பணிக்கு சென்று விட்டதால் உடனடியாக பதிவிட முடியவில்லை இனி யாத்திரையை தொடரலாம் அன்பர்களே. வண்டி ஓட்டுனர் கூறியது போல காலை 4 மணிக்கு பூலோக வைகுண்டமான பத்ரிநாத்திற்கு கிளம்பினோம்.
ஜோஷிர்மட் நரசிம்மர் ஆலயம் நுழைவாயில்
திருப்பிருதி திவ்ய தேசம்
பீப்பல் கோட்டில் இருந்து முதலில் நாங்கள் கருட்கங்காவை கடந்தோம். கருடவாகனத்தில் பத்ரிநாதர் பத்ரி வனத்திற்கு செல்லும் போது கருடனை இறக்கிவிட்டுச் சென்ற இடம் என்பதால் கருட்கங்கா ஆயிற்று. அடுத்த இடம் தங்கானி இந்த ஊரில் நாரினால் பின்னப்பட்ட கூடைகள் மலிவாகக் கிடைக்கின்றன. அடுத்து ஹெலாங், இங்கிருந்து 9 கி.மீ தொலைவில் பஞ்சகேதார்களில் ஒன்றான கல்பேஷ்வர் கோயில் உள்ளது. அடுத்த இடம் ஜோஷிர்மட். ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட வடநாட்டுத்திருப்பதிகளில் ஒன்றான திருப்பிருதி என்று அழைக்கப்பட்ட ஜோஷிர்மட் என்னும் இத்தலத்தில் பெருமாளை முதலில் சேவித்தோம்.
ஜோஷிர்மட் ஆதி சங்கரர் மடம்
வாசுதேவர் ஆலய கோபுரம்
இந்த ஜோஷிர்மட் ஒரு இமயமலையின் பல தலங்களுக்கு நுழைவாயில் ஆகும். பத்ரிநாத், ஹேம்குண்ட் சாஹிப் என்னும் சீக்கியர்களின் புனிதத்தலம், மலர் பள்ளத்தாக்கு ஆகிய இடங்களுக்கு இங்கிருந்துதான் செல்ல வேண்டும். மேலும் திரிசூல், காமெட், நந்தாதேவி மலை சிகரங்களுக்கு மலையேறும் வீரர்களுக்கு ஜோஷிர்மட்தான் ஆதார முகாம். அவுலி என்னும் பனி சறுக்கு விளையாட்டுத்தலம் ஜோஷிர்மட்டின் அருகில் அமைந்துள்ளது. ஆதி சங்கர பகவத் பாதாள் நிறுவிய மடங்களில் ஒன்றான இம்மடம் மிகவும் புகழ் பெற்றது. இங்குள்ள கல்பவிருக்ஷத்தின் சுமார் 2400 வருடங்கள் பழமையானது. நரசிம்மர், துர்க்கையம்மன் கோவில்கள் முக்கியமானவை. இங்கிருந்து 11 கி.மீ தூரத்தில் தபோவனம் என்னும் பள்ளத்தாக்கில் பஞ்ச பத்ரிகளில் ஒன்றான பவிஷ்ய பத்ரி உள்ளது.
முன்பே கூறியது போல ஜோஷிர்மட்டிலிருந்து மேலே செல்லும் வழியில் போக்குவரத்து ஒழுங்கு படுத்தப்பட்டுள்ளது காலை 5.30 மணிக்கு கதவு திறந்து வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படுகின்றன. பின்னர் ஒரு மணிக்கு ஒரு முறை கதவு திறக்கப்படுகின்றது, அது போல பத்ரிநாத்தில் இருந்து கிளம்பி வருவதற்கும் குறிப்பிட்ட சமயங்கள் உள்ளன. மாலை ஆறு மணிக்கு மேல் வாகனங்கள் செல்ல அனுமதியில்லை கதவு அடைக்கப்படுகின்றது. யாத்திரிகளின் நன்மைக்காக இந்த ஏற்பாடு. நாங்கள் சுமார் ஐந்து மணியளவில் ஜோஷிர்மட்டை அடைந்தோம. வண்டி ஓட்டுநர் வண்டியை வரிசையில் நிறுத்தினார். கதவு திறக்க சமயம் உள்ளது என்பதால் நரசிங்கப் பெருமாளை தரிசிக்க சென்றோம்.
காலை சூரிய ஒளியில் பனிச்சிகரம்
இந்த கலி காலத்தில் நரசிம்ம மூர்த்தியின் கை உடைந்து விழும்போது ஜய விஜயர்களாகிய இரு மலைகள் இணைந்து தற்போது நாம் பத்ரிவனத்திற்கு பயணம் செய்யும் பாதை அடைபடும் அதற்குப்பின் இந்த பவிஷ்ய (வரும்காலம்) பத்ரியில்தான் நாம் பத்ரிநாதரை நாம் தரிசனம் செய்யமுடியும். குளிர்காலத்தில் பத்ரிநாத் கோயில் மூடப்படும் போது பத்ரிநாதர் இக்கோவிலில்தான் வந்து தங்குகின்றார்.
ஆதிசங்கரர் ஸ்தாபிதம் செய்த மடத்திற்கு அருகில் நரசிம்மர் சன்னதி அமைந்துள்ளது. இவர் சாளக்கிராம மூர்த்தி கூடவே, குபேரன், கருடன், பத்ரிநாதர், சீதா லக்ஷ்மணன் சகித இராமர், இராதா கிருஷ்ணர் சேவை சாதிக்கின்றனர். இந்த அதிகாலை வேளையிலும் கோவில் திறந்திருந்தது. அருமையாக பெருமாளை தரிசனம் செய்தோம்.
மறங்கொளாளரியுருவெனவெருவர ஒருவனது அகல்மார்வம்
திறந்து வானவர் மணிமுடிபணிதர இருந்த நலிமயத்துள்
இறங்கி ஏனங்கள் வளைமருப்பிடந்திடக் கிடந்தருகெரிவிசும்
பிறங்கு மாமணியருவியொடிழிதரு பிருதிசென்றடை நெஞ்சே!
என்ற திருமங்கையாழ்வாரின் திருப்பிருதி பாசுரம் சேவித்தோம்.
பெருமாளுக்கு எதிரில் பெரிய பிராட்டியார் சேவை சாதிக்கின்றார். தினமும் காலை 7 மணியளவில் நரசிம்மருக்கு அபிஷேகம் நடைபெறும் போது பெருமாளின் திருக்கரங்களை தரிசனம் செய்யாலாமாம். அதற்காக இரண்டாவது தடவை வாயில் திறப்பதற்காக காத்திருக்க வேண்டும் என்பதால் எங்களுக்கு அந்த பாக்கியம் கிட்டவில்லை.
பெருமாளுக்கு எதிரில் பெரிய பிராட்டியார் சேவை சாதிக்கின்றார். தினமும் காலை 7 மணியளவில் நரசிம்மருக்கு அபிஷேகம் நடைபெறும் போது பெருமாளின் திருக்கரங்களை தரிசனம் செய்யாலாமாம். அதற்காக இரண்டாவது தடவை வாயில் திறப்பதற்காக காத்திருக்க வேண்டும் என்பதால் எங்களுக்கு அந்த பாக்கியம் கிட்டவில்லை.
ஆதி சங்கரரின் மடம் பூட்டியிருந்ததால் சென்று தரிசனம் செய்ய முடியவில்லை. அருகிலேயே வாசுதேவர் கோவில் உள்ளது இக்கோவில் வளாகம் பஞ்சாதாயன முறையில் அமைந்துள்ளது. நடுநாயமாக வாசு தேவராக மஹா விஷ்ணுவும், நான்கு திசைகளில் அஷ்டபுஜ கணேசராக விநாயகர், கௌரி சங்கரராக சிவன், காளியாக அம்பாள் மற்றும் சூரியன் சன்னதிகள் அமைந்துள்ளன. இவ்வாறு ஐந்து தெய்வங்களையும் வழிபடுவது பஞ்சாயதன முறை ஆகும். இக்கோவில் வளாகத்தின் தெய்வ மூர்த்தங்கள் அருமையான கலை நயத்துடன் அமைந்துள்ளன. மேலும் இக்கோவில் வளாகத்தில் நவதுர்க்கைக்கு தனி சன்னதி உள்ளது. ஷைலபுத்ரி, பிரம்மசாரிணி, சந்தரகாந்தா, கூஷ்மாண்டா , ஸ்கந்த மாதா , காத்யாயனி , காலராத்ரி , மஹா கௌரி, சித்திதாத்ரி என்று மலைமகள் அன்னை பார்வதியை வழிபடுவது நவதுர்க்கை வழிபாடு ஆகும். அருமையான வெண்கலத்தால் ஆன கருடன் சிலை மஹா விஷ்ணுவின் எதிரில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கின்றார். இவ்வாறு நாங்கள் இரு கோவில்களையும் தரிசனம் செய்து முடிக்கவும், வாயில் திறக்கவும் சமயம் சரியாக இருந்தது. ஓடிச்சென்று பேருந்தில் அமர்ந்து பத்ரிநாத்தை நோக்கிய பயணத்தை தொடங்கினோம்.
விஷ்ணு ப்ரயாகை
புனல் மின்நிலையம்
பாண்டுகேஷ்வர் இராமர் ஆலயம்
ஹனுமன் ஆலயம்
பின்னர் கோவிந்த்காட்டை அடைந்தோம். இங்கிருந்துதான் ஹேமகுண்டம், மலர்ப்பள்ளத்தாக்கிற்கு செல்லும் பாதை பிரிந்து செல்கின்றது. பின்னர் பாண்டுகேஷ்வரை அடைந்தோம். இங்குதான் பாண்டு மஹாராஜா தனது இறுதி காலத்தை வசித்தாராம். பஞ்ச பத்ரிகளில் ஒன்றான யோகத்யான் பத்ரி இங்குள்ளது. இங்கே யோக தியானத்தில் பத்ரிநாதர் சேவை சாதிக்கின்றார். இங்கு மேலிருந்து வரும் வண்டிகளை ஒழுங்கு படுத்துவதற்கு ஒரு வாயில் உள்ளது எனவே எங்கள் வண்டி சுமார் அரை மணி நேரம் நின்றது. அப்போது அங்கிருந்த ஒரு இராமர் ஆலயத்தில் இராமரையும் அனுமனையும் தரிசனம் செய்தோம்.
வாயில் திறந்தவுடன் மேல் நோக்கி பயணத்தை தொடங்கினோம். முதலில் ஹனுமான் சட்டியில் அனுமனை தரிசித்தோம். அனுமன் பத்ரிநாதரை எண்ணி தவம் செய்தார் என்பது ஐதீகம். பீமன் மலர் பறிக்க வந்த போது ஹனுமன் கிழக்குரங்கு வடிவில் அமர்ந்திருந்தாராம், பீமன் தன் உடல் வலிமையின் மேல் கர்வம் கொண்டு அந்த குரங்கை தள்ளிப்போக சொல்ல, அதற்கு அந்த குரங்கு முடிந்தால் என் வாலை நகர்த்திப் போட்டுவிட்டு செல் என்று கூற பீமன் எவ்வளவு முயன்றும் வாலை நகர்த்தமுடியாமல் களைத்து நின்ற போது வாயு புத்திரன் காட்சி தந்து அருள் வழங்கினாராம். எனவே பாண்டவர்கள் பூஜித்த அனுமன் இவர்,. கோவில் அலக்நந்தாவின் கரையில் சிந்தூர வண்ணத்தில் அருமையாக அமைந்துள்ளது.
அடுத்து தேவ்தர்ஷனி இங்கிருந்துதான் பத்ரிவனம் துவங்குகின்றது. பத்ரிநாத்தை நெருங்க நெருங்க நர நாராயண சிகரங்கள் பல் வேறு முகங்களைக் காட்டியது. பத்ரிநாத் பேருந்து நிலயத்தை அடைந்தவுடன் நீலகண்ட சிகரத்தை ஒரு சிறு மணித்துளி நேரம் தரிசனம் செய்தோம். உடனே மேக மூட்டம் வந்து சிகரத்தை மறைத்துக்கொண்டது. இமய மலையின் பாடல் பெற்ற தலங்களுள் ஒன்று இந்த இந்திர நீலபர்வதம் என்று அம்மையின் ஞானப்பால் உண்ட ஆளுடையபிள்ளையாம் திருஞானசம்பந்தரின் பாடல் பெற்ற இந்த நீலகண்ட சிகரம்.
அதிகாலை நேரத்தில்தான் இந்த அற்புத சிகரத்தை நாம் முழுமையாக தரிசிக்கமுடியும். இறைவன் இங்கே நீலாம்பிகை உடனுறை நீலாசல நாதராக சேவை சாதிக்கின்றார். இந்திரன் பூஜித்த தலம். மேகங்கள் எப்போதும் கவிழ்ந்து சூழ்ந்திருப்பதால் நீலப்பருப்பதம் கொஞ்சு தமிழில் பாடுகின்றார் ஞானசம்பந்தப்பெருமான்.
இந்திர நீல பர்வதம்
நீலகண்ட சிகரம்
என்பொ னென்மணி யென்ன வேத்துவார்
நம்ப னான்மறை பாடு நாவினான்
இன்ப னிந்திரநீலப் பர்ப்பதத்
தன்பன் பாதமே யடைந்து வாழ்மினே
என்று பாடியுள்ளார் ஞானக்குழந்தை சம்பந்தப்பெருமான்.
இவ்வாறு பத்ரிநாதரை தரிசனம் செய்வதற்கு முன் ஒரு வைணவ திவ்ய தேசத்தையும், ஒரு சைவ பாடல் பெற்ற தலத்தினையும் தரிசனம் செய்தோம். எங்கள் பொருட்களயெல்லாம் GMVN சுற்றுலா மையத்தின் ஒரு அறையில் வைத்து விட்டு பத்ரிநாதரை தரிசனம் செய்ய கிளம்பினோம். அந்த தெய்வீக அனுபவத்தை அடுத்த பதிவில் காணலாமா அன்பர்களே?
8 comments:
நேரில் காண்பதுபோல் இருக்கிறது வர்ணனை.
மிக்க நன்றி , கந்தசாமி ஐயா.
thaamathamaaka pathivittaalum , arumaiyaaga ulladhu,, vaazhththukkal
வெகு அழகான வர்ணனைகள்.. பகிர்வுக்கு மிக்க நன்றி..
http://anubhudhi.blogspot.com/
மிக்க நன்றி ஸ்பார்க் ஆர்ட்ஸ்
மிக்க நன்றி சங்கர் ஐயா.
மிக அருமையாக இருந்தது உங்கள் எழுத்தாக்கம்
மிக்க நன்றி ஸ்பார்க் ஆர்ட்ஸ் ஐயா.
Post a Comment