Tuesday, December 8, 2009

லட்ச தீபப் பெருவிழா

திருமழிசை ஒத்தாண்டீஸ்வரர் திருக்கோவில்

ஒத்தாண்டீஸ்வரர் ஆலய இராஜ கோபுரம் மின்விளக்கொளியில் மின்னும் அழகு

சென்னை பூந்தமல்லிக்கு அருகில் உள்ள திருமழிசையில் அமைந்துள்ளது இச்சிவஸ்தலம்.

ஐயன் - சோழ மன்னனுக்கு கை தந்த ஒத்தாண்டீஸ்வரர்

அம்மை - சீதளா தேவி என்னும் குளிர்ந்த நாயகி.

சிறப்பு: அறியாமல் தன்னை வாளால் வெட்டிய கரிகால் சோழன் தன் கையை வெட்டிக் கொள்ள அதை திருப்பித்தந்த மாப்பெரும் கருணை வள்ளல் பெருமான். இத்தலத்தில் அகத்தியருக்கு திருமணக் கோலம் காட்டிய ஸ்தலம்.

கல்யாண சுந்தரர் ரிஷப வாகனத்தின் மேல் சாய்ந்த கோலத்தில் அம்மையுடன் அற்புதமாக தரிசனம் தந்து அருள் பாலிக்கின்றார். அம்மையப்பரின் அழகைக் காணக் கண்கோடி வேண்டும்.


சோமாஸ்கந்தர் அருட்காட்சி

கார்த்திகை மாதம் மூன்றாவது வாரம் இலட்ச தீப பெருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. காலையில் சங்காபிஷேகம், மாலையில் இலட்ச தீப பெருவிழா, இரவு பஞ்ச மூர்த்திகள் திருவீதி உலா.

அருளும் அன்னை குளிர்ந்த நாயகி

இந்த வருடம் 11வது வருட இலட்சதீபப் பெருவிழா சிறப்பாக நடைபெற்றது. சுற்று வட்டார கிராம மக்கள் எல்லாரும் மிக உற்சாகமாக கலந்து கொண்டு கோலமிட்டு, தீபம் ஏற்றி சுவாமி தரிசனம் செய்தார்கள்.


சகல செல்வங்களும் தரும் இமயகிரிராஜ தனயை பார்வதி தேவியின் திருமுக மண்டல தரிசனம் பாவ விமோசனம்

கருவறையிலும் அம்பிகைக்கும், சிவ பெருமானுக்கும் அற்புதமாக மலர் அலங்காரம் செய்திருந்தார்கள். மிகவும் அருமையான தரிசனம் கிட்டியது அம்மையப்பர் அருளினால்.

வள்ளி தேவாசேனா சமேத திருமுருகன்

வாண வேடிக்கைகள் எல்லார் மனதையும் கவர்ந்தது. இன்னிசைக் கச்சேரி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.



சுவரெங்கும் தரையெங்கும் தீப ஜோதி

கோவிலெங்கும் மரத்தினால் அடுக்கு அடுக்காக அகல் விளக்கு ஏற்ற மதில் சுவரை ஒட்டி அற்புதமாக சாரங்கள் இரு பக்கமும் கட்டப்பட்டிருந்தன. அவற்றில் பெரிய விளக்குகள் ஏற்றப்பட்டிருந்தன, திருக்கோவிலின் மேலும் அகல் விளக்குகள் ஜொலித்துக் கொண்டு இருந்தன. அற்புத ஜோதி தரிசனம்.



கோலம் அழகா, தீபங்கள் அழகா

சுவரோரம் மட்டுமல்ல தரையெங்கும் அற்புத கோலங்கள் அதில் அகல் விளக்குகள் அற்புதமாக ஜொலித்தன. பக்தர்கள் அனைவரும் முழு மனதுடன் தீபங்கள் இடை விடாமல் எரிய வைத்துக் கொண்டிருந்தனர்.


தேர்க் கோலத்தில் தீப ஜோதி

சுவரையொட்டி அகல் விளக்குகள்

பூக்கோலத்தில் ஜோதி ரூபன்

மலர் அலங்காரம், அற்புத கோலத்தில் அழகு விளக்குகள் தரையெங்கும் பரந்திருந்தன.

( படத்தை கிளிக்கினால் பெரிதாகக் காணலாம்)

தீப வடிவில் தீபங்கள்


விமான தரிசனம்

ஒத்தாண்டீஸ்வரரின் தூங்காணை மாடவிமானம்( கஜ ப்ருஷ்டவிமானம்), மாப்பிளை சுவாமி விமானம்( ஒற்றை கலசம்), நடராசர் விமானம்( நடுவில் உள்ளது.( மூன்று கலசங்கள்) மற்றும் இடப்புறம் அம்மன் விமானம் தரிசனம். இப்படத்தில் துவார கணபதி சன்னதி மின் விளக்கு ஒளியில் ஒளிர்வதையும் காணலாம். தெற்கு வாயிலின் முகப்பில் இத்தல ஐதீகங்களான சோழ மன்னன் சரிதையையும், அகத்தியருக்கு கல்யாணக் கோலம் காட்டியதையும் சுதை சிற்பங்களாக தரிசிக்கலாம். இராஜ கோபுரத்தின் வலப்புறத்திலும் இவ்விரு சுதை சிற்பங்களையும் தரிசிக்கலாம்.

அலங்கார மண்டபத்தில் பஞ்ச மூர்த்திகள் அருட்காட்சி

இத்தலத்தில் பெரு விழா பங்குனி உத்திரத்தை ஒட்டி பத்து நாள் விழாவாக, அதிகார நந்தி சேவை, ரிஷப சேவை, தேரோட்டம், திருக்கல்யாணம் என்று சிறப்பாக நடைபெறுகின்றது. காலையும் மாலையும் திருவீதி உலா நடைபெறுகின்றது.



திருக்கோவில் மட்டுமல்ல திருக்குளமும் அகல் விளக்குகளால் மிளிர்ந்தது. சிவ சிவ என்னும் மந்திரமும், ஓம் என்னும் பிரணவமும், முருகன் சக்தி வேலும் திருக்குளத்து நீரில் பிரதிபலிக்கும் அழகை எப்படி வர்ணிப்பது. நேரில் பார்க்கின்றீர்கள் அல்லவா?

இரு பக்கக் கரை மட்டும் திருக்குளத்தின் நடுவில் விளக்குகள் ஒளிரும் அழகு.

என்னங்க எப்படி இருந்து இலட்சதீப தரிசனம் மனம் நிறைந்ததா? வாய்ப்புக் கிடைத்தால் அருகில் உள்ள ஆலயத்தில் இது போல தீபத் திருவிழா நடந்தால் சென்று தரிசனம் செய்து , ஜோதி வடிவான அண்ணாமலையார் அருள் பெறுங்கள்.

தீப மங்கள ஜோதி நமோ நம!
தூய அம்பல லீலா நமோ நம!

7 comments:

துளசி கோபால் said...

அருமை அருமை.

அதுவும் அந்த ரெண்டாவது படத்துலே...காலை மடிச்சுப்போட்டு உக்காந்துருக்கும் ஸ்டைலைப் பாருங்க..... ஹைய்யோ....

திருஎவ்வளூர் போகும் வழியில் கோபுரத்தைச் சேவிச்சதோடு சரி. ஒரு நாள் இங்கேயும், திரு நின்றவூரில் உள்ள எட்டடி ராமரையும் போய் சேவிச்சுட்டு வரணும்.

அருமையான இடுகைக்கு நன்றி.

படங்கள் அத்தனையும் கொள்ளை அழகு.

S.Muruganandam said...

//அதுவும் அந்த ரெண்டாவது படத்துலே...காலை மடிச்சுப்போட்டு உக்காந்துருக்கும் ஸ்டைலைப் பாருங்க..... ஹைய்யோ..//

கண்ணில் எப்போதும் நீங்காது நிற்கும் அழகு.
படங்கள் அத்தனையும் கொள்ளை அழகு.
புது புகைப்படக்கருவி வாங்கிக் கொடுத்த
சுந்தர் அவர்களுக்கு அத்தனை நன்றியும் சேரும்.

S.Muruganandam said...

//திரு நின்றவூரில் உள்ள எட்டடி ராமரையும் போய் சேவிச்சுட்டு வரணும்.//

நானும் சேவிச்சதில்லை ஒரு நாள் திருநின்றவூர் போகனும்.

cheena (சீனா) said...

அன்பின் கைலாஷி

அருமையான படங்களுடன் கூடிய இடுகை - அததனை படங்களும் கண்ணைக்கவர்ந்தன

நல்வாழ்த்துகள்

Jayashree said...

நம்ப ஊரில் குருக்கள்கள் ஸ்வாமி அலங்காரம் பண்ணற skill ஐ ரொம்பவே பாராட்டணும். ரொம்ப நன்னா இருக்கு. அதுவும் குளக்கரை தீபங்கள்!! தண்ணீர்ல அதோட reflection எத்தனை நிம்மதியை தருகிறது!! நடுவில் உள்ள தீப கூண்டில் உட்கார்ந்துண்டு சுற்றி நடக்கும் சலனங்கள், தீப ஒளி இதை watch பண்ணிண்டு இருந்தா எப்படி இருக்கும் நு யோசிச்சேன். ஆனந்தமா இருக்கு.

S.Muruganandam said...

மிக்க நன்றி சீனா சார்.அவனருளாலே அவன் தரிசனம் கிட்டியது. அதை அன்பர்களாகிய தங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் அவ்வளவே.

S.Muruganandam said...

//நம்ப ஊரில் குருக்கள்கள் ஸ்வாமி அலங்காரம் பண்ணற skill ஐ ரொம்பவே பாராட்டணும். ரொம்ப நன்னா இருக்கு.//

ஆண்டவனின் அந்த அலங்காரங்களுக்காகவே பல ஆலயங்களுக்கு சென்று தரிசனம் செய்து அப்படங்களையும் பகிர்ந்து கொள்கிறேன்.

//நடுவில் உள்ள தீப கூண்டில் உட்கார்ந்துண்டு சுற்றி நடக்கும் சலனங்கள், தீப ஒளி இதை watch பண்ணிண்டு இருந்தா எப்படி இருக்கும் நு யோசிச்சேன். ஆனந்தமா இருக்கு//

அருமையாக யோசிக்கின்றீர்கள் ஜெயஸ்ரீ. பல வருடங்களாவே இக்கோவிலுக்கு செல்ல நினைத்தேன் இந்த வருடம்தான் அவர் அருளால் இப்பாக்கியம் கிட்டியது.

( மன்னிக்கவும் பின்னூட்டமிட சிறிது கால தாமதமாகி விட்டது.)