Wednesday, March 15, 2017

மாசி மக தீர்த்தவாரி -1

இவ்வருடமும் மாசி பௌர்ணமியன்று சென்னை கடற்கரையில் எம்பெருமான்கள் வழங்கும் தீர்த்தவாரியில் கலந்து கொள்ளும் பாக்கியம் கிட்டியது. அந்த அனுபவத்தை அன்பர்களாகிய தங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இப்பதிவுகள். முதலில் தீர்த்தத்தின் சிறப்புகள். 

இத்தொடரின் மற்ற பதிவுகள் :   2   3   4   5  


                                                
திருமயிலை விருப்பாக்ஷீஸ்வரர் பஞ்ச மூர்த்திகளாக 
கடற்கரைக்கு எழுந்தருளினார் அதில் விநாயகர் 

"சென்றாடு தீர்த்தங்கள் ஆனார் தாமே"  என்று திருநாவுக்கரசர் பெருமான் பெருமானையே தீர்த்தங்களின் வடிவாக குறிப்பிட்டுள்ளார். மாணிக்கவாசகரும், "எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த பொங்கு மடு" என்றும் "ஆர்த்தப்பிறவி துயர் கெட நாம் ஆர்த்தாடும் தீர்த்தன்" என்றும் பாடியுள்ளார். ஸ்ரீமந் நாராயணரும் புஷ்கரில் தீர்த்த ரூபியாகவே சேவை சாதிக்கின்றார். 



தோளுக்கினியானில் விருப்பாக்ஷீஸ்வரர் 

வேண்டும் வரம் அளிக்கும் விருபாக்ஷீஸ்வரர்” என பாபநாசம் சிவன் அவர்களால் பாடப்பெற்றவர் இவர். விருப்பங்களை தன் கண் பார்வையலேயெ தீர்த்து வைக்கும் ஈஸ்வரர் ஆகையால் விருப்பாக்ஷீஸ்வரர். அம்பாள் விசாலாக்ஷி. அக்ஷம் அன்பது கண் என பொருள், அப்பனும் அம்மையும் தங்கள் கண் பார்வையாலேயே எல்லா துயர்களையும் தீர்ப்பவர்கள். என் கருத்துப்படி இந்த ஏழு சிவாலயங்களில் மிகவும் பழமையானதாக காணப்படுவது இந்த கோவில் தான். பெரிய ஆவுடையாரில் அமைந்த பெரிய லிங்க திருமேனி கொண்ட எம்பெருமான். இவ்வருடம் பஞ்ச முர்த்திகளாக கடற்கரைக்கு எழுந்தருளி பக்தர்களிக்கு அருளி தீர்த்தம் அளித்தார். 

மகாபாரதக்கதையில் அருச்சுனன் பல தலங்களுக்கு  சென்று சிவபெருமானை வணங்கி வரம் பெற்ற செய்திகளை கூறும் சருக்கத்தின் பெயரே "தீர்த்த யாத்திரை சருக்கம்".


அம்பாள் விசாலாக்ஷி 

ஆதி சங்கரர் தாம் அருளிச்செய்த "சிவானந்த லஹரியில்" புண்ணிய தீர்த்தங்களைச் சிவத்தியானத்திற்கு  ஒப்பாக வைத்து போற்றியுள்ளார். புண்ணிய தீர்த்தங்களில் நீராடுபவர்களுக்கு  அன்பும், தெளிவும் தவமும் பரஞானமும் இறைவனுக்கு அடிமைத்திறமும் அவருடைய ஏவல்வழி நின்றொழுகும் பெரும்பேறும் கிட்டும்.  

அருளும் பொருளும் கைகூடும் அவலம் அகலும் கவலையறும்
இருளும் மடியும் மிடியும் போம் ஈறில் செல்வம் தழைத்தோங்கும்
தெருளும் திருவும் குடிகொள்ளும் சித்தி முத்தி உண்டாகும்
மருளும் பேயும் நோயும் போம்

என்ற பாடலில் தீர்த்தப்பயன் கூறப்பட்டுள்ளது.


வள்ளி தேவசேனா சமேத முருகர் 


********************

புண்ணிய நதிகளில் ஒரு முறை நீராடினால் ஆயிரம் கோதானம் செய்த பலன்  கிட்டும் என்று கூறப்படுகின்றது. புண்ணிய தீர்த்தங்களில் சென்று நீராடுவதைப் போலவே அப்புனித தீர்த்தங்களை கண்ணாரக்கண்டு தரிசனம் செய்தாலும், அத்தீர்த்தப் புனலைக் கண்டு நீராடுவோம் என்று மற்றவர்களை விரும்பி  அழைத்தாலும்,  கையினால் அந்த தீர்த்த நீரைத் தொட்டு தலை மேல் தெளித்துக் கொண்டாலும், பக்தி மிக அத்தீர்த்தக் கரையில் தங்கி இருந்தாலும் அதற்கு முன் அவர்கள் செய்த கொத்தானப் பாவக்குவியல்  எல்லாம் சூரியனைக் கண்ட பனி போல  கெட்டொழியும், புண்ணீயம் கை கூடும்.

வழக்கம் போல அதிகாலையில் எழும்பூர் ஸ்ரீநிவாசரும், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாளும்  வைகுந்த வாழ்வளிக்கும் கருட  வாகனத்தில் எழுந்தருளி அருள் பாலித்து தீர்த்தவாரி கண்டருளினர் அக்காட்சிகள் இதோ.



எழும்பூர் ஸ்ரீநிவாசர் கருட சேவை 

ஸ்ரீநிவாசரின் பின்னழகு 
********************
நீராடக்கூடிய புண்ணிய நாட்களாக

கதிரின் மதியம் கலந்திருநாள் கதிர்பூரணை ஆடிப்பிறப்பு
மதிசேர் தைமாதப்பிறப்பு மற்றை மாதப்பிறப்புகளில்
விதியாம் உருக்கள் விதிபாதம் விறல் வைகாசிப் பூரணையில்
அதிக மாசி மாதத்தில் அந்த மகத்தில் அந்நாளில்


என்று அமாவாசை, பௌர்ணமி, ஆடி மாதப் பிறப்பு நாளாகிய தட்சிணாயனம், தை மாதப் பிறப்பான உத்தராயணம்,  சங்கராந்தி முதலான தமிழ் மாதப்பிறப்பு நாட்கள், சிறப்புடைய திருவாதிரை நாட்கள், மகாவியதியபாதம் பொருந்திய வைகாசி பௌர்ணமி, சிறப்புப் பொருந்திய மாசிமக நன்னாள் புண்ணிய நீராட உகந்த நாட்கள் என்று புராண நூல்கள் சிறப்பாக சுட்டியுள்ளன. 


திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் 
தங்க கருட சேவை 



பார்த்தசாரதிப் பெருமாள் பின்னழகு 

*****************

காமேஸ்வரி சமேத காமேஸ்வரர் 

****************


வீரபத்திர சுவாமி 


ஆணவத்தை அழித்து ஞானத்தை அளிப்பவரே வீரபத்திரர். ஆணவத்தால் சிவபெருமானை அவமதிக்க முறையற்ற யாகத்தை நடத்தி அதில் அம்பாளையும் அவமதித்த தக்ஷனின் யாகத்தை அழித்து அந்த முறையற்ற யாகத்தில் கலந்து கொண்ட மற்ற தேவர்களையும் தண்டித்த நீதி தேவதையே வீரபத்திரர். 

ஆட்டு முகத்துடன் கர்வம் தீர்ந்த
 தக்ஷபிரஜாபதி 


 மாசி மாதத்தை   மாதங்களின் சிகரம் என்றும் கும்பமாதம் என்றும் கூறுவர்.  மாசி மாதத்தில் மக நட்சத்திரத்துடன் பௌர்ணமியுடன் கூடி வரும் நாளே மாசி மகம்,  மகம் நட்சத்திரம் பெருமாளுக்கும் உகந்த நட்சத்திரம்.  மாசி மகத்தன்று நீர் நிலைகளுக்கு  பெருமான் எழுந்தருளி தீர்த்தம் வழங்கி அருள் பாலிப்பார். சென்னை கடற்கரைக்கு எழுந்தருளிய எம்பெருமான்களின் தரிசனம் தொடரும்  

மாசிமக தரிசனம்   தொடரும்  .................

1 comment:

S.Muruganandam said...

மிக்க நன்றி