Friday, May 5, 2017

நவ துவாரகை யாத்திரை -1

ஒரு அறிமுகம் 


 இத்தொடரின்  மற்ற  பதிவுகள்  

   2   3   4   5     6    7    8    9    10    11    12    13    14 


  15   16   17   18   19   20    21    22    23    24    25   26   27   28


துவாரகை 

அடியேனுடன் ஆன்மீக பயணம் செய்யும் தனுஷ்கோடி அவர்கள் ஒரு நாள் தொலைப்பேசியில் அழைத்து இவ்வருடம் டிசம்பர் மாதத்தில் சிறிது விடுமுறைநாட்கள் உள்ளன. குஜராத் மாநிலத்தில் உள்ள நவதுவாரகைகள் யாத்திரை செல்லலாமா? என்று வினவினார். அதற்கு அடியேன் பஞ்ச துவாரகைகள் பற்றி கேள்விப்பட்டுள்ளேன் ஆனால் நவதுவாரகைகள் தெரியாதே என்றேன். இருக்கின்றாரே கூகிள் அதில் தேடி ஒரு அட்டவணை தயாரியுங்கள் என்றார். அது போலவே கூகிளில் தேடிய போது  கிடைத்தது விவரம் ஒரு அன்பர் மிகவும் விவரமாக எவ்வாறு செல்லவேண்டும் என்று எழுதியிருந்தார். அதை அடிப்படையாகக் கொண்டு ஒரு வரைவு அட்டவணையை தயார் செய்தோம்.


மேலும் அடியேனுடன் பணி புரியும் அன்பரிடம் இவ்விடங்களைப் பற்றி கேட்டபோது அவரும் அவருடைய மகன் மூல துவாரகை அமைந்துள்ள இடத்திற்கு அருகில்தான் பணி புரிகின்றாம். அகமதாபாதில் இருந்து ஒரு வண்டி அமர்த்தித் தருகின்றேன். அனைத்து இடங்களையும் அறிந்த ஓட்டுநர் என்பதால் உங்களுக்கு சிரமம் இருக்காது. தங்கும் இடங்களை அவ்விடம் சென்ற பிறகே முடிவு செய்து கொள்ளுங்கள். சோமநாதம், நாகேஸ்வரம் ஆகிய ஜோதிர்லிங்க ஸ்தலங்கள், கிர் காடுகள் , காந்தி அடிகளின் பிறந்த இடமான போர்பந்தர் ஆகியவற்றையும் தரிசிக்கலாம் என்று அறிவுறுத்தினார். எனவே சென்னையிலிருந்து வான் வழியாக அகமதாபாத்திற்கு சென்று வருவதற்கு முன்பதிவு செய்து விட்டு நவதுவாரகை யாத்திரைக்காக காத்துக்கொண்டிருந்தோம். 


டாகோர் துவாரகை ரண் சோட்ஜீ

துவாரகை கிருஷ்ண பரமாத்மா அரசாண்ட நகரம். முக்தி தலங்கள் எழினுள் ஒன்று. நமது பாரத தேசத்தின் எல்லையாக கருதப் படும் சார்தாம் என்றழைக்கப்படும் நான்கு தலங்களில் மேற்குப்பகுதி ஆலயம் ஆகும், ஆதி சங்கரர் அமைத்த மடம் இத்தலத்தில்  அமைந்துள்ளது.

 வடமதுரை என்றழைக்கப்படும் மதுராவில் பிறந்த  ஸ்ரீகிருஷ்ணர் ஒரு கால கட்டத்தில்  மேற்குப்பகுதியில் கடற்கரைக்கு  வந்தார் அவ்வாறு அவர் வந்து கடல் பின் வாங்கிய பிரதேசத்தில் ஒரு நகரை அமைத்து அரசாண்டார், அந்நகரமே துவாரகை.  அவரது ராஜசபை துவாரகையிலும், அந்தப்புரம் துவாரகை தீவிலும் அமைந்திருந்தது. இவ்வாறு ஸ்ரீகிருஷ்ணருடன் தொடர்புடைய தலங்களே இந்த நவதுவாரகைகள். இவையனைத்தும் குஜராத் மற்றும் இராஜஸ்தான் மாநிலங்களில் அமைந்துள்ளன.


அடியோங்கள் தரிசித்த நவதுவாரகைகள் 1. துவாரகை 2. கோமதி துவாரகை 3. பேட்(தீவு) துவாரகை 4. ருக்மிணி துவாரகை 5. சுதாமா துவாரகை, 6. மூல துவாரகை, 7. முக்தி துவாரகை, 8. டாகோர் துவாரகை 9. ஸ்ரீநாத்ஜீ துவாரகை ஆகியவை ஆகும்.

துவாரகாதீசன் 

இவற்றில் முதல் நான்கு தலங்கள்  துவாராகதீஷ் என்றழைக்கப்படும் ஸ்ரீகிருஷ்ணர் ஆண்ட  முக்கிய துவாரகைக்கு அருகில் அமைந்துள்ளன. துவாரகை(1)   கோமதி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது எனவே கோமதி அன்னையின் சன்னதி கோமதி துவாரகை(2) என்றழைக்கப்படுகின்றது. கிருஷ்ணபரமாத்மாவின் அந்தப்புரம் ஒரு தீவில் அமைந்திருந்தது அதுவே பேட் துவாரகை(3).  பேட்(Bayt) என்றால் குஜராத்தி மொழியில் தீவு என்று பொருள். துவாரகைக்கு அருகில் உள்ள ஓகா (Okha) என்ற துறைமுகத்தில் இருந்து படகு மூலம் செல்ல வேண்டும்துர்வாசரின் சாபத்தினால் ருக்மணி 12  ஆண்டுகள் தவம் புரிந்த  தலம்  ருக்மணி துவாரகை(4). இத்தலத்திற்கு அருகில் பன்னிரு ஜோதிர்லிங்க தலங்களில் ஒன்றாகக் கருதப்படும் நாகேஸ்வரர் தலம் உள்ளது. இந்நான்கு துவாரகைகளுடன் இன்னொரு ஜோதிர்லிங்கத் தலமான  சோமநாதத்தில் அமைந்துள்ள,  ஸ்ரீகிருஷ்ணர் தனது அவதார நோக்கம் முடிந்த பின் வைகுந்தம் சென்ற பால்-கா-தீர்த்தம் என்றழைக்கப்படும் முக்தி துவாரகை(7) என்ற தலத்தையும் சேர்த்து பஞ்ச துவாரகைகள் என்று தரிசித்து மகிழ்கின்றனர் ஒரு சில  பக்தர்கள்.

பலராமர் - துவாரகை 

இப்பஞ்ச துவாரைகளுடன், கிருஷ்ண பரமாத்மா துவாரகைக்கு வந்த போது முதன் முதலில் இங்கு  தங்கிகொடினார் (Kodinar) என்ற ஊருக்கு அருகில் உள்ள  மூல துவாரகை(6). காந்தியடிகளின் பிறந்த ஊரான போர்பந்தருக்கு அருகில் அமைந்துள்ள  கண்ணனின் பால்ய நண்பரான  குசேலரின் ஆலயம் சுதாமா துவாரகை(5),   தென் குஜராத்தில் தியாத் (Nadiad) என்ற ஊரின்  அருகில் அமைந்துள்ள இரண்டாவது துவாரகை என்றழைக்கப்படும் டாகோர் துவாரகை(8)  மற்றும்   இராஜஸ்தான் மாநிலத்தில் உதயப்பூர் நகரத்திற்கு அருகில் அமைந்துள்ள ஸ்ரீநாத்ஜி துவாரகை(9)  ஆகிய நான்கு தலங்களையும் சேர்த்து  வதுவாரகைகள் என்றழைத்து தரிசித்து மகிழ்கின்றனர் பக்தர்கள். அடியோங்கள் ஐவர் இந்நவதுவாரகைகளுடன் அருகில் உள்ள பல தலங்களையும் திவ்யமாக தரிசனம் செய்யும் பாக்கியம் கிட்டியது. அந்த அற்புத அனுபவத்தை தாங்களும் பகிர்ந்து கொள்ள வாருங்கள் அன்பர்களே.

சோமநாதர்
ஜோதிர்லிங்கம் 

அடியோங்கள் பல யாத்திரைகள் சென்றிருக்கிறோம். ஆனால் துவக்கம் முதல் நிறைவு வரை  எந்தவித சிறு தடங்கலும் இல்லாமல், அனைத்து சன்னதிகளிலும் திவ்யமான  தரிசனத்துடன் மிகவும் அருமையான யாத்திரையாக இந்த யாத்திரை அமைந்தது. 8 நாட்கள் யாத்திரை என்பதாலும், வண்டியில் பயணம் செய்ய திட்டமிட்டிருந்த்தாலும்   தங்கும் விடுதிகளுக்கு முன் பதிவு செய்யவில்லை. வண்டி ஓட்டுநருக்கு இவ்வழியாக சென்று வந்த அனுபவம் இருந்ததால் எவ்விடத்தும் எந்தவித சிரமமும் இருக்கவில்லை.   திட்டமிட்டதை விட அதிக தலங்களையே சேவித்தோம். மிகவும் திருப்திகரமான, அருமையான,  சரியான (perfect) யாத்திரையாக இந்த யாத்திரை அமைந்தது வாருங்கள் அன்பர்களே நவதுவாரகை செல்லலாம். 

                                                                           நவ துவாரகை யாத்திரை தொடரும் . . . .

2 comments:

கோமதி அரசு said...

நவ துவாரகை யாத்திரையில் எந்த தடங்க்ளும் இல்லாமல் தரிசனம் கிடைத்தது அவன் அருளே!
படங்களும் செய்திகளும் அருமை.
தொடர்கிறேன்.
சார்தம் பார்த்து இருக்கிறேன்.

S.Muruganandam said...

சமயம் கிடைக்கும் போது குஜராத் பக்கமும் செல்லுங்கள் துவாரகை- சோம்நாத் சுற்றியே பஞ்ச துவாரகைகளும், இரண்டு ஜோதிர்லிங்களையும் தரிசிக்கலாம்.