Wednesday, July 13, 2016

நானேயோ தவம் செய்தேன் - 3


மின்விளக்கு ஒளியில் ஒளிரும்  இராஜகோபுரம் மலையப்ப சுவாமி கருட சேவை 
பின்னழகு 
அடியேன் 


ஸ்ரீவைகுண்ட வாழ்வளிக்கும்  கருட சேவை
திருக்கோவில்களில் பிரம்மோற்சவ காலங்களின் பெருமாள் காலையும் மாலையும் பல்வேறு வாகனங்களில், கோவிலுக்குள் வந்து வழிபட முடியாதவர்களான முதியவர்கள், முடியாதவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள் ஆகியோருக்குத் தரிசனம் அளிக்கக்  கருணையால் தானே கோவிலுக்கு வெளியே திருவீதியில்  வந்துச் சேவை சாதிப்பார். இவ்வாறு பல்வேறு வாகனங்களில் சிறப்பான ஆபரண, மலர் அலங்காரங்களுடன் இறைவன் தானே வந்து சேவை சாதிப்பது  "வாகன சேவை" எனப்படும்.

மஹாவிஷ்ணு தனது வாகனமும் கொடியுமான கருடனில் இவ்வாறு ஊர்வலம் வந்து சேவை சாதிப்பது சிறப்பாக கருடசேவை”  எனப்படும் என்பது சாதாரணமான விளக்கம். எம்பெருமானைக் கருட வாகனத்தில் தரிசனம் செய்தவர்களுக்கு வைகுண்ட பேறு உண்டுமறு பிறவி கிடையாதுஎன்பது ஐதீகம். எனவே கருடசேவையைச் சேவிப்பது   மிகவும் புண்ணியம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது அது ஏன் அவ்வாறு என்பதன் உள்ளார்த்தத்தைக் காண்போமா?

தாஸஸ் ஸஹா வாஹந மாஸநம் த்வஜ:
யஸ்தே விதானம் வ்யஜனம் த்ரயீமய:  |
உபஸ்திதம் தேந புரோ கருத்மதா
த்வதங்க்ரி ஸ்ம்மர்த கிணாங்க  சோபினா ||

என்று ஆளவந்தார் தமது ஸ்தோத்ர ரத்தினத்தில்போற்றியுள்ளபடி
1.    சேவை புரியும் அடிமையாக, எப்போதும் அவர் திருவடிகளைத் தாங்கி இருக்கின்ற பெரிய திருவடி,
2.    தோழனாகவும், எப்போதும் பெருமாளின் அருகில் இருப்பவர்,
3.    பெருமாளுக்கு வாகனமாகவும் பிரகாசமான கொடியாகவும் விளங்குபவர்,
4.    எம்பெருமானின் சீரிய சிம்மாசனம் மேற்கூரை, கண்ணாடியாகவும் விளங்குபவர்,
5.    பெருமாள் ஏறிச்செல்லும் போது அவரது திருவடி நெருக்கத்தினால் உண்டான  தழும்பை  உடையவர்,
6.    பெருமாள் ஏறிச் செல்லும் போது அவருக்குச் சந்தோஷம் அளிக்கும் சாமரம் போன்று வீசும் இரு அழகிய சிறகுகளை உடையவர்,
7.    எங்கே பெருமாள் செல்ல வேண்டுமென்றாலும்  அவரைக் கூட்டிச் செல்லக்  கை கட்டி தயார் நிலையில் நிற்பவர்.
8.    வேதங்களையே தன் அவயவங்களாகக் கொண்ட நிகரில்லாத கருடன். வேத சொரூபியாகவும் இருந்து வேதப் பரம்பொருளான பெருமானை  அடையாளம் காட்டுகின்றார்.
ஆதிமூலமே! என்று கஜேந்திரன் அலறிய மறு நொடி இந்த ஓடும் புள்ளேறி   (பறவை) எம்பெருமான் யானைக்கு மோக்ஷம் கொடுக்கப் பறந்து வந்தான். இது எம்பெருமான் எப்போதும் தன் பக்தர்களுக்கு உதவ காத்திருக்கும் எளிமையைக் குறிக்கின்றது.  இந்நிகழ்வை

குலத்தலைய மதவேழம் பொய்கை புக்குக் கோள்
  முதலை பிடிக்க அதற்கு அனுங்கி நின்று
நிலத்திகழும் மலர்சுடரேய் சோதீ! என்ன நெஞ்சிடர்
  தீர்த்தருளிய என் நின்மலன் காண்மின்
மலைத் திகழ் சந்து அகில் கனகம் மணியும் கொண்டு
  வந்து உந்தி வயல்கள் தொறும் மடைகள் பாய
அலைத்து வரும் பொன்னி வளம் பெருகும் செல்வத்து
  அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே. ( பெ. தி 78-3)
பொருள்: (காவிரி ஆறு) செய்ய மலையிலிருந்து சந்தன மரங்களையும், அகில் கட்டைகளையும், பொன்னையும், இரத்தினங்களையும் திரட்டிக் கொணர்ந்து தள்ளி வயல்களிலெல்லாம், நீர் பாயும் வழிகளிலே பாய்ந்து  செல்லும்படி அலை எறிந்து கொண்டு வரும். அதனால் செழிப்பு மிகப் பெற்ற சிறப்புடைய அணி அழுந்தூர் நின்றுகந்த அமரர் கோன் யார் என்றால் நல்ல சாதியில் பிறந்த யானைகளின் தலைமையுடைய கஜேந்திராழ்வான் தடாகத்தில் இறங்கிய போது வலிமையை உடைய முதலையானது தன்னைப் பிடித்திழுத்ததால் அதற்கு அஞ்சி நின்று ஓளி விளங்கும் சந்திரனை ஒத்த குளிர்ந்த ஓளியை உடையவனே! கருணை என்று ஓலமிட்டுத் துதிக்க அதன் மனத்துன்பத்தை நீக்கியருளிய எமது குற்றமற்ற கடவுள் ஆவார்.   என்று பாடுகின்றார் திருமங்கையாழ்வார்
தன்னுடைய தாய் மாற்றாந்தாயிடம் அடிமையாக இருப்பதைக்கண்டு மனம் பொறுக்க முடியாமல் அமிர்தம் கொண்டு வர இந்திரலோகம் சென்று பெருமாளுடனும் சண்டையிட்டு தன் வீரத்தையும்  மாத்ரு பக்தியையும்      (தாய்ப்பாசம்)  உணர்த்தியவன் கருடன். இவ்வாறு தாயைக் காத்த தனயன் கருடன். அமிர்தம் கொண்டு வரும் போது எம்பெருமானுக்கும் கருடனுக்கும் கடும் போர் ஏற்பட்டது இதில் கருடனுக்கே வெற்றி ஏற்பட்டது. கருடனின் வீரத்தை பகவான் மிகவும் புகழ்ந்து , 'நீயொரு வரம் கேள் கொடுக்கிறேன் என்றார்". கருடன் கேட்பதற்கு முன்பாகவே எம்பெருமானே, " நீ எனக்கு வாகனமாக இருக்க வேண்டும். அதே போல எனது கொடியில் எப்போதும் இருந்து கொண்டு வெற்றியைப் பெற்றுத்தர வேண்டும்"  என்றார். எனவே கருட த்வஜனான எம்பெருமானுக்கு என்றும் தோல்வியே கிடையாது என்றும் கூறுவர்.

ஆகவே தான் பெருமாள் உவண கேதனன், உவண முயர்த்தோன்வெஞ்சிறை புள் உயர்த்தான், அரவப்பகை கொடியோன், கருடத்வஜன், கருட கமனன், ஆடும் கருளக்கொடியுடையான், வெற்றிக்கொடியுடையான் என்றெல்லாம் அழைக்கப்படுகின்றார்.

மேலும் புட் கொடியாய்!, ஊரும் புட்கொடியும் அஃதே, ஏறுஞ் இருஞ்சிறைப்புள் அதுவே கொடியாயுயர்த்தான், கொடியா புள்ளுடையான்!, ஆடும் புட்கொடி ஆதிமூர்த்தி,   சுருளக் கொடி யொன்றுடையீர்!, புள்ளூர் கொடியான், நிறை புகழ் அஞ்சிறைப்புள்ளின் கொடியான், சுருளப் புட்கொடி சக்கரப்படை வானநாடன், ஆடும் கருளக்கொடியான், புட்கொடியுடைய  கோமான், வெற்றிக்கருளக்கொடியான், கொடிப்புள் முன்னுயர்த்து பாற்கடல் துயின்ற பரமன், கொடி மன்னு புள்ளுடை அண்ணல், வெஞ்சிறைப்புள் உயர்த்தார், அருளாழிப்புள் கடவர், வலங்கொள் புள்ளுயர்த்தாய், கொடியா வடுபுள்ளுயர்த்த வடிவார் மாதவனார், ஆடற் பறவையுயர் கொடி எம்மாயன், பொன் புரை மேனி கருளக்கொடியுடை புண்ணியன், நிறை புகழ் அஞ்சிறைப்புள்ளின் கொடியான்கருட தாரணன் என்றெல்லாம் வைநதேயன் மஹா விஷ்ணுவின் கொடியாக விளங்கும் பாங்கை ஆழ்வார்கள் பலவாறு அனுபவித்துப்  பாடியுள்ளனர்.

நாமும் உத்திஷ்டோத்திஷ்ட கோவிந்த உத்திஷ்ட கருடத்வஜகருடக்கொடியானே கோவிந்தனே திருக்கண் மலர்ந்தருள்வாய்”  என்று திருப்பள்ளியெழுச்சி பாடுகின்றோம். இனி எவ்வாறு கருடசேவையை காண்பது வைகுண்ட வாழ்வளிக்கும் என்பதைக் காணலாம்.

சில தலங்களில் கருட சேவையின் போது ஒரு வெள்ளைத் துணியை கருட வாகனத்தின் அலகால் கிழித்து நான்கு திசைகளிலும் திசைக்கு ஒன்றாகத் தூக்கி எறிவார்கள். இது ஜீவாத்மாவின் மும்மலங்களான ஆணவம், கன்மம், மாயை ஆகியவை அவனிடமிருந்து கிழிக்கப்பட்டு திசைக்கு ஒன்றாக வீசப்பட்டு அது தூய்மையாவதைக் குறிக்கின்றது.

எனவே கருடசேவையைக் காணும் போது நம்மிடம் உள்ள ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்கள் நீங்கும் (நீக்க நாம் முயற்சி செய்தால்) இவ்வாறு மலங்கள் நீங்கும் போது மனிதன் நிர்மலன் ஆகின்றான். அவன் தன்னை உணர்கிறான். இறை தரிசனம் கிட்டும். முக்திக்கு வழி பிறக்கும் எனவேதான் பெருமாளின் கருடசேவையைக் காண்பதால் வைகுண்ட வாழ்வளிக்கும் என்பது ஒரு ஐதீகம்.

மோக்ஷப் பேறு என்பதற்கான இன்னொரு விளக்கம். வேதங்கள் தொலைந்த போது அதை மீட்டெடுத்துக் கொடுத்தவர் எம்பெருமான், ஏனென்றால் வேதங்கள் அவரே பரம்பொருள் என்று அறுதியிட்டுக் கூறுகின்றன. கருடன்  அந்த வேத மயமானவன், அதாவது "வேதஸ்வரூபன்". எனவே ஸ்ரீஆளவந்தார் வேதாத்மா விஹகேஸ்வர:அதாவது கருடன் வேதாத்மா  என்று போற்றுகின்றார். விநதையின் புதல்வனான கருடனின் ஒவ்வொரு அவயமும் வேதத்தின் பகுதி.

முக்கூர் சுவாமியின் மட்டப்பல்லியில் மலர்ந்த மறை பொருள் என்ற புத்தகத்தில் படித்ததை பகிர்ந்து கொள்கிறேன்.
ஸூபர்ணோஸி கருத்மாந்த்ரி வ்ருத்தேசிரோ
காயத்ரம் சஷீஸ் ஸ்தோம ஆத்மாஸாம தே
தநுர் ப்ரஹத்ரதந்தரே யஜ்ஞாயஜ்ஞியம்
புச்சம் என்பது யஜுர் வேத வ்யாக்யானம்.
ஸ்ரீவைநதேயனின் திருமேனியில் ஒவ்வொரு அவயமும் வேதத்தின் பகுதியாகவே உள்ளது. ஸ்தோமம்என்கிற சாமவேத பாகமே அவருக்கு ஆத்ம சொரூபம், “காயத்ரம்என்கிற சாமம் அவருக்கு கண்ணாய் விளங்குகின்றது.  த்ரிவ்ருத்”  என்கிற சாமம் அவருக்கு தலையாக இருக்கின்றது.  யஜுர் வேதங்கள் அவருடைய பெயர்களாகின்றன. சந்தஸ்ஸுகள் அவருடைய திருக்கரங்கள். த்ஷ்ண்யம்என்று சொல்லப்படும் வேள்வி மேடைகள் அவருடைய திருக்கால்  பாதங்களாகின்றன.  வாமதேவ்யம்என்கிற சாமம் அவருடைய திருமேனியாகவும், “ப்ருஹத்”, “ரதந்த்ரம்”  என்னும் ஸாமங்கள் அவருக்குச் சிறகுகளாகின்றன.  யஜ்ஞாயஜ்ஞியம்என்ற  சாமம் அவருக்கு வாலாகின்றது. இப்படி வேத பாகங்களெல்லாம் கருடனுடைய திருமேனியி்ன் பகுதிகளாய் விளங்குவதால் கருடனை வேதஸ்வரூபன் என்கிறார்கள் மஹான்கள்.

பிள்ளைப் பெருமாள் ஐயங்காரின் திருவரங்கத்து மாலையில் ஒரு பாடலில் இதே கருத்து கூறப்பட்டுள்ளது. 
சிரம் சேதனன் விழி, தேகம், சிறை, பின்சினை, பதம், கந்-
தரம், தோள்கள், ஊரு, வடிவம், பெயர், எசுர் சாமமும் ஆம்
பரந்தே தமது அடியார்க்கு உள்ள பாவங்கள் பாற்றி, அருள்
சுரந்தே அளிக்கும் அரங்கர் தம் ஊர்திச் சுவணனுக்கே. ( தி.மா 88)
தம் அடியார்களுக்கு இருக்கும் தீவினைகளை அழித்துக் கருணை பொழிந்து அருளும் அரங்கருடைய வாகனம் ஆன சுபர்ணன் எனப்படும் கருடனுக்கு தலை, உயிர், கண்கள், திருமேனி, சிறகுகள், பின்புறம், கழுத்து, தோள்கள், தொடை, உருவம், திருநாமம், ஆகிய யாவும் யஜுர் வேதமும், சாமவேதமும் ஆகும்.

இப்படி வேதஸ்வரூபனான பொன் மலையான  கருடனில் பச்சைப் புயலென பெருமாள் வரும்போது அதைப் பார்த்து அதன் தாத்பர்யத்தை உணர்ந்து பூரண சரணாகதி அடைந்தால் மோக்ஷம் நிச்சயம். எனவே கருடசேவையைப் பார்த்தால் வைகுண்ட வாழ்வளிக்கும் என்று கூறினார்கள் நம் முன்னோர்கள்.

இவ்வாறு பெரிய திருவடி என்றும் புள்ளரையன் என்றும் காகேந்திரன் என்றும் போற்றப்படும் பக்ஷிராஜனான கருடன் மேல் பெருமாள் ஆரோகணித்து பவனி வரும் போது நாம் காண்பது என்ன? கருடன் வேத சொரூபி.  எம்பெருமான் அவ்வேதத்தினால் அறியப்படுபவன், போற்றப்படுபவன், எனவே பெருமாள் கருடசேவை தந்து எழுந்தருளும் போது  "மறை போற்றும் இறை"  இவனே என்றும்.  "மறைமுடி"  இவனே என்றும் காட்டித் தருகின்றது.  அதாவது வேதங்களால் போற்றப்படும் பரம் பொருள் இவன் தான் என்று காட்டித்தருகிறான் கருடன்.  அந்த வேதச் செழும்பொருளை நாம் உணர்ந்தால் நமக்கு மோட்சம் தானே எனவே தான் கருடவாகனத்தில் பெருமாளை தரிசித்தவர்களுக்கு மறுபிறவி கிடையாது என்பது ஐதீகம்.

எனவே அடுத்த தடவை கருடசேவையைக் காணும் போது மும்மலம் நீக்கி. முக்தி தா பெருமாளே!என்று வேண்டிக் கொண்டு சேவியுங்கள். கருவுடை முகில் வண்ணன், காயா வண்ணன், கருவிளை போல் வண்ணன், கமல வண்ணன்   பெருமாளை வேண்டினால் முக்தி நிச்சயம் என்பதை மனதில் கொள்ளவும்.

கருடசேவை மிக, மிக அரிதானது! காய்சினப்புள் - பெரிய திருவடியின் கருணைப் பார்வையிலும், காய்சின ஆழியின் பாதுகாப்பிலும், காய்சின வேந்தனின் வெது, வெதுப்பிலும் தங்கள் வினைகள் எல்லாம் அழிந்து வைகுண்டம்  பெறுவது உறுதி.

பாகவதனைப் பற்றிக் கொண்டால் பகவானை எளிதாக அடையலாம். ஆகவே நாம் கருடனை பற்றிக் கொண்டு பக்தி, ஞானம் என்ற இரண்டு சிறகுகளின் துணை கொண்டு அவன் தன் இரு கரங்களில் ஏந்தி இருக்கும் பத்தராவியை நித்திலத் தொத்தினை, திருமாலை அம்மானை, புகழ் சேர் பொலிகின்ற பொன் மலையை  பெருமாளின் திருவடிகளை எளிதில் அடையலாம் என்பதை உணர்த்துவதே கருடசேவை. நமக்குப் பெருமாளைக் காட்டி தரும் ஆச்சாரியனாக இருந்து நாம் வைகுண்ட வாழ்வு பெறக் கருடாழ்வார் உதவுகின்றார்.

இவ்வாறு கருடனில் ஆரோகணித்து திருவுக்கும் திருவாகிய செல்வன்  வரும் அழகை  வேதம் தமிழ் செய்த மாறன்  நம்மாழ்வார் எவ்வாறு பாடுகின்றார் பாருங்கள்.
காய்சினப் பறவையூர்ந்து பொன் மலையின் மீமிசைக்கார் முகில் போல்
மாசின மாலி மாலி மானென்று அங்கு அவர்படக் கனன்று முன் நின்ற
காய்சினவேந்தே! கதிர்முடியானே! கலிவயல் திருப்புளிங்குடியாய்!
காய்சின வாழி சங்கு வாள் வில் தண்டேந்தி எம்மிடர் கடிவானே! (திரு 9-2-7)
பொருள்: மேருமலையின் மேல் தங்கும் நீருண்ட கருத்த மேகம் போலே கோபம் கொண்டு தாக்கவல்ல கருடப்பறவையின் மீது ஏறி வந்து  நீ மிக்க சினம் கொண்டு மாலி, சுமாலி என்னும் இரு அரக்கர்களையும் அழித்தாய். (காய்சின வேந்தன் என்னும் திருநாமம் பெற்றாய்). காய்சின வேந்தே! ஓளி மிகுந்த  திருமுடி உடையவனே! வளம் மிகுந்த  வயல்கள் சூழப்பட்ட திருப்புளிங்குடியில் பள்ளி கொண்டவனே! காய்கின்ற சினம் கொண்ட  சக்கரம், சங்கு, வாள், வில், தண்டு, ஆகியவற்றைத் தாங்கிக்கொண்டு காட்சி தரும்  நீ என் துயரத்தை  நீக்குபவன் அன்றோ! எனக்கு அருள் காட்டுவாயாக.  

கோபப்பறவையான கருடனில் ஒய்யாரமாக அமர்ந்து ஜிவ்வென்று பறந்து பெருமாள் வரும் அழகானது பொன் மலை மீது ஒரு கார் முகில் அமர்ந்திருப்பது போல் இருக்குமாம்.  எம்பெருமானும் கோபமாகச் சென்று தன் எதிரிகளை அழிப்பவன், தீ உமிழும் கோபச் சக்கரமும், சங்கும், தண்டமும் ஏந்தி பக்தர்கள் துன்பங்களைக் களைபவன்.

நீள்நாகம் சுற்றி நெடுவரை நட்டு ஆழ்கடலை
பேணான் கடைந்து அமுதம் கொண்டு உகந்த பெம்மானை
பூணார மார்வனை; புள் ஊரும் பொன் மலையை
காணாதார் கண் என்றும் கண் அல்ல; கண்டாமே. (பெ.தி 11-7-1)
பொருள்: நீண்ட வாசுகி என்னும் நாகத்தை கயிறாகச் சுற்றிப் பெரிய மந்தர மலையை மத்தாக நாட்டி ஆழ்ந்த பாற்கடலை மதியாதவனாகிக் கடைந்து அமுதத்தை எடுத்து  தந்து திருவுள்ளம் உவந்த பெருமானும், ஆரங்களை அணிந்த திருமார்பை உடையவனும் பெரிய திருவடியை ஏறிச்செலுத்துகின்ற பொன் மலை போன்றவனுமான  பெருமாளை சேவிக்கப் பெறாதவர்களுடைய கண்களானவை ஒரு நாளும் கண்களே அல்ல, இதை நாம் நன்கறிவோம் என்கிறார் திருமங்கையாழ்வார்.

ஆழ்வார்கள் மட்டுமா? மால் மருகனைப் (முருகனை) பாடிய  அருணகிரி நாதரும் திருமாலை கருடாசனன் என்று   இவ்வாறெல்லாம் பாடுகின்றார்.
இரணியணை மார்பீறி வாகை புணை உவணபதி நெடியவன்;
உததி மீதி லேசாயு முலக மூடு சீர்பாத உவணமூர்தி மாமாயன்;
நச்சு வெண்பட மீதணை வார்முகில் பச்சை வண் புயனார் கருடாசனர்;
இரணியனது மார்பை வஜ்ர நகங்களால் பிளந்து வாகை சூடிய  கருடனின் தலைவன் நெடிய திருமால், ஓங்கி உலகளந்த உத்தமனாய் தனது திருத்தாளினால் விண்ணும் மண்ணும்  அளந்த மாமாயன்பாற்கடலில் நாகணையில் பள்ளி கொள்ளும்    திருமால் கருடன் மேல் ஆரோகணித்து வருகின்ற பச்சைப்புயல் என்று அருணகிரி நாதரும் பாடுகின்றார். (சுபர்ணன் என்பதின் தமிழ்ப்பதம் உவணம்)  ஆகவே  கருடசேவையைப் பற்றிப் பார்க்கும் போது இப்படி கற்பனை செய்து பாருங்கள் அந்த ஆனந்தம் உங்களுக்குப் புரியும். இவ்வளவு சிறப்புகள் கொண்ட கருட சேவையை தாங்களும் நேரம் கிடைக்கும் போது கருடசேவையை கண்டு சேவியுங்கள். 


இத்தொடரின் மற்ற பதிவுகளைக் காண இங்கு சொடுக்குங்கள்சேவை தொடரும் . . . . . . . 

No comments: