Sunday, January 7, 2018

சுவாமியே சரணம் ஐயப்பா -20

சத்தியமான பொன்னு பதினெட்டாம் படி

சபரிமலைதனை ஏறிடுவார்
கதி என்று அவரை சரணடைவார்
மதி முகம் கண்டே வணங்கிடுவார்
ஐயனைத் துதிக்கையிலே தன்னையே மறந்திடுவார்

பள்ளிக் கட்டு சபரிமலைக்கு
கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை
ஸ்வாமியே ஐயப்பா ஐயப்பா ஸ்வாமியே
சரணம் சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா



இப்பதிவுகளையும்  காணலாமே 

  1   2   3   4  5  6  7  8  9  10  11  12  13  14  15  16  17  18  19  20   21



இரவு நேரக் காட்சி

மரக்ககூட்டத்தை  தாண்டியவுடன் நடைப்பந்தல் வருகின்றது. இம்மண்டபத்தில் கூட்டம் அதிகமாக இருந்தால் பதினெட்டாம் படி ஏறுவதற்காக பக்தர்கள் காத்து நிற்கின்றனர். இம்மண்டபத்தில் ஒரு மேடை உள்ளது அம்மேடையில் தர்மசாஸ்தா, வன் புலி வாகனன் மற்றும் கணபதி சிற்பங்கள் அமைத்துள்ளனர். நடைப்பந்தலில் இருந்து குழு குழுவாக பதினெட்டாம் படியேற  பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

சபரிமலை சன்னிதானத்தை பார்த்தால் ஒரு கோட்டை போலவே அமைந்துள்ளது.  சன்னிதானத்தை அடைய சத்தியமான் பொன்னு பதினெட்டாம் படிகளில் ஏறிச் செல்லவேண்டும். இப்பதினெட்டு படிகளும் பதினெட்டு தேவர்கள் ஐயனை தரிசிக்க வருபவர்களுக்கு அவர்களின் விரதத்திற்கேற்ப பலன்களை வழங்குகின்றனர். 

பதினெட்டு படிகளும் தேவர்கள் என்பதால் சபரிமலையில் படிபூசை மிகவும் சிறப்பாக நடைபெறுகின்றது. முறையாக விரதம் இருந்து இருமுடி ஏந்தி வரும் பக்தர்கள் மட்டுமே பதினெட்டாம் படிகளில் ஏறிச் செல்ல முடியும்.  முற்காலத்தில் எத்தனையாவது தடவை சபரிமலை யாத்திரையோ அப்படியில் தேங்காய் உடைக்கும் வழக்கம் இருந்தது. தேவ பிரசனம் கேட்டு பின் படிகளை பாதுகாகக பஞ்ச லோக கவசம் சார்த்தியபின் தற்போது படிகளில் தேங்காய் உடைப்பது இல்லை. பெரிய  கருப்புசாமி சன்னதிக்கு அருகில் உள்ள  சுவற்றில் தேங்காய் உடைத்து பதினெட்டாம் படி ஏறி ஐயனை தரிசித்து விட்டு பின் திரும்பும் போது சிறிய கருப்புசாமியின் சன்னதிக்கு அருகில் உள்ள சுவற்றில் தேங்காய் உடைத்து யாத்திரையை நிறைவு செய்கின்றனர்.. 

கருப்பசாமி சன்னதிகள், பதினெட்டாம் படிகள்

பதினெட்டு படிகள் கொண்ட வகையில் சபரிமலை கோயில் அமைக்கப்பட்டுள்ளது. அதுவும் தத்துவ விளக்கம் கொண்டது. மனிதனிடம் உள்ள தவறான  குணங்களை காட்டவே அப்படி அமைக்கப்பட்டுள்ளன.  புறக்காரணங்கள் ஐந்து வகைப்படும். அவை மெய், வாய், கண், மூக்கு, செவி என்பதாகும். அககாரணங்கள்  நான்கு வகைப்படும். அவை மனம், புத்தி, சித்தி, அகங்காரம் ஆகும். இதில் மனம் சில சலனங்களுக்கு உட்படுகிறது.  அவை கோபம், காமம், குரோதம், மதம்,  மாச்சரியம், லோபம் என்ற ஆறு குணங்கள் உடையது. அடுத்தது ஞானம். முன்பு குறிப்பிட்ட தீய குணங்கள் நீக்கிவிட்டால் ஞானம் தோன்றும். அடுத்து சத்தியம்.  அதுதான் நிறைவு. அதற்குபிறகு சுவாமி ஐயப்பனோடு நாம் இணைந்து விடலாம்.

காமம்: பற்று உண்டானால் பாசம், மோகம் ஏற்படுகிறது. இதனால் நமக்கு துன்பமே ஏற்படுகிறது.

குரோதம்: 
ஆத்திரம் எனப்படும் கோபமே அழிவுக்கு காரணமாகிறது.

மதம்: 
வெறி வளர்ப்பதால் ஆண்டவனே நம்மை வெறுத்து விடுவார்.

லோபம்: பேராசை ஏற்படுத்தி ஆண்டனை அடைய முடியாமல் செய்யும்.

சாத்வீகம்: எதையும் எண்ணாது கர்மம் செய்தல்.

அகந்தை:  என்னால்தான் என்று எண்ணி இல்லாமல் போகும்.

டம்பம்: பெருமை பேசியே நான் எனும் சிந்தனையை வளர்க்கலாகாது.

ராஜஸம்: அகங்காரம் எனும் அசுர குணம்.

தாமஸம்: அற்பத்தனமான புத்தியை பற்றி கொண்டிருப்பது.

ஞானம்: பிறவி துன்பத்தில் இருந்து விடுதலை பெறுதல்.

மனம்: இறைவனை சதா நினைக்க வேண்டும்.

அஞ்ஞானம்: உண்மை பொருளை அறியாமல் இருப்பது.

கண்: இறைவனை காண துடிப்பது.

காது: பரநாதத்தை கேட்டு பரவசமடைவதற்கு.



கருப்பசாமி 

பதினெட்டாம் படிகளின் இருபக்கமும் ஐயனின் பரிவார தேவதைகளான பெரிய கருப்பசாமியும்,( வலிய கடுத்தசாமி) கருப்பாயி அம்மன் சமேத சிறிய கருப்பசாமியும் (கொச்சு கடுத்தசாமி) அருள் பாலிக்கின்றனர். இருமுடி தலையில் உள்ள பகதர்களை கருப்பசாமி காக்கின்றார். அடர்ந்த வனத்தில் நமக்கு காவல் கருப்பசாமிதான். எனவே பதினெட்டாம் படி ஏறுவதற்கு முன்னர் இவர்களை வணங்கி இவர்களின் உத்தரவைப் பெற்றே  பதினெட்டாம் படியில் ஏறவேண்டும். முதலில் வலது காலை வைத்து சரண கோஷத்துடன் ஐயனை தரிசிக்கப் போகின்றோம், விரதப் பலனைப் பெறப்போகிறோம்  என்று ஆனந்தமாக சத்தியமான பொன்னு பதினெட்டாம் படி ஏறுகின்றனர் பக்தர்கள். 



பதினெட்டுப் படிகளுக்கும் ஒவ்வொரு யோகம் உண்டு அவையாவன

முதல் படி-விஷாத யோகம்

பிறப்பு நிலையற்றது. நாம் செய்யும் நல்லவையும் கெட்டவையுமே நம் பாவ புண்ணியங்களை நிர்ணயிக்கும் என்று ஒவ்வொருவரும் உணர வேண்டும். இறைவன் திருவருளால் முக்தி பெற வேண்டும் என்ற ஆத்ம துடிப்பே விஷாத யோகம்.
இரண்டாம் படி- சாக்கிய யோகம்
பரமாத்மாவே எம் குரு என உணர்ந்து அவரிடம் ஆத்ம உபதேசம் பெறுவது சாக்கிய 
யோகம்.
மூன்றாம் படி -கர்ம யோகம்
கர்மயோகம் உபதேசம் பெற்றால் மட்டும் போதுமா? மனம் பக்குவம் அடைய வேண்டாமா? பலனை எதிர்பாராமல் கடமையை செய்யும் பக்குவம் கர்ம யோகம்.
நான்காம் படி -ஞானகர்ம சன்னியாச யோகம்
பாவ- புண்ணியங்கள் பற்றிக்கூட கவலைப்படாமல் எதன் மீதும் பற்றில்லாமல் பரமனை அடையும் வழியில் முன்னேறுவது ஞானகர்ம சன்னியாச யோகம் ஆகும்.
ஐந்தாம் படி -சன்னியாச யோகம்
நான் உயர்ந்தவன் என்ற ஆணவம் இல்லாமல் தான தர்மங்கள் செய்வது.
ஆறாம் படி -தியான யோகம்
கடவுளை அடைய புலனடக்கம் மிகவும் அவசியம். இந்த புலன்கள் எல்லாம் நம் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். இதுவே ஆறாவது படி.
ஏழாம் படி -பிரம்ம ஞானம்
இந்த உலகில் காண்பவை எல்லாமே பிரம்மம்தான். எல்லாமே இறைவன்தான் என உணர்வது பிரம்ம ஞானம்.
எட்டாம் படி -அட்சர பிரம்ம யோகம்
எந்நேரமும் இறைவனின் திருவடி நினைவுடன் இருப்பது. வேறு சிந்தனைகள் இன்றி இருப்பது எட்டாம் படி.
ஒன்பதாம் படி -ஆன்மிக யோகம்
கடவுள் பக்தி மட்டும் இருந்தால் பயனில்லை. ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்பதுதான் உண்மையான பக்தி என்று உணர்வது இந்தப்படி.
பத்தாம் படி -விபூதி யோகம்,
அழகு, ஆற்றல் போன்று எத்தகைய தெய்வீக குணத்தைக் கண்டாலும் அதை இறைவனாக பார்ப்பது.
பதினொன்றாம் படி -விஸ்வரூப தரிசன யோகம்
பார்க்கும் அனைத்திலும் இறைவன் குடிகொண்டுள்ளான் என்று பார்க்கும் மனப்பக்குவத்தை வளர்த்துக்கொள்வது.
பன்னிரெண்டாம் படி -பக்தி யோகம்
இன்பம்-துன்பம், ஏழை-பணக்காரன், போன்ற அனைத்து வேறுபாடுகளையும் களைந்து அனைத்திலும் சமத்துவத்தை விரும்புவது.
பதிமூன்றாம் படி -க்ஷேத்ரக்ஞ விபாக யோகம்
எல்லா உயிர்களிலும் இறைவன் வீற்றிருந்து அவர்களை இயக்குகின்றான் என்பதை உணர்தல்.
பதினான்காம் படி -குணத்ர விபாக யோகம்
வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களை அகற்றி இறைவனின் முழு அருளுக்கு பாத்திரமாவது.
பதினைந்தாம் படி -தெய்வாகர விபாக யோகம்
நல்ல குணங்களை மட்டும் வளர்த்துக்கொண்டு நம்மிடம் தெய்வாம்சத்தை அதிகரிப்பது.
பதினாறாம் படி -சம்பத் விபாக யோகம்
இறைவனின் படைப்பில் அனைவரும் சமம் என்று உணர்ந்து ஆணவம் கொள்ளாமல் நடப்பது.
பதினேழாம் படி -சிரித்தாத்ரய விபாக யோகம்
சர்வம் பிரம்மம் என்று உணர்ந்து பரப்பிரம்ம ஞானத்தை அடைவது.


பதினெட்டாம் படி -மோட்ச சன்னியாச யோகம்
உன்னையே சரணாகதி என்று அடைகிறேன் என்று இறைவன் சன்னதியில் அடைக்கலம் அடைந்து, அவன் அருள்புரிவான் என்று அவனையே சரணடைவது.

சத்தியம் நிறைந்த இந்த பத்தினெட்டுபடிகளை பக்தியோடு கடந்து வந்தால் நம் கண் எதிரே அருள் ஒளியாய் தரிசனம் தந்து அருள் புரிய காத்திருப்பான் ஐயன் ஐயப்பன் என்பதே இந்த பதினெட்டாம் படி தத்துவம்.
சத்த்தியமான பொன்னு பதினெட்டாம் படிகளே சரணம்!
சரணம்! சரணம்! சரணம் பொன் ஐயப்பா!



\\
ஹோம குண்டம்

பதினெட்டாம் படிக்கு முன்னர் இருக்க்கின்ற இம்மரத்தில்தான் தனக்கு எங்கு கோவில் கட்டவேண்டும் என்று பந்தள இராஜாவுக்கு உணர்த்த மணிகண்டன் விடுத்த அம்பு வந்து தைத்த இடம் ஆகும்.  வரும் பதிவில் ஐயனின் திவ்ய தரிசனம் பெறலாம் அன்பர்களே. 

குருசாமி திருவடிகளே சரணம் 

சுவாமியே சரணம் பொன் ஐயப்பா



ஐயப்ப தரிசனம் தொடரும் . . . . . . . .

Wednesday, January 3, 2018

சுவாமியே சரணம் ஐயப்பா -19

நீலி மலையேற்றம் 



நீலிமலை ஏற்றம்
சிவபாலனும் ஏற்றிடுவார்
காலமெல்லாம் நமக்கே
அருள் காவலனாய் இருப்பார்

இப்பதிவுகளையும்  காணலாமே 

  1   2   3   4  5  6  7  8  9  10  11  12  13  14  15  16  17  18    19   20  21


ஒரு காலத்தில் நீலி மலையேற்றமும் கரிமலையேற்றம் போலத்தான் இருந்தது. ஆனால் தற்போது சிமென்ட்  படிகள், நடுவில் கம்பிகள் இரு பக்கமும்  கடைகள் என்று வசதிகள் அதிகமாகிவிட்டன,  அதிக சிரமமில்லாமல் இம்மலையை ஏறலாம். அழுதை மலை மற்றும் கரிமலை ஏறி கால் கனத்தும், இறக்கத்தில் முழங்கால் வலியோடும் வரும் பெரிய பாதையில் வந்த பக்தர்களுக்கு இந்நீலி மலையேற்றம் மிகவும் சிரமமாகத்தான் இருக்கும்.  ஆயினும், ஐயப்பனை நெருங்கி விட்டோம் என்ற ஆனந்தத்தினால் சோர்வு தெரியாது. பக்தர்கள் களைப்பை போக்க நீலிமலை நிர்மலனே சாமியே சரணமய்யா பக்தர்கள் இங்கு மிக சப்தமாக சரண கோஷமிட்டுக் கொண்டே மலை ஏறுகின்றனர். பல இடங்களின் பக்தர்களின் வசதிக்காக சாய்வுகளையும் அமைத்துள்ளனர்.  



நீலிமலையில் வசித்த மதங்க மகரிஷி, தன் மகள் நீலியுடன் சிவனை நோக்கி தவம் செய்த தாகவும், அவளது பெயரில் இம்மலை விளங்குவதாகவும் கூறப்படுகிறது. இம்மலைப்பாதையின் துவக்கப் பகுதியில், வலது பக்கமாக ஒரு பாதை பிரிகிறது. இதை "சுப்பிரமணியர் பாதை' என்பர். இந்த வழியாகத்தான் ஐயப்பன் கோயிலுக்கு தேவையான சாமான்கள் கழுதை மூலமாக கொண்டு செல்லப்பட்டது. இன்று கழுதைகளுக்கு பதிலாக ட்ராக்டர்கள் பொருட்களை சுமந்து செல்கின்றன.  இறங்கும் போது இப்பாதையை  அதிகமான  பக்தர்கள் பயன்படுத்துகின்றனர்.. 



இவ்வழியில் பல இடங்களில் மருத்துவ உதவி மையங்கள் மற்றும் மூலிகைக்குடிநீர் வழங்கும் மையங்கள், சுவாசக் கோளாறு ஏற்பட்டால் அவர்களுக்கு உதவும் வகையில் ஆக்சிஜன் நிலையங்கள் தேவசம் போர்டினரால் அமைக்கப்பட்டுள்ளன. பக்தர்கள் நடுநடுவே  இளைப்பாற் பதினெட்டு மண்டபங்கள் சன்னிதானம் வரை உள்ளன.  நீலிமலை ஏற்றத்தில் அப்பாச்சி மேடு, இப்பாச்சி குழி என்ற சமதளப்பகுதி வருகிறது. அப்பாச்சி மேட்டில் பச்சரிசி மாவு உருண்டையை கன்னி சுவாமிகள் வீசி எறிவார்கள். வனதேவதைகளை திருப்திப்படுத்த இந்த வழிபாடு நடத்தப்படுகிறது.



ஏற்றம் சிறிது கடினம் என்பதினால் பக்தர்கள் 
தேக பலம் தா பாத பலம் தா
தேக பலம் தா என்றால் அவரும்
 தேகத்தை தந்திடுவார்
பாத பலம் தா என்றால் அவரும்
பாதத்தை தந்திடுவார்   - 


  என்று பாடிக்கொண்டே மலையேறுகின்றனர். அவ்வாறு  மலையேறினால் ஐயப்பன் 

நல்ல பாதையைக் காட்டிடுவார்
சபரி பீடமே வந்திடுவார்
சபரி அன்னையை பணிந்திடுவார்
சரங்குத்தி ஆலில் கன்னிமார்களும் 
சரத்தினைப் போட்டு வணங்கிடுவார்
சபரி மலைதனை ஏறிடுவார். 


அப்பாச்சிமேட்டைக் கடந்து சற்று நடந்தால் இயற்கை அழகு நிறைந்த ஒரு சமநிலத்தைக் காணலாம். நீலிமலையின் உச்சியில் சபரிபீடம் உள்ளது. இந்த பீடம் உள்ள பகுதியில் தான் “சபரிமலை’ என்று பெயர் தோன்றக் காரணமான சபரி அன்னை வசித்தாள்.

மதங்கொண்ட ஐம்புலன்களையும் அடக்கி தவம் செய்து தவத்தின் வலிமையால் தனது சீடர்களுடன் பிரம்மலோகம் செல்லும் பாக்கியம் பெற சபரி தவம் செய்த இடம் இதுதான். மதங்க முனிவரின் முதல் சீடரான “சபரி” மாதங்க முனிவரோடு பிரம்மலோகம் செல்லும் பாக்கியம் கிடைத்தும் இராமபிரான் மீது கொண்ட பக்தியால் அவரைப் பூலோகத்தில் பூசிப்பதற்கும் அதன் பின்னர் பிரம்மலோகம் செல்வதற்கும் பிரம்மதேவனிடம் வரத்தினைப் பெற்றுக் கொண்டு தவம் செய்து இராமபிரானைச் தரிசித்த இடமும் இதுதான்.

இந்த மூதாட்டிக்கு இராமபிரானின் மீது மிகுந்த பக்தி உண்டு. பக்தன் பகவானைத் தேடி சென்றது விஷ்ணுவின் மற்ற அவதாரங்களில்… ஆனால், பகவான் பக்தனைத் தேடி, தனக்குத்தானே 14 ஆண்டு காட்டுவாசம் என்ற தண்டனையை விதித்துக் கொண்டு வந்த அவதாரமே ஸ்ரீராம அவதாரம். அவ்வகையில், இராமபிரான் வசிஷ்டரைக் குருவாகக் கொண்டு, விஸ்வாமித்திரருக்கு தொண்டு செய்து, இன்னும் காட்டிலுள்ள பல மகரிஷிகளையும் சந்தித்து ஆசி பெற்றார். அந்த ரிஷிகளுக்கும் மேலான பக்தியைக் கொண்டவள் சபரி அன்னை. இவள், இந்த மலையில் தங்கி இராமனின் தரிசனத்திற்காக காத்திருந்தாள். அவள் என்ன செய்தாள் தெரியுமா?

இராமனுக்காக காட்டில் கிடைக்கும் இலந்தைப்ப ழங்களைப் பொறுக்கினாள். அதை கடித்துப் பார்த்து, இனிப்பானவற்றை சேர்த்து வைத்தாள். இலந்தையை காய்ந்தாலும் தின்னலாம். இராமன் வந்ததும் அந்தப் பழங்களை காணிக்கையாக்கினாள்.

தான் கடித்த பழங்களையே தந்தனள் தாய் சபரி 
தருவதற்கொன்றும் இல்லை தலவனே நீ எனை ஆதரி - என்று இந்நிகழ்வைப் போற்றிப் பாடுகின்றனர் பக்தர்கள்.




எச்சில் பழமெனக் கருதாத பகவானும் சபரியின் அன்பை அந்தப் பழங்களைச் சாப்பிட்டதன் மூலம் ஏற்றார். அவளுக்கு மோட்சம் தந்தார். அந்த பரமபக்தையின் பெயரே சபரிமலைக்கு நிலைத்து விட்டது. இங்கிருந்து சன்னிதானம் வரை சமதளமான பாதையில் ஆசுவாசமாக நடந்து செல்லலாம். இப்பகுதி மரக்கூட்டம் என்றழைக்கப்படுகின்றது. பல நூற்றாண்டிகளைக் கடந்த பிரம்மாண்ட மரங்களை காணலாம். வனத்துறையினர் அம்மரத்தை பற்றிய தகவல் பலகைகளை மரங்களில் அமைத்துள்ளனர். பெரிய மலை அணில்கள், கருங்குரங்கள் முதலிய  வன விலங்குகள் இப்பகுதியில் கண்ணில் படுகின்றன.  இந்த இடத்தில் இராமபிரானைக்  காண பக்தை சபரி அமர்ந்து தவம் செய்தார். இச்சபரிபீடத்தில் சிதறு  தேங்காய் உடைத்து வழிபாடு செய்கின்றார்கள் இந்த  ஸ்ரீசபரிபீடத்தை ஐந்தாவது கோட்டையாகக் கருதி வழிபடுகிறார்கள்.


சபரி பீடத்திற்கு முன்பாக சரம் வழிபாடு கவுண்டர் உள்ளது. . சபரிபீடத்திற்கடுத்தாக வருவது சரங்குத்தி ஆல். இங்கு கன்னி ஐயப்பன்மார் தங்களுடைய கன்னி யாத்திரையை உறுதி செய்து கொள்ளும் கட்டம் இதுதான். இந்த இடத்தில் தங்களுக்கு குருசாமியால் எருமேலிப்பேட்டையில் கொடுக்கப்பட்ட தங்களுடன் அதி ஜாக்கிரதையாய் காட்டுவழித் துணையாய் கொண்டு வந்த சரம், வில், வேல் ஆகியவற்றை அந்த சரங்குத்தி ஆல் என்ற இடத்தில் விடுக்கின்றனர்..

இச்சமவெளிப்பகுதியும் முழுதுமாக சிமென்ட் பாதையாக மாறி விட்டது. அநேகமாக அடியோங்கள் இரவு மலையில் தங்குவோம் எனவே இம்மலையேறும் சமயம் இரவாகத்தான் இருக்கும்.   பாதையின் இருபுறமும்   விளக்குள் அமைத்துள்ளனர். அதனால் பகல் போலவே இருக்கின்றது. நெடிதுயர்ந்த மரங்கள் இருபக்க்மும் இன்னும் அமைந்துள்ளன வெட்டாமல் விட்டிருக்கின்றனர். பக்தர்களின் வசதிக்காக நவீன கழிப்பிடங்களையும் அமைத்துள்ளனர். சன்னிதானத்திலிருந்து  வரும் ஸ்லோகங்களையும் கேட்டுக்கொண்டே சரண கோஷத்துடன் ஐயனைக் காணப்போகின்றோம் என்ற ஆனந்தத்துடனும் நடை போடுகின்றோம். 


சரங்குத்தி தாண்டியவுடன் தெரியும் ஐயப்பனின்  தங்க கோயிலை தரிசித்தவுடனேயே, பஞ்சேந்திரியங்களையும் தட்டி எழுபபி மனம் உற்சாகமாகிறது. சரங்குத்தியிலிருந்தே ஐயப்பனின் நான்காவது மலையான சபரிமலை ஆரம்பமாகிறது. நெருங்க நெருங்க “சாமியே சரணம் (ஐயப்பா’ என்று பக்தர்கள் முழங்கும் சரண கோஷம் விண்ணைப் பிளக்கிறது. அடுத்த பதிவில் பதினெட்டாம்படியேறலாம் அன்பர்களே.

குருசாமி திருவடிகளே சரணம் 

சுவாமியே சரணம் பொன் ஐயப்பா



ஐயப்ப தரிசனம் தொடரும் . . . . . . . .

Monday, January 1, 2018

சுவாமியே சரணம் ஐயப்பா -18

பம்பா கணபதி தரிசனம் 

அன்பர்கள் அனைவருக்கும் இனிய ஆங்கிலப்புத்தாண்டு  (2018)  வாழ்த்துக்கள்


இப்பதிவுகளையும்  காணலாமே   : 

 1   2   3   4  5  6  7  8  9  10  11  12  13  14  15  16  17   18   19   20   21

பெருவழியில் செல்லும் பக்தர்களும், வாகனம் மூலம் பம்பை வந்து சேரும் பக்தர்களும் நீலிமலையில் ஏறும் போது முதலில் பம்பா கணபதியை வழிபடுகின்றனர். அதற்கு முன்னர் இணையம் மூலமாக தரிசனத்திற்கு பதிவு செய்துள்ள பக்தர்கள் முன்பதிவு நிலையத்திற்கு சென்று அதற்கான  அனுமதி சீட்டை  பெற்றுக்கொள்கின்றனர். பெருவழியில் வருபவர்கள் சுவாமியை தரிசனம் செய்யும் வன்ணம் சபரிமலையிலும் செய்தால் நல்லது. திருப்பதியில் மலையேறி வருபவர்களுக்கு தனி வரிசை உள்ளது போல இங்கும் அமுல்படுத்தலாம். அதற்கான அடையாள சீட்டுகளை கரிமலை உச்சியில் அல்லது இறக்கத்தில் ஏதாவது ஒரு இடத்தில் வழங்கலாம்..



பம்பா கணபதி சன்னதி


அனைத்து பக்தர்களும் ஐயப்ப சுவாமியை தரிசிப்பதற்காக செல்வதற்கு முன் பம்பா கணபதியை தரிசிக்கின்றனர். இவ்வளாகத்தில் ஆதி மூல கணபதி, பகவதி (பார்வதி), இராமர் மற்றும் அனுமன் சன்னதிகள் இங்கு  அமைந்துள்ளன. அனுமன் இராமன் சன்னதிக்கிடையில் பக்தர்கள் இளைப்பாறுவதற்கு ஏதுவாக  மண்டபம் அமைத்துள்ளனர்.
இராமாயண காலத்தில் இராமபிரான் சபரிக்கு அருளிய போது அனுமனுக்கு கலிகாலத்தில் என்னை பார்த்தவாறு இங்கு எழுந்தருளியிருப்பாய் என்று அருளியபடி அனுமன் சபரி மலை ஐயப்பனை பார்த்தவாறு எழுந்தருளியுள்ளார். 


இராமர் -  அனுமன் சன்னதிகள் 


கணபதியை தரிசித்து இருமுடிக் கட்டில் சுமந்து வந்த ஒரு தேங்காய்களில் ஒன்றை இங்கே சிதறு காயாக உடைத்து விட்டே பக்தர்கள் மலையேறுகின்றனர். அனுமன்,  இராமபிரான் கொடுத்த வரத்தின்படி ஐயப்பனைப் பார்த்தவாறு எழுந்தருளியுள்ளார். தற்போது பம்பையில் கட்டு நிறைப்பதற்கான வசதிகள் உள்ளன.  பந்தளராச வம்சத்தினரின் பிரதிநிதிகளை வணங்கி, தட்சணை கொடுத்து அனுமதி பெற்றுக்கொண்டு நீலி மலை ஏறத்தொடங்குகின்றனர்.





ஐயப்பன் ஜனனம் 

வன் புலி வாகனன்


பம்பையிலிருந்து சன்னிதானம் வரை சென்று வர டோலி வசதியும்  உள்ளது. முடியாதவர்கள்  மற்றும் வயதானவர்கள் இவ்வசதியை பயன் படுத்திக் கொள்ளலாம். மலையேறும் போது ஐயப்பன் ஜனனம், வன்புலி வாகனனாக ஐயன் வரும் சுதைச்சிற்பங்களை தரிசித்துக்கொண்டே நீலி மலையேற்றத்தைத் துவக்குகின்றோம். 



சிதறு தேங்காய் உடைப்பதன் தத்துவம்: வெளிப்படையாக விநாயருக்கு சிதறு தேங்காய் உடைப்பது என்பது நம்து விகனங்கள்(தடைகள்) அனைத்தும் அந்த தேங்காய் உடைந்து சிதறுவது போல் மறையும் என்று பொருள் படும், ஆனால் அதன் உண்மையான தாத்பரியம் அகங்கார மண்டையோட்டை உடைத்தால் உள்ளே உள்ள அமிர்தரசமாகிய இளநீர் இருக்கும் என்பதை உணர்த்துகின்றது. 




குருசாமி திருவடிகளே சரணம் 

சுவாமியே சரணம் பொன் ஐயப்பா



ஐயப்ப தரிசனம் தொடரும் . . . . . . . .