ஜோஷிர்மட் நரசிம்மர் ஆலயம்
புராணங்களின்படி ஜோஷிர்மட் கந்தமாதன பர்வதத்திற்கு நுழைவாயில். குளிர்காலத்தில் பத்ரிநாதர் ஆலயம் மூடப்படும் போது உற்சவர் இங்கு வந்து தங்குகின்றார். திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற திருப்பிருதி திவ்விய தேசம் இது. தற்போது பெருமாள் சௌம்ய நரசிம்ம மூர்த்தியாக எழுந்தருளி அருள் பாலிக்கின்றார். பிரகலாதனுக்காக இவ்வாறு சாந்த கோலத்தில் சேவை சாதிக்கின்றாராம். யோகேந்திரன் பிரகலாதன் சதா சர்வ காலம் நம் வினைக்கு நஞ்சான நாராயண மந்திரம் செபித்துக் கொண்டிருக்கும் தலம் இது. பத்ரிநாத யாத்திரை ஜோஷிர்மட் தரிசனத்தாலே முழுமையடைகின்றது என்பது ஐதீகம்.
புதுப்பொலிவுடன் ஒளிரும் நரசிம்மர் ஆலயம்
ஜோஷிர்மட் இமயமலையின் பல தலங்களுக்கு நுழைவாயில் ஆகும். மூன்று பக்கங்களிலும் திரிசூலி, பத்ரி, காமெட் ஆகிய பனிச்சிகரங்களால் சூழப்பட்டுள்ளது. மேகம் இல்லாத நாட்களில் இப்பகுதியின் விண்ணளவு உயர்ந்து நிற்கும் நந்தாதேவி பனிச்சிகரத்தைக் காணலாம். பத்ரிநாத், ஹேமகுண்ட் சாஹிப் என்னும் சீக்கியர்களின் புனிதத்தலம், மலர் பள்ளத்தாக்கு ஆகிய இடங்களுக்கு இங்கிருந்து செல்லலாம். மேலும் திரிசூல், காமெட், நந்தாதேவி மலை சிகரங்களுக்கு மலையேறும் வீரர்களுக்கு இந்நகரம் ஆதார முகாம். அவுலி என்னும் பனி சறுக்கு விளையாட்டுத்தலமும் அருகிலமைந்துள்ளது.
ஆதிசங்கரர் மடத்திற்கு அருகில் முக்தியளிக்கும் நரசிம்மர் சன்னதி அமைந்துள்ளது. இவர் சுயம்பு சாளக்கிராம மூர்த்தி, ஆதிசங்கரர் ஆராதித்த இவர் இடது காலை மடக்கி, வலது கால் மண்டியிட்டது போல் இருக்க, இடது திருக்கரத்தை கீழே ஊன்றி வலது காலின் மேல் சக்கரம் தாங்கிய வலத்திருகரத்தை வைத்து எழிலாக சாந்த கோலத்தில் சேவை சாதிக்கின்றார். காலை 6:30 மணிக்கு தினமும் திருமஞ்சனம் நடைபெறுகின்றது. அப்போது பெருமாளின் முழுயுருவையும் சேவிக்கலாம்.
பக்கவாட்டுத்தோற்றம்
சனத்குமார சம்ஹிதையில் ஜோஷிர்மடத்தில் உள்ள நரசிம்மரின் திருக்கரம் உடையும் போது பத்ரிநாத் செல்லும் வழி அடைபடும் .
இங்கிருந்து 11 கி.மீ தூரத்தில் தபோவனம் என்னும் பள்ளத்தாக்கில் பஞ்சபத்ரிகளில் ஒன்றான பவிஷ்யபத்ரி உள்ளது. இக்கலிகாலத்தில் ஜோஷிர்மட் நரசிம்ம மூர்த்தியின் இடது திருக்கர பருமன் குறைந்து கொண்டே வருகிறதாம் அது இவ்வாறு முழுதுமாக குறைந்து எப்போது உடைந்து விழுகின்றதோ அப்போது ஜய-விஜயர்களாகிய இரு மலைகள் இணைந்து தற்போது பத்ரிவனத்திற்கு நாம் பயணம் செய்யும் பாதை அடைபடும் அதற்குப்பின் இப்பவிஷ்ய (எதிர்கால) பத்ரியில் நாம் பத்ரிநாதரை தரிசனம் செய்ய முடியும் என்பது ஐதீகம்.
இங்கிருந்து 11 கி.மீ தூரத்தில் தபோவனம் என்னும் பள்ளத்தாக்கில் பஞ்சபத்ரிகளில் ஒன்றான பவிஷ்யபத்ரி உள்ளது. இக்கலிகாலத்தில் ஜோஷிர்மட் நரசிம்ம மூர்த்தியின் இடது திருக்கர பருமன் குறைந்து கொண்டே வருகிறதாம் அது இவ்வாறு முழுதுமாக குறைந்து எப்போது உடைந்து விழுகின்றதோ அப்போது ஜய-விஜயர்களாகிய இரு மலைகள் இணைந்து தற்போது பத்ரிவனத்திற்கு நாம் பயணம் செய்யும் பாதை அடைபடும் அதற்குப்பின் இப்பவிஷ்ய (எதிர்கால) பத்ரியில் நாம் பத்ரிநாதரை தரிசனம் செய்ய முடியும் என்பது ஐதீகம்.
108 திவ்ய தேசங்களுள் முதன்மையானது ஜோஷிர்மட், இங்கு முக்தியளிக்கும் நரசிம்மமூர்த்தி அருள் பாலிக்கின்றார்.
இவ்வருடம் திருமஞ்சனத்திற்கு முதலிலேயே முன் பதிவு செய்திருந்தோம் எனவே திருமஞ்சனம் சேவிக்கும் பாக்கியம் அடியோங்களுக்கு கிட்டியது. தேவி மஹாத்மியம், விஷ்ணு சகஸ்ரநாம, ஸ்ரீசூக்தம், லக்ஷ்மிநரசிம்ம கராவலம்பம் முதலிய சுலோகங்களை பாராயணம் செய்து கொண்டே பட்டர் திருமஞ்சனம் செய்கின்றார். முதலில் அலங்காரம் களைத்து பெருமாளை உண்மையான கோலத்தில் அனைவருக்கும் சேவை செய்து வைக்கின்றார். பின்னர் அவருக்கான திருமஞ்சன பீடத்தில் வைத்து பால், குங்குமப்பூ சாறு, சந்தனம் ஆகியவற்றால் மூல மூர்த்தி, திருப்பாதுகைகள், உக்ர நரசிம்மர், தவழும் கண்ணன், அனுமன், வேணு கோபாலர், விஷ்ணு ஆகிய உற்சவர் சிலைகளுக்கும் திருமஞ்சனம் செய்து .பின்னர் அலங்காரம் செய்து ஆரத்தி காட்டுகின்றார். இச்சமயத்தில் ஊன்றிய இடக்கை மிகவும் மெலிதாக இருப்பதை சேவிக்க முடியும். மற்ற சமயங்களில் அலங்காரத்துடன் முகச்சேவை மட்டுமே கிட்டுகின்றது. பெருமாளுடன் குபேரன், கருடன், பத்ரிநாதர், கண்ணன், சீதா லக்ஷ்மணன் சகித இராமர், இராதாகிருஷ்ணர், உத்தவர், கிராம தேவதை சண்டி ஆகியோர் பஞ்சாயதான முறையில் சேவை சாதிக்கின்றனர். .
மறங்கொளாளரியுருவெனவெருவர ஒருவனது அகல்மார்வம்
திறந்து வானவர் மணிமுடிபணிதர இருந்த நலிமயத்துள்
இறங்கி ஏனங்கள் வளைமருப்பிடந்திடக் கிடந்தருகெரிவிசும்
பிறங்கு மாமணியருவியொடிழிதரு பிருதிசென்றடை நெஞ்சே!
என்ற திருமங்கையாழ்வாரின் திருப்பிருதி பாசுரம் சேவித்தோம். பெருமாளுக்கு எதிரில் ஆதி சங்கரரும், வேத வியாசரும் ஆராதித்த பெரிய பிராட்டியார் சேவை சாதிக்கின்றார்.
முன்புறத்தோற்றம்
அருகிலேயே வாசுதேவர் ஆலய வளாகம் உள்ளது. இக்கோயில் வளாகம் பஞ்சாயதன முறையில் அமைந்துள்ளது. நடுநாயமாக வாசுதேவராக திருமால் நின்றகோலத்தில் சேவை சாதிக்கின்றார் உடன் அண்ணன் பலராமனும் சேவை சாதிக்கின்றார், நான்கு திசைகளில் அட்டபுய கணேசராக விநாயகர், கௌரி சங்கரராக சிவன் (சோதீசுவர மஹாதேவர்), காளியாக அம்பாள் மற்றும் சூரியன், பைரவர் சன்னதிகள் அமைந்துள்ளன. இவ்வாறு ஐந்து தெய்வங்களையும் வழிபடுவது பஞ்சாயதன முறை ஆகும். இக்கோயில் வளாகத்தின் தெய்வ மூர்த்தங்கள் அருமையான கலை நயத்துடன் அமைந்துள்ளன. அனைத்து தெய்வ மூர்த்தங்களும் தத்ரூபமாக ஆடை ஆபரணங்களுடன் அமைத்த சிற்பிகளின் கைவண்ணத்தை வியக்காமல் இருக்க முடியாது.
நவ துர்க்கை சன்னதி
மேலும் இக்கோயில் வளாகத்தில் நவதுர்க்கைக்கு தனி சன்னதி உள்ளது. ஷைலபுத்ரி, பிரம்மசாரிணி, சந்தரகாந்தா, கூச்மாண்டா, கந்த மாதா, காத்யாயனி, காலராத்திரி, மஹாகௌரி, சித்திதாத்ரி என்று மலைமகள் அன்னை பார்வதியை வழிபடுவது நவதுர்க்கை வழிபாடு ஆகும். வடநாட்டில் நவராத்திரியின் போது நவதுர்கா வழிபாடு சிறப்பு.
கருட பகவான்
அருமையான வெண்கலத்தால் ஆன கருடன் சிலை வாசுதேவருக்கு எதிரில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றார். அனுமனுக்கும், சிவபெருமானுக்கும் தனிச் சன்னதிகள் உள.
யாத்திரை தொடரும் . . . .
6 comments:
பெருமாளுடன் குபேரன், கருடன், பத்ரிநாதர், கண்ணன், சீதா லக்ஷ்மணன் சகித இராமர், இராதாகிருஷ்ணர், உத்தவர், கிராம தேவதை சண்டி ஆகியோர் பஞ்சாயதான முறையில் சேவை சாதிக்கின்றனர். //
நானும் தரிசனம் செய்து கொண்டேன்.
மிக அருமையாக சொல்லி வருகிறீர்கள்.
வெண்கல கருடர் அழகு. கோவில் படங்கள் அருமை.
சிறப்பான யாத்திரை. உங்கள் மூலம் நாங்களும் சென்று வந்த உணர்வு. தொடரட்டும் யாத்திரை.
மிக்க நன்றி கோமதி அம்மா.
தொடர்கிறேன். மிக்க நன்றி வெங்கட் ஐயா.
உங்களோடு நாங்களும் பயணித்த ஒரு அனுபவத்தை தந்ததற்கு மிகவும் நன்றி ஐயா
வாருங்கள் கண்ணன், தொடர்ந்து பயணியுங்கள் ஐயா.
Post a Comment