பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து
மின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை அணிந்தவனே
மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே
அன்னே உன்னையல்லால் இனியாரை நிணைக்கேனே
பித்தாபிறை சூடிப்பெரு மானேஅரு ளாளா
எத்தான்மற வாதேநினைக் கின்றேன்மனத் துன்னை
வைத்தாய் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள் துறையுள்
அத்தாவுனக் காளாய்இனி அல்லேனென் லாமே.
என்று இறைவனையே பித்தா என்றும் பொன்னார் மேனியனே என்றும் நம்பி என்றும் பாடிப்பரவிய வன்தொண்டர் இவர்.
தமக்காக பிரம்மனுன் திருமாலும் காணா மலர்ப்பாதம் நோக திருவாரூர் வீதியில் பரவையிடம் சிவபெருமானை தூது போக வைத்த எம்பிரான் தோழர் இவர்.
பத்தராய் பணிவார்கள் எல்லார்க்கும் அடியேன்
பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன் என்று திருத்தொண்டர் புராணம் பாடி தொண்டருக்கும் தொண்டரானவர் இவர்.
தேவாரம் திருவாசகம் பாடி சைவம் வளர்த்த சைவசமயக்குரவர்கள் நால்வருள் ஒருவர்.
அற்பு தப்பழ ஆவணங் காட்டி
அடியனா வென்னை ஆளது கொண்ட
நற்ப தனை நள்ளாறனை என்று அவரே பாடியது போல கண்ணுதலானும், காம கோபனும், கனக மால் வரையுமான எம்பெருமானாலேயே தடுத்தாட்கொள்ளப்பட்ட சுந்தர மூர்த்தி நாயனார் சென்ற திருக்கயிலாய யாத்திரை என்பதால் இந்த யாத்திரை அற்புத யாத்திரை ஆனது. திருமயிலையில் ஆடி சுவாதியன்று நடைபெற்ற சுந்தரர் திருக்கயிலாயம் ஏகும் படங்கள் இப்பதிவில்.
சுந்தர மூர்த்தி நாயனார், ஆலால சுந்தரர் என்ற திருநாமத்துடன் திருக்கயிலையிலே எம்பெருமானுக்கு கைங்கர்யம் செய்து வரும் காலத்தில் அங்கிருந்த இரு கந்தர்வ பெண்களை பார்த்து மையல் உற எம்பெருமானும் அவர்கள் மூவரையும் பூலோகத்தில் பிறக்க வைத்தார். அப்போது ஆலால சுந்தரர் தகுந்த காலத்தில் தன்னை தடுத்தாட்கொள்ள வேண்டும் என்று இறைவனை வேண்டிக்கொண்டார்.
திருமுனைப்பாடி நாட்டைச் சேர்ந்த திருநாவலூரில், ஆதி சைவ குலத்தில் சுந்தரர் பிறந்தார். இவரது தந்தையார் சடையனார், தாயார் இசைஞானியார். குழந்தைக்கு “நம்பி ஆரூரர்” என்ற பெயரிட்டு வளர்த்து வந்தனர். சிறு பிள்ளையாயிருக்கும்போதே குழந்தையின் அழகு தெய்வீகமாய் இருந்தது. பெற்றோரும் இத்தகைய பேரழகு வாய்ந்த குழந்தைக்குப் பல்வேறு அணிகலன்களால் அலங்கரித்து விட்டிருந்தனர். ஒரு நாள் நம்பி ஆரூரர் வீதியில் விளையாட்டுத் தேரான சிறு தேர் உருட்டி விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது திருமுனைப்பாடி நாட்டு மன்னன் ஆன நரசிங்கமுனையர் அவ்வழியே திருநாவலூர்க் கோயிலுக்கு வந்து எம்பெருமானைத் தரிசித்துவிட்டுத் திரும்பிக் கொண்டிருக்கையில் வீதியில் தேரை உருட்டிக் கொண்டிருந்த சிறுவனைக் கண்டு அவன் அழகில் தம்மை மறந்தார். தேரிலிருந்தும் இறங்கி அந்த தெய்வக் குழந்தையைக் கையில் தூக்கிக் கட்டி அணைத்து உச்சி முகந்தார்.இவரை தனது தத்துப்பிள்ளையாக்கிக்கொண்டார்.ஆரூரர் அரண்மனையில் ஒரு அரசகுமாரனைப் போல வாழத்தொடங்கினார். அரசர்க்குரிய அனைத்துக் கலைகளிலும் தேர்ச்சி பெற்றார். உரிய பருவத்தில் உபநயனமும் செய்து வைத்தான் மன்னன். பெற்றோர்கள் ஆரூரருக்கு விரைவில் திருமணம் செய்விக்க எண்ணம் கொள்ளவே. அரசரும் அவர்கள் விருப்பம் போல் மணப்பெண்ணைத் தேடித் தேர்ந்தெடுக்குமாறு கூற, பெற்றோர் ஆரூரருக்கு ஏற்ற பெண்ணைத் தேடினார்கள். நாவலூருக்கு அருகே உள்ள புத்தூர் என்ற ஊரிலுள்ள, சடங்கவி சிவாசாரியார் என்பவரின் புதல்வியை ஆரூரருக்குப் பார்த்து மணம் முடிக்க ஏற்பாடுகள் செய்யப் பட்டன.
தன் அன்பனை ஆட்கொண்டு அவனை தான் இந்த பூவுலகிற்கு வந்த கடமையை நிறைவேற்ற உதவிபுரிய திருவுளம் கொண்ட மாப்பெரும் கருணையன் மணநாள் அன்று கிழ வேதியர் வடிவில் அங்கு வந்த இறைவன், சுந்தரருடைய பாட்டனார் எழுதிக் கொடுத்ததாகச் சொல்லப்பட்ட ஒரு அற்புத ஓலையைக் காட்டிச் சுந்தரரும், அவர் வழித்தோன்றல்களும் தனக்கு அடிமை என்றார். கோபத்தில் நம்பி ஆரூரர் நீர் என்ன பித்தரா? என்று வினவினார். இல்லை இதோ உன் பாட்டனார் எழுதிக்கொடுத்த ஓலை என்று முதியவர் காண்பிக்க கோபத்தில் அதை ஆரூரர் கிழித்தெரிந்தார்.
சேரமான் பெருமாள் நாயனார்
சுந்தரை திருக்கயிலாயத்திற்கு அழைத்து செல்ல
இதனால் முதியவர் மூல ஓலை திருவெண்ணை நல்லூரில் உள்லதால் அங்கு சென்று வழக்கை ்தொடர்வோம் என இவ்வழக்கு திருவெண்னை நல்லலூர் சென்றது. அங்கே முதியவர் “திருநாவலூரில் இருக்கும் ஆதிசைவன் ஆகிய ஆரூரன் என்னும் பெயருள்ள நான், திருவெண்ணெய் நல்லூர் பித்தனுக்கு எழுதிக் கொடுத்தது என்னவெனில், நானும் என் வழிவரும் மரபினோரும் வழிவழியாய் இவருக்கு அடிமைத் தொழில் செய்து வருவோம் என்பதற்காக உள்ளும், புறமும் ஒருமைப்பட்டு எழுதிக் கொடுத்த ஓலை. இது என் சுய உணர்வோடு போடப் பட்ட கையொப்பம்.” என்ற ஓலையைக் காட்டினார், கையெழுத்தை சரி பார்த்த பின் பஞ்சாயத்தார் ஆரூரா நீ பித்தனுக்கு அடிமைதான் என்று தீர்ப்புக்கூறினர். ஆரூரருக்கு ஏதும் புரியாவிட்டாலும், அவையோர் சொல்லுக்குக் கட்டுப்பட்டுக் கீழ்ப்படிவதே தன் கடமை என உணர்ந்து தலை வணங்கித் தீர்ப்பை ஏற்றுக் கொண்டார்.
அவையோர் முதியவரிடம், “ ஐயா, ஓலையில் நீர் வெண்ணெய் நல்லூரில் இருப்பதாய்க் குறிப்பிட்டுள்ளீர். உம் இருப்பிடம் எதுவென எங்களுக்குக் காட்டுவீராக!” என்று கேட்க, எம்பெருமான் அவர்களை அழைத்துக் கொண்டு தம் இருப்பிடத்தைக் காட்டவேண்டி, அவ்வூரிலுள்ள திருவட்டுறை என்னும் கோயிலை அடைந்தார். அனைவரும் பின் தொடர்ந்து வர அம்முதியவராய் வந்த இறைவனோ, கோயிலுள் சென்றவர் மறைந்தார். பின் ஆரூரர் வேண்ட அந்தணராக வந்த ஈசன், தம் அருள் வடிவிலே, உமையாள் உடனிருக்க ரிஷபாரூடராய்க் காட்சி அளித்தார். இறைவனே வந்து தன்னைத் தடுத்தாட் கொண்டதை உணர்ந்த சுந்தரர், "பித்தா பிறை சூடி" என்ற தனது முதல் தேவாரப் பதிகத்தைப் பாடித் துதித்தார்.பின்னர் இறை தொண்டில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். சிவத்தலங்கள் தோறும் சென்று தேவாரப் பதிகங்கள் பாடி இறைவனைப் பணிந்தார். இவ்வாறு செல்லும் போது அம்பலக்கூத்தரின் அருளினால் இவருக்கும் சேர நாட்டை ஆண்டுகொண்டிருந்த சேரமான் பெருமாளுக்கும் நட்பு உண்டானது. இருவருமாக சேர்ந்து பல தலங்களுக்கு சென்று கறைகண்டனை, கங்கை மதி சூடியை, புலியதளாடையனை, வ்யோமகேசனை பலவாறு பதிகங்கள் பாடி போற்றினர்.
நெற்றிக்கண் உடையானை நீறுஏறுந் திருமேனிக்
குற்றமில் குணத்தானைக் கோணாதார் மனத்தானைப்
பற்றிப் பாம்(பு) அரை ஆர்த்த படிறன்தன் பனங்காட்டூர்ப்
பெற்றொன்(று) எறும்பிரானைப் பேசாதார்பேச் சென்னே.
சுந்தரர் முதலில் திருவாருரில் பரவையாரை மணந்தார் பின்னர் திருவொற்றியூர் சென்ற சமயம் சங்கிலியாரையும் மணந்தார். அப்போது மகிழ மரத்தடியில் சங்கிலியாரருக்கு செய்து கொடுத்த சத்தியத்தை மீறி திருவொற்றியூரை விட்டு நீங்கியதால்தன் கண்களையும் இழந்து பின் இறை அருளால் கண் ஒளி திரும்பபெற்று தேவாரம் பாடி, கைலாயத்திலிருந்து வந்த பணி முடித்து கைலாயம் செல்ல இவருக்கு வெள்ளை யானை வந்தது. இவருடைய தோழரான சேரமான் பெருமாளும் அவருடன் கைலாயக் செல்ல வேண்டி ஓம் நமசிவாய என்னும் பஞ்சாக்ஷர மந்திரத்தை தன்னுடைய வெள்ளைக் குதிரையின் காதில் ஓதினார், உடனே அந்த குதிரையும் கயிலாயத்தை நோக்கி பறக்க ஆரம்பித்து விட்டது. எம் பெருமான் தோழர் சுந்தரரின் தோழர் திருவாஞ்சிக்களத்தைச் சார்ந்த சேரமான் பெருமாள் இவ்வாறு கைலாயம் செல்லும் போது திருக்கயிலாய உலா பாடினார்.
குதிரையில் சேரமான் பெருமாள் நாயனார்
ஆத ரம்பயி லாரூரர் தோழமை
சேர்தல் கொண்டவ ரோடே முன்நாளினில்
ஆடல் வெம்பரி மீதேறி மாகயி லையிலேகி
ஆதி யந்தவு லாவாசு பாடிய
சேரர் ....
என்று இதையே அருணகிரிநாதர் தமது திருப்புகழில் பாடுகிறார்.
இறைவன் பால் இவர் கொண்டிருந்த பக்தி "சக மார்க்கம்" என்று சொல்லப்படுகின்ற தோழமை வழியைச் சார்ந்தது. இறைவனைத் தனது தோழனாகக் கருதித் தனக்குத் தேவையானவற்றை எல்லாம் கேட்டுப் பெற்றுக்கொண்டாராம்.
நீள நினைந்தடியேன் உமைநித்தலுங் கைதொழுவேன்
வாளன கண்மடவாள் அவள்வாடி வருந்தாமே
கோளிலி எம்பெருமான் குண்டையூர்ச் சிலநெல்லுப் பெற்றேன்
ஆளிலை எம்பெருமான் அவைஅட்டித் தரப்பணியே.
என்று அவர் பாடிய தேவாரப் பதிகம் மூலம்,பரவையாருக்காக குண்டையூரில் தான் பெற்ற நெல்லை தனது ஊர் கொண்டு சேர்க்க இறைவனிடம் உதவி கேட்பதைக் காணலாம். இறைவனும் அக்கோரிக்கையை ஏற்று சிவகணங்களை அனுப்பி நெல்லை பரவையாரின் இல்லத்திற்கு அனுப்பி வைத்தார்.
கற்ப கத்தினைக் கனகமால் வரையை காம கோபணைக் கண்ணுதலானை
சொற்ப தப்பொருள் இருளறுத் அருளுந் தூய சோதியை வெண்ணெய்நல் லூரில்
அற்பு தப்பழ ஆவணங் காட்டி அடியனா வென்னை ஆளது கொண்ட
நற்ப தத்தை நள்ளாறனை அமுதை நாயினேன் மறந் என்நிணைக் கேனே.
அற்புத திருக்கயிலை யாத்திரை
இவ்வாறு சுந்தரரும் சேரமான் பெருமாளும் திருக்கயிலைச் சென்ற போது திருக்கயிலையில் கூடி இருந்த உபமன்யு முதலான முனிவர்களுக்கு ஒரு ஜோதியாக காட்சி கிடைத்ததாம். என்ன அற்புத திருக்கயிலாய யாத்திரையை கண்ட அனுபவம் எப்படி இருந்தது.
4 comments:
சுந்தரமூர்த்தி நாயனார் உற்சவம் அருமை...
பகிர்வுக்கு நன்றி..
http://anubhudhi.blogspot.com/
வந்து தரிசனம் பெற்றதற்கு மிக்க நன்றி குருசாமி ஐயா.
நன்றி கைலாஷி ஐயா.
நன்றி குமரன் ஐயா
Post a Comment