Thursday, June 21, 2007

Ani Uthiram

திருச்சிற்றம்பலம்

அம்பல கூத்தனின் ஆனி உத்திர தரிசனம்

தில்லை அம்பலம்:

பஞ்ச பூதத்தலங்களிலே ஆகாயத் தலமாக விளங்குவதும், சைவர்களுக்கு கோவில் என்ற அளவிலே அறியப்படுவதும், முக்தி தலங்களிலே தரிசிக்க முக்தி தருவதும், ஆதாரத் தலங்களிலே அநாஹத(இருதய) தலமாகவும், வியாக்ர பாதர் வழிபட்ட பஞ்ச புலியூர்களில் பெரும்பற்ற புலியூராகவும் , பஞ்ச சபைகளிலே பொற்சபையாக விளங்குவதும், அம்மை இச்சாசக்தி, ஞான சக்தி, கிரியா சக்தியாக காட்சி தருவதும், நடு இரவுக்கு பின் அனைத்து லிங்கங்களின் சக்தியும் வந்து சேரும் திருமூலட்டானமாகவும் விள்ங்கும் தலம் எது? இத்தகைய பெருமைகளை பெற்றிருக்கின்ற தலம் எது என்று இந்நேரம் யூகித்திருப்பீர்கள், அத் தலம்

குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும்

பனித்த சடையும் பவளம் போல் மேனியில் பால் வெண்­றும்

இனித்தமுடைய எடுத்த பொற் பாதமும் காணப் பெற்றால்

மனித்த பிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே!

என்று அப்பர் பெருமானை அடுத்த பிறவியே வேண்டாம் என்று கூற வைத்த எம் பெருமான் சிவன், எண்டோள் வீசி நின்று ஆனந்த தாண்டவமாடும் , அன்னம் பாலிக்கும் தில்லை எனப்படும் சிதம்பரம் தான்" அந்தத் தலம்.

நடராஜ தத்துவம் :

இறைவன் அரூபமாக எங்கும் நிறைந்திருக்கின்றான் ஆகாயமாக அண்ட வெளியாக என்பதே சிதம்பர ரகசியம், இவ்வாறு அரூபமாக உள்ள இறைவனே அரூப ரூபமாக உலகமெங்கும் லிங்க வடிவிலே காட்சி தருகின்றார், அவரே இத்தலத்திலே ரூபமாக அதுவும் ஆடுகின்ற ரூபத்திலே நமக்கு அருட்காட்சி தருகின்றார். அண்ட சராசரங்களையும் படைத்தும் காத்தும் கரந்தும் விளையாடும் எம் பெருமான் இங்கே தானே ஆடுபவராக அருட் காட்சி தருகின்றார்.அல்லலென் செயும் மருவிணையென் செயுந்

தொல்லை வல்வினை தொந்த்ந்தான் என் செயும்

தில்லை மாநகர்ச் சிற்றம்பலவனாருக்கு

எல்லையில்லாததோர் அடிமை பூண்டேனுக்கே

என்று அம்பல வாணனின் அழகிலே மயங்கிய பக்தர்கள் இயற்றியுள்ள பாடல்களை கொண்ட நூல்களை எல்லாம் சேர்த்தால் ஒரு நூலகத்தையே அமைத்து விடலாம் அவ்வளவு பாடல்கள் தில்லை நடன சபாபதியை பற்றி பாடப்பட்டுள்ளன. இறைவனுடைய பெருமைகளையெல்லாம் அந்த ஆயிரம் நாவு படைத்த ஆதிஷேஷனாலேயே முழுதும் கூற முடியாது, நான் அறிந்த சில செய்திகளை எம் ஐயனின் ஆனி உத்திர தரிசன சமயத்தின் போது உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்க்காகவே இந்தக் கட்டுரை.

நடராஜ பெருமானின் ஆனந்த தாண்டவம் முதலில் தாருகாவனத்தில்தான் நடந்தது. . தாருகாவனத்து முனிவர்கள் கடவுள் கிடையாது தாங்கள் செய்கின்ற வேள்விகளினாலேயே எல்லாபலன்களும் கிட்டுகின்றன எனவே கடவுளை வணங்க வேண்டியதில்லை என்று இறுமாந்திருந்தனர். முனி பத்தினிகளும் தங்கள் கற்பின் மேல் மிகவும் நம்பிக்கை கொண்டிருந்தனர். அகந்தை கொண்ட முனிவர்களை அஞ்ஞானத்தை போக்க எம்பெருமான் சுந்தர மூர்த்தியாகவும்(பிக்ஷ‘டணர்), மஹா விஷ்ணு மோகினியாகவும் தாருகவனத்துக்கு சென்றனர் ஐயனின் அழகைக் கண்ட முனி பத்னிகள் மதி மயங்கி, தன்னிலை இழந்து அவர் பின்னே செல்ல தொடங்கினர், முனிவர்களும், மோகினியின் மாய அழகிலே ஈர்க்கப்பட்டு அவள் பின்னே சென்றனர். பின் தாங்கள் தோல்வி அடைந்ததை உண்ர்ந்த அவர்கள் ஒரு யாகம் நடத்தி பிக்ஷாடனரையும் , மோகினியையும் கொல்ல முதலில் புலியை அனுப்பினர், அதை தோலாக்கி இடையிலே அணிந்தார் எம்பெருமான், மானின் கொம்புகளை உடைத்து அதை சாந்தமாக்கி வலக்கையிலே தாங்கினார், மழுவை இடக்கையிலே ஏந்தினார், வேள்வி குண்டத்தில் இருந்து வந்த பாம்புகள் ஆபரணமாகின, முயலகன் என்ற பூதம் அடக்கப்பட்டு காலிலே மிதிக்கப்பட்டான். வேத மந்திரங்களே ஐயனின் பாத சிலம்புகள் ஆயின. பிறகு அந்த வேள்வியியே அழித்து அந்த தீயை கையிலே எந்தி முனிவர்களின் அகந்தையை வென்ற பிறகு முதன் முதலில் ஆனந்த தாண்டவம் ஆடினார் செம்பவள மேனி எம்பெருமான் என்று புராணங்கள் கூறுகின்றன. இந்நிகழ்ச்சியே ஆனி உத்திர திருவிழாவின் போது எட்டாம் நாள் நிகழ்ச்சி பிக்ஷ‘டணர் கோலமாக நடைபெறுகின்றது.ஓரு தடவை மஹா விஷ்ணு பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் போது புன் முறுவல் பூத்தார், அப்போது அவரை தரிசித்துக் கொண்டிருந்த முப்பத்து முக்கோடி தேவர்களும், ''பெருமானே தங்கள் புன்முறுவல் பூத்ததன் காரணம் என்ன''? என்று வினவ பெருமாளும் சிவபெருமானின் ஆனந்த தாண்டவத்தை எண்ணி மகிழ்ந்து யாம் புன்னகை புரிந்தோம் என்று பதிலளித்தார். இதைக் கேட்ட பெருமாளின் பாம்பணையாம் ஆதி ஷேஷன், எம்பெருமானே யானும் சிவபெருமானின் ஆனந்த தாண்டவத்தை தரிசிக்க வேண்டும் அதற்குரிய உபாயத்தை என்று வேண்டினார். பின் விஷ்ணுவின் ஆலோசணைப்படி பூவுலகிலே வந்து தில்லை மரங்கள் நிறைந்திருந்த இச்சிதம்பரத்தில் தவம் செய்து வந்தார். இதைப் போலவே, இறைவனின் பூஜைக்காக விரைவில் வில்வ தளங்களை பறிக்க ஏதுவாக இருக்க வேண்டும் என்பதற்காக தன் கால்களை புலியின் கால்களைப் போல மாற்றிக் கொண்ட வியாக்ர பாதர் என்ற முனிவரும் தவம் செய்து வந்தார். அவர்கள் இருவருக்காகவும் வேண்டி எம் பெருமான் ஒரு தைப்பூச நந்நாளில் தனது ஆனந்த தாண்டவத்தை இருவருக்கும் காட்டி அருளினார். அவர்கள் வேண்டுகோளுக்கிணங்கி பின் தில்லையிலேயே இருந்து இன்றும் இத்தலத்தில் அவரை தரிசிப்பவர்களுக்கு முக்தி அளித்து வருகிறார்.

தில்லை காளியுடன் நடனப்போட்டியில் ஊர்த்துவ தாண்டவராக தனது காதிலிருந்து விழுந்த குண்டலத்தை தனது இடது காலால் தூக்கி மீண்டும் காதுக்கே திரும்பி கொண்டு வரும் நிலையில் வானத்தை நோக்கி காலை தூக்கி ஆட அது போல ஒரு ஆடவனின் முன்னிலையில் காளி ஆட முடியாமல் நிற்க, காளி தோல்வி அடைந்து ஊர் எல்லைக்கு சென்று விட ஐயன் இங்கேயே கோவில் கொண்டார் என்றோர் வரலாறும் உள்ளது.ஓம் என்ற பிரணவத்தின் வடிவமே நடராஜர். மாயா மலத்தை ஓட்டி, கன்ம மலத்தை சுட்டு, ஆணவ மலத்தை அதன் வலி கெடுமாறு அழுத்தி, ஆன்மாக்களை அருளாலே மேலே தூக்கி ஆனந்தக்கடலிலே மூழ்கியிருக்கச் செய்வதே இறைவன் ஆடும் தாண்டவத்தின் கருத்தாகும். எம் ஐயனின் திரு உருவம் அவர் ஐந்தொழில்களையும் புரிவதை குறிக்கின்றது.

அம்பல வாணனின் ஆறு திருமுழுக்குகள்:

அத்தனை முப்பத்து முக்கோடி தேவர்க்கதிபதியை

நித்தனை அம்மை சிவகாம சுந்தரி நேசனை எம்

கத்தனை பொன்னம்பலத்தாடும் ஐயனை காண

எத்தனை கோடி யுகமோ தவம் செய்திருக்கின்றவே - பட்டினத்தார்

பூலோக வாசிகளாகிய நம்முடைய ஒரு வருடமே தேவர்களுக்கு ஒரு நாள், தேவர்கள் செய்கின்ற ஆறு கால பூஜைதான் தில்லை மாநகர்ச் சிற்றம்பலவனார்க்கு நம் ஒரு வருடத்தில் நடைபெறும் ஆறு திருமுழுக்குகள் ஆகும். அவையாவன

1. உஷ்த் காலம் : , மார்கழி திருவாதிரை : அருணோதய காலம்

2. காலை சந்தி : மாசி வளர் பிறை சதுர்த்தசி : நண் பகல்

3. உச்சிக்காலம் : சித்திரை திருவோணம் : நண் பகல்

4. சாய ரட்சை : ஆனி உத்திரம் : அருணோதய காலம்

5.இரண்டாம் காலம் : ஆவணி வளர் பிறை சதுர்த்தசி : நண் பகல்

6. அர்த்த ஜாமம் : புரட்டாசி வளர் பிறை சதுர்த்தசி : நண் பகல்
இந்த ஆறு நாட்கள் திருமுழுக்களின் போது மட்டுமே நாம் மஞ்சாடும் மங்கை மணாளனை சிற்றம்பலத்தை விடுத்து வெளியே தரிசிக்க முடியும்.மற்ற நாட்கள் தில்லை கூத்தனின் திரு மேனிக்கு அபிஷேகம் கிடையாது, காலையிலும், மாலையிலும் ஆதி சங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்படிக லிங்கத்திற்க்கும், காலை சந்தி நேரத்தில் ரத்ன சபாபதிக்கும் தான் நித்ய அபிஷேகம் நடைபெறுகின்றது. . மார்கழித் திருவாதிரை மற்றும் ஆனி உத்திரம் இரண்டும் பத்து நாள் திருவிழாக்கள் ஆகும். மற்ற நான்கு திருமுழுக்களும் மற்ற சிவாவாலயங்களிலெல்லாம் நண் பகலில் நடை பெற்றாலும் திருமூலட்டானம் என்பதால் தில்லையில் மட்டும் சாய ரட்சை பொற் சபையில் நடைபெறுகின்றது.

ஆனி திருமஞ்சன திருவிழா :

ஆனி உத்திர திரு விழா முதல் நாள் கொடியேற்றத்துடன் தொடங்குகின்றது . இரவிலே அம்மையும் அப்பனும் தங்க மற்றும் வெள்ளி மஞ்சங்களிலே திருவீதி உலா வருகின்றனர். தினமும் காலையில் பஞ்ச மூர்த்திகளின் திருவீதி உலா நடை பெறுகின்றது. ஸ்ரீ விநாயகர் மூஷ’க வாகனத்திலும், என் அம்மை சிவானந்தநாயகி அன்ன வாகனத்திலும், முருகப்பெருமான் மயில் வாகனத்திலும், சண்டிகேஸ்வரர் ரிஷப வாகனத்திலும் சேவை தர, எம் ஐயன் 2ம் நாள் வெள்ளி சந்திரப் பிறையிலும், 3ம் நாள் தங்க சூர்யப் பிறையிலும், 4ம் நாள் வெள்ளி பூத வாகனத்திலும், 5ம் நாள் வெள்ளி ரிஷப வாகன தெருவடைச்சான் சப்பரத்திலும், 6ம் நாள் வெள்ளி யாணை வாகனத்திலும், 7ம் நாள் தங்க கைலாய வாகனத்திலும் அருட் காட்சி தந்து அருளுகின்றார். 8ம் நாள் பிக்ஷ‘டண மூர்த்தி சுந்தரர் கோலத்தில் கழுத்தில் பாம்பு தொங்க கையில் உடுக்கை ஏந்தி தோளிலே சூலம் ஏந்தி தங்க ரதத்தில் எழிற் கோலம் காட்டுகின்றார். இன்றைய தினம் சித்சபையிலே நடராஜப் பெருமான் மற்றும் சிவக்கம சுந்தரியின் முக தரிசனம் மட்டுமே கிடைக்கும். 9ம் நாள் காலை நம்மை எல்லாம் உய்விக்க எம் கோனும் எங்கள் பிராட்டியும் சித்சபையை விடுத்து திருத்தேருக்கு எழுந்தருளுகின்றனர். பஞ்ச மூர்த்திகளுடன் மஹா ரதோற்சவம் கண்டருளி இரவு ராஜ சபையாம் ஆயிரங்கால் மண்டபத்தின் முகப்பு மண்டபத்தில் ஏக தின லக்ஷ்சார்ச்சனையும் கொண்டருளுகின்றார்.

ராஜ சபை என்னும் ஆயிரம் கால் மண்டபம்(Thousand Pillared Hall)

ஆனி உத்திரத்தன்று அருணோதய காலத்தில் தேர் வடிவிலே யானைகள் இழுப்பது போல் அமைக்கப்பட்டுள்ள ராஜ சபையின் முன் மண்டபத்திலே ஸ்ரீமத் ஆனந்த நடராஜருக்கும், சிவகாம சுந்தரிக்கும் மஹா அபிஷேகம் நடைபெறுகின்றது, பால், தயிர், தேன், பழ ரசங்கள், பஞ்சாமிர்தம் அனைத்தும் நதியாகவே பாய்கின்றன எம் அய்யனுக்கும் அம்மைக்கும். அம்மையப்பரின் அபிஷேகம் மிகவும் கிடைத்தற்கரிய காட்சி. அதுவும் ஒவ்வொரு அபிஷேகம் முடிந்த பின்னர், அம்மையப்பரின் திருமுகத்தில் ஏற்படுகின்ற பளபளப்பை பார்த்தாலே போதும் நம்து துன்பங்கள் எல்லாம் விலகி ஓடும். பின்னர் சர்வ அலங்காரத்துடன், எம் பெருமான் ராஜ சபையிலே ராஜாவாக திருவாபரண காட்சி தந்தருளுகின்றார் சிற்றம்பலவனார். சித் சபையிலே ரகசிய பூஜையும் நடைபெறுகின்றது. பின் தீர்த்த வாரி கண்டருளிய பஞ்ச மூர்த்த்’களுடன் ஆனி திருமஞ்சன மஹா தெரிசனம் தந்தருளி கோவிலை ஆனந்த தாண்டவத்துடன் வலம் வந்து ஞானாகாசா சித்சபா பிரவேச தரிசனமும் தந்தருளுகின்றார். இந்த இரண்டு நாட்கள் மட்டுமே எம்பெருமானின் ஜடா முடியை நாம் காண இயலும் எம் ஐயனின் இத்திருக்கோலத்தைக் காண உண்மையிலேயே நம் கண்கள் மேலே பட்டினத்தடிகள் கூறியது போலே கோடி யுகங்கள் தவம் செய்திருக்க வேண்டும் . சடோப பூசனைகள் முடித்து "ஆனந்த தாண்டவத்துடன்" பஞ்ச மூர்த்திகளுடன் கோவிலைச்சுற்றி வலம் வந்து என் ஐயன் சிற்றம்பலத்திற்க்கு எழுந்தருளூகின்றார். தரிசனத்தை காண்பதற்க்கு கூடிம் மக்கள் கூட்ட்ம் தான் எத்தனை கோவிலின் உள்ளே நிற்பதற்க்கு கூட் இடம் இருக்காது, ஆண்டுக்கு இரண்டு முறை மட்டுமே அம்மை சிவகாமி நேசணை வெளியே தரிசிக்க முடியும் என்பதால் அவ்வளவு கூட்டம். 11ம் நாள் முத்துப் பல்லக்கு விழாவுடன் ஆனி திருமஞ்சன மஹோத்சவம் இனிதே முடிவடைகின்றது.வில்லை வட்டப் படவாங்கி அவுணர் தம்

வல்லை வட்ட மதில் மூன்றுடன் மாய்த்தவன்

தில்லை வட்டந் திசை கை தொழுவார் வினை

ஒல்லை வட்டங் கடந்தோடுடல் உண்மையே

என்று அப்பர் பெருமான் கூறியது தில்லை திசை நோக்கி தொழுதாலே நம் வினைகளை எல்லாம் நீக்கும் எங்கள் பிரான் தானாக வெளியே வந்து அருட்காட்சி தரும் போது சென்று தரிசித்தால் நமக்கு எல்லா நன்மைகளைகளையும் வழங்காமல் விடுவாரா. எனவே கிளம்பி விட்டீர்களா ஐயனின் ஆனி உத்திர தரிசினத்தை காண.

திருச்சிற்றம்பலம்

* * * * * *

2 comments:

kalyanji said...

ஆடல்வல்லானின் அருளை
பறைசாற்றும் அருமையான
இணையதளம்.மென்மேலும்
இதுபோன்ற ஆன்மீக கட்டுரைகள்
அடங்கிய தொடர வாழ்த்துக்கள்

ஒரேஒரு திருத்தம்
திதிகளின் பெயர்கள்
தவறாக உள்ளது
சதுர்த்தி திதி அல்ல
சதுர்த்தசி திதி

Kailashi said...

நன்றி. தவறை திருத்தி உள்ளேன். ஆருத்ரா தரிசனத்தின் போது மீண்டும் வரவும்.

மற்ற பிளாக்களையும் காணவும்.