சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள அகிலாண்டேஸ்வரி உடனுறை அகத்தீஸ்வரர் திருக்கோவிலின் பிரம்மோற்சவ நிகழ்ச்சிகளை கண்டு இன்புற இருகரம் கூப்பி அழைக்கின்றேன் வாருங்கள். இந்தப்பதிவிலும் மூன்றாம் திருநாள் காலை அதிகார நந்தி சேவையின் அற்புத காட்சிகளை காணலாம் அன்பர்களே.

அதிகார நந்தியில் எம் கோனும்
அன்ன வாகனத்தில் எங்கள் பிராட்டியும்
சேவை சாதிக்கும் எழிற்கோலம்

அன்னவாகனமேறி அழகாக ஒடி வரும்
அன்னை அகிலாண்டேஸ்வரி
உட்பிரகாரத்தின் வடப்புரம், சண்டேசுரர் சன்னதி, மற்றும் நடராஜர் சன்னதி, ஆடல் வல்லானுடன் நால்வர் பெருமக்களும் , சிறிய ஆடல்வல்லான் மற்றும் கணேசர் மூர்த்தங்கள் அருமையாக உள்ளன , அம்பலவாணருக்கு எதிரே சந்தான குரவர்கள் உமாபதி சிவம், மறை ஞான சிவம், அருணந்தி சிவம், மெய்கண்ட சிவம் ஆகியோர்களின் மூர்த்தங்கள் உள்ளன. அடுத்து அம்மன் சன்னதி அம்மை அகிலாண்ட நாயகியின் கோஷ்டத்தில் இச்சாசக்தி மேலூர் திருவுடையம்மன், கிரியா சக்தி திருமுல்லைவாயில் கொடியிடையம்மன் மற்றும் ஞான சக்தி திருவொற்றியூர் வடிவுடையம்மன் என்னும் முப்பெரும் தேவியர் அருள் பாலிக்கின்றனர். தெற்கு நோக்கி நின்ற கோலத்தில் சகல செல்வங்களும் தரும் இமயகிரிராஜ தனயை, அகிலாண்ட ஈஸ்வரி அருள்பாலிக்கின்றார். அன்னையை ஐயனையும் ஒருமித்து வணங்கி வெளியே வந்து அமர்ந்து அப்படியே பிரகாரத்தில் அமர்ந்தால் ஒரு அற்புத நிம்மதி. மீண்டும் மீண்டும் வரத்தூண்டும் ஒரு அருமையான கோயில் இது.
பொதுவாக பிரம்மோற்சவத்தின் மூன்றாம் திருநாள் அதிகாலை அதிகார நந்தி சேவை, ஐந்தாம் திருநாள் நள்ளிரவு வெள்ளை ரிஷப சேவை, ஏழாம் திருநாள் பகல் தேரோட்டம், மற்றும் பத்தாம் திருநாள் காலை தீர்த்தவாரி மற்றும் இரவு திருக்கல்யாணம் ஆகியவை மிகவும் சிறப்பு வாய்ந்தவை.
இத்திருக்கோவிலிலும் மூன்றாம் திருநாள் அதிகார நந்தி சேவை மிகவும் சிறப்பாக கொண்டாடபப்டுகின்றது. பஞ்ச முர்த்திகளுக்கும் அற்புதமான அலங்காரம் மற்றும் யானை முன் செல்ல நந்தி போலவும், கோமாளி போலவும் வேடமிட்ட அன்பர்கள் பக்தர்களை மகிழ்விக்கவும், சிறப்பு மேள தாளங்களுடன் அம்மையப்பர் திருவீதி வலம் வந்து பக்தர்களுக்கு சாம்பவி தீஷை அருளுகின்றனர்.

இவ்வாறு அதிகார நந்தி சேவை மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படுகின்றது இத்திருக்கோவிலில். பக்தர்களுக்கு அருளும் பொருட்டி சிவசக்தி அங்கங்கே நின்று நாதஸ்வர இசை கேட்டு அருள் பாலிக்கு காட்சியை காண கண் கோடி வேண்டும்.





இன்றைய தினம் அதிகாரநந்தி சேவை சமயக்குரவர்கள் நால்வர்களாகிய திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியவர்களுக்கு அம்மையப்பர் சேவை சாதிக்கும் விதமாக இக்கோவிலில் கொண்டாடப்படுவதால் இவ்வாலய முன் மண்டபத்தில் வரையப்பட்டுள்ள அற்புதமான இயற்கைவண்ண ஒவியங்களில் உள்ள நால்வரின் ஓவியமும் இப்பதிவில் இடம்பெறுகின்றது.