Saturday, September 9, 2017

பட்டினத்தார்

குருபூசை 

ஆடி மாதம் உத்திராட நட்சத்திரத்தன்று பட்டினத்தார் இறைவனுடன் இரண்டறக் கலந்தார். அவரது குரு பூசை,  அன்றைய தினம்  திருவொற்றியூரில் அவரது திருக்கோவிலில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இவ்வருடம் அவரை அவரது குருபூசையன்று தரிசிக்கும் பாக்கியம் கிட்டியது அப்போது எடுத்த படங்களின் தொகுப்பே இப்பதிவு.


நந்தி மண்டபம் 

இவரது இயற்பெயர் சுவேதாரண்யர், (திருவெண்காடர்)  காவிரிப்பூம்பட்டினத்திற்கு அருகில் உள்ள சாயாவனம் என்றழைக்கப்படும் திருசாய்க்காடு திருத்தலத்தில் திருவெண்காட்டில் உறையும் சிவபெருமானின் அருளினால் சிவநேசர், ஞானகலை ஆகியோருக்கு மகவாக  வ்ந்து சேர்ந்தார்.  .

தமது ஐந்தாவது வயதில் தந்தையாரை இழந்தார். தாயார் தக்க ஆசிரியர்களைக் கொண்டு இவருக்கு கல்வி கற்பித்தார். திருமணப் பருவம் அடைந்தபோது சிவகலை அம்மையாரை திருமணம் புரிந்தார். வெகு நாள் குழந்தைப் பேறு இல்லாமல் இருக்க, சிவப்பெருமானை மனமுருகி வழிபட எம்பெருமானே இவரிடம் குழந்தையாக வந்து சேர்ந்தார். அக்குழந்தைக்கு மருதவாணன் என்று பெயரிட்டு போற்றி வளர்ந்தார்.


பட்டினத்தடிகள் 

 இளமைப் பருவம் அடைந்த மருதவாணர் குல வழக்கப்படி அயல்நாடு சென்று வணிகம் செய்ய விழைந்தார். திருவெண்காடரும் வேண்டியன செய்து தந்தார்.  மற்ற வனிகர்களூடன் புறப்பட்டு சென்றார். பொருள் ஈட்ட சென்ற மருதவாணர் கொண்டு சென்ற பொருட்களை  எல்லாம் கோவில், மடம் முதலான அற்ச்செயல்களில் செலவழித்துவிட்டு மீதமிருந்த செல்வத்தைக் கொண்டு எரு முட்டைகளையும் அவல் மூட்டைகளையும் வாங்கிக்கொண்டு கப்பலில் திரும்பி வரும் போது காற்றினால் கப்பல்கள் திசை மாறின. எனவே மற்ற கப்பல்களில் இருந்த உணவுப்பொருட்கள் எல்லாம் தீர்ந்து விட,  மருதவாணர் கொணர்ந்த அவலை உண்டு எப்படியோ புகார் திரும்பினர்.

நூதன விமானம் 

மற்றவர்கள்  தங்கள் பொருட்களையெல்லாம் இழந்தனர், ஆனால் மருதவாணர் கொணர்ந்த எரு முட்டைகள் மட்டும் தப்பியது. மற்றவர்கள் திருவெண்காடரிடம் சென்று தங்கள் மகனுக்கு சித்த பிரமை பிடித்து விட்டது என்று புகார் கூறிவிட்டு சென்றனர். அவரும் மகன் கொணர்ந்த எருமுட்டைகளை சினத்துடன் வெளியே எறிந்தார். உடைந்த எரு முட்டைகளில் இருந்து விலையுயர்ந்த கற்கள் சிதறின. திருவெண்காடர் மைந்தனது வணிகத்திறமை கண்டு வியந்து அவனைக் காண ஆவலுடன் வீடு திரும்பினார்.
எங்கு தேடினும் அவனை காணாது மனம் வருந்தினார்.  அச்சமயம் அவரது மனைவி ஒரு சிறு பெட்டியை கொணார்ந்து, இப்பெட்டியை தங்களிடம் சேர்பிக்கச் சொல்லிவிட்டு நம் பிள்ளை சென்று விட்டான் என்றார்.


வெண்காடர் அப்பெட்டியை திற‘ந்து பார்த்தபோது  அதில் ஒரு காதற்ற ஊசியும், அதனுடன் ஒரு ஓலையும் இருந்தது.அவ்வோலையில் “காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே” என்ற வாசகம் காணப்பட்டது.

 மகனாக வந்த சிவபெருமான் வெண்காடருக்கு உணர்த்திய உண்மை, ஒருவர் தன்து இறுதி பயணத்தின் போது எம்பெருமான் திருவடிதுணையே அன்றி அவனுடன் தன் மனைவி, மக்கள், உற்றார், உறவினர் யாரும் உடன் வர மாட்டார்கள், மேலும் தேடித்தேடி சேர்த்த பொன், பொருள், வீடு, மனை, எதுவும் உடன் வராது. ஏன் சிறு காதறுந்த ஊசி கூட உடன் வாராது. அவன் செய்த புண்ணிய பாவங்களின் விளைவுகள் மட்டுமே அவனுடன் வரும். என்பதை திருவெண்காடருக்கும் அதன் மூலம் நமக்கும் உணர்த்தினார்.
காதறுந்த  ஊசி



உண்மையை உணர்ந்த பட்டினத்தார் துறவறம் மேற்கொண்டார் தன்னுடைய செல்வத்தை எல்லாம் சிவனடியார்களுக்கு பிரித்துக் கொடுக்குமாறு கூறிவிட்டு, அன்னைக்கு மட்டும் இறுதி கடனை செய்வதாக உறுதி மொழி தந்து ஊரை விட்டு ஒது‘ங்கி பிச்சை கொண்டு வாழ்ந்து வந்தார். .

அதில் சிவபெருமான் தனக்கு உணர்த்திய உண்மையை பட்டினத்தார்  இவ்வாறு பாடுகின்றார்.

பிறக்கும் பொழுது கொடுவந்த(து)
      இலை பிறந்துமண்மேல்
இறக்கும் பொழுது ஒடுபோவ(து)
      இல்லை இடைநடுவில்
குறிக்கும் இச்செல்வஞ் சிவன்தந்த
      தென்றுகொடுகறியா(து)
இறக்கும் குலாமருக்(கு) என் சொல்லுவேன்
      கச்சி ஏகம்பனே

தன்னுடைய இளவல் இவ்வாறு இரந்துண்ணுவதை அவமானமாக கருதிய பட்டினத்தாரின் தமக்கை நஞ்சு கலந்த ஒரு அப்பத்தை உண்ணூம்படி  அடிகளுக்கு கொடுத்தார், இறையருளால் அதையறிந்த அவர் அந்த அப்பத்தை தன் வினை தன்னைச் சுடும் ஓட்டப்பம் வீட்டைச்  சுடும் என்று கூறி, கூரையில் எறிய அவ்வீடு தீப்பற்றி தீக்கிரையானது.

சிறிது காலம் சென்றது பட்டினத்தடிகளின் தாயார் சிவபதம் அடைந்தார். இதை இறையருளால் திருவெண்காட்டில்  இருந்த அடிகள் அறிந்து காவிரிபூம்பட்டினம் வந்து தாயின் உடல் கட்டையிலும், வரட்டியாலும் மூடியிருந்ததை தாங்க முடியாமல், அவைகளை நீக்கி பச்சை வாழை மட்டைகளில் தன் தாயின் உடலைக் கிடத்தி “ஐயிரண்டு திங்களா அங்கமெலாம் நொந்து பெற்று” என்று பாடத்தொடங்கி அதில் “முன்னையிட்ட தீ முப்புரத்திலே, பின்னையிட்ட தீ தென் இலங்கையிலே, அன்னையிட்ட தீ அடிவயிற்றினிலே, யானும் இட்ட தீ மூள்க மூள்கவே  என்று பாடிய போது அனல் மூண்டு  சிதை கொழுந்து விட்டு எறிந்தது. தன் தாய்க்கு கொடுத்த வாக்கினை நிறைவேற்றிய பின் ஊர் ஊராக சென்று இறைவனை தொழுது பாடல்கள் பாடலானார்.

பேய்க்கரும்பு 


திருவாரூர், மதுரை, கொங்கு நாடு, துளுவநாடு கடந்து உஜ்ஜயனியை அடைந்து  ஒரு விநாயகர் ஆலயத்தில் நிஷ்டையில் அமர்ந்திருந்தார். அவ்வேளையில் அரண்மணையில் கொள்ளையடித்த திருடர்கள் திருடிய முத்து மாலையை இவர் கழுத்தில் மாட்டி விட்டு சென்றனர். காலையில்  அரச சேவகர்கள் பட்டினத்தடிகளை அரசனிடம் கொண்டு சென்று நிறுத்தினர். அரசனும் தீர விசாரிக்காமல் அடிகளை கழுமரத்தில் ஏற்றுமாறு ஆணையிட்டான்.  அவரை கழுமரத்திடம் அழைத்துச்சென்ற போது  அக்கழுமரத்தைப் பார்த்து “என் செயல் ஆவதினி யாதொன்றுமில்லை” என்ற பாட்டினைப்பாட அக்கழுமரம் தீப்பற்றி எரிந்தது.

அரசனைக் கண்ட பட்டினத்தார் அவன் ஞானவழியில் செல்ல பக்குவம் அடைந்திருப்பதும், அவன் மனைவி அவனை ஏமாற்றுவதையும் தெரிய வரவே, அதை மன்னனுக்கு உணர்த்தினார். மன்னனும் உண்மையை அறிந்து கொண்டு  துறவறம் பூண்டு பத்திரகிரியானார்.


திருவொற்றியூர் சிறப்பு 


பத்திரகிரியாரை  திருவிடைமருதூருக்கு போகும்படி பணித்து தாம் பல தலங்களை வணங்கித் திருவிடைமருதூரை அடைந்தார்.  அரசியும் இறந்து மறு பிறவியில் நாயாகப் பிறந்து பாத்திரகிரியாரிடம் வந்து சேர்ந்தது. திருவிடை மருதூரின் கீழ் கோபுர  கோபுர வாசலில் அமர்ந்து ஒரு திருவோட்டில்  பிச்சை எடுத்து பத்திரகிரியார் தாமும் உண்டு தம் மேல் கோபுர வாசலில் அமர்ந்திருந்த குருவுக்கும் உணவிட்டு தன்னை சுற்றிவந்த நாய்க்கும் உணவிட்டு வந்தார்.
ஒரு நாள் ஒரு சித்தர் வந்து பட்டினத்தாரிடம் பிச்சை கேட்க  அவரோ சிரித்துக்கொண்டே, நானோ சந்நியாசி,  கீழ் கோபுர வாசலில் அமர்ந்திருக்கிறானே என்  சீடன் சம்சாரி ஒரு திருவோட்டையும், கூடவே ஒரு நாயையும் கூட்டிக்கொண்டு அலைகிறான். அவனிடம் சென்று கேளுங்கள் என்றார்.


                 


இதை சித்தர் மூலமாக அறிந்த  பத்திரகிரியார் சந்நியாசியாக மாறிய எனக்கு இந்த திருவோடும் நாயும் எதற்கு என்று திருவோட்டை தூக்கிப்போட்டு நாயின் மேல்  உடைக்கிறார் அதில் நாயும் இறந்து விடுகின்றது.   பத்திரகிரியாரும் சித்திரை மாதம் மக நட்சத்திரத்தில் இறைவனுடன் இரண்டறக் கலந்தார். இவ்வற்புதத்தைக் கண்ட பட்டினத்தார் சிவச‘ந்நிதியடைந்து “அருட்கடலே, அடியேனை இவ்வுலகில் இன்னும் இருத்தியிருப்பதின் குறிப்பு என்னவோ அறிகிலேன்” என்று முறையிட்டார்.


இறைவனும் திருவுளம் கொண்டு காட்சி தந்து ஒரு பேய்க்கரும்பை அளித்து எம் அன்பே! வருந்தாதே! எத்தலத்தில் பேய்க்கரும்பு இனிக்கிறதோ அங்கே முக்தி என்று அருள் செய்தார். பட்டினத்த்தாரும் திருக்கச்சி சென்று

கல்லாப் பிழையும் கருதாப் பிழையும் கசிந்துருகி
நில்லாப் பிழையும் நினையாப் பிழையும்நின் அஞ்செழுத்தைச்
சொல்லாப்பிழையும் துதியாப் பிழையும் தொழாப்பிழையும்
எல்லாப் பிழையும் பொறுத்தருள்வாய் கச்சி ஏகம்பனே.


என்று பல பாடல்களினால்  பாடிப்பரவி பின்னர் பல தலங்களுக்கு  சென்றார் எங்கும் பேய்க்கரும்பு இனிக்கவில்லை. நிறைவாக திருவொற்றியூர் தலத்தை அடைந்து தியாகராஜப்பெருமானையும், வடிவுடையம்மனையும் பணிந்தார் திருவொற்றியூரில் பேய்க்கரும்பு இனித்ததால் தனக்கு முக்தி விரைவில் சித்திக்கும் என்று உணர்ந்தார்.


பட்டினத்தடிகள் கடலோரம் சென்று அங்கே  மாடு மேய்க்கும் சிறார்களோடு கூடி விளையாடிக்கொண்டிருக்கும் வேளையில்  அதியற்புத ஆடல்கள் பல புரிந்தார். ஒரு நாள் அவர் ஒரு குழியிலறங்கி மறைந்தார்.  அவரைக் காணோம், எங்கு சென்றார்? என்று தேடுகையில்  சுவாமிகள் ஒரு மணற்குன்றின் மேல் தோன்றினார்.  இங்ஙனம் அடிகள் சிறார்களுக்கு  ஆடல் காட்டி ஒரு முறை குழியிலிறங்கி உட்கார்ந்து சிறுவர்களை நோக்கி “ நண்பர்களே என் மீது ஒரு சாலைக் கவிழுங்கள் (சால் என்பது சலவைத் தொழிலாளர்கள் பயம் படுத்தும் ஒரு பெரிய அண்டா)  என்றார், சிறுவர்களும் அவ்வாறே செய்தனர். சிறிது நேரம் கழித்து சாலைப் புரட்டிப் பார்த்தபோது  அவ்விடத்தில்  அவரது திருமேனி (ஸ்தூல தேகம்) மறைந்து, லிங்க வடிவமாக காட்சி அளித்தார்.  பரமனை அவர்

மாதா உடல் சலித்தாள்
    வல்வினையேன் கால்சலித்தேன்
வேதாவுங் கைசலித்து
    விட்டானே – நாதா
இருப்பையூர் வாழ்சிவனே
    இன்னமோர் அன்னை
கருப்பையூர் வராமற் கா!  

- என்று வேண்டியபடி இறைவனுடன் இரண்டறக் கலந்தார். தாயுமான சுவாமிகள் “பாரனைத்தும் பொய்யெனவே பட்டினத்துப் பிள்ளைப் போல் – ஆருந்துறக்கையறிது”  என்று பாடியபடி முற்றுந்துறந்து பரமனை எண்ணி எண்ணி அவன் திருவடிகளில் இரண்டறக் கலந்து, பரமனின் அருவுருவ திருமேனியாகவே மாறினார்.


விமானத்தில் பட்டினத்தார் 


வங்கக் கடல் அலைகள் தாலாட்ட திருவொற்றியூர் கடற்கரையில் அவர் ஆலயம் அமைந்துள்ளது.  முன்னர் எளிமையான ஓட்டு கட்டிடமாக இருந்தது. தற்போது கற்றளியாக மாறியுள்ளது. கவின்மிகு விமானம் ஒன்றும் அமைத்துள்ளனர். எதிரே ஒரு தியான மண்டபமும் புதிதாக அமைத்துள்ளனர். சதுர பீடத்தில் லிங்க வடிவில் அருள் பாலிக்கின்றார்.  நாகாபரணம் சார்த்தியுள்ளனர். விநாயகர் முருகன், நந்தியெம்பெருமான், சண்டிகேஸ்வரரும் உடன் அருள்கின்றனர். 

இவரை வேண்டிக்கொள்ள அறிவான குழந்தைகள் பிறக்கும், உலக ஆசை மறியும் என்பது ஐதீகம். இவர் முக்தியடைந்தது ஆடி மாதம் பௌர்ணமியையொட்டிய உத்திரட்டாதி நட்சத்திரம் என்பதால் ஒவ்வொரு மாத உத்திரட்டாதி நட்சத்திரத்தன்றும், வியாழக்கிழமைகளிலும் சிறப்பு பூசைகள் நடைபெறுகின்றன.


சண்டிகேஸ்வரர் சன்னிதி


ஆடி உத்திராடத்தன்று சிறப்பு அபிஷேக ஆராதணை சொற்பொழிவு, அன்னதானம் நடைபெறுகின்றது. மஹா சிவராத்திரி இரவில் நான்கு கால சிறப்பு அபிஷேக ஆராதனையும் அன்னதானம் நடைபெறுகின்றது. ஐப்பசி பௌர்ணமியன்று அன்னாபிஷேகமும், பிரதோஷ பூஜையும் சிறப்பாக நடைபெறுகின்றது. சமயம் கிட்டும் போது திருவொற்றியூர் சென்று பட்டினத்தாரை வணங்கி வாருங்கள். 


Friday, September 8, 2017

நவ துவாரகை யாத்திரை - 21

கோண்டால் சுவாமி நாராயண் ஆலயம் 

 இத்தொடரின்  மற்ற  பதிவுகள் 

    1   2   3   4   5     6    7    8    9    10    11    12 

   13    14   15   16   17   18   19   20    21  22   23  24   25   26   27   28




கிர் காடுகளிலிருந்து மதிய நேரத்திற்கு அகமதாபாத் நோக்கி  புறப்பட்டோம்  வழியில் ஜெத்பூர் (Jetpur) என்ற ஊரில் பருத்தி சேலைகள் கிடைக்கும் என்று வண்டி ஓட்டுனர் ஒரு கடையில் நிறுத்தினார். இப்பகுதி கரிசல் மண் பூமி என்பதால் பருத்தி அருமையாக விளைகின்றது. எனவே இவ்வூரில் வீட்டுக்கு வீடு சேலை நெய்யும் தறிகள் மற்றும் ஆலைகள் அதிகம் என்பதால் சேலை விற்பனை  நிலையங்களும் அதிகமாக உள்ளன. அங்கு இல்லத்தில் உள்ளவர்களுக்காக சில சேலைகளை தேர்வு செய்து வாங்கிக்  கொண்டு பயணத்தை தொடர்ந்தோம்.

மாலை கோண்டால் (Gondal) என்ற ஊரில் உள்ள சுவாமி நாராயண் ஆலயத்திற்கு சென்றோம். தலைகர் டில்லியில் உள்ள அழகிய அக்ஷார்தாம் என்றால் அனைவரும் அறிவோம். அவ்வாலயத்தின்  சுவாமி  நாராயண் அவர்கள் இங்கு குஜராத்தில் மிகவும் பிரசித்தம். இச்சுவாமியின்   சீடர்கள் உலகம் முழுவதும் பரவியிருந்தாலும் அதிகமான பக்தர்கள் குஜராத்தில்தான் உள்ளனர். இவர்களும் வைணவர்கள், விசிஷ்டாத்வத சித்தாந்தத்தை பின் பற்றுபவர்கள். தர்மம். அஹிம்சை, பிரம்மச்சரியத்தை கடுமையாக கடைப்பிடிப்பவர்கள். ஸ்ரீகிருஷ்ணருக்கு தூய மனதுடன் சேவை செய்வதால் முக்தி அடையலாம் என்பது இவர்களது கொள்கை. பொதுவாகவே இவர்கள் ஆலயங்கள் நுணுக்கமான கற்சிற்பங்களைக் கொண்ட ஆலயங்களாகவே இருக்கும் இவ்வாலயமும் அவ்வாறே அருமையாக அமைந்திருந்தது.  மிகப்பெரிய ஆலயம் பளிங்குக் கற்களைக் கொண்டு நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் ஆலயம் அருமையாக அமைந்திருந்தது. 






பின்னர் ராஜ்கோட் வழியாக அகமதாபாத் வந்தடைந்த போது இரவாகிவிட்டது. இன்றைய தினம் மிகவும் நீண்ட பயணமாக அமைந்தது. வண்டி ஒட்டுனர் இராஜஸ்தான் செல்ல ஏதுவாக அகமதாபாதின் வட்டப்பாதையில் (Ringroad),  மோகன் இன் (Mohan Inn) என்ற தங்கும் விடுதிக்கு அழைத்துச் சென்றார்,  இரவு அங்கு தங்கினோம். பொதுவாக வெளி மாநிங்களில் பயணம் செய்யும் போது அங்ங்கு கிடைக்கும் உணவிற்கு  ம்மை ஒப்புக்கொடுத்து விடுவது அவசியம், இவ்வாறே இது வரை செய்தோம் ஆனால் இன்று எதிரே ஒரு உடுப்பி உணவகம் இருந்ததை கவனித்தோம் எனவே அங்கு சென்று தோசை சாப்பிட்டோம் மறு  நாள் இராஜஸ்தானத்தில்  யாத்திரை எவ்வாறு அமைந்தது என்று அறிந்து கொள்ள தொடர்ந்து  வாருங்கள் அன்பர்களே.

                                            நவ துவாரகை யாத்திரை தொடரும் . . . 

Monday, September 4, 2017

நவ துவாரகை யாத்திரை - 20

கிர்க் காடுகள்

 இத்தொடரின்  மற்ற  பதிவுகள் 

    1    2   3   4   5     6    7    8    9    10    11    12    13 


   14    15   16   17   18   19   21    21  22   23  24    25   26   27   28

தங்கிய விடுதி 

மது பாரத நாட்டில் குஜராத் மாநிலத்தில் உள்ள கிர் காடுகளில் மட்டுமே காட்டிற்கு அரசன் என்று அழைக்கப்படும் சிங்ங்கள் உள்ளன என்பது இம்மாநிலத்தின் தனி சிறப்பாகும் எனவே இந்த யாத்திரையின் போது கிர்  சிங்ங்களின் சரணாலயத்திற்கு சென்றோம். உலகில் ஆசிய சிங்ங்கள் குஜராத் மாநிலத்தின் இக்கிர்காடுகளில் மட்டுமே உள்ளன.   
கொடினாரிலிருந்து அகமதாபாத் செல்லும் போது முடிந்தால் பாவ்கர்(Bhavnagar) அருகே   கடலின் உள்ளே அமைந்துள்ள கடல் உள் வாங்கும் சமயத்தில்  அதாவது மதியம் சுமார் 3 மணியிலிருந்து இரவு சுமார் எட்டு மணி வரை  மட்டுமே சென்று தரிசிக்கக்கூடிய, மஹாபாரதப்போரில் தங்கள் சகோதரர்களான கௌரவர்களைக் கொன்ற களங்கம் தீர  பாண்டவர்கள் பிரதிஷ்டை செய்த   நிஷ்களங்கேஷ்வரரை தரிசிக்கலாம் என்று ஒரு திட்டம் வைத்திருந்தோம்.   அதை வண்டி ஓட்டுரிடம் கூறிய போது அங்கு சென்று மறுபடியும் கிர் காடுகள் வருவதென்றால் பின் நோக்கி வர வேண்டும் மேலும் அகமதாபாத் செல்வதற்கு அது  சுற்றுப் பாதை என்பதால் ஒரு முழு  நாள் வேண்டும் என்றார்.  எனவே அத்திட்டத்தை கை விட்டு நேராக கிர் காடுகளுக்கு  வண்டியை செலுத்துமாறு  கூறினோம்.

                மான்  கூட்டம் 

காட்டுப் பகுதியில் நுழைய அனுமதி சீட்டு பெற வேண்டும். மிருகங்களின் டமாட்டம் இருப்பதால் அதிக வேகமாக செல்ல வேண்டாம், ஒலிப்பான்களை பயன்படுத்த வேண்டாம் அமைதியாக செல்ல வேண்டும் என்று அறிவுறுத்துகின்றனர். மெதுவாக காட்டிற்குள் பயணம் செய்து  காட்டிலாகா அலுவலகம் அருகில் சென்றோம். முன்னரே தங்கும் இடத்தை பதிவு செய்திருக்கவில்லையாதலால் அங்கு சென்றபின் காட்டின் உள்ளே உள்ள  சுக்சாகர் கிர் ரிசார்ட் (Sukhsagar Gir Resort)  என்ற விடுதியில் தங்கினோம்.







      கடா மான்                                                     சண்டையிடும் மான்கள் 

மறு நாள் காட்டிற்குள் சென்று மிருகங்களை பார்த்து வருவதற்காக ஜீப்பில் முன்பதிவு செய்ய காட்டிலாக்கா அலுவலகம் சென்றோம் ஆனால் சீட்டுகள் முழுவதும் முதலிலேயே பதிவாகி இருந்தது. தினமும் காலை 6 மணி, மதியம் 2:30 மணிக்கு ஒரு ஜீப்பில் அதிக பட்சம் ஆறு பேர் என்று மொத்தம் 15 பேருக்கு மட்டுமே காட்டுக்குள் செல்ல அனுமதி சீட்டு வழங்குகின்றனர். மொத்தம் 3 மணி நேரம் காட்டுக்குள் பயணம் செய்விக்கின்றனர். சிங்ங்கள் கண்ணில் பட்டாலும் படலாம் பல சமயம் கண்ணில் படாமலும் போகலாம். முதலிலேயே இணையதளம்  மூலம்  முன் பதிவு செய்திருக்க முடியும், அடியோங்கள் இணக்கமான யாத்திரையாக திட்டமிட்டதால் நாள் பிரகாரம் யாத்திரையை திட்டமிட்டிருக்கவில்லை எனவே முன் பதிவு செய்யவில்லை.

கிளம்பியது சிங்கம் 

காட்டிற்குள் செல்ல முடியாமல் போனதே என்று சிறிது ஏமாற்றமாக இருந்தது. அதற்கு அவர்கள் 15 கி.மீ ஒரு இயற்கை விலங்கியல் பூங்கா உள்ளது அங்கு சென்றால் தாங்கள் சிங்ங்களை காண முடியும் என்று கூறினார்கள் எனவே மறு  நாள் அந்த Interpretation Zone  செல்லலாம் என்று முடிவு செய்து விடுதி திரும்பி கத்யவார் சமையலின் டோக்ளா (கடலை மாவில் நீராவியில் வேகவைக்கப்படும் ஒரு சிற்றுண்டி) சேவ் டமேடார் (தக்காளியும் ஓமப்பொடியும் சேர்ந்த ஒரு கறி) பேகன் பராத்தா (கத்திரிக்காய் கறி) பாஜ்ரா பாக்ரி (சோளத்தில் செய்யப்பட்ட ஒரு வடை) சுவைத்தோம் நன்றாக உறங்கினோம்.


மறு நாள் காலை எழுந்து காட்டின் இடையே பறவைகளின் கீசு, கீசு பேசிய பேச்சரவத்தை கேட்டோம். சூரிய உதயத்தை இரசித்தோம். பின்னர் சிங்ங்களை காண விலங்கியல் பூங்கா (Interpretation Zone) சென்றோம். ஒரு பேருந்து மூலம் அச்சரணாலயத்தை சுற்றிப் பார்க்க அழைத்து சென்றனர். கட்டணமாக ரூ 75/- வசூலித்தனர்.  பாதையின் இரு புறமும் புற்கள் எரிக்கப் பட்டிருந்ததை பார்த்தோம். மிருகங்களை தெளிவாகப் பார்க்க இவ்வாறு செய்திருக்கலாம் என்று நினைத்தோம். வண்டி ஓட்டுனரிடம் கேட்ட போது இல்லை,  புற்கள் காய்ந்து விட்டதால்  பேருந்தில் செல்பவர்கள் பீடித்துண்டு போன்றவற்றை வீசினால் தீப்பிடித்து விடும் என்பதால் முன்னெச்சரிக்கையாக   காட்டுத்தீ ஏற்படாமல் இருக்க இவ்வாறு சரணாலய அதிகாரிகளே சுமார் 10 அடி தூரத்திற்கு இவ்வாறு  தீயிடுவதாக கூறினார். சுமார் அரை மணி நேரம் பயணம் செய்திருப்போம் மான்கள் மட்டுமே கண்ணில் பட்டன, புள்ளி மான்கள் கூட்டம் கூட்டமாக  புல் மேய்ந்து கொண்டிருந்தன. இரண்டு நீல்காய் ஆண் மான்கள் சண்டையிட்டுக் கொண்டிருந்தன.



வண்டி ஓட்டுநர் செல் பேசி மூலம் மற்ற வண்டி ஒட்டுநர்களிடம் பேசி எப்பகுதியில் சிங்ங்கள் உள்ளன என்று விசாரித்து அப்பக்கம் சென்றார் ஒரு மரத்தின் நிழலில் இரு சிங்ங்கள் ஓய்வெடுத்துக் கொண்டிந்தன. இரண்டும் பெண் சிங்கங்கள் ஒன்றுக்கு மூன்று குட்டிகள், இன்னொன்றுக்கு இரண்டு குட்டிகள்  உள்ளன என்றார்.   சிறிது நேரம் சென்ற பின் அவற்றுள் ஒன்று எழுந்து கம்பீரமாக நடந்து வர ஆரம்பித்தது. வண்டியில் இருந்த அனைவரும் ஆர்வத்துடன் தங்களுடைய புகைப்படக் கருவியை அப்பகுதிக்கு திருப்பி அதை புகைப்படம் பிடிக்க ஆரம்பித்தோம். வண்டு ஓட்டுனர் சத்தம் ஏற்படுத்தாமல் இருங்கள் இல்லாவிட்டால்  சிங்கம் திரும்பிச் சென்று விட வாய்ப்புள்ளது என்றார். எனவே அனைவரும் அமைதியாக புகைப்படம் மட்டும் எடுத்துக்கொண்டிருந்தோம்.

கம்பீர நடை 

கம்பீரமாக நடந்து வந்த சிங்கத்தைப் பார்த்த போது ஆண்டாள் நாச்சியார் தனது திருப்பாவையில் பாடிய 
மாரிமலை முழஞ்சில் மன்னிகிடந்துறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத்தீவிழித்து
வேரிமயிர்பொங்க எப்பாடும்பேர்ந்துதறி
மூரிநிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டு
போதருமாபோலே நீபூவைப்பூவண்ணா! உன்
கோயில்நின்று இங்ஙனேபோந்தருளி கோப்புடைய
சீரிய சிங்காசனத்திருந்து யாம்வந்த
காரியமாராய்ந்தரு ளேலேலோரெம்பாவாய். என்னும் பாசுரம் தான் மனதில் தோன்றியது..

பாதையை நெருங்கி விட்டது

சிங்கம் வண்டி நின்றிருந்த பாதையை கடந்து அருகில் இருந்த தண்ணீர் தொட்டியில் சென்று நீர் அருந்த ஆரம்பித்தது. சிறிது நேரத்தில் இன்னுமொரு சிங்கமும் அதனுடன் சேர்ந்து கொண்டது. வண்டி  ஒட்டுநரிடம் விசாரித்த போது இது ஒரு விலங்கியல் பூங்கா இரண்டு ஆண் சிங்ங்கள்,  இரண்டு பெண் சிங்கங்கள்  குட்டிகளுடன் உள்ளன. இவற்றுடன்  சிறுத்தைப் புலிகளும்  உள்ளன இரவில் கூண்டில் அடைக்கப்பட்டிருக்கும் இவை பகலில் சுதந்திரமாக் சுற்ற அனுமதிக்கப்படுகின்றன. பசி எடுக்கும் போது இவை கூண்டிற்கு வந்து விடும். எனவே இப்பூங்காவில் சிங்ங்களை சுற்றுலா பயணிகள் சிங்ங்களை காண வாய்ப்பு அதிகம் என்றார்.   மையத்தில் இருந்த கூண்டுகளுக்கு அருகில் அழைத்துச் சென்றார் சிங்ங்களுடன் ஒரு சிறுத்தைப் புலியும் இருந்தது. புள்ளி மான்கள் மற்றும் கடாமான்கள்  மயில்கள், குயில்கள் மற்றும் பல விதப் பறவைகளை கண்ணுற்றோம்.

நீர்  அருந்துகின்றன

அச்சிங்ங்களைப் பார்த்தபோது அந்தியம் போதிலரியுருவாகி அரியையழித்தவனை
பந்தனை தீரப்பல்லாண்டு பல்லாயிரத்தாண்டென்று பாடுதுமே. என்று சிங்கப்பெருமானை நினைத்து வணங்கினோம். பின்னர் பூங்காவின் விற்பனை நிலையம் சென்றோம் தேன், மரத்தால் செய்யப்பட்ட கைவினைப் பொருட்கள், சிங்கப் படத்துடன் கூடிய பனியன்கள், தேநீர் கோப்பைகள், காடுகளைப் பற்றிய புத்தகங்கள் ஆகிய உள்ளன. அருகில் இரண்டு சந்தன மரங்கள் இருந்தன. இவ்வாறு சிங்கங்களைப் பார்த்த மகிழ்ச்சியில் அகமதாபாத் நோக்கி புறப்பட்டோம்.

குரங்குகள் கண்ணில் படவில்லை. இலந்தை மரங்கள், முட்புதர்கள் அதிகமாகக் காணக் கிட்டின. நெடிதுயர்ந்த புல் காய்ந்து கிடந்தது.  காட்டைக் கடந்து தேசிய நெடுஞ்சாலையை அடைந்தோம். அகமதாபாத் நோக்கி பயணம் செய்தோம்.

பிஸ்கட் சாப்பிடும் அணில் 
சந்தன மரம் 

கிர்க்காடுகளிலிருந்து  அகமதாபாத் பயணம் எப்படி இருந்தது என்று அறிந்து கொள்ள தொடர்ந்து வாருங்கள் அன்பர்களே. 
                                                                                                         நவ துவாரகை யாத்திரை தொடரும் . . . 

Friday, September 1, 2017

நவ துவாரகை யாத்திரை -19


கொடினார் மூலதுவாரகை

 இத்தொடரின்  மற்ற  பதிவுகள்  

   1    2   3   4   5     6    7    8    9    10    11    12  

  13    14    15   16   17   18    20    21    22   23  24    25   26   27   28



துவாரகாதீசன் 

நவதுவாரகைகள் எவை  என்று கூகுளில் அடியேன் தேடிய போது மூலதுவாரகை கொடினாரின் அருகில் உள்ள அம்புஜா சிமெண்ட் தொழிற்சாலையின் அருகில் உள்ளது என்று படித்தேன்.  முன்னரே கூறியது போல குஜராத்தில் மூன்று தலங்கள் மூலதுவாரகை என்று போற்றப்படுகின்றன.  துவாரகையில் இருந்து சோமநாத் வரும் வழியில் விசாவாடாவில் அடியோங்கள்  ஒரு முக்தி துவாரகையை தரிசித்தோம்.


குழுவினர் திரு.படேல் அவர்களுடன் 

வண்டி ஓட்டுநருடன் 

திரு.M.R படேல் அவர்களின் இளைய மகன் மற்றும் மருமகள், இந்த கொடினார்  மூல துவாரகைக்கு அருகில் உள்ள அம்புஜா சிமென்ட் ஆலையில்தான் பணி புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்று அவர்களுடைய தொலைப்பேசி எண்ணை அளித்திருந்தார் எனவே அவரை அழைத்து பேசினோம். அவர் எங்களை ஆலைக்கு அருகில் வந்தவுடன் அழையுங்கள் நானே உங்களை மூல துவாரகைக்கு அழைத்துச் செல்கின்றேன் என்று கூறினார்.
கலங்கரை விளக்கம் ??? 

தற்போது அடியோங்கள் பயணம் செய்த பாதை மாநிநெடுஞ்சாலைதான்,  எனவே அதிக போக்குவரத்து இருக்கவில்லை. வழியில் பல பறவைக் கூட்டங்களை கண்ணுற்றோம். இப்பகுதியில் அதிகம் மயில்களை கண்டோம்.  பிராச்சியில் இருந்து கொடினார் சுமார் 25 கி.மீ தூரத்தில் உள்ளது. எனவே ஒரு மணி நேரத்தில் கொடினாரின் அம்புஜா சிமென்ட் ஆலையை அடைந்தோம்.

மூல துவாரகை ஆலயம் (மிஞ்சியது)

சிதிலமடைந்த ஒரு விஷ்ணு சிலை 

திரு.படேல் அவர்களின் புதல்வர்  எங்களுக்காக காத்துக்கொண்டிருந்தார்.  ஆலைக்கு எதிரே கடற்கரையில் சுமார் எட்டு கி.மீ தூரத்தில் இவ்வாலயம் அமைந்துள்ளது. இவர்களின் கப்பல் தளம் இவ்வாலயம்  அருகில் அமைந்துள்ளதால் இவர்களின் தனிப் பாதை வழியாக இவர் அடியோங்களை அழைத்துச் சென்றார். பொதுவாக  8 சக்கரங்கள் கொண்ட பெரிய சரக்கு  லாரிகள் சிமென்ட் ஏற்றிக் கொண்டு சென்று கொண்டும் வந்து கொண்டும் இருக்குமாம். எனவே பொது மக்களுக்கு இப்பாதையில் செல்ல அனுமதி இல்லை சுற்றுப்பாதையில் செல்லவேண்டும் தூரம் சற்று  அதிகம் என்றார். இவர் முன்னரே இவ்வாறு செல்லப்போகிறோம் என்று கூறியிருந்ததால் பாதையில் போக்குவரத்தை சிறிது நேரம் குறைத்திருந்தனர். ஆகவே அடியோங்கள் விரைவாக மூலதுவாரகையை அடைந்தோம்.



 ஸ்ரீ கிருஷ்ணர் நீராடிய குளம் மாலைப்பொழுதில் 


மூலத்துவாரகையில் தற்போது கர்ப்பகிரகம் மட்டுமே,  அதுவும் பாழடைந்த நிலையில் எஞ்சியுள்ளது. விமானம் முற்றிலுமாக சிதைந்து விட்டது. சுற்றுப்பாதையும் சரியாக இல்லை.   சபா மண்டபம் இருந்ததற்கான சின்னங்கள் உள்ளன.  ஒரு பூசாரி இருக்கின்றார். அவர் தரிசனம் செய்து வைத்தார். கர்ப்பகிரகத்தின் உள்ளேயே செல்ல அனுமதி அளித்தார். உள்ளே சென்று சிறிது  நேரம் அமர்ந்து தியானம் செய்தோம். மனதில் அப்படியொரு அமைதி.
சிட்டுக்குருவிகள்

நூற்றுக்கணக்கான கடற்பறவைகள் 

சதுர்புஜங்களில் கதை, சக்கரம், சங்கு, அட்ச மாலை தாங்கி எழிலாக கரு நீல வண்ணன், காயா மலர் வண்ணன், கார் முகில் போல் வண்ணன், கருங்கடல் முந்நீர் வண்ணன், கடல் வண்ணன், நீல முகில் வண்ணன், நீரார் முகில் வண்ணன் என்று பலவாறெல்லாம் ஆழ்வார்கள் அனுபவித்து பாடியபடி நீல வண்ணத்தில் நின்ற கோலத்தில்  சேவை சாதிக்கும்
பல்லவம் திகழ் பூங்கடம்பேறி அக்காளியன் பணவரங்கில்
ஒல்லை வந்திறப்பாய்ந்து அருநடஞ்செய்த உம்பர் கோனை அருமையாக சேவித்தோம். மலர் மாலைகள் எதுவும் சூடியிருக்கவில்லை ஆனால் பட்டு பீதாம்பரத்தில் சேவை கிட்டியது. அடியோங்கள் எடுத்துச் சென்றிருந்த உலர் பழங்களை படைத்தோம்.  பூசாரி அவர்கள் எம்பெருமான் எந்தவித மாற்றமும் செய்ய வேண்டாம் என்று பணித்த்தால் அப்படியே பராமரித்துக்கொண்டு வருகிறோம் என்று கூறினார்.

மதுராவில் இருந்து துவாரகை நோக்கி வந்த போது ஸ்ரீகிருஷ்ணர் இங்கு தங்கினாராம். அதற்கு பிறகு கடல் வழியாக துவாரகைக்கு சென்றார் எனவே இத்தலம் மூலதுவாரகை ஆனது என்றார். ஸ்ரீகிருஷ்ணர் இங்கு தங்கிய போது குளித்த இடம் அர்த்த சந்திர வடிவில் கிருஷ்ண குண்ட் என்று அழைக்கப்படுகின்றது என்று காண்பித்தார்.  ஆலயத்திற்கு பின் பக்கம் கடல் அவ்வாறே இருந்தது அருகில் உள்ள கடற்பகுதியில் அலைகள் ஆர்பரிக்க இக்குளப் பகுதியில் மட்டும் அலைகள் குறைவாக இருந்தது அந்தி சூரியன் மறையும் வேளை என்பதால் சூரியக் கதிர்கள் பொன் போல மின்ன அக்குளப்பகுதி பொன் குளம் போல காட்சி தந்தது. அன்று ஸ்ரீகிருஷ்ணன் நீராடிய போது இவ்வாறுதான் இருந்திருக்கும் என்று கற்பனை செய்து பார்த்துக்கொண்டோம்.  அருகில் ஒரு பாழடைந்த வட்ட வடிவ கட்டிடம் உள்ளது. ஒரு காலத்தில் கலங்கரை விளக்கமாக இருந்திருக்கலாம். கடலுக்கடியில்  அகழ்வாராய்ச்சிகள் பழைய கல் நங்கூரம் கிட்டியுள்ளது. அங்குள்ள பூசாரிக்கு அம்புஜா நிறுவனத்தினரே சம்பளம் வழங்குகின்றனர். அவர் வசிப்பதற்கு ஒரு இல்லமும் கட்டிக்கொடுத்துள்ளனர்.

திரும்பி வரும் போது திரு. படேல் அவர்கள் பொதுவாக யாரும் இத்துவாரகைக்கு வருவதில்லை, அதுவும் தமிழர்களாகிய அடியோங்கள் இங்கு வந்தது ஆச்சரியமளிக்கின்றது என்றார். இவர் தென்காசியில் பள்ளிப் பாடம் பயின்றவர் என்பதால் தமிழிலேயே உரையாடினார். மற்ற பக்தர்கள் சுற்று வழியாக வந்து செல்கின்றனர். அருகில் உள்ள மீனவ கிராமத்தில் சில ஆலயங்கள் புதுப்பொலிவுடன் விளங்கின. செல்லும் வழியில் பல் வேறு விதமான பறவைக் கூட்டங்களைக் கண்ணுற்றோம். காலை வேளையில் கிராமத்தில்  மீன் சந்தை சமயத்தில் இன்னும் அதிக அளவில் பறவைகளைக் காணலாம் என்றார்.

மீனவர் கிராமத்து கோவில்

இவர்கள் ஆலையில் உற்பத்தி ஆகின்ற சிமென்ட் அப்படியே லாரிகளில் கொண்டு வரப்பட்டு கப்பல்களில் இங்கு நிரப்பப்படுகின்றன. பின்னர் அக்கப்பல்கள் பெரிய துறைமுகங்களான கொச்சி, ஸ்ரீலங்கா, சூரத், கொல்கத்தா  ஆகிய இடங்களுக்கு செல்கின்றன. அங்கு பின்னர் பைகளில் அடைக்கப்பட்டு பல் வேறு ஊர்களுக்கு சிமென்ட் மூட்டைகளாக அனுப்பப்படுகின்றது என்று கூறினார்.

மூலதுவாரகையில் குன்றால் மாரி தடுத்து உகந்த காளையை, கானார் கரி கொம்பது ஒசித்த களிற்றை, கோலால்  நிரை மேய்த்த எங்கோவலர் கோவை திவ்யமாக தரிசித்த பின் அம்புஜா சிமென்ட் ஆலைக்கு திரும்பி வந்தோம் அடியோங்களை தன் இல்லம் அழைத்துச் சென்று குஜராத்தின் பாஃடா என்னும்  காரவகை மற்றும் தேநீரும் கொடுத்து உபசரித்தார். ஆலையின் குடியிருப்புப் பகுதியில் அமைந்துள்ள இராதா கிருஷ்ணர் ஆலயத்திற்கு அழைத்துச்சென்றார். அருமையான அமைதியான சுழலில் ஆலயம் அமைந்திருந்த்து. குழலூதும் கண்ணன் இராதையுடன் மந்தகாச புன்னகையுடன் அருமையாக சேவை அளித்தான். அம்பாள் சன்னதியும் உள்ளது. ஆலயத்தை சுற்றிலும் மரங்கள், ஆரத்து சேவித்தோம், பிரசாதம் சுவீகரித்துக் கொண்டு அவருக்கு அருமையாக தரிசனம் செய்து வைத்ததற்கு ன்றி கூறி புறப்பட்டோம்.

  

இவ்வாறு குஜராத் மாநிலத்தில் உள்ள எட்டு துவாரைகள், இரு ஜோதிர் லிங்ங்களை  அவனருளால் மூன்று நாட்களில்  சேவிக்கும் பாக்கியம் கிட்டியது. அடுத்து இராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள நாத்வாரா துவாரகை செல்ல அகமதாபாத் புறப்பட்டோம். வழியில் அன்றைய இரவு மது பாரதத் திருநாட்டின் ஒரு தனித்தன்மை வாய்ந்த இடத்தில் தங்கினோம். அவ்விடம் என்னவென்று அறிந்து கொள்ள ஆவலாக உள்ளதா? தொடர்ந்து வாருங்கள் அன்பர்களே. 


                                                                                    நவ துவாரகை யாத்திரை தொடரும் . . . .