Showing posts with label தெஹ்ரி அணை. Show all posts
Showing posts with label தெஹ்ரி அணை. Show all posts

Sunday, January 1, 2012

இமயமலையில் ஒரு இனிய யாத்திரை -16

 
 சம்பாவில் ஒரு எலுமிச்சம் காயின் பனித்துளி
(படத்தை பெரிதாக்கி சிலந்தி வலையை பார்க்கவும்)

இமயமலையில் ஒரு இனிய யாத்திரை மிகவும் நன்றாக இருக்கிறது. இறைவனை பார்க்க எத்தனை சிரமங்கள்!அவன் அருளால் தான் அவனை வழி பட முடியும் போல.அடுத்த பதிவுக்கு ஆவலுடன் காத்து இருக்கிறேன் என்று உற்சாகப்படுத்திய கோமதி அரசுக்கு மிக்க நன்றி.

 
 வண்டியை பழுதுபார்த்தபின்
  கணேசன், வைத்திலிங்கம்,
வண்டி ஒட்டுநர், சொக்கலிங்கம், வழிகாட்டி

சம்பாவில் மூன்று நாட்களாக அலைந்த களைப்பு தீர நன்றாக தூங்கினோம். வண்டி ஒட்டுனர் வண்டியில் சிறிது பழுது பார்க்கவேண்டும் என்றார் எனவே பழுதுபார்த்துவிட்டு புறப்படும் போது மணி  ஒன்பதாகிவிட்டது. சம்பா ரிஷிகேசத்திலிருந்து 62 கி.மீ தூரத்தில் உள்ளது. இரம்மியமான சீதோஷ்ண நிலையைக்கொண்ட ஊர் இது.  இங்கிருந்து முசோரிக்கு ஒரு பாதை உள்ளது இப்பாதையில் 21 கி.மீ தூரத்தில் இப்பகுதி மக்களின் குல தெய்வமான சூர்காந்தா தேவி கோவில் உள்ளது.  இந்த சுற்றுலா இல்லத்திலும் அருமையான பூந்தோட்டம் இருந்தது வாலாட்டிக் குருவிகள் நிறைய தென்பட்டன. இங்கிருந்து கங்கோத்ரி பனி சிகரங்களை நன்றாக தரிசிக்க முடியுமாம். நாங்கள் இரவில் சென்று அதிகாலையிலேயே கிளம்பி விட்டதால் அந்த அற்புத காட்சி கிட்டவில்லை காலையில் சம்பாவில் பனி அதிகமாக இருந்ததும் ஒரு காரணம்.
 
  ராஜாகேத் இந்தப்பாலத்தை முதலிலேயே 
கடந்திருந்தால் கேதார்நாத் சென்றிருப்போமா??

சம்பாவில் இருந்து புது தெஹ்ரி வந்தடைந்தோம்.  இனி தெஹ்ரி அணையைப்பற்றி சிறிது காணலாமா? ஏனென்றால் பாதை அடைபட்டிருந்ததால் அணையின் மேல் பயணம் செய்தது எங்களுக்கே ஒரு ஆச்சரியமாக இருந்தது. பழைய தெஹ்ரி நகர்  கர்வாலைச் சேர்ந்த சுதர்ஷன் சா மகாராஜாவால் நிர்மாணிக்கப்பட்டது. தேவ பிரயாகை, உத்தரகாசி, ஸ்ரீநகர், தில்வாரா செல்லும் நான்கு பாதைகளும் கூடும் இடம் தெஹ்ரி. பாகீரதி நதியும் பிலன் கங்காநதியும்  சங்கமமாகும் இடத்தில் இப்போது தெஹ்ரி அணை கட்டப்பட்டுள்ளது.   260 அடி உயரத்தில் உலகத்திலேயே உயர்ந்த அணையாக இந்த அணை விளங்கும். இந்த அனையின் மூலமாக சுமார் ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தயாரிக்க  முடியும். இவ்வளவு உயரமான அணை என்பதால் பழைய தெஹ்ரி நகரம், கர்வால் இராஜ அரண்மணை, கண்டா கர் எனப்படும் மணிக்கூண்டு முதலிய மூழ்கிவிட்டன. முதலில் இந்த அரண்மனையில்தான் புரோகிதர்கள் கூடி பத்ரிநாத் திருக்கோவில் திறக்கும் மற்றும் மூடும் நேரத்தை முடிவு செய்வார்கள். இந்த நகருடன் சேர்ந்து ஆயிரக்கணக்கான கிராமங்களும் நீரில் இன்று மூழ்கிவிட்டன. இவ்வணைக்கான பூர்வாங்கப்பணிகள்  1961ல்  போடப்பட்டது, திட்டம் 1972ல் தொடங்கியது. 1976ல் கட்டுமானப்பாணிகள் துவங்கின. 2006ல் அடியேனுடன் பணிபுரியும் டேராடூனில் பணி புரியும் அன்பர்கள் தெஹ்ரி நகரம் முழுகுகின்றது அதை பார்த்துவிட்டு  வருகின்றோம் என்று இங்கு வந்து விட்டுப்போனது நினைவுக்கு   வருகின்றது.  சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இந்த அனைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர் ஆயினும்  தெஹ்ரி அணை வளர்ந்து இன்று நிற்கின்றது. அணை இப்போழுது முழுதுமாக நிறைந்து நிற்கின்றது. மூன்று நாட்களாக பல்வேறு கோணங்களில் இந்த அணையை பார்த்த நாங்கள் இன்று இந்த அணையைக் கடந்தோம்.


 வழியில் ஒரு பள்ளி


 
 இராணுவ வீரர்கள் எங்கள் நண்பர்களானார்கள்

முதலில் தெஹ்ரி அணையை சுற்றிக்கொண்டு செல்லும் பாதையில் சென்றோம் அங்கு பாதை நிலச்சரிவால் பாதை அடைபட்டுக்கிடந்தது.  சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் காத்திருந்த பிறகு  அன்பு கூர்ந்து அணை அதிகாரிகள் வண்டிகள் அணையின் மேல் செல்ல அனுமதி அளித்தனர். ஆனால் யாரும் புகைப்படம் எடுக்கக்கூடாது என்று கூறினார். ஒன்றன் பின் ஒன்றாக மிக மெதுவாக வண்டிகள் செல்ல அனுமதித்தனர்.  நாங்கள் புறப்படும் அவசரத்தில் இரவி சாரை மறந்து விட்டுவிட்டோம், அவர் எப்படியோ முதல் நாள்   நாங்கள்  நட்பு செய்து கொண்ட இராணுவ வாகனத்தில் ஏறி எங்களை வந்தடைந்தார். அணையை கடந்து இராஜாகேத்தை அடைந்தோம்.  நதியின் குறுக்காக இருந்த பாலத்தை வழிகாட்டி  காட்டி நேற்று முன் தினம் நாம் இந்த பாலத்திற்கு  3 கி.மீ தூரத்தில்தான் மாட்டிக்கொண்டோம். அன்று அந்த நிலச்சரிவு இல்லாமல் இருந்திருந்தால் நாம்  கேதார்நாத் தரிசனத்தை முடித்திருக்கலாம் என்று கூறினார். எல்லாம் அவர் செயல் நம் கையில் இருக்கின்றது எப்படியாவது பத்ரிநாதரையாவது தரிசனம் செய்ய வேண்டும் என்று வேண்டிக்கொண்டோம். அங்கிருந்து  கதோலியா வழியாக  மலேதா என்ற ஊருக்கு அருகில் டெல்லி பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையை அடைந்தோம். நடுவில் நாங்கள் கடந்த பாதை ஒரே சேறும் சகதியுமாக இருந்தது. இரண்டு மூன்று இடங்களில் வண்டி மாட்டிக்கொள்ளும் அபாயமும் இருந்தது. ஆயினும் எப்படியோ வண்டி ஓட்டுநர் சமாளித்து மலேதா கொண்டு வந்து சேர்த்தார். அப்பாடா என்று பெருமூச்சு விட்டோம் அந்த கடவுளுக்கு நன்றி செலுத்தினோம்.
இவ்வழியில் பல வர்ண பட்டாம்பூச்சிகளைக் கண்டோம், பூப்பூவா பறந்து போகும் பட்டுப்பூச்சி அக்கா, நீ பள பளன்னு போட்ட்டிருப்பது யார் கொடுத்த சொக்கா என்னும் பாடல்தான் நினைனவுக்கு வந்தது.

தெஹ்ரி அணை

(எதிரே உள்ள மலையில் பாதையை  கீழே சென்று கடக்க முடியாததால் பாலத்தின் மூலமாக கடந்தோம்)

 
 கடல் போன்று விளங்கும் தெஹ்ரி அணையின் நீர்.

 
தேசிய நெடுஞ்சாலைதான் (NH-109) என்றாலும் பல்வேறு இடங்களில் நிலச்சரிவுகளினால் பாதை ஒரு வழிப்பாதையாகத்தான் இருந்தது. அந்த இடங்களில் சிறிது வேகம் குறைந்தது ஆனால் எங்கும் தடைப்படவில்லை. அலக்நந்தா நதியை முதலில் இங்கு தரிசனம் செய்தோம் இனிப்பயணம் இந்த ந்தியின் கரையிலேயே இருந்தது.     முதலில் கர்வாலின் ஸ்ரீநகர் என்னும் ஊரை அடைந்தோம். ஒரு காலத்தில் தெஹ்ரி கர்வாலின் தலைநகராக விளங்கிய நகரம். இந்நகருக்கு ஸ்ரீநகர் என்னும் பெயர் வர ஒரு சுவையான வரலாறு உள்ளது. இங்கு ஸ்ரீயந்திரம் என்னும் ஒரு பெரிய பாறை இருந்தது, அதைப் பார்ப்பவர்கள் கூட துன்பம் அடைந்தார்கள். அதன் மேல் கால் பதித்தவர்கள் மாண்டு போயினர். 8ம் நூற்றாண்டில் ஆதி சங்கர பகவத பாதாள் இங்கு வந்த போது அந்த பாறையைத் தூக்கி அலக்நந்தாவில் தலை கீழாக எறிந்து மக்களுக்கு முக்திஅளித்தார்.  இந்நகரில் கமலேஷ்வர் ஆலயம் உள்ளது. திருமால் ஆயிரம் தாமரை மலர்களாகல் அர்ச்சனை செய்யும் போது ஒரு மலர் குறைந்ததால் தன் கண்ணையே எடுத்து அர்ச்சனை செய்ய அதற்கு மகிழ்ந்த சிவபெருமான் மஹாவிஷ்ணுவிற்கு சுதர்சன சக்கரம் வழங்கிய கோவில் என்பது ஐதீகம். இங்குதான் துணை இராணுவப் பயிற்சி பள்ளி உள்ளது. இங்கிருந்த GMVN  அலுவலகத்தில் இது வரை நாங்கள் செலவு செய்த பணத்தைத் திரும்பப்பெற்றுக்கொண்டு பயணத்தை தொடர்ந்தோம். 

 தெஹ்ரி அணையிலிருந்து பாயும் நீர்
பின்னர் நாங்கள் ருத்ரபிரயாகையை அடைந்தோம்.  ப்ரயாகை என்றால் சங்கமம்.  இங்கு கேதார்நாத்திலிருந்து ஓடி வரும் மந்தாங்கினியும், பத்ரிநாத்திலிருந்து ஓடி வரும்  அலக்நந்தாவும் சங்கமம் ஆகின்றன. இங்கிருந்து கேதார்நாத் செல்லும் பாதை பிரிகின்றது. நாங்கள் நேராக பத்ரிநாத் நோக்கி சென்றோம். பஞ்ச பிரயாகை என்னும் ஐந்து சங்கமங்களின் விவரங்களை இன்னொரு பதிவில் காணலாம். நாங்கள் ருத்ரபிரயாகை அதையும் போதே மணி மாலை 4மணியாகி விட்டது, மதிய உணவு ஸ்ரீநகரில் உண்ணலாம் என்று நினைத்தோம் அது முடியவில்லை இங்கும் சாப்பிடாமல் கையில் இருந்த நொறுக்குத் தீனிகளை கொறித்துக்கொண்டே கிளம்பினோம். இதை ஏன் சொல்கின்றேன் என்றால் இது போன்ற பயணத்தின் போது சிறிது, இனிப்பு, காரம், சாக்லெட், பிஸ்கட், ரொட்டி முதலியன கொண்டு செல்வது மிகவும் நல்லது. அதுவும் பெரிய குழுவாக செல்லும் ஆளுக்கு கொஞ்சம் கொஞ்சம் கொண்டி சென்று அனைவரும் கூடி காக்கை போல கூடி உண்டு மகிழலாம். 

 ஸ்ரீநகருக்கு அருகில் அலக்நந்தா நதி
இது ஒரு பொன் மாலைப் பொழுது

 ஒரு அழகிய ரோஜா மொக்கு

கரிய  மலைப்பாம்பு போல வளைந்து நெளிந்து செல்லும் பாதையின் ஒரு பக்கம் அலக்நந்தா துணையாக வர மறுபக்கம் ஓங்கி உயர்ந்த பச்சைக் கம்பளம் போர்த்தியது போல மலைகள் விளங்க    ருத்ரபிரயாகையிலிருந்து பின்னர் கர்ணபிரயாகையை கடந்தோம், பிண்டார் கங்காவும் அலக்நந்தாவும் சங்கமிக்கும் இடம் இது இங்கு வரும் போது அநேகமாக இருட்டிவிட்டது. அடுத்து நந்த பிரயாகையை கடந்தோம். நந்தாதேவி சிகரத்திலிருந்து பாய்ந்துவரும் நந்தாங்கினியும் அலக்நந்தாவும் சங்கமிக்கும் இடம்.  இரவானாலும் எப்படியும் பிபல்கோட் அடைய வேண்டும் என்று வண்டி ஓட்டுநர் வண்டியை ஒட்டிச்சென்றார்.  பின்னர் சமோலி என்னும் ஊரைத் தாண்டி இரவு சுமார் 8 மணியளவில் பீபல்கோட் அடைந்தோம். பசிய மரங்களைக் கொண்ட மலையின் மடியில் பச்சைப் பாய் விரித்தாற் போல  சமவெளி வயல்களின் நடுவில் அமைந்துள்ள அழகான ஊர் இது. இவ்வூரில் இட்லி தோசை கிடைக்கும் என்று கூறினார்கள், உடம்பு சரியில்லாத தேவேந்திரன் மட்டும் வெளியே சென்று சாப்பிட்டுவிட்டு வந்தார். காலையில் 4 மணிக்கு புறப்பட்டால் ஜோஷிர்மட்டில் 5:30  மணிக்கு  முதல் கேட் திறக்கும் போது பத்ரிநாத் நோக்கி சென்று விடலாம் என்று வழிகாட்டியல்ல வண்டி ஓட்டுநர் கூறினார். இரவில் வண்டி ஓட்ட அவர் தயாராக இருந்தது குறித்து மகிழ்ச்சியுடன் காலையில் இருந்து பேருந்தில் பயணம் செய்த அலுப்புத்தீர படுக்கச்சென்றோம். தாங்களும் சிறிது ஒய்வெடுத்துக்கொள்ளுங்கள் அன்பர்களே

அன்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு (2012) `நல்வாழ்த்துக்கள். 

Friday, December 30, 2011

இமயமலையில் ஒரு இனிய யாத்திரை -15

தங்கள் குழுவினர் என்ன செய்தார்கள் என்று அறிய ஆவலாக உள்ளது எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் பதிவிடுங்கள் என்று வேண்டிய ஸ்பார்க் கார்த்தி அவர்களுக்கு மிக்க நன்றி. ஐயா உங்களுக்காக இதோ அடுத்த பதிவு.

உத்தரகாசி சுற்றுலா மையம் 


ஜீப்பில் கேதார்நாத்திற்கு புறப்படுகின்றோம் (12-09-10)


எனவே அன்றைய தினம் (11-09-10) வழிகாட்டியை அழைத்து பேருந்து வராவிட்டாலும் பரவாயில்லை எப்படியாவது ஜீப் வழியாக எங்களை மேலே அழைத்து செல்லுங்கள் எப்படியாவது முழு யாத்திரையும் முடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டோம். யாத்திரை சுமுகமாக  செல்லாமல் ஜான் ஏறினால் முழம் வழுக்குவது போல சென்று கொண்டிருந்ததால் அவருக்கும் ஒன்றும் சுரத்தில்லை. ஆயினும் அவர்களது துணை மேலாளரிடம் பேசி ஒப்புதல் வாங்கிக்கொண்டார்.  இன்னும் ஒரு சின்ன பிரச்னையும் தோன்றியது. உத்தர காசியில் நாங்கள் இருவர் தங்கும் அறையில் தங்குவதால்  அதற்குண்டான அதிகப்படி வாடகையை நாங்கள் தர வேண்டும் என்று அதன் மேலாளர் கேட்க, இதில் எங்கள் தப்பு என்ன தங்கள் பேருந்து பழுதானதால் தானே நாங்கள் இங்கு தங்க வேண்டி வந்தது என்று கூறி அவரை சமாதனப்படுத்தினோம். எப்படியும் அடுத்த நாள்  இங்கிருந்து சென்று விடலாம் என்ற நம்பிக்கையில் தூங்கசென்றோம். 

  
 மலை வளம் மேகமூட்டத்தினூடே (12-09-10)

அடுத்த நாள் (12-09-10) காலையில் எழுந்து தயாராகி பேருந்து நிலையம் சென்று விசாரித்த போது தராசு செல்லும் வழி நாங்கள் வரும் போது மாட்டிக்கொண்ட அதே இடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டதால்  அடைபட்டுள்ளது எனவே வேறு வழியாக செல்ல வேண்டும் என்றார்கள். எனவே  இரண்டு ஜீப்களில் பயணப்பட்டோம். 

 JCB யந்திரம் நிலச்சரிவை சரி செய்யும் காட்சி

 நிலச்சரிவின் பின்புலத்தில் பேருந்து செல்லும் காட்சி


உத்தரகாசியில் இருந்து கேதார்நாத் செல்ல இரு பாதைகள் உள்ளன அவை என்னவென்று முதலில் காணலாமா? அன்பர்களே

புறப்படும் இடம்
செல்லும் இடம்
தூரம் கி.மீ
உயரம் மீ
உத்தரகாசி
தாராசு
28
1036
தாராசு
தெஹ்ரி
37
770
தெஹ்ரி
தன்சாலி
65
976
தன்சாலி
சிர்வடியா
31
2134
சிர்வடியா
தில்வாரா
42
671
தில்வாரா
அகஸ்தியமுனி
10
762
அகஸ்தியமுனி
குண்ட்சட்டி
15
976
குண்ட்சட்டி
குப்தகாசி
5
1479
குப்தகாசி
நாலா
3
1475
நாலா
ஃபடா
11
1601
ஃபடா
ராம்பூர்
9
1646
ராம்பூர்
சோன்பிரயாகை
3
1829
சோன்பிரயாகை
கௌரிகுண்டம்
5
1982
கௌரி குண்டம்
கேதார்நாத்
14(நடை)
3583

இரண்டாவது வழி உத்தரகாசி – தெஹ்ரி - கடோலியா -  கன்சாலி – குட்டு– பன்வாலி –மக்கு – த்ரியுக் நாராயண் – சோன்பிரயாக் – கௌரி குண்டம் –கேதார்நாத்.
 
எங்கள் பேருந்தில் திரு.வைத்தி  (13-09-10)

நாங்கள் இன்றைய தினம் இந்த இரண்டு வழிகளிலும் செல்ல முடியாததால் மூன்றாவது வழியில் தெஹ்ரி அணையின் பின்பக்கமாக பயணம் செய்தோம். உத்தரகாசியிலிருந்து  சௌரங்கி கால் என்னும் இடத்திற்கு பயணம் செய்தோம், பாதியில் குட்டீதி மாதா கோவில் உள்ளது. சௌரங்கி காலில் காலை உணவை முடித்துக்கொண்டோம். அங்கு ஒரு அருமையான சிவன் கோயில் இருந்தது அவரை வணங்கிப்புறபட்டோம். செல்லும் வழியில் தேவேந்திரனின் உடல் நிலை மேலும் மோசமாகியது, ஜீப்பில் குலுங்கி குலுங்கி பயணம் செய்ததால்   சாப்பிட்ட கொஞ்சமும் வாந்தி ஆகிவிட்டது, எப்படியோ பயணத்தை தொடர்ந்தோம். இப்பாதை கிராமப்பாதை என்பதால் ஒரு வழிப்பாதைதான், நடு நடுவே கிராமங்கள் வந்தன, கீழே ஓடும் ஆறு செழுமையான நெல் வயல்கள் மலையின் சரிவில்   என்று அற்புதமாக காட்சியை பார்த்துக்கொண்டே  பயணம் செய்தோம். போகப் போக தெஹ்ரி அணையின் நீர் அதிகமாகிக்கொண்டே வருவதைப் பார்த்தோம்,மலையில் ஏறு உச்சியை நோக்கி சென்று கொண்டிருந்தோம் மேகங்கள் வந்து உரசி சென்றன, மழைச்சாரல் வேறு துவங்கியது. இவ்வாறு பயணம் செய்து கோடார், லம்ப்காவ் வழியாக ராஜாகேத் என்னும் ஊரை நோக்கிச்சென்றோம். மலை உச்சியை அடிந்து விட்டோம் அது வரை எந்த பிரசனையும் இருக்கவில்லை சுமார் 3 கி.மீ இருக்கும் போது மீண்டும் ஒரி நிலச்சரிவு. பயணம் தடைப்பட்டது. அங்கு ஒரே ஒரு கடை மட்டுமே இருந்தது. ஒரு மணி நேரம் தங்கினோம். மேகங்கள் ஆட்டிய கண்ணாமூச்சி நாடகத்தையும் மழை பெய்யும் அழகையும், அந்தப் பகுதி மக்கள் எதுவும் நடக்காதது போல தங்கள் வயல்களில் பணி செய்வதையும், பெண்கள் மலையேறி சென்று, புல் மற்றும் சுள்ளிகள் பொறுக்கிக்கொண்டு வருவதையும் பார்த்தோம்.  இன்னும் மூன்று கி.மீதான்  இங்கு மாட்டிக்கொண்டேமே என்று வழ்காட்டி நொந்து கொண்டார். வேறு வழியில்லாமல் அந்த ஒத்தைக் கடையில் கிடைத்ததை சாப்பிட்டுவிட்டு  உத்தரகாசிக்கே திரும்பி கிளம்பினோம். வரும் வழியில் ஜீப் ஓட்டிகளின் கிராமம் வந்தவுடன் அவர்கள் அதற்கு மேல் வரவிரும்பாமல் எங்களை அங்கேயே இறக்கி விட்டனர். வழி எல்லா இடங்களிலும்  அடைபட்டு கிடப்பதால் யாரும் உத்தரகாசிக்கு வர தயாராக இருக்கவில்லை. கடைசியாக  இரண்டு ஜீப்காரர்கள் வந்தனர் அதிக பணம் கொடுப்பதாக சொன்னபின், அவர்களும் வழியில் ஒரு குறுக்கு வழியில் செல்ல யத்தனித்தனர், அவர்களிடம் பேசி தாஜா செய்து சென்ற வழியிலேயே  திரும்பி வந்து உத்தரகாசி அடைந்தோம்.

நிலச்சரிவு காட்சிகள்


உத்தரகாசியில் போன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோட என்று  வந்து இறங்கிய போது நொந்து நூடுல்ஸ்  ஆகிவிட்டோம்   என்பார்களே அது போல்தான் இருந்தது எங்கள் நிலை.   ஒரு நாள் முழுவதும் சுற்ரியும் பயன் இல்லாமல் போனது,  அதுவும் இல்லாமல் இரண்டு நாட்கள் வீணாகப்போனது. தேவேந்திரன் உடல் நலம் மோசமானதால் சிலர் இனி எங்கும் செல்ல வேண்டாம் இப்படியே ரிஷிகேஷ் சென்று விடலாம் என்று கூற ஆரம்பித்தனர்.  எப்படியோ அவர்களை சமாதனம் செய்து கேதார்நாத் செல்ல வேண்டாம், பத்ரிநாத்  மட்டும் செல்லலாம், பேருந்து  கோவில் வரையில் செல்லும்  என்பதால் அதிக பிரச்னை இருக்காது, மேலும் உடல் நலம் இலலாமல் யாத்திரை வந்த கோபால் பெருமாளை தரிசனம் செய்ய முடியும் என்பதாலும் அனைவரும் அதற்கு ஒப்புக்கொண்டனர். அப்போது பேருந்து ஓடுனரிடமிருந்து போன் வந்தது, வண்டி சரியாகி விட்டது காலையில் உத்தரகாசி வந்து விடுவோம் என்று கூறினார்.  இனி அடுத்த நாள் எப்படி விடியப்போகின்றதோ என்று தூங்கச்சென்றோம்.


தெஹ்ரி அணையின் சில காட்சிகள்




அடுத்தநாளும் (13-09-10) விடிந்தது காலை உணவை முடித்தோம், பேருந்தும் வந்து சேர்ந்தது, மிக்க மகிழ்ச்சியுடன் அதில் ஏறி , நல்ல பாதையிலேயே பயணம் செய்து  சம்பா சென்று விடலாம் என்று புறப்பட்டோம்,  முதலில் உத்தரகாசியின் சுரங்கபாதையை கடந்து   தராசு அடைந்தோம். அங்கிருந்த நிலச்சரிவு சரிசெய்யப்பட்டிருந்தது.  சின்யாலி சௌர் நோக்கி சென்றோம் அங்கே ஒரு நிலச்சரிவு,  ஒரு ஜீப் மாட்டிக்கொண்டிருந்தது. JCB  யந்திரம் வந்து நிலச்சரிவை சரி செய்து கொண்டிருந்த போது எங்களுடன் மாட்டிக்கொண்ட இரண்டு  இராணுவ லார்களில் பயணம் செய்து கொண்டிருந்த தமிழ் போர் வீரர்களுடன் பேசிக்கொண்டிருந்தோம்.  எங்களுக்கு முன் சென்ற ஒரு பேருந்தின் உள்ளேயே ஒரு பாறை வந்து விழுந்ததில் ஒரு பயணி காயம் அடைந்து விட்டார் என்று கேள்விப்பட்டோம். அங்குள்ள மக்கள் சிலர் காலில் GUM BOOT அணிந்து கொண்டு அந்த சேற்றில் நடந்து கடந்து சென்றனர். இவர்களைப் பார்த்து ஆச்சிரியப்படாமலிருக்க முடியவில்லை.    சுமார் இரண்டு மணி நேரத்தில்  இந்த நிலச்சரிவு சரி செய்யப்பட்டது. பின்னர் கண்டிசௌர் என்ற இடத்தில் மதிய உணவை உண்டோம். 

 அந்தி நேர செக்கர் வானம்

 
  ஒரு அழகிய மலர்
அதற்கு பிறகு பயணம் மெதுவாகவே இருந்தது, பல்வேறு இடங்களில் நிலச்சரிவு என்பதால்  பாதை ஒருவழிப்பாதை ஆகிவிட்டது. மேலும் அதிக நிலச்சரிவில் மாட்டவில்லை. அதற்குள் மாலையாகி விட்டது. அந்தி வானம் செந்நிறமாகி  எல்லாவற்றையும் செக்க சேவேல் ஆக்கியதை  புகைப்படம்  பிடித்தோம்.  சிறிது சூரிய வெளிச்சம் வந்ததால்  ஈரம்  மேகமாகி மேலே சென்று மழையாக பொழியும்  நிகழ்ச்சியை இரசித்தோம். எப்படியும் சம்பா அடைந்து விடவேண்டும் என்று ஓட்டுனர் இரவிலும் வண்டியை ஒட்டினார். இரவில் மலைகளின் பல இடங்களில் கிராமங்களில் மின் ஒளியில் ஒளிரும் அழகை கண்டு இரசித்தோம். காலையில் புறப்பட்ட நாங்கள் இவ்வாறு பல தடங்கல்களை கடந்து இரவு 8  மணியளவில் சம்பா அடைந்து, மிகவும் தேவைப்பட்ட ஒய்வெடுத்தோம். அடுத்த நாள் என்ன நடந்தது பத்ரிநாத் செல்ல முடிந்ததா? என்பதை அடுத்த பதிவில் காணலாம் அன்பர்களே.