Thursday, May 18, 2017

நவ துவாரகை யாத்திரை -3

டாகோர் துவாரகை -1


 இத்தொடரின்  மற்ற  பதிவுகள் 

    1   2   4   5   6   7   8    9   10   11   12    13   14 

   15   16   17   18   19   20    21    22    23    24     25   26   27   28


ரண் சோட் ராய் ஜீ 

வாருங்கள் நவதுவாரகைகளில் முதலில் அடியோங்கள் தரிசித்த  டாகோர் துவாரகையின் ஸ்ரீகிருஷ்ணருக்கு   ரண் சோட் ராய் ஜீ  என்ற  திருநாமம் எவ்வாறு வந்தது என்பதை காணலாம். ரண் சோட் ராய் என்றால் 'யுத்தத்தைத் துறந்து ஓடிய தலைவன்என்று பொருள். ஒரு வகையில் பார்த்தால் இது போரில் புறமுதுகிட்டு ஓடுவதை குறிக்கும். பொதுவாக குஜராத்தில் இப்பெயரிடுகின்றனர்.
இப்பெயரை கேட்டவுடன்  அடியேனுக்கு எங்கள் அலுவகலத்தில் ந்த ஒரு சம்பவம் நினைவுக்கு வருகின்றது. அடியேனுடைய  அதிகாரி ஒருவர் மராத்தியர்,  எனவே அவர் இப்பெயரை கேட்டவுடன் மிகவும் கோபப்பட்டார் யாராவது போரில் தோற்று ஓடினான் என்று பெயர் வைத்துக் கொள்வார்களா? அது கேவலமானது அல்லவா?  என்று வினவினார். அதற்கு குஜராத்தி அன்பர்கள் அது ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா சாதுர்யமாக கால யவனன் என்ற பகைவனை அழிக்க செய்த லீலை என்று விளக்கினார். அதற்கு பிறகு அவர் சமாதானமானார். அடியேன் கேட்ட அக்கதையை தாங்களும் ருசியுங்கள் அன்பர்களே.


ஒரு சமயம்  கார்க்கியன்   ன்பவனை சாலுவன், "போடா பேடி!'' என்று சொல்லி இழிவு படுத்தினான். அதைக் கேட்டதும், அங்கிருந்த யாதவர்கள் பலமாகச் சிரித்து விட்டனர். கார்க்கியனுக்கு அவமானம் தாங்கவில்லை. "என்னைப்  பார்த்துச் சிரித்த இவர்களை விட்டு வைக்கக் கூடாது. இவர்களுக்கு யமனாக, ஒரு குழந்தையைப் பெறத் தவம் செய்வேன்,''  என்று தவத்தில் அவமானப்படுத்திய சாலுவனை விட்டுஅதைப் பார்த்துச் சிரித்தவர்களிடம்  கோபப்பட்டான்.  அதன் பலனாக, பிறந்த போதே யாதவர்கள் மீது பகையோடு பிறந்தான் காலயவனன். கார்க்கியனின் எண்ணமும், அதன் பலனாக அவன் செய்த தவமுமே இதற்குக் காரணம்.
தந்தையின் எண்ணப்படி காலயவனன், யாதவர்களின் அரசனான கண்ணன் மீது பகை கொண்டு வடமதுரையை அழிக்க வந்தான். ஜராசந்தனும் அப்போது பதினேழாவது முறையாக  படையெடுத்து வந்ததால் மதுராவை விடுத்து  கண்ணன்  துவாரகையை நிர்மாணித்து யாதவர்களை அங்கே பத்திரமாகச் சேர்த்தார். அதன்பின், பின்னர் மீண்டும் மதுராவுக்கு வந்து, பலராமருடன் ஆலோசித்து, தாமரை மாலையை அணிந்து, ஆயுதம் ஏதுமின்றி, பட்டணத்தின் வாசலில் இருந்து புறப்பட்டார். நாரதர் மூலம் கண்ணனின் அங்க அடையாளங்களை அறிந்து வைத்திருந்த கால யவனன், அவரைப் பின் தொடர்ந்தான். யோகிகளாலும் நெருங்கமுடியாத பரமபுருஷனைப் பிடிக்க முயன்றான் அவன்!


காலயவனன் கண்ணனை நெருங்கினான். கண்ணனோ, அவனுக்குப் பயந்தோடுவதைப் போல ஓடிப்போய் ஒரு குகைக்குள் மறைந்தார். பின் தொடர்ந்து ஓடிய காலயவனனின் பார்வையில், அங்கே யாரோ படுத்திருப்பது போல தெரிந்தது. படுத்திருப்பவர் கண்ணன் என நினைத்துக் கொண்டு, "ஹா.... அகப்பட்டுக் கொண்டாயா?'' என்றபடி ஓர் அடி அடித்தான். தூங்கிக் கொண்டிருந்தவர் விழித்துப் பார்த்தார். அவர் பார்வையில் பட்ட காலயவனன் எரிந்துபோனான். அவர் முசுகுந்த சக்கரவர்த்தி. இஷ்வாகு வம்சத்தில் வந்த மாந்தாதாவின் மைந்தன்.  தேவர்களுக்கு உதவியதன் காரணமாகக் களைத்து, ஓய்வெடுக்க நினைத்த அவர்,  "என்னை உறக்கத்தில் இருந்து எழுப்புபவன் சாம்பலாகப் போக வேண்டும்,'' என்ற வரம் பெற்றிருந்தவர்  இதை  அறிந்திருந்த மாயக்கண்ணன், காலயவனனை குகைக்கு வரும்படி செய்து, முசுகுந்த சக்கரவர்த்தியின் பார்வையாலேயே அழியும்படி செய்தார். 

இவ்வாறு காலயவனுடன் போரிடாமல் ஓடி தந்திரமாக ஓடி அவனை அழித்தால் ஸ்ரீகிருஷ்ணருக்கு ரண்சோட் ராய் என்ற திருநாமம். ஒரு சாரார் ஜராசந்தனுடன் போர் புரியாமல் மதுராவை விட்டு துவாரகை வந்ததாலும் இப்பெயர் ஸ்ரீகிருஷ்ணருக்கு வழங்குகின்றது என்றும் கூறுவர்.  இப்பெயரில்தான் இந்த டாக்கோர் துவாரகை கிருஷ்ணர் அழைக்கப்படுகிறார்.நுழைவு வாயில் ( மேலே நாகர் கானா)
அகமதாபாதிலிருந்து கிளம்பியவுடன் வண்டி ஒட்டுர் முதலில் ஓரிடத்தில் கொண்டு வண்டியை நிறுத்தினார். வண்டிக்கு டீசல் போட போயிருப்பார் என்றுதானே தாங்கள் நினைக்கின்றீர்கள் அது தான் இல்லை ஒரு பெட்டிக்கடைக்கு  சென்றார். அங்கு சென்று மாவா என்றழைக்கப்படும் பாக்கு, சுண்ணாம்பு தண்ணீர்  பொட்டலங்களை அள்ளிக் கொண்டார். திரும்பி வரும் வரை வேண்டுமல்லாவா? எப்போதும் வாயில்  போட்டு அதை மென்று கொண்டே இருந்தார். குஜராத்தின் பல இளைர்கள் இப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளனர்.

குஜராத் மாநிலத்தில் கேடா (Kheda) மாவட்டத்தில் இத்தலம் அமைந்துள்ளது. அகமதாபாத் மற்றும் பரோடா ஆகிய இரு கரங்களில் இருந்து சுமார் 90  கி.மீ தூரத்தில் உள்ளது. ஆனந்த் – கோத்ரா புகை வண்டி தடத்தில் உள்ள இத்தலத்தை  பரோடா, தியாத், ஆனந்த் (அமுல் பால் கரம்) ஆகிய ஊர்களில் இருந்து பேருந்து மற்றும் புகைவண்டி மூலம் அடையலாம்.  அடியோங்கள்  சுமார் இரண்டு மணி  நேரம்  பரோடா(Baroda) செல்லும் பாதையில் பயணம் செய்து தியாத்(Nadiad) என்ற கரை அடைந்து பின்னர் அங்கிருந்து டாகோரை அடைந்தோம்.  ஒரு சிறிய கிராமம் தான். அதன் மையத்தில் கோவில் அமைந்துள்ளது. கோவிலின் எதிரே பீமன் தன் கதையால் உருவாக்கிய  கோமதி குளம் உள்ளது.


டாங்நாத் மஹாதேவர் ஆலயம் 

மஹாபாரத காலத்தில் இப்பகுதி ஹிடும்பவனம் என்னும் அடர்ந்த காடாக இருந்தது. அதில் பல முனிவர்கள் தவமியற்றிக் கொண்டிருந்தனர். அவர்களில் டாங்க முனியும் ஒருவர். அவரின் தவத்திற்கு இரங்கி சிவபெருமான் காட்சி கொடுத்து, முனிவரின் விருப்பத்திற்கிணங்கி அங்கேயே கோவில் கொண்டார் எனவே இத்தலம் முன்காலத்தில் டாங்கோர் என்றழைக்கப்பட்டது. ஸ்ரீ கிருஷ்ணர் துவாரகையிலிருந்து தன் பக்தன் போதணாவிற்காக இத்தலம் வந்த பிறகு அது டாக்கோர் ஆகியது.
இது என்ன புதுக்கதையாக இருக்கின்றதே என்று பார்க்கின்றீர்களா? வாருங்கள் துவாரகை கிருஷ்ணன் தன் பக்தன் ஒருவருக்காக  டாக்கோர் வந்த கதையைப் பார்க்கலாம். ஒரு சமயம் ஸ்ரீகிருஷ்ணரும் பீமனும் டாங்க முனி தவம் செய்யும் இவ்வனத்திற்கு வந்த போது டாங்கமுனிவர் கிருஷ்ணரிடம் தாங்களும் சிவபெருமானுடன் இத்தலத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கவேண்டும் என்று வேண்டினார். ஸ்ரீகிருஷ்ணரும் 4225 வருடங்கள் துவாரகையில் இருந்த பின் இங்கு வருகின்றேன் என்று வரமளித்தார்.


துவாரகை கிருஷ்ணர் டாகோர் வரும் காட்சி 
தான் கொடுத்த வரத்திற்கேற்ப டாக்கோர் வர ஸ்ரீகிருஷ்ணர் தேர்ந்தெடுத்த பக்தர் போதாணா என்ற அந்தணர்.  துவாரகாதீசனிடம் அளவற்ற அன்பு வைத்திருந்த போதாணா, வருடந்தோறும் தன் கையால் வளர்த்த துளசி இலைகளை எடுத்துக் கொண்டு டாக்கோரிலிருந்து  துவாரகைக்குச் சென்று, துவாரகாதீஷனை தரிசிப்பது வழக்கம். தள்ளாத வயதிலும் அவ்வாறு சென்று வந்து கொண்டிருந்தார், அடுத்தடுத்த காலங்களில் தன்னால் துவாரகைக்குச் செல்ல முடியுமோ முடியாதோ? எனும் கலக்கத்துடன் பகவானை வேண்டிக் கொள்வார். அவருக்காக டாக்கோருக்கே செல்லத் தீர்மானித்தார் பகவான்.
ஒரு சமயம் பகவான் போதாணாவிடம் மறு முறை துவாரகை வரும் போது  ஒரு வண்டியுடன் வருமாறு கனவில் பணித்தாராம். போதாணாவும் அவ்வாறே எருதுகள் பூட்டப்பட்ட  வண்டியுடன் துவாரகையை அடைந்தார். துவாரகாவின் பூசாரிகள் எதற்காக வண்டியுடன் வந்திருக்கிறீர்கள் என்று வினவ. பகவான் தன்னுடன் டாக்கோருக்கு வரவிருப்பதாகக் கூறினார். அதை தடுக்க பூசாரிகள் கோவிலை பூட்டி விட்டனர்.  சிறைச்சாலையில் பிறந்தவுடனே  கம்சன் போட்ட காவலை மீறிய கண்ணனுக்கு இக்காவல் எம்மாத்திரம். பூட்டுகள் எல்லாம் உடைந்தன போதாணாவின் வண்டியில் அமர்ந்து கொண்டார், தன்னை டாகோருக்கு அழைத்துச் செல்ல கட்டளையிட்டார்.
வண்டியை ஓட்டிய போதாணா பாதி வழியிலேயே களைப்படைய, பின்பு கண்ணனே வண்டியை ஓட்டிவந்தாராம். அர்ஜுனனுக்காக குதிரைகள் பூட்டிய தேரை ஓட்டிய பரந்தாமன், பக்தர் போதாணாவுக்காக மாட்டு வண்டியை ஓட்டினார். அதுதான், இறை அன்பு.
போதாணாவுடன் வந்தபோது, சற்றே இளைப்பாறுவதற்காக பிலேஸ்வர் மஹாதேவ் ஆலயத்திற்கு அருகில் உள்ள ஒரு வேப்பமரக் கிளையில் சாய்ந்து நின்றாராம் கண்ணன். இன்றும், அந்த மரக்கிளையின் இலைகள் மட்டும் இனிப்பாக திகழ்கின்றன!. " லிமடமா மே ஏக் டால் மேதே"  (வேப்ப மரத்தில் ஒரு கிளையில் இனிப்பு)  இந் வேப்ப மரத்தைப் போற்றித் தொழுகின்றனர் பக்தர்கள்.
இதனிடையே, மூலவரைக் காணாமல் துவாரகையே கவலையில் ஆழ்ந்தது. பகவானும் இதையறிந்தார். துவாரகையில் இருந்து தன்னைத் தொடர்ந்து வந்துவிட்ட கோமதி நதியின் கரையில் தன்னை ஒளித்து வைக்கும்படி, போதாணாவைப் பணித்தார். அந்தப் பக்தரோ, 'எங்கே நம் இறைவனைக் கண்டு அழைத்துச் சென்றுவிடுவார்களோஎன்று பதறினார். அப்போது, 'உள்ளவாருள்ளிற்றெல்லாம் உடனிருந்து அறிவனானகண்ணபிரான், தனது சோதிவாய்த் திறந்து போதாணாவிடம் பேசினார். 'தன்னைத் தேடி வருவோரிடம், தனது விக்கிரகத்தின் எடைக்கு எடை பொன் தருவதாகச் சொன்னால், வந்தவர்கள் நகைகளுடன் திரும்பிச் செல்வார்கள்; வருந்தாதே!என்றார் பகவான்.
ஆனால், போதாணாவோ எடைக்கு எடை பொன் தரும் அளவுக்குச் செல்வந்தர் இல்லை! அவரின் மனைவி, கங்காபாய் கடவுளின் கருணையை நன்கு உணர்ந்தவள். தராசின் ஒரு தட்டில் கடவுளின் விக்கிரகத்தையும் மற்றொரு தட்டில் தனது சிறு மூக்குத்தியையும் வைத்தாள். கண்ணனின் மாயத்தினால் ஒரு  ஆச்சர்யம் ந்த்து மூக்குத்தி வைத்த தட்டு, கனமாகிக் கீழிறங்க, கண்ணனின் விக்கிரகம் உள்ள தட்டு மேலே உயர்ந்து நின்றது. வந்தவர்கள் குழம்பியபடி மூக்குத்தியை எடுத்துக்கொண்டு  கிளம்பிச் சென்றனர். பகவான் அசரீரியாக அவர்களுக்கு வேறு ஒரு விக்கிரகம் கிடைக்குமென்று கூறினார்.
டாக்கோர் கோயிலுக்கு அரை கிலோ மீட்டர் முன்னரே வண்டிகளை நிறுத்தி விட்டனர். கூட்டம் அதிகமாகத்தான் இருந்தது. உடைமைகளை சோதனை செய்த பின்னரே கோவிலின் உள்ளே அனுமதிக்கின்றனர். கோவிலின் அருகில் ஒரு கோசாலை உள்ளது. நூற்றுக்கணக்கான  பசு மாடுகள்  கோவிலைச் சுற்றிக்கொண்டிருந்தன.
குஜராத் மாநிலம் “தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி வாங்க குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்” நிறைந்த மாநிலம். அமுல் என்ற பெயரை அறியாத இந்தியர் இல்லை. அந்த அமுல் பால் பண்ணை,  பாரத தேசத்தின் வெள்ளை புரட்சிக்கு காரணியாக  இருந்த கூட்டுறவு பால் பண்ணை அருகில் உள்ள ஆனந்த் கரில்தான் அமைக்கப்பட்டது.


கோமதிக்குளம்


முதலில் கோமதி குளத்தில் முகம், கை கால் கழுவினோம். இப்பகுதியின் மிகப்பெரிய ஏரி இது. குளத்தில் கிருஷ்ண விக்கிரத்தை போதாணா மறைத்த இடத்தில் ஒரு மண்டபம் அமைத்துள்ளனர். ஒரு மண்டபத்தில் பகவானின் பாதங்கள் அமைத்துள்ளனர். மண்டபம் செல்ல ஒரு பாலமும் உள்ளது. இக்குளக்கரையில்  டாங்கேஸ்வரர் மஹாதேவ் ஆலயமும்  அமைந்துள்ளது.


தீபஸ்தம்பம்
தன் பக்தனுக்காக துவாரகையிலிருந்து  ஓடி வந்த கண்ணனை
மாயனை மன்னு வடமதுரை மைந்தனை
தூயப்பெரு நீர் யமுனைத் துறைவனை
ஆயர்குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை
தாயை குடல் விளக்கம் செய்த தாமோதரனை  சேவிக்கலாம் வாருங்கள் அன்பர்களே.
                                                  
                                                                                  நவ துவாரகை யாத்திரை தொடரும் . . . .

No comments: