Friday, December 9, 2016

இமயமலையில் ஒரு இனிய யாத்திரை - 65

கங்கா ஆரத்தி

மத்வாஸ்ரமம்  

யாத்திரையின் நிறைவாக ரிஷிகேசம்  சுற்றிப் பார்த்தோம் மற்றும்  ஹரித்வாரில் கங்கா ஆரத்தி தரிசித்தோம்,



யாத்த்ரைக்கு வேண்டிய அனைத்து ஏற்பாடுகளையும் செய்த திரு.தேஷ்பாண்டே அவர்கள். 



ராம் ஜுலா பாலம் 


 இரு பாலங்களுக்குமிடையே  கங்கையின் கரையில் நடந்த வழியில் உள்ள ஆலயங்கள் சிலவற்றை தரிசித்த்தோம், 





லக்ஷ்மண் ஜூலாப்பாலம் 



சண்டி தேவி 




ஹரித்வார் ஹரி-கா-பௌரி துறை






கங்கா ஆரத்தி



நீரின்றி அமையாது உலகம் என்றார் திருவள்ளுவப்பெருந்தகை. அந்நீரை சுமந்து நாட்டை வளப்படுத்துபவை நதிகள். நம் நாட்டில் பாயும் நதிகளில் முக்கியமானது கங்கை. கங்கா தேவிக்கு நன்றி தெரிவிக்கும் விதமும் தினமும் காலையும் மாலையும் ஆரத்தி கங்கோத்திரி தொடங்கி ஹூக்ளி வரை பல இடங்களில் நடைபெறுகின்றது. ஹரித்துவாரத்தில் ஹரியின் பாதத்திற்கு  தினமும் காலையிலும் மாலையிலும் ஆரத்தி நடக்கின்றது.

தினமும் காலையில் நடக்கும் ஆரத்தி,  பிறந்த நாள் நல்லதாக அமைய வேண்டும் என்று இறைவனை வேண்டுவதற்காக நடக்கின்றது.  மாலை ஆரத்தி குளிர் காலத்தில்  6 மணிக்கும், கோடைக் காலத்தில் 6.30  மணிக்கும் நடைபெறுகின்றது.  மாலை 4 மணிக்கே பக்தர்கள் கங்கையின் இரு கரையிலும் கூடத்தொடங்குகின்றனர். முதலில் வருபவர்கள் ஆரத்தியை நன்றாகக் தரிசனம் செய்வதற்காக இரு கரைகளிலும் அமர்ந்து கொள்கின்றனர். கங்கையம்மனின் வெள்ளி உற்சவ மூர்த்திகள் பல்லக்கில் வைத்து கங்கைக்கரைக்கு பக்தர்களால் கொண்டு வரப்பட்டு பூசைகள் நடக்கின்றன. நேரமாக நேரமாக இருட்டிக் கொண்டு வருகின்றது பக்தர்கள் கூட்டமும் கூடிக்கொண்டே வருகின்றது. கூட்டத்தை ஒழுங்குபடுத்துபவர்கள் ஆரத்திக்கு நன்கொடை தாருங்கள் என்று  பணம் வசூலிக்கின்றனர். பண்டாக்கள் கரையில் நின்று பால், தயிர் தேன் முதலியவற்றால் கங்கைக்கு அபிஷேகம் செய்கின்றனர்.

இருள் கவிந்தவுடன் ஆரத்தி துவங்குகின்றது  அனைத்து ஆலயங்களில் இருந்தும் அலங்கார தீபங்கள் ஆரத்தியாக விஷ்ணுவின் திருப்பாதத்திற்கு / கங்கை நதிக்கு காட்டப்படுகின்றது.  சுமார் 11 அலங்கார தீபங்களினால் ஆரத்தி நடைபெறுகின்றது. முதலில் தூபம் காட்டப்படுகின்றது பின்னர் தீபம்.  ஆரத்தி பாடல்  ஒலி பெருக்கி மூலம்  மிதந்து நம் காதுகளை  எட்டுகின்றது. பாட்டுக்கு தகுந்தவாறு பண்டாக்கள் கொழுந்து விட்டு எரியும் அலங்கார  தீபத்தை ஆட்டுகின்றனர். அதன் ஒளி கங்கை ஆற்றின் நீரில் பிரதிபலிக்கின்றது  பக்தர்கள் பக்தி பூர்வமாக எழுந்து கங்கா மய்யாவிற்கு ஜே! என்று போற்றி முழக்கமிடுகின்றனர். பல பெண்கள் தொன்னையில் பூக்களை நிரப்பி அதில் விளக்கேற்றி அதை  கங்கையில் மிதக்க விடுகின்றனர். இருட்டு நேரத்தில் ஒளிக் கப்பல்கள்  மிதந்து நீரோட்டத்திற்கு தக்கவாறு செல்லும் அழகைப் பார்ப்பதே ஒரு இனிமையான தெய்வீக  அனுபவம். உண்மையில் ஹரித்துவாரத்தில் கங்கா ஆரத்தி பார்க்க வேண்டிய ஒன்று என்பதில் ஐயமில்லை. தாங்களும் சமயம் கிடைத்தால் அவசியம் கங்கா ஆரத்தியை சென்று தரிசனம் செய்யுங்கள்.


கங்கையின் இரு கரைகளிலும் பல கடைகள் உள்ளன. தீர்த்த சொம்புகள், பல்வேறு தெய்வ மூர்த்தங்கள், சங்குகள், அரக்கு வளையல்கள், தின்பண்டங்கள் என்று பல பொருட்களை இக்கடைகளில் வாங்கலாம். 

இத்துடன் இவ்வருட பதிவுகள் நிறைவு பெறுகின்றன. அவனருளால்  மற்றும் ஏதாவது புது இடத்தை தரிசிக்கும் போது அதை தங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இது வரை வந்து தரிசித்த அன்பர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி. 




3 comments:

கோமதி அரசு said...

இமயமலை தரிசனம் மிக அருமை.

படங்களும், செய்திகளும் அனைவருக்கும் உதவும்.
நன்றி.

இறைவன் அருளால் மீண்டும் சந்திப்போம்.

ப.கந்தசாமி said...

எங்களுக்கும் ஒரு நல்ல அனுபவத்தைக் கொடுத்த உங்களுக்கு என் வாழ்த்துகள்.

kannan said...

உங்கள் பதிவு மிகவும் அற்புதமாக உள்ளது. நீங்கள் எல்லோரும் மிகவும் கொடுத்து வைத்தவர்கள். உங்கள் எல்லோருக்கும் தெய்வ அருள் இருக்கின்றது, ஆகையால் தான் மீண்டும் மீண்டும் உங்களால் யாத்திரையயை தொடர முடிகின்றது. பத்திரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி மற்றும் யாமோனிதிரி, இந்த தலங்களுக்கு என் வாழ் நாளில் ஒரு முறையாவது சென்று வர வேண்டும் என்பதே என் லட்சியம் ஆகும்.