Sunday, January 1, 2012

இமயமலையில் ஒரு இனிய யாத்திரை -16

 
 சம்பாவில் ஒரு எலுமிச்சம் காயின் பனித்துளி
(படத்தை பெரிதாக்கி சிலந்தி வலையை பார்க்கவும்)

இமயமலையில் ஒரு இனிய யாத்திரை மிகவும் நன்றாக இருக்கிறது. இறைவனை பார்க்க எத்தனை சிரமங்கள்!அவன் அருளால் தான் அவனை வழி பட முடியும் போல.அடுத்த பதிவுக்கு ஆவலுடன் காத்து இருக்கிறேன் என்று உற்சாகப்படுத்திய கோமதி அரசுக்கு மிக்க நன்றி.

 
 வண்டியை பழுதுபார்த்தபின்
  கணேசன், வைத்திலிங்கம்,
வண்டி ஒட்டுநர், சொக்கலிங்கம், வழிகாட்டி

சம்பாவில் மூன்று நாட்களாக அலைந்த களைப்பு தீர நன்றாக தூங்கினோம். வண்டி ஒட்டுனர் வண்டியில் சிறிது பழுது பார்க்கவேண்டும் என்றார் எனவே பழுதுபார்த்துவிட்டு புறப்படும் போது மணி  ஒன்பதாகிவிட்டது. சம்பா ரிஷிகேசத்திலிருந்து 62 கி.மீ தூரத்தில் உள்ளது. இரம்மியமான சீதோஷ்ண நிலையைக்கொண்ட ஊர் இது.  இங்கிருந்து முசோரிக்கு ஒரு பாதை உள்ளது இப்பாதையில் 21 கி.மீ தூரத்தில் இப்பகுதி மக்களின் குல தெய்வமான சூர்காந்தா தேவி கோவில் உள்ளது.  இந்த சுற்றுலா இல்லத்திலும் அருமையான பூந்தோட்டம் இருந்தது வாலாட்டிக் குருவிகள் நிறைய தென்பட்டன. இங்கிருந்து கங்கோத்ரி பனி சிகரங்களை நன்றாக தரிசிக்க முடியுமாம். நாங்கள் இரவில் சென்று அதிகாலையிலேயே கிளம்பி விட்டதால் அந்த அற்புத காட்சி கிட்டவில்லை காலையில் சம்பாவில் பனி அதிகமாக இருந்ததும் ஒரு காரணம்.
 
  ராஜாகேத் இந்தப்பாலத்தை முதலிலேயே 
கடந்திருந்தால் கேதார்நாத் சென்றிருப்போமா??

சம்பாவில் இருந்து புது தெஹ்ரி வந்தடைந்தோம்.  இனி தெஹ்ரி அணையைப்பற்றி சிறிது காணலாமா? ஏனென்றால் பாதை அடைபட்டிருந்ததால் அணையின் மேல் பயணம் செய்தது எங்களுக்கே ஒரு ஆச்சரியமாக இருந்தது. பழைய தெஹ்ரி நகர்  கர்வாலைச் சேர்ந்த சுதர்ஷன் சா மகாராஜாவால் நிர்மாணிக்கப்பட்டது. தேவ பிரயாகை, உத்தரகாசி, ஸ்ரீநகர், தில்வாரா செல்லும் நான்கு பாதைகளும் கூடும் இடம் தெஹ்ரி. பாகீரதி நதியும் பிலன் கங்காநதியும்  சங்கமமாகும் இடத்தில் இப்போது தெஹ்ரி அணை கட்டப்பட்டுள்ளது.   260 அடி உயரத்தில் உலகத்திலேயே உயர்ந்த அணையாக இந்த அணை விளங்கும். இந்த அனையின் மூலமாக சுமார் ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தயாரிக்க  முடியும். இவ்வளவு உயரமான அணை என்பதால் பழைய தெஹ்ரி நகரம், கர்வால் இராஜ அரண்மணை, கண்டா கர் எனப்படும் மணிக்கூண்டு முதலிய மூழ்கிவிட்டன. முதலில் இந்த அரண்மனையில்தான் புரோகிதர்கள் கூடி பத்ரிநாத் திருக்கோவில் திறக்கும் மற்றும் மூடும் நேரத்தை முடிவு செய்வார்கள். இந்த நகருடன் சேர்ந்து ஆயிரக்கணக்கான கிராமங்களும் நீரில் இன்று மூழ்கிவிட்டன. இவ்வணைக்கான பூர்வாங்கப்பணிகள்  1961ல்  போடப்பட்டது, திட்டம் 1972ல் தொடங்கியது. 1976ல் கட்டுமானப்பாணிகள் துவங்கின. 2006ல் அடியேனுடன் பணிபுரியும் டேராடூனில் பணி புரியும் அன்பர்கள் தெஹ்ரி நகரம் முழுகுகின்றது அதை பார்த்துவிட்டு  வருகின்றோம் என்று இங்கு வந்து விட்டுப்போனது நினைவுக்கு   வருகின்றது.  சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இந்த அனைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர் ஆயினும்  தெஹ்ரி அணை வளர்ந்து இன்று நிற்கின்றது. அணை இப்போழுது முழுதுமாக நிறைந்து நிற்கின்றது. மூன்று நாட்களாக பல்வேறு கோணங்களில் இந்த அணையை பார்த்த நாங்கள் இன்று இந்த அணையைக் கடந்தோம்.


 வழியில் ஒரு பள்ளி


 
 இராணுவ வீரர்கள் எங்கள் நண்பர்களானார்கள்

முதலில் தெஹ்ரி அணையை சுற்றிக்கொண்டு செல்லும் பாதையில் சென்றோம் அங்கு பாதை நிலச்சரிவால் பாதை அடைபட்டுக்கிடந்தது.  சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் காத்திருந்த பிறகு  அன்பு கூர்ந்து அணை அதிகாரிகள் வண்டிகள் அணையின் மேல் செல்ல அனுமதி அளித்தனர். ஆனால் யாரும் புகைப்படம் எடுக்கக்கூடாது என்று கூறினார். ஒன்றன் பின் ஒன்றாக மிக மெதுவாக வண்டிகள் செல்ல அனுமதித்தனர்.  நாங்கள் புறப்படும் அவசரத்தில் இரவி சாரை மறந்து விட்டுவிட்டோம், அவர் எப்படியோ முதல் நாள்   நாங்கள்  நட்பு செய்து கொண்ட இராணுவ வாகனத்தில் ஏறி எங்களை வந்தடைந்தார். அணையை கடந்து இராஜாகேத்தை அடைந்தோம்.  நதியின் குறுக்காக இருந்த பாலத்தை வழிகாட்டி  காட்டி நேற்று முன் தினம் நாம் இந்த பாலத்திற்கு  3 கி.மீ தூரத்தில்தான் மாட்டிக்கொண்டோம். அன்று அந்த நிலச்சரிவு இல்லாமல் இருந்திருந்தால் நாம்  கேதார்நாத் தரிசனத்தை முடித்திருக்கலாம் என்று கூறினார். எல்லாம் அவர் செயல் நம் கையில் இருக்கின்றது எப்படியாவது பத்ரிநாதரையாவது தரிசனம் செய்ய வேண்டும் என்று வேண்டிக்கொண்டோம். அங்கிருந்து  கதோலியா வழியாக  மலேதா என்ற ஊருக்கு அருகில் டெல்லி பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையை அடைந்தோம். நடுவில் நாங்கள் கடந்த பாதை ஒரே சேறும் சகதியுமாக இருந்தது. இரண்டு மூன்று இடங்களில் வண்டி மாட்டிக்கொள்ளும் அபாயமும் இருந்தது. ஆயினும் எப்படியோ வண்டி ஓட்டுநர் சமாளித்து மலேதா கொண்டு வந்து சேர்த்தார். அப்பாடா என்று பெருமூச்சு விட்டோம் அந்த கடவுளுக்கு நன்றி செலுத்தினோம்.
இவ்வழியில் பல வர்ண பட்டாம்பூச்சிகளைக் கண்டோம், பூப்பூவா பறந்து போகும் பட்டுப்பூச்சி அக்கா, நீ பள பளன்னு போட்ட்டிருப்பது யார் கொடுத்த சொக்கா என்னும் பாடல்தான் நினைனவுக்கு வந்தது.

தெஹ்ரி அணை

(எதிரே உள்ள மலையில் பாதையை  கீழே சென்று கடக்க முடியாததால் பாலத்தின் மூலமாக கடந்தோம்)

 
 கடல் போன்று விளங்கும் தெஹ்ரி அணையின் நீர்.

 
தேசிய நெடுஞ்சாலைதான் (NH-109) என்றாலும் பல்வேறு இடங்களில் நிலச்சரிவுகளினால் பாதை ஒரு வழிப்பாதையாகத்தான் இருந்தது. அந்த இடங்களில் சிறிது வேகம் குறைந்தது ஆனால் எங்கும் தடைப்படவில்லை. அலக்நந்தா நதியை முதலில் இங்கு தரிசனம் செய்தோம் இனிப்பயணம் இந்த ந்தியின் கரையிலேயே இருந்தது.     முதலில் கர்வாலின் ஸ்ரீநகர் என்னும் ஊரை அடைந்தோம். ஒரு காலத்தில் தெஹ்ரி கர்வாலின் தலைநகராக விளங்கிய நகரம். இந்நகருக்கு ஸ்ரீநகர் என்னும் பெயர் வர ஒரு சுவையான வரலாறு உள்ளது. இங்கு ஸ்ரீயந்திரம் என்னும் ஒரு பெரிய பாறை இருந்தது, அதைப் பார்ப்பவர்கள் கூட துன்பம் அடைந்தார்கள். அதன் மேல் கால் பதித்தவர்கள் மாண்டு போயினர். 8ம் நூற்றாண்டில் ஆதி சங்கர பகவத பாதாள் இங்கு வந்த போது அந்த பாறையைத் தூக்கி அலக்நந்தாவில் தலை கீழாக எறிந்து மக்களுக்கு முக்திஅளித்தார்.  இந்நகரில் கமலேஷ்வர் ஆலயம் உள்ளது. திருமால் ஆயிரம் தாமரை மலர்களாகல் அர்ச்சனை செய்யும் போது ஒரு மலர் குறைந்ததால் தன் கண்ணையே எடுத்து அர்ச்சனை செய்ய அதற்கு மகிழ்ந்த சிவபெருமான் மஹாவிஷ்ணுவிற்கு சுதர்சன சக்கரம் வழங்கிய கோவில் என்பது ஐதீகம். இங்குதான் துணை இராணுவப் பயிற்சி பள்ளி உள்ளது. இங்கிருந்த GMVN  அலுவலகத்தில் இது வரை நாங்கள் செலவு செய்த பணத்தைத் திரும்பப்பெற்றுக்கொண்டு பயணத்தை தொடர்ந்தோம். 

 தெஹ்ரி அணையிலிருந்து பாயும் நீர்
பின்னர் நாங்கள் ருத்ரபிரயாகையை அடைந்தோம்.  ப்ரயாகை என்றால் சங்கமம்.  இங்கு கேதார்நாத்திலிருந்து ஓடி வரும் மந்தாங்கினியும், பத்ரிநாத்திலிருந்து ஓடி வரும்  அலக்நந்தாவும் சங்கமம் ஆகின்றன. இங்கிருந்து கேதார்நாத் செல்லும் பாதை பிரிகின்றது. நாங்கள் நேராக பத்ரிநாத் நோக்கி சென்றோம். பஞ்ச பிரயாகை என்னும் ஐந்து சங்கமங்களின் விவரங்களை இன்னொரு பதிவில் காணலாம். நாங்கள் ருத்ரபிரயாகை அதையும் போதே மணி மாலை 4மணியாகி விட்டது, மதிய உணவு ஸ்ரீநகரில் உண்ணலாம் என்று நினைத்தோம் அது முடியவில்லை இங்கும் சாப்பிடாமல் கையில் இருந்த நொறுக்குத் தீனிகளை கொறித்துக்கொண்டே கிளம்பினோம். இதை ஏன் சொல்கின்றேன் என்றால் இது போன்ற பயணத்தின் போது சிறிது, இனிப்பு, காரம், சாக்லெட், பிஸ்கட், ரொட்டி முதலியன கொண்டு செல்வது மிகவும் நல்லது. அதுவும் பெரிய குழுவாக செல்லும் ஆளுக்கு கொஞ்சம் கொஞ்சம் கொண்டி சென்று அனைவரும் கூடி காக்கை போல கூடி உண்டு மகிழலாம். 

 ஸ்ரீநகருக்கு அருகில் அலக்நந்தா நதி
இது ஒரு பொன் மாலைப் பொழுது

 ஒரு அழகிய ரோஜா மொக்கு

கரிய  மலைப்பாம்பு போல வளைந்து நெளிந்து செல்லும் பாதையின் ஒரு பக்கம் அலக்நந்தா துணையாக வர மறுபக்கம் ஓங்கி உயர்ந்த பச்சைக் கம்பளம் போர்த்தியது போல மலைகள் விளங்க    ருத்ரபிரயாகையிலிருந்து பின்னர் கர்ணபிரயாகையை கடந்தோம், பிண்டார் கங்காவும் அலக்நந்தாவும் சங்கமிக்கும் இடம் இது இங்கு வரும் போது அநேகமாக இருட்டிவிட்டது. அடுத்து நந்த பிரயாகையை கடந்தோம். நந்தாதேவி சிகரத்திலிருந்து பாய்ந்துவரும் நந்தாங்கினியும் அலக்நந்தாவும் சங்கமிக்கும் இடம்.  இரவானாலும் எப்படியும் பிபல்கோட் அடைய வேண்டும் என்று வண்டி ஓட்டுநர் வண்டியை ஒட்டிச்சென்றார்.  பின்னர் சமோலி என்னும் ஊரைத் தாண்டி இரவு சுமார் 8 மணியளவில் பீபல்கோட் அடைந்தோம். பசிய மரங்களைக் கொண்ட மலையின் மடியில் பச்சைப் பாய் விரித்தாற் போல  சமவெளி வயல்களின் நடுவில் அமைந்துள்ள அழகான ஊர் இது. இவ்வூரில் இட்லி தோசை கிடைக்கும் என்று கூறினார்கள், உடம்பு சரியில்லாத தேவேந்திரன் மட்டும் வெளியே சென்று சாப்பிட்டுவிட்டு வந்தார். காலையில் 4 மணிக்கு புறப்பட்டால் ஜோஷிர்மட்டில் 5:30  மணிக்கு  முதல் கேட் திறக்கும் போது பத்ரிநாத் நோக்கி சென்று விடலாம் என்று வழிகாட்டியல்ல வண்டி ஓட்டுநர் கூறினார். இரவில் வண்டி ஓட்ட அவர் தயாராக இருந்தது குறித்து மகிழ்ச்சியுடன் காலையில் இருந்து பேருந்தில் பயணம் செய்த அலுப்புத்தீர படுக்கச்சென்றோம். தாங்களும் சிறிது ஒய்வெடுத்துக்கொள்ளுங்கள் அன்பர்களே

அன்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு (2012) `நல்வாழ்த்துக்கள். 

10 comments:

ப.கந்தசாமி said...

நல்ல வர்ணனை. நான் சென்று வந்த நினைவுகளைத் திரும்பக் கொண்டு வந்தன.

S.Muruganandam said...

மிக்க நன்றி கந்தசாமி ஐயா.

Sankar Gurusamy said...

நாங்களே பயணம் செய்தது போல் இருக்கிறது..

பகிர்வுக்கு மிக்க நன்றி..

இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்..

http://anubhudhi.blogspot.com/

S.Muruganandam said...

மிக்க நன்றி சங்கர் ஐயா. தங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Spark Arts Kovai said...

தெஹ்ரி அணைக்குள் மூழ்கியுள்ள ஊர்களை பற்றி சொன்னது , மிக புதுமையான செய்தி தங்களுக்கு இவ்வளவு தகவல்கள் எப்படி தெரிந்தது!!! ஆச்சர்யமாக உள்ளது , தொடருங்கள் உளம் கனிந்த புத்தாண்டு நல வாழ்த்துக்கள்......

S.Muruganandam said...

//மிக புதுமையான செய்தி தங்களுக்கு இவ்வளவு தகவல்கள் எப்படி தெரிந்தது!!!//

அடியேன் பணிபுரியும் கம்பெனி டேராடூனில் உள்ளது, ஆகவே சில தகவல்கள் கிடைத்தது. மேலும் எங்கள் வழி காட்டியும் எல்லா கதைகளையும் கூறிக்கொண்டே வந்தார் அதைத் தான் தங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

Test said...

தங்களின் ஆன்மிக பயணத்தின் இடையே தெஹ்ரி அணையின் வரலாறையும், புவியியலையும் ஒரு சேர விவரித்ததற்கு நன்றி அய்யா.

இனிய புத்தாண்டு, வாழ்த்துக்கள்.

S.Muruganandam said...

மிக்க நன்றி லோகநாதன் ஐயா.

இராஜராஜேஸ்வரி said...

அத்தனை இடயூறுகளையும் தாண்டி அருமையான பயணம்..பாராட்டுக்கள்.!

S.Muruganandam said...

மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி