Thursday, July 7, 2016

நானேயோ தவம் செய்தேன் -1

ஸ்ரீவாரி சேவா

 மலையப்பசுவாமி கருட சேவை 


கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி 

அலர்மேல் மங்கைத் தாயார் 


திருமலையில் தற்போது மூன்று சேவைகள் செய்வதற்கு ஒருவருக்கு வாய்ப்புகள் உள்ளன. முதலாவது ஏழு நாட்கள் சேவை செய்யும் ஸ்ரீவாரி சேவை தரிசனத்திற்கு ஒரு நாள் சேர்த்து எட்டு நாட்கள் தேவைப்படும். இரண்டாவது ஸ்ரீவாரி பராக்கமணி சேவா. உண்டியல் பணத்தை எண்ணும் பணி மொத்தம் மூன்று நாட்கள் சேவை செய்ய வேண்டும். வாரத்தில் இரண்டு தடவை வாய்ப்புக் கிடைக்கின்றது ஸ்ரீவாரி சேவா பரக்காமணி திட்டத்தின் கீழ் மத்திய மற்றும் மாநில அரசுகளில் பணி புரிந்து ஓய்வு பெற்றவர்கள், பணியில் இருப்பவர்கள் உண்டியல் காணிக்கை எண்ணுவதற்காக இலவசமாக திருமலையில் தங்கி சேவை செய்யும் வாய்ப்பை தேவஸ்தானம் வழங்கியது. மூன்றாவது  ஸ்ரீவாரி லட்டு  சேவா, லட்டு விநியோக சேவையில் அடிப்படை கம்ப்யூட்டர் அறிவு உள்ள பக்தர்கள் இலவச சேவை செய்யலாம். அடியேன் கலந்து கொண்டது முதலில் கூறப்பட்டுள்ள ஸ்ரீவாரி சேவா ஆகும். வாருங்கள் இனி இச்சேவையின் அம்சங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.

சேவார்த்திகளுக்கான விதி முறைகள் 



திருப்பதி திருமலை கோவிலுக்கு இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பல லட்சம் பக்தர்கள் வருகின்றனர். இதனால் திருப்பதி திருமலையில் எப்போதும் பக்தர் கூட்டம் நிரம்பி வழிகின்றது. திருப்பதி திருமலையில் ஒரு வாரம் தங்கி அங்கு வரும் பக்தர்களுக்கு சேவை செய்ய கிடைக்கும் ஒரு அரிய வாய்ப்பு இந்த ஸ்ரீவாரி சேவா. மக்கள் சேவையே மகேசன் சேவை என்னும் “ஸ்ரீவாரி சேவா திட்டம்” 1999ல் துவங்கப்பட்டது. 18 முதல் 60 வயது வரை உள்ளவர்கள் இச்சேவையில் கலந்து கொள்ளலாம். வைகுண்டம் காம்ப்ளக்ஸில் தரிசனத்திற்கு காத்திருக்கும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் அளிக்கப்படும் உணவுகளை வினியோகிப்பது, காவல் துறைக்கு உதவுவது, பூக்களை பறிப்பது, மாலை தொடுப்பது, லட்டு தயாரிக்க உதவுவது, பக்தர்களை ஒழுங்குபடுத்துவது உள்ளிட்ட பணிகளை செய்யலாம். ஒரு நாளைக்கு 5 மணி நேரம் சேவை செய்ய வேண்டும். சேவையில் ஈடுபடுபவர்கள் சேவையின் கடைசி நாளில், சுவாமி சிறப்பு தரிசனத்திற்கு அழைத்துச் செல்லப்படுவர். இரண்டு லட்டு பிரசாதமும் வழங்கப்படும்.

சுவாமி புஷ்கரணி


 ஒரு வாரம், திருப்பதி - திருமலையில் எந்தவித கட்டணமுமின்றி, லாக்கர் வசதியுடன், வெளியாட்கள் தொந்தரவின்றி, தேவஸ்தான, "சேவா சதன்' என்ற ஹாலில் பாதுகாப்புடன், (பெண்களுக்கு தனியாக  ஐந்து மாடி கட்டிடத்தில் தங்கும் இடம் அளிக்கின்றனர்.)  இலவசமாக தங்க இடம், சுடு தண்ணீருடன் கூடிய சுத்தமான பாத்ரூம், நினைத்த நேரத்தில் அன்னதான மண்டபத்தில், கியூவில் நிற்காமல், நேராக சென்று இலவச உணவருந்தும் வசதி எல்லாம் திருமலையில் ஸ்ரீவாரி சேவைக்கு வரும் தொண்டர்களுக்கு தேவஸ்தானம் செய்து தருகின்றது.

சேவார்த்திகள்



புதிதாக சேவைக்கு செல்ல விரும்பும் பக்தர்களுக்காக சில தகவல்கள்: "ஸ்ரீவாரி சேவை' என்பது பக்தர்களுக்காக, பக்தர்களே உதவுவதுதான். திருமலையில், 40 இடங்களில் இந்த சேவை பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில், 200 பேர் தான் பணியில் ஈடுபட முன் வந்தனர். ஆனால், தற்போது, ஓராண்டிற்கு, 50 ஆயிரம் பேர் வரை திருமலைக்கு வந்து சேவையில் பங்கு கொள்கின்றனர். கல்லூரி மாணவ - மாணவியர் மற்றும் சாதாரண கடை நிலை ஊழியர் முதல், பெரிய பொறுப்பில் உள்ளவர் வரை வேறுபாடு, ஏற்ற தாழ்வு இல்லாமல், சரி சமமாக ஈடுபடுகின்றனர். தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து பக்தர்கள் சேவைக்கு வந்த வண்ணம் உள்ளனர். இதில் கலந்து கொள்ள குறைந்தது, 10 பேர் கொண்ட குழுவாக, ஒரு மாதம் முன்பே தேவஸ்தான மக்கள் தொடர்பு அலுவலருக்கு எழுதி, பதிவு செய்ய வேண்டும். அங்கிருந்து ஒப்புதல் கடிதம் வந்ததும், தங்களது சொந்த செலவிலேயே திருமலைக்கு வர வேண்டும். அனைத்து ஊர்களிலும் சில ஒருங்கிணைப்பாளர்கள் சேவார்த்திகளை ஒவ்வொரு வாரமும் அனுப்பி வருகின்றனர் அவர்கள் மூலமாகவும் சேவைக்கு திருமலைக்கு வரலாம். 

 திருமலையில்  பஸ் நிலையம் அருகில் உள்ள சேவா சதன் ஸ்ரீவாரி சேவை மைய அலுவலகத்தில், இதற்கென உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, ஒவ்வொருவரும் தங்கள் பாஸ்போர்ட் சைஸ் போட்டோவுடன், முகவரி சான்றிதழ் இணைத்து கொடுக்க வேண்டும். விண்ணப்ப பரிசோதனை முடிந்ததும், சேவை செய்பவர்களுக்கு அடையாளச் சின்னமாக தேவஸ்தானத்திலிருந்து கொடுக்கப்படும், காவி நிற "ஸ்கார்ப்' அணிந்து கொள்ளலாம். இது தான் லைசன்ஸ் மாதிரி. குறைந்தது ஏழு தினங்கள் தங்கி, பக்தர்களுக்கு சேவை செய்ய வேண்டும்.

ஸ்ரீவாரி சேவகர்களுக்கு தேவஸ்தானம் கூறும் அறிவுரைகள். திருமலை யாத்திரை இன்ப சுற்றுலா பயணமல்ல, புனிதமான புண்ணிய ஸ்தலம். இங்கு வரும் பக்தர்களுக்கு சேவை புரிவதே ஸ்ரீவாரி சேவகர்களின் கடமை. குழந்தைகள் மற்றும் நோயாளிகள், மிக வயதானவர்களுக்கு அனுமதி இல்லை. இச்சேவையில் பங்கு பெற யாருக்கும் பணமோ, பொருளோ அளிக்க வேண்டியதில்லை. இலவசமாக பங்கு கொள்ளலாம். ஆலயத்திற்கு உள்ளே சேவை புரிய அனுமதி இல்லை. ஸ்ரீவாரி சேவையின் போது, பெண்கள் பழுப்பு நிற  கரையுடன் கூடிய  ஆரஞ்சு புடவையும் (Ornage color with maroon border), பழுப்பு நிற ரவிக்கையும், ஆண்கள் வெள்ளை நிற ஆடைகளையும் அணிய வேண்டும். வேட்டி அணிவது உத்தமம்.  சேவை செய்ய வேண்டிய இடம் மற்றும் நேரத்தை தினமும் சேவை மையத்தில் மாலையில் அறிவிப்பர். சேவை நேரம் ஒரு நாளைக்கு, நான்கு மணி நேரம் முதல், ஆறு மணி நேரம் வரை இருக்கும்.

சேவை காலத்தில் பஸ் நிலையம் அருகில் உள்ள, "சேவா சதன்' ஹாலில் பாதுகாப்புடன் இலவசமாக தங்கலாம். இந்த விடுதியில் வெளி ஆட்களுக்கு தங்க அனுமதி இல்லை. தேவஸ்தான அன்ன தான மண்டபத்தில் இலவச உணவு காலை, 9:00 மணி முதல், இரவு, 11:00 மணி வரை வழங்கப்படுகிறது. 10 - 20 பேர் கொண்ட குழுவாக பிரிந்து செய்ய வேண்டிய சேவை விவரங்கள்: பக்தர்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்துதல், வைகுண்டம் காம்ப்ளக்சில் தரிசனத்திற்கு காத்திருக்கும் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் அளிக்கப்படும் உணவு மற்றும் பால் போன்றவற்றை கவுண்டர் வழியாக வினியோகிப்பது. லட்டு தயாரிப்பில் உதவுவது (குறைந்த அளவு மட்டும் அனுமதி), பக்தர்களின் பொருட்களை, "ஸ்கேன்' செய்வதில் காவல்துறைக்கு உதவியாக இருப்பது. பெண் சேவகர்கள் தோட்டத் துறைக்கு சென்று, கோவிலுக்கு தேவையான மாலைகள் தயாரிப்பதிலும், அலங்கார பூ கட்டுவதிலும் உதவி செய்யலாம் .தற்போது எங்கு சேவை செய்யவேண்டும் என்பதற்கு குழுவிற்கேற்ப ஒதுக்கித் தருகின்றனர். இவர்கள் சேவையின் நிறைவில் ஒரு இலவச தரிசனம் அளிக்கின்றனர் இரண்டு லட்டு பிரசாதம் வழங்குகின்றனர். பக்தர்கள் தங்கள் வசதிக்கேற்றபடி எவ்வளவு தடவை முடியுமோ அவ்வளவு தடவை சுவாமி தரிசனம் செய்து கொள்ளலாம்.

அடியோங்களுக்கு நான்கு தடவை மூலவரை தரிசனம் செய்யவும், பௌர்ணமி கருட சேவை, வசந்தோற்சவம், ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ர தீபாலங்கார சேவை ஆகிய சேவைகளை சேவிக்கவும்  பாக்கியம் கிட்டியது. ஒரு இரவு கர்ப்பகிரகத்தில் சேவை செய்யும் அற்புத வாய்ப்பும்  கிட்டியது.  ஒரு நிமிட நேரம் சேவிக்க முடியார திருவேங்கடவனை  பல நிமிடங்கள் சேவிக்கும் பெரும் பாக்கியம்  கிட்டியது.  அதனால்தான் "நானேயோ தவம் செய்தேன்"  என்று பதிவிற்கு தலைப்பு.    மேலும் கல்யாண வெங்கடேஸ்வர சுவாமியின் ஏகாந்த சேவை,     பிரம்மோற்சவத்தின் ஒரு நாள் சேவை, அலர்மேல் மங்கைத்தாயார் தரிசனம் ஆகியவை சேவிக்கும் பாக்கியம் கிட்டியது. மேலும் பாப விநாச தீர்த்தம், ஆகாச கங்கை, ஹாதிராம் மஹராஜ மடம் ஆகியவற்றையும் தரிசித்தோம். ஒரு வாரம் எம்பெருமானின் திருவடியிலேயே இருந்தது மிகவும் ஒரு அருமையான அனுபவம். . 

சேவா சதன் முகப்பில் சேவார்த்திகள் 


இச்சேவையில் பங்கு கொள்வதன் மூலம் ஓர் உற்சாகமான தெய்வீக அனுபவத்தை உணர முடியும். ஒவ்வொரு ஆண்டும் சேவை செய்ய வருபவர்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே இருக்கிறது.. வழக்கமான வேலைகள் மற்றும் அவரவருக்கு உள்ள பிரச்னைகளை எல்லாம் மறந்து, திருமலையில் இருக்கும் காலம் மிக மகிழ்ச்சியும், மன நிறைவும் அளிக்கிறது. திருமலைக்கு சென்று சேவை முடிந்து திரும்பும் பக்தர்கள் வாழ்வில் நல்ல திருப்பம் ஏற்பட்டு உள்ளதை, காண முடியும்.

இப்பதிவு முன்னுரை மட்டுமே வரும் பதிவுகளின் அந்த ஆனந்த அனுபவங்களை முழுதுமாக பகிர்ந்து கொள்கிறேன் தொடர்ந்து வாருங்கள் அன்பர்களே.

இத்தொடரின் மற்ற பதிவுகளைக் காண இங்கு சொடுக்குங்கள்

சேவை தொடரும் . . . . . . . 

2 comments:

Nagendra Bharathi said...

அருமை

S.Muruganandam said...

மிக்க நன்றி நாகேந்திர பாரதி.