Showing posts with label உத்திரகாசி. Show all posts
Showing posts with label உத்திரகாசி. Show all posts

Friday, December 30, 2011

இமயமலையில் ஒரு இனிய யாத்திரை -15

தங்கள் குழுவினர் என்ன செய்தார்கள் என்று அறிய ஆவலாக உள்ளது எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் பதிவிடுங்கள் என்று வேண்டிய ஸ்பார்க் கார்த்தி அவர்களுக்கு மிக்க நன்றி. ஐயா உங்களுக்காக இதோ அடுத்த பதிவு.

உத்தரகாசி சுற்றுலா மையம் 


ஜீப்பில் கேதார்நாத்திற்கு புறப்படுகின்றோம் (12-09-10)


எனவே அன்றைய தினம் (11-09-10) வழிகாட்டியை அழைத்து பேருந்து வராவிட்டாலும் பரவாயில்லை எப்படியாவது ஜீப் வழியாக எங்களை மேலே அழைத்து செல்லுங்கள் எப்படியாவது முழு யாத்திரையும் முடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டோம். யாத்திரை சுமுகமாக  செல்லாமல் ஜான் ஏறினால் முழம் வழுக்குவது போல சென்று கொண்டிருந்ததால் அவருக்கும் ஒன்றும் சுரத்தில்லை. ஆயினும் அவர்களது துணை மேலாளரிடம் பேசி ஒப்புதல் வாங்கிக்கொண்டார்.  இன்னும் ஒரு சின்ன பிரச்னையும் தோன்றியது. உத்தர காசியில் நாங்கள் இருவர் தங்கும் அறையில் தங்குவதால்  அதற்குண்டான அதிகப்படி வாடகையை நாங்கள் தர வேண்டும் என்று அதன் மேலாளர் கேட்க, இதில் எங்கள் தப்பு என்ன தங்கள் பேருந்து பழுதானதால் தானே நாங்கள் இங்கு தங்க வேண்டி வந்தது என்று கூறி அவரை சமாதனப்படுத்தினோம். எப்படியும் அடுத்த நாள்  இங்கிருந்து சென்று விடலாம் என்ற நம்பிக்கையில் தூங்கசென்றோம். 

  
 மலை வளம் மேகமூட்டத்தினூடே (12-09-10)

அடுத்த நாள் (12-09-10) காலையில் எழுந்து தயாராகி பேருந்து நிலையம் சென்று விசாரித்த போது தராசு செல்லும் வழி நாங்கள் வரும் போது மாட்டிக்கொண்ட அதே இடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டதால்  அடைபட்டுள்ளது எனவே வேறு வழியாக செல்ல வேண்டும் என்றார்கள். எனவே  இரண்டு ஜீப்களில் பயணப்பட்டோம். 

 JCB யந்திரம் நிலச்சரிவை சரி செய்யும் காட்சி

 நிலச்சரிவின் பின்புலத்தில் பேருந்து செல்லும் காட்சி


உத்தரகாசியில் இருந்து கேதார்நாத் செல்ல இரு பாதைகள் உள்ளன அவை என்னவென்று முதலில் காணலாமா? அன்பர்களே

புறப்படும் இடம்
செல்லும் இடம்
தூரம் கி.மீ
உயரம் மீ
உத்தரகாசி
தாராசு
28
1036
தாராசு
தெஹ்ரி
37
770
தெஹ்ரி
தன்சாலி
65
976
தன்சாலி
சிர்வடியா
31
2134
சிர்வடியா
தில்வாரா
42
671
தில்வாரா
அகஸ்தியமுனி
10
762
அகஸ்தியமுனி
குண்ட்சட்டி
15
976
குண்ட்சட்டி
குப்தகாசி
5
1479
குப்தகாசி
நாலா
3
1475
நாலா
ஃபடா
11
1601
ஃபடா
ராம்பூர்
9
1646
ராம்பூர்
சோன்பிரயாகை
3
1829
சோன்பிரயாகை
கௌரிகுண்டம்
5
1982
கௌரி குண்டம்
கேதார்நாத்
14(நடை)
3583

இரண்டாவது வழி உத்தரகாசி – தெஹ்ரி - கடோலியா -  கன்சாலி – குட்டு– பன்வாலி –மக்கு – த்ரியுக் நாராயண் – சோன்பிரயாக் – கௌரி குண்டம் –கேதார்நாத்.
 
எங்கள் பேருந்தில் திரு.வைத்தி  (13-09-10)

நாங்கள் இன்றைய தினம் இந்த இரண்டு வழிகளிலும் செல்ல முடியாததால் மூன்றாவது வழியில் தெஹ்ரி அணையின் பின்பக்கமாக பயணம் செய்தோம். உத்தரகாசியிலிருந்து  சௌரங்கி கால் என்னும் இடத்திற்கு பயணம் செய்தோம், பாதியில் குட்டீதி மாதா கோவில் உள்ளது. சௌரங்கி காலில் காலை உணவை முடித்துக்கொண்டோம். அங்கு ஒரு அருமையான சிவன் கோயில் இருந்தது அவரை வணங்கிப்புறபட்டோம். செல்லும் வழியில் தேவேந்திரனின் உடல் நிலை மேலும் மோசமாகியது, ஜீப்பில் குலுங்கி குலுங்கி பயணம் செய்ததால்   சாப்பிட்ட கொஞ்சமும் வாந்தி ஆகிவிட்டது, எப்படியோ பயணத்தை தொடர்ந்தோம். இப்பாதை கிராமப்பாதை என்பதால் ஒரு வழிப்பாதைதான், நடு நடுவே கிராமங்கள் வந்தன, கீழே ஓடும் ஆறு செழுமையான நெல் வயல்கள் மலையின் சரிவில்   என்று அற்புதமாக காட்சியை பார்த்துக்கொண்டே  பயணம் செய்தோம். போகப் போக தெஹ்ரி அணையின் நீர் அதிகமாகிக்கொண்டே வருவதைப் பார்த்தோம்,மலையில் ஏறு உச்சியை நோக்கி சென்று கொண்டிருந்தோம் மேகங்கள் வந்து உரசி சென்றன, மழைச்சாரல் வேறு துவங்கியது. இவ்வாறு பயணம் செய்து கோடார், லம்ப்காவ் வழியாக ராஜாகேத் என்னும் ஊரை நோக்கிச்சென்றோம். மலை உச்சியை அடிந்து விட்டோம் அது வரை எந்த பிரசனையும் இருக்கவில்லை சுமார் 3 கி.மீ இருக்கும் போது மீண்டும் ஒரி நிலச்சரிவு. பயணம் தடைப்பட்டது. அங்கு ஒரே ஒரு கடை மட்டுமே இருந்தது. ஒரு மணி நேரம் தங்கினோம். மேகங்கள் ஆட்டிய கண்ணாமூச்சி நாடகத்தையும் மழை பெய்யும் அழகையும், அந்தப் பகுதி மக்கள் எதுவும் நடக்காதது போல தங்கள் வயல்களில் பணி செய்வதையும், பெண்கள் மலையேறி சென்று, புல் மற்றும் சுள்ளிகள் பொறுக்கிக்கொண்டு வருவதையும் பார்த்தோம்.  இன்னும் மூன்று கி.மீதான்  இங்கு மாட்டிக்கொண்டேமே என்று வழ்காட்டி நொந்து கொண்டார். வேறு வழியில்லாமல் அந்த ஒத்தைக் கடையில் கிடைத்ததை சாப்பிட்டுவிட்டு  உத்தரகாசிக்கே திரும்பி கிளம்பினோம். வரும் வழியில் ஜீப் ஓட்டிகளின் கிராமம் வந்தவுடன் அவர்கள் அதற்கு மேல் வரவிரும்பாமல் எங்களை அங்கேயே இறக்கி விட்டனர். வழி எல்லா இடங்களிலும்  அடைபட்டு கிடப்பதால் யாரும் உத்தரகாசிக்கு வர தயாராக இருக்கவில்லை. கடைசியாக  இரண்டு ஜீப்காரர்கள் வந்தனர் அதிக பணம் கொடுப்பதாக சொன்னபின், அவர்களும் வழியில் ஒரு குறுக்கு வழியில் செல்ல யத்தனித்தனர், அவர்களிடம் பேசி தாஜா செய்து சென்ற வழியிலேயே  திரும்பி வந்து உத்தரகாசி அடைந்தோம்.

நிலச்சரிவு காட்சிகள்


உத்தரகாசியில் போன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோட என்று  வந்து இறங்கிய போது நொந்து நூடுல்ஸ்  ஆகிவிட்டோம்   என்பார்களே அது போல்தான் இருந்தது எங்கள் நிலை.   ஒரு நாள் முழுவதும் சுற்ரியும் பயன் இல்லாமல் போனது,  அதுவும் இல்லாமல் இரண்டு நாட்கள் வீணாகப்போனது. தேவேந்திரன் உடல் நலம் மோசமானதால் சிலர் இனி எங்கும் செல்ல வேண்டாம் இப்படியே ரிஷிகேஷ் சென்று விடலாம் என்று கூற ஆரம்பித்தனர்.  எப்படியோ அவர்களை சமாதனம் செய்து கேதார்நாத் செல்ல வேண்டாம், பத்ரிநாத்  மட்டும் செல்லலாம், பேருந்து  கோவில் வரையில் செல்லும்  என்பதால் அதிக பிரச்னை இருக்காது, மேலும் உடல் நலம் இலலாமல் யாத்திரை வந்த கோபால் பெருமாளை தரிசனம் செய்ய முடியும் என்பதாலும் அனைவரும் அதற்கு ஒப்புக்கொண்டனர். அப்போது பேருந்து ஓடுனரிடமிருந்து போன் வந்தது, வண்டி சரியாகி விட்டது காலையில் உத்தரகாசி வந்து விடுவோம் என்று கூறினார்.  இனி அடுத்த நாள் எப்படி விடியப்போகின்றதோ என்று தூங்கச்சென்றோம்.


தெஹ்ரி அணையின் சில காட்சிகள்




அடுத்தநாளும் (13-09-10) விடிந்தது காலை உணவை முடித்தோம், பேருந்தும் வந்து சேர்ந்தது, மிக்க மகிழ்ச்சியுடன் அதில் ஏறி , நல்ல பாதையிலேயே பயணம் செய்து  சம்பா சென்று விடலாம் என்று புறப்பட்டோம்,  முதலில் உத்தரகாசியின் சுரங்கபாதையை கடந்து   தராசு அடைந்தோம். அங்கிருந்த நிலச்சரிவு சரிசெய்யப்பட்டிருந்தது.  சின்யாலி சௌர் நோக்கி சென்றோம் அங்கே ஒரு நிலச்சரிவு,  ஒரு ஜீப் மாட்டிக்கொண்டிருந்தது. JCB  யந்திரம் வந்து நிலச்சரிவை சரி செய்து கொண்டிருந்த போது எங்களுடன் மாட்டிக்கொண்ட இரண்டு  இராணுவ லார்களில் பயணம் செய்து கொண்டிருந்த தமிழ் போர் வீரர்களுடன் பேசிக்கொண்டிருந்தோம்.  எங்களுக்கு முன் சென்ற ஒரு பேருந்தின் உள்ளேயே ஒரு பாறை வந்து விழுந்ததில் ஒரு பயணி காயம் அடைந்து விட்டார் என்று கேள்விப்பட்டோம். அங்குள்ள மக்கள் சிலர் காலில் GUM BOOT அணிந்து கொண்டு அந்த சேற்றில் நடந்து கடந்து சென்றனர். இவர்களைப் பார்த்து ஆச்சிரியப்படாமலிருக்க முடியவில்லை.    சுமார் இரண்டு மணி நேரத்தில்  இந்த நிலச்சரிவு சரி செய்யப்பட்டது. பின்னர் கண்டிசௌர் என்ற இடத்தில் மதிய உணவை உண்டோம். 

 அந்தி நேர செக்கர் வானம்

 
  ஒரு அழகிய மலர்
அதற்கு பிறகு பயணம் மெதுவாகவே இருந்தது, பல்வேறு இடங்களில் நிலச்சரிவு என்பதால்  பாதை ஒருவழிப்பாதை ஆகிவிட்டது. மேலும் அதிக நிலச்சரிவில் மாட்டவில்லை. அதற்குள் மாலையாகி விட்டது. அந்தி வானம் செந்நிறமாகி  எல்லாவற்றையும் செக்க சேவேல் ஆக்கியதை  புகைப்படம்  பிடித்தோம்.  சிறிது சூரிய வெளிச்சம் வந்ததால்  ஈரம்  மேகமாகி மேலே சென்று மழையாக பொழியும்  நிகழ்ச்சியை இரசித்தோம். எப்படியும் சம்பா அடைந்து விடவேண்டும் என்று ஓட்டுனர் இரவிலும் வண்டியை ஒட்டினார். இரவில் மலைகளின் பல இடங்களில் கிராமங்களில் மின் ஒளியில் ஒளிரும் அழகை கண்டு இரசித்தோம். காலையில் புறப்பட்ட நாங்கள் இவ்வாறு பல தடங்கல்களை கடந்து இரவு 8  மணியளவில் சம்பா அடைந்து, மிகவும் தேவைப்பட்ட ஒய்வெடுத்தோம். அடுத்த நாள் என்ன நடந்தது பத்ரிநாத் செல்ல முடிந்ததா? என்பதை அடுத்த பதிவில் காணலாம் அன்பர்களே.   

Thursday, December 1, 2011

இமயமலையில் ஒரு இனிய யாத்திரை -9

கங்கோத்ரி  நோக்கி பயணம்
நான்கு ஆலயங்களின் முதல் ஆலயமான யமுனோத்ரியில் அற்புதமான தரிசனம் முடித்துக்கொண்டு பர்கோட் வந்து தங்கினோம். இரவு முழுவதும் மழை கொட்டிக்கொண்டிருந்தது,  அதிகாலையில் எழுந்து பார்த்தபோது மழை இல்லை சுமார் ஏழு மணியளவில்  உத்திரகாசிக்கு கிளம்பினோம், இரவு உத்திரகாசியில் தங்கி பின் அடுத்தநாள் காலை கங்கோத்ரிக்கும் அங்கிருந்து பின் கௌமுக் செல்வதாகவும் அட்டவனை இருந்தது ஆனால் நடந்தது  என்ன?
யமுனோத்ரியிலிருந்து கங்கோத்ரி செல்லும்  பாதை
புறப்படும் இடம்
செல்லும் இடம்
தூரம் கி.மீ
உயரம் மீ
யமுனோத்ரி (நடை)
ஜானகிசட்டி
6
2576
ஜானகி சட்டி
பார்கோட்
41
1828
பார்கோட்
பிரம்மகால்
40
1158
பிரம்மகால்
தாராசு
15
1036
தாராசு
உத்ரகாசி
26
1158
உத்ரகாசி
கங்கோரி
4
1219
கங்கோரி
மனேரி
6
1372
மனோரி
பாட்வாரி
19
1677
பாட்வாரி
சுகி
32
2744
சுகி
ஜாலா
7
2439
ஜாலா
ஹர்சில்
6
2591
ஹர்சில்
லங்கா
13
2652
லங்கா
பைரான்காட்டி
3
2652
பைரான்காட்டி
கங்கோத்ரி
10
3140
ரிஷிகேசத்திலிருந்து கங்கோத்ரி நேராக செல்பவர்கள் நரேந்திர நகர், சம்பா, தெஹ்ரி வழியாக உத்தரகாசி அடைந்து பின்னர் மேலே சொன்ன வழியில் கங்கோத்ரியை அடையலாம். தற்போது கங்கோத்ரி வரையில் வாகனங்கள் செல்கின்றன, நடைப்பயணத்திற்கு அவசியம் இல்லை. 


முதல் நிலச்சரிவை தானே சரி செய்யும் மக்கள்
 
பார்க்கோட்டில் இருந்து கிளம்பி யமுனோத்ரி - கங்கோத்ரி பிரிவு வரை பயணம் செய்து வலப்பக்கமாக ( இடப்பக்கம் செல்லும் பாதை யமுனோத்ரிக்கு செல்கின்றது)   NH-94ல் சுமார் இரண்டு  கி.மீ பயணம் செய்திருப்போம். ஒரு நிலச்சரிவு என்று பேருந்து நின்று விட்டது எங்களுக்கு முன்னால் சுமார் ஐந்து வண்டிகள்தான் இருந்தன. ஆகவே நிலச்சரிவு அப்போதுதான் ஏற்பட்டிருக்க வேண்டும். வழிகாட்டி தொலைப்பேசி மூலம் பார்கோட் சுற்றுலா பவனத்திற்கு செய்தி அனுப்பினார்.    சுமார் இரண்டு மணி நேரம் காத்திருந்தோம்,  இது முக்கிய பாதை அல்ல என்பதாலோ, அல்லது விடாமல் பெய்கின்ற அடாத மலையால் பல்வேறு இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டதாலோ,  நிலச்சரிவை சரி செய்ய JCBஇயந்திரம் எதுவும் வரவில்லை. 

JCB இயந்திரம் ஒரு நிலச்சரிவை சரி செய்யும் காட்சி
கூடியிருந்த மக்களே நிலச்சரிவை சரி செய்ய முனைந்தனர். இந்த இடத்தில் சரிவு சேறாக இல்லாமல்  சிறிது ரப்பிஷ் என்போமே அது போல கருங்கல் தூளாக இருந்ததால். முதலில் விழுந்து கிடந்த  மரங்களை வெட்டி ஆற்றுக்குள் தள்ளினோம். பின்னர் மண்ணை சிறிது சமப்படுத்தி வண்டிகள் செல்வதற்கு ஏதுவாக செய்து முதலில் ஜீப் போன்ற சின்ன வாகனங்களை போகச்செய்து மண் சிறிது கெட்டியானவுடன் எங்கள் பேருந்தும் அந்த நிலச்சரிவை வெற்றிகரமாக கடந்தது. லேசாக நின்றிருந்த மழை மீண்டும் துவங்கியது, ஆனால் கொட்டவில்லை தூறல் போட்டுக்கொண்டிருந்தது.   வழியில் நின்ற வண்டிகளில் பயணம் செய்து அனைவருமே வந்து இப்பணியில் கலந்து கொண்டனர். குறிப்பாக இராஜஸ்தானத்தில் இருந்து வந்த ஒரு பேருந்தில் பயணம் செய்து ஒரு இளைஞர் குழு வழியெங்கும் இதுமாதிரி சேவை செய்து செய்தனர்.  பிறருக்கும் உதவும் நல்ல எண்ணம் கொண்ட அவர்களை வாழ்த்தினோம். சுமார் மூன்று மணி நேரம் ஆகியது அந்த முதல் நிலச்ச்ரிவைக் கடக்க இனி வரப்போகும் நாட்களிலும் இதை விட பெரிய நிலச்சரிவுகளை சந்திக்க உள்ளோம் என்று அப்போது உணரவில்லை நாங்கள்.
அங்கிருந்து சுமார் ஒரு கி.மீ சென்றிருப்போம்  ஒரு பெரிய மரம் சாலையின் குறுக்ககாக கிடந்தது வேறு வண்டி எதுவும் இல்லை என்பதால் முதல் வண்டி சென்றதற்குப்பிறகு நாங்கள் வருவதற்குள் இந்த மரம் விழுந்திருக்க வேண்டும் சேற்றிலே இறங்கி அனைவருமாக அந்த மரத்தை ஒரமாக தள்ளி மீண்டும் பயணத்தை துவக்கினோம், நடுவில் வந்த ஒரு கிராமத்தில் காலை உணவை உண்டோம், பார்க்கோட் பள்ளத்தாக்கில் உள்ளது என்று பார்த்தோம் அல்லவா?  எனவே  முதலில் மலையில் ஏறி பின் அடுத்த பக்கம் கீழிறங்கத் துவங்கினோம், நடுவே புதுப்புனலுடன் நுங்கும் நுரையுமாக ஒரு ஆறு ஓட இரு பக்கமும் பச்சைக்கம்பளம் போர்த்துக்கொண்டு முகத்தில் தாடி முளைத்துள்ளது போல கூம்பு போல குச்சி குச்சியான மரங்களுடன், நடு நடுவே பாம்பு போல வளைந்து செல்லும் பாதைகள்   என்று அருமையான காட்சி கண்ணில் பட்டது அப்படியே கீழே இறங்கி பிரம்மகால் என்ற ஊரை நெருங்கினோம். 
 
அப்போது பார்த்தால் சுமார் 20க்கு மேற்பட்ட வண்டிகள் நின்றிருந்தன இன்னும் ஒரு நிலச்சரிவு என்பதை உணர்ந்து கொண்டோம். வழிகாட்டி வெளியே சென்று நிலவரம் எவ்வாறு உள்ளது என்று அறியச்சென்றார். அவர் திரும்பி வந்து கூறிய செய்தி அதிர்ச்சியளிப்பதாக இருந்தது. இங்குள்ள நிலச்சரிவு எப்போது சரியாகும் என்று தெரியவில்லை எனவே இங்கே அறைகள் எடுத்து தங்கிக்கொள்ளவும் என்று அறிவுறை கூறினார். நாங்களும் நாக்ராஜ் காம்வ்லா என்ற அந்த கிராமத்தில் இருந்த ஒரு விடுதியில் நான்கு அறைகளை எடுத்து  தங்கினோம். 
 
நாகராஜ் காம்லாவின் அழகிய காட்சிகள்





நேரமாகியதே தவிர நிலச்சரிவு சரியாகவில்லை இரு பக்கமும் வண்டிகளின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே போனது கிராமத்தில் இருந்த உணவுப் பொருள்கள் எல்லாம் தீர்ந்து விட்டது. வழியில் உள்ள தங்கும் விடுதிகள் அனைத்தும் நிரம்பி விட்டது.  இரவு பலர் ஒன்றும் இல்லாமல் தங்களிடம் இருந்த இனிப்பு, காரம் ஆகியவற்றை உண்ணும்படி நேரிட்டது. பலர் திறந்த வெளியில் குளிரில் தூங்கினர். நாங்கள் வழிகாட்டி கூறியபடி அறை எடுத்ததாக் சிரமம் ஒன்றும் இருக்கவில்லை, ஆனால் எங்கள் திட்டம் அனைத்தும் மாறி விடுமே, எப்போது இங்கிருந்து செல்ல முடியும் என்ற கவலை சேர்ந்து கொண்டது.மாலை ஒருவாறு மழை நின்றது ஆயினுக் காலம் காலம் இல்லாத காலத்தில் பெய்த பெருமழையால் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு என்பதால் இந்த கிராமத்திற்கு ஒன்றும் முக்கியத்துவம் கிட்டவில்லை.   சாயுங்காலம் நிலச்சரிவை பார்த்துவிட்டு,  தேவேந்திரன் அவர்கள் நமது சாப்பாட்டிற்கு  ஏங்கியதால் நடந்து பிரம்மகால் என்னும் ஊருக்கு சென்று தக்காளிப் பழம் வாங்கிக்கொண்டு இரசம் வைத்து சாப்பிட்டோம். இரவில் தத்துவ விசாரம் செய்தோம். காலை எழுந்து  முதலில் அருகில் இருந்த ஒரு கோவிலுக்கு மலையேறி சென்று சீக்கிரம் இங்கிருந்து கிளம்பி செல்ல வேண்டும் என்று வேண்டிக்கொண்ட்டு வந்தோம்.  நிலச்சரிவு வரை சென்று பார்த்துவிட்டு வந்தோம், இரவு பெய்த மழையால் இன்னும் சகதி ஆகிவிட்டது, இதில் செல்ல முயன்ற ஒரு ஜீப் வேறு மாட்டிக்கொண்டது.  எப்போது சரியாகும் என்று சுமார் ஆயிரம் யாத்திரிகள் இரு பக்கமும் காத்துக் கிடந்தோம்.

நிலச்சரிவில் மாட்டிக்கொண்ட ஜீப் (சொக்கலிங்கம்)


 நிலச்சரிவு சரியாக காத்திருக்கும் இராஜஸ்தானி முதியவர்கள்

இதையெல்லாம் பார்த்து இரசிக்கும் கிராமத்து சிறுவர்கள்

இந்த சமயத்தில் இங்கிருக்கும் கிராமங்களின் எளிய மக்கள் எவ்வாறு கடுமையாக உழைத்து இங்கு வசிக்கின்றனர் என்று நேரில் பார்க்க ஒரு வாய்ப்புக்கிட்டியது. அருமையான மலர்கள். நெடிதுயர்ந்த பைன் மரங்கள், மலை ஆகியவற்றின் புகைப்படங்கள் எடுத்துத் தள்ளினோம். எப்படியும் கோமுக் செல்வது கடினம் எப்படியாவது நான்கு ஆலயங்களையும் தரிசனம் செய்யும் வாய்ப்பாவது கிட்ட வேண்டும் என்று  இறைவனை  துதித்துக்கொண்டு இருந்தோம்.

GMVN மூலமாக சென்றதால் இவ்வாறு எதிர்பாராமல்  தங்குவதற்கு அவர்களே பணம் செலுத்திவிடுவதாக ஒப்புக்கொண்டனர், ஆனால் அவர்களின் Asst. General Managerஉடன் திரு. தனுஷ்கோடி அவர்கள் பேசி சம்மதிக்க வைத்தார் ஆனால் வழிகாட்டியிடம் அதிக பணம் இல்லை என்பதால் எங்களை தரச்சொன்னார் பின்னர் திருப்பி தருவதாக வாக்களித்தார். இவ்வாறு எங்கோ  இமய மலையின் ஒரு குக்கிராமத்தில் மாட்டிக்கொண்ட அனுபவமும் கிடைத்தது.
 கல்யாணி நிலசரிவு
இரண்டாம் நாள்(9/9/10) அன்று காலை 9 மணியளவில் JCB இயந்திரம் வந்து முதலில் மாட்டிக்கொண்ட ஜீப்பை இழுத்து அகற்றியது. பின்னர் பன்னிரண்டு மணியளவில் முதல் வண்டி நிலச்சரிவை கடந்தது. இவ்வளவு வண்டிகள் இருபுறமும் நின்றதால் நாங்கள் கிளம்பும் போது மணி மூன்றாகிவிட்டது அங்கிருந்து சுமார் ஒரு கி.மீதான் சென்றிருப்போம் கல்யாணி என்ற ஊரின் அருகில் இன்னொரு நிலச்சரிவு,பெரிய ஒரு பாறை பாதையில் கிடந்தது அதை அனைவரும் சேர்ந்து நகர்த்தி போட்டுவிட்டு சுமார் அரை மணி நேரத்தில் அங்கிருந்து கிளம்பினோம். இங்கும் பாதை இரட்டிப்பாகும் பணி நடந்து கொண்டிருந்தது. பாதைக்காக மலையை செதுக்கியதால் ஏற்பட்ட சரிவுகளே அதிகம். நம்முடைய வசதிக்காக நாம் செய்யும் செயலால்தான் இவ்வளவு துன்பங்கள் ஏற்படுகின்றன என்பது கண்கூடு. வழியெங்கும் நிலச்சரிவுகள் வீடுகள், மரங்கள், மின்சாரக்கம்பங்கள் எல்லாம் மானாவாரியாக சாய்ந்து கிடந்தன. 

மின்கம்பங்கள் சாய்ந்து கிடக்கின்றன
பாகீரதி ஓடி வரும் அழகு

  மலை ஆடுகள்
 
 பாகீரதிக்கரையில் காத்திருக்கின்றோம்
சுமார் நூறு வண்டிகள் ஒன்றான் பின் ஒன்றாக சென்றது எதோ ஊர்வலம் செல்வது போல இருந்தது. வழியில் ஏற்பட்ட சேதங்களைப் பார்த்துக்கொண்டும் நடுவில் மேய்ந்து கொண்டிருக்கும் ஆடுகளை பார்த்துக்கொண்டும் மிகுந்த சிரமத்துடன் தாராசு அடைந்து அங்கிருந்து தெஹ்ரி அணையை பார்த்துக்கொண்டே உத்தர காசிக்காக திரும்பும் வழியில்  பாகீரதி நதிக்கரையில் இன்னொரு நிலச்சரிவு சூரியன்  மலையில் மறையும் காட்சி அருமையாக இருந்தது. புகைப்படம்  சலனப்படம் எடுத்துக்கொண்டோம். சுமார் இரண்டு மணி நேரம் அங்கே காத்திருந்தோம். இரவில் வண்டிகள் மலைப் பிரதேசத்தில் ஒடாது என்றாலும் வேறு வழியில்லாததால் பயணம் செய்து இரவு பத்து மணியளவில் உத்தரகாசி அடைந்தோம். அடுத்த நாள் கங்கோத்ரி செல்ல முடிந்ததா? என்று அறிந்து கொள்ள ஆவலாக உள்ளதா? சிறிது பொறுங்கள் விடிந்தவுடன் தெரிந்து விடும்.