Sunday, October 10, 2010

நவராத்திரி அலங்காரங்கள் -3

நவராத்திரி மூன்றாம் நாள்

கற்பகவல்லி கௌரி அலங்காரம்

நவராத்திரியின் மூன்றாம் நாள் அன்னையை நான்கு வயது குழந்தையாக பாவித்து கல்யாணி என்னும் கன்யாவாக வழிபடுகின்றோம். அன்னையை இவ்வாறு வழிபடுவதால் பகை ஒழியும். இன்றைய ஸ்லோகம்

கல்யாண காரிணீநத்யம் பக்தானாம் பூஜிதாம் பூஜயாமி |
சதாம் பக்த்யா கல்யாணீம் ஸர்வகாதமாம் ||

(பக்தர்களால் எப்போதும் பூஜிக்கப்பட்டு அவர்களுக்கு எந்தச் சக்தி மங்களத்தைச் செய்கின்றதோ, அந்தக் கல்யாணியாகிய சக்தியை வணங்குகிறேன்.)


சந்த்ரகாந்தா துர்கா

நவராத்திரியின் மூன்றாம் நாள் அன்னை நவதுர்கைகளில் , முக்கண்களுடன் பிறைச்சந்திரனை தலையில் சூடியவளாக, புலி வாகனத்தில் பவனி வருபவளாக , சிவபெருமானை தவம் செய்து கைபிடித்த பின் அவரது ஆபரணமான சந்திரனை சிரசில் சூடிய சிவபத்னியாக சந்த்ரகாந்தா துர்காவாக வணங்கப்படுகின்றாள். அன்னை அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி. அன்னையில் சிரசில் சூடிய இந்த அர்த்த சந்திரன் அவள் முடியில் மணி போல விளங்குவதால் அன்னைக்கு இந்த திருநாமம். மஹா திரிபுரசுந்தரியாக பழுப்பு வண்ணத்தவளாக விளங்குகின்றாள் இந்த துர்கா.

சந்திரகாந்தக் கல் எப்படி சந்திரனின் குளுமையைத் தன்னுள் வாங்கிக் கொண்டு நீரைப் பொழிகின்றதோ அப்படியே அம்பாள் நம் வெம்மையைத் தன்னுள் வாங்கிக் கொண்டு குளுமையான கருணை நீரைப் பொழிகின்றாள். இங்கே வெம்மை என்பது நம் வினைகளைக் குறிக்கின்றது.

பிண்டஜப்ரவராரூடா சண்ட கோபாஸ்த்ரகைர் யுதா |

ப்ரஸாதம் தநுதே மஹ்யம் சந்த்ர கண்டேதி விஸ்ருதா ||


என்பது சந்த்ரகாந்தா துர்காவின் ஸ்லோகம் ஆகும்.

( ஆக்ரோஷமான புலி வாகனத்தில் பவனி வரும் சந்த்ரகாந்தா துர்கா அடியேனை காக்கட்டும். )

இன்று நாம் காணப்போகும் அன்னையின் அலங்காரங்கள் மயிலை கபாலீஸ்வர ஆலயத்தின் கோலாகலக் காட்சிகள்.


கற்பக வல்லி காமதேனு வாகனத்தில்
கௌரியாக கொலு வீற்றிருக்கும் அழகு



விரை மலர் குழல் வல்லி கற்பகவல்லி

( காமதேனுவாய் கற்பகவல்லி நாம் வேண்டியவற்றை அருளும் பாங்கை உணர்த்தும் வகையில் அன்னையின் சடையில் அனைத்து கனிவகைகளை
காண படத்தை பெரிதாக்கிப் பாருங்கள்)


ஊஞ்சல் மண்டபத்தில் திருமயிலை(கயிலை) நாதருக்கு
இன்று ருத்திராக்ஷ மணிகளால் கோலம்




மஹா மண்டபத்தில் 63 நாயன்மார்களின் சரிதம்
சொல்லும் மலர்க் கோலம்

கொலு மண்டபத்தில் அம்பாள் நாள் ஒரு வாகனத்தில் நாம் உய்ய கொலு, ஊஞ்சல் மண்டபத்தில் திருக்கயிலை நாதருக்கு நாள் ஒரு கோலம், மஹா மண்டபத்தில் நாள் ஒரு 63 நாயன்மார்களின் சரிதம் சொல்லும் கொலு, பொம்மைக்கொலு, மூலஸ்தானத்தில் கற்பகாம்பாள் நாள் ஒரு சிறப்பு அலங்காரம், கிழக்கு பிரகாரத்தில் நாள் ஒரு கலை நிகழ்ச்சி என தினமும் கோலாகலம்தான் திருமயிலையில் சமயம் கிடைத்தால் வந்து தரியுங்கள் அன்னையை.

ரோக நிவாரண அஷ்டகம்

காளினி நீயே காமினி நீயே
கார்த்திகை நீயே துர்க் கையளே |

நீலினி நீயே நீதினி நீயே
நீர் நிதி நீயே நீர் ஒளியே ||

மாலினி நீயே மாதினி நீயே
மாதவி நீயே மான் விழியே |

ரோக நிவாரணி சோக நிவாரணி
தாபநி வாரணி ஜெய துர்க்கா || (3)


அம்மன் அருள் வளரும்

2 comments:

Test said...

காமதேனு வாகனத்தில் அன்னையின் அலங்காரமும், குங்கலிய நாயனாரின் மலர் கோலமும் அருமை, நன்றி அய்யா

S.Muruganandam said...

அன்னை அழைத்து தரிசனம் தந்தாள் அதை அன்பர்களாகிய தங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். எல்லாம் அவன் செயல்.

மிக்க நன்றி Logan ஐயா.