ஸ்ரீவாரி மெட்டு
ஸ்ரீவாரி
சேவையின் நான்காம் நாள் அடியோங்களுக்கு அதிகாலை 5 மணி சேவை அளிக்கப்பட்டது.
அதிகாலை முக்கியமானவர்களுக்கு (VIP Break Darshan) என்று ஒரு சேவை உள்ளது. இதில்
தரிசனத்திற்கு செல்பவர்கள் துவாரபாலகர்களைத் தாண்டி அர்த்தமண்டபத்திற்குள் சென்று
ஏழுமலையானை அருகில் சென்று சேவிக்கும் பாக்கியம் கிட்டுகின்றது. இந்த VIPகளில்
மூன்று வரிசைகள் உள்ளன என்று அறிந்து கொண்டோம். ரூபாய் பத்து லட்சத்திற்கு மேல்
நன்கொடை தருபவர்கள், அரசின் உயரதிகாரிகள், நீதியரசர்கள் ஆகியோர் VIP-1 இவர்களுக்கு
ஆரத்தி, தீர்த்தம், சடாரி உண்டு அதிக நேரம் சுவாமியை தரிசிக்க அனுமதிக்கின்றனர். VIP-2
தேவஸ்தான ஊழியர்கள் அவர்களது குடும்பத்தினர், சில அரசு அதிகாரிகள் அவர்களது
குடும்பத்தினர் இதில் அடங்குவர். இவர்களுக்கும் ஆரத்தி தரிசனம் உண்டு குழு குழுவாக
அர்த்தமண்டபத்தில் அனுமதித்து ஆரத்தி காட்டி அனுப்புகின்றனர். VIP-3 பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற
உறுப்பினர்கள் ஆகியோர்களின் சிபாரிசுக்கடிதம் கொண்டுவருபவர்கள் அடங்குவர்.
வசந்த மண்டபம்
இவர்கள் அனைவரும் தரிசனம் வேண்டும் நாளுக்கு முதல் நாளே திருமலை வந்து காலை 12 மணிக்கு முன்னரே சிபாரிசு கடிதத்தை அளிக்க வேண்டும், தரிசனம் பற்றிய அறிவிப்பு செல்போனில் வரும் பின்னர் ரூ.500/- செலுத்தி டிக்கெட் பெற்றுக்கொள்ள வேண்டும். பெருமாளை அருகில் சென்று ஆரத்தியுடன் தரிசிக்க இந்த VIP Break Darshan ஒரு அருமையான வாய்ப்பு.
அடியோங்கள் வரிசையை ஒழுங்குபடுத்திக்கொண்டிருந்த போது ஒரு பத்து லட்சத்திற்கு மேல் நன்கொடை அளித்த அன்பர் ஒருவருடைய நிரந்தர அடையாள அட்டையை வாங்கிப்பார்த்தோம் அதில் அவருடைய குடும்பத்தினரின் புகைப்பட்டத்துடன் வருடத்தில் ஒரு வாரம் திருமலையில் வந்து தங்கி திருவேங்கடவனை சேவிக்கும் சலுகை அவர்களுக்கு கொடுக்கப்பட்டிருந்தது.
ஸ்ரீவாரி மெட்டுப்படிகள்
ஹரி கிருஷ்ணன் நடராஜன்
இன்றைய தினம் அதிகாலையிலேயே சேவை முடிந்து விட்டதால் அன்றைய தினம் ஸ்ரீநிவாசமங்காபுரம் சென்று கல்யாண வெங்கடேஸ்வரரரின் ஏகாந்த சேவையை தரிசித்து விடலாம் என்று முடிவு செய்தோம். அப்போது திரு. ஆறுமுகம் ஐயா அவர்கள் “ஸ்ரீவாரி மெட்டு” எனப்படும் படிகளின் வழியாக இறங்கிச்செல்லலாம் அங்கிருந்து ஸ்ரீநிவாசமங்காபுரம் அருகில் உள்ளது வரும் பொழுது பேருந்தில் வந்து விடலாம் என்று கூறினார். அவ்வாறே சென்றோம். அந்த அனுபவத்தை இப்பதிவில் காணலாம் அன்பர்களே.
அலிப்பிரி மெட்டு பாதை
திருமலைக்கு படியேறி வந்து எழுமலையானை சேவிக்க இரண்டு வழிகள் உள்ளன, முதலாவது அனைவரும் அறிந்த அலிப்பிரி மெட்டு. கருடனின் பிரம்மாண்ட சிலை உள்ள அலிப்பிரியிலிருந்து திருமலை வரையிலான 11 கி.மீ பாதை சுமார் 3550 படிகள் உள்ளன சுமார் 4 மணி நேரம் முதல் 6 மணி நேரம் ஆகும். இடையில் மலையேறி வருபவர்களுக்கு ஏழுமலையானை உடனே தரிசிக்கும் வகையில் அடையாளத்திற்காக திவ்ய தரிசன டோக்கன் அளிக்கின்றனர். இப்பாதை 24 மணி நேரமும் திறந்திருக்கின்றது. அலிப்பிரி அடிவாரத்தில் ஸ்ரீவாரி பாதல மண்டபம் மற்றும் லக்ஷ்மி நாராயண சுவாமி ஆலயம் மற்றும் விநாயக சுவாமி ஆலயம் அலிப்பிரி அடிவாரத்தில் அமைந்துள்ளன.
இரண்டாவது வழி ஸ்ரீவாரிமெட்டு எனப்படும் 8 கி.மீ பாதை தூரம் குறைவு என்பதால் இது சற்று செங்குத்தாக இருக்கின்றது எனவே மலையேறுவது சிறிது சிரமமாகத்தான் இருக்கும். மொத்தம் 2400 படிகள் உள்ளன, 2 மணி நேரம் முதல் 4 மணி நேரத்தில் மலை ஏறலாம். முதலில் இவ்வழியாக வருபவர்களுக்கு திவ்ய தரிசன டோக்கன் வசதி இல்லாமல் இருந்தது இப்போது இவ்வழியிலும் டோக்கன் வழங்குகின்றனர். காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையில் தான் இவ்வழியாக மலையேற அனுமதிக்கின்றனர் இரவில் மலையேறி வர அனுமதி இல்லை. ஸ்ரீநிவாசமங்காபுரம் திருப்பதி பேருந்து நிலையத்திலிருந்து 19 கி.மீ தூரத்தில் உள்ளது. ஸ்ரீநிவாசமங்காபுரத்தில் இருந்து தேவஸ்தானத்தின் இலவச பேருந்து சேவை ஸ்ரீவாரி மெட்டு வரை உள்ளது. ஸ்ரீநிவாசமங்காபுரத்தில் நமது மூட்டை முடிச்சுக்களை கொடுத்தி விட்டு மலையேறிய பிறகு பெற்றுக்கொள்ளும் வசதி உள்ளது.
திருமலையப்பன் பத்மாவதித்தாயாரை திருக்கல்யாணம் செய்த பிறகு ஆறு மாத காலத்திற்கு மலையேறக்கூடாது என்பதால் அப்போதைய அகத்தியரின் ஆசிரமமான தற்போதைய ஸ்ரீநிவாச மங்காபுரத்தில் ஆறு மாதம் தங்கி பின்னர் இவ்வழியாக ஏறி திருமலையை அடைந்தார் என்பது ஐதீகம். அடியோங்கள் வசந்த மண்டபம் தாண்டி திருவேங்கடமுடையானும் பத்மாவதித்தாயாரும் மலையேறி வந்த ஸ்ரீவாரி மெட்டில் இறங்கி அடிவாரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வரரை வணங்கிவிட்டு பின் பேருந்து மூலமாக ஸ்ரீநிவாச மங்காபுரம் அடைந்தோம். இத்திருக்கோவிலின் ஏகாந்த சேவை அனுபவத்தை அடுத்தபதிவில் காணலாம் அன்பர்களே.
இத்தொடரின் மற்ற பதிவுகளைக் காண இங்கு சொடுக்குங்கள்
சேவை தொடரும் . . . . . . .
No comments:
Post a Comment