Tuesday, June 6, 2017

நவ துவாரகை யாத்திரை -6

துவாரகை-1

 இத்தொடரின்  மற்ற  பதிவுகள்   

  1   2   3    4    5   7    8    9    10   11  12   13  

14   15    16   17   18   19   20    21   22    23    24    25   26   27   28 துவாராபதி மன்னன் “துவரையென்னும் அதில் நாயகராகி வீற்றிருந்த மணவாளர்“ என்று பெரியாழ்வாரும், “துவராபதிக் காவலன்“, “சோலைமலைப் பெருமான் துவராபதியெம்பெருமான் ஆலினிலைப் பெருமான்“ என்று அவர் திருமகளாரான  சூடிக் கொடுத்த சுடர்க்கொடியாள் ஆண்டாளும் பாடியபடி  ஸ்ரீகிருஷ்ணர் 100 வருடங்கள் அரசாண்ட கரம் துவாரகை. தமது 25வது வயதில் மதுராவை விட்டு மேற்குக் கடற்கரையோரம் வந்து  துவாரகையை உருவாக்கினார், சௌராஷ்டிரா தேசம் மற்றும் ஜாம் நகர் அருகில் கடலோரத்தில் வாழ்ந்து வந்த ஒரு மகாராஜாவின் மகள் ருக்மணியை மணந்தார் தமது 125வது வயதில் வைகுந்தம் செல்லும் வரை இங்கு ஆட்சி புரிந்தார்.துவார் – என்றால் வாயில், கா – என்பது பிரம்மனைக் குறிக்கும். எனவே  துவாரகை என்றால் மோட்சத்திற்கான வாயில் என்றும் ஒரு பொருள் உண்டு. பெயருக்கேற்றார் போல இறைவனுடன் தொடர்புடையதால் முக்தி தரவல்ல ஏழு கரங்களுள் ஒன்றாக  துவாரகை விளங்குகின்றது.  மற்ற  முக்தித்தலங்கள் அயோத்தி, வடமதுரை,  மாயாபுரி என்னும் ஹரித்வாரம், காசி, காஞ்சி, உஜ்ஜயினி ஆகியவை ஆகும்.'அடியேனின் அடியவர்களைக் காக்கிற ஊர் இதுஎன கண்ணனால் கொண்டாடப்பட்ட தலம்! துவாரகையின் பிரபாவத்தால் புழு, பட்சி, மிருகங்கள், பாம்புகள் போன்ற ஜந்துக்கள் கூட, ஆசையிருப்பின் ஒரு நாள் முக்தி அடையுமாம். எனில், அங்கு வசிக்கும் மனிதர்களுக்கு முக்தி உண்டு என்பதைச் சொல்லவும் வேண்டுமோ? அதுமட்டுமா? துவாரகையில் வசிப்பவரைப் பார்ப்பதாலும் தொடுவதாலும் கூட மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள் அனைத்தும் பாவங்களிலிருந்து விடுபட்டு, சொர்க்கத்தை அடையும். இந்த ஊரின் மண் துகள்கள் காற்றினால் எடுத்துச் செல்லப்பட்டு, பாவிகளுக்குக்கூட முக்தியைத் தரவல்லது என்கிறது ஸ்கந்தபுராணம். 5000 ஆண்டுகள் பழமையான திருத்தலம் இதுவே என்று ஸ்ரீமத்பாகவதம் கூறுகிறது துவாரகையை நோக்கி காலடி எடுத்து வைத்தாலே அஸ்வமேத யாகம் செய்த பலன் கிட்டும் என்று புராணங்கள் பகர்கின்றன.


மது பாரத தேசத்தின் நாற்திசைகளிலும் சிறப்புடன்  விளங்கும் சார்தாம் எனப்படும்  நான்கு தலங்களில் துவாரகை மேற்கு எல்லை ஆகும். வடக்கில் பத்ரிநாதம், கிழக்கில் ஜெகந்நாதம் - பூரி, தெற்கில் இராமேச்சுரம் ஆகிய தலங்கள் மற்ற சார்தாம் தலங்கள் ஆகும்.

சனாதன தர்மம் தழைத்தோங்க  ஆதிசங்கரர் பாரத தேசத்தின்  நாற்திசையிலும் நிறுவிய ஆம்னாய   பீடங்கள் நான்கினில்  ஒன்று துவாரகை.  இது மேற்கு சாரதா பீடம் ஆகும்.


ஆழ்வார்களால் மங்கலாசாசனம்
பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 101 வது திவ்ய தேசம். பெரியாழ்வார், ஆண்டாள், நம்மாழ்வார், திருமழிசையாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகிய ஐந்து ஆழ்வார்கள் துவாரகையை துவரை, துவாராபதி, வண்துவரை, வண்துவராபதி என்று பலவாறு பாடியுள்ளனர்.

வடதிசைமதுரைசாளக்கிராமம் வைகுந்தம்துவரையயோத்தி
இடமுடைவதரியிடவகையுடைய எம்புருடோத்தமனிருக்கை …….( பெரி.தி 4.7.9)
என்பது பெரியாழ்வார் பாசுரம்.  இப்பாசுரத்தில் வடநாட்டு திவ்ய தேசங்களை பட்டியலிட்டுள்ளார் ஆழ்வார்.


ஜகத் மந்திர்

துவாரகையை துவாரவதி என்றும் அழைப்பர். துவாரகை என்பதற்கும் துவாராவதி என்பதற்கும் சமஸ்கிருத மொழியில் பல நுழைவாயில்கள் கொண்ட நகரம் என்று பொருள். மேலும் த்தலம் தர்மம், அர்த்தம், காமம், மோட்சம் என்ற நான்கு புருஷார்த்தங்களின் நுழைவாயிலாகக் கருதப்படுவதால் துவாரகா அல்லது துவாரகாதீஷ் என்று இது பெயர் பெற்றது.

மகாபாரதத்தில் துவாரகை, யது குல விருஷ்ணிகள் ஆண்ட ஆனர்த்தா அரசின் தலைநகராக இருந்தது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மஹாபாரதத்தில் பல் வேறு இடங்களில் துவாரகையைப் பற்றிய குறிப்புகள் உள்ளன.

பாரத தேசத்தின் வரை படத்தில் மாங்காய் போன்று காட்சியளிக்கும்  கத்தியவார்தீபகற்பத்தில் (குஜராத் மாநிலம்) புதிதாக துவக்கப்பட்டுள்ள தேவபூமி துவாரகை மாவட்டத்தில், கட்ச் வளைகுடாவின் கழிமுகத்தில், கோமதி ஆற்றின் வலது கரையில் துவாரகை என்னும் இப்புண்ணிய நகரம் அமைந்துள்ளது. இந்த தலத்திற்கு குசங்கலீ, ஓகா (உஷா) மண்டல் என்றும் பெயர்கள் உண்டு.

கிருஷ்ணன் வாழ்ந்த காலத்திலிருந்த விஸ்வகர்மா ஒரே இரவில் கட்டிய  சுவர்ணநகரி என்றழைக்கப்பட்ட துவாரகை இப்போது இல்லை. பாரதப்போரில் தன்னுடைய புதல்வர்களாகிய கௌரவர்கள் நூற்றுவரும் மடிய ஸ்ரீகிருஷ்ணரே காரணம் என்று கோபம் கொண்ட காந்தாரி கொடுத்த சாபத்தின் படி கிருஷ்ணருடன் யாதவ குலம் முற்றிலுமாக அழிந்தது. அப்போது ஸ்ரீகிருஷ்ணர் அரசாண்ட துவாரகை கரமும் கடலில் மூழ்கியது என்பது ஐதீகம். ஆழ் கடல் அகழ்வாராய்ச்சியில் கடலுக்கு அடியில் அழிந்து பட்ட ஒரு கரம் உள்ளது தெரிய வந்துள்ளது.

தற்போதுள்ள இக்கோயில் கலியுகத்தில் ஸ்ரீகிருஷ்ணரின் கொள்ளுப்  பேரனானவஜ்ரநாபன்என்பவனால் கட்டப்பட்டது. கி.பி. 8 முதல் 10-ஆம் நூற்றாண்டுகளில் அந்நிய படையெடுப்பாளர்கள் அழித்து விட்டனர். பின்னாளில் 15 மற்றும் 16-ஆம் நூற்றாண்டுகளில் குஜராத்தை ஆண்ட சாளுக்கிய அரச பரம்பரையினர் கட்டியதுதான் இப்போதுள்ள கோவில் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.  இந்த துவாரகா கிருஷ்ணர் கோவில் மற்றும் சோமநாதர் கோவில்  ஒரே பாணியில் அமைந்திருப்பதை அதற்கு ஆதாரமாக இவர்கள்  கூறுகிறார்கள்.


இவ்வூர் ஒரு காலத்தில் சுதாமபுரி எனப்பட்டது. இங்கு தான் சுதாமர் எனப்படும் குசேலர் பிறந்தார். இவருக்கு தனிக்கோயில் இங்குள்ளது. சுதாமர் கோயில் என அழைக்கின்றனர். துவாரகையின் சில சிறப்புகளைப் பற்றி இதுவரை பார்த்தோம்,  வாருங்கள்  வண் துவாரபதி மன்னனை சேவிக்கலாம். 

                                                                                  நவ துவாரகை யாத்திரை தொடரும் . . . 

No comments: