Wednesday, June 13, 2007

Natarajar 2 (Chidambaram)

தில்லை சிற்றம்பலம்


ஆதிபரன் ஆட அங்கை கனலாட
ஓதும் சடை ஆட உன்மத்தம் உற்றாட
பாதி மதி ஆட பாரண்டம் மீதாட
நாதமோடு ஆடினான் நாதாந்த நட்டமே




என்றபடி எம் ஐயன் ஆனந்த தாண்டவம் ஆடிய தலம் தான் தில்லைவனம் என்னும் சிதம்பரம்.சைவர்களுக்கு கோவில் என்றளவிலே அறியப்படுவது தில்லை. இங்கே எம்பிரான் எண்டோள் வீசி ஆனந்த திருநடனக் காட்சி தருகின்றார். ஆதாரத் தலங்களுள் அநாதகத் தலம் (இருதயம்) இது. நமது இதயத்தில் எப்போதும் அந்த இறைவன் ஆனந்த திருநடனம் புரிய வேண்டும் உணர்த்தும் விதமாக. எம் பெருமான் இத்தலத்திலே பிரமத்தின் ஸ்வருபமாக , ஹ’ருதய புண்டரீக வாச தகாரகாயத் தெய்வமாக , அண்ட பிண்ட பிரபஞ்ச இயக்க கருத்தாவாக, ஐந்தொழில் மூலமாக, யோகநெறி கண்ட இயங்கு பேரொளியாக சச்சிதானந்த ஸ்வரூபமாக ஆனந்த நடராசராக அம்மை சிவகாம வல்லியுடன் அருட் காட்சி தருகின்றார். பூலோக கயிலாயமான இத்தலத்திற்குத்தான் எத்தனை நாமங்கள் அவற்றுள் சில சத் , புரம், சபா , புண்டரீகம், சத்தியம், மகத்விவிக்தம், அற்புதம், குகை, ஞானாமிர்தம், பரவியோமம், பரமாலயம்,சத்தம், சத்திய மாய தளம், கோவில், தில்லை வனம், புண்டரீக வீடு, இவையெல்லாம் பல்வேறு உபநிடதங்கள் தில்லையை குறிப்பிடும் நாமங்கள். சிதம்பரம், புலியூர், பெரும்பற்றப் புலியூர், தென்புலியூர், புலீச்சுரம். மன்று, அம்பலம், சத்து, உம்பர், இரண்யமய கோசம், ஞான சுகோதயம், சிவாலயம், பரப்பிரமம் என்பன காரணப் பெயர்கள்.
ஆனந்த கூத்தாடும் ஒர் நாமம் ஓர் உருவம் இல்லாத எம் ஐயனுக்குத்தான் இத்தலத்திலே எத்தனை திருநாமங்கள் அவைகளுள் சில : தேவர்கள் தேவன், நடராஜர், நிருத்தர், நிருத்தரசர், கருமூலகரர், ஆனந்த ஒளி, நடமாடும் திருவாளர், ஆடவல்லான், நட்டம் பயின்றாடும் நாதன், கூத்தன், ஞானச் செவ்வொளி, அம்பல வாணன், சபா நாயகர், அம்பலத்தரசர், சித்சபேசன், நடன சபாபதி, நடன சிகாமணி, பிஞ்ஞகன். அம்மை : உமையம்மை. சிவகாமி, சிவகாம சுந்தரி, சிவானந்த வல்லி என்றும் அழைக்கப்ப்படுகின்றாள். இத்தலத்தின் தீர்த்தங்கள் : சிவ கங்கை, குய்ய தீர்த்தம்(பாசமறுத்த துறை), புலிமடு, வியாக்கிரபாத தீர்த்தம், அனந்த தீர்த்தம், நாகசேரி,பிரும்ம தீர்த்தம், சிவப்பிரியை, திருப்பாற்கடல், பரமானந்த கூபம் ஆகியவையாகும் . தல விருட்சம் : தில்லை
மன்றில் நின்றாடும் எம்பெருமானின் பஞ்ச சபைகளுள் இது கனக சபை (பொன்னம்பலம்) ஆகும். இந்த கனக சபையிலேயே ஐந்து சபைகள் உள்ளன அவையாவன 1. ஸ்ரீ ஆனந்த நடராஜரும் பராசக்தி வடிவமும் ஆனந்த கூத்தாடும் சித்சபை (ஞான சபை) , 2. அதற்கு முன் உள்ள பொற்சபை (கனக சபை) இதிலே தான் வருடத்தில் நான்கு முறை மாலை வேளைகளில் ஐயனும் அம்மையும் அபிஷேகம் கண்டருளுகின்றனர். 3. எம்பெருமான் காளியுடன் போட்டியிட்டு ஊர்த்துவ தாண்டவமாடிய நிருத்த சபை (எதிரம்பலம்), 4.ஆருத்ரா தரிசனத்தன்றும், ஆனி உத்திரத்தன்றும் அபிஷேகம் கண்டருளி உலகுக்கே ராஜாவாக எம்பெருமான் காட்சி தரும் ராஜ சபை எனும் ஆயிரங்கால் மண்டபம். 5. பேரம்பலம் எனப்படும் தேவ சபை தேவர்கள் வந்து பெருமாளைப் தரிசித்து போற்றும் இடம்.


பஞ்சபூதத்தலங்களிலே இது ஆகாயத் தலம். ஆதாரத்தலங்களுள் அநாதகத்தலம் (இருதயம்). புலிக்கால் முனிவர் வழிபட்ட பஞ்சபுலியூர்களிலே இது பெரும்பற்ற புலியூர். முக்தி தலங்களிலே தரிசிக்க முக்தி அளிக்கும் தலம். பதஞ்சலி முனிவர் தன் ஆயிரம் நாவால் ஆயிரம் மாணவர்களுக்கு உபதேசித்த தலம். அற்புதமான சிற்ப வேலைப்பாடுகள், ஓவியங்கள் நிறைந்த தலம். இத்தலத்தின் ஆன்மீக பொக்கிஷத்தை கண்டு உணர ஒரு ஆயுள் போதாது.



தல ஆகமம் - முகுடாகமம், திருமூலட்டானம் என்றும் இத்தலம் வழங்கப்படுகின்றது ஏனென்றால் அர்த்த ஜாம பூஜைக்குப் பின் அனைத்து தலங்களின் சக்திகளும் லிங்க ரூபமாக உள்ள திருமூலட்டநாதரிடத்தில் வந்து ஒடுங்குகின்றன.சைவ வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாகவும் விளங்குகின்றது இத்தலம். 108 வைணவ திவ்ய தேசங்களுல் தில்லை சித்திரகூடமும் ஒன்று. தாருகாவனத்திலே எம்பெருமான் ஆடிய ஆனந்த நடனத்தை இன்றும் போக சயனத்திலே, கோவிந்த ராஜப்பெருமாளாக இன்றும் ஸ்ரீ மஹா விஷ்ணு ரசித்துக் கொண்டிருக்கிறார். திருமங்கை மன்னரும் இதை மூவாயிர நான் மறையனார் முறையால் வணங்க "தேவாதி தேவன் விளங்கும் தில்லை சித்திரக் கூடம் என்று பாடுகின்றார். ஒரே நேரத்தில் நடராஜப் பெருமானையும், கோவிந்த ராஜப்பெருமாளையும் தரிசிக்கும் வண்ணம் இரு சன்னிதிகளூம் தெற்கு நோக்கியும் கிழக்கு நோக்கியும் அமைந்துள்ளது ஒரு தனி சிறப்பு. கோவிந்த ராஜரின் சபைக்கும் பொன் கூரை வேயப்பட்டுள்ளது.




இத்தலத்தில் வழிபட்ட அருளாளர்களுள் முதன்மையானவர்கள் வியாக்ரபாதர் மற்றும் பதஞ்சலி ஆவர். சிவபெருமானை வழிபட்டாலே வீடு பேறு கிட்டும் என்றறிந்த மத்தியந்த முனிவரின் மகன் இளமையிலேயே தில்லை வந்து சிவலிங்கம் நிறுவி வழிபட்டு வர, வண்டெச்சில் படும் முன்னே மலர் பறிக்க ஏதுவாக புலிக்கால்களும் புலி நகமும் பெற்றவர் வியாக்ரபாதர். ஆலமுண்ட கண்டனின் ஆனந்த நடனத்தை காண வேண்டுமென்ற ஆசையினால் பதஞ்சலியாக வந்து தில்லை வனத்திலே தவம் செய்தவர் ஆயிரம் நாவு படைத்த மஹா விஷ்ணுவின் படுக்கையாம் ஆதி சேஷன் எம்பெருமானின் ஆனந்த தாண்டவத்தைக் காண பதஞ்சலியாக வந்து தவம் செய்தார். இவர்கள் இருவரின் தவத்திற்கு மகிழ்ந்தே அந்த பசுபதி இந்த தில்லைத் தலத்திலே ஒரு தைப் பூச நன்னாளிலே தனது ஆனந்த நடனத்தை இருவருக்கும் காட்டியருளி அவர்கள் இருவரின் வேண்டுகோளுக்கிணங்கி ந'ம் எல்லோரும் உய்ய பொன்னம்பலம் கொண்டருளினார். தில்லை வாழ் அந்தணர்கள் சிவகணங்களே. அம்மையின் ஞானப்பால் உண்ட ஆளுடையப்பிள்ளையாம் திருஞான சம்பந்தரும், நீலகண்ட யாழ்ப்பாணரும் அவர்களை அவ்வாறே கண்டு வணங்கினர்.


என்று வந்தாய் என்னும் எம்பெருமான் திருக்குறிப்பைப் புலப்படுத்தி தில்லையில் பல பதிகங்களைப்பாடிய அப்பர் தில்லை நகரை அங்கப்பிரதட்சணம் செய்த தலம். எம்பெருமானே அசரீரியாக வண்தொண்டர் சுந்தருரருக்கு " தில்லை வாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன் " என்று அடி எடுத்துக் கொடுத்த தலம் . அருள் மணிவாசகர் திருவாசகம் 600ம், திருக்கோவையார் 400ம் " வாதாவூரன் மொழி எழுதிய சிற்றம்பலமுடையான் கையெழுத்து " என்று எழுதி இறைவனே கைசாத்திட்ட பெருமை உடையது. "நான் எழுதிய இந்த தமிழ் நூலின் சாரம் எம்பெருமானே என்று கூறி தைப்பூச நன்னாளில் ஐயனுடன் மணிவாசகர் கலந்த தலம். சேரமான் பெருமாளுக்கு நாளும் சிலம்பொலி காட்டிய தலம் அவர் பொன்வண்ணத்தந்தாதி இயற்றிய தலம். தொண்டர் பெருமை பாட சேக்கிழாருக்கு " உலகெலாம்" என்று அடி எடுத்துக் கொடுத்த தலம். " எம்மையைத் தீண்டுவையோ திருநீலகண்டம் என்றவரை ஆட்கொள்ள வேண்டி சிவ கங்கை குளத்தில் மூழக வைத்து இளமையாக்கிய தலம். திருநாளைப்போவாரை தீக்குழியில் இறக்கி அந்தணராக்கி ஆட்கொண்ட தலம். உய்ய வந்த தேவ நாயனார் தாம் எழுதிய 'திருவுந்தியார்' என்ற நூலினை கோவில் கல் யாணை அருகே வைக்க அந்த கல் யாணை அந்நூலை படியில் வைக்க திருக்களிற்றுப்படியார் எனப் புகழ் பெற்ற தலம். கொற்றவன் குடி உமாபதி சிவாச்சாரியாருக்காக கொடியேறி அவர் கொடிக்கவி பாடிய தலம். ஆதி சங்கரருக்கு கேனோபநிடதத்தில் ஏற்பட்ட ஐயத்தினை எம் அம்மை சிவானந்த வல்லி தீர்த்தருளிய தலம். குமரகுருபரர் தம் அருள் வாக்கினை வெளிப்படுத்தி தமிழ் இலக்கிய தொண்டு புரிய அருளிய தலம். இராம லிங்க வள்ளலார் அம்பலத்தரசை ஆடையிலே தனை மணந்த மணவாளனாக பாவித்து வணங்கி பல அருட் பாடல்கள் இயற்றிய தலம். சேந்தனார் பல்லாண்டு பாட நின்ற திருத்தேர் ஓடிய தலம். மாணிக்க வாசகர், திருநாளைப்போவார் நாயனார், கூற்றுவ நாயனார்,கோச்செங்கணான், கணம் புல்ல நாயனார், மறை ஞான சம்பந்தர், உமாபதி சிவம் ஆகியோர் முக்தி அடைந்த தலம்.





ஊர் நடுவே நான்கு ஒழுங்கான அகலமான தேர் வீதிகளுடன் 40 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது இக்கோவில். கோவில் தெற்கு வடக்காக நீண்டிருக்கிறது. —ந்டிதுயர்ந்த கோவில் மதில்களை மூன்றாம் குலோத்துஙக சோழன், மதுரை வீரப்ப நாயக்கர், பச்சையப்ப முதலியார் முதலியோர்களால் கட்டப்பட்டுள்ளன. கலையழகு நிறைந்திருக்கும் இத்திருக்கோவிலுக்கு ஐந்து பிரகாரங்கள் நான்கு கோபுரங்கள், ஒவ்வொரு கோபுர வழியாகவும் சைவ சமயக் குரவர்கள் நால்வரும் அம்பலக் கூத்தனின் அருட்தரிசனம் காண வந்தனர். எனவே அந்தந்த கோபுர வாயில்கள் அவர்கள் பெயரிட்டு அழைக்கப்படுகின்றான. இரண்டாம் குலோத்துங்க சோழன் மற்றும் கோப்பெருஞ்சிங்கனால் கட்டப்பட்ட கிழக்கு கோபுரம் வழியாக வந்து வழிபட்டவர் திருவாசகம் பாடிய மாணிக்க வாசகர். சொக்கžயன் என்னும் பல்லவ மன்னன் கட்டிய தெற்கு வாசல் வழியாக வந்து வழிபட்டவர் ஞான சம்பந்தப் பெருமான். அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம் என்று பாடிய அப்பர் பெருமான் வந்த மேற்கு கோபுர வாயிலைக் கட்டியவர் ஜடாவர்மன் சுந்தர பாண்டியன். வண்தொண்டராம் சுந்தரர் வந்த வாயில் கிருஷ்ண தேவராயரால் கட்டப்பட்ட வடக்கு வாயில். பரதக்கலையின் கரணங்களை விளக்கும் சிற்பங்களைக் கிழக்கு மற்றும் மேற்கு கோபுரங்களிலும் ஆயிரங்கால் மண்டபத்திதிலும் காணலாம்.






கிழக்கு வாயில் வழியே நாம் நுழைந்து வெளிப் பிரகாரத்தில் வலம் வந்தால் நெடிதுயர்ந்த மதிலும் மதிலின் மேல் நந்தியெம்பெருமான் அமர்ந்து காவல் செய்யும் அழகையும், மதிலின் உட்பகுதிகளிலில் இரு அடுக்ககாக தூண்கள் நிறைந்த மண்டபங்களாக அமைக்கப்பட்டு இருப்பதை கண்டு களிப்புறலாம். இத்திருச்சுற்றை வலம் வந்தால் சுதையால் அமைக்கப்பட்ட பிரம்மாண்டமான நந்தியெம்பெருமானை நான்கு திசைகளிலும் கண்டு வணங்கலாம். வடக்கு பிரகாரத்தில் சிவகங்கைக் குளமும், அந்த சிவகங்கை குளக்க்கரையிலே சின்னஞ்சிறு பெண் போலே சிற்றாடை இடை உடுத்தி நின்ற கோலத்தில் எம் அம்மை சிவகாம சுந்தரி திருகாமக் கோட்ட பெரிய நாச்சியாராக கோவில் கொண்டிருக்கும் சிவகாமக் கோட்டம் என்றழைக்கப்படும்
பரந்தெழுந்த சமண்முதலாம் பரசமய இருள்நீங்கச்
சிரம்தழுவு சைவநெறித் திருநீற்றின் ஒளிவிளங்க
அரந்தைகெடப் புகலியர்ககோன் அமுதுசெயத் திருமுலைப்பால்
சுரந்தளித்த சிவகாம சுந்தரிபூங் கழல்போற்றி

என்று உமாபதி சிவாச்சாரியாரல் போற்றப்பட்ட சிவகாமியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. அம்மையின் திருக்கோவிலின் முன்மண்டபத்தின் கூரையில் எழில் விளங்கும் ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. சித்ரகுபதனுக்கு ஒரு சன்னதி திருச்சுற்றில் உள்ளது. அம்மன் கோவிலை வலம் வரும் போது பரத நாட்டியத்தின் பல் வேறு கரணங்களை கவினுற சிற்பங்களாக செதுக்கியுள்ளதை கண்டு களிக்கலாம். சிம்மவர்மன், வியாக்ரப'தர் ஆணைப்படி தீர்த்தங்களுக்குள் நாயகமானதான சிவகங்கையில் மூழ்கி எழில் பெற்றான். பின் இரணியவர்மன் என்னும் பெயர் பெற்றான். திருநீல கண்டர் மூழ்கி எழுந்து இளமை பெற்றதும் இத்திருக்குளத்தில்தான். இத்திருக்குளத்தில் மூழ்கி நீராடினால் குட்டம் முதலான தீராத நோய்களும் தீரும் என்பது ஐதீகம்.





வ கங்கை திருக்குளம் அம்மனை வணங்கி வெளி வந்து சிவகங்கை குளத்தைக் கடந்தால் ராஜ சபை என்னும் ஆயிரங்கால் மண்டபம் அமைந்துள்ளது இதன் முகப்பிலேதான் அம்மையும் அப்பனும் தேரை விட்டு இறங்கி வந்து அமர்ந்து ஆனி உத்திரத்தின் போதும், மார்கழி திருவாதிரையின் போதும் உதயாதி நாழிகையில் பிரம்ம முகூர்த்தத்தில் அபிஷேகம் கொண்டருளுகின்றனர். பின்னர் உலகுக்கே ராஜாவாக திருவாபரண தரிசனமும் தந்து, ஆனந்த தாண்டவமிட்டு சித் சபைக்கு திரும்புகின்றனர். இந்த ராஜ சபையிலே தான் பதஞ்சலி தந்து ஆயிரம் நாவால் ஆயிரம் žடர்களுக்கு ஆகமம் போதித்தார், சேக்கிழார் பெருமான் பெரிய புராணத்தை அரங்கேற்றினார், திருமூலர், மணிவாசகர். உமாபதி சிவாச்சாரியார், இராமலிங்க அடிகள், கோபால கிருஷ்ண பாரதியார் ஆகியோர் தத்தம் நூலை அரங்கேற்றியதும் இந்த ராஜ சபையிலேதான். ஆயிரங்கால் மண்டபத்தின் உட்கூரையிலும் தில்லையின் தல வரலாறு ஓவியங்களாக தீட்டப்பட்டுள்ளன. இராஜ சபையின் முகப்பு யானைகள் தேரை இழுப்பது போன்று சக்கரங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது.
உள் பிரகாரத்தில் ஸ்ரீ முக்குறுணிப் பிள்ளையார் சந்நிதி, திருமூலட்டானம் , இங்கே எம் ஐயன் அருவுருமாக லிங்கமாக எழுந்தருளியுள்ளார் ஆதி நாயகர் என்ற திருநாமம். திருமூலட்டானத்தை வலம் வரும் போது மேற் கூரையிலே எம் ஐயனின் 64 மூர்த்தங்களையும் அற்புதமாக ஓவியமாக வரைந் துள்ளதைக் கண்டு களிக்கலாம். இதற்கு அடுத்த சந்நிதி ஆலமர் கடவுள் சன்னதி ஆகும். பின் யாக சாலையை கண்டு வணங்கி நிருத்த சபையை அடையலாம். அழகிய சிறிய சிற்பங்களை தூண்களிலே தாங்கி நிற்கும் இந்த எதிரம்பலத்திலே எம் ஐயன் காளியை நடனப் போட்டியிலே வென்ற போது தனது காலை உயர்த்தி தனது காதில் உள்ள குண்டலத்தை கழற்றும் விதமான ஊர்த்துவ தாண்டவ கோலத்திலும், நரசிம்மரின் கோபத்தை சாந்தப்படுத்திய சரப மூர்த்தியாகவும் கண்டு வணங்கலாம். நிருத்த சபையின் ஒரு தூணிலே செதுக்கப்பட்டுள்ள மார்க்கண்டனுக்காக எம் ஐயன் எமனையே காலால் உதைக்கும் சிற்பம் மிகவும் அரிய ஒன்று. பாண்டிய நாயகம் என்னும் சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்தமுருகன் கோவிலும், மீனாக்ஷ’ சுந்தரேஸ்வரர் சந்நிதியும், திருமுறைக்காய்பிள்ளையார் சன்னதி இவர் தான் அபய குல சேகரன் என்னும் இராஜராஜனின் தூண்டுதலால் நம்பியாண்டார் நம்பி மூலம் சைவ பொக்கிஷங்களாம் தேவாரத் திருமுறைகள் பூட்டிய அறையிலிருந்து நாம் எல்லோரும் உய்ய வெளிவரக் காரணமானவர். மற்றும் தேவர்கள் எல்லாம் வந்து எம்பெருமானை வணங்கும் தேவ சபை (பேரம்பலம்), நூற்றுக்கால் மண்டபம் , கொடி மரம் முதலியவை இச்சுற்றில் உள்ளன.



எம்பெருமான் எண்டோள் வீசி நின்றாடும் சித் சபை மற்றும் கனக சபை இரண்டும் அம்பல வடிவில் அமைந்துள்ளன. சித் என்றால் உண்மை, அந்த இறைவனே நமக்கு சதம் அவனுடைய குஞ்சித பாதத்தை பற்றினால் நமக்கு இந்த சம்சார சாகரத்திலிருந்து விடுதலை என்ற உண்மையை நமக்கு உணர்த்தும் விதமாக ஐம்தொழில்களையும் செய்யும் எம் ஐயன் அம்மை சிவகாம சுந்தரியுடன் ஆனந்த தாண்டவக்கோலத்தில் அருட் காட்சி தருகின்றார். அம்பலத்திற்கு ஒன்பது கலசங்கள் அவை ஒன்பது சக்திகளைக் குறிக்கின்றன. அம்பலத்தின் 18 தூண்கள் 18 புராணங்களை குறிக்கின்றது. 64 சந்தன கை மரங்கள் 64 கலைகளை குறிக்கின்றன. 2600 சிவாய நம என்னும் திருவைந்தெழுத்து பொறித்து செம்பொன்னால் செய்யப்பட்ட ஓடுகள் நாம் ஒரு நாளில் விடும் மூச்சு எண்ணிக்கையை குறிப்பிடுகின்றன. இவ்வோடுகளை பிணைக்கும் 76000 ஆணிகள் நமது சுவாசத்திற்கு உதவும் நாடிகளை குறிப்பிடுகின்றன. 224 அடைப்புப் பலகைகள் 224 எலும்புகளைக் குறிக்கின்றான. எவ்வாறு சுவாசம், நாடி, நரம்புகள் முதலியன இதயத்துடன் சம்பத்தப்பட்டுள்ளாதோ பூமி ஆகிய விராட புருஷனின் இருதய மாக விளங்கும் தில்லையின் நாயகன் நமது இதயத்ஹ்டிலும் உறைகிறான் என்பதை சூட்சமமாக விளக்குகின்றது இப்பொன்னம்பலம். பொன்னம்பலத்திலே கூத்தன் ஆட அண்டங்கள் ஆடுகின்றன. அவன் ஆடாது இருந்தால் அண்டங்கள் அனைத்தும் கலங்கிப் போகும், ஆட்டம் கண்டு விடும். ஆனந்த நடராச மூர்த்தியின் மூர்த்தம் ஸ்ரீ சக்கர வடிவிலும், ஓம் பிரணவத்தையும், நமசிவாய என்னும் பஞ்சாட்சர மந்திரத்தையும் விளக்கும் விதமாக அமைந்துள்ளது. வலக்கரத்திலுள்ள உடுக்கை படைத்தல் தொழிலையும், அபய கரம் காத்தல் தொழிலையும், இடக்கரத்தில் உள்ள அக்னி அழித்தல் தொழிலையும், முயலகனின் மேல் ஊன்றிய பாதம் திரேதம் எனப்படும் மறைத்தல் தொழிலையும் , தூக்கிய குஞ்சிதபாதம் முக்திக்கு காரணமாகி அருளல் தொழிலை குறித்து


தோற்றம் துடியதனில் தோயும் திதி அமைப்பு
சாற்றிடும் அங்கையிலே சங்காரம்- ஊற்றமாய்
ஊன்று மலர்பதத்தே உற்ற திரோதன் முத்தி
நான்ற மலர் பதத்தே நாடு
என்றபடி




பஞ்ச கிருத்திய பரமானந்த தாண்டவ கோலத்தில் தெற்கு நோக்கி நமக்கு அருட்காட்சி தருகின்றார். திருவடிவே பஞ்ட்சாட்சரம் திருப்பாதம் - ந , உதரம் -ம , தோள் - சி, முகம் - வ , திருமுடி -ய எனலாம். உடுக்கை - சி, வீசிய கரம் -வ அபய கரம் - ய , அக்னி - ந, முயலகன் - ம எனலாம். வலப்பக்கம் - சிவாய , இடப்பக்கம் - நம எனலாம். அகிலத்தை சிவமாகக் கொண்டால் கதிரவக் சக்தியாகின்றது. அணுவின் தத்துவமும் அண்டங்களின் தத்துவமும் அம்பலவாணரின் ஆனந்த க்கூத்தில் வைத்து விளக்கப்பட்டுள்ளன. திருவாசி ஓன் என்னும் பிரணவம். சடைமுடி- ஞானம். சடை விரித்தாடுவது ஞானத்தை வழங்குவதற்காக. வீசிய கரம் மாயையை உதறித்தள்ளுவதையும் ஊன்றிய பாதம் மலத்தினை நீக்குவதையுன், தூக்கிய திருவடி அருளை அளித்து ஆன்மாக்களை ஆனந்தக்கடலில் அழுத்துவதையும் குறிக்கும். ஒரு கையில் உடுக்கை ஒரு கையில் சிவந்த அக்னி ஒலி, ஓளிகளின் முக்கியத்தை குறிக்கின்றது. அதுவே துடிப்பு இதையே திருமூலர்


எங்கும் திருமேனி எங்கும் சிவ சக்தி
எங்கும் சிதம்பரம் எங்கும் திரு நட்டம்
எங்கும் சிவமாயிருத்தலால் எங்கெங்கும்
தங்கும் சிவனருள் விளையாட்டதே
என்றார்.
அம்பலமாவது அகில சராசரம். இது போல எம் ஐயனின் வடிவத்திற்கு ஆயிரம் விளக்கங்கள் தரலாம் நாம். சிற்ப சாஸ்திர முறைப்படி நவக்கிரகண்க்களை இணைத்து 27 நட்சத்திரங்களை குறிக்கும் வண்ணம் 27 புள்ளிகளைக் கொண்டு பஞ்ச லோகத்தால், பஞ்ச பூதங்களை குறிக்கும் வண்ணம் எம் ஐயனின் சிலை வடிக்கப்படுகின்றது. பஞ்ச பூதத் தத்துவராகவும் எம் ஐயன் விளங்குகின்றார். மூக்கு காற்றையும் , முகம் பூமியையும், நெற்றிக்கண அக்னியையும், முகத்தின் காந்தி ஆகாயத்தையும், விரி சடை நீரையும் குறிக்கின்றது. 6 முக்கோணங்கள் கொண்ட சக்கரம் அல்லது சிவ சக்தி ஐக்யமான பிந்துவையும், அதைச் சுற்றி விளங்கும் 43 முக்கோணங்களையும் கொண்டு விளங்கும் ஸ்ரீ சக்ர வடிவமாக அமைந்துள்ளது ஐயனின் திரூஉருவம்.


நடராஜ மூர்த்தியின் திரூருவத்தில் சிவ பெருமானின் அனைத்து மூர்த்தங்களின் அம்சமும் உள்ளது. பிரம்ம கபாலம், பிரம்ம கபால மாலை - பிரம்ம சிரச்சேத மூர்த்தி என்பதையும், கூர்ம அவதார ஆமையின் ஓடு, வராக அவதாரத்தின் பன்றி பல் , வாமனரின் எலும்புகள், நரசிம்மரின் குருதித்தோல், திருமாலின் திருக்கண்களாகிய தாமரைகள், சூரியனின் பற்கள் ஆகியவற்றை தரித்திருப்பது அந்தந்த மூர்த்தியின் அம்சம். கங்காதரர் மற்றும் ஜடா முடி இவரின் யோகினம்சத்திஅயும். திங்கள் சந்திரசேகர அம்சம், தக்ஷன் யாகம் அழிப்பு முதலியவற்றை குறிக்கின்றது. தோடும் குண்டலமும் அர்த்த நாரீஸ்வர அம்சத்தையும், மயிற்பீலி கிருதார்சுன அம்சத்தையும், துடி ஓங்கார நாதம், ஐம்பூத அக்னி நிலை, அபய ஹஸ்தம் அனுக்கிரக மூர்த்தி அம்சம் , கஜ சம்ஹார, கால சம்ஹார, அந்தகாசுர சம்ஹார அம்சம் முயலகன் வீரட்ட நிலை, ஸ்தித பாதம் பதி நிலை, குஞ்சித பாதம் அருள் நிலை, கஜ ஹஸ்தம் சுட்டு நிலை. கொவ்வை குமிண் சிரிப்பு திரிபுர சம்ஹார மூர்த்தி அம்சம், அரவணிகள் குண்டலினி சக்தி. அருகும், எருக்கும், ஊமத்தம் பூவும் முடியிற்கொண்டு அறிவின் நுணுக்கம், அறிவின் விளக்கம், விருப்பு, வெறுப்பு நீங்கிய தன்மை என்ற மூன்றுக்கும் விளக்கமாக இலங்குகிறார்.
ஆட்டுவித்தால் யார் ஒருவர் ஆடாதாரே என்று அப்பர் பெருமான் பாடிய படி ,அகிலத்தை எல்லாம் ஆட்டுவிக்கும் அம்பலவாணருக்கு வருடத்திலே ஆறு திருமுழுக்குகள் , தேவர்கள் தங்களுடைய ஒரு நாளான நமது பூலோகத்தின் ஒரு வருடத்தில் செய்யும் ஆறு கால பூசையே இந்த ஆறு திருமுழுக்குகள். அவை


சித்திரை ஓணமும், žரானி யுத்திரமாம்
சத்ததனு ஆதிரையும் சார்வாளும் - பத்திமிகு
மாசியரி கன்னி மருது சதுர்த்தசி மன்
றீ சரபி டேக தினமாம்
.
என்றபடி சித்திரை திருவோணம், ஆனி உத்திரம் , மார்க ழி திருவாதிரை , ஆவணி, புரட்டாசி, மாசி வளர்பிறை சதுர்த்தசி நாட்கள் எம் ஐயனும் அம்மையும் அபிஷேகம் கண்டருளும் நாட்களாகும்.அபிடேக காலங்களில் அம்மை சிவகாம சுந்தரிக்கு தோழிகளாக சரஸ்வதியும் , இலக்குமியும் விளங்கும் பாங்கினையும், ஐயனின் பூத கணங்களையும் நாம் காணலாம். இவ்வாறு அம்மை சிவகாமியுடன் தெற்கு நோக்கி ஆனந்த தாண்டவ கோலத்தில் அருட்காட்சி தரும் ஆனந்த நடராஜ மூர்த்தி சகள திருமேனி ( உருவ திருமேனி). ஸ்படிக லிங்க மூர்த்தி - அழகிய சிற்றம்பலமுடையார் சகள நிட்கள திருமேனி (அருவுருவ திருமேனி) இவருக்குத்தான் பொன்னம்பலத்தில் தினமும் காலையும் மாலையும் அபிஷேகம் நடைபெறுகின்றது மரகத நடராஜராம் ரத்ன சபாபதிக்கு காலையில் மட்டும் அபிஷேகம் நடைபெறுகின்றது, அன்னம் பாலிக்கும் தில்லை என்பதால் இவரின் அன்னாபிஷேகம் மிகவும் விசேஷமானது . இரகஸ்யம் நிட்கள திருமேனி (அருவ திருமேனி). சித்சபையில் சபாநாயகரின் வலப்புறம் உள்ளது ஒரு சிறு வாயில் இதில் உள்ள திரை அகற்றப்பெற்று ஆரத்திக் காட்டப்படும் போது அதனுள்ளே திருவுருவம் ஏதும் தோன்றாமல் தங்கத்தால் ஆன விலவ மாலை திருவாசியுடன் தொங்கலிடப்பட்டு காட்சி அளிக்கும். மூர்த்தி இல்லாமலே விலவ மாலை தொங்கும். இதன் இரகசியம் அருகே உருவமாக எழுந்தருளியுள்ள எம்பெருமான் இங்கே அருவமாக ஆகாய ரூபமாக விளங்குகின்றார் என்பதே சிதம்பர ரகஸ்யம் என்பர். எனவே தான் இத்தலம் பஞ்சபூதத் தலங்களில் ஆகாயத் தலம் ஆகும். சிவ சக்தி ஐக்யமான, மந்திர சொருபமான திருவம்பல சக்கரமே இரகசியமாக விளங்குகின்றது அந்த ஜோதியை நாம் நமது ஊனக் கண்ணால் பார்க்க இயலாது எனவே தங்க வில்வ இலைகள் தொங்கவிடப்பட்டிருக்கின்றது என்பாரும் உண்டு. மேலும் முகலிங்கம், சிவ பாதுகை, ஹஸ்தி ராஜர், மற்றும் சொர்ண பைரவரும் சித் சபையிலே காட்சி தருகின்றனர்.

பொன்னம்பலம் சித் சபையைப் போலவே அமைக்கப்பட்டுள்ளது. பொன்னம்பலத்திலே தான் ஐயனும் அம்மையும் வருடத்தில் நான்கு முறை ,மாலை நேரத்தில் அபிஷேகம் கொண்டருளுகின்றனர். பொன்னம்பலத்தையும் சிற்றம்பலத்தையும் இனைக்கும் படிக்கட்டுக்கள் ஐந்து இவை பஞ்சாட்சர படிக்கட்டுக்கள் என்று வழங்கப்படுகின்றன. அம்பலத்தை சுற்றி வரும் போது தங்கக் கூரைகளை கண்டு களிக்கலாம். சிதம்பரத்தை பற்றி எழுதப்பட்டுள்ள நூற்களை கொண்டு ஒரு புத்தக சாலையையே அமைத்து விடலாம். அவற்றுள் முக்கியமானவை பெரிய புராணம், கோவில் புராணம், சிதம்பர புராணம், புலியூர் புராணம், தில்லை கலம்பகம், புலியூர் வெண்பா, சிதம்பர நாதர் பதிகம் முதலியன.


இத்திருக்கோவிலில் நடக்கும் திருவிழாக்களில் முக்கியமானவை ஆருத்ரா தரிசனமும், ஆனி திருமஞ்சனமும் ஆகும். நம்முடைய ஒரு வருடம் தேவர்களுக்கு ஒரு நாள் அவர்கள் செய்யும் ஆறு கால பூஜையே எம் அம்பலத்தாடும் இறைவன் கொண்டருளும் ஆறு திருமுழுக்குகள் அவ்ற்றுள் பிரம்ம மூகூர்த்த நேரமும், பிரதோஷ காலமும் தான் ஆருத்ராதரிசனமும் ஆனி திருமஞ்சனமும் ஆகும். இவை இரண்டும் பத்து நாள் திருவிழாக்கள் ஆகும். தினமும் பஞ்ச மூர்த்திகளின் புறப்பாடு உண்டு. ஒன்பதாம் நாள் நம்மையெல்லாம் உய்விக்க எம் ஐயனும் அம்மையுமே சித் சபையை விட்டு தேருக்கு எழுந்தருளி தேரோட்டம் முடித்து ராஜ சபையில் அடுத்த நாள் காலை அருனோதய காலத்தில் மஹா அபிஷேகம் கொண்டருளி, பின் தரிசனம் அளித்து ஆனந்த நடனத்துடன் சித் சபைக்கு திரும்புகின்றனர்.


வில்லை வட்டப் படவாங்கி அவுணர் தம்
வல்லை வட்ட மதில் மூன்றுடன் மாய்த்தவன்
தில்லை வட்டந் திசைகை தொழுவார் விணை
ஒல்லை வட்ட்ங் கடந் தோடுதல் உண்மையே

என்ற அப்பரின் வாக்குப்படி , நம்முடைய வினைகளை எல்லாம் தீயினுள் தூசாக செய்ய வல்ல ,ஆனந்த நடராஜ மூர்த்தியும் சிவகாம சுந்தரியும் கோவில் கொண்டிருக்கும் இவ்வளவு பழம் பெருமையும் சிறப்பும் நிறைந்த திருக்கோவிலுக்கு சென்று அவர்களின் திருவருளைப் பெற கிளம்பி விட்டீர்களா இப்போதே.

2 comments:

Sethu Subramanian said...

Wow, it is a real thesis on Cidambaram.

S.Muruganandam said...

Thank You for your comments, please do visit in December again when I will be adding more articles and pictures during Arudra Darisanam time.

Also visit other blogs of adiyen.