Friday, May 12, 2017

நவ துவாரகை யாத்திரை -2

கிருஷ்ணர் துவாரகை வந்த வரலாறு


 இத்தொடரின்  மற்ற  பதிவுகள்  


  1   3   4   5     6    7   8    9    10   11   12    13   14  


 15   16    17   18   19   20    21   22    23    24    25   26   27   28டாகோர் துவாரகை ரண் சோட் ராய் ஜீ  


அடியோங்கள் டிசம்பர் மாதம் யாத்திரை மேற்கொண்டதால் அப்போது சிறிது குளிர் இருக்கலாம் என்பதால் ஒரு கம்பளி உடை(Sweater) தேவைப்படும் என்று அடியேனுடன் பணி புரியும் அன்பர் கூறியிருந்தார், மேலும் எட்டு நாள் யாத்திரை என்பதால் அதற்கு தகுந்தவாறு நொறுக்குத் தீனி, அவசிய மருந்துகள் ஆகியவற்றை சேகரித்துக்கொண்டு, தகுந்த ஏற்பாடுகளுடன் யாத்திரையைத் துவக்கினோம். சென்னையில் இருந்து அகமதாபாதிற்கு அதிகாலையில் செல்லும் ஒரு விமானம் மூலமாக கிளம்பினோம்.


விமானத்தில் பயணம் செய்து கொண்டிருக்கும் போதே கூர் வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன் ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம் கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான் ஸ்ரீகிருஷ்ணர் மதுராவை விட்டு ஏன் துவாரகை வந்தார் என்ற சுவையான வரலாற்றை காணலாம் அன்பர்களே.  வடமதுரையில் ஒருத்தி (தேவகி-வசுதேவர்) மகனாய் ஓரிரவில்  பிறந்து யமுனையை கடந்து கோகுலம் சென்று ஒருத்தி (யசோதை- நந்தகோபர்)  மகனாக ஒளித்து வளர்ந்த ஸ்ரீகிருஷ்ணர், கோகுலத்தில் வெண்ணெய் உண்டு, குழலூதி உள்ளமெல்லாம் கொள்ளை கொண்டு, ஆவினம் மேய்த்து, கோபியருடன் இராச லீலை செய்து, கம்சன் அனுப்பிய  அசுரர்களை மாய்த்து,  பல் வேறு  பால லீலைகள் செய்தார். பின்னர் தனது பதினோராவது வயதில்  மதுரா வந்து கருத்தைப் பிழைப்பித்த கஞ்சன் வயிற்றில் நெருப்பாக நின்று அவனை சம்ஹாரம் செய்தார். அதனால் கண்ணன் மேல்  கோபமுற்ற கம்சனின் மாமனாரான ஜராசந்தன், ஸ்ரீ கிருஷ்ணரின் மேல் பதினேழு  முறை போர் தொடுத்தான்.


அகமதபாத் விமான நிலையத்தில் குழுவினர் 

இதனிடையே யாதவர்களால் தன் தந்தை அவமானப்படுத்தப்பட்டதை நாரதர் மூலம் அறிந்த காலயவனன் என்ற அரசனும் பெரும்படையுடன் மதுராவைத் தாக்கினான். இரண்டு எதிரிகளை ஒரே சமயத்தில் சமாளிப்பது கஷ்டம் என்பதால்,  ஜராசந்தனிடம் இருந்து யாதவ குலத்தினையும், தன்னை அடைக்கலமாக அண்டி வந்தவர்களையும் காக்க,  ஸ்ரீ கிருஷ்ணர் எண்ணம் கொண்டார்.  எனவே மதுராவை விடுத்து மேற்கு கடற்கரை பகுதிக்கு வந்தார்.

குசஸ்தலம் என்னும்  ஒரு நிலப்பகுதியை, ஸ்ரீபலராமர் (அவருடைய  மாமனார் கொடுத்தது) கொடுத்தார். ந்நிலப்பகுதி போதுமானதாக இல்லாததால்,  ஸ்ரீகிருஷ்ணர் சமுத்திர  ராஜனை வேண்டினார். அதன் படி கடல் பன்னிரண்டு யோசனை தூரம் உள்வாங்கியது. கடல் கொடுத்த பூமியையும் சேர்த்து தேவதச்சன் விஸ்வகர்மாவின் உதவியுடன் ஒரு அற்புதமான நகரை நிர்மாணித்து யாதவ மக்களையும்,  மாடு - கன்றுகளையும் அங்கு குடியேற்றினார்  ஸ்ரீ கிருஷ்ணர், தன்னுடைய தலை நகரத்தையும், தன்னுடைய மாளிகையையும் அவ்விடத்தில் அமைத்துக் கொண்டார். இப்படித் தோன்றியதுதான் துவாரகை.

கிருஷ்ணன் வாழ்ந்த காலத்திலிருந்த துவாரகை தற்போது இல்லை. கி.பி. 8 முதல் 10-ஆம் நூற்றாண்டுகளில் அந்நிய படையெடுப்பாளர்கள் அழித்து விட்டனர். பின்னாளில் 15 மற்றும் 16-ஆம் நூற்றாண்டுகளில் குஜராத்தை ஆண்ட சாளுக்கிய அரச பரம்பரையினர் கட்டியதுதான் தற்போதுள்ள கோவில் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
அகமதாபாத் விமான நிலையத்தில் 
(ஸ்ரீகுமார்,   தனுஷ்கோடி,  கோபால்,  மோகன்)

ஜராசந்தனுக்கும் ஸ்ரீ கிருஷ்ணருக்கும் என்ன சம்பந்தம்? ஜராசந்தன் ஏன் பகவானுடன் போர் புரிய வேண்டும்?  அதற்கு ஒரு பின்னணி இருக்குமல்லவா? அக்கதை  இதோ. வடமதுரையின் அரசன் உக்கிரசேனனின் மகளான தேவகியை ஸ்ரீ வசுதேவர்  மணந்ததும், தேவகியின் சகோதரனான கம்சன், புது மணத்தம்பதிகளை தேரில் கூட்டிச்செல்லும் பொழுது, தேவகியின் எட்டாவது குழந்தையினால், கம்சனின் மரணம் நிகழும் என்று அசரீரி ஒலித்ததும், அதனால்,  வசுதேவரையும், தேவகியையும் சிறையில் கம்சன் அடைத்தான். கிருஷ்ணரை கொல்ல பல்வேறு அசுரர்களை கோகுலம் அனுப்பினான் அவர்கள் அனைவரும் கிருஷ்ணரால் வதம் செய்யப்பட்டனர்.

இறுதியில், ஸ்ரீகிருஷ்ண பகவான், தன்னுடைய சக்ராயுதத்தால், கம்சனை வதம் செய்து, சிறையில் இருந்த தன்னுடைய தாய், தந்தை மற்றும் தன்னுடைய பாட்டனார்  ஆன உக்கிரசேனனையும் விடுவித்தார்.

இனி ஜராசந்தனைப் பற்றிய   தகவலை அறிந்து கொள்ளலாம். மகத நாட்டினை, பிருகத்ரதன் என்னும் மன்னன் ஆண்டு வந்தான். அவனுக்கு இரண்டு மனைவிகள் இருந்தும், குழந்தை பாக்கியம் மட்டும்  இல்லாமல் இருந்தது. மன்னன் உபாயம் தேடி அலைந்தான். சந்திர கௌசிகர் என்கிற முனிவர், மன்னனின் துயர் தீர்க்க ஒரு மாங்கனியைக் கொடுத்து, மனைவியிடம் கொடுக்கச் சொன்னார். மன்னனானவன், அக்கனியை இரண்டாக்கி இரு மனைவியரிடமும் கொடுத்தான். இருவருமே கருவுற்றனர். ஆனால் பிரசவத்தில் ஒவ்வொரு அரசிக்கும், பாதி குழந்தைதான் பிறந்தது.

தன்  செயலால் மனம் உடைந்த மன்னன், இரு பாதிகளையும் வெளியே வீசி எறிந்தான். அப்பொழுது நர மாமிச   பட்சிணியான , ‘ஜரா என்னும் அரக்கி, மனித வாடையை நுகர்ந்து, அந்த சதைப் பிண்டங்களை உட்கொள்ளும் பொருட்டு அவ்விடம் வந்தாள் . அவளுக்கு அவை மன்னரின் வாரிசாக இருக்குமோ என்கிற எண்ணம் ஏற்பட்டது.  அதனால், அப்பிண்டங்களை கையில் எடுத்தாள். இரண்டு பாகங்களையும் ஒன்றாகச் சேர்த்தாள். ஒன்றாகச் சேர்ந்த பாதி உடல்கள், ஒன்றாகி,  உயிர் பெற்றன. உயிர் பெற்ற குழந்தையை, மன்னனிடம் கொண்டு சேர்த்தாள், அவ்வரக்கி. மிகுந்த சந்தோஷத்துடன் அக்குழந்தையை பெற்றுக்கொண்ட, மன்னன், அக்குழந்தைக்கு ஜராசந்தன் என்று பெயரிட்டான். (அரக்கியால் சேர்க்கப் பட்டதால் அப்பெயர்)

இவ்வாறு பிறந்தன்னுடைய புத்திரனுக்கு, எந்தவித ஆயுதத்தாலும் மரணம் ஏற்படக் கூடாது என்றும், பிறந்தது போலவே இரண்டாகக் கிழிக்கப் பட்டுதான் முடிவு வரவேண்டும் என்றும்   வரங்களை  பெற்றிருந்தான்., மகத மன்னன்.,

ஜராசந்தனுக்கு, அஸ்தி, பிராப்தி என்னும் பெயர் கொண்ட இரு மகள்கள் இருந்தனர். அவர்களை, கம்சனுக்கு மணம் முடித்துக் கொடுத்திருந்தான், அவன். ஸ்ரீகிருஷ்ணர், கம்சனை வதம் செய்ததால், தன்னுடைய புத்திரிகள் இருவரும் விதவை ஆகிவிட்டார்கள் என்கிற எண்ணம் ஜராசந்தனை வாட்டி வதைத்தது. அதனால், பகவானின் மேல் அதீதமான காழ்ப்புணர்ச்சி அவனுக்கு  உண்டானது. ஸ்ரீகிருஷ்ணரை கொல்லும்  வெறியுடன் பதினேழு முறை படையெடுத்து, வந்தான்.

தன்னுடைய பதினோராவது வயதிலேயே கம்சனை வதம் செய்த பகவானுக்கு ஜராசந்தனை அழிக்க முடியாதா என்ன?  என்ற எண்ணம் தங்களுக்கு தோன்றியிருக்கலாம். அதற்கான விடை,  ஜராசந்தனின் விதி, பீமன் மூலமாகத்தான் முடிய வேண்டும் என்று இருக்கும் பொழுது, கண்ணன் எங்கனம் வதைப்பார்? அதனால் தான் பீமன் நேரிடையாக ஜராசந்தனிடம் மோதாத பதினேழு முறையும், அனாவசியமாக  போரில் மடியும்   தன்னுடைய யாதவ குல மக்களை காக்கும்  எண்ணத்தில் ஸ்ரீகிருஷ்ணர் விலகி நின்றார், மதுராவை விடுத்து  துவாரகை வந்து சேர்ந்தார்.

பீமன், துரியோதனன், கீசகன், பகாசுரன், ஜராசந்தன் ஆகியவர்கள் ஐவரும் ஒரே நட்சத்திரத்தில் தோன்றியவர்கள் ஒவ்வொருவரும்,  ஆயிரம் யானை பலத்திற்கு ஈடானவர்கள். ஜராசந்தன், பீமனால் அழிக்கப்பட வேண்டும் என்பதுதான் விதி. பதினெட்டாவது முறை படை எடுத்த ஜராசந்தனை, பீமன் இரு பாதியாக கிழித்துக் கொன்றான் என்பது தனி கதை. (அது ஜராசந்தனின்ந்தை பெற்ற  வரம். பகவானின் யுக்தியோடு செய்து முடித்தார்)

கிருஷ்ண பரமாத்மா மதுரா விடுத்து ஏன் துவாரகா வந்தார் என்ற வரலாறு சுவையாக இருந்ததா? வாருங்கள் நமது யாத்திரையை தொடரலாம். அகமதாபாத் விமான நிலையத்தை சரியான சமயத்திற்கு வந்டைந்தோம். அடியேனுடன் பணி புரியும் அன்பர் திரு. M.R. படேல் அவர்கள்  வாகனத்துடன் காத்துக்கொண்டிருந்தார். அவர் இல்லத்திற்கு அழைத்து சென்று விருந்தளித்தார். வண்டி ஒட்டுநரை அறிமுகப் படுத்தினார்.

திரு M.R. படேல் இல்லத்தில் 


முதலில் அடியோங்கள் முதலில் துவாரகை செல்ல திட்டமிட்டிருந்தோம். ஆனால் வண்டி ஓட்டுநர்  திரு.பவின் யக்ஞிக் அவர்கள், முதலில் டாகோர் துவாரகை செல்லலாம் என்று கூறினார்ஏனென்றால் துவாரகை அகமதாபாதிலிருந்து சுமார் 435 கி.மீ தூரம் என்பதால்  எப்படியும் துவாரகையை அடைய 8 மணி நேரம் ஆகும், எனவே  அன்றே தரிசனம் கிடைப்பது சிறிது கஷ்டம்தான். டாகோர் சென்று திரும்பி வர எப்படியும் 5 மணி நேரம் ஆகும்  பிறகு பின்னிரவில் துவாரகாவை அடைந்து விடலாம் இரவு அங்கு தங்கி அதிகாலையில் துவாரகையில் தரிசனத்தை முடித்துக்கொண்டு மற்ற தலங்களை தரிசிக்கலாம்  இதனால் ஒரு நாள்  மிச்சமாகும் என்று கூறினார், அது சரியாகப் படவே முதலில் இரண்டாவது துவாரகை என்றழைக்கப்படும் டாகோர் துவாரகை சென்றோம்.
நவ துவாரகை யாத்திரை தொடரும் . . . .

No comments: