Friday, November 1, 2013

முத்தான முத்துக் குமரன் கும்பாபிஷேகம் -4

உற்சவர்கள் வாகன சேவை

உற்சவர்களின் தங்க வாகன சேவை தொடர்ச்சியாக இப்பதிவில் முருகப்பெருமானின் மூன்று கோல வாகன சேவையையும் தாயார் இருவரின் வாகன சேவையையும் காணலாம் அன்பர்களே.

ஷண்முகர் வெள்ளிரத சேவை
முன்புற தோற்றம்



வெள்ளிரதமும்  இராஜ கோபுரமும்


ஷண்முகரின் பின்னழகு 





தங்க ரதம் 

தங்கரதத்தில் பால சுப்பிரமணியர்

தங்கரதம்   பின்னழகு


தங்க மயில் வாகனத்தின் முன்னழகு

முத்துகுமார சுவாமி


சுவாமிக்கு அமைத்துள்ள மலர் பிரபைதான் எவ்வளவு பிரம்மாண்டம் மற்றும் அழகைப் பாருங்கள். 


 தங்க மயில் வாகனத்தில் முத்து குமாரசுவாமி


தங்க  மயில் வாகனத்தின் பின்னழகு


தங்க நாக வாகனம் 



                                                         தங்க நாக வாகனத்தில் கஜவள்ளி வனவள்ளி


              பூக்கடை கந்த சுவாமி கோவிலென வழங்கும் ஸ்ரீ முத்துக் குமார சுவாமி தேவஸ்தானம் , சென்னையின்  நெரிசல் மிகுந்த பகுதியான பாரிமுனையிலே இராசப்ப செட்டி தெருவிலே கடைகளுக்கு மத்தியில் அமைந்துள்ளதுவடக்கு நோக்கிய ஐந்து நிலை கோபுரம் நம்மை வா வா என்று அழைக்கின்றது, உள்ளே நுழைந்தால் எதிரே முழுமுதற் கடவுளான கணநாதரை தரிசிக்கலாம்உள்  வாயிலின் மேலே  வள்ளி திருமணக் கோல சுதை சிற்பம் கண்ணுக்கு விருந்துகோவிலை வலம் வந்தால் கிழக்குப் பகுதியில் துவஜஸ்தம்பம், கிழக்கு சுவரில் அழகிய சிற்ப வேலைப்பாடுகள் அமைந்த ஜன்னல்கள், சிவபெருமான் சன்னிதிற்கெதிராக சிவலிங்க வடிவிலும், கந்த சுவாமி சன்னிதிற்கெதிராக நட்சத்திர வடிவிலும், தெய்வயானை அம்மன் சன்னதிற்கெதிராக மலர் வேலைப்பாட்டுடனும் கலை நயத்துடன் ஜன்னல்கள் அமைக்கப்பட்டுள்ளன வெளியே இருந்தே எம்பெருமானையும் தாயார்களையும்  தரிசிக்க ஏதுவாக அமைந்துள்ளன.

 பின் உற்சவர் மண்டபம்,   ஆறுமுகனுக்கு அறுகோண ஆஸ்தான மண்டபம், ஒரு சுற்றுடன் விளங்குகின்றது  "ஓம் சரவண பவ" என்னும் சடாக்ஷர வடிவாய் விளங்கும் இந்த மண்டபத்தில்  மூலவருக்கு இனையான சக்தியுடன் இத்தலத்தில்  விளங்கும்  பரம ஞான மூர்த்தியான தந்தைக்கே உபதேசம் செய்த ஞான பண்டித சாமி கோடி கோடி மன்மத லாவண்யத்துடன்  பொன்னொளி மின்னும் வதனத்தினனாய், தேவிமார்கள் இருவருடனும், மயில் வாகனத்துடன், மன இருள்,அறியாமை, துன்பம் ஆகியவற்றை நீக்கும் சக்தி வேலுடனும் சேவல் கொடியுடனும்  முத்துக் குமார சுவாமியாய் அருக் காட்சி தருகின்றார்.   மண்டபத்தின் முகப்பில் திருக்கோவிலின் முத்திரை எடுப்பாக சலவைக் கற்களில் அமைக்கப்பட்டிருக்கின்றன.
என்ன ஒரு ஈர்ப்பு எம்பெருமானின் திருமுருக வதனத்திலே, அந்த வடிவழகனை விட்டு அகல மனம் மறுக்கின்றது.   நம் கண் பட்டுவிடுமோ என்று தான் எம்பெருமானுக்கு  திருஷ்டிப் பொட்டு  இட்டிருக்கின்றனர். மூலவரைப் போலவே கிழக்கு நோக்கி அமைந்துள்ளது உற்சவர் மண்டபம், எதிரேயே கண்ணாடி மண்டபம், எம்பெருமான் சர்வலங்கார பூஷிதராய்  எழுந்துருளும் போது நாம் சேவிக்க. மனம் குளிர குஹப் பெருமானின் வடிவழகைக் கண்டு வணங்கி பின் வலம் வந்தால் நவக்கிரக சன்னதி, இம்மண்டபத்தில் மாரி செட்டியார் இத்திருக்கோவிலை உருவாக்கிய வரலாறு சுதை சிற்பமாக அமைக்கப்பட்டுள்ளதுசரவணப்பொய்கை திருக்குளக்கரையில் சித்தி புத்தி சமேதராய் ஸ்கந்த பூர்வஜன் தனி சன்னிதி, சித்தி புத்தி என்னும்  தேவிமார்கள் இருவருடன் அமர்ந்த நிலையில் அருட்காட்சி தருகின்றார் பிள்ளையார்அவருக்கு வலப்பக்கத்திலே , காசி விஸ்வனாதர், விசாலாக்ஷி சன்னதிசென்னையில் அமைந்துள்ள பல கோவில்கள் போலவே இடப்பற்றாக் குறையினால் திருக்கோவிலின் உள்ளேயே திருக்குளம் மிகச் சிறப்பாக அமைந்துள்ளதுகுளக்கரையிலே அற்புதமான சுதை சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சரவணப் பொய்கை திருக்குளத்தில் வெல்லம் கரைத்தால் தீராத நோய்கள் எல்லாம் தீருகின்றது. சித்திரை மாதம் தெப்போற்சவம் இத்திருக்குளத்தில் நடைபெறுகின்றது.  
 குளத்தில் நம் மெய் அழுக்கை கழுவிக்கொண்டு மேலே ஏறினால் அக அழுக்கை நீக்கும் ஆடல் வல்லானின் தேக்கு மரத்தால் ஆன அழகிய மர சிற்பம்அந்த நிருத்த மண்டபத்தின் இறுதியில்  ஞான தண்டாயுத பாணி  சன்னிதி மற்றும் பள்ளியறை. இந்த இரு சன்னதிகளின் கதவுகளில் சிவபெருமானின்  108 தாண்டவக் கோலங்களும் எழிலுடன் செதுக்கப்பட்டுள்ளன. தேக்கு மரத்தால் ஆன அழகிய கலை பொக்கிஷம். அடுத்து  சோமாஸ்கந்தர் மற்றும் நடராஜர் சன்னதிகள் கோஷ்டத்தில் விநாயகர் ஆலமர் கடவுள்,  பிரம்ம முருகர், நாக சுப்பிரமனியர், குக்குட நாதர், மஹா லக்ஷ்மி, மஹா விஷ்ணு, துர்க்கை ஆகிய தெய்வங்கள் அருள் பாலிக்கின்றனர். 

            இனி அர்த்த மண்டபத்தில் நுழைவோமா?   மண்டபத்திற்குள் நுழையும் போது ஒன்றை கவனிக்கலாம்வாயிலின் இரு பக்கமும் சிற்பங்கள் வலப்பக்கம் சைவ புராண சம்பந்தப்பட்ட சிற்பங்கள், இடப்பக்கம் வைணவ புராண சம்பந்தப்பட்ட சிற்பங்கள் குறிப்பாக கிருஷ்ண லீலை சிற்பங்கள், அரியும் சிவனும் ஒன்று என்பதை உணர்த்துகின்றன இச்சிற்பங்கள். வடக்கு நோக்கி  வினாயகர் சன்னதி, அடுத்து பால முருகன் சன்னதி(நித்யோத்ஸவர்), கோஷ்டத்தில் வீரபாகு மற்றும் சூரியன். கிழக்கு நோக்கி உற்சவ மூர்த்திகள் சன்னதி, வனவள்ளி சன்னதிமூலவர் சன்னதி  வள்ளி தெய்வானையுடன்  மாரி செட்டியாருக்காக தானே வந்து அருளிய கந்த சுவாமி   மூர்த்தி சிறிதனாலும் கீர்த்தி பெரிதான எம்பெருமான் முருகன், விழாக் காலங்களில் தங்க கவசத்தில் எம்பெருமானைக் காண கண் கோடி வேண்டும். கஜவள்ளி சன்னதி, விஸ்வனாதர் சன்னதிகள் அமைந்துள்ளனதெற்கு முகமாக   மீனாக்ஷ’  அம்மன் சன்னதி,   ஆறுமுகர் சன்னதி  மயில் மேல ஷண்முகப்பெருமான் எழுந்தருளி அருள் பாலிக்கும் அழகு. இம்மண்டபத்தில் அற்புத சிற்பங்கள் நிறந்த தூண்கள் உள்ளன, அம்மை சிவ பூஜை கோலம், மயில் மேல் கால் ஊன்றி நின்ற முருகர், சதுர்முகன், வினாயாகர், தசாவதார கோலங்கள், ஆட வல்லான், பைரவர், பழனி ஆண்டிக்கோலம், மத்தளம் வாசிக்கும் நந்தி, கல்யாண சுந்தரர், ரிஷபாரூடர், கோபால கிருஷ்ணர், அன்னாரூட பிரம்மா, வில் அம்பு தாங்கிய முருகர், தவழும் கண்ணன்,   என்று பல் வேறு சிற்பங்கள் அனைத்தும் கலை அழகுடனும் தெய்வீக ஒளியுடனும் மிளிர்கின்றன. கூரையிலே சரவணபவ சக்கரம் நமக்கு அருளை வழங்குகின்றது.

அன்பர்கள் அனைவருக்கும் இனிய  தீபாவளி நல்வாழ்த்துக்கள்

Thursday, October 31, 2013

முத்தான முத்துக் குமரன் கும்பாபிஷேகம் -3

முன் பதிவில் மூலவர் கந்த சுவாமி எவ்வாறு தானே தன் அன்பனுருக்கு கனவில் வந்து தன்னை காட்டி இங்கு வந்து கோவில் கொண்டார் என்பதையும், மஹா கும்பாபிஷேகத்தன்று மாலை வன வள்ளி திருக்கல்யாண காட்சிகளையும், உற்சவ மூர்த்திகளின் அலங்காரத்தையும் கண்டு களித்தீர்கள்.  

இப்பதிவில் உற்சவர் முத்து குமார சுவாமி ஏன் முத்துக்களுடன் விளங்குகின்றார் என்ற உண்மையையும், அனைத்து மூர்த்திகளின் தங்க வாகன சேவைகளையும் கண்டு களியுங்கள்.  

அன்பர்களின் தோளில் ஆடி ஆடி புறப்பாடு கண்டருளும் 
சிவசக்தி


முத்துக்குமார சுவாமி புறப்பாடு


புதிதாக வர்ணம் தீட்டப்பட்டுள்ளதால் எழிலாக ஒளிரும் சுதை சிற்பங்களை காணுங்கள் அன்பர்களே.


தங்க சிம்ம வாகனத்தில்   விநாயகர்  முன் செல்ல ....

தங்க யாணை வாகனத்தில் அம்மையப்பர் திருவீதி உலா 


எழிலாக மலர்கள்களால் அமைக்கப்பட்டுள்ள பிரபையை பாருங்கள், கால புருஷன் மற்றும் பறக்கும் பச்சை கிளிகள் அருமையோ அருமை. படங்களை  பெரிதாக்கிப் பாருங்கள்.





தங்க கேடயத்தில் மீனாக்ஷி அம்பாள் 
அம்மனுக்கு வேறு மலர் அலங்காரம் 




சிறந்த சிற்பத்திற்காக ஜனாதிபதி பரிசு பெற்ற சூரபத்மன் வாகனம். வாகனத்தின் சிரசிலிருந்து பாதம் வரை செய்துள்ள வேலைப்பாட்டை கவனியுங்கள் அன்பர்களே. 


சூரபத்மன் வாகனத்தில் வீரபாகு

முருகனுக்காக சூரபதமனிடம் தூது சென்ற  நவ வீரர்களின் முதல்வரான வீரபாகு தேவர் இன்றைய தினம் சூரபத்மன் வாகனத்தில் திருவீதி உலா கண்டருளுகிறார்.  



சூரபதமன் வாகனத்தின் பின்னழகு


மூலவராக எம்பெருமான் இக்கோவில் வந்து எழுந்தருளியதும் ஒரு அற்புத லீலை, அதே போல உற்சவராக முத்துக்குமார சுவாமியாக எழுந்தருளி அருள் பாலிப்பதும் ஒரு அற்புத லீலைதான். அந்த அழகன் முருகனை, சிங்கார வேலனை, உற்சவராக வார்த்தெடுத்து எழில் கொஞ்சும் அந்த திருமுகத்தை அமைக்க தலைமை சிற்பி உளி கொண்டு செதுக்க முற்பட்டார், ஆனால் அவருக்கு கிடைத்ததோ ஒரு மின்னல் அதிர்ச்சி, அலமலந்து விட்டார் அவர் அப்படி ஒரு அதிர்ச்சி அவருக்கு கிடைத்தது. எனவே அவர் சிலையை செப்பனிடுவதை விடுத்து அப்படியே கோவில் அதிகாரிகளிடம் ஒப்படைத்து விட்டார். அவர்களும் உற்சவர் உக்ரமாகவும், சக்தி உடையவராகவும் அமைந்து விட்டார் என்று எண்ணி அவரை வணங்க அஞ்சி ஒரு அறையில் வைத்து வெகு நாட்கள் பூட்டி வைத்து விட்டனர். பின்பு அந்த எம்பெருமானின் அருளால் ஒரு முருக பக்தர் வந்து பல் வேறு பூஜைகள் சாந்திகள் செய்து முத்துக் குமார சுவாமியின் உக்ரத்தை குறைத்த பின் மீண்டும் அவரை வழிபடத் தொடங்கினர். இன்றும் முத்து குமார சுவாமியின் உடம்பு முழுவதும் முத்துக்களாக இருப்பதையும், வலது கண் அப்படியே முழுமை பெறாமல் இருப்பதையும் இன்றும் நாம் காணலாம். தாயார் இருவரும் அவ்வாறே சிறு சிறு முத்துக்களுடன் விளங்குவதையும் காணலாம். எனவே மூலவரைப் போலவே இத்தலத்தில் உற்சவரும் சிறப்பு வாய்ந்தவர். திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள், கச்சி வரதராஜப்பெருமாள்கள் ஆகியோரின் திருமுக மண்டலங்களில் முத்துக்கள் உள்ளது போல அந்த மால் மருகன் முகத்திலும் முத்துக்கள், எனவே அந்த அழகன் முருகனை தங்கக் கவசம் பூட்டி பாதுகாக்கின்றனர் இத்தலத்தில், கந்த வேளுக்கு வருடத்தில் ஒன்பது நாட்கள் மட்டுமே முழு அபிஷேகம் மற்ற நாட்களில் ஐயனின் பாதங்களில் மட்டும் பன்னீர் அபிஷேகம் செய்யப்படுகின்றது. அபிஷேகம் நடக்கும் சில நாட்கள் சித்திரை வருடப்பிறப்பு, ஆனி திருமஞ்சனம், ஆவணி அவிட்டம், கார்த்திகை ஏகாந்த சேவை தை பிரம்மோற்சவத்தின் முதல் நாள், தேரிலிருந்து இறங்கிய பின் , பிரம்மோற்சவம் முடிந்து உற்சவ சாந்தி அபிஷேகம் முதலியனஇனி இவ்வளவு சிறப்புப் பெற்ற இக்கோவிலை வலம் வரலாமா?

வாகன சேவை தொடரும்............

Tuesday, October 29, 2013

முத்தான முத்துக் குமரன் கும்பாபிஷேகம் -2

முத்துக்குமார சுவாமி தேவஸ்தானம்


இப்பதிவில் கும்பாபிஷேகத்தன்று மாலை நடைபெற்ற வள்ளி நாயகி திருக்கல்யாணம் மற்றும் அனைத்து மூர்த்திகளின் தங்க வாகன சேவை காட்சிகளையும் இப்பதிவில் காண்கின்றீர்கள்.  அத்துடன் இவ்வாலயத்தின் சிறப்புகளையும் படியுங்கள் அன்பர்களே.

விநாயகப் பெருமான் 

 உற்சவர் முத்துக் குமார சுவாமி 

முத்துக் குமார சுவாமிக்கு சிறப்பாக பாதாம் பருப்பால் ஆன  மாலையையும்  அம் பாள் இருவருக்கும்  கூடுதலாக ஆப்பிள்ப் பழங்களுடன் கூடிய மாலையையும்  கவனியுங்கள் அன்பர்களே. ( படத்தை பெரிதாக்கி பார்க்கவும்)

வடிவேல் அரசே சரணம் சரணம்
கோலக் குறமான் கணவா சரணம்
ஞாலத்துயர் நீர் நலனே சரணம்
கந்தா சரணம் சரணம் சரணம்

ஸ்ரீ அகண்ட பரிபூரண சச்சிதானந்த திவ்ய தேஜோமய சொரூபியாய் விளங்கும் மணிமிடற்றண்ணலாம் சிவபெருமானது பால நேத்ர உத்பவராய்சரவணப் பொய்கையிலே திருஅவதாரம் செய்துகார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டுதிருவிளையாடல் புரிந்துஅம்மை உமாதேவியாரிடம் சக்தி வேல் பெற்று சூரர் குலத்தை கருவறுத்து தேவர் குழாத்தைக் காத்தருளித் தம்மை வழிபடும் அடியவர் துயர் நீங்க போகாங்க மூர்த்த மாஞ்சகஉருவந்தாங்கி ஆங்காங்கு திருக்கோவில் கொண்டருளியிருக்கும் படைவீடு முதலான தலங்களைப் போல தொண்டைமண்டலத்திலேதருமமிகு சென்னையிலேஇராசப்ப செட்டி தெருவிலேஅருட்பெருஞ்ஜோதி, அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதிதனிப் பெருங்கருணை என்றும் வாடிய பயிரைக் கண்ட போது வாடினேன் என்று பாடியவள்ளலார்சுவாமிகளால் " திரு ஓங்கு புண்ணிய செயல் ஓங்கி " என்று பாடல் பெற்ற தலம் தான் சென்னை ஸ்ரீ கந்தசுவாமி கோவிலென வழங்கப்படும் ஸ்ரீ முத்துக்குமார சுவாமிதேவஸ்தானம்ஸ்ரீ மத் பாம்பன் சுவாமிகள்வண்ண சரபம் தண்டபாணி சுவாமிகள்சிதம்பரம் சுவாமிகள் முதலாய ஞானியர்களால் பெரிதும் புகழ்ந்து பாடல் பெற்ற தலம். இத்தலத்தில் முருகப்பெருமான் கஜவல்லிவனவள்ளி சமேதராய் கந்தசுவாமி என்னும் திருப் பெயருடன் மூலவராகவும்உடம்பு முழுவதுடம் முத்துக்கள் பெற்றிருப்பதால் முத்துக் குமார சுவாமி என்ற திரு நாமத்துடன் உற்சவராகவும் எழுந்தருளி அருள்பாலிக்கின்றார்

வன வள்ளி திருக்கல்யாணம் 


கஜவள்ளி -  வன வள்ளி

இந்த ஆலயம் சுமார் 360 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய வரலாறு மிகவும் சுவையானது, அவரது திருவிளையாடல் மூலமாகவே இவ்வாலயம் இங்கு உண்டானது, அதற்கு அவர் தேர்ந்தெடுத்தவர்தான் பேரி செட்டியார் வகுப்பைச் சார்ந்த மாரி செட்டியார். மாரி செட்டியார் தனது நண்பர் கந்தப்பச்சாரி செட்டியாருடன் ஒவ்வொரு கிருத்திகை தோறும் சென்னையிலிருந்துதிருப்போரூர் சென்று ஒரு கை முகன் இளவலை, கந்தக் கடம்பனை, கார் மயில் வாகனனை, விளங்கு வள்ளி காந்தனை, மாயோன் மருகனை, பாம்பன் சுவாமிகள் வழிபடும் சுயம்பு கந்தவேளை வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். தன்னைக் காண வரும் அன்பனின் அருகிலேயே கோவில் கொள்ள விரும்பிய அழகன் ஒரு திருவிளையாடலை நடத்தினான். ஒரு கார்த்திகையன்று மாரி செட்டியாரும் அவரது நண்பர் கந்தசுவாமி தம்பிரானும் ஒரு மரத்தடியில் உறங்கிக் கொண்டிருந்த போது வெகு காலமாக ஒரு புற்றில்  தான் இருப்பதாகவும் தன்னை எடுத்துச் சென்று ஒரு கோவில் கட்டுமாறும் அசரீரியாக கூறினார். உறக்கத்தில் இருந்து எழுந்த இருவரும் அருகில் இருந்த புற்றில் அடியில் கந்த வேளை தேவியர் இருவருடனும் கண்டெடுத்தனர். முருகன் மயிலுடன் நின்ற கோலத்தில் தன் தேவியருடன் இருந்ததைக் கண்டு அதிசயித்து விழுந்து வணங்கி அந்த விக்கிரகத்தை பயபக்தியுடன் சென்னை கொண்டு வந்து தற்போது கோவில் உள்ள இடத்தில் பிரதிஷ்டை செய்தார்.

ஆறுமுகப் பெருமான்

பால சுப்பிரமணியர் 

சுந்தரேஸ்வரர்


மீனாக்ஷி அம்பாள்

அன்பர் ஒருவர் தன்னுடைய பூந்தோட்டத்தை கோவில் கட்ட இலவசமாக கொடுத்தார், ஆதிகாலத்தில்  குளக்கரை சித்தி விநாயகர் ஆலயம் மட்டும் தான் இவ்விடத்தில் இருந்தது. தன் மனைவியின் நகைகளை விற்று இத்திருக்கோவிலை உண்டாக்கினார் மாரி செட்டியார். பிறகு ஆயிர வைசிய பேரி செட்டியார் சமூகத்தினரிடம் கோவிலை ஒப்படைத்தார். அவர்களும் இராஜ கோபுரத்தைக் கட்டி கோவிலுக்கு நித்ய கட்டளைகள் ஏற்படுத்தி கோவிலை மேலும் விரிவு படுத்தினர். தொடர்ந்து இவர்களின் வாரிசுகள் இன்றும் எண்ணற்ற திருப்பணிகள் செய்து வருகின்றனர். மேலும் தங்களுக்கு வாரிசு இல்லாதவர்கள் பலர் தங்கள் சொத்தை இக்கோவிலுக்கு எழுதி வைத்து அறப்பணிக்கு தங்களை அர்ப்பணித்துக் கொண்டார்கள். பள்ளிகள், கல்லூரிகள், நூல் நிலையம், கலாலயம், மருத்துவமனை, கருணை இல்லம் என்று பல் வேறு சமுதாயப்பணிகள் இத்திருக்கோவில் சார்பாக நடத்தப்பட்டு மக்களுக்கு சேவை செய்து வருகின்றனர் என்றால் அது அந்த முருகனின் அபார கருணையினால்தான். இவ்வாறு ஒரு திருவிளையாடல் புரிந்து தானே வந்து கோவில் கொண்டார் கந்தவேள். கந்தன் வந்து குடி கொண்டதால்  இவ்வாலயம் கந்த சுவாமி என்றும், குமரன் குடி கொண்ட கோவில் என்பதால் கந்த கோட்டம் என்றும் அழைக்கப்படுகின்றது.   


வீரபாகுத் தேவர்

சுமித்ர  சண்டிகேஸ்வரர் 

குலகுரு - மாரி செட்டியார்


உற்சவ  மூர்த்திகள் பூரண அலங்காரத்தில் விளங்கும் அழகை இப்பதிவில்  கண்டீர்கள் இனி அவர்களின் வாகன சேவைகளை அடுத்த பதிவில் காணலாம் அன்பர்களே.