Wednesday, April 4, 2018

பங்குனிப் பெருவிழா - 3

திருவான்மியூர் கொடியேற்றம் 



தியாகேசர் -    பாகம் பிரியா(கொண்டி) அம்மை 


சைவத் திருத்தலங்கள், வைணவத் திருத்தலங்கள், முருக திருத்தலங்கள் அனைத்திலும் இந்த பங்குனி உத்திர திருநாள் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகின்றது.  "கயிலையே மயிலை, மயிலையே கயிலை" எனப்படும் மயிலாப்பூரில் பத்து நாள் திருவிழா, பத்தாம் நாள்     பௌர்ணமியன்று திருக்கல்யாணம்.  7ம் நூற்றாண்டிலேயே  திருமயிலையில் பங்குனி உத்திர விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டதை இப்பாடலின் முலம் அறியலாம்.

மலிவிழா வீதி மடநல்லார் மாமயிலைக்
கலிவிழாக் கண்டான் கபாலீச் சரமமர்ந்தான்
பலிவிழாப் பாடல்செய் பங்குனி யுத்தரநாள்
ஒலிவிழாக் காணாதே போதியோ பூம்பாவாய்!

பொருள்: பூம்பாவாய்! இளம் பெண்கள் வாழும் விழாக்கள் நிறைந்த வீதிகளைக் கொண்ட   பெரிய மயிலையில் எழுச்சியை விளைவிக்கும் திருவிழாக்களைக் கண்டு அங்குள்ள கபாலீச்சுரம் என்னும் திருக்கோவிலில் அமர்ந்துள்ள சிவபெருமானது பலி அளிக்கும் விழாவான பங்குனி உத்திர நாளில் நிகழும் ஆரவரமான விழாவைக் காணாது செல்வது முறையோ என்று பாடுகிறார்  ஆளுடையப் பிள்ளை.  இந்த திருவிழாவை நாம் அனைவரும் 8ம் நாள் நிகழ்ச்சியான  அறுபத்து மூவர் திருவிழா என்ற பெயரில் நன்றாக அறிவோம். 

மேலும் திருவான்மீயூர், வடபழனி வேங்கீஸ்வரம், பூந்தமல்லி, ஒத்தாண்டீஸ்வரர் திருக்கோவில் முதலிய தலங்களிலும் பங்குனி உத்திர விழா 10 நாள் திருவிழாவாகக்     கொண்டாடப்படுகிறது. காஞ்சிபுரத்திலும் 10 நாள் உற்சவம் பங்குனி உத்திரத்தன்று ஏகாம்பரேஸ்வரர் ஏழவார் குழலி அம்மை (காமாக்ஷியம்மன்) திருக்கல்யாணம். மூலாதாரத்தலமான திருவாரூரிலே பங்குனி உத்திரத்தன்று இடது பாத தரிசனம். முற்காலத்தில் ஆழித்தேரோட்டமும் பங்குனி உத்திரத்தை ஒட்டியே நடந்துள்ளது. பங்குனி உத்திரம் திருவாரூரில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டதை இப்பாடலின் மூலம் அறியலாம்.

ஆராய்ந் தடித்தொண்டர் ஆணிப்பொன் ஆரூர் அகத்தடக்கிப்
பாரூர் பரிபத்தம் பங்குனி உத்திரம் பாற்படுத்தா
னாரூர் நறுமலர் நாதன் அடித்தொண்டன் நம்பி நந்தி
நீரால் திருவிளக் கிட்டமை நீணா டறியுமன்றே!

திருநெல்வேலியில் பட்டாபிஷேகம்.  திருச்சி  தாயுமானவர் பிரம்மோற்சவம். திருபுவனம், லால்குடி, கங்கை கொண்டான், பரமக்குடி முத்தாலம்மன் உற்சவம். திருமுருகத்தலங்களில் பழனியில் 10 நாள் உற்சவம், திருக்கல்யாணம், திருப்பரங்குன்றத்திலே  திருக்கல்யாணம் மற்றும் பட்டாபிஷேகம். கழுகுமலையில் உற்சவம். எல்லா முருகத்தலங்களிலும் பங்குனி உத்திரத்தன்று சிறப்பு வழிபாடு நடைபெறுகின்றது. மன்னார்குடி இராஜகோபாலர், திருமழப்பாடி நந்திகேஸ்வரர், மயிலம் முருகன் வள்ளி,  திருச்செந்தூர் முருகன் வள்ளி, கும்பகோணம் சக்ரபாணி விஜயவல்லித்தாயார் திருக்கல்யாணம் மற்றும்  பல திருக்கோவில்களில் திருக்கல்யாண வைபவம் ஒரு நாள் நிகழ்ச்சியாக மட்டும் நடைபெறுகின்றது. சைவ திருத்தலங்களில் மட்டுமல்ல வைணவத் தலங்களிலும்  பங்குனி உத்திரம் கல்யாண உற்சவமாக  கொண்டாடப்படுகின்றது. பெரிய கோவில் ஸ்ரீரங்கத்தில் பெருமாள் தாயார் சேர்த்தி வருடத்தில் இந்த ஒரு நாள் மட்டும் தான். பார்த்தசாரதிப்பெருமாள் திருக்கோவிலிலும் சேர்த்தி உற்சவம் இன்று நடைபெறுகின்றது. நாச்சியார்கோவிலில் பங்குனி பிரம்மோற்சவத்தின் போது கல்கருடசேவையையும், மேல்கோட்டையில்  கருடன் கொண்டு வந்த வைரமுடி சேவையையும் பங்குனியில் காணலாம். திருஇந்தளூரில் பிரம்மோற்சவமும், திருவாலி திருநகரியில் திருமங்கையாழ்வாரின் வேடுபறி உற்சவமும் நடைபெறுகின்றது.

விநாயகப்பெருமான்

தியாகராஜப் பெருமான் 


திருவான்மியூர் தொண்டை மண்டலத்தின் ஒரு  தியாகராஜத்தலம்  என்பதால் பஞ்ச மூர்த்தியாக  எழுந்தருளி அருள் பாலிப்பவர் சந்திரசேகரர் ஆவார். தினமும் காலையிலும், மாலையிலும் சந்திரசேகரர் பல்வேறு வாகனங்களில்  மாடவீதி வலம் வந்து அருளுகின்றார்.  நள்ளிரவில் தியாகராஜரும், திரிபுரி சுந்தரி அம்பாளும்  மாடவீதி வலம் வந்து அருளுகின்றனர்.  கொடியேற்றம் முதல் திருநாள் இரவில் நடைபெறுகின்றது.  கொடியேற்றத்திற்கு  தியாகேசர்  எழுந்தருளுகின்றார். அத்தரிசனத்தை இப்பதிவில் காண்கின்றீர்கள்.











திரிபுரசுந்தரி அம்பாள் 



இடபக்கொடி - அஸ்திரதேவர்


                                                                                                     பங்குனி உத்திர தரிசனம் தொடரும் . . . . 

Tuesday, April 3, 2018

பங்குனிப் பெருவிழா - 2

பங்குனி உத்திர கல்யாண விரத மகிமை:

மங்களங்களை நல்கும் சங்கரருக்கு மிகவும் பிரீத்தியானது இந்த கல்யாண விரதம் எனவே இவ்விரதத்தை முறையாக அனுஷ்டிப்பவர்களுக்கு  இறைவன் எல்லா வரங்களையும் வழங்குகிறார். அவர்கள் இம்மையில் எல்லா சுகங்களையும் பெறுவதுடன் முக்தியையும் அடைவர். மஹா லக்ஷ்மி இவ்விரதமிருந்துதான் விஷ்ணுவின் மார்பில் வீற்றிருக்கும் பேறு    பெற்றார். பிரம்மா சரஸ்வதியையும், இந்திரன் இந்திராணியையும், சந்திரன் 27 நட்சத்திரங்களையும் மணந்தது இவ்விரதத்தை அனுஷ்டித்துதான். அகஸ்திய முனிவர் லோபா முத்ராவை மணந்ததும் இவ்விரத மகிமையால்தான். மஹா விஷ்ணுவின் இரு மகள்களாகிய அமிர்த வல்லியும்,  சௌந்த்ர்ய வல்லியும், ஆறு முகங்கள் கொண்ட தேவ சேனாபதி முருகரை  வள்ளி, தேவசேனாவாக மணந்ததும் இவ்விரத பலனால்தான். நந்தி தேவரை வேதாங்க முனிவரின் புத்ரி சுகேசி மணந்ததும், பூரணா புஷ்கலா ஆகிய சத்யபூரண முனிவரின் புத்ரிகள் மஹா சாஸ்தாவை மணந்ததும் இவ்விரத மகிமையால். இரதிக்காக மன்மதனை  சிவபெருமான் எழுப்பித் தந்தது இந்நாளில் தான்.  இவ்விரதத்தை அனுஷ்டிக்கும் இளைஞர்களுக்கு நல்ல பெண் கிடைப்பாள், கன்னி பெண்களுக்கு  நல்ல வரன் அமையும், தம்பதிகளுக்கு  சந்தான பாக்கியம் கிடைக்கும் என்று ஸ்கந்த புராணத்திலே கூறப்பட்டுள்ளது.

மலிவிழா வீதி மடநல்லார் மாம்யிலைக்
கலிவிழாக் கண்டான் கபாலீச் சரமமர்ந்தான்
பலிவிழாப் பாடல்செய் பங்குனி யுத்தர நாள்
ஒலிவிழாக்காணாதே போதியோ  பூம்பாவாய்    =       என்று திருஞானாம்பந்தர் அன்று பாடியபடி இன்றும் திருமயிலையில் பங்குனி உத்திர நாள் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது.      

திருமயிலையில் முதல் நாள் கொடியேற்றத்தின் போது பஞ்ச மூர்த்திகள் கொடி மண்டபத்தில் எழுந்தருளி அருள் பாலித்த காட்சிகளை இப்பதிவில் காண்கின்றீர்கள் அன்பர்களே. 


 விநாயகப்பெருமான்



கபாலீஸ்வரர்





பவளக்கால் விமானம் 


கற்பகவல்லி அம்பாள் 






சிங்கார வேலவர் 

 சண்டிகேஸ்வரர் 
இடபக் கொடி 


 அஸ்திர தேவர் 


                                                                                                     பங்குனி உத்திர தரிசனம் தொடரும் . . . . . . .

Monday, April 2, 2018

பங்குனிப் பெருவிழா - 1

பங்குனி உத்திரம் 

வசந்த நவராத்திரி அம்பாள் கொலு 

பங்குனி  பிரதமை துவங்கி  இராம நவமி வரை வசந்த நவராத்திரி 

பங்குனி மாதம்  தமிழ் மாதத்தில் நிறைவாக வரும் மாதம்.  பங்குனி உத்திரம்  இறை  வழிபாட்டிற்கு  மிகவும் உகந்த நாள். பங்குனி மாதத்தில் உத்திர நட்சித்திரமும், பௌர்ணமியும்  கூடும் என்பதால் பௌர்ணமியின் பலன்களும் கூடுகின்ற நாள். பங்குனி உத்திர நாள் சிவபெருமானுக்குரிய அஷ்ட விரத நாட்களில் கல்யாண விரத நாள் ஆகும். அன்றைய தினம் இறைவனின் திருமணத்தை தரிசித்து வணங்குவது அனைத்து நலன்களையும் தரும்.  திருமணம் நடைபெறாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும். 

கலைமகள் பிரம்மாவை மணந்த நாள் என்பதால் அன்று  குழந்தைகள் ஆலயம் சென்று வழிபட  கல்வியில் சிறப்பாக விளங்குவர்.

பங்குனி உத்திரத்தன்று அர்ஜுனன் அவதரித்தான். அன்றுதான் பகவத்கீதை உபதேசமும் பெற்றான். 

பங்குனி உத்திரத்தன்று நம் குல தெய்வத்தை வழிபட  முன்னோர்களின்  ஆசி கிட்டும். 

பல தெய்வத்திருமணங்கள் பங்குனி உத்திரத்தன்று நடைபெற்றது.  இராமர்-சீதை,  முருகன்-தெய்வானை, ஆண்டாள் -ரங்கமன்னார் திருமணங்கள் பங்குனி உத்திரத்தன்று  நடைபெற்றன. 

ஐயப்பனின் அவதரித்ததும்  தினமும்  பங்குனி உத்திர நாளில் தான்.

இரதி வேண்ட சாம்பலான மன்மதனை இறைவன் எழுப்பியதும்  இந்நாள்தான். 

தெய்வீக அற்புதங்கள்  பல பெற்ற பங்குனி உத்திர திருநாள்    பாவத்தைப் போக்கும் அற்புத நாளாகவும். பகையை அகற்றும் திருநாளகவும் விளங்குவதால் , தமிழகமெங்கும் பல தலங்களில் பெருவிழாக்கள் நடைபெறுகின்றன.  இவ்வருடம்(2018)   சென்னையின் சில தலங்களில் நடைபெற்ற பங்குனிப் பெருவிழாவின் சில காட்சிகளை வரும் பகிர்ந்து கொள்கிறேன் கண்டு  இன்புறுங்கள் அன்பர்களே. 

இம்முதல் பதிவில் சென்னை மேற்கு மாம்பலம் காசி விசாலாட்சி உடனுறை காசி விசுவநாதர் ஆலயத்தின்  முதல் திருநாள் இரவு மாவடி சேவையில் எழுந்தருளிய பஞ்ச மூர்த்திகளின் தரிசனம் காண்கின்றீர்கள் அன்பர்களே. 


விநாயகர்


காசி விஸ்வநாதர் 



அம்மையப்பர் 




விசாலாட்சி அம்பாள் 

வள்ளி தெய்வானை சமேத முருகன் 


பஞ்ச மூர்த்திகள் 


 பங்குனி உத்திர தரிசனம் தொடரும் . . . . . . .

Sunday, January 14, 2018

சுவாமியே சரணம் ஐயப்பா -21

சுவாமி ஐயப்பன் தரிசனம் 




இப்பதிவுகளையும்  காணலாமே 

  1   2   3   4  5  6  7  8  9  10  11  12  13  14  15  16  17  18  19  20

தை முதல் தினமாம் மகரஜோதி நாளான இன்று ஐயப்பனின் தரிசனம் பெறலாம் அன்பர்களே.  சத்தியமான பொன்னு பதினெட்டாம் படிகளில் ஒரு பக்கம் புலியையும், யானையையும் நாம் காணலாம். படிகளில் ஏறும் போது சரண கோஷத்தையோ அல்லது படிப்பாடலையோ பாடிக்கொண்டு ஐயனை தரிசிக்கப்போகின்றோம் என்ற பரவசத்துடன் படி ஏறுகின்றனர். கூட்டம் அதிகமாக இருக்கும் போது பகதர் கூட்டமே தங்களை மேலே கொண்டு போய் சேர்த்து விடும்.  இருபக்கமும் காவல்துறையினர் நின்று கொண்டு பக்தர்கள் படியேற உதவுகின்றனர். 



பதினெட்டாம் படிகளைக் கடந்தவுடன்  ஐயனின் நடைமண்டபம் முதலில் கண்ணில் படுகின்றது.  அதன் முகப்பில் தத்வமஸி என்ற வாசகம்  மலையாளம் மற்றும் வட மொழியில் மிளிர்கின்றது. பதினெட்டு தத்துவங்களையும் கடந்து வருகின்ற நீயும் நானும் ஒன்றே என்ற ஜிவாத்மா மற்றும் பரமாத்மாவும் ஒன்றே என்ற அத்வைத தத்துவத்தை இம்மஹா வாக்கியம் உணர்த்துகின்றது. இம்மண்டபத்தின் சுவரில்  ஐயனின் சரித்திரம் பித்தளை தகடுகளில் புடைப்பிச்சிற்பமாக மிளிர்வதைக் காண்கிறோம். 


புதுக்கொடிமரம் நிறுவப்படுகின்றது. 


40 வருடங்கள் பழமையான கொடிமரம் பழுதடைந்ததால்.  புதிய கொடிமரம் சென்ற வருடம் நிறுவப்பட்டது.  9 கிலோ தங்கத்தில் இக்கொடி மரத்திற்கான தங்கக் கவசம் செய்யப்பட்டுள்ளது. அதன் மதிப்பு சுமார்  அங்கு ஒரு நிமிடம் நின்று தங்கக் கொடி மரத்தையும் அதன் மேல் உள்ள குதிரை வாகனத்தையும் அவசியம் தரிசிக்க வேண்டும். ஏனென்றால் இக்குதிரை பரசுராமரால் முதலில் ஐயனுக்கு முன்னர் பிரதிஷ்டை செய்யப்பட்டதாம். தற்போது கொடி மரத்தின் உச்சியில் உள்ளது. அடுத்து நாம் தரிசிக்க வேண்டியது மணி. பதினெட்டாம் படியின் இருபக்கமும் உள்ள மணிகள். இவற்றில் இடது புறம் உள்ள மணியை அவசியம் தரிசிக்க வேண்டும் ஏனென்றால், இம்மணி பழைய ஐயனின் விக்கிரகத்தால் உருவானது. 1059களில் சில விஷமிகள் ஐயனின் சன்னிதானத்திற்கு தீயிட்டனர் அதில் ஐயனின் கல் விக்கிரகம் பழுதடைந்தது. பின்னர் புணருத்தாரணம் செய்யப்பட்டு பஞ்சலோக விக்கிரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. . 1970களில்  மீண்டும் ஒருமுறை தீ விபத்து ஏற்பட்டபோது அவ்விக்கிரகமும் பழுதடைந்தது. அவ்வுலோகத்தில் இருந்து இம்மணி உருவாக்கப்பட்டத்தாம். 

அடுத்து நாம் பதினெட்டாம் படியின் வலப்பக்கத்தில்  கன்னி மூல கணபதி சன்னிதிக்கு எதிராக உள்ள ஹோமகுண்டத்தை தரிசிக்கின்றோம். நம்முடைய ஆத்மாவாகிய நெய்யை ஐயனுக்கு அபிஷேகம் செய்வதற்காக எடுத்த பின் அதை தாங்கி வந்த நெய்த் தேங்காய்கள் இந்த ஹோமகுண்டத்தில்  எரிகின்றன. ஜீவாத்மா பரமாத்மாவுடன் இணைந்த பின் கூடான உடல் பஞ்சபூதத்தில் இணைவதை இது குறிக்கின்றது.  




ஹோம குண்டம் 


பின்னர் பக்தர்கள் கோவிலைச்சுற்றியுள்ள நடை மேடைகளில் ஏறி சன்னிதானத்தை வலம் வருகின்றனர் இவ்வாறு வலம் வரும் போது சன்னிதானத்தின் மூன்று தங்கச் கவசங்கள், நடை மேடையின்  நான்கு கலசங்கள் ஐயன் மற்றும் கன்னி மூல கணபதி மற்றும் நாகராஜாவின் தங்கக்கூரைகளையும்  அருமையாக தரிசிக்கின்றனர். பின்புறம் ஐயன் வன்புலி வாகனனாக அமர்ந்திருப்பதையும் அருமையாக தரிசிக்கலாம். பொதுவாக கேரள ஆலயங்களின் கருவறை (ஸ்ரீகோவில்) சதுரமாக பிரமிட் வடிவ கூரையுடனோ அல்லது வட்ட வடிவில் தொப்பிக்கூரையுடனோ அமைந்திருக்கும் ஆனால் ஐயப்பனின் ஸ்ரீகோவில் செவ்வக வடிவில் அமைந்திருப்பது ஒரு தனி சிறப்பு. .   முன்புறம் ஐயப்பன் சன்னதியில் உள்ளது போன்ற புடைப்புச் சிற்பம் அமைத்துள்ளனர்.  மேலும் சன்னதியின் சுவர்களில் இரு புறமும் ஐயனின் சரித்திரம் தங்கத்தகடுகளில் சிற்பமாக அமைத்துள்ளதையும் காணலாம்.  



சன்னிதானத்தின் பின்புறத்தோற்றம்





பின்னர் கீழிறங்கி வந்து ஐயனை தரிசிக்கின்றனர். அதிக பக்தர்கள் தரிசிக்க ஏதுவாக மூன்று வரிசைகளில் பக்தர்களை தரிசனம் செய்ய அனுமதிக்கின்றனர். முதல் வரிசை மற்றும் இரண்டாம் வரிசையில் இரு முடி தாங்கியவர்களும்  கடைசி வரிசையில் இருமுடி இல்லாதவர்கள்  ஐயனை தரிசனம்  செய்யலாம்.  முதல் வரிசையில் செல்வது உத்தமம், ஏனென்றால் ஐயனை அருமையாக தரிசிக்க முடியும். சன்னிதானத்தின் இருபுறமும் துவாரபாலகர்கள் தங்க கவசத்தில் மின்னுகின்றனர். அவர்களிடன் அனுமதி பெற்றுக்கொண்டபின் ஐயனை தரிசிக்கின்றோம்.





ஐயனைத் துதிக்கையிலே தன்னையே மறந்திடுவார்  என்பதற்கேற்ப  தன்னை மறந்து கண்ணீர் மல்க பரவசத்துடன்  பக்தர்கள்  கோடி சூரிய லாவண்யத்துடன் சன்னிதானத்தின் உள்ளே ஐயனை தரிசனம் செய்கின்றனர். கடுமையாக விரதம் வந்ததன் பலனைப் பெறுகின்றனர். கூட்டம் அதிகமாக இருக்கும் காலங்களில் ஒரு நிமிடம்  மட்டுமே தரிசனம் கிட்டுகின்றது. சில சுவாமிகள் சரியாக ஐயனை தரிசிக்க முடியவில்லை என்று கூறும் போது நாம் ஐயனைப் பார்ப்பது முக்கியமல்ல இருமுடியுடன் ஐயன் நம்மை தன் அருட்பார்வையுடன் பார்க்கின்றான்  என்பதை உணருங்கள் என்று கூறுவார். 



தாமரை பீடத்தில்  யோக கோலத்தில் கால்களை குந்தாளமிட்டு அமர்ந்த கோலத்தில் அருள் பாலிக்கின்றார்.  கால்களைச்சுற்றி யோக நரசிம்மருக்கு உள்ளது போல யோக பட்டம். கலியுக வரதனாக நாம் எல்லோரும் உய்ய ஐயன் தவம் செய்து கொண்டிருக்கிறார்.  திருக்கரத்தில் தகப்பனார் தக்ஷிணாமூர்த்தியைப் போல சின் முத்திரை, ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களையும் விடுத்தால் ஜீவாத்மாவாகிய நீ ப்ரமாத்வாகிய என்னுடன் இணையலாம் என்று தத்துவமஸி என்ற மஹாவாக்கியத்தை முத்திரையாகக் காட்டியவண்ணம் அருட்காட்சி தருகின்றார்.  சிரசு ஜடாமுடி, இடதிருக்கரம் அம்பாளின் இடக்கரத்தை போல அமைந்துள்ளது.  கண்களை மூடிக்கொண்டு தியானம் செய்தால் இடது திருக்கரம் சிவலிங்கத்தின்  ஆவுடையார் போல உள்ளதால் சிவலிங்க ரூபமாகவும் ஐயனைக் காணலாம் என்று குருசாமி அவர்கள் கூறுவார்கள். ஆபரணங்கள் அவரது திருமார்பு, திருக்கரங்கள் மற்றும் திருப்பாதங்களை  அலங்கரிக்கின்றன. திருமுகத்தில் கோடி மன்மத லாவண்யம், கோடி சூரியப்பிரகாசம் திருக்கண்களால் அருள் பொழிந்து  நம்மை நோக்குகின்றார். அந்நொடியில் நமது அனைத்து  துயரங்களும்  விலகுகின்றது பேருவகையை அடிகின்றோம். ஹரிஹர புத்ரன் என்பதற்கிணங்க  சிவ அம்சங்களும், விஷ்ணு அம்சங்களுடனும் ஐயன் அருள் பாலிக்கின்றார். 



 ஓம் அடியேன்  அறிந்தும் அறியாமலும், தெரிந்தும் தெரியாமலும் செய்த சகல குற்றங்களையும் பொறுத்து காத்து இரக்ஷித்து,  நல்ல வழி காட்டி,  நேர் வழிக்கு  கொண்டு போய், நல்லபடியாக வாழ வைக்க வேண்டும். காசி, இராமேஸ்வரம், பாண்டி, மலையாளம் அடக்கி ஆளும் வில்லன்,  வில்லாளி வீரன், வீரமணி கண்டன், ஸ்ரீஸத்தியமான பொன்னு பதினெட்டாம்படி மேல் வாழும் ஓம் ஸ்ரீஹரிஹர ஸுதன், கலியுக வரதன், ஆனந்த சித்தன்,  ஐயன் ஐயப்ப சுவாமியே சரணம் ஐயப்பா என்று சரணமடைகிறோம். அதற்குள்  காவலர்கள் நம்மைப் பிடித்து இழுத்து விடுகின்றனர். 

 ஐயனை  தரிசித்த பேரானந்தத்தில் அடுத்து கன்னி மூலை கணபதியை தரிக்கின்றோம்.  கணபதி சன்னதியின் முகப்பில் அஷ்ட கணபதிகளின்  புடைப்பு சிற்பங்கள் தங்கத்தில் அமைந்துள்ளன. ஸ்ரீகோவிலின் பிரமிட் கூரையும் தங்க ஓடுகளால் வேயப்பட்டுள்ளன. . எந்த வித விக்னங்களும் இல்லாமல் பெரிய பாதையில் வந்து ஐயனை தரிசிக்க  உதவிய கணபதிக்கு நன்றி கூறி பின்னர் நாகராஜா சன்னதிக்கு செல்கின்றோம். மூன்றாம் வரும் மணிகண்டன்கள் அம்மணியை கணபதி சன்னதியில் கட்டுகின்றனர். அம்மணியை எடுத்துச் சென்று வீட்டில் வைத்து பூசை செய்தால் குழநதை பாக்கியம் கிட்டும் என்பதால் மனிக்காக பக்தர் கூட்டம் கணபதி சன்னதிக்கருகில் காத்தி நிற்கின்றனர். மணியைக் கட்டக்கூட விவுவதில்லை கையில் இருந்தே பிடுங்கிச் செல்கின்றனர். 

கர்நாடகத்தில்  சுப்பிரமணியரை நாக வடிவில்தான் வழிபடுகின்றனர் அது போல இங்கும் நாகராக, ஐயனின் சகோதரர் முருகரை வணங்குகின்றோம் என்று ஒரு  ஐதீகம் உண்டு . இச்சிறு கோவிலின் முகப்பிலும் நாகங்களின் தங்க புடைப்புச் சிற்பம்,  கூரை தங்க ஓடுகளால் வேயப்பட்டுள்ளது. சகோதரர்களை வணங்கிய பின் அடுத்து மாளிகைப்புறத்து மஞ்சம்மாவை தரிசிக்க செல்கின்றோம். 


மஞ்சமாதா சன்னதி

ஐயப்பனின் தரிசனம் முடிந்ததும் கீழே இறங்காமல் மஞ்சமாதா கோவில் செல்வதற்கு நடைமேடை அமைத்திருக்கிறார்கள். ஐயப்பன் மகிஷியை வதம் செய்த போது தத்தனின் சாபத்தால் மகிஷியாக மாறிய லீலாவதி  ஐயனின் திருவடிபட்டவுடன் அவள் செய்த பாவமெல்லாம் விலகி ஞானம் பெற்றாள். அத்துடன் அவள் மேனியிலிருந்து பேரோளி ஒன்று தோன்றி, அதனின்றும் அழகிய ஒரு மங்கை வெளிப்பட்டாள். அவளே மஞ்ச மாதா ஆவாள்.

ஸ்ரீஐயப்பனைக் கண்ட மஞ்ச மாதா காதல் கொண்டாள். தன்னை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என வற்புறுத்தினாள்.ஐயனோ தான் ஓர் நித்திய பிரம்மச்சாரி எனவும் திருமணம் செய்துகொள்ளும் விருப்பம் இல்லை எனவும் தெரிவித்தார்.. தொடர்ந்தும் அவள் வற்புறுத்தி வரவே ஐயப்பன் இதனின்றும் தப்பித்துக் கொள்ள ஓர் உபாயம் செய்தார். கன்னி ஐயப்பமார்களின் தாற்பரியம், மஞ்ச மாதா! ஒவ்வோர் ஆண்டும் கார்த்திகை முதல் நாள் என்னை வழிபட அடியவர்கள் வருவார்கள். எந்த வருடம் புதிதாக பக்தர்கள் யாரும் வரவில்லையோ, அந்தத் தருணத்தில் உன்னைக் கணட்டாயம் திருமணம் செய்து கொள்வேன் என்றார் ஐயன்.

அதற்கு மஞ்ச மாதா ஐயனே புதிதாக வரும் கன்னி ஐயப்பமார்களை எவ்வாறு அடையாளம் கண்டு கொள்வது என வினாவினாள். அதற்கு ஐயப்பன், பெண்ணே, ஒவ்வொருவரும் கையில் சரம் ஒன்றை ஏந்தி வந்து சரங்குத்தி என்ற இடத்தில் சரம் குத்துவார்கள். எந்த ஆண்டில் சரம் ஏதும் குத்தவில்லையோ அந்த வருடம் கன்னி ஐயப்பமார்கள் யாரும் வரவில்லை என அறிந்து கொள்ளலாம் என்றார் ஐயப்பன். இதன் அடிப்படையில் தான் மஞ்ச மாதாவை சரங்குத்தி வரை எடுத்து செய்கின்றார்.

ஐயப்பன் நித்திய பிரமச்சாரியாகவே இருக்கத் திருவுள்ளம் கொண்டிருப்பதால்தான் ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரக் கணக்கான கன்னி ஐயப்பமார்கள் வந்த படியே இருக்கிறார்கள். ஒவ்வொரு குருசாமியும் ஒரு கன்னி ஐயப்பரையாவது மலைக்கு நிச்சயம் அழைத்துச் செல்ல வேண்டும் என்ற நியதி இதனால்தான் ஏற்பட்டது.  ஐயப்பன் மஞ்ச மாதாவை நோக்கி ‘மஞ்சமாதாவே, உன் சந்நிதியில் மஞ்சள் பொடியுடன் ரவிக்கைத்துணியை வைத்து விளங்கும் கன்னி பெண்களுக்கு திருமணம் கைகூடும் என்று வரம் நல்கினார்.
மஞ்சமாதாவுக்கு மாளிகைபுரத்து  அம்மன் என்று பெயரும் உண்டு. சபரிமலை பதினெட்டாம் படியிலிருந்து பார்த்தால் வட கிழக்குப்புறமாக மஞ்ச மாதாவிற்கும் தனியாக ஒரு கோயில் உண்டு. இக்கோயிலின் கதவுகள் எப்போதுமே திறக்கப்படுவது இல்லையாம். ஸ்ரீ ஐயப்ப சுவாமியின் ஆலயத்தில் அன்னை ஆதிபரா சக்தியின் அம்சமாக வீற்றிருக்கும் மஞ்சமாதாவை வழிபட்டால் மாங்கல்ய பாக்கியமும் மாங்கல்ய பலமும் கிடைக்கும். அன்னை மஹா காளி, மஹா லக்ஷ்மி, மஹா சரஸ்வதி அம்சமாக விளங்குகின்றாள், நின்ற கோலத்தில் சதுர் புஜங்களுடன் சங்கு சக்கரம் தாங்கி, அபய வரத கரங்களுடன் சிரசில் பிறையுடன் எழிலாக அருள் பாலிக்கின்றாள். இவளது சன்னதியில் தேங்காய் உடைப்பதில்லை சன்னதி சுற்றி உருட்டிக்கொண்டு வந்து சேர்க்கின்றனர். 
அன்னையின் ஸ்ரீகோவில் சுவற்றில் அஷ்ட லக்ஷ்மிகளும் அருள் பாலிக்கின்றனர். கூரைக்கு தங்க ஓடு வேய்ந்துள்ளனர்.  அம்மனின் பிரசாதமாக மஞ்சள் வழங்குகின்றனர். அம்மனுக்கு வேண்டிய பூசைப் பொருட்களையும் பக்தர்கள் இருமுடியில் சுமந்து வருகின்றனர். அவற்றுள் மஞ்சள்ப்பொடியும், இரவிக்கைத்துணியும் முக்கியமானது. அம்மனுக்கு சமர்ப்பிக்கப்பட்ட இத்துணியை கல்லாப் பெட்டியில் வைக்க செல்வம் பெருகும் என்பது பலர் கண்ட உண்மை. அதைப்போலவே இத்துணியை பெறும் கன்னிப்பெண்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.. 
மாளிகைபுரத்திற்கு என்று தனியாக மேல்சாந்தி ஒருவர் இருக்கிறார். மஞ்சமாதா கோவில் பூஜைகள் போன்றவற்றை இவர்தான் செய்கிறார். சபரிமலையில் நடத்தப்படும் முக்கியப் பூஜைகளில் ஒன்று பகவதி பூஜை. இதற்கு ரூபாய் நூற்றி ஒன்றை மஞ்சமாதா கோவிலில் உள்ள தேவஸ்தானம் கவுண்டரில் கட்டி ரசீது பெற வேண்டும். இப்பூஜையை மேற்குறிப்பிட்ட மேல்சாந்திதான் நடத்தி கொடுப்பார்.
அம்மனுக்கு காவலாக கொச்சு கடுத்த சுவாமி வில்லுடன் எழுந்தருளியுள்ளார். பிறகு அங்கிருந்து மணிமண்டபம் செல்ல வேண்டும். இந்த மணிமண்டபம் ரொம்ப அழகானது. இங்கே தான் மகரவிளக்கன்று வரும் திருவாபரணப் பெட்டியை இறக்கி வைப்பார்கள். ஜோதி தரிசனத்திற்கு பிறகு சபரிமலை வரும் பந்தள ராஜ பரம்பரை மன்னரும் அவர் குடும்பத்தாரும் இங்குதான் தங்குவார்கள். இந்த மஞ்சமாதா கோவிலில் மணிமண்டபத்திற்கு அருகில் நாகராஜா, அதற்கு அருகில் நவக்கிரகங்கள் உள்ளன. வலது பக்கம் சுவரை அடுத்து காட்டுத் தேவதைகள், நாகயட்சி அமைந்துள்ளன. இவற்றுக்கு மஞ்சள் தூவி வழிபடுவது வழக்கமாக உள்ளது.
அம்மனுக்கு லலிதா சகஸ்ரநாமம் மற்றும் லலிதா த்ரிசதி கூறி வழிபடுவது மிகவும் சிறப்பு. மணி மண்டபத்தின் ஈசான மூலையில் அமர்ந்து  பாராயணம் செய்கின்றனர் பல பக்தர்கள். மஞ்சமாதா கோவில் அருகே உள்ள மணிமண்டபத்தின் எதிரிலே சின்ன வாத்தியம் என்ற இசைக்கருவியைப் புள்ளுவன்கள் என்கிற வாத்தியக்காரர்கள் இசைக்கக் காணலாம். சிறுதொகையை அவர்களுக்குப் பக்தர்கள் அன்பளிப்பாக கொடுத்து வாசிக்கச் சொல்கிறார்கள். அந்த இசை கேட்டு அங்கே இருக்கும் சகல தெய்வங்களும் அருளாசி வழங்கி ஆசிர்வதிப்பதாக நம்பப்படுகிறது..மேலும் அம்மனுக்கு பல பக்தர்கள் வெடி வழிபாடும் ‘செய்கின்றனர். 
ஐய்னை தரிசித்த பின் கற்பூர  ஆழி வழிபாடு என்றொரு சடங்கை நடத்துகிறார்கள் ஐயப்ப பக்தர்கள். குங்குமம், விபூதி, மஞ்சள், மிளகு, பேரீச்சம்பழம், கல்கண்டு, காணிக்கைப் பணம் போன்றவற்றைத் தனித்தனி தட்டில் ஏந்தி ஊதுபத்தி கட்டைக் கொளுத்தி, அதைக் கையில் ஏந்தியவாறு ஒருவரும், பன்னீர் தெளித்துக்கொண்டே இன்னொருவரும், கூட்டமாக குருசாமி தலைமையில் சரணம் கூறிக்கொண்டே அங்கே கண்ணுக்குத் தென்படும் ஒவ்வொரு தெய்வத்தையும் பார்த்து வழிபட்டுக்கொண்டே கோவிலைச் சுற்றி வருவதுதான் இந்த கற்பூர ஆழிவழிபாடு என்பது!  இப்படி வழிபடச் செல்லும் போது விபூதித் தட்டில் சூடம் எரிய எடுத்துச் செல்கிறார்கள்.

கூட்டமாகக் குருசுவாமி தலைமையில் செல்பவர்கள் ஐயப்பனின் சன்னதி சென்று, கொடிமரத்துக்கு அப்பால் நின்று சூடம் தீபாராதனை காட்டி ஐயப்பனை மனதார வணங்கி விட்டு உண்டியலில் காணிக்கைப் பணத்தைப் போடுகின்றனர். பின்னர் கன்னி மூல கணபதியையும், அதன் பின் நாகராஜாவையும் வணங்கி விட்டு சரணம் கூறியபடி 18-ஆம் படிக்கு வருகின்றனர். 

அங்கு கருத்தசாமி, கருப்பண்ணசாமி, 18 படிகளுக்கு தீபராதனை செய்து பின்பு வாபர் சன்னதி சென்று வணங்கி விட்டு மஞ்சமாதா சன்னதிக்கும் சென்று வணங்கி விட்டு தங்களது தங்குமிடத்திற்குத் திரும்பி வந்து குருசாமி காலில் விழுந்து வணங்கி ஆசி பெற்றுக் கொள்வார்கள்.
சுவாமி ஐயப்பன் சன்னிதானத்திற்கும் மஞ்சள் மாதா சன்னிதானத்திற்கும் இடையில் பஸ்ம குளம் அமைத்துள்ளது. இக்குளத்தில் மூழ்கி எழுந்தால் புண்ணியம் உண்டாகும். நீராடினால் தீராத நோய்கள் தீருமாம் நற்பலன் கிட்டுகின்றது. .இவ்வாறு தரிசனத்தை முடித்துக்கொண்டு திரும்பும் முன் தேங்காய் உடைத்து  சன்னிதான  தரிசனத்தை நிறைவு செய்கின்றனர். பின்னர்  பக்தர்கள் பொதுவாக சுப்பிரமண்னியப் பாதை வழியாக கீழிறங்கி பம்பா கணபதி அடைந்து அவரை வணங்கி பம்பை ஆற்றைக் கடந்து தங்கள் இல்லம் அடைந்து அது வரை தங்கள் குடுத்தினருக்கு துணையாக இருந்த ஐயனின் காவல் தெய்வங்களுக்கு நன்று கூறும் விதமாக தேங்காய் உடைத்து இருமுடிப்பையை சுவாமி முன் வைத்து  வணங்கி, மலையிலிருந்து கொண்டு வந்த அரிசி மற்றும் நெய்யைக்கொண்டு பொங்கல் சமைத்து அதை  சுவாமிக்கு படைக்கின்றனர். அடுத்த வருடமும் தரிசனம் தர வேண்டுமென்று ஐயனை வேண்டி மாலையை கழற்றி  விரதத்தை முடிக்கின்றனர். 
இப்பதிவுடன் இவ்வருட யாத்திரை நிறைவு பெறுகின்றது. கார்த்திகை முதல் நாள் துவங்கிய பதிவுகள் தை முதல் நாள் வரை நீண்டன  என்றாலும் அனைத்தையும் எழுத சமயம் கிட்டவில்லை. அவனருளால் அடுத்த வருடம் இன்னும் பல செய்திகளை பகிர்ந்து கொள்ளலாம் அனபர்களே. உடன் வந்து தரிசித்த அன்பர்கள் அனைவருக்கும் ஐயன் அருள் புரிய  வேண்டுகிறேன்.


குருசாமி திருவடிகளே சரணம் 

சுவாமியே சரணம் பொன் ஐயப்பா