Saturday, February 15, 2020

திருப்பாத தரிசனம் - 8

தியாகராஜர் எனப் பெயர் வரக்காரணம்

தியாக விநோதர்

 ஆயிரம் தாமரை போலும் ஆயிரம் சேவடியானும்
ஆயிரம் பொன்வரை போலும் ஆயிரம் தோளுடையானும்
ஆயிரம் ஞாயிறு போலும் ஆயிரம் நீள் முடியானும்
ஆயிரம் பேர்   உகந்தானும் ஆரூர் அமர்ந்த அம்மானே என்று அப்பர் பெருமான் பாடியபடி ஆயிரம் திருநாமம் கொண்டவர் சிவபெருமான் ஆயினும் தியாகராஜர் என்ற திருநாமம் அடியேனை மிகவும் ஈர்த்தது.  எனவே அப்பெயருக்கான காரணம் என்னவென்று அறிந்து கொள்ள வேண்டும் என்ற அவா அடியேன் மனதில் எழுந்தது. கல்கியின் பொன்னியின் செல்வன் புதினம் படித்தபோது அதற்கான ஓர் விடை கிடைத்தது. அதைத் தங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.   

திரு.கல்கி அவர்களின் பொன்னியின் செல்வன் புனிதத்தில் - அருள்மொழிவர்மர், திருவாரூர் ஆலயத்திற்கு விஜயம் செய்த போது அங்கிருந்த ஆலயத்தார்களைப் பார்த்துஇக்கோயிலின் இறைவருக்கு தியாகராஜர் என்று ஏன் பெயர் வந்ததுஎன்று கேட்டார்.
அதற்கு ஆலயத்தார்கள் “தேவர்களுக்குள் மகாதேவரும் மூவர்களில் முதல்வருமான சிவபெருமான் மூன்று உலகங்களிலும் வாழும் உயிர்கள் உய்யும் பொருட்டுச் செய்த தியாகங்களை ஆலயத்தார்கள் எடுத்துச் சொன்னார்கள். மூன்று உலகங்களையும் ஆக்கவும் அழிக்கவும் வல்ல பெருமான் தம்முடைய பக்தர்களுக்கு அருள் புரியுமாறு மேற்கொண்ட கஷ்டங்களைப் பற்றிக் கூறினார்கள். உயிர்கள் உய்யும் பொருட்டு தவக்கோலம் பூண்டு மயானத்தில் தவம் புரிந்ததைப் பற்றிச் சொன்னார்கள். எல்லா உலகங்களுக்கும் இறைவர் பிக்ஷாடன மூர்த்தியாகத் தோன்றி பிச்சை எடுத்த வரலாற்றைக் கூறினார்கள். தில்லை அம்பலத்தில் வந்து ஆடியதுப் பற்றிச் சொன்னார்கள். பிட்டுக்கு மண் சுமந்து பாண்டிய மன்னனிடம் பிரம்பினால் அடிபட்டது பற்றியும் கூறினார்கள்.

அத்தகைய தியாகராஜப்பெருமான் கோயில் கொண்டு எழுந்தருளியுள்ள திருவாரூரில் பழைய காலத்தில் அருள்மொழிவர்மரின் முன்னோர்கள் வசித்து வந்ததையும், மனுநீதி சோழன் பசுவிற்கு நீதி வழங்கும் பொருட்டு தன் அருமை மகனையே தியாகம் செய்த அற்புதத்தையும் நினைவூட்டினார்கள்”   என்று படித்தேன்.



இவை மட்டுமா இன்னும் ஏதாவது காரணம் உள்ளனவா என்று யோசித்த போது அடியேன் மனதில் தோன்றிய சில எண்ணங்கள்.  பாற்கடலைக் கடைந்த போது பாற்கடலில் இருந்து வந்த மஹாலட்சுமி, அமிர்தம், ஐராவதம், சிந்தாமணி,  கற்பக மரம், பாரிஜாதம் உச்சைசிரவசு, காமதேனு  போன்ற  சிறந்தவற்றை எல்லாம் மற்ற தேவர்களுக்கு அளித்து விட்டு தான் மட்டும்  எவருமே விரும்பாத, ஆலகால விடத்தை ஒரு நொடியில் விழுங்கி தேவர்கள், முனிவர்கள், மானிடர்கள் மற்றும் சகல ஜீவராசிகளையும் காத்த பரம கருணாமூர்த்தி எனவே அவரை தியாகராஜர் என்று கொண்டாடுகிறோம்.  அவ்வெம்பிரானை நாம் திருநீலகண்டர் என்றழைத்துப்  போற்றுகின்றோம்.

க்கருணைக்கடல், தாயினும் சிறந்த தயாபரன், ணிவது புலித்தோல் ஆடை, ஆபரணங்களோ பாம்புகள், இருப்பதோ சுடுகாடு. அவர் யோகத்தில் அமர்ந்ததும் பனி சூழ்ந்த  திருக்கயிலாயம், ணிவதோ கொன்றை, எருக்குஊமத்தை போன்ற பிறர் விரும்பாத  மலர்கள், வாகனம் நந்தி. இவையெல்லாமும் யாரும் விரும்பாதவை ஆயினும் அவற்றை  இவர் விரும்பி ஏற்றுக்கொண்டார்.

தியாகரின் பின்னழகு

பூமியையே பாதாளத்திற்கு அழுத்திவிடக்கூடிய வேகத்துடன் பாய்ந்து வந்த ஆகாய கங்கையை தன் சடையில் தாங்கி இஞ்ஞாலத்தைக் காத்த  பெருமான் இவர. இவரை கல்லாலும், வில்லாலும் அடித்தும், காலால் உதைத்தும் பல அடியார்கள் வழிபட்டாலும் அவற்றை எல்லாம் பொறுத்துக்கொண்டு அவர்களுக்கெல்லாம் அருளினார், தன் அன்பனுக்காக பிரமனும், திருமாலும்., தேவர்களும் முனிவர்களும் காணா மலர்ப்பாதம் தோய திருவாரூரின் வீதிகளிலே நடந்தார், திருக்கச்சூரிலே வீடு வீடாகச் சென்று பிச்சை எடுத்தார், நரி தனைப் பரியாக்கி, பரிதனை நரியாக்கி,  பிட்டுக்கு மண் சுமந்து அரசனிடம் பிரம்படியும் பெற்றார், தன் பக்தைக்காக தானே தாயுமாகி  வந்து பிரசவம் பார்த்தார். பிள்ளையை பேணினார்,   இவற்றால் அன்றோ  நாம் தாயிற்சிறந்த தயாவான தத்துவனை   நாம் தியாகராஜர் என்று கொண்டாடுகின்றோம்.  


தரிசனம் தொடரும் . . . . . .

4 comments:

கோமதி அரசு said...

//இவரை கல்லாலும், வில்லாலும் அடித்தும், காலால் உதைத்தும் பல அடியார்கள் வழிபட்டாலும் அவற்றை எல்லாம் பொறுத்துக்கொண்டு அவர்களுக்கெல்லாம் அருளினார், தன் அன்பனுக்காக பிரமனும், திருமாலும்//

வசந்த கோகிலம் அவர்கள் பாட்டு நினைவுக்கு வருது தந்தை தாய் உருந்தால் உலகத்தில் இந்த தாழ்வு எல்லாம் வருமோயா என்ற பாடலில் இந்த வரிகள் எல்லாம் வரும்.
பதிவும், படங்களும் அருமை.

S.Muruganandam said...

//தந்தை தாய் இருந்தால் உலகத்தில் இந்த தாழ்வு எல்லாம் வருமோயா //

அருமை, அருமை. பொன்னையா பிள்ளையின் அருமையான பாடல். அடியேனும் கேட்டேன்.

மிக்க நன்றி.

வெங்கட் நாகராஜ் said...

தியாகேசன் அருள் அனைவருக்கும் கிடைத்திடட்டும்.

சிறப்பான தகவல்களை உங்கள் பதிவு வழி தெரிந்து கொள்ளத் தந்த உங்களுக்கு மனம் நிறைந்த நன்றி.

S.Muruganandam said...

//தியாகேசன் அருள் அனைவருக்கும் கிடைத்திடட்டும்.//

அப்ப்டியே ஆக தியாகரை வேண்டுகின்றேன். மிக்க நன்றி வெங்கட் ஐயா.