![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEic43xhplUYLbydDh18grx34GBcGiLH-ZBk_aI_k1z_8jSVVRXH3gVVeh1RH9P_HnOK-uhOUdBhy1rzlCQ1zR1l3SRjTjJqFpZKPqNTXzG2LCnBrrgszUg7wbGPeEWy3ABtlzwqZxA2Yd6k/s400/aru4.jpg)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh7Vj7U2xe0pK8_Q3z3wmbFSbYxezzajNvskqtcWNzMzUpRGmzvGL_6HvpZqX1ap5gEyf7L5gbUc50EcokZb6M0kdtRNBRqW88yHFrgbAM0YBtaeKCZp8JiOiZE2JswTw7lKE9bxkkecPh-/s400/aru5.jpg)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiY30RSuRlqLzSXpbIhgq8yuPgeOBmy3-JJ8A8NOV8yRrxQVC52xehWRL34u5AwheL5zNQ6Kpc8o4qLgxzxMs2RPKAQk_BdZ9ECXfqmdtkThai2OYeR5GhnYEh0ZZaMlbTixmYVSnNtbPzu/s400/aru6.jpg)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh5zlsLsN377GZ4Kfrvd4PcJJCzTxAUtqp6u6_HZ0p51YC442qjd1lQE_M4FlOiG_UYuG0euPuCO6zW9hh9Bm34p24mnkFUFgXXU2-CcCZ4_mzps2zSeCVRUN4nauR-WA_boSHbPojyEPjQ/s400/aru7.jpg)
மடலார்ந்த தெங்கின் மயிலையார் மாசிக்
கடலாட்டுக் கண்டான் கபாலீச்சுரம் அமர்ந்தான்
அடலானே றூரும் அடிகள் அடிபரவி
நடமாடல் காணாதே போதியோ பூம்பாவாய்!
பூம்பாவாய்! மடல்கள் நிறைந்த தென்னைமரங்கள் மிகுந்த மயிலாப்பூரில் மாசி மக நாளில் கடலாட்டுக் கண்ட களிப்போடு கபாலீச்சுரம் என்னும் கோயிலில் எழுந்தருளியிருப்பவனும், வலிமை பொருந்திய ரிஷப வாகனத்தில் ஊர்ந்து வருபவனும், ஆகிய பெருமான் புகழ் பரவி அப்பெருமான் உலா வரும் அந்த அழகைக் காணாது செல்வது முறையோ? என்று சம்பந்தப்பெருமான் பாடியபடி, பக்தர்கள் அனைவரும் கபாலிக்காக காத்திருந்து, தீர்த்தவாரி கண்டு கடலில் அப்பெருமானுடன் மூழ்கினர். கபாலி அங்கிருந்து புறப்பட்ட நிமிடம் அங்கு ஒருவரும் இல்லை. அவ்வளவு பக்தியா? அன்பா? பித்தா? மதிப்பா? கபாலியிடம், எல்லாம் கலந்த ஒன்று, இதுதான் கபாலியின் மகிமை. அடியார்கள் அனைவரும் கபாலி என்று ஒரு அந்நியோன்யத்துடன் அழைக்கும் அந்த அழகை என்னவென்று சொல்ல.
கருணைத்தெய்வம் கற்பகாம்பாள் மாதா மாதம் நிறை வெள்ளியன்று ஊஞ்சல் சேவை தந்தருளும் ஊஞ்சல் மண்டபத்தில் ஒரு தூணில் உள்ளது இச்சிற்பம். இவ்வாறு சிற்பிகள் செதுக்கிய இவ்வரலாறு என்ன, இத்தலம் மயிலாப்பூர் என்றழைக்கப்படும் காரணம் என்பதை அறிந்து கொள்ள ஆர்வமாக உள்ளதா? அந்த அம்மையப்பரின் நாடகத்தை கீழே காணுங்கள்.
ஒரு சமயம் பக்திப் பனியாய்க் கவிந்து இப்பாருலகத்தை காக்கும் பரமனுலகாம் கயிலங்கிரியில் சிவபெருமான் அம்மை பார்வதிக்கு, மலை மகளுக்கு, கௌரிக்கு, உமையம்மைக்கு ஓங்காரத்தின் தத்துவத்தை உபதேசம் செய்து கொண்டிருந்தார், அப்போது அம்மை அங்கு ஆடிக் கொண்டிருந்த மயிலை ஆர்வத்துடன் நோக்க கோபம் கொண்ட ஐயன் அம்மையை பூவுலகில் சென்று மயிலாக பிறக்குமாறும் தக்க சமயத்தில் வந்து ஆட்கொள்வதாகவும் கூறினார். அம்மையும் மயிலாப்பூர் வந்து புன்னை வனத்தில் புள்ளி மயில் உருவில் மாசக்தி அன்னை பிரணவ வடிவுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் போது கயிலை நாதராம் சிவபெருமான் அன்னை இல்லாமல் தவித்தார் சக்தி இல்லாமல் சிவம் ஏது, அவரே இப்பூவுலகம் வந்தார். ஒரு புன்னை மரத்தடியில் சிவலிங்க உருவுடன் அமர்ந்து அன்னையின் பூஜைக்காக காத்துக்கொண்டிருந்தார். மயில் உருவில் இருந்த அன்னை வாவியில் நீராடி ,தன் அலகினால் புன்னை மலர்களை எடுத்து சிவலிங்கத்தை சுற்றி வந்து அலகிலிருந்த மலர்களை இறைவனுக்கு அர்ச்சனை செய்து பூஜை செய்தாள் அம்மையின் பூஜையினால் பிரசன்னமான ஐயன் அம்மையை ஆட்கொண்டு இருவரும் அத்தலத்திலேயே , அம்மை வேண்டுவனருக்கு வேண்டும் வழங்கும் கற்பகாம்பாளாகவும், ஐயன் பிச்சாண்டியாக கபால நாதனாக கபாலீசுவரராகவும் திருக்கோவில் கொண்டனர். இப்பூவுலகத்தில் மாந்தர்களை உய்விக்க அம்மையும் ஐயனும் ஆடிய இந்த நாடகத்தை
ஆடும் மயிலாய் உருவெடுத்து அன்று இறைவன் திருத்தாள்
நாடி அர்சித்த நாயகியாம் நின் நின் நாமங்களைப்
பாடி உருகிப் பரவிப் பரவசம் ஆகும் அப்பாங்கு அருள்வாய்
காடெனவே பொழில் சூழ் மயிலாபுரி கற்பகமே!
என்றுப் பாடிப் பரவுகின்றனர் அடியார்கள்.
புன்னை வன நாதர் சன்னதி
திருக்கோவிலின் தலமரமான புன்னை மரத்தின் நிழலில் அமைந்துள்ளது புன்னை வன நாதர் சன்னதி. இச்சன்னதியில் அன்னை சிவ பூஜை செய்யும் கோலத்தில் அருள் பாலிக்கின்றாள். பழமை வாய்ந்த இம்மரத்தில் மஞ்சள் சரடு கட்டி மாங்கல்ய பாக்கியம் வேண்டியும், தொட்டில் கட்டில் குழந்தை பாக்கியம் வேண்டியும் அம்மையப்பரை வணங்குகின்றனர் பக்தர்கள்.
மயில் உருவில் அன்னை
பூத்துக்குலுங்கும் புன்னை மரம்
பங்குனி பௌர்ணமியின் போது திருக்கல்யாணத்திற்கு முன்பு இந்த மயிலாப்பூர் ஐதீகம் புன்னை வன நாதர் சன்னதியில் அரங்கேறுகின்றது. ஐயன் மண்டபத்திலி்ருந்து( திருக்கயிலாத்திலிருந்து) கிளம்பி வந்து அன்னை மயிலுருவில் பூஜை செய்யும் அழகை பார்த்து சொக்கி நிற்கின்றார். அன்னைக்கு தீபாராதணை ஆனவுடன் திரைச்சீலை விலக அங்கே புதுமணப்பென்ணாக சுய உருவில் கற்பகாம்பாள் அருட் காட்சி தருகின்றாள். அன்னைக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று பின்னர் அன்னை ஐயனை சுற்றி வந்து வணங்க பின்னர் இருவருமாய் கல்யாண மண்டபத்துக்கு எழுந்தருளி நாம் எல்லோரும் உய்ய திருக்கல்யாணம் நடைபெறுகின்றது.
மேலே கற்சிற்பங்களின் அம்மையப்பரின் நாடகத்தை கண்டு களித்தோம் இனி சுதை சிற்பங்களில் அதைக் கண்டு மகிழ்வோமா?
வாணியர் மண்டபத்தின் சுதை சிற்பம்
இராஜ கோபுரத்தின் சுதை சிற்பம்
அம்மையப்பரின் இந்த நாடகத்தால் இரண்டு பெருமைகளைப் பெற்றது. ஒன்று தொண்டின் பெருமை, இன்னொன்று இல்லை எனாது யாவர்க்கும் கற்பகமாய் அன்னை அருள் வழங்கும் பெருமை.
இனி மயிலாப்பூர் என்ற பெயர் வரக்காரணம், அம்மை மயிலாக பூசை செய்ததால் மயிலை என்ற பெயர் ஏற்பட்டது. மேலும் புன்னை வனத்தில் மயில்கள் நிறைந்திருந்து மயில்கள் அகவிய வண்ணம் இருந்ததால் மயிலாப்பு என்று திருநாவுக்கரசரால் அழைக்கப்பட்டு இன்றைக்கு மயிலாப்பூர் என்று அழைப்படுகின்றது என்போரும் உண்டு. இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்த கிரேக்க அறிஞர் தாலமி (காலம் கி.பி 119 -கி.பி 161) இத்தலத்தை தமது பயண நூலில் மலியார்பா என்று குறிப்படுகின்றார் "வடிவுடைய மங்கையுந் தாமுமெல்லாம் வருவாரை யெதிர் கண்டோம் மயிலாப்புள்ளே என்று” அப்பர் பெருமான் பாடியுள்ளார். 5ம் நூற்றாண்டில் திருமழிசை ஆழ்வார் "மாமயிலை" என்றும், 7ம் நூற்றாண்டில் திருஞான சம்பந்தர் "மட்டிட்ட புன்னையங்கானல் மடமயிலை" என்றும், திருமழிசை ஆழ்வார் "மாடமாமயிலை" என்றும் குறிப்பிடுகின்றார்.
அன்னை சிவபூஜை செய்யும் ஓவியம்
திருஞான சம்பந்தரின் பதிகங்கள் மற்றும் திருமழிசை ஆழ்வாரின் பாசுரங்கள் அருணகிரி நாதரின் திருப்புகழ் முதலியவற்றில் கபாலீச்சுரம் முற்காலத்தில் கடற்கரையோரம் இருந்திருக்கின்றது என்று தெரிகின்றது, கடல் கொண்டதாலோ அல்லது போர்ச்சுகீசிரியர்கள் காலத்தில், (1565 ல் போர்ச்சிக்கீசியப் போரில்) அவ்வாலயம் அழிக்கப்பட்டு தற்போது உள்ள இடத்தில் 16ம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளது.
மின் விளக்கு ஒளியில்
சாந்தோம் தேவாலயத்தில் 1923ம் ஆண்டில் நடந்த ஒரு அகழ்வாராய்ச்சியின் போது புராண திருக்கோவிலின் தூண்கள் மற்றும் இராஜ இராஜ சோழரின் சில கல்வெட்டுக்கள் கிடைத்துள்ளன. தற்போதைய கோவிலின் தூண்கள் விஜய நகர பாணியில் உள்ளன.