Wednesday, August 8, 2018

நாலம்பல யாத்திரை - 6

பாயம்மல் சத்ருக்னன் ஆலயம்


 மற்ற அம்பலங்களின்  தரிசனம்:  




கேரளாவின் நாலம்பலம் என்று அழைக்கப்படும் ராம சகோதரர்களுக்கான நான்கு கோவில்களில் நாம் நிறைவாக தரிசிக்கப் போகின்ற கோவில் பாயம்மல் என்னும் இடத்தில் அமைந்திருக்கும் சத்துருக்னன் கோவில் ஆகும். இந்த ஆலயத்தில் உள்ள பெருமாளை வழிபடுபவர்களுக்கு எதிரிகளால் வரும் துன்பங்கள் எல்லாம் குறைந்து, செல்வங்கள் குவிந்து வாழ்க்கை வளமடையும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும். 

சத்துருக்கனன் கோவில் அமைந்திருக்கும் பாயம்மல்பரதன் கோவில் அமைந்திருக்கும் இரிஞ்ஞாலக்குடாவில் இருந்து கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது. இந்த திருத்தலத்திற்குச் செல்ல இரிஞ்ஞாலக்குடாவிலிருந்து பேருந்து வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன.



ஓம் சத்ருக்னாய நம: 


பாயம்மலில் அமைந்திருக்கும் சத்துருக்னன் கோவில், திருப்பிரையார் இராமர், இரிஞ்ஞாலக்குடா பரதன், திருமூழிக்களம் இலட்சுமணர் கோவில்களைப் போல் பிரம்மாண்ட கோவில் இல்லை. சிறிய அளவிலான ஆலயமாக இருந்தாலும், மூர்த்தி சிறியதானாலும் கீர்த்தி பெரியது என்பதைப் போல, இத்தல இறைவனின் சக்தியும் பெருமைக்குரியதுதான்.


 அழகான மண்டபத்தில் தங்கக் கவசம் பூண்ட பலி பீடம் 

அடியோங்கள் சென்ற போது இவ்வாலயம் புதிப்பிக்கப்பட்டு சமீபத்தில் தான் கும்பாபிஷேகம் நடைபெற்றிருக்கும் போல தோன்றியது. ஆலய மதில் சுவர் மற்றும் கதவுகளில் பிரசாத கட்டிடத்தில் சக்கரத்தாழ்வார் வரவேற்றார். பலி பீடம் மற்றும் நுழை வாயில் புதிதாக வேயப்பட்ட பொன் தகடுகளால் மின்னிக் கொண்டிருந்தது. பலி பீடம் ஒரு  அழகான கலை நுணுக்கம் கொண்ட தூண்களுடன் கூடிய மண்டபத்தில் அமைந்துள்ளது. ஆலயம் முழுவதும் புதிதாக பூசப்பட்ட வர்ணக்கலவையினால் ஒளிர்ந்து கொண்டிருந்தது. எங்கெங்கு காணினும் “ஓம் சத்ருக்னாய நம:” என்னும் மந்திரம் கண்ணில் பட்டது. ஆலயத்திற்கு எதிரே பிரம்மாண்டமான அரசமரம்.


பாயம்மல் ஆலயத்தின் முன்புறத் தோற்றம் 

இவ்வாலயத்தின் கருவறை  சிறியதாக   செவ்வக வடிவிலும், மேற்கூரை பிரமிடு வடிவத்திலும் அமைந்துள்ளது. ஆலய கருவறையில் நின்றிருக்கும் சத்துருக்ன பெருமாள்  சதுர் புஜ விஷ்ணுவாக நான்கு திருக்கரங்களுடன், வலதுபுறம் மேற்கரத்தில் சக்கரம், கீழ் கரத்தில் தாமரை மலர், இடதுபுறம் மேற்கரத்தில் சங்கு, கீழ் கரத்தில் கதை ஆகியவைகளைக் கொண்டு, நின்ற நிலையில் சேவை சாதிக்கின்றார். இந்தக் கோவில் வளாகத்தில் கணபதிஅனுமன் ஆகியோருக்குத் தனிச் சன்னிதிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஆலயத்திற்குள் பின் புறம் ஒரு தீர்த்தம் உள்ளது.




ஸ்ரீமஹாவிஷ்ணு, பூலோகத்தில் இராமனாகப் பிறப்பெடுத்த போது, வைகுண்டத்தில் அவரைத் தாங்கும் ஆதிசேஷனே, இலட்சுமணனாகப் பிறந்து, எப்போதும் அவருக்குத் துணையாக இருந்து அவரைக் காத்தார். விஷ்ணுவின் திருக்கரங்களில் விளங்கும் சங்கு பரதனாகவும், சக்கரம் சத்துருக்கனனாகவும் பிறந்து அவருக்கு சேவை செய்தனர். லக்ஷ்மணன்,  சத்ருகனன் இருவரும்    இரட்டையர்   தசரதரின்            மூன்றாவது    மனைவி               சுமித்ரைக்கு  பிறந்தவர்கள்.



ராமனை உடனிருந்து பார்த்துக் கொண்ட லட்சுமணனை விட, பரதனே உயர்ந்தவன். பரதன் ஆசையே இல்லாதவன், அண்ணன் காடு சென்றதும், அவனுக்குக் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி ஆட்சியைப் பிடித்திருக்கலாம், அரசனாகி இருக்கலாம். ஆனால், அப்படிச் செய்யாமல், அண்ணனின் காலணியைப் பெற்று வந்து, அதையே அரியாசனத்தில் வைத்து நாட்டை ஆண்டவன் அவன். பக்தனைப் பாகவதன் என்பர். பகவானை விடப் பாகவதனே உயர்ந்தவன் என்பதை உணர்த்தியவன் பரதன்.

பகவான் ராமனுக்குப் பாகவதனானப் பரதன் சேவை செய்தான் என்றால், அந்தப் பாகவதனுக்குச் சேவை செய்தவன் சத்துருக்னன். பரதன், ராமன் மேல் கொண்ட பக்தியை வழிமொழிந்து வாழ்ந்தவன் சத்துருக்னன் என்றால் அது மிகையல்ல. காட்டுக்குச் சென்ற  இராமன், பதினான்கு ஆண்டுகள் கடந்தும் அயோத்திக்கு வராததால், மனமுடைந்த பரதன் நெருப்பில் விழுந்து உயிர் விடத் துணிந்தான். நெருப்புக் குண்டத்தில் குதிக்க தயாரான நிலையில், சத்துருக்கனனைப் பார்த்து, ‘நீயே இனி இந்த நாட்டை ஆள வேண்டும்என்றான் பரதன். ஆனால் மண்ணின் மீது ஆசையில்லாத சத்துருக்னன் பேசாமல் இருந்து அமைதி காத்தான். அவன் அதிகம் பேசியதில்லை. ஆனாலும் கூட தான் கொண்ட இராம பக்தியை அமைதியாக இருந்த உயர்வாக்கிக் காட்டியவன் என்கிறது இராமாயண இதிகாசம்.


தீர்த்தக்குளம்

ராமர் பட்டாபிஷேகம் செய்து கொண்ட பின் லவணாசுரனை வென்றவர் சத்ருகனன் ஆவார். மது  என்ற அரக்கன்        சிவனைக்  குறித்து  தவம் செய்து ஒரு சூலம்   பெற்றான்.  உனக்கும்,  உன் மகன் இலவணனுக்கும் எதிரிகளை  ஒழிக்க இது உதவும்  என்று கொடுத்தார். லவணனின்  காலத்திற்குப்  பிறகு சூலம் என்னிடம் வந்துவிடும்  என்று  சிவபெருமான்   கூறி விட்டு, மறைந்து விட்டார்  மது நல்லவனாயிருந்தான்.  மகன் நேர் எதிர். துஷ்டனான லவணனை  அழிக்க  ராமர் சத்ருக்னனிடம்  சொல்கிறார். அண்ணலின் ஆணை கேட்டு அதை  நிறைவேற்றத்  தயாராக, கோப வடிவத்தில் இத்தலத்தில்  நிற்கிறார் சத்ருக்னர் என்பது ஐதீகம்.  அத்தகைய சிறப்பு வாய்ந்த சத்துருக்னனுக்கு, கேரளாவின் பாயம்மலில் தனியாகக் கோவில் ஒன்று அமைக்கப்பட்டிருப்பது மிகவும் சிறப்புக்குரியதாகவே கருதப்படுகிறது.

பாயம்மலில் இருக்கும் சத்துருக்கனன் கோவில் அதிகாலை 4.30 மணி முதல்  10 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறக்கப்படுகிறது. இந்த ஆலயத்தில் தினமும் உஷா பூஜை, உச்சி கால பூஜை, அத்தாழ பூஜை என்னும் மூன்று கால பூஜைகள் செய்யப்பட்டு வருகின்றன.

                                            எங்கெங்கு காணிணும் சுதர்சன சக்கரம்


சத்ருக்னன் என்றால் சத்ருக்களை (எதிரிகளை) வெல்பவன் என்று பொருள். பொதுவாக, இவரை வழிபடுபவர்களுக்கு எதிரிகளால் வரும் துன்பங்கள் எல்லாம் குறைந்து, செல்வங்கள் குவிந்து வாழ்க்கை வளமடையும் என்கின்றனர்.

சத்துருக்கனன் விஷ்ணுவின் கையிலிருக்கும் சக்கரத்தின் தோற்றம் என்பதால், இக்கோவிலில் இவரைச் சுதர்சன மூர்த்தியாகவே வழிபட்டுச் செல்கின்றனர். இங்கு சுதர்சன மலரஞ்சலி, சக்கர சமர்ப்பணம் ஆகியவை முக்கியமான வழிபாடுகளாக இருக்கின்றன. மனிதனின் பல்வேறு பாதிப்புகளுக்குக் காரணமாக இருக்கும் கடன், நோய், எதிரி ஆகியவைகளால் துன்பமடைபவர்கள் இவ்வழிபாடுகளில் கலந்து கொண்டால், அனைத்துத் தொல்லைகளும் நீங்கி மன அமைதியோடு நல்ல பலனையும் பெற முடியும்.  நமஸ்கார மண்டபத்தில் சுதர்சன சக்கர யந்திரங்கள் உள்ளன, விரும்புபவர்கள் அதை பெருமாளின் பாதத்தில் வைத்து வழிபாடு செய்து பெற்றுக் கொண்டு சென்று தங்கள் இல்லங்களில் வைத்து வழிபடுகின்றனர். 

இந்தத் திருத்தலத்தில் கும்பம் மாதத்தில் (மாசி மாதம்) பூசம் நட்சத்திர நாளில் தொடங்கி ஐந்து நாட்கள் விழா மிகச் சிறப்பாக நடைபெறுகின்றது. இந்நாட்களில் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. கேரளாவில் ஆடி மாதம் முழுவதையும் இராமாயண மாதம் என்று சொல்கின்றனர். இந்த மாதம் முழுவதும் நாள்தோறும் இறைவனுக்குச் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. இம்மாதத்தில் ஆலயத்துக்கு வந்து செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும். 

கேரளாவின் பாயம்மல் தவிர, உத்ரகாண்ட்  மாநிலம் ரிஷிகேஷிலும் சத்துருக்கனனுக்கு ஒரு கோவில் அமைக்கப்பட்டிருக்கிறது. ரிஷிகேஷில் கங்கை நதிக்கரையில் இராம் ஜூலா எனும் பகுதியில் அமைந்திருக்கும் இந்தக் கோவில் ஆதி பத்ர நாராயணன் கோவில் என்றும் ஸ்ரீ சத்துருக்னன் கோவில்என்றும் அழைக்கப்படுகிறது.


திருமாலின் வலக்கையை அலங்கரிக்கும் சக்கர ஆயுதமே சக்கரத்தாழ்வார். இவர் திருமாலுக்கு இணையானவர் என்கின்றது புராணங்கள். இவர் திருவாழியாழ்வான், சக்கரராஜன், நேமி, திகிரி, ரதாங்கம், சுதர்சனாழ்வார் என்று வேறு பெயர்களாலும் அழைக்கப்படுகிறார். விஷ்ணு கோவில்களில் சக்கரத்தாழ்வாருக்கு என்று தனிச் சன்னிதி அமைக்கப்பட்டிருப்பதைக் காணமுடியும்.

பெரியாழ்வாரும் தமது திருப்பல்லாண்டில்

பல்லாண்டு பல்லாண்டு பல கோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா நின் சேவடி செவ்வி திருகாப்பு

அடியோமொடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு
 வடிவாய் நின் வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு
வடிவார் சோதி வலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு. . . - என்று  சக்கரத்தாழ்வாரையும் மங்களாசாசனம் செய்துள்ளார்.




சக்கரத்தாழ்வாரைத் தினமும் தொடர்ந்து வணங்கி வழிபட்டு வந்தால், கண்ணுக்குத் தெரியாத எதிரிகள் கூட அழிந்து போவர். மனதில் தோன்றும் பயம் அனைத்தும் இல்லாமல் போகும். தீர்க்க முடியாத நோய்களும் குணமாகும். திருமணத்தடைகள் நீங்கும், வறுமை ஒழிந்து செல்வம் குவியும். சமயம் கிட்டும் போது கேரளா சென்று இராம சகோதரர்கள் நால்வரையும் சேவித்துவிட்டு வாருங்கள். இனி வரும் பதிவுகளில் இந்த யாத்திரையின் போது தரிசித்த மற்ற சில ஆலயங்களைப்பற்றியும் இரு அம்மன் ஆலயங்களின் பூர உற்சவத்தைப் பற்றியும் காணலாம் அன்பர்களே

2 comments:

Anuprem said...

மிக்க நன்றி ..


அற்புத ஆலயமாம் சத்ருக்கன் ஆலயத்தை அறிய செய்தமைக்கு..

S.Muruganandam said...

நன்றி அனுராதா அம்மா.