Friday, October 7, 2016

நவராத்திரி அம்மன் தரிசனம் -5

வெள்ளீச்சுரம் காமாட்சியம்மன் 
மஹா கௌரியாக காமதேனு வாகன கொலு 


நவராத்திரியின் ஐந்தாம் நாள் நாம் அம்பிகையை மாத்ருகா வர்ண ரூபிணியாக வணங்குகின்றோம். இவ்வாறூ சதாசக்ஷி என்று அன்னை ஆதி பரா சக்தியை ஆராதிக்க பொருளாதார துன்பங்கள் நீங்கி இன்பம் பெறலாம்.

**************************


நவராத்திரியின் ஐந்தாம் நாள் அன்னையை ஆறு வயது குழந்தையாக பாவித்து காளிகா என்னும் கன்யாவாக வழிபடுகின்றோம். அன்னையை இவ்வாறு வழிபடுவதால் துன்பம் நீங்கும். இன்றைய ஸ்லோகம்

காளீகா லயதே ஸர்வம் ப்ரஹ்மாண்டம் ஸ சராசரம்

கல்பார்ந்தே ஸமயே யாதாம் காளீகாம்யஹம் ||

(அசையும் பொருள் அசையாப் பொருள் எல்லாவற்றையும் பிரளய காலத்தில் எந்த சக்தி சம்ஹாரம் செய்கிறதோ அந்தக் காளியாகிய சக்தியை வணங்குகிறேன்.)

*******************





நவராத்திரியின் ஐந்தாம் நாள் அன்னை நவதுர்கைகளில், அழகன் முருகனின் அன்னையாக ஸ்கந்தமாதாவாக வணங்கப்படுகிறாள். முறையற்ற தக்ஷனின் யாகத்தில் கலந்து கொண்ட தேவர்கள் அனைவரும் சூரபத்மனால் துன்புற்றனர். அந்த அசுர சக்தியை அழிக்க ஒரு தலைமகன் தோன்ற வேண்டியதால் சிவ பார்வதி திருமணம் நடந்தது. முருகனும் தோன்றினான்.

ஸ்கந்தமாதா அக்னி ஸ்வரூபமாக இருந்து உலகை காக்கின்றாள் . சிம்ம வாகனத்தில் தாமரையில் பத்மாசனமீட்டு அமர்ந்து ஒரு கரத்தில் ஸ்கந்தனை ஏந்திய வண்ணம், இருகரங்களில் தாமரையுடன், நான்காவது அருள் பொழியும் கரத்தோடு காட்சி தரும் ஸ்கந்தமாதாதேவி தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு சகல சௌபாக்கியங்களும் நல்குகிறாள் .

சிவபெருமான் ஆலகால விஷத்தை உண்ட போது தனது தளிரன்ன கரங்களினால் அவரது கண்டத்தை தடவி விடம் அங்கேயே தங்கச் செய்தவள் ஸ்கந்தமாதா துர்கா. அன்னை மஞ்சள் வர்ணத்தவளாக வணங்கப்படுகின்றாள். அம்பாளின் ஸ்லோகம்

ஸிம்ஹாஸநகதா நித்யம் பத்மாஞ்சிதகரத்வயா |
சுபதாஸ்து ஸதா தேவீ ஸ்கந்த மாதா யசஸ்விநீ ||

(பொருள்: சிம்மாசனத்தில் அமர்ந்து தனது கரங்களில் தாமரை மலரை ஏந்தியுள்ள ஸ்கந்தனின் அன்னையான ஸ்கந்தமாதா துர்கா அடியேனுக்கு எல்லா சுபங்களையும் வழங்கட்டும்.)


******************

சொர்ணாம்பாள் கன்யாகுமரியாக கொலு



****************

ஸ்ரீ கற்பகவல்லியம்மன் பதிகம் 

நடத்தையிலடக்கமும் இணக்கமும் வணக்கமுறு நற்குணமும் நற்செய்கையும் நலந்தரும் கல்வியும் செல்வமும் அதற்கான நல்லோரிடத்திலுறவும்

திடத்து மனமும் பொறுமையும் திறமையும் தருமசிந்தனையும் அதிநுட்பமும், தீனர்களிடத்தில் விச்வாஸமும், என்னும் அவர் தீப்பசி தணிக்க நினைவும்,

கடக்க அரிதான ஜனனக்கடல் கடந்து கதிகாண மெய்ஞானமோனக் கப்பலுந்தந்துதவி செய்து ரக்ஷித்துக் கடைத்தேற அருள் புரிகுவாய்

விடக்கடுமிடற்றினன் இடத்தில் வளரமுதமே, விரி பொழில் திருமயிலைவாழ் விரைமலர்க்குழல் வல்லி மரைமலர்ப்பதவல்லி விமலி கற்பகவல்லியே! (4)

பொருள்: அடக்கமான குணம், மற்றாறொரொடு இணங்கி வாழும் குணம், எல்லாரும் வணங்கத்தக்க நற்குணம், நல்ல செய்கைகள், கல்வி, செல்வம் ஆகியவை பெற நல்லோரிடதினில் உறவுதிடமான மனது, பொறுமை, எதனையும் முடிக்கும் ஆற்றல், தர்ம சிந்தனை, மிகுந்த விவேகம், வறியவர்களிடம் இரக்கம் அவர்களது பெரும்பசியை போக்க நினைப்பும், கடக்க முடியாத இந்த சம்சாரக்கடலைக் கடக்கும் ஞானம் என்னும்  கப்பலும் தந்து  அருள வேண்டும் அம்மா கற்பகவல்லியேஆலால விடம் உண்டு கறுத்த கண்டம் கொண்ட சிவபெருமானின் இடப்பாகம் கொண்ட  அமுதானவளே! சோலைகள் நிறைந்த  திருமயிலையில் கோயில் கொண்ட மணம் வீசும் மலர்களை அணிந்த சடையாளே! தாமரை மலர் பதத்தாளேபரிசுத்தமானவளே! கற்பகவல்லியே!   

முந்தைய பதிவு                                                                                                                                  அடுத்த பதிவு   


                                                                                                                                       அம்மன் அருள் தொடரும். . . . .. ... 

நவராத்திரி அம்மன் தரிசனம் -4

கற்பகவல்லி அம்மன் காமதேனு வாகனத்தில் 
மஹா கௌரியாக கொலு


நவராத்திரியின் நான்காம் நாள் அன்னை ஜகத் ஜனனியை சோடசாக்ஷரி என்னும் சுமங்கலிப் பெண்ணாக, சர்வ மங்கள மாங்கல்யையாக பூஜிப்பதால் கல்வி, ஞானம் பெருகும்.



பின்னழகு

நவராத்திரியின் நான்காம் நாள் அன்னையை ஐந்து வயது குழந்தையாக பாவித்து ரோகிணி என்னும் கன்யாவாக வழிபடுகின்றோம். அன்னையை இவ்வாறு வழிபடுவதால் கல்வி வளர்ச்சி உண்டாகும். இன்றைய ஸ்லோகம்

ரோஹயந்தீச பீஜாநி பிராக்ஜன்ம ஸஞ்சிதாநிவ யாதேவிஸர்வபூதானாம் ரோஹிணீம் பூஜயாம்யஹம் ||

(எல்லா ஜீவரசிகளின் பாவங்களையும் எந்தச் சக்தியினால் நிவர்த்தி செய்கிறாளோ அந்த சக்தியாகிய ரோகிணியை வணங்குகிறேன்.)

*********************


கூஷ்மாண்டா துர்கா

நவராத்திரியின் நான்காம் நாள் அன்னை நவதுர்கைகளில் , சூரிய மண்டலத்தின் நடுவில் அமர்ந்து கொண்டு இந்த புவனம் முழுவதற்கும் வெப்பத்தை வழங்கிக்கொண்டிருக்கும் கூஷ்மாண்டா துர்காவாக வழிபடுகின்றோம். இந்த பிரம்மாண்டம் முழுவதையும் சிருஷ்டிப்பவள் இவளால்தான்.

கமண்டலம், வில், அம்பு, தாமரை, அமிர்தகலசம், சக்கரம், கதை, ஆகியவைகளை ஏழு கரங்களில் ஏந்தியபடி எட்டாவது கரத்தில் எட்டு சித்திகள், ஒன்பது நிதிகள் அடங்கிய ஜப மாலையோடு, சிம்மத்தை வாகனமாகக் கொண்டு திவ்யமாகக் காட்சி கொடுக்கிறாள் அன்னை. தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு நோயற்ற வாழ்க்கையைக் கொடுத்து அருள் புரிகிறாள். எல்லாவற்றிக்கும் ஆதியாக ஊதா வண்ணத்தவளாக விளங்குகின்றாள் இந்த துர்கா.

அன்னை தன் சக்தி முழுவதையும் சூரியனுக்கு அளித்து சிருஷ்டியை துவக்குகிறாள் அன்னை.

ஸுராஸம்பூர்ண கலசம் ருதிராப்லுத மேவசம் |
ததாநா ஹஸ்த பத்மாப்யாம் கூக்ஷ்மாண்டா சுபதாஸ்துமே ||

என்பது கூஷ்மாண்டா துர்காவின் ஸ்லோகம் ஆகும்.

(தனது இரு தாமரைத் திருக்கரங்களில்   இரத்தம் நிரம்பிய இரு பூரண கலசங்களை ஏந்தி, சிருஷ்டியை ஸ்திதி  சம்ஹாரத்தை தனது கண் இமைப்பில் நடத்தும் கூஷ்மாண்டா தேவி அடியேனுக்கு எல்லா வளங்களையும் வழங்கட்டும். )

**********************



முண்டக கண்ணியம்மன் 
சரஸ்வதி அலங்காரம் 

*********************
ஸ்ரீ கற்பகவல்லியம்மன் பதிகம் 

பொய்வைத்த சிந்தை மடமங்கையர்கள் வாசனைப் பூங்குழலிலே நிழலிலேபொழியம்புபோலமிரு விழியம்பிலே பொடிப்பூச்சிலே கைவீச்சிலே

செய்தொப்பமிட்ட செப்பெனுமுலையிலே, துடிசிற்றிடையிலே, உடையிலே, தெட்டிலே, நந்நுதற் பொட்டிலே வெண்ணகைச் செம்பவள வாயிதழிலே,

பைவைத்த விடவரவமெனு நிதம்பத்திலே பாழறி வழிந்து மூழ்கிப் பரகதிக்கொரு தவிச்செய்கையிமிலாக் கொடும் பாதகனையாள்வதன்றோ

மெய்வைத்தகையானிடத்தில் வளரமுதமே, விரி பொழில் திருமயிலைவாழ் விரைமலர்க்குழல் வல்லி மரைமலர்ப்பதவல்லி விமலி கற்பகவல்லியே! (3)

பொருள்: பொய்யை மனதில் கொண்ட மங்கையர்களின் மணம் மிகுந்த  கரிய கூந்தல், அம்பு போன்ற கூரிய இரு  கண்கள், பொடிப்பூச்சு, ஒயிலான கை வீச்சு, மதர்த்த செப்புக்கலசம் போன்ற கொங்கைகள், உடுக்கை போன்ற இடை, அணிந்திருக்கும் ஆடைகள், நெற்றிப் பொட்டு, முறுவலிக்கும் செம்பவளம் போன்ற இதழ், விடம் கொண்டப் பாம்பைப் போன்ற அல்குல் ஆகியவற்றில் மூழ்கி அறிவிழந்து தடுமாறும், பரகதி அடைய நினையாத பாதகனை, என்று ஆள்வாய், அம்மா கற்பகவல்லியேமெய்யிற்கே இருப்பிடமான சிவபெருமானின் இடப்பாகம் கொண்ட  அமுதானவளே! சோலைகள் நிறைந்த  திருமயிலையில் கோயில் கொண்ட மணம் வீசும் மலர்களை அணிந்த சடையாளே! தாமரை மலர் பதத்தாளேபரிசுத்தமானவளே! கற்பகவல்லியே!   
  


முந்தைய பதிவு                                                                                                                                  அடுத்த பதிவு   


                                                                                                                            அம்மன் அருள் தொடரும். . . . .. ... 

Thursday, October 6, 2016

நவராத்திரி அம்மன் தரிசனம் -3

திருமயிலை வெள்ளீச்சுரம்   காமாட்சியம்மன்
 அன்ன வாகனக்கொலு 


ஒரு சாரார்  நவராத்திரியின் மூன்றாம் நாள்  ஆத்தாளை , அபிராம வல்லியை, அண்டமெல்லாம் பூத்தாளை, பதினைந்து வயது குமாரியாக, வழிபடுகின்றனர். இவ்வாறு அம்பிகையை வழிபட பகை அச்சம் விலகும்.



அன்னையை கன்னியாக வழிபடுபவர்கள் நவராத்திரியின் மூன்றாம் நாள் அன்னையை நான்கு வயது குழந்தையாக பாவித்து கல்யாணி என்னும் கன்யாவாக வழிபடுவதால் பகை ஒழியும்.

இன்றைய ஸ்லோகம்

கல்யாண காரிணீநத்யம் பக்தானாம் பூஜிதாம் பூஜயாமி |
சதாம் பக்த்யா கல்யாணீம் ஸர்வகாதமாம் ||

(பக்தர்களால் எப்போதும் பூஜிக்கப்பட்டு அவர்களுக்கு எந்தச் சக்தி மங்களத்தைச் செய்கின்றதோ, அந்தக் கல்யாணியாகிய சக்தியை வணங்குகிறேன்.)

****************


சந்த்ரகாந்தா துர்கா

நவராத்திரியின் மூன்றாம் நாள் அன்னை நவதுர்க்கைகளில் , முக்கண்களுடன் பிறைச்சந்திரனை தலையில் சூடியவளாக, புலி வாகனத்தில் பவனி வருபவளாக , சிவபெருமானை தவம் செய்து கைபிடித்த பின் அவரது ஆபரணமான சந்திரனை சிரசில் சூடிய சிவபத்னியாக சந்த்ரகாந்தா துர்காவாக வணங்கப்படுகின்றாள். அன்னை அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி. அன்னையில் சிரசில் சூடிய இந்த அர்த்த சந்திரன் அவள் முடியில் மணி போல விளங்குவதால் அன்னைக்கு இந்த திருநாமம். மஹா திரிபுரசுந்தரியாக பழுப்பு வண்ணத்தவளாக விளங்குகின்றாள் இந்த துர்கா.

சந்திரகாந்தக் கல் எப்படி சந்திரனின் குளுமையைத் தன்னுள் வாங்கிக் கொண்டு நீரைப் பொழிகின்றதோ அப்படியே அம்பாள் நம் வெம்மையைத் தன்னுள் வாங்கிக் கொண்டு குளுமையான கருணை நீரைப் பொழிகின்றாள். இங்கே வெம்மை என்பது நம் வினைகளைக் குறிக்கின்றது.


பிண்டஜப்ரவராரூடா சண்ட கோபாஸ்த்ரகைர் யுதா |
ப்ரஸாதம் தநுதே மஹ்யம் சந்த்ர கண்டேதி விஸ்ருதா ||

என்பது சந்த்ரகாந்தா துர்காவின் ஸ்லோகம் ஆகும்.

( ஆக்ரோஷமான புலி வாகனத்தில் பவனி வரும் சந்த்ரகாந்தா துர்கா அடியேனை காக்கட்டும். )


*********************


அருவி போன்று நீர் பின்புலத்தில் உள்ளதை கவனியுங்கள்



திருப்பைஞீலியில் அப்பருக்கு சிவபெருமான் 
அன்னமளித்த லீலை 

*****************
ஸ்ரீ கற்பகவல்லியம்மன் பதிகம் 

அத்துவித சித்த பரிசுத்தர்களிடத்தினிலடுத்திடர் தொலைப்பமென்றால் ஆசையெனு மூவகைப்பேய் பிடித்து ஆவேச மாட்டும் வகையல்லாமலே

தத்து பரியொத்தமனம் எத்தனை சொன்னாலது தன்வழியிலே யிழுத்துத் தள்ளுதே  பாழான கோபமுமடங்காது  தன்னரசு நாடு செய்யுதே

இத்தனைவிதச் சனியிலெப்படி வழிப்படுவதெப்படி பிழைப்பதம்மா இனியாகிலும் கடைக்கண் பார்த்து வினைதீர்த்து இணைமலர்ப்பதமருள் செய்குவாய்

வித்தகநுதற்கண்னிடத்தில் வளரமுதமே, விரி பொழில் திருமயிலைவாழ் விரைமலர்க்குழல் வல்லி மரைமலர்ப்பதவல்லி விமலி கற்பகவல்லியே! (2)

பொருள்: சீவனும் சிவனும் ஒன்று என்னும் அத்துவித உண்மையை உணர்ந்து  ஆசைகளை துறந்த மனத்தூய்மை கொண்டவர்களை அண்டி துன்பங்களில்  இருந்து விடுபடலாம் என்றால்,  மண் ஆசை, பொன் ஆசை, பெண் ஆசை எனும் மூன்று ஆசைகளும் அலைக்கழிப்பதல்லாமல், குதிரை போன்று தாவிப்பாயும் மனமானது எவ்வளவு அடக்கினாலும் தன் வழியிலே இழுத்துச் செல்கின்றது. கோபமானதும் அடங்காது என்னை வாட்டுகின்றது, இவ்வளவு துன்பங்களுக்கிடையில் அடியேன் எவ்வாறு மீள்வது, எப்படி பிழைப்பது? அம்மா  கற்பகவல்லியே உனது கடைக்கண் பார்வையால்  அடியேனின் துன்பங்களை தீர்த்து,  உனது திருவடிகளை அடையும் அருள் புரிவாய். சிறப்பாக நெற்றிக்கண்ணையுடைய சிவபெருமானின் இடப்பாகம் கொண்ட  அமுதானவளே! சோலைகள் நிறைந்த  திருமயிலையில் கோயில் கொண்ட மணம் வீசும் மலர்களை அணிந்த சடையாளே! தாமரை மலர் பதத்தாளேபரிசுத்தமானவளே! கற்பகவல்லியே!   

முந்தைய பதிவு                                                                                                                                              அடுத்த பதிவு   

                                                                                                                                                        அம்மன் அருள் வளரும் ......

Monday, October 3, 2016

நவராத்திரி அம்மன் தரிசனம் -2

திருமயிலை கற்பகாம்பாள்  அன்ன வாகனத்தில்
 கொலு மண்டபம் எழுந்தருளல் 


கொலு மண்டபம் எழுந்தருளும் கற்பகவல்லி 


ஒரு சாரார் நவராத்திரியின்  இரண்டாம் நாள் நாம் அம்பிகையை, அகிலாண்ட வல்லியை, நவாக்ஷரி என்னும் ஒன்பது வயது பெண்ணாக வழிபடுகின்றனர்.     இல்லத்தில்  அம்பிகையை இவ்வாறு வழிபட தானியம் பெருகும்.


கன்னியாக வழிபடும் போது நவராத்திரியின் இரண்டாம் நாள் அன்னையை மூன்று வயது குழந்தையாக பாவித்து த்ரிமூர்த்தியாக வழிபடுகின்றோம். அன்னையை இவ்வாறு வழிபடுவதால் தனதான்ய வளம் கிட்டும். இன்றைய ஸ்லோகம்

சத்வாதிபிஸ் திரிமூர்த்தியர்த்திர்யா தெளர்ஹி நாதா ஸ்வரூபிணி த்ரிகால வாபினிசக்திஸ் திரிமூர்த்திம் பூஜயாம்யஹம் ||

(சத்துவம் போன்ற குணங்களால், அனைத்து ரூபமாக, சிருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரம் என்னும் முக்காலங்களிலும் எந்த சக்தி வியாபித்திருக்கிறதோ அந்த த்ரிமூர்த்த்தியாகிய சக்தியை வணங்குகிறேன்.)


அம்மன் கொலு மண்டப பிரவேசம் 




கற்பகாம்பாள் அன்னவாகன சேவை 




அம்மன் பின்னழகு 

ப்ரம்ஹசாரிணி துர்கா

நவதுர்க்கையாக வழிபடும் போது நவராத்திரியின் இரண்டாம் நாள் அன்னையை, இமவான் மகளாக பிறந்து சிவபெருமானை மணம் செய்து கொள்வதற்காக தவம் செய்யும் பருவத்தில் கன்னியாக, யோகினியாக, தபஸ்வினியாக ப்ரும்மசாரிணியாகவும் வழிபடலாம். சாட்சாத் பிரம்மம் ஆன அவளே தவ வடிவாக விளங்கி தவம் இருந்ததால் ப்ரம்ஹசாரிணி எனப் போற்றப் பட்டாள். நீல வடிவினாளாக அதாவது பக்தி வசமானவளாக விளங்குகின்றாள் இந்த துர்கா.


ததாநாகர பத்மாப்யாம் அக்ஷ மாலா கமண்டலூ |
தேவி ப்ரஸ்தது மயி ப்ரம்ஹசாரிணி அநுத்தமா ||
என்பது ப்ரம்ஹசாரிணி துர்காவின் ஸ்லோகம் ஆகும்.

(தனது தாமரைக் கரங்களில் அக்ஷமாலை, கமண்டலம் தாங்கி சச்சிதானந்த நிலையை அருளும் அன்னை ப்ரஹமசாரிணி அடியேனை காக்கட்டும். )

முதல்நாள்  பயிறுக் கோலம் 

தமிழகத்தில் தசரா திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெறும் தலம் குலசேகரன்பட்டிணம் ஆகும். தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள இவ்வாலயத்தில் ஐயன் ஞான மூக்தீஸ்வரராகவும் அம்பாள் முத்தாரம்மனாகவும் அருள்பாலிக்கின்றனர். இருவரும் சுயம்பு மூர்த்தங்கள்.   விஜய தசமியன்று அம்பாள் மகிஷாசுரனை வதம் செய்யும்  சூர சம்ஹாரம் சிறப்பாக   கடற்கரையில் நடைபெறுகின்றது.  முத்தாரம்மன் தினமும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றார்.  இத்திருவிழாவின்         சிறப்பு பக்தர்கள் பல்வேடங்கள் அணிந்து வீதி வீதியாக சென்று காணிக்கை பெற்று அம்மனுக்கு செலுத்துவதாகும். பக்தர்கள் காப்புக்கட்டி தங்கள் வீட்டை விடுத்து  ஆலயத்தின் அருகில் குடிசை கட்டி ஒரு வேளைப் பச்சரிசி சாதமும், துவையலும் உண்டு விரதமிருக்கின்றனர். பக்தர்கள் என்ன வேடம் அணியவேண்டுமென்று அம்மன் கனவில் வந்து கூறுவதாக ஒரு ஐதீகம் உண்டு.  காளி அம்மன் வேடம்  அணிவது  சிறப்பாக கருதப்படுகின்றது. 


மறவாது கல்லெறிந்த சாக்கியர்க்கும்  அடியேன் 



ஸ்ரீ கற்பகவல்லியம்மன் பதிகம் 

பூரணி மனோன்மணி தயாபரி பராபரி புராதனி  தராதரமெலாம்
 பொற்புடன் அளித்த  சிவசக்தி இமவானுதவு புத்ரி மகமாயியென்றே 

சீரணி தமிழ்க்கவிதை பாடி முறையிடுவதுன் செவிதனிற்கேறவில்லையோ
தேஹீயென்றாலுனக்கீய    வகையில்லையோ தீனரக்ஷகியல்லையோ

ஆருலகினிற் பெற்ற தாயன்றி மக்கள் தமை ஆதரிப்பவர் ஆருசொல்லாய்
அன்னை யேயின்னும் பராமுகம் பண்ணாமல் அடியேனைரக்ஷி கண்டாய் 

மேருவை வளைத்தவனிடத்தில் வளரமுதமே விரி பொழில் திருமயிலைவாழ் 
விரைமலர்க்குழல் வல்லி மரைமலர்பதவல்லி விமலி கற்பகவல்லியே (1)

பொருள்: முழுமையானவளே, பார்வதியே, தயை நிறைந்தவளே,  சக்தியே, முன்னை பழம்பொருட்கும் முன்னைப் பழம் பொருளே, அகில உலகங்களையும்  பொலிவுடன் படைத்த சிவசக்தியே, இமவான் செல்வியே மகமாயியே என்று அடியேன் இனைய தமிழ்க்கவிதை பாடி முறையிடுவது உனது திருக்காதில் விழவில்லையா?  அன்னையே ஈவாய் என்று வேண்டினால் அருள வகையில்லையா? தீனர்களை காப்பவள் அல்லவா?  பெற்ற தாயல்லாமல்  பிள்ளைகளை யார் காப்பாற்றுவார்கள். அன்னையே  இனியும்  பாராமுகமாக இல்லாமல்  அடியேனை இரட்சித்து காப்பாற்றுவாய். திரிபுரர்களை அழிக்க மேரு மலையை வில்லாக வளைத்த சிவபெருமானின் இடப்பாகம் கொண்ட  அமுதானவளே! சோலைகள் நிறைந்த  திருமயிலையில் கோயில் கொண்ட மணம் வீசும் மலர்களை அணிந்த சடையாளே! தாமரை மலர் பதத்தாளேபரிசுத்தமானவளே! கற்பகவல்லியே!   


       முந்தைய பதிவு                                                                                                                          அடுத்த பதிவு  



                                                                                                                                                    அம்மன் அருள் வளரும் ......

Saturday, October 1, 2016

நவராத்திரி அம்மன் தரிசனம் -1

சென்னை மகாலிங்கபுரம்
பிரஹத் சுந்தர குஜாம்பாள்
கன்னியாகுமாரி அலங்காரம் 

நமது பாரத தேசத்தின் ஒவ்வொரு பகுதியிலும் தீமையை நன்மை அழித்து எல்லாரும் சுகமாக விளங்குவதை குறிக்கும் வகையில் நவராத்திரி கொண்டாடப்படுகின்றது. ஒன்பது நாட்கள் அம்மன் தவம் இருந்து பத்தாம் நாள் விஜதசமியன்று  தீமையாம் மகிஷனை வதம் செய்ததை  கொண்டாடுகிறோம். அண்டை மாநிலமான கர்நாடகத்தில் தசரா என்று  சிறப்பாக கொண்டாடிகின்றனர், இங்கு சாமுண்டீஸ்வரி இந்த பத்து நாட்களிலும் போற்றி வணங்கப்படுகின்றாள். கேரளாவில் விஜயதசமியன்று அக்ஷராப்பியாசம் என்று குழந்தைகளுக்கு முதன் முதலில்  கல்வியை துவக்குகின்றனர். குஜராத்தில் ஒன்பது நாட்களும் இரவு கர்பா என்னும் நடனமாடி அன்னையை வழிபடுகின்றனர். வட நாட்டில் ஒரு சாரார் கடுமையான விரதம் இருந்து அன்னையை நவ துர்காவாக வழிபடுகின்றனர் . ஒரு சாரார் இதை இராம்லீலாவாக , இராமர், இராவணனனை  வெற்றி கொண்டதை கொண்டாடுகின்றனர். ஒன்பது நாட்கள் இராமாயணம் பாராயணம் செய்கின்றனர் பத்தாம் நாள் விஜய தசமியன்று, இராவணன், மேகநாதன்( இந்திரஜித்), கும்பகர்ணன் பொம்மைகளை கொளுத்துகின்றனர். வங்காளம் முதலான கிழக்குப் பகுதியில் துர்க்கா பூஜை மிகவும் சிறப்பு. சஷ்டியன்று  அன்னை துர்க்கை திருக்கயிலாயம் விடுத்து பூலோகத்திற்கு தன் அன்னை இல்லத்திற்கு தன் மகள்கள் மஹா லக்ஷ்மி மற்றும் மஹா சரஸ்வதி, மகன்கள் கணேசன் மற்றும் கார்த்திகேயன்(முருகர்) மற்றும் கணேசரின் மனைவி அபராஜிதாவுடன் எழுந்தருளி அருள் பாலித்து பூஜையை ஏற்றுக்கொள்கின்றாள். விஜய்தசமியன்று பின்னர் அன்னை திருக்கயிலாயம் திரும்பிச்செல்கின்றாள். 

நவராத்திரியின் போது தேவி மகாத்மியம் என்றும் துர்கா சப்தஸதீ என்றழைக்கபப்டும் ஸ்தோத்திரம், லலிதா சகஸ்ரநாமம், லலிதா த்ரிசதீ, அபிராமி அந்தாதி  மற்றும் அன்னையின் பல்வேறு தோத்திரங்களை படிப்பது மிகவும் உத்தமம்.

காத்யாயனாய வித்மஹே கன்யகுமாரி தீமஹி |
தன்னோ துர்கி ப்ரசோதயாத் ||


பொதுவாக முப்பெருந்தேவியரான வீரத்திற்குரிய  மஹாதுர்கா, செல்வத்திற்குரிய மஹா லக்ஷ்மி, கல்விக்குரிய மஹா சரஸ்வதி என்று மூன்று மூன்று நாட்களாக அன்னையை வழிபடுவது  ஒரு முறையாகும். அநேகர் இவ்விதமாகவே அன்னையை இந்த நவராத்திரி சமயத்தில் வழிபடுகின்றனர். 


ஒரு சிலர் முதல் நாள் அன்னையை  ஆதி பராசக்தியை மூன்று வயது பாலையாக பாவித்து வழிபடுகின்றனர்.  அன்பர்கள் அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகியை மூன்று வயதுள்ள குழந்தையாக தங்கள் இல்லங்களில் வழிபடுவதால் சகல மங்களங்களும் பெருகும்.

கன்னியாக வழிபடும் போது நவராத்திரியின் முதல் நாளான இன்று அம்பிகையை அகில உலகத்தையும் ஆண்டு அருளும் அம்மையை இரண்டு வயது குழந்தையாக பாவித்து குமாரியாக வழிபடுகின்றோம். இவ்வாறு வழிபட தரித்திர நாசம்.

குமாரியாக அன்னையை வழிபடும் போது இந்த ஸ்லோகத்தை சொல்லி வழிபடலாம்.

1. குமார்ஸ்ய ச தத்வானி யாஸ்ருஜத்யபி ஸீலயா
காதீநபிச தேவாம்ஸ்தாத் குமாரீம் பூஜயாம்யஹம் ||

(ஒரு குழந்தையைப் போல லீலா வினோதங்களைச் செய்பவளை, பிரம்மன் முதலான தேவர்களை, எந்த சக்தி தனது லீலைகளினால் சிருஷ்டிக்கிறதோ, அந்த குமரியாகிய சக்தியை வணங்குகிறேன்.)





ஷைலபுத்ரி துர்கா

நவதுர்கையாக வழிபடும் போது  முதல் நாள் அகில உலகத்தையும் படைத்தும் காத்தும் அழித்தும் விளையாடும் அன்னையை ஷைலபுத்ரி என்று மலைமகளாக வழிபடுகின்றோம். சதி தேவியாக தக்ஷபிரஜாபதியின் மகளாகப் பிறந்த அன்னை தக்ஷனின் ஆணவத்தின் காரணமாக பின் அந்த உடலை அழித்துக்கொண்டு பின் பர்வத ராஜ புத்ரியாக, மலையரசன் பொற்பாவையாக, கிரிகன்யாவாக, பார்வதியாக, பிறந்த அன்னையாக, நந்தி வாகனத்தில் பவனி வரும் சிவபெருமானின் பத்னியாக வழிபடுகின்றோம். ஷைலபுத்ரியை ஹேமவதி என்றும் அழைக்கிறோம். பசுமை வர்ணத்தவளாக அதாவது இயற்கை ரூபிணியாக வணங்குகின்றோம் ஷைலபுத்ரி துர்காவை.

வந்தே வாஞ்சித லாபாய சந்த்ரார்த்த க்ருத சேகராம் |
வ்ருஷாரூடாம் சூலதராம் சைல புத்ரீம் யசஸ்விநீம் ||
என்பது ஷைலபுத்ரி துர்காவின் ஸ்துதியாகும்.

( பிறை நிலவை முடியில் சூடி, நந்தி வாகனமேறி பவனி வரும், திரிசூலதாரி, இமவான் மகளாக அவதரித்த ஒப்புயர்வற்ற ஷைல புத்ரியை என்னுடைய எண்ணங்கள் ஈடேற அடியேன் வணங்குகின்றேன். )


இவ்வருடம் மஹாலய அமாவாசை 30-09-2016 அன்று வந்தது. விஜய தசமி       11-10-2016 அன்று வருகின்றது ஆகவே திருமயிலையில் கற்பகாம்பாளின் கொலு நாளைதான் துவங்குகின்றது.  இன்றைய தினம் ஒரு ஆலயத்தின் உற்சவர் அம்மனின் கொலுவை தரிசிக்கின்றீர்கள். நாளை கற்பகாம்பாளின் தரிசனம் பெறலாம்  அன்பர்களே  


                                                                                                                                    

                                                                                                                                           அம்மன் அருள் தொடரும். . . . .. ... .