Wednesday, January 3, 2018

சுவாமியே சரணம் ஐயப்பா -19

நீலி மலையேற்றம் 



நீலிமலை ஏற்றம்
சிவபாலனும் ஏற்றிடுவார்
காலமெல்லாம் நமக்கே
அருள் காவலனாய் இருப்பார்

இப்பதிவுகளையும்  காணலாமே 

        4  5  6  7  8  9  10  11  12  13  14  15  16  17  18    19   20  21


ஒரு காலத்தில் நீலி மலையேற்றமும் கரிமலையேற்றம் போலத்தான் இருந்தது. ஆனால் தற்போது சிமென்ட்  படிகள், டுவில் கம்பிகள் இரு பக்கமும்  கடைகள் என்று வசதிகள் அதிகமாகிவிட்டன,  அதிக சிரமமில்லாமல் இம்மலையை ஏறலாம். அழுதை மலை மற்றும் கரிமலை ஏறி கால் கனத்தும், இறக்கத்தில் முழங்கால் வலியோடும் வரும் பெரிய பாதையில் வந்த பக்தர்களுக்கு இந்நீலி மலையேற்றம் மிகவும் சிரமமாகத்தான் இருக்கும்.  ஆயினும், ஐயப்பனை நெருங்கி விட்டோம் என்ற ஆனந்தத்தினால் சோர்வு தெரியாது. பக்தர்கள் களைப்பை போக்க நீலிமலை நிர்மலனே சாமியே சரணமய்யா பக்தர்கள் இங்கு மிக சப்தமாக சரண கோஷமிட்டுக் கொண்டே மலை ஏறுகின்றனர். பல இடங்களின் பக்தர்களின் வசதிக்காக சாய்வுகளையும் அமைத்துள்ளனர்.  



நீலிமலையில் வசித்த மதங்க மகரிஷி, தன் மகள் நீலியுடன் சிவனை நோக்கி தவம் செய்த தாகவும், அவளது பெயரில் இம்மலை விளங்குவதாகவும் கூறப்படுகிறது. இம்மலைப்பாதையின் துவக்கப் பகுதியில், வலது பக்கமாக ஒரு பாதை பிரிகிறது. இதை "சுப்பிரமணியர் பாதை' என்பர். இந்த வழியாகத்தான் ஐயப்பன் கோயிலுக்கு தேவையான சாமான்கள் கழுதை மூலமாக கொண்டு செல்லப்பட்டது. இன்று கழுதைகளுக்கு பதிலாக ட்ராக்டர்கள் பொருட்களை சுமந்து செல்கின்றன.  இறங்கும் போது இப்பாதையை  அதிகமான  பக்தர்கள் பயன்படுத்துகின்றனர்.. 



இவ்வழியில் பல இடங்களில் மருத்துவ உதவி மையங்கள் மற்றும் மூலிகைக்குடிநீர் வழங்கும் மையங்கள், சுவாசக் கோளாறு ஏற்பட்டால் அவர்களுக்கு உதவும் வகையில் ஆக்சிஜன் நிலையங்கள் தேவசம் போர்டினரால் அமைக்கப்பட்டுள்ளன. பக்தர்கள் நடுநடுவே  இளைப்பாற் பதினெட்டு மண்டபங்கள் சன்னிதானம் வரை உள்ளன.  நீலிமலை ஏற்றத்தில் அப்பாச்சி மேடு, இப்பாச்சி குழி என்ற சமதளப்பகுதி வருகிறது. அப்பாச்சி மேட்டில் பச்சரிசி மாவு உருண்டையை கன்னி சுவாமிகள் வீசி எறிவார்கள். வனதேவதைகளை திருப்திப்படுத்த இந்த வழிபாடு நடத்தப்படுகிறது.



ஏற்றம் சிறிது கடினம் என்பதினால் பக்தர்கள் 
தேக பலம் தா பாத பலம் தா
தேக பலம் தா என்றால் அவரும்
 தேகத்தை தந்திடுவார்
பாத பலம் தா என்றால் அவரும்
பாதத்தை தந்திடுவார்   - 


  என்று பாடிக்கொண்டே மலையேறுகின்றனர். அவ்வாறு  மலையேறினால் ஐயப்பன் 

நல்ல பாதையைக் காட்டிடுவார்
சபரி பீடமே வந்திடுவார்
சபரி அன்னையை பணிந்திடுவார்
சரங்குத்தி ஆலில் கன்னிமார்களும் 
சரத்தினைப் போட்டு வணங்கிடுவார்
சபரி மலைதனை ஏறிடுவார். 


அப்பாச்சிமேட்டைக் கடந்து சற்று நடந்தால் இயற்கை அழகு நிறைந்த ஒரு சமநிலத்தைக் காணலாம். நீலிமலையின் உச்சியில் சபரிபீடம் உள்ளது. இந்த பீடம் உள்ள பகுதியில் தான் சபரிமலை என்று பெயர் தோன்றக் காரணமான சபரி அன்னை வசித்தாள்.

மதங்கொண்ட ஐம்புலன்களையும் அடக்கி தவம் செய்து தவத்தின் வலிமையால் தனது சீடர்களுடன் பிரம்மலோகம் செல்லும் பாக்கியம் பெற சபரி தவம் செய்த இடம் இதுதான். மதங்க முனிவரின் முதல் சீடரான சபரிமாதங்க முனிவரோடு பிரம்மலோகம் செல்லும் பாக்கியம் கிடைத்தும் இராமபிரான் மீது கொண்ட பக்தியால் அவரைப் பூலோகத்தில் பூசிப்பதற்கும் அதன் பின்னர் பிரம்மலோகம் செல்வதற்கும் பிரம்மதேவனிடம் வரத்தினைப் பெற்றுக் கொண்டு தவம் செய்து இராமபிரானைச் தரிசித்த இடமும் இதுதான்.

இந்த மூதாட்டிக்கு இராமபிரானின் மீது மிகுந்த பக்தி உண்டு. பக்தன் பகவானைத் தேடி சென்றது விஷ்ணுவின் மற்ற அவதாரங்களில்ஆனால், பகவான் பக்தனைத் தேடி, தனக்குத்தானே 14 ஆண்டு காட்டுவாசம் என்ற தண்டனையை விதித்துக் கொண்டு வந்த அவதாரமே ஸ்ரீராம அவதாரம். அவ்வகையில், இராமபிரான் வசிஷ்டரைக் குருவாகக் கொண்டு, விஸ்வாமித்திரருக்கு தொண்டு செய்து, இன்னும் காட்டிலுள்ள பல மகரிஷிகளையும் சந்தித்து ஆசி பெற்றார். அந்த ரிஷிகளுக்கும் மேலான பக்தியைக் கொண்டவள் சபரி அன்னை. இவள், இந்த மலையில் தங்கி இராமனின் தரிசனத்திற்காக காத்திருந்தாள். அவள் என்ன செய்தாள் தெரியுமா?

ராமனுக்காக காட்டில் கிடைக்கும் இலந்தைப்ப ழங்களைப் பொறுக்கினாள். அதை கடித்துப் பார்த்து, இனிப்பானவற்றை சேர்த்து வைத்தாள். இலந்தையை காய்ந்தாலும் தின்னலாம். இராமன் வந்ததும் அந்தப் பழங்களை காணிக்கையாக்கினாள்.

தான் கடித்த பழங்களையே தந்தனள் தாய் சபரி 
தருவதற்கொன்றும் இல்லை தலவனே நீ எனை ஆதரி - என்று இந்நிகழ்வைப் போற்றிப் பாடுகின்றனர் பக்தர்கள்.




எச்சில் பழமெனக் கருதாத பகவானும் சபரியின் அன்பை அந்தப் பழங்களைச் சாப்பிட்டதன் மூலம் ஏற்றார். அவளுக்கு மோட்சம் தந்தார். அந்த பரமபக்தையின் பெயரே சபரிமலைக்கு நிலைத்து விட்டது. இங்கிருந்து சன்னிதானம் வரை சமதளமான பாதையில் ஆசுவாசமாக நடந்து செல்லலாம். இப்பகுதி மரக்கூட்டம் என்றழைக்கப்படுகின்றது. பல நூற்றாண்டிகளைக் கடந்த பிரம்மாண்ட மரங்களை காணலாம். வனத்துறையினர் அம்மரத்தை பற்றிய தகவல் பலகைகளை மரங்களில் அமைத்துள்ளனர். பெரிய மலை அணில்கள், கருங்குரங்கள் முதலிய  வன விலங்குகள் இப்பகுதியில் கண்ணில் படுகின்றன.  இந்த இடத்தில் இராமபிரானைக்  காண பக்தை சபரி அமர்ந்து தவம் செய்தார். இச்சபரிபீடத்தில் சிதறு  தேங்காய் உடைத்து வழிபாடு செய்கின்றார்கள் இந்த  ஸ்ரீசபரிபீடத்தை ஐந்தாவது கோட்டையாகக் கருதி வழிபடுகிறார்கள்.


சபரி பீடத்திற்கு முன்பாக சரம் வழிபாடு கவுண்டர் உள்ளது. . சபரிபீடத்திற்கடுத்தாக வருவது சரங்குத்தி ஆல். இங்கு கன்னி ஐயப்பன்மார் தங்களுடைய கன்னி யாத்திரையை உறுதி செய்து கொள்ளும் கட்டம் இதுதான். இந்த இடத்தில் தங்களுக்கு குருசாமியால் எருமேலிப்பேட்டையில் கொடுக்கப்பட்ட தங்களுடன் அதி ஜாக்கிரதையாய் காட்டுவழித் துணையாய் கொண்டு வந்த சரம், வில், வேல் ஆகியவற்றை அந்த சரங்குத்தி ஆல் என்ற இடத்தில் விடுக்கின்றனர்..

இச்சமவெளிப்பகுதியும் முழுதுமாக சிமென்ட் பாதையாக மாறி விட்டது. அநேகமாக அடியோங்கள் இரவு மலையில் தங்குவோம் எனவே இம்மலையேறும் சமயம் இரவாகத்தான் இருக்கும்.   பாதையின் இருபுறமும்   விளக்குள் அமைத்துள்ளனர். அதனால் பகல் போலவே இருக்கின்றது. நெடிதுயர்ந்த மரங்கள் இருபக்க்மும் இன்னும் அமைந்துள்ளன வெட்டாமல் விட்டிருக்கின்றனர். பக்தர்களின் வசதிக்காக நவீன கழிப்பிடங்களையும் அமைத்துள்ளனர். சன்னிதானத்திலிருந்து  வரும் ஸ்லோகங்களையும் கேட்டுக்கொண்டே சரண கோஷத்துடன் ஐயனைக் காணப்போகின்றோம் என்ற ஆனந்தத்துடனும் நடை போடுகின்றோம். 


சரங்குத்தி தாண்டியவுடன் தெரியும் ஐயப்பனின்  தங்க கோயிலை தரிசித்தவுடனேயே, பஞ்சேந்திரியங்களையும் தட்டி எழுபபி மனம் உற்சாகமாகிறது. சரங்குத்தியிலிருந்தே ஐயப்பனின் நான்காவது மலையான சபரிமலை ஆரம்பமாகிறது. நெருங்க நெருங்க சாமியே சரணம் (ஐயப்பாஎன்று பக்தர்கள் முழங்கும் சரண கோஷம் விண்ணைப் பிளக்கிறது. அடுத்த பதிவில் பதினெட்டாம்படியேறலாம் அன்பர்களே.

குருசாமி திருவடிகளே சரணம் 

சுவாமியே சரணம் பொன் ஐயப்பா



ஐயப்ப தரிசனம் தொடரும் . . . . . . . .

No comments: