Saturday, July 16, 2016

நானேயோ தவம் செய்தேன் - 4

ஸ்ரீவாரி சேவா


பாபவிநாசம்  நீர் விழ்ச்சி

அடியோங்களின் ஸ்ரீவாரி சேவையின் மூன்றாம் நாள் காலையில் பாரக்கமணி சேவையே ஒதுக்கியிருந்தார்கள் அதை முடித்துவிட்டு அன்றைய தினம் திருப்பதி மலையில் உள்ள சில  தீர்த்தங்களுக்கு சென்று வரலாம் என்று முடிவு செய்தோம்.
பொதுவாகவே திருவேங்கடவனை தரிசிக்க  அதிக நேரமாகின்றது என்பதால் பெரும்பாலனோர்  சுவாமி தரிசனம் செய்தவுடன் திரும்பிவிடுகின்றனர். அடியேனும் இது வரை வேறு எந்த இடமும் சென்று தரிசித்ததில்லை  இந்தத்தடவை அங்கேயே தங்கியிருக்கும் வாய்ப்புக்கிட்டியதால்  ஆகாச கங்கை, பாபவிநாசம், வேணு கோபாலர் ஆலயம் சென்று தரிசித்துவிட்டு வந்தோம். மதிய உணவிற்குப்பின் பேருந்தில் புறப்பட்டு சென்றோம். அவ்வழியாக செல்லும் பேருந்தில் முழு வழிக்கும் டிக்கெட் வாங்கி விட்டால்  வேண்டும் இடத்தில் இறங்கி பார்க்க வேண்டிய இடத்தில் இறங்கி பார்த்துவிட்டு  அதுத்து வரும் பேருந்தில் நம் விருப்பப்படி செல்லலாம் என்று கூறினார்கள்.
நடராஜன்-ஆறுமுகம்
முதலில் திருமலையில் உள்ள முக்கிய தீர்த்தங்கள் என்னவென்று பார்க்கலாமா?

1.        சுவாமி புஷ்கரணி:- இது சரஸ்வதிதேவி தவமிருந்த இடம் என்பது ஐதீகம்,  இங்குதான் ஆதிவாராக மூர்த்தி எழுந்தருளியுள்ளார். மார்கழி மாத வளர்பிறையில் துவாதசி நாளில் சூர்ய உதயதத்திற்கு 6 நாழிகை முன்பும், சூர்யோதயத்திற்கு 6 நாழிகை பின்பும் இம்மலையிலுள்ள மற்ற எல்லா தீர்த்தங்களும் இங்கு சங்கமம் ஆகின்றன என்பது ஐதீகம்.

 'சுவாமி புஷ்கரணி ஸ்நானம், வராஹ வேங்கட தரிசனம், மஹாபிராசாத சுவீகாரம் த்ரையம் த்ரைலோக துர்லபம்...'மிகவும் புனிதமான சுவாமி புஷ்கரணியில் முதலில் நீராட வேண்டும். அதற்கு முன்பு, சுவாமிக்கு செலுத்தவேண்டிய காணிக்கை இருந்தால் தலைமுடி காணிக்கையாக செலுத்தி, சுவாமி புஷ்கரணியில் புனித நீராடிய பிறகு, புஷ்கரணி தீரத்தில் இருக்கும் ஆதிவராஹ சுவாமியை தரிசிக்க வேண்டும்.இந்த திருமலை ஷேத்திரத்திற்கு ஆதிவராஹ ஷேத்திரம் என்று பெயர்.

ஆதிகாலத்தில் திருமலையில் ஷேத்திராதிபதியாக வராஹ சுவாமி இருந்தார்.  மஹாவிஷ்ணுவின் தசாவதாரங்களில் மூன்றாவதாக வரும் வராஹ அவதாரத்தின் போது, சுவாமி இரண்யாட்கன் என்ற அரக்கனிடமிருந்து பூதேவியை காப்பாற்றி கடலிலிருந்து உத்தரித்த பூவராஹ சுவாமியாக பூதேவியுடன் சுவாமி புஷ்கரணி தீரத்தில் எழுந்தருளியிருக்கிறார். திருவேங்கடமுடையான் வைகுண்டத்திலிருந்து அவதரித்து கலியுகாந்தம் பக்தர்களுக்காக இங்கு இருக்க விரும்பி, இது ஆதிவராஹ ஷேத்திரமாகையால், வராஹ சுவாமியிடம் இருக்க இடம் கேட்டு வந்ததாகவும், சுவாமி புஷ்கரணிக்கு தென்மேற்கு திசையில் வராஹ சுவாமி  திருவேங்கடவனுக்கு  இடம் கொடுத்ததாகவும், இப்பொழுது சுவாமி எழுந்தருளியிருக்கும் இடம்தான் அது என்றும் புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது. வராஹ சுவாமி திருவேங்கடவனுக்கு இடம் கொடுத்ததற்கு பதிலாக, வராஹ சுவாமிக்கு முதல் ஆராதனம், முதல் நிவேதனம் முதல் தரிசனமும் திருவேங்கடவன் அளித்திருக்கிறார். ஆகையால் பக்தர்கள் சுவாமி புஷ்கரணியில் நீராடி, வராஹ சுவாமியை தரிசித்து, பிறகு,  திருவேங்கடமுடையானை தரிசித்து,  சுவாமியினுடைய மஹாபிரசாதத்தை சுவீகரித்து திரும்பி செல்ல வேண்டியதே சரியான யாத்ரா கிரமமாக சொல்லப்பட்டிருக்கிறது.

எனவே திருமலைக்கு வருகை தரும் பக்தர்கள் ஒவ்வொருவரும் இந்த யாத்ரா கிரமத்தை சரியாக அனுசரித்து முதலில் வராஹ சுவாமியை தரிசித்த பிறகு திருவேங்கடமுடையானை தரிசித்தால்  யாத்திரையின்  முழுபலன் கிட்டும்.

ஆறுமுகம், அடியேன், நடராஜன், நாகேஸ்வர் சிங்

2.  பாபவிநாசம்: மலையில் உள்ள இன்னொரு புண்ணிய தீர்த்தம். ஐப்பசி மாதம் வளர்பிறை சப்தமி திதியில் உத்திராட நட்சத்திரம் வரும் ஞாயிற்றுக்கிழமைகளில் இங்கு தீர்த்தங்கள் சங்கமமாகின்ற. எனவே அன்றைய தினம் இந்த தீர்த்தத்தில் நாம் நீராடினால் இக்கலியுகத்தில் செய்த பாவங்கள் எல்லாம் விலகும் என்பது ஐதீகம்.   

3. ஆகாய கங்கை:- தினம் தோறும் அதிகாலையில் பிரம்ம முகூர்த்தத்தில் இந்த தீர்த்தத்தால் திருவேங்கடவனுக்கு திருமஞ்சனம் நடைபெறுகின்றதாம் . இங்கு சித்திரை மாதம் சித்ரா பவுர்ணமியில் நீராடுவது விசேஷம்.

4. ராமகிருஷ்ண தீர்த்தம்:- தை மாத பவுர்ணமியன்று இதில் நீராடினால் சித்திகள் சித்தியாகுமாம்.

5. பாண்டவ தீர்த்தம்:- வைகாசி மாத சுக்லபட்ச துவாதசியுடன் கூடிய செவ்வாய்க்கிழமைகள் இதில் நீராடினால் பல பாவங்களிலிருந்து விடுபட முடியுமாம்.

 6.தும்புரு தீர்த்தம்:- பங்குனி மாத பவுர்ணமியன்று இதில் நீராடினால் தும்புரு முனிவரின் நல்லாசி கிடைக்கும். இவையல்லாது,

7, வைகுண்ட தீர்த்தம்,

8. ஜடாயு தீர்த்தம்,

9. குமாரதாரா தீர்த்தம்,

10. கோனேரி தீர்த்தம்,

11. சக்ர தீர்த்தம்,

12. வகுள தீர்த்தம்,

13. சேஷ தீர்த்தம்,

14. மொரதீர்த்தம்

என பதினான்கு வகை  முக்கிய  தீர்த்தங்கள் மலை மீது இருக்கின்றன. 



ஜாபாலி ஆஞ்சநேயர் ஆலயம்


ஆகாச கங்கை அம்மன் ஆலயம்


பாப நாசம் போகின்ற வழியில் முதலில் வேணுகோபால சுவாமி ஆலயம் உள்ளது இக்கோவிலை திரும்பி வரும் போது சேவித்துக்கொள்ளலாம் என்று ஜாபாலி ஆஞ்சநேயர் ஆலயத்திற்கு சென்றோம். இவ்விடத்தில் ஜாபாலி முனிவர் தவம் செய்ததால் இப்பெயர். இங்கு ஆஞ்சநேயர் தவக்கோலத்தில் அருள் பாலிக்கின்றார். கோவிலுக்கு  இவ்வாலயத்திற்கு  செல்ல சுமார் 3 .கி.மீ நடந்து செல்ல வேண்டும். எதிரே ஜாபாலி தீர்த்தம் என்னும் குளம் உள்ளது. இத்தீர்த்தத்தில் நீராடி ஜாபாலி ஆஞ்சநேயரை வணங்க பில்லி, சூனியம், ஏவல் உள்ளிட்ட எல்லா தீவிணைகளும் நீங்கும், ஏழரைச்சனி நடப்பவர்களின் துன்பம் நீங்கும்.   செல்வதற்குள் ஆலயம் நடை சார்த்திவிடுவார்கள் என்பதால் இறங்காமல்  அப்படியே பாபவிநாசம்  சென்றோம்.

ஆகாச கங்கை தோரண வாயில்



ஆகாய கங்கை அருவி
திருவேங்கடவன் ஆலயம் 

அடுத்து ,பத்து நிமிட பயணத்தில், பாபநாசத்தை அடையலாம். பாபநாசம் () பாபவிநாசம் திருமலையில் இருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள  அணைக்கட்டு. திருமைலைக்கு வரும் பக்தர்கள் இந்த புண்ணிய தீர்த்தத்தில் நீராடினால் பாவம் தீரும்னு நம்புகின்றனர் அதனால்  இந்த இடத்திற்கு இந்தப் பெயர் . இந்த தீர்த்தத்தின் மேற்கு பக்கத்துல கட்டபட்டுள்ள  அணையில் இருந்து தான் திருமலைக்கு தண்ணீர் விநியோகம் நடக்கின்றது. அதனால திருமலையில் எங்கு நீராடினாலும் பாபவினாசத்தில் நீராடிய   புண்ணியம் கிடைக்கும். ஆஞ்சநேயரின் அன்னை அஞ்சனை தவம் செய்த இடம் . இங்கு செயற்கை நீர்வீழ்ச்சி ஏற்படுத்தியுள்ளன்ர் அதில் அனைவரும் குளித்தோம். அருமையாக  வர்ணம் தீட்டபப்ட்ட சுதை சிற்பங்கள்  கண்ணுக்கு விருந்து. அருகிலேயே ஆகாச கங்கை அன்னைக்கு ஒரு கோவில் உள்ளது. கங்கை அன்னையை வழிபட்டு பின்னர் ஆகாச கங்கைக்கு சென்றோம்.



தினமும் திருமாலுக்கு தீர்த்த கைங்கர்யம் பணி செய்து கொண்டிருந்த பெரிய திருமலை நம்பிகள் அவர்கள் தினமும் அதிகாலையில் பாபவிநாசனம் சென்று நீராடி திருவேங்கடமுடையானின் திருமஞ்சனதிற்க்கும் திருவாராதனைக்கும் தீர்த்தம் கொண்டு வந்து கைங்கர்யம் பண்ணி கொண்டிருந்தார் .வயோதிக நிலையிலும் அவரது இந்த பணி தொடர்வது கண்ட எம்பெருமான் ஸ்ரீனிவாச சுவாமி அவரது அந்த சிரமத்தை எளிதாக்கும் பொருட்டு ஒரு நாள் ஒரு வேடுவ சிறுவனின் வேடம் கொண்டு, நம்பிகள் தீர்த்தம் கொண்டுவரும் வழியில் அவரை இடை மறித்து, "தாத்தா ,தாகத்துக்கு தண்ணீர் வேண்டும்" என கேட்க ,பிள்ளாய் இது எம்பெருமானுக்கு கொண்டு போகிறேன் ,உனக்கு தந்தால் வினர்த்தம் ஆகிவிடும் என்று மறுக்க அந்த சிறுவன் பாணத்தால் தீர்த்த பாத்திரத்தில் துளை இட்டு அவர் அறியாமல் நீரை பருகி விட்டான். நடந்ததை அறிந்த நம்பிகள் இனி அவ்வளவு தூரம் சென்று திரும்புவதற்குள் கால தாமதம் ஆகிவிடுமே என்று வருந்தினார். அதற்கு அந்த சிறுவன் ,"தாத்தா ,கவலை வேண்டாம் என்று கூறி ,அருகில் இருந்த அஞ்சனாத்ரி மலையில் ஒரு பாணத்தால் அடிக்க ,குபீர் என்று தண்ணீர் பெருகியது .இதுவே ஆகாச கங்கை இனி இதிலிருந்து தண்ணீர் கொண்டுசெல்லலாம் என கூறி மறைந்தான் அந்த சிறுவன் .அன்று முதல் நம்பிகள் பெருமான் அத்தீர்த்தத்தில் இருந்தே இறைவனின் கைங்கர்யத்துக்கு நீர் கொண்டு வர தொடங்கினார். அவரது சந்ததிகளும் இன்று வரை ஆகாச கங்கை தீர்த்ததையே திருவேங்கடவுடையானின் கைங்கர்யத்திற்காக கொண்டுவருகிறார்கள்சாலையில் இருந்து சிறிது படிகள் இறங்கி கீழே சென்றால் ஆகாச கங்கை நீர்விழ்ச்சியில் சென்று நீராடலாம். அருகில் வேடுவப் பிள்ளையாக வந்த வேகடவனுக்கு ஒரு சிறு ஆலயம் உள்ளது. அவனது கருணையை நினைந்து வணங்கினோம். 

வேணு கோபாலர் ஆலயம் 

ஹதிராம்ஜீ ஆலயம் 


அடுத்து வேணு கோபால சுவாமி ஆலயத்திற்கு சென்றோம். கிருஷ்ணரும், இராமரும் அருள் பாலிக்கின்றனர். நிறைவாக திருவேங்கடவன் வந்து தாயம்  ஆடிய இவருக்காகவே பெருமாள் யானையாக வந்து ஒரு இரவுக்குள் கரும்பு கட்டுகளை தின்ற் பக்தர் ஹதிராம்ஜி அவர்களின் ஆசிரமம் சென்று சேவா சதன் திரும்பினோம்.


இத்தொடரின் மற்ற பதிவுகளைக் காண இங்கு சொடுக்குங்கள்

சேவை தொடரும் . . . . . . . 

No comments: