Wednesday, December 19, 2007

ஆருத்ரா தரிசனம் - 5

தில்லையில் ஆருத்ரா தரிசனம்



பொன்னம்பலம்




மானிடர்களாகிய நம்முடைய ஒரு வருடம் தேவர்களுக்கு ஒரு நாளாகும் அவர்கள் செய்கின்ற ஆறு கால பூசையே அம்பலவாணருக்கு வருடத்தில் நடைபெறுகின்ற ஆறு திருமுழுக்குகள் ஆகும். தேவர்களின் பிரம்ம முகூர்த்தமான, மாதங்களில் சிறந்ததான மார்கழியின் மதி நிறைந்த நன்னாளம் பௌர்ணமியும் திருவாதிரையும் சேர்ந்து வரும் இந்த நாளில் வரும் திருவாதிரை தினம் தான் நடராசப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்களூம் அலங்காரங்களும் திருவிழாக்களும் நடைபெறும் தினமாகும். அன்று தான் சிவ பெருமானின் ஆனந்த தாண்டவத்தை காண விரும்பிய பதஞ்சலிக்கும், வியாக்ரபாதருக்கும் அவர்களின் தவத்திற்கு மகிழ்ந்து நடராஜ பெருமானாக தனது ஆனந்த தாண்டவத்தை காட்டியருளினார் என்பது ஐதீகம். எனவே திருவாதிரையன்று அம்பல வாணாருக்கு எனவே இந்த திருவாதிரை நாள் அவர்களின் உஷத் கால பூஜையாகும்.

தில்லை அம்பல ஆனந்த தாண்டவ நடராஜர்
எம்பெருமானின் பஞ்ச சபைகளுள் முதலாவதான கனக சபையாம் தில்லை சிற்றம்பலத்தில் இத்திருவிழா பத்து நாள் பெருவிழாவாகக் கொண்டாடப்படுகின்றது. முதல் நாள் கொடியேற்றத்துடன் தொடங்குகின்றது . இரவிலே அம்மையும் அப்பனும் தங்க மற்றும் வெள்ளி மஞ்சங்களிலே திருவீதி உலா வருகின்றனர். தினமும் காலையில் பஞ்ச மூர்த்திகளின் திருவீதி உலா நடை பெறுகின்றது. ஸ்ரீ விநாயகர் மூஷ’க வாகனத்திலும், என் அம்மை சிவானந்தநாயகி அன்ன வாகனத்திலும், முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் மயில் வாகனத்திலும், சண்டிகேஸ்வரர் ரிஷப வாகனத்திலும் சேவை தர, ஐயன் 2ம் நாள் வெள்ளி சந்திரப் பிறையிலும், 3ம் நாள் தங்க சூர்யப் பிறையிலும், 4ம் நாள் வெள்ளி பூத வாகனத்திலும், 5ம் நாள்வெள்ளி ரிஷப வாகன தெருவடைச்சான் சப்பரத்திலும், 6ம் நாள் வெள்ளி யாணை வாகனத்திலும், 7ம் நாள் தங்க கைலாய வாகனத்திலும் அருட் காட்சி தந்து அருளுகின்றார். 8ம் நாள் பிக்ஷ‘டண மூர்த்தி சுந்தரர் கோலத்தில் கழுத்தில் பாம்பு தொங்க கையில் உடுக்கை ஏந்தி தோளிலே சூலம் ஏந்தி சுந்தர மூர்த்தியாக தங்க ரதத்தில் வெட்டுங்குதிரை எழிற் கோலம் காட்டுகின்றார். இன்றைய தினம் சித்சபையிலே நடராஜப் பெருமான் மற்றும் சிவகாம சுந்தரியின் முக தரிசனம் மட்டுமே கிட்டும். 9ம் நாள் காலை எம் கோனும் எங்கள் பிராட்டியும் சித்சபையை விடுத்து திருத்தேருக்கு எழுந்தருளுகின்றனர். பஞ்ச மூர்த்திகளுடன் மஹா ரதோற்சவம் கண்டருளி இரவு ராஜ சபையாம் ஆயிரங்கால் மண்டபத்தின் முகப்பு மண்டபத்தில் ஏக தின லக்ஷ்சார்ச்சனையும் கண்டருளுகின்றார். மூல மூர்த்தியாக உள்ள இறைவனே உற்சவ மூர்த்தியாக வீதி உலா காண்பது சிதம்பரம் ஆலயத்தின் தனி சிறப்பு. மூலவரை தரிசிக்க முடியாதபடி உடல்குறை உள்ளவர்களும் அல்லது வயோதிகம் கொண்டவர்களும் உற்சவர் பிரம்மோற்சவ காலங்களிலும் மற்ற திருவிழாக்க்காலங்களிலும் தம் வீடு இருக்கும் தெருவழியே செல்லும் போது உற்சவரை கண்டு களிப்பது வழக்கம். அதாவது உற்சவர் கோலத்தில் மூலவரை தமது இல்லத்தில் இருந்தே கண்டு தரிசிப்பர். ஆனால் சிதம்பரத்தில் அத்தகைய பக்தர்களுக்கு மூலவரையே தரிசிக்கும் பாக்கியம் கிடைப்பது பெறும் பேறுதானே! அதுவும் எம்பெருமானின் ஜடா முடியை இந்த இரு நாட்கள் மட்டுமே கண்டு தரிசனம் செய்ய முடியும். தினமும் மாலையில் தேவ சபையிலிருந்து மாணிக்க வாசகர் சித்சபைக்கு எழுந்தருளி திருவெம்பாவை பதிகங்களை விண்ணப்பித்து அருளுகின்றார் அப்போது ஓதுவார்கள் பாராயணம் செய்ய அனைத்து பக்தர்களும் கூடவே திருவெம்பாவையை பாராயணம் செய்கின்றனர். ஒவ்வொரு பாடலின் முடிவிலும் அண்டர் நாயகனுக்கு தீபாராதனை காட்டப்படுகின்றது. பின் மாணிக்க வாசகர் தேவ சபைக்கு திரும்புகிறார். காலை உற்சவத்தில் மாணிக்க வாசகரும் எழுந்தருளுகின்றார். ஆருத்ரா தரிசனம் முடிந்தவுடன் மாணிக்க வாசகருக்கும் தீபாராதாணை காட்டப்படுகின்றது. சுவாமிக்கு விடையாற்றி உற்சவம் முடிந்தத்ற்கு அடுத்த நாள் மாணிக்கவாசகருக்கு விடையாற்றி விழா நடைபெறுகின்றது.


பத்தாம் நாள் திருவாதிரையன்று அருணோதய காலத்தில், பிரம்ம முகூர்த்தத்தில் தேர் வடிவிலே யானைகள் இழுப்பது போல் அமைக்கப்பட்டுள்ள ராஜ சபையின் முன் மண்டபத்திலே ஸ்ரீமத் ஆனந்த நடராஜருக்கும், சிவகாம சுந்தரிக்கும் மஹா அபிஷேகம் நடைபெறுகின்றது, பால், தயிர், தேன், பழ ரசங்கள், பஞ்சாமிர்தம், விபூதி , சந்தனம் அனைத்தும் நதியாகவே பாய்கின்றன அய்யனுக்கும் அம்மைக்கும். அம்மையப்பரின் அபிஷேகம் மிகவும் கிடைத்தற்கரிய காட்சி. அதுவும் ஒவ்வொரு அபிஷேகம் முடிந்த பின்னர், அம்மையப்பரின் திருமுகத்தில் ஏற்படுகின்ற பளபளப்பை பார்த்தாலே போதும் நம் துன்பங்கள் எல்லாம் விலகி ஓடும். பின்னர் சர்வ அலங்காரத்துடன், எம் பெருமான் ராஜ சபையிலே ராஜாவாக திருவாபரண காட்சி தந்தருளுகின்றார் சிற்றம்பலவனார். சித் சபையிலே ரகசிய பூஜையும் நடைபெறுகின்றது. பின் தீர்த்த வாரி கண்டருளிய பஞ்ச மூர்த்த்’களுடன் ஆருத்ரா மஹா தரிசனம் தந்தருளி கோவிலை ஆனந்த தாண்டவத்துடன் வலம் வந்து ஞானாகாசா சித்சபா பிரவேச தரிசனமும் தந்தருளுகின்றார். ஆருத்ரா தரிசனத்தை காண்பதற்கு கூடும் மக்கள் கூட்ட்ம் தான் எத்தனை கோவிலின் உள்ளே நிற்பதற்க்கு கூட இடம் இருக்காது. 11ம் நாள் முத்துப் பல்லக்கு விழாவுடன் மஹோத்சவம் இனிதே முடிவடைகின்றது. ஆனி உத்திரமும் பத்து நாள் பெருவிழா என்றாலும் மாணிக்க வாசகர் திருவெம்பாவை பாராயணமும், பின்னர் சித்சபைக்கு திரும்பும் போது கோவிலுக்குள் சிறப்பு நடனமும், ஆருத்ரா தரிசனத்தின் போது மட்டுமே நடைபெறுகின்றது.

ஆருத்ரா தரிசனம் - 4

சென்ற வருட ஆருத்ரா தரிசன காட்சிகள் -2005
சென்னை கோடம்பாக்கம் இரயிலடிசௌந்த்ர விநாயகர் ஆலயம்
பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு
விநாயகர்




நடராஜர் தேர் முன்னழகு


நடராஜர் தேர் பின்னழகு



சிவகாம சுந்தரி தேர் முன்னழகு

சிவகாம சுந்தரி தேர் பின்னழகு


மயில் வாகனத்தில் முருகர்

சண்டிகேஸ்வரர்
இந்த தேர்களைப் பற்றிய விளக்கத்தை இன்னொரு இடுகையில் காண்போம்.

    சென்னை வடபழனி வேங்கீஸ்வரர் ஆலயம்




சென்னை சைதாப்பேட்டை செங்குந்தக் கோட்டம்


நடராஜப் பெருமான்

சிவகாம சுந்தரி






சண்முகர்


Friday, December 14, 2007

ஆருத்ரா தரிசனம் - 3

கொடிக்கவி பெற்ற வரலாறு



ஆருத்ரா தரிசன விழா பத்து நாள் விழாவாக வெகு சிறப்பாக தில்லையிலே நடைபெறுகின்றது. முதல் நாள் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்குகின்றது. ஆருத்ரா தரிசனத்தின் போது ஒரு சமயம் உமாபதி சிவாச்சாரியாரின் பெருமையை உலகத்தோர்க்கு உணர்த்த எம்பெருமான் ஒரு அற்புதத்தை நிகழ்த்தினார் அதன் மூலம் நமக்கு கொடிக் கவி கிடைத்தது அந்த வரலாற்றை பார்ப்போமா?






கொடிக்கவி பெற்ற வரலாறு உண்மையான பக்தி ஒன்றத்தான் நம்மிடம் இறைவன் எதிர்பார்க்கிறார் என்பதை உணர்த்திய வரலாறு இதோ. நாம் அவர்களுள் ஒருவர் என்று எம்பெருமனாலேயே திருவாய் மலந்தருளப் பெற்ற தில்லை வாழ் அந்தணர்களுள் ஒருவராக பிறந்தார் உமாபதி சிவம். இவர் ஆரியமும் žரிய தமிழும் பயின்று ஆனந்த கூத்தருக்கு நாள் தோறும் சித்சபையிலே முறையாக பூஜை செய்து வந்தார். திரு மறை ஞான சம்பந்த சிவாசிரிய சுவாமிகளை இவர் குருவாக ஏற்றுக் பூஜை காண்டதால் மற்ற அந்தணர்கள் இவர் மேல் அசூயை கொண்டனர் எனவே இவரை சிற்றம்பலத்தில் பூஜை செய்ய அனுமதிக்கவில்லை. அவரும் சிதம்பரத்தை விட்டு விலகி கொற்றவன் குடிக்கு சென்று குடில் அமைத்து அங்கே எம்பெருமானுக்கு ஆத்மார்த்த பூசை செய்து வரலானார். மற்ற அந்தணர்களுக்கு ஒரு பாடம் புகட்ட விரும்பிய மன்றில் ஆடுவார் திருவாதிரை நாளின் முதல் நாளான துவஜாரோகணத்தன்று அவர்கள் கொடி ஏற்றிய போது கொடி ஏறாமல் செய்தார். அவர்கள் எவ்வளவு முயன்றும் கொடி ஏறவில்லை. பின் அசரீரியாக சித்சபேசர் " நாம் கொற்றவன் குடியிலுள்ள எம் அடிமைத் தொண்டனாகிய உமாபதி சிவாச்சாரியாருடைய பூசை பெட்டகத்தே எழுந்தருளி அவரது பூசனைகளை ஏற்று வருகிறோம் அவரை அழைத்து வந்து துவஜாரோகணம் செய்யுங்கள் என்று கூறியருளினார். தங்களது தவற்றை உணர்ந்த அவர்கள் கொற்றவன்குடி சென்று உமாபதி சிவாச்சாரியாரை தக்க மரியாதையுடன் அழைத்து வந்தனர்.


ஒளிக்கும் இருளுக்கும் ஒன்றே இடம் ஒன்று மேல் இடில் ஒன்று
ஒளிக்கும் எனினும் இருள் அடராது உள் உயிர்க்கு உயிராய்த்
தெளிக்கும் அறிவு திகழ்ந்து உளதேனும் திரிமலத்தே
குளிக்கும் உயிர் அருள்கூடும் படாகொடி கட்டினனே


என்று தொடங்கி அவர் வந்து கொடிக்கவி பாடியவுடன் கொடியும் ஏறியது தன் அன்பனின் உணமையான பக்தியையும் உலகுக்கு உணார்த்தினார் எம்பெருமான். எல்லா சிவஸ்தலங்களிலும் இதனால்தான் இன்றும் பெருவிழாவின் கொடியேற்றத்தின் போது கொடிக்கவி பாடப்படுகின்றது.

ஆருத்ரா தரிசனம் - 2

திருவாதிரை நட்சத்திரம்


திருவாரூர் ஆலயத்தின் அற்புத ஓவியம்
Beautiful Mural of Nataraja at Tiruvarur Temple


முதலில் மார்கழி மாதத்தின் சிறப்புகளைப் பார்த்தோம். இன்று ஆருத்ரா தரிசனம் நடைபெறும் திருவாதிரை நட்சத்திரத்தின் சிறப்புகளைப் பற்றி பார்ப்போம். நட்சத்திரங்கள் மொத்தம் 27 அவையாவன கார்த்திகை, ரோகிணி, மிருகசீருஷம், திருவாதிரை, புனர்பூசம், பூசம், ஆயில்யம், மகம், பூரம், உத்திரம், ஹஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம், அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம், திருவோண, அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி, அசுபதி, பரணி ஆகியன. இவற்றுள் இரண்டு நட்சத்திரத்திற்கு மட்டுமே நாம் திரு என்னும் அடைமொழியிட்டு அழைக்கின்றோம், அவை திருவாதிரை மற்றும் திருவோணம் ஆகும். இந்த இரு நட்சத்திரங்களுக்கு மட்டும் இந்த சிறப்பு ஏன்?

ஆதியும் அந்தமும் இல்லாத அருட்பெருஞ்சோதியான எம்பெருமான் ஓருருவம் ஓர் நாமம் இல்லாதவர் ஆனால் நாமோ அவருக்கு ஆயிரம் நாமம் இட்டு அழைத்தும், பல்வேறு மூர்த்தங்களாக அமைத்தும் வழிபடுகின்றோம். மேலும் மானிட இயல்பினால் அந்த எல்லையில்லாத பரம்பொருளை இரவு பள்ளியறைக்கு எழுந்தருளப் பண்ணியும், காலையில் திருப்பள்ளியெழுச்சி பாடி எழுப்பியும் மகிழ்ச்சி கொள்கின்றோம். அவ்வாறே அவருக்கு ஒரு நட்சத்திரத்தையும் உரியதாக்கினோம். ஆம் இறைவன் சிவன் செம்பவள மேனி வண்ணன் என்பதனால் அவரை சிவப்பு நட்சத்திரமான திருவாதிரைக்கு உரியவனாக்கி அவரை திருவாதிரையான் என்றும் அழைத்தும் அந்த திருவாதிரையன்று, ஆடும் அந்த அம்பலக்கூத்தனை சிறப்பாக வழிபடவும் செய்கின்றோம், திருவோணத்தை திருமாலுக்கு உரியதாகவும் ஆக்கினோம். எம்பெருமான் தன் நெற்றிக்கண்ணால் மன்மதனை அழித்தார் என்பது புராணம். ஆனால் இன்றும் தனுசு இராசியின் நட்சத்திர தொகுதியே மன்மதன். கீழ் வானத்தில் ஆருத்ரா நட்சத்திரம் எழுந்தால் மேற்கே தனுசு நட்சத்திரம் மறைவது இதைத்தான் உணர்த்துகின்றதோ?




திருவாதிரை அன்று நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் எல்லா சிவத்தலங்களிலும் உண்டு, அது போலவே எம்பெருமான் உருவமாக எழுந்தருளியுள்ள எல்லா தலங்களிலும் அபிஷேகம் உண்டு ( சப்த விடங்க தலங்கள், அஷ்ட வீரட்டத்தலங்கள், தொண்டை மண்டல தியாகத் தலங்கள்). திருவாரூரில் இடது பாத தரிசனம், உத்திரகோச மங்கையில் மரகத நடராஜர் அபிஷேகம் மற்றும் நிஜ தரிசனம் என்று சொல்லிக் கொண்டே போகலாம்.

எம்பெருமான் சிவபெருமானுக்கு உரிய விரதங்கள் எட்டு என்று ஸ்கந்த புராணத்தில் கூறப்பட்டுள்ளன. அவையாவன 1, விருச்சிக மாத ( கார்த்திகை) சோமவார விரதம், 2. கார்த்திகை பௌர்ணமி -உமா மஹேஸ்வர விரதம், 3. தனுர் மாத (மார்கழி) திருவாதிரை விரதம், 4.தைப்பூச சூல விரதம், 5. மாசி மாத மஹா சிவராத்திரி விரதம், 6. பங்குனி உத்திர கல்யாண விரதம், 7.வைகாசி அஷ்டமி ரிஷப விரதம், 8. ஐப்பசி கேதார விரதம் ஆகியவை ஆகும். இவ்வாறு ஆருத்ரா தரிசன நாள் சிவபெருமானுக்கு மிகவும் பிரீதியான அஷ்ட மஹா விரத நாள் ஆகும்.

நாளை காலை கொடியேற்றத்துடன் ஐயனின் ஆருத்ரா தரிசனப் பெருவிழா தில்லையில் தொடங்குகின்றது அதையொட்டி ஆருத்ரா தரிசனம் தொடர்பான பல்வேறு தகல்வகளையும் சென்ற வருடங்கள் தரிசித்த அம்மையப்பரின் அருட் கோலங்களையும் வழங்க உள்ளேன் தவறாமல் வந்து தரிசித்து விட்டு செல்லவும்.




படைக்கலமாக வுன்நாமத்
தெழுத்ததைஞ்சு என் நாவிற் கொண்டேன்
இடைக்கல மல்லேன் எழு பிறப்பும்
உனக்காட் செய்கின்றேன்
துடைக்கிலும் போகேன் தொழுது
வணங்கித் து‘நீறணிந்துன்
அடைக்கலம் கண்டாய் அணி
தில்லைச் சிற்றலம்பலத் தரனே
.

சரணாகதி தத்துவத்தையும் கர்ம வினையின் பயனாக எத்தனை ஜன்மங்கள் எடுத்தாலும் அவனே துணை, ஐந்தெழுத்து, திருநீறு , வழிபாடு ஆகியவற்றின் பெருமை கூறும் பாடலைப் பாடி அந்த எம்பெருமான் அருள் பெறுவோமாக.

Thursday, December 13, 2007

ஆருத்ரா தரிசனம் -1


மார்கழி மாதத்தின் சிறப்பு



ஐயன் ஆருத்ரா தரிசனம் தந்தருளும் நாள் மார்கழித் திருவாதிரை. மார்கழி மாதத்தின் சிறப்புகளை முதலில் காண்போம். நமது மனித நாளில் காலை 4 மணி முதல் 6 மணிவரையான காலம் பிரம்ம முகூர்த்தம் என்றழைக்கப்படுகின்றது. சூரிய உதயத்திற்கு முந்தைய இந்தக் காலம் இறைவனை வணங்குவதற்கும், யோக சித்திக்கும் உகந்த நேரம் என்பதை உணர்ந்த நம் முன்னோர்கள் அதிகாலை துயிலெழுவதை ஒரு வழக்கமாக்கிக் கொள்ள வலியுறுத்தினர். நம்முடைய ஒரு வருடம் தேவர்களுக்கு ஒரு நாள் ஆகும். ஆகவே தேவர்களுடைய சூரிய உதயமான உத்தராயண காலத்திற்கு(தை மாதம்) முந்திய மார்கழி மாதம் தேவர்களின் பிரம்ம மூர்த்தமான காலமே மார்கழி மாதம். தேவர்கள் செய்யும் ஆறு கால பூஜையின் உதய கால பூஜையே திருவாதிரை பூஜையாகும்.


எல்லோரும் நினைப்பது போல மார்கழி மாதத்தில் வேறு நிகழ்ச்சிகள் எதுவும் நடத்தாமல் இருப்பதற்கு காரணம் வேறு எதைப் பற்றியும் நினைக்காமல் அந்த இறைவனை மட்டுமே நாம் நினைக்க வேண்டும் என்பதற்காகத்தான், தெய்வ காரியங்களுக்காகவே ஏற்பட்ட மாதம் மார்கழி மாதம். அதனால் இந்த மாதம் முழுவதும் அனைத்து ஆலயங்களிலும் பிரம்ம முகூர்த்தத்தில் தனுர் மாத பூஜை சிறப்பாக நடைபெறுகின்றது. பாவை நோன்பைக் கொண்டாடுவதும் இந்த மாதத்தில்தான். எனவே தான் சிவத்தலங்களில் திருவெம்பாவையும், வைணவத் தலங்களில் திருப்பாவையும் சேவிக்கப்படுகின்றன.


தட்சாயண காலத்தின் கடைசி மாதம் மார்கழி, ருதுவில் இது ஹேமந்த ருது. தனுர் மாதம் என்றும் அழைக்கப்படுகின்றது. வேத ஞானத்தின் மணி முடியாகத் திகழும் ஸ்ரீமத் பகவத் கீதையில் "மாஸானாம் மார்கசீர்ஷோ அஹம்" அதாவது "மாதங்களில் நான் மார்கழி" என்று கிருஷ்ண பரமாத்மா கூறுகின்றார். இம்மாதத்தில் தான் பௌதீக நிலையின் அறியாமையிலிருந்து மனித குலத்தை விடுவிக்க அர்ஜ"னனுக்கு ஸ்ரீ கிருஷ்ணர் கீதோபதேசம் செய்தார்.


மார்கழி மாதத்தில் ஆருத்ரா தரிசனமும், வைகுண்ட ஏகாதசியும் கொண்டாடப்படுகின்றது. சிவ பெருமானின் நட்சத்திரமாக கருதப்படுவது திருவாதிரை என்னும் ஆதிரை தரிசனம் அன்றைய தினம் தேவர்களின் பூஜையினால் மனம் மகிழ்ந்த நடராஜப் பெருமான் தமது ஆனந்த தாண்டவத்தை காட்டியருளிகின்றார். அனைத்து சைவத் தலங்களிலும் இன்றைய தினம் நடராஜப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகின்றது.


பல சைவத்தலங்களில் இவ்விழா பத்து நாள் விழாவாகக் கொண்டாடப்படுகின்றது. விரதங்களில் சிறந்தது ஏகாதசி விரதம், மார்கழி மாத ஏகாதசி விரதம் வைகுண்ட ஏகாதசி என்றும், முப்பத்து முக்கோடி ஏகாதசியென்றும் போற்றப்படுகின்றது. பல வைணவ தலங்களில் வைகுண்ட ஏகாதசியை ஒட்டி அத்யயனோற்சவம் நடைபெறுகின்றது.


மார்கழி அமாவாசையன்று அனுமத் ஜெயந்தி தினம். அநுமனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றது வடை மாலை அலங்காரம் புறப்பாடு என்று சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. . மார்கழி மாத முதல் புதன் கிழமை குசேலர் தினமாக கொண்டாடப்படுகின்றது. மார்கழி 27ம் நாள் கூடாரவல்லி, பாவை நோன்பு வெற்றி பெற்றதால் அந்த ஆண்டவனுடன் கூடியதை கொண்டாட மூட நெய் பெய்து முழங்கை வழி வார சக்கரை பொங்கல் படைத்துக் கொண்டாடும் நாள். மார்கழி நிறை நாள் போகிப் பண்டிகை வைணவத் தலங்களில் ஆண்டாள் திருக்கல்யாணம். இந்திரனின் ஆணவத்தை அடக்க ஸ்ரீ கிருஷ்ணர் கோவர்த்தன மலைக்கு படையல் படைத்ததாக ஐதீகம்.


பாவை நோன்பை மேற்கொண்டு திருப்பாவை பாடிய ஆண்டாளுக்கு இம்மாதம் எண்ணெய்க் காப்பு உற்சவம் நடைபெறுகின்றது, பல்வேறு மூலிகைகள் சேர்த்து எண்ணெய் காய்ச்சப்படுகின்றது. இந்த உற்சவத்தின் போது ஸ்ரீ ஆண்டாள் தினமும் காலையில் ஸ்ரீநிவாசர், சுந்தரராஜர், பெரிய பெருமாள்,வடபத்ரசாயி பே'ன்ற கோலங்களில் எழுந்தருளுகின்றார். நீராட்டம் முடிந்து அலங்காரத்தின் போது மூக்குத்தியை பட்டர்கள் கொண்டு செல்லும் போது அது டக் என்று ஒட்டிக் கொள்ளுமாம்.


திருவண்ணாமலையில் திருவெம்பாவை பாடிய மாணிக்கவாசகருக்கும் ஆவுடையார் கோவிலில் பத்து நாள் திருவிழா சிறப்பாக நடைபெறுகின்றது.


இம்மாதத்தில் அதிகாலையில் எழுந்து வீட்டின் முன்னர் பிரம்மாண்டமான கோலங்களை இடுகின்றனர் பெண்கள். மார்கழிப் பனி நாளில் அதிகாலையில் ஒஜோன் அதிகமாக இருக்கின்றதாம். அதுவும் ஒரு காரணமோ நமது முன்னோர்கள் இவ்வாறு நம்மை அதிகாலை எழுந்து இறைவழிபாடு செய்ய சொல்லியதற்கு. கொங்கு மண்டலத்தில் அந்த தெருவை அடைத்து போடப்பட்ட கோலங்களில் பசுஞ்சாணத்தினால் பிள்ளையார் வைத்து அதில் மலர்களை சொருகி வைத்து அழகு படுத்துவோம். நாங்கள் சிறுவர்களாக இருந்த காலத்தில் மரங்களில் ஏறி பூவரசம் பூ பறித்ததையும், தோட்டங்களில் சென்று பூசணிப் பூ பறித்ததையும், குப்பை மேட்டில் சென்று ஊமத்தை பூ பறித்ததையும், பங்களாக்களில் இருந்து செம்பருத்திப் பூ பறித்ததையும் இன்று என் பிள்ளைகள் அனுபவிக்கவில்லை, சென்னையில் பிளாட்(flat)களில் கோலமே பெரிது அதில் பிள்ளையார் எங்கே. தினமும் போட்டிதான் யார் வீட்டில் பெரிய அழகான கோலம், அதிக பிள்ளையார் என்று. அந்த பிள்ளையார்களை வீட்டின் கூரை மேல் எடுத்து போட்டு வருவோம். காணும் பொங்கலன்று அந்த பிள்ளையார்கள் அனைத்தையும் ஒரு கூடையில் பெண்கள் எடுத்து தலையில் வைத்து எடுத்து சென்று வாய்க்காலில் போட்டுவிட்டு வருவார்கள் , நாங்கள் அனைவரும் அவர்களுடன் பாட்டுப் பாடிக் கொண்டே கூடச் செல்வோம்.


அதிகாலை எழுந்து பச்சை தண்ணிரில் குளித்து விட்டு திருப்பாவை, திருவெம்பாவை புத்தகத்தை எடுத்துக் கொண்டு பிரசண்ட விநாயாகர் கோவிலுக்கு ஓடுவோம். திருப்பாவை, திருவெம்பாவை, திருப்புகழ், சிவ புராணம் ஆகியவற்றை பாராயணம் செய்த பின் பிரசாதம் வாங்கிக் கொண்டு இல்லம் திரும்புவோம். ஒப்புவித்தல் போட்டியும் நடைபெறும் பரிசுகளும் உண்டு. சிவ புராணம் முழுவதையும் மனப்பாடம் செய்தது அப்போதுதான். பொங்கலுன்று பரிசளிப்பு விழா நடைபெறும். அது ஒரு கனாக் காலம்.

Saturday, December 8, 2007

நடராஜ தத்துவம்


நடராஜ தத்துவம்
கொடிமேல் இடபமும் கோவணகீளும் ஓர் கொக்கிறகும்
அடிமேல் கழலும் அகலத்தினில் நீறும் ஐவ்வாய் அரவும்
முடிமேல் மதியும் முருகலர் கொன்றையும் முவிலைய
வடிவேல் வடிவும் என் கண்ணுள் எப்போதும் வருகின்றனவே!


நடராச பெருமானின் திருவுருவில் பஞ்ச பூதங்கள், அஷ்ட மூர்த்திகள், அனைத்து தெய்வ அம்சம், அண்ட சராசரங்கள், அனைத்து தெய்வ தத்துவங்களும் அடக்கம் அவற்றை விரிவாக காண்போம்.


1. இளம் பிறை : தக்கன் சாபம், காம தகனம், உயிர் வளர்ச்சி, ஒளஸதி நாதன்.



2. மயிலிறகு : கிராதார்ஜுனம்



3. கொக்கிறகு : குண்டாசுரவதம், அரசத்தன்மை.




4.இடக்கண் : சந்திர மண்டலம், இடநாடி, இச்சா சக்தி.




5.வலக்கண் : சூரிய மண்டலம், பிங்கலை நாடி, ஞான சக்தி.




6. நுதல் விழி : அக்னி அம்சம், கழுமுணை நாடி, காம தகனம், கிரியா சக்தி.




7.திருநீறு : பிருத்வி தன்மை, லய சிருஷ்டி, திரிபுரமெரித்தல், திரி சத்யம், சுடலையாடல்.




8. காபாலம்: பிரம்மச் சிரச்சேதம், பிக்ஷ‘டணர்.




9. ஊமத்த மலர் : அஷ்ட மூர்த்தம்.




10.கங்கை : ஜலமய மூர்த்தம், கங்காதரர், பாவ விமோசனம்.




11.நுண் சிகை : தக்ஷ’ணா மூர்த்தி, ஞானம்.




12.கொன்றை மலர்: கற்பக வல்லி




13: துடி : தோற்றம், ஆக்கல் தொழில், துடியாடல்.




14. தீயகல் : சம்ஹாரம், அழித்தல் தொழில், தீ-எரியாடல்.




15. குழை - இடது காது, சக்தி அம்சம், அர்த்தநாரீஸ்வரர், பிரக்ருதி.




16:தோடு - வலது காது, சிவ அம்சம்.




17. நீலகண்டம் - அமிர்தம் கடைதல்,சமன் பாட்டி நிலை, தீதகற்றல், அமரத்துவம், தியாக ராஜ மூர்த்தம்.




18.கபால மாலை - பிரம்ம கர்ப கழிவு, யுகாந்தரம்.




19.ஆதி வராக கொம்பு - வராக அவதாரம், பிரபஞ்ச சமநிலை.




20. ஆமை ஓடு - விஷ்ணு அம்சம், கூர்மாவதாரம், பிரபஞ்ச காவல்.




21. நரசிம்மரின் குருதித் தோல் - நரசிம்மாவதாரம், சரப மூர்த்தம்.




22. அபய கரம் - காத்தல் தொழில், சுப மூர்த்தம்.




23. அரவணி - நாக சக்தி, ஜ“வாத்மா, குண்டலிணி.




24.கரங்கள் - விராட புருடத்தன்மை.




25.தோள்கள் - திரிவிக்ரம நிலை, திசைகள், காற்று.




26:பூநூல் - நாயகத்தன்மை, வேதந்தம்.




27: உதர பந்தம்( அரை ஞாண்) : வேக மூர்த்தம்.




28. கஜ ஹஸ்தம் (வீசு கரம்): திருவடி காட்டல், இன்ப வழி காட்டி.




29.திருவுடல் : ஆகாயம்.




30.புலியதளாடை - தாருகாவனம், பிக்ஷ‘டணர்.




31.யானை உரி : கஜ சம்ஹாரம், மாயா மலம்.




32. ஊர்த்துவ மேரு: உலகோற்ப்பதி, பிக்ஷ‘டணர் துறவு.




33.கோவணம் - தூய ஞானம்.




34. குஞ்சித பாதம் : சிதம்பர மகாத்மியம், அருளல் தொழில்.




35.சிலம்பு - வேதங்கள் (இடது), கேளா ஒலி




36. கழல் - வீரட்டம், பிறப்பறுத்தல், பதிநிலை, புருடன்.




37.வீர கண்டாமணி - வீரம், திருவுரு, வெற்றித் திறன்.




38.ஸ்தித பாதம் - ஊன்றிய திருவடி, காலாந்தகர், மறைத்தல் தொழில், பதி நிலை, நிலம், வினைப்பயன் ஊட்டல்.




39.முயலகன் - கோயிற் புராணம், தாருகா வனம், மும்மலம்.




40.திருவாசி - இரண்ய கர்ப்பம், பிரபஞ்சம், பூரணத்துவம்.




41.திருவாசி சுடர் - த்வனி, பீஜ மந்திரங்கள்.




42.கமல பீடம் - தகராலயம், இதய கமலம், சகஸ்ராரம்.




புருஷார்த்தங்கள் : அறம்- தமருக ஓசை, பொருள் -அக்னி, இன்பம் - அபய கரம், வீடு- திருவடிகள்.




இறைவனது திருமுடியை அழகு செய்யும் புஷ்பங்கள்: பாகா, துரோணா, ஊமத்தை, சுமானா, பாடலம், பத்மம், உத்பாலம். கொன்றை- சிதம்பர ரகசியத்தில் தங்க தளங்களாக தொங்குபவை வில்வ தளம் என்றும், கொன்றை மலர் என்றும் கூறுவர். இம்மலரை சிவபெருமானுக்கு சாற்றுபவர்கள் சாலோக, சாமீப, சாரூப, சாயுச்ய பதவிகளை அடைவர் என்று புஷ்ப பலன் கூறுகின்றது.

* * * * * * *
உபநிடதங்களில் சிதம்பரம்:
சிதம்பரத்தை சாம வேதீய சாந்தோக்கிய உபநிடதம் 'சத்' என்றும் 'சபா' என்றும் கிருஷ்ண யஜுர் வேதிய சுவேதாசுவரோபநிடதம் 'பரம்' என்றும் 'சத்தியம்' என்றும், சுக்ல யஜுர்வேத பிரகதாரண்ய உபநிடதம் 'மகத்' என்றும். கைவல்யோபநிடதம் 'விவிக்தம்' என்றும் அற்புதம் என்றும், சாந்தோக்கியம் 'புண்டரீகம்' என்றும், தைத்திரீயம் 'குகை' என்றும் 'ஞானானந்தம் ' என்றும் 'பரம்', 'வியோமம்' என்றும் ' பரமாலயம்' என்றும் பிரகதாரண்யம் 'சுத்தம்' என்றும், தலவகாரோபநிடதம் 'சத்தியமாதனம்' என்றும் கூறுகின்றது.
* * * * * * *

தங்கள் வருகைக்கு நன்றி. மாதங்களில் சிறந்த மார்கழி வருகின்றது திருப்பாவை, திருவெம்பாவை அதி காலையில் பாராயணம் செய்யவும், ஐயனின் ஆருத்ரா தரிசனத்தைக் காணவும் திரும்பி வாருங்கள்.

Saturday, September 15, 2007

Ani Uthiram Video

These are some of the glimpses of 2007 Ani Uthiram darshan at Karaneeswaram , Saidapet, Chennai and Vengeeswaram, Vadapalani Chennai.

சென்னை சைதை காரணீஸ்வரர் ஆலய்ம் மற்றும் வட்பழனி வேங்கீஸ்வரர் ஆலயம் ஆகியவற்றில் நடைபெற்ற ஆனி திருமஞ்சன திருவிழாவின் துளிகள்.