போல தங்குமிட வசதிகளையெல்லாம் திரு. தேஷ்பாண்டே அவர்கள் கவனித்துக் கொண்டார்கள். மழை இல்லாததால் கூடுதலாக (போனஸாக) பஞ்ச பத்ரிநாதர்களையும் தரிசனம் செய்யும் வாய்ப்பும் இந்த வருடம்  கிட்டியது.. இந்த  மூன்றாம் வருட யாத்திரையின் போது வண்டி வாடகைக்கு அமர்த்திக் கொள்ளவில்லை அரசு பேருந்துகளில்தான் பயணம் செய்தோம். திடீரென்று பஞ்ச பத்ரி தரிசிக்கும் எண்ணம் வந்த போது மட்டும் ஒரே நாளில் முடித்து விடலாம் என்று எண்ணி ஒரு சீருந்தை (வேன்) பத்ரிநாத்தில் வாடகைக்கு அமர்த்திக்கொண்டோம். ஆனால் நினைத்தபடி பஞ்ச பத்ரிகளை ஒரே நாளில் தரிசிக்க  முடியவில்லையென்றாலும் இரு நாட்களில் தரிசனம் செய்து  எந்த வித சிரமமும் இல்லாமல் அந்த இறைவனின் கருணையினால்  யாத்திரையை சுபமாக  முடித்தோம்.


பூக்களின் சமவெளிவழக்கம் போல் SG 312  Spicejet  விமானத்தில் செப்டம்பர் முதல்   தேதியன்று (01.09.2012) காலை சென்னையிலிருந்து டெல்லிக்கு கிளம்பி சென்றோம். திரு. தேஷ்பாண்டே மற்றும் தினேஷ் ஆகிய  இருவர் பெங்களூரிலிருந்து டில்லி  வந்து சேர்ந்தனர். பின்னர் தனுஷ்கோடி அவர்களின் நண்பர் திரு. சந்தோஷ் அவர்கள் நால்வரையும்  சப்தர்ஜங் என்க்லேவ் கிருஷ்ண மந்திரத்திற்கு அழைத்து சென்றார் அங்கு பெருமாளையும் , வாயு குருவையும் தரிசனம் செய்து விட்டு முதல் வருடம் போலவே  டேராடூன் செல்லும் 12055/56  சதாப்தி புகைவண்டி மூலம் ஹரித்வாரத்திற்கு புறப்பட்டோம். அன்று முழு நிலவு நாள்  அழகாக பதினாறு கலைகளுடன் சந்திரன் உடன் வந்தான். இந்த வருடம்  மழை குறைவு என்றாலும் பாதையின் இரு பக்கமும் பயிர்கள் செழித்து வளர்ந்திருந்த்தைப் பார்க்க  ஆச்சரியமாக இருந்தது. பச்சை பசேல் என்று வளர்ந்திருந்த கரும்பு, மக்கா சோள பயிர்கள் செழிப்பாக  வளர்ந்திருந்த   காட்சி  அருமையாக இருந்தது.


பத்ரி நாதரின் காலடியில்


இரவுமணி அளவில் புகைவண்டி ஹரித்வாரத்தை அடைந்தது அங்கிருந்து விக்ரம்( பட் பட்) என்னும் பெரிய ஆட்டோ  மூலம் பூரண சந்திரனின் அமுத தாரைகளை பிரதிபலித்துக் கொண்டிருந்த கங்கா நதியின் பிரவாகத்தை இரசித்துக் கொண்டே ரிஷிகேஷத்திற்கு வந்து சேர்ந்தோம். ரிஷிகேசத்தில் ஹரிபூர் கலா சந்து 5 என்ற பகுதியில் அமைந்துள்ள மத்வாஸ்ரமத்தில் தங்குவதற்கான ஏற்பாடுகளை திரு. தேஷ்பாண்டே அவர்கள் செய்திருந்தார். அங்கு சென்று மூட்டை முடிச்சுகளை  வைத்து விட்டு


தினேஷ் மற்றும் தேஷ்பாண்டே கங்கைக் கரையில்

பௌர்ணமியன்று இரவு நேரத்தில் முழுமதி தனது அமுத தாரைகளை கங்கையின் மேல் பொழிந்து கொண்டிருந்த வேளையில்  வியாஸ் காட் என்னும் ஸ்நான கட்டத்திற்கு  சென்று  கங்கையில்  புனித  நீராடினோம். ரிஷிகேசமும்  இபோது பெரிய நகரமாகிவிட்டது பார்க்கும் இடமெல்லாம் அடுக்கு மாடி வீடுகளாகிவிட்டன.  இந்த வருட யாத்திரை எவ்விதம் அமைந்தது என்பதை அறிந்து கொள்ள உடன் வாருங்கள் அன்பர்களே.


யாத்திரை தொடரும்  . . . . . . . .

No comments: