Tuesday, August 14, 2018

சொர்ணாம்பாள் ஆடிப்பூர உற்சவம் - 2


ஆடி வெள்ளி, செவ்வாய் மற்றும் ஞாயிற்றுக் கிழமைகள் அம்மனுக்கு மிகவும் விசேஷமானவை. தமிழகத்தின் வட மாவட்டங்களில் வெள்ளி தொடங்கி ஞாயிறுவரை அனைத்து அம்மன் ஆலயத்திலும் கூழ் வார்க்கும் உற்சவம் சிறப்பாக நடைபெறும். 

இரண்டாம் திருநாள் 
சந்திர பிரபையில் சொர்ணாம்பிகை


ஆடி அமாவாசை - சூரியன், சந்திர பகவானுக்கு உரிய ராசியாகிய கடக ராசியில் பிரவேசிக்கும் காலம். பித்ரு காரகனாகிய சூரியன், மாத்ரு காரகனாகிய சந்திரனுக்கு உரிய கடக ராசி மண்டலத்தில், சந்திரனுக்கு நேராக ஒன்றிணையும் காலம் ஆடி அமாவாசை. ஆகையால், இறந்துவிட்ட முன்னோர்களுக்கு உரிய காரியங்களை ஆடி அமாவாசையில் செய்வது, பித்ரு தோஷங்களை நீக்கியும், முன்னோர்களின் பூரண ஆசிகளையும் பெற்றுத் தரும் என்பது ஐதீகம்.


ஆடிப் பதினெட்டு - பதினெட்டாம் பெருக்கு - ஆடி மாதத்தின் பதினெட்டாவது தினத்தில் புது வெள்ளம் பூரணமாக பிரவாகமெடுத்து பாயும் காலம். ஆடிப் பெருக்கு அன்று, கருக்கொண்ட பூமித் தாய்க்கு, நிலமும் நீரும் சேர்ந்த இடங்களில் (ஆற்றங்கரை, குளக்கரை) சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

தானிய அபிவிருத்தி (பயிர்கள் செழிக்க) அருளும் அம்பிகையை, பெண்கள் - வம்ச அபிவிருத்தி (நற்குந்தைப் பேறு) வேண்டி வழிபாடுகள் நடத்துவார்கள். குலம் விளங்க, நல்வாரிசுகள் அமைய அம்பிகையை மனமுருகிப் பிரார்த்தனை செய்வார்கள்.


கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணம் நடந்து, இல்லறம் நல்லறமாக விளங்க அம்பிகையை வேண்டிக்கொண்டு, மஞ்சள் கயிறு அணிவிப்பார்கள். திருமணமான பெண்ணுக்கு, தாலி கோர்த்துக் கட்டும் நிகழ்ச்சியும் நடைபெறும். மாங்கல்யம் பெண்ணின் கழுத்தில் இணையும் சமயம், மூத்த சுமங்கலிகள், பெண்ணை, இனி இக்கயிறு பிரியாமல் தீர்க்க சுமங்கலியாக வாழட்டும் என்றும், இழை பிரியாமல் இல்லறம் நல்லறமாகட்டும் என்றும், இணை (தம்பதிகள்) பிரியாமல் இருக்கட்டும் என்றும் வாழ்த்துவார்கள்.

மூன்றாம் திருநாள் அலங்காரம்


லோகமாதாவான அம்பிகையே ஆடி மாதத்தில் கருவுற்றிருப்பதாக நினைந்து, ஆற்றங்கரைகளில், அகிலம் காக்கும் அம்பிகைக்கு தேங்காய், பழம், மங்கலப்பொருட்கள், காதோலைக் கருகமணி ஆகியவற்றைப் படைத்து மகிழ்வார்கள்.


கருவுற்ற பெண்கள் - மசக்கையால் - வகைவகையான உணவுகளை விரும்புவார்கள். அதை மனதில் கொண்டு, கருவுற்ற அம்பிகைக்கு, சித்ரான்னத்தை  (தேங்காய் சாதம், எலுமிச்சை சாதம், புளிசாதம், தயிர்சாதம், சர்க்கரைப் பொங்கல்) ஆற்றங்கரைக்குக் கொண்டு வந்து, படைத்து, குடும்பத்துடன் குதூகலமாக உண்டு களிப்பார்கள்.

மூன்றாம் திருநாள்
கிளி வாகன சேவை 

ஆடிப் பூரம் - அம்பிகை கருவுற்று இருப்பதை - முளைப்பயிற்றை அம்பிகையின் வயிற்றில் பிணைத்து, கருக்கோலம் கொண்டிருப்பதாக எண்ணி பிரார்த்தனை செய்வார்கள். நூற்றுக்கணக்கான முளைப் பயிற்றை ஒரு துணியில் கட்டி, அதை அம்பிகையின் வயிற்றில் பிணைப்பார்கள். முளைப் பயிறு கட்டுவது, வம்ச அபிவிருத்திக்காகவும், நற்குழந்தைப் பேற்றுக்காகவும் கட்டப்படுவது ஆகும்.

அம்பாள் திருக்கல்யாணம் பங்குனி உத்திரத்தன்று டைபெறுகின்றது. எனவே அம்பாள் கர்ப்பிணியாக இருப்பதாக கருதி ஆடிப்பூரத்தன்று வளை காப்பு செய்து அழகு பார்க்கின்றனர். அம்பிகை வளையல் அலங்காரத்தின் மனம் மகிழ்ந்து, நெஞ்சம் நிறைந்து, தன் மக்கள் அனைவருக்கும் அருள் பாலிப்பாள்.


அம்பிகைக்கு வளையல்கள் வழங்கி சார்த்துவதும், வளையல் காப்பு அலங்காரத்தை தரிசனம் செய்வதும் - அற்புதமான பலன்களை வாரி வழங்கக் கூடியது, ஆனந்தத்தை வழங்கக்கூடியது, வளமான வாழ்க்கையை வழங்கக் கூடியது.


ஆடி கிருத்திகையன்று அழகு முருகன் தரிசனம் 

ஆடிக் கிருத்திகை - ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திரத்தன்று முருகப் பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். இவ்வாலயத்தில் அன்று அம்பாளுடன் எழுந்தருளிய முருகப்பெருமான். தங்கக் கவசத்தில் தேவியர் சகித முருகனின் அருளைப் பெறுங்கள்.

ஆடி சுவாதி - ஆடி மாதம் சுவாதியன்று திருமாலின் கொடியும் வாகனமும் ஆன கருடாழ்வார் அவதார தினம். அன்று தங்கள் குழந்தைகள் தைரியசாலியாகவும், நிறைந்த ஆயுளோடும் விளங்க  தாயார்கள்  நாக சதுர்த்தி/கருடபஞ்சமி விரதம் அனுஷ்டிப்பார்கள்.

No comments: