Thursday, August 18, 2016

மலை நாட்டு திவ்ய தேச யாத்திரை -1


அனந்த பத்மநாப சுவாமி - திருவனந்தபுரம்

பரமபதத்திலே   வியூக நிலையிலே  அமர்ந்த கோலத்தில் திருமகள், நிலமகள், நீளாதேவிகளுடன்,  நித்திய சூரிகளும் புடைசூழ  எழுந்தருளிச் சேவை சாதிக்கின்ற  அந்த மாயன்,  பாற்கடலில் பரவாசுதேவனாக  மாயத்துயில் கொண்டுள்ளார், அவரே தீயவர்களை அழித்து நல்லவர்களைக் காக்க மச்ச, கூர்ம, வராக, நரசிம்ம, வாமன, பரசுராம, ராம, பலராம, கிருஷ்ண, கல்கி  அவதாரங்கள் எடுத்து  விபவ ரூபமாக  அருள் வழங்குகின்றார். அந்தப் பரம்பொருளே  அந்தர்யாமியாக எல்லா ஜீவராசிகளிலும் விளங்குகின்றார். நாம் எல்லோரும் உய்யும் பொருட்டு, ஒரு பெயரும், ஒரு உருவமும் இல்லாத அவரே   அர்ச்சாவதாரமாகப்  பூவுலகில்  பல்வேறு தலங்களில் எழுந்தருளிச் சேவைச் சாதிக்கின்றார்.  இந்த ஐந்து நிலைகளுக்கும் உரியவர் அவர் ஒருவரே.

திருமாலாகிய அவரின் பேர் எழிற் பொய்கையுள் ஆழ மூழ்கிக் குளித்துக் களித்து கவி பாடியவர்கள் ஆழ்வார்கள். இவர்கள்  எம்பெருமானின் திருவருளினால் மயர்வற மதிநலம் பெற்றுத் “திவ்யப் பிரபந்தத்தை”  நாம் எல்லோரும் உய்ய அருளியவர்கள் எனவே “திவ்ய சூரிகள்”, எம்பெருமானின் அம்சமாக பூமியில் அவதரித்தவர்கள். இவர்கள் மங்களாசாசனம் செய்தத் திருப்பதிகள் “திவ்ய தேசங்கள்”  ஆகும்.  இவை மூன்றும் “திவ்ய த்ரயம்” என்றழைக்கப்படுகின்றன. திவ்யம் என்ற பதத்திற்கு தெய்வ சம்பந்தம் உடையது என்று பொருள்.

இந்தத் திவ்யப் பிரபந்தங்களுக்கு  மூன்று சிறப்புகள் உள்ளன. அவையாவன பிரமாணம், பிரமேயம் மற்றும் பிரமாதா ஆகும்.  பிரமாணம் – உண்மை அறிவிற்கு கருவியாயிருப்பது (திவ்வியப் பிரபந்தங்கள்). பிரமேயம் – பிரமாணத்தால் அறியப்படும் பொருள் (திவ்விய தேசங்கள்). பிரமாதா – உண்மை அறிவுடையோர்,  திவ்விய சூரிகளாகிய ஆழ்வார்கள். இவ்வாறு அனைத்துமே தெய்வ சம்பந்தமான  சிறப்பு பெற்றவை. எனவேதான் மணவாள மாமுனிகளும் 

ஆழ்வார்கள் வாழி அருளிச் செயல் வாழி
தாழ்வாதுமில் குரவர் தாம் வாழி
ஏழ்பாரும் உய்ய அவர்கள் உரைத்தவைகள் தான் வாழி
செய்யமறை தன்னுடனே சேர்த்து -   என்று மங்களாசாசனம் செய்துள்ளார்.
ஸ்ரீவல்லபன் - திருவல்லவாழ்

எனவே வேதமே திவ்வியப் பிரபந்தகளாகின. நம்மாழ்வாரின் நான்கு அருளிச் செயல்கள் நான்கு வேதங்கள் ஆகின. திருமங்கையாழ்வாரின் ஆறு அருளிச் செயல்கள் அதற்கான அங்கங்களாகின. ஆண்டாள் மற்றும் மதுரகவி ஆழ்வார்  இயற்றியவை தவிர மற்ற நூல்கள் உபாகமங்கள் ஆயின. வேதமே எம்பெருமானின் நிலைக்கு ஏற்ப மாறி வரும் முறையில் தமிழாகித் திவ்வியப் பிரபந்தங்களாக அவதரித்தன என்பது சம்பிரதாயம். ஆகையால் ஆழ்வார்களின் அருளிச் செயல்களான திவ்வியப் பிரபந்தங்கள் உபய வேதாதங்கள் ஆகும்..

ஓம் நம:  முதலாயிரம்.
நாராயணாய : திருமொழி
கீதா சரமச் சுலோகம் : இயற்பாக்கள்
த்வயம் : திருவாய் மொழி

திருப்பல்லாண்டு “ஓம்” என்ற பிரணவத்தின் விரிவு, “கண்ணி நுண் சிறு தாம்பு   - நம:”,  பெரிய திருமொழி  “நாராயண” என்கிற பரம் பொருளின் விளக்கம். இவ்வாறு முதலாயிரமும்  இரண்டாமாயிரமுமே திருமந்திரம்.

நம்மாழ்வாரின் திருவாய் மொழியின் 
முதல்பத்து : ஸ்ரீமந்
இரண்டாம்பத்து : நாராயண
மூன்றாம்பத்து : சரணௌ
நான்காம்பத்து : சரணம்
ஐந்தாம்பத்து : ப்ரபத்யே
ஆறாம்பத்து : ஸ்ரீமதே
ஏழாம்பத்து : நாராயண
எட்டாம்பத்து : நாராயண
ஒன்பதாம்பத்து : ஆய
பத்தாம்பத்து : நம:
அதாவது திருமகளோடு கூடிய நாராயணனின் திருவடிகளை புகலிடமாகப் பற்றுகின்றேன். திருமகளோடு கூடிய நாராயணனுக்கு எல்லா அடிமைகளையும் செய்யப் பெறுவேன் என்னும் நான்காமாயிரமாகிய திருவாய்மொழியே த்வயம். 

சர்வ தர்மாந் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ |
அஹம் த்வா ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மாசுச: ||

அதாவது “என்னை அடைவதற்கு அனைத்து நெறிகளையும் விட்டு என் ஒருவனையே சரணமாகப் பற்று. நான் உன்னை என்னை அடையவிடாமல் தடுக்கும் சர்வ பாபங்களிலிருந்தும் விடுவித்து என்னை அடைய வைப்பேன்”  என்னும் கீதா சரம (இறுதியான) சுலோகம் சரணாகதி என்னும் பிரபத்தியாகும். அதாவது இறைவனையே உபாயமாகக் கொள்வதாகும். மூன்றாமாயிரமாகிய இயற்பாக்களே  கீதா சரம சுலோகம்.

இவ்வாறு ஸ்ரீவைணவத்தின் திருமந்திரம், த்வயம், கீதா சரமசுலோகம், ஆகிய  அனைத்து மந்திரங்களையும் உள்ளடக்கியத் திவ்விய பிரபந்தமாம் அருளிச் செயல்  பெற்ற திவ்விய தேசங்களை “உகந்தருளிய நிலங்கள்” என்று கூறுவது வைணவ மரபாகும்.

ஈரிருபதாம் சோழம் ஈரொன்பதாம் பாண்டி
ஓர் பதின்மூன்றாம் மலைநாடு ஓரிரண்டாம் – சீர்நடுநாடு
ஆறோடு ஈரெட்டாம் தொண்டை அவ்வடநாடு ஆறிரண்டு
கூறு திருநாடு ஒன்றாக் கொள்.

என்ற பழம்பாடலின்படி கங்கையின் புனிதமான காவிரி பாய்ந்து வளம் பெருக்கும் சோழ நாட்டில் பூலோக வைகுண்டமாம் திருவரங்கம் முதலாக  40 திவ்ய தேசங்கள் அமைந்துள்ளன, தண்பொருநை என்னும் தாமிரபரணி பாயும் பாண்டிநாட்டில் 18 திவ்ய தேசங்கள் அமைந்துள்ளன. வேழமுடைத்து மலைநாடு என்ற சிறப்புப் பெற்ற அன்றைய சேரநாடு,   இன்றைய கேரளத்தில்  13 திவ்ய தேசங்கள் அமைந்துள்ளன, நடுநாட்டில் 2 திவ்ய தேசங்களும்,  திருக்கச்சி அடங்கிய தொண்டைநாட்டில்  22 திவ்ய தேசங்களும், தமிழகம் அல்லாத  வடநாட்டில் 12 திவ்ய தேசங்களும், திருவைகுந்தமாம் திருநாடு ஒன்றாகும் என்பது இப்பாடலின் விளக்கம் ஆகும்.



ஆதி கேசவர் - திருவாட்டாறு 
ஆக மொத்தம் திவ்ய தேசங்கள் மொத்தம் 108 ஆகும். தற்போது 84 திவ்ய தேசங்கள் நமது தமிழ்நாட்டிலும், 11 திவ்ய தேசங்கள் கேரளத்திலும், 2 திவ்ய தேசங்கள் ஆந்திர பிரதேசத்திலும், 7 திவ்ய தேசங்கள் உத்திரபிரதேசம் மற்றும் உத்தராகாண்ட் மாநிலங்களிலும், ஓர் திவ்ய தேசம் குஜராத்திலும் ஆக 105 திவ்ய தேசங்கள் நமது பாரதத்திருநாட்டிலும், ஓர் திவ்ய தேசம் நேபாள  நாட்டிலும் அமைந்துள்ளன. 

மண்ணுலகிலுள்ள இந்த  106 திவ்ய தேசங்களை மட்டுமே நாம் பூத உடலுடன் சென்றுச் சேவிக்க முடியும். விண்ணுலகில் உள்ள திருப்பாற்கடலும், ஸ்ரீவைகுண்டமும்  அவன் அருளின்றி கிட்டாது என்பர் ஆன்றோர்கள். திருப்பாற்கடல் ஷீராப்திநாதன் – கடல்மகள் நாச்சியார் வீற்றிருக்கும் தலம்.  திருப்பரமபதம் அல்லது வைகுந்தம் - பரமபதநாதன் - பெரிய பிராட்டியார் உறைந்திருக்கும் இடம். இவை இரண்டும் கடைசி நிலையாகிய வீடு பேறு அல்லது மோட்சம் அல்லது முக்தி என்ற நிலையை எய்திச் செல்லும் இடமாகும்.


மலை நாட்டு அம்பலம் 

இம்மையில்  இந்த 106  திவ்ய தேசங்களையும் சேவித்தால் மற்ற இரண்டையும் சேவித்து பெருமாளுக்கு கைங்கர்யம் செய்ய முடியும் என்பது ஐதீகம். ஆகவே திருவைணவர்கள் இந்த 106 திவ்யதேசங்களையும் தேடித் தேடிச் சென்று நாடி நாடி நரசிங்கா! நரசிங்கா! என்றுச் சேவிக்கின்றனர். அடியேனும் இவ்வாறு மலைநாட்டு திவ்ய தேசங்களைச் சேவிக்க சென்ற அனுபவங்களை இந்நூலில்  காணலாம் அன்பர்களே.


மலை நாட்டு திவ்ய தேச பெருமாள்களை  திவ்யமாக சேவிப்பதற்கு முன்னால் வம்மின்  அன்பர்களே கேரளக் கோவில்களின் தனித்தன்மைகளைப் பற்றிக் காணலாம். நமது தமிழ்நாட்டு ஆலயங்களைப் போல கேரள ஆலயங்கள் பிரம்மாண்டம் மற்றும் கலை அம்சம் நிறைந்தவையாக இல்லாவிட்டாலும் இக்கோவில்களில் எளிமையும், ஒழுங்கும், தூய்மையும், நேரம் தவறாமையும்,  சிரத்தையும்  நம்மை அதிசயிக்க வைக்கின்றன.

இங்கு திருக்கோவில்கள் “அம்பலம்” என்றழைக்கப்படுகின்றன. இவை நம்முடைய கோவில்களைப் போல பிரம்மாண்டமானவை அல்ல, நெடிதுயர்ந்த இராஜ கோபுரங்கள் இல்லை. எளிமையாக இயற்கையுடன் இயைந்தவாறு அமைந்துள்ளன. மலைப்பகுதி என்பதால்  கட்டிடங்கள் பொதுவாக  மரத்தால் ஆனவை. கூரைகள் எல்லாம் பொதுவாக  ஓடு வேய்ந்தவையாகவே உள்ளன. அதிகமாக மழை பெய்யும் பிரதேசம் என்பதால் மழை நீர் வழிந்து ஓடும் படியாக எல்லா அமைப்புகளுமே சாய்ந்த கூரை கொண்டவையாக அமைந்துள்ளதைக் காணலாம். அதுவும் அனைத்தும் தாழ் கூரையாகவே அமைந்துள்ளன. சன்னதிக்குள் நுழையும் போதே குனிந்து பணிவாகத்தான்  நாம்  செல்ல வேண்டும்.  மரச்சிற்பங்கள் மற்றும் மூலிகை வர்ண  ஓவியங்கள், விளக்குகள், யானைகள், தூய்மை மற்றும் காலம் தவறாமை,  ஆகியவை  இக்கோவில்களின் தனி சிறப்பு ஆகும்

“தேகோ தேவாலயஹ ப்ரோக்தோ ஜீவோ தேவ: சதாசிவ:” அதாவது மனித உடலே ஆலயம் அதில் உள்ள ஆத்மாவே சதாசிவன்  என்று குலார்ணவ தந்த்ரம் என்ற நூலில் கூறியுள்ளபடி கேரளக் கோவில்களின் அமைப்பு மனித உடலைப் போல அமைக்கப்படுகின்றது. தேவ தேவியரின் கர்ப்பகிரகம் இங்கு “ஸ்ரீகோவில்” என்று அழைக்கப்படுகின்றது அது சிரசு என்பது ஐதீகம். அதில் தெய்வ மூர்த்தம் சகஸ்ரார பத்மமாக  விளங்குகின்றது.

ஸ்ரீகோவில்  சதுர வடிவம், அல்லது செவ்வக வடிவம் கொண்டதாக இருந்தால் விமானம் பிரமிட் போல அமைந்துள்ளது, வட்ட வடிவில் ஸ்ரீகோவில் உள்ள ஆலயங்களில், கூம்பு அதாவது தொப்பி போல விமானம் அமைந்துள்ளன. ஒன்பது மலை நாட்டு திவ்விய தேசங்களில் இது போன்ற விமானங்களை  சேவிக்கலாம்.  விமானத்தில் பொதுவாக  ஓடுதான் வேய்ந்துள்ளனர், சில ஆலயங்களில் தாமிரம், மற்றும் பொன் தகடும் வேய்ந்துள்ளனர்  சில ஆலயங்களில் இரண்டடுக்கு மூன்றடுக்கு விமானங்களும் உள்ளன, சில  ஆலயங்களில்  நீள் வட்ட ஸ்ரீகோவிலுடன் கஜபிருஷ்ட  விமானத்தையும் காணலாம். விமானத்தின் உச்சியில் உள்ள கலசம் “தாழிக்கக்குடம்” என்றழைப்படுகின்றது.

பல திவ்ய தேசங்களின் கர்ப்பகிரக சுவர்களில் கேரள பாணி ஓவியங்கள் அருமையாக வரையப்பட்டுள்ளன, இன்றும் இயற்கை மூலிகைவர்ணங்களையே இந்த ஓவியங்களை வரையப் பயன்படுத்துகின்றனர் என்பது சிறப்பு. சில ஆலயங்களில் கூரையிலிருந்து எழிலாக விளக்குகள் தொங்குகின்றன.  கர்ப்பகிரகத்திற்கு முன் உள்ள படிகள் சோபனம் என்றழைக்கப்படுகின்றன. அவற்றில் பூசை செய்யும் போத்திகள் மட்டுமே ஏற அனுமதிக்கப்படுகின்றனர். சில ஆலயங்களில் சோபனத்தின்  இருபுறமும் துவார பாலகர்கள் அமைத்துள்ளனர்.

கர்ப்பகிரகத்தை (ஸ்ரீகோவில்) ஒட்டிய  உள் பிரகார சுற்று மண்டபம் கர்ப்பகிரகம் எவ்விதம் இருந்தாலும் செவ்வகமாகவே அமைந்துள்ளது. இந்த பிரகாரம் “அந்தராளம்”, “பிரதக்ஷிண வட்டம்” அல்லது “பலி வட்டம்” என்றழைக்கப்படுகின்றது. இந்த பிரகாரம் திருமுகமாக கருதப்படுகின்றது இச்சுற்றில்  ஸ்ரீகோவிலை ஒட்டி கிழக்குத் திசையில் இந்திரன், அக்னி, பிரம்மா, தென் திசையில் யமன், சாஸ்தா,   ப்ராஹ்மி, மாஹேஸ்வரி,  கௌமாரி, வைஷ்ணவி, வராஹி, இந்திராணி, சாமுண்டி ஆகிய சப்த மாதர்கள், மேற்குத்திக்கில்  நிருதி, வருணன், வாயு வடக்கு திசையில்  குபேரன், ஈசானன்  ஆகிய அஷ்டதிக் பாலகர்கள்,  மற்றும் வீரபத்திரர், கணபதி, சாஸ்தா, அனந்தன், துர்கா, சுப்பிரமணியர், நிர்மால்யதாரி, ஆகியோரை குறிக்கும் பலிக்கற்கள் அமைந்துள்ளன, பொதுவாக இவை பித்தளை கவசம் பூண்டவைகளாக உள்ளன. சில ஆலயங்களில்  சப்த மாதர்களுக்கு மேல் கூரை உள்ளது இது ”மாத்ருசாலா” என்றழைக்கப்படுகின்றது. இங்கு உற்சவ பலி பூஜைகள் நடைபெறுகின்றன.

ஸ்ரீகோவிலின் படிகளுக்கு எதிரே உள்ள நான்கு கால் மண்டபம் “நமஸ்கார மண்டபம்” என்றழைக்கப்படுகின்றது. ஆராதனைக்குப் பின்னர் போத்திகள் இதில் ஏறி சாஷ்டாங்க நமஸ்காரம் செய்கின்றனர். மேலும் வேத ஜபம் மற்றும் கலசபூஜை ஆகியவை இம்மண்டபத்தில் நடைபெறுகின்றது எனவே இம்மண்டபம் “கலசமண்டபம்” என்றும் அழைக்கப்படுகின்றது. நமஸ்கார மண்டபத்தின் கூரையும் பிரமிட் வடிவத்தில் உள்ளது,  உச்சியில் கலசம் அமைத்துள்ளனர். நான்கு மரத்தூண்களிலும் கூரையின் உட்புறத்தில் அருமையான மர சிற்பங்கள் அமைந்துள்ளன. பெரும்பாலான கோவில்களில் இம்மண்டபத்தின் உட்கூரையில் நவகிரகங்களின் சிற்பங்கள் வட்டவடிவில் காணக்கிடைத்தது. சட்டங்களில் நாகக்குடையுடன் தசாவதார கோலங்களையும் காணலாம். இம்மண்டபம் கழுத்து என்பதாக ஐதீகம்.

இரண்டாம் பிரகாரம் “நலம்பலம்” அல்லது “சுற்றம்பலம்”  என்றழைக்கப்படுகின்றது. இந்த சுற்றும் செவ்வக வடிவமாகவே உள்ளது. இச்சுற்றில்  கர்ப்பகிரகத்திற்கு முன் உள்ள பகுதி  மட்டும் மற்ற மூன்று பக்கங்களை விட நீளமாக இருப்பதால் “வலியம்பலம்” என்றழைக்கப்படுகின்றது. நலம்பலம் கரங்கள் என்பது ஐதீகம். பொதுவாக  நடுவில் வலம் வருவதற்கு ஏதுவாக கற்களால் சுற்றுப்பாதை அமைத்துள்ளனர் மற்றபடி மணல் வெளியாகவே உள்ளது.

திருமடப்பள்ளி பொதுவாக தென்கிழக்கில் அமைந்துள்ளது. இவர்கள் “திடப்பள்ளி” என்றழைக்கின்றனர். நலம்பலத்தின் வடகிழக்கு மூலையில் கிணறு அமைந்துள்ளது இதன் தீர்த்தம் திருமஞ்சனத்திற்கும், நைவேத்தியத்திற்கும் பயன்படுத்தப்படுகின்றது. நலம்பத்தின் வெளி சுவற்றில் வரிசை வரிசையாக பித்தளை விளக்குகள் அமைத்துள்ளனர் .சில ஆலயங்களில் நலம்பலத்திற்கு வெளியே தனியாகவும் விளக்கு மாடங்கள் அமைந்துள்ளன. கேரளக் கோவில்களில்  மாலை நேரத்தில் லட்சக்கணக்கான  எண்ணெய்  விளக்குகளும் ஏற்றப்பட்டு திருக்கோவில்களை சேவிப்பதே ஒரு அருமையான அனுபவம் ஆகும்.

வலியம்பலத்திற்கு முன்பாக பெரிய பலி பீடம் உள்ளது. பலி பீடத்திற்கு முன்னே கொடிமரம். இரண்டிலும் அஷ்டதிக் பாலகர்கள், அல்லது அஷ்ட லக்ஷ்மிகளின்  சிற்பங்கள்  அமைத்துள்ளனர். கொடி மரம் முதுகெலும்பு என்பது ஐதீகம். பல ஆலயங்களில் நெடிதுயர்ந்த கொடி மரங்கள் தங்கக் கவசம் பூண்டு எழிலாக மின்னுகின்றன. பொதுவாக செப்பு தகட்டால் மூடப்பட்டவையாகவே கொடி மரங்கள் உள்ளன. கொடிமரத்திற்கு முன்புறம் ஸ்ரீகோவிலை நோக்கியவாறு “ஆனகொட்டில் மண்டபம்” உள்ளது. உற்சவ காலங்களில் யானைகள் இங்கே நிற்கின்றன. மேலும் சோறுண்ணு, துலாபாரம், திருமணம் முதலிய சடங்குகள் இம்மண்டபத்தில் நடைபெறுகின்றன. பொதுவாக கொடி மரத்திற்கு அருகில்  நெடிதுயர்ந்த பித்தளை விளக்குகளைக் காணலாம். கூர்ம பீடத்துடன் அமைந்துள்ள இந்த விளக்குகள் அழகுக்கு அழகு சேர்க்கின்றன.

இரண்டாம் பிரகாரம்  “பிரதக்ஷிண வட்டம்” என்றழைக்கப்படுகின்றது. இது வயிறு என்பது ஐதீகம். அடுத்த சுற்றில் பெரிய  மதில் சுவர் ஆலயத்தை காக்கின்றது, மதில் சுவர் கால்கள் என்பது ஐதீகம். மதில் சுவற்றில் நான்கு திசைகளிலும் பொதுவாக கேரளப்பாணி சாய்ந்த கூரைகள் கொண்ட எளிய  தோரண வாயில்கள் அமைந்துள்ளன.  கோபுரம் சிறிதாக எளிமையாக  பொதுவாக கேரள பாணியில் அமைந்துள்ளன. முன் கோபுரம் பாதம் என்பதாக ஐதீகம். சில ஆலயங்களில் இச்சுற்றில் தூண்களில் விளக்கேந்திய பாவைகள்  எழிலாக அமைத்துள்ளனர். ஒரே வரிசையில் ஒரே மாதிரியாக அமைந்துள்ள சிலைகளை பார்ப்பதே ஒரு பரவசம். இரண்டாம் சுற்றில் பல் வேறு மரங்கள், நந்தவனங்கள் உள்ளன. மற்ற  விநாயகர், சாஸ்தா சிவன், பகவதி  சந்நிதிகளும் இச்சுற்றில்  பொதுவாக அமைந்துள்ளன. சில ஆலயங்களில் சீவேலிபுரம் என்னும் ஒரு  சுற்றும் அமைந்துள்ளது. கற்றளியாக இல்லாமல் மரம் மற்றும் ஓடுகள் கொண்டு இயற்கையை ஒட்டி எளிமையாக  இவை அமைக்கப்பட்டுள்ளன என்பது சிறப்பு. மதில் சுவர் மட்டும் இங்கு கிட்டும் சிவப்புக்கல் (Laterite) கொண்டு பிரம்மாண்டமாக அமைத்துள்ளனர்.

மதில்சுவர், சீவேலிபுரம், விளக்கு மாடம், நலம்பலம், அந்தராளம்  என்னும் ஐந்து பிரகாரங்கள் ஸ்தூல சரீரத்தின் பஞ்சகோசங்களாகின்றன. தெய்வமூர்த்தமும் ஆறு ஆதாரங்களான ஆதாரசிலா, நிதி கும்பம், பத்மம், கூர்மம், யோகநாளம் மற்றும் நபும்சக சிலா ஆகியவை ஸூஷ்ம சரீரம் ஆகின்றது. இவ்வாறு ஒவ்வொரு திருக்கோயிலும் மனித உடலை போல அமைந்துள்ளது.

இவர்கள் இந்த பஞ்சப் பிரகாரங்களை இவ்வாறு அழைக்கின்றனர் 1. அகத்தே  ஸ்ரீகோவில், பலிவட்டம், 2. நலம்பலம் – சுட்டம்பலம், 3. மத்யஹார; விளக்கு மாடம், 4. புறத்தே பலி வட்டம் - சீவேலிபுரம், 5. புறம்- மதில்


 திருப்புலியூர் -மாயப்பிரான் 

புதிது புதிதாக நினைத்த இடத்தில் சந்நிதிகளை அமைக்காமல் ஆதி காலத்தில் இருந்ததைப் போலவே அப்படியே பாதுகாக்கின்றனர். எல்லா ஆலயங்களிலும் பொதுவாக நந்தவனங்கள் உள்ளன. மேலும் ஊட்டுப்புரம் என்னும் அன்னக்கூடம், கதகளி முதலிய  கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்  கூத்தம்பலம் மற்றும் கோவிலுக்கு வெளியே திருக்குளம் எல்லாம் பொதுவாக அனைத்து ஆலயங்களிலும்  அமைந்துள்ளன.  
எழிலான சூழ்நிலையில் அமைந்துள்ள திருக்கோவிலை மிகவும் தூய்மையாக பராமரிக்கின்றனர். சுத்தம் என்றால் அவ்வளவு சுத்தம். நேரம் தவறாமல் சரியாக அனைத்து வழிபாடுகளையும் நடத்துகின்றனர். யாருக்காகவும், எதற்காகவும் பூஜை விதிகளை மாற்றுவதில்லை என்பது பாராட்டுக்குரியது. திருக்கதவை பூஜை செய்த பின் அடைத்து விட்டால் எதற்காகவும் பின் திறப்பதில்லை. மலர்கள், நைவேத்யம் மற்றும் எந்த பூஜைப் பொருளையும் கையில் வாங்குவதில்லை, கீழே வைக்க சொல்கின்றனர். யாரும் தங்களைத் தொட்டு விடக்கூடாது என்பதில் போத்திகள்  மிகவும் கவனமாக உள்ளனர்.   எந்தக் கோவிலிலும் கர்ப்பகிரகத்தில் மின் விளக்குகளை பயன்படுத்துவதில்லை. நெய் விளக்குகள்தான் பயன்படுத்தப்படுகின்றது. கேரளத்திற்கே உரித்தான மூன்று கிளை விளக்குகள் மற்றும் சர விளக்குகளின் ஒளியிலேயே நாம் பெருமாளை திவ்யமாக சேவிக்கின்றோம். கண்ணாடி தேவைப்படுபவர்கள் கண்டிப்பாக கண்ணாடி அணிந்து செல்வது மிகவும் முக்கியம்.

இவர்கள் சட்டையைச் சட்டை செய்வதில்லை.  இந்த அம்பலங்களுக்குள் ஆண்கள்  மேல் சட்டை, பனியன், கால் சட்டை  அணிந்து செல்ல அனுமதி இல்லை, கைலி அணிந்து கொண்டும் செல்ல முடியாது. கரங்களில் மூட்டை முடிச்சுகளை எடுத்துச் செல்லவும் அனுமதிப்பதில்லை வெளியே வைத்து விட்டுதான் செல்ல வேண்டும்.   மிகச் சில ஆலயங்களில் மட்டுமே பெண்கள் சுடிதார் அணிந்து செல்ல அனுமதிக்கின்றனர் பெண்களுக்கும் கேரள பாணி முண்டு அல்லது சேலை அணிவது அவசியம். இந்த விதி அனைவருக்கும் பொது அரசனாக இருந்தாலும் ஆண்டியாக இருந்தாலும் இந்த விதியை தளர்த்துவதில்லை.


இராம பட்டாபிஷேக ஓவியம்- திருமூழிக்களம் 

அதிகாலை நான்கு மணிக்கே சன்னதி திறந்து விடுகின்றனர்.  இங்கு ஆராதனைகள் எல்லாம் கேரள முறையில் நடைபெறுகின்றன. ஆராதனை செய்யும்  கேரள பிராம்மணர்கள் போத்திகள் என்று அழைக்கப்படுகின்றனர். தலைமை அர்ச்சகர் மேல்சாந்தி என்றும் அவரது உதவியாளர்கள் தந்திரிகள் என்றும் அழைக்கப்படுகின்றனர். அவர்கள் உடம்பில்  திருமண் அணிவதில்லை நெற்றியில் சந்தனம்  மட்டுமே அணிகின்றனர். இக்கோவில்களில் பெருமாள்  பிரசாதமாக தீர்த்தமும், சடாரியும் கிடையாது. தமிழ்நாட்டில் பூஜை செய்வது போல் அர்ச்சனைகளை வாயால் உச்சரிப்பது இல்லை. வாய்க்குள்ளேயே மந்திரங்களை சொல்லிக் கொண்டு கையினால் ஆவாஹனம் செய்து கை செய்கையாலேயே பூஜை செய்கின்றனர், பின்னர்  வெளியே வந்து அமர்ந்து ஒரு வாழை இலையில் சிறிது சந்தனமும், துளசியும் மலர்களும் பிரசாதமாக வழங்குகின்றனர். சில ஆலயங்களில் சிறிது விபூதியும் சேர்த்து வழங்குகின்றனர்.  பொதுவாக தட்சிணை தருபவர்களுக்கு இலையில் பிரசாதம் வழங்குகின்றனர் இல்லாவிட்டால் சிறிது சந்தனம் கரங்களில் வழங்குகின்றனர். அதிகமாக எதுவும் பேசுவதில்லை மிகவும் சுத்தமாகவும் நியமத்துடனும் பூஜை செய்கின்றனர். யாரும் வீண் பேச்சு பேசுவதில்லை, எந்த வித ஏற்றத் தாழ்வுகளும் இல்லை, சிறப்பு தரிசன கட்டணம் வாங்கிக் கொண்டு பெருமாளின் அருகில் சென்று சேவிக்க வைக்கும் பழக்கம் இல்லை அனைவரையும் சமமாக நடத்துகின்றனர்.   சில ஆலயங்களில் மட்டுமே  நாம் தரும் நைவேத்யங்களை பெருமாளுக்கு படைக்கின்றனர். இங்கு நடத்தப்படும் பூஜைகள் எல்லாம் வழிபாடுகள் என்றழைக்கப்படுகின்றன. ஒவ்வொரு வழிபாட்டிற்கும் ஒரு கட்டணம் உள்ளது. வெடி வழிபாடு என்று வேட்டுப்  போடும் வழிபாடு புதுமையாக உள்ளது. பொதுவாக ஒரு சில ஆலயங்களை தவிர்த்து அனைத்து ஆலயங்களிலும் அதிக கூட்ட நெரிசலும் வரிசைகளும் இல்லை, எனவே எவ்வளவு சமயம் வேண்டுமென்றாலும்  மனப்பூர்வமாக பெருமாளை சேவிக்க முடிகின்றது.
விளக்கு மாடத்துடன் சுற்றம்பலம் 

இனி அனுதினம் நடைபெறும் வழிபாட்டு முறை என்னவென்று காணலாமா? அதிகாலையிலேயே 4 மணிக்கே நடை திறக்கப்படுகின்றது. மேல்சாந்தி நீராடி ஈர உடையுடன் நடை திறக்கின்றார்.   பின்னர் இறைவனை எழுப்பும் பள்ளியுணர்த்தல், முதல் நாள் அலங்காரத்தில் “நிர்மால்ய தரிசனம்”, பின்னர் முந்தைய தின அலங்காரத்தை கலைத்து தைல அபிஷேகம் பல மூலிகைகளினால் தயாரிக்கப்படும் இந்த  தைலம் பின்னர் பிரசாதமாக வழங்கப்படுகின்றது. இந்த தைலம் நோய் தீர்க்கும் மருந்தாகின்றது. பின்னர்  பொடி வாக்கச் சார்த்தல், அபிஷேகம், மலர் நைவேத்யம் (புட்டு, வெல்லம் மற்றும் கதலி பழம்) கணபதி ஹோமம், பிரசன்ன பூஜை, சூரியோதய காலத்தில்  உஷ பூஜை, இப்பூஜையின் போது பெருமாளுக்கு வெண்ணெய், சர்க்கரை, பழம் நைவேத்யம் செய்யப்படுகின்றது. இரண்டாவது பூஜை சுமார் 6 மணிக்கு நடைபெறுகின்றது “எதிர்த்து பூஜை” (சூரியனை எதிர் கொள்ளுதல்) என்றழைக்கப்படுகின்றது, அதற்கப்புறம் எதிர்த்து சீவேலி, இப்பூஜை சமயத்தில் கணபதி, சாஸ்தா, பகவதி சன்னதிகளிலும் பூஜை நடைபெறுகின்றது காலை 8 மணி முதல் 9  மணிக்குள் “பந்தீரடி பூஜை” (சூரியனின் நிழல் பன்னிரண்டடி விழும் சமயம்), தாரா,  பால், இளநீர். பன்னீர் ஆகியவற்றாலும் நவாகம் எனப்படும் ஒன்பது கலசங்களில் உள்ள புனித நீராலும்  அபிஷேகம், பஞ்ச கவ்யம், பின்னர் சந்தனக் காப்பு அலங்காரம். உச்சிக்காலத்தில் “உச்ச பூஜை”, பெருமாளுக்கு நைவேத்யம் சமர்ப்பிக்கப்படுகின்றது, “உச்ச சீவேலி”, சுமார் 11 மணிக்கு நடை அடைத்தல். ஸ்ரீபலி என்பதே மருவி சீவேலி ஆகிவிட்டது.

பின்னர் மறுபடியும் மாலை 4 மணிக்கு  நடை திறத்தல், தீபாராதணை இச்சமயத்தில் விளக்கு மாடத்தில் உள்ள அனைத்து விளக்குகளும் ஏற்றப்படுகின்றன. தீபாராதணை நடக்கும் போது பெருமாளை சேவிப்பதே ஒரு அருமையான அனுபவம் ஆகும். வெகு தூரத்தில் இருந்து கூட பெருமாளை திவ்யமாக இச்சமயத்தில் சேவிக்கலாம். பின்னர் பகவதி சேவை, “அத்தாழ பூஜை”, இப்போது அப்பம், அடை மற்றும் தாம்பூலம் நைவேத்யம் செய்யப்படுகின்றது. “அத்தாழ சீவேலி”, பிறகு திருப்புகை, அஷ்ட கந்தம் என்னும்  எட்டு மணப்பொருள்களால் பு|கையூட்டப்பட்டு, இரவு 8 மணிக்கு  நடை அடைக்கபடுகின்றது. இவ்வாறு  ஐந்து கால பூஜைகளும் மூன்று சீவேலிகளும் தினமும் கிரமமாக நடைபெறுகின்றது.

சீவேலியின் போது பலி உற்சவரை தலையில் அல்லது கரத்தில்  சுமந்து  கை விளக்கு, மேள தாளத்துடன் அந்தராளம் சுற்றி வருகின்றனர். மிகவும் வேகமாக நடந்து செல்கின்றனர். சில ஆலயங்களில் யானையிலும் உற்சவ பலி மூர்த்தி எழுந்தருளுவார். இது  பலி சமர்ப்பிக்கும் போது பெருமாளே தனது அன்பர்களுக்கு   சரியாக பலி கிடைக்கின்றதா? என்று அன்புடன் கவனிப்பது    போல உள்ளது. மழை அதிகமாக செய்யும் பிரதேசம் என்பதால் மழை பெய்யும் போது கூட தாழங்குடை பிடித்துக்கொண்டு சீவேலி சமயத்தில் பலி சமர்ப்பிக்கின்றனர். சீவேலி சமயத்தில் கொடிமரத்தைத் தாண்டி  யாரையும் உள்ளே அனுமதிப்பதில்லை. கோயில் பணியாளர்கள் அனைவரும்  தங்கள் பணிகளை செம்மையாக செய்கின்றனர். உற்சவங்களின் போது யானைகள், தாளம் போட வைக்கும்  செண்டை மேளம் எனப்படும் பஞ்சவாத்தியங்கள், வர்ணக்குடைகள்,  வாண வேடிக்கை ஆகியவை கேரளாவின் சிறப்பு ஆகும்.  வாருங்கள் இனி ஒவ்வொரு திவ்ய தேசமாக சேவிப்போம்.


மலை நாட்டு திவ்யதேச வழிகாட்டி

இந்த திவ்ய தேசங்கள் எல்லாம் கேரளா முழுவதும்  வடக்கில் இருந்து தெற்கு வரை அமைந்துள்ளன,  பல திவ்யதேசங்கள் முக்கிய சாலைகளை அடுத்த  சிறு கிராமங்கள் என்பதாலும் கார், வேன் போன்ற சொந்த வண்டிகளை  அமர்த்திக்கொண்டு செல்வது நல்லது. இவ்வாறு சென்றாலும் அனைத்து திவ்ய தேசங்களை மட்டுமே சேவிக்க  குறைந்தது மூன்று நாட்களாவது வேண்டும். அடியேனின் அனுபவம் ஆலயங்களின் நடை சார்த்தும் நேரம் சரியாக கடைப்பிடிக்கப்படுவதால் ஒரு நாள் அதிகப்படியாக வைத்துக்கொண்டு பயணம் செல்வது உத்தமம். பேருந்து மூலமாக செல்ல விரும்பினால் அருகில் உள்ள பெரிய ஊர்களில் தங்கிக்கொண்டு பின்னர் பேருந்து மூலம்  பயணம் செய்து சேவிக்கலாம் ஆனால் நடை அடைப்பதற்கு முன் சென்று விடவேண்டும். ஒவ்வொரு திவ்ய தேசத்திற்கும் அருகில் உள்ள பெரிய ஊர் விவரங்கள் மற்றும் செல்லும் வழியில் உள்ள மற்ற சிறப்பு மிக்க  ஆலயங்கள் பற்றிய சிறு குறிப்புகளும்  இந்நூலில் உள்ளன. 

மூன்று நாட்கள் அதிகாலை விஸ்வருப தரிசனம் முதல்,  இரவு அத்தாழ பூஜை வரை அனைத்து பூஜைகளையும் பெருமாளின் பல் வேறு அலங்காரங்களையும் பல சீவேலிகளையும் பல்வேறு ஆலயங்களில் காணும் ஒரு பாக்கியம் இந்த யாத்திரையின் போது  கிட்டியது.

அரங்க மாளிகைக் கருங்கடல் வண்ணனை
ஆலிமா முகிலை வாலி காலனை
இந்தளூருறை எந்தை பெம்மானை
ஈசன் நான்முகன் வாசவன் தலைவனை
உள்ளுவார் உள்ளத் துள்ளுறை சோதியை
ஊரகம் நின்றருள் நீரகத்தடிகளை
எவ்வுள் மாயனை தெய்வ நாயகனை
ஏர்மலி சிகரத்து நீர்மலை ஆதியை
ஐவாய் அரவில் அறிதுயில் அமலனை
ஒருகால் மொழியினும் ஒழிகுவை நெஞ்சே!
ஓதநீர் ஞாலத்துழலும்
ஔவியப் பிறப்பில் அழுந்திடுவதே 

என்று பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் மங்களாசாசனம் செய்த மாயவன், கண்ணன், மணிவண்ணன், கேசவன், மண்ணும் விண்ணும் தாயவன், கமல நயனன், சரத்தால் இலங்கை தீயவன், திருவேங்கடத்துறை தூயவனின் சேவையை  அனுபவிப்போம் அன்பர்களே.

 

மலை நாட்டு திவ்ய தேசங்கள்

திவ்ய தேசம்

அருகில் உள்ள இரயில் நிலையம்

தூரம்

 தங்க   அருகில் உள்ள பெரிய    ஊர்

தூரம்

திருவித்துவக்கோடு

பட்டாம்பி

6 கி.மீ

சொரனூர்/ பாலக்காடு

18 /60 கி.மீ

திருநாவாய்

குட்டிபுரம்

7 கி.மீ

தேவசம் போர்ட் விடுதிகள் உள்ளன.

 

திருமூழிக்களம்

அங்கமாலி

10 கி.மீ

அங்கமாலி

10 கி.மீ

திருகாட்கரை

ஆலுவா

10 கி.மீ

எர்ணாகுளம்/ சோட்டாணிக்கரை

10 கி.மீ/ 15 கி.மீ

திருவல்லா

திருவல்லா

5 கி.மீ

செங்கண்ணூர்

10 கி.மீ

திருக்கடித்தானம்

செங்கணச்சேரி

3 கி.மீ

செங்கண்ணூர்

16 கி.மீ

திருச்சிற்றாறு

செங்கண்ணூர்

1 கி.மீ

செங்கண்ணூர்

1 கி.மீ

திருப்புலியூர்

செங்கண்ணூர்

5 கி.மீ

செங்கண்ணூர்

5 கி.மீ

திருவாறன்விளை

செங்கண்ணூர்

5 கி.மீ

செங்கண்ணூர்

5 கி.மீ

திருவண்வண்டூர்

செங்கண்ணூர்

1 கி.மீ

செங்கண்ணூர்

1 கி.மீ

திருவனந்தபுரம்

திருவனந்தபுரம்

1 கி.மீ

திருவனந்தபுரம்

1 கி.மீ

திருவாட்டாறு

குழித்துறை

5 கி.மி

மார்த்தாண்டம்/ குலசேகரம்

7 கி.மீ/ 6 கி.மீ

திருவண்பரிசாரம்

நாகர்கோவில்

5 கி.மீ

நாகர்கோவில்

5 கி.மீ

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ஒரே தடவையில் வண்டியில்  இவ்வாறாக சென்றால், மூன்று நாட்களில் அனைத்து திவ்ய தேசங்களையும் சேவிக்க இயலும்.

1.     தங்கள் ஊரிலிருந்து கோயம்புத்தூர்.

2.     கோவை – பாலக்காடு                                                                                         54 கி.மீ

3.     பாலக்காடு – சொரனூர்                                                                                      50 கி.மீ

4.     சொரனூர் – பட்டாம்பி                                                                                         12 கி.மீ

5.     பட்டாம்பி – திருமித்தக்கோடு( திருவித்துவகோடு)                                    08 கி.மீ

6.     திருமித்தக்கோடு – திருநாவாய் (குட்டிபுரம் வழி)                                     40 கி.மீ

7.     திருநாவாய் – திருச்சூர் (குன்னங்குளம் வழி)                                              60 கி.மீ

8.     திருச்சூர் – திருமொழிக்களம்( திருமூழிக்களம்)                                     50 கி.மீ  அல்லது

9.     திருநாவாய் – குருவாயூர் – கொடுங்கல்லூர்- திருமூழிக்களம்               115 கி.மீ

10.  திருமூழிக்களம் – திருக்காக்கர( திருக்காட்கரை)                                    25 கி.மீ

11.  திருக்காக்கர – எர்ணாகுளம்                                                                             10 கி.மீ    (இரவு தங்கல்)  

12. எர்ணாகுளம் – செங்கணச்சேரி – திருக்கடித்தானம்                                    85 கி.மீ

13.  திருக்கடித்தானம் – திருவல்லா                                                                    07 கி.மீ

14.  திருவல்லா – செங்கண்ணூர்                                                                           10 கி.மீ

15.  செங்கண்ணூர் – திருசிற்றாறு                                                                        01 கி.மீ

16.  செங்கண்ணூர் -  திருப்புலியூர்                                                                       05 கி. மீ

17.  செங்கண்ணூர் – ஆரண்முழா (திருவாறன்விளை)                                    11 கி.மீ

18.  செங்கண்ணூர் – திருவண்வண்டூர்                                                               01 கி.மீ

19.  செங்கண்ணூர் – திருவனந்தபுரம்  (வழி கொட்டாரக்கர)                 110 கி.மீ  (இரவு தங்கல்)  

20.  திருவனந்தபுரம் – திருவாட்டாறு  ( வழி மார்த்தாண்டம்)                 60 கி.மீ

21.  திருவாட்டாறு – திருப்பதிசாரம் (திருவண்பரிசாரம் , வழி தக்கலை)   30 கி.மீ

22.  திருப்பதிசாரம் – நாகர்கோவில்                                                                      08 கி.மீ

 மற்ற தலங்களை இங்கே சேவியுங்கள்  : 

  குருவாயூர்           கொடுங்கல்லூர்           திருஅஞ்சைக்களம்         குலசேகரபுரம்  

 சோட்டாணிக்கரை        வர்க்கலா            நெய்யாற்றங்கரை             திருப்பிரயார்        

 இரிஞ்ஞாலக்குடா        பாயம்மல்

மலை நாட்டு திவ்ய தேச யாத்திரை தொடரும் . . . . . .

Monday, August 15, 2016

நானேயோ தவம் செய்தேன் - 10


திருச்சானூர் பத்மாவதித்தாயார்

                                           அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பா!
நிகரில் புகழாய்! உலகம் மூன்றுடையாய்! என்னையாள்வானே!
நிகரிலமரர்  முனிக்கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே!
புகலொன்றில்லா  அடியேன் உன்னடிக்கீழர்ந்து புகுந்தேனே ( நம்மாழ்வார்)

இந்த ஸ்ரீவாரி சேவை தொடரின் நிறைவாக பத்மாவதித்தாயாரின் சேவையுடன் நிறைவு செய்யலாம் அன்பர்களே. பெருமாள் திருமலைக்கு வருவதற்கு காரணமாக இருந்த சம்பவம் அனைவரும் அறிந்ததுதானே. மும்மூர்த்திகளில் யார் சிறந்தவர் என்பதை அறிய பிருகு முனிவர்  புறப்பட்டு , பிரம்மலோகம், திருக்கயிலாயம் சென்று கோபத்துடன் ஸ்ரீவைகுண்டம் வந்த போது மஹா விஷ்ணு யோக நித்திரையில் முனிவரை வரவேற்கவில்லை. அதனால் கோபம் கொண்ட பிருகு முனிவர் மஹா விஷ்ணுவின் மார்பில் உதைக்கின்றார். மஹா விஷ்ணுவோ கோபம் கொள்ளாமல் முனிவரின் காலைப் பிடித்து மன்னிப்பு வேண்டுகின்றார்.  தன் செயலுக்கு வருந்திய முனிவர் இவரை வாழ்த்தி இவர்தான் மும்மூர்த்திகளில் சிறந்தவர் என்று  கூறிச்செல்கிறார். 


இராஜகோபுரம் 

தான் அகலகில்லேன் இறையும் என்றும் உறையும் திருமார்பை முனிவர் உதைத்ததால் மஹா லக்ஷ்மித்தாயார் கோபம் கொண்டு  ஸ்ரீவைகுண்டம் விடுத்து பூலோகம் வந்து பத்மசரோவரில் தவம் செய்ய ஆரம்பித்தார்.  பன்னிரண்டு வருட தவத்திற்குப்பிறகு கார்த்திகை மாத பஞ்சமியும் உத்திராட நட்சத்திரமும் கூடிய சுப தினத்தில் தாயார் ஒரு குழந்தையாக தாமரை மலரில் தோன்றினாள்.

குழந்தை பாக்கியம் வேண்டி ஆகாசராஜன் நிலத்தை உழுத போது தாயார் தாமரை மலரில் அவருக்கு கிடைத்தார். ஆகாசராஜனும் பத்மாவதி என்னும் பெயரிட்டு சீரும் சிறப்புமாக வளர்த்து வந்தார். அதே சமயம் பெருமாளும்     திருமகளைத் தேடி திருமலைக்கு  வந்து ஒரு புற்றில் வாசம் செய்ய ஆரம்பித்தார். சிவனும் பிரம்மாவும் பசுவும் கன்றுமாக வந்து சோழராஜனிடம் சேர்ந்து மேய்ச்சலுக்கு வரும் சமயத்தில் பசு அந்த புற்றில் பாலை சொரிந்து கொண்டிருந்தது. 


சுந்தரவரதராஜர் விமானம் 


பசு சரியாக பால் தராததால் அதன் இடையன் பசுவை பின் தொடர்ந்து கவனித்து புற்றில் பால் சொரிவதை கண்டு தன் கோடாரியை  பசுவின் மேல் வீசினான். கோடாரி குறி தவறி புற்றின் உள்ளே இருக்கும் ஸ்ரீநிவாசனின் தலையில் பட்டு குருதி பெருகியது. காயம் பட்ட ஸ்ரீநிவாசன் வகுளாதேவி ( கிருஷ்ணாவதாரத்தில் யசோதை, கிருஷ்ணன் ருக்மணி திருக்கல்யாணத்தை காணமுடியவில்லை என்பதால் இந்த அவதாரத்தில் வகுளாதேவியாக அவதாரம் செய்தார்.)  ஆசிரமத்தை அடைந்து அவர் பராமப்பில் இருந்தார்.


தாயார் ஊஞ்சல் சேவை 


ஒரு சமயம் பூங்காவனத்தில் பூப்பறிக்க வந்த பத்மாவதியைக்கண்டு மையல் கொண்டு , வகுளாதேவி சென்று பெண் கேட்டு, குபேரனிடம் கடன் பெற்று பத்மாவதித்தாயாரைத் திருமணம் புரிந்தார்.திருமணம் ஆனபிறகு கணவன் மனைவி இருவருக்கும் இடை.யே ஏற்பட்ட சிறு மனஸ்தாபத்தால் இருவரும் ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்தனர் என்று வரலாறு பேசப்படுகிறது .இந்த வரலாற்றினை உறுதிப்படுத்துவது போன்று இங்கு நடைபெறும் பூஜைகள் இன்றும் அமைந்துள்ளது.மலையில் வெங்கடேஸ்வரருக்கு வைகானஸ முறையில் பூஜை நடக்கும் போது இங்கு மலை அடிவாரத்தில் தேவிக்கு பாஞ்சராத்ர முறையில் பூஜை நடக்கிறது.

திருப்பதி திருமலையில் திருமால் வீற்றிருக்க, திருப்பதியில் இருந்து 5 கி.மீ. தூரத்தில் உள்ள திருச்சானூர் என்றும் அலமேல் மங்காபுரம் என்றும் அழைக்கப்படும் புனிதத் தலத்தில் பத்மாவதி தாயாரின் அழகிய திருக்கோயில் உள்ளது. பின்னர் இப்பகுதியை  ஆண்ட யாதவ அரசர்கள் ஸ்ரீ கிருஷ்ண பலராமர் கோயிலைக் கட்டினர். அந்தக் கோயிலில் நான்கு நூற்றாண்டுகளுக்குப் பிறகு அதாவது 16வது, 17வது நூற்றாண்டுகளில் சுந்தரவரதராஜர் பிரதிஷ்டை செய்யப்பட்டார்.
பத்ம சரோவர் 

அடியோங்கள் திருச்சானூர் சென்ற போது மாலை நேரம் உற்சவர்  தாயார் ஊஞ்சல் சேவைக்காக கல்யாண மண்டபத்திற்காக எழுந்தருளிக் கொண்டிருந்தார் எனவே அடியோங்களும் தாயாருடன் சென்று ஊஞ்சல் சேவையை சேவிக்கும் பேறு பெற்றோம்.   பின்னர் தாயார் ஆலயம் திரும்பி வந்த பின் குங்குமார்ச்சனை டிக்கெட் பெற்றுக்கொண்டு சென்று தாயார் முன் சிறிது நேரம் அமர்ந்து  தாயாரை  திவ்யமாகச் சேவித்தோம். 

இவ்வாறாக ஸ்ரீவாரி சேவையின் போது  திருமலையப்பனை பல முறை சேவித்தோம்,  பௌர்ணமி கருட சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், வசந்தோற்சவம்,  சகஸ்ரலங்கார தீபோற்சவம்,  அலமேலு மங்காபுரத்தில் தாயார் ஊஞ்சல் சேவை, குங்குமார்ச்சனை, சீனிவாச மங்காபுரத்தில் ஏகாந்த சேவை, பிரம்மோற்சவ புறப்பாடு சேவிக்கும் பாக்கியம் கிட்டியது. மேலும்   சுவாமி புஷ்கரணி, பாப விநாசம் ஆகாய கங்கையில்  தீர்த்தமாடும் பாக்கியமும் கிட்டியது. மேலும் என்ன வேண்டும்

செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே!
நெடியானே! வேங்கடவா! நின் திருக்கோயிலின் வாசல்
அடியாரும் வானவரும் அரம்பையரும்கிடந்தியங்கும்
படியாய்க்கிடந்து உன்பவளவாய்காண்பேனே  
என்று குலசேகராழ்வார் வேண்டியது போல  நாமும் வேண்டி திருமலையப்பனிடம் சரணமடைவோம். 


ஸ்ரீவாரி சேவை அனுபவங்கள் நிறைவு பெற்றன. 

Saturday, August 13, 2016

நானேயோ தவம் செய்தேன் - 9

சுவாமி புஷ்கரணி




திருமலை யாத்திரை செய்பவர்கள் முதலில் திருச்சானூரில் பத்மாவதித்தாயாரை சேவித்து விட்டு பின்னர் சுவாமி புஷ்கரணியில் தீர்த்தமாடி வராஹ சுவாமியை சேவித்து விட்டு நிறைவாக திருமலையப்பனை சேவித்தால்,  யாத்திரை முழுமையடையும் என்பது ஐதீகம். இன்றைய அவசர யுகத்தில் எத்தனை பேருக்கு இந்த வாய்ப்புக்கிடைக்கின்றது. ஆனால் அவரது திருவடி நீழலில் ஒரு வாரம் அமர்ந்திருந்த அடியோங்களுக்கு அந்த அருமையான வாய்ப்பு கிட்டியது. 

ஒரு நாள் அதிகாலை சுவாமி புஷ்கரணிக்கு சென்று தீர்த்தமாடினோம். ஸ்ரீவைகுண்டத்தின் எட்டு விமானங்களில் ஒன்றான கிரிடாசலத்தைத் திருமலைக்குக் கொண்டு வந்து, அதில் திருவேங்கடவனை எழுந்தருளச் செய்த போது,   கோவிலின் அருகில் உள்ள கோனேரியை (திருக்குளத்தை), கருடன்தான் வைகுண்டத்து விரஜா நதியில் இருந்து உருவாக்கினார் என்பது ஐதீகம். பிரம்மாவின் பத்தினியாகிய சரஸ்வதியே இத்தீர்த்தமாக இருப்பதாக தலவரலாறு கூறுகின்றது.



சுவாமி புஷ்கரணி என்பதை 1) சுவாமியின் புஷ்கரணி, 2) புஷ்கரணிக்கெல்லாம் சுவாமி அதாவது தலைமையானது தமிழில் கோனேரி 3) சுவாமி ஆக்கும் புஷ்கரணி என்று  பல  விளக்கங்கள் கூறுகின்றார்கள் பெரியோர்கள்.  சுவாமி புஷ்கரணியில் நீராட பாவங்கள் அனைத்தும் நீங்கும், அஸ்வமேத யாகம் செய்த பலன் கிட்டும். 


ஊனேறுசெல்வத்து உடற்பிறவியான்வேண்டேன்
ஆனேறேழ்வென்றான் அடிமைத்திறமல்லாமல்
கூனேறுசங்கமிடத்தான்தன் வேங்கடத்து
கோனேரிவாழும் குருகாய்ப்பிறப்பேனே. 


குலசேகராழ்வார்  தமது பாசுரத்தில் சுவாமியை புஷ்கரணியில் ஒரு பறவையாக பிறக்க வேண்டும் என்று  வேண்டுகிறார்.




வெங்கடேச சுப்ரபாதத்தில் உள்ள ஒரு ஸ்லோகம் சுவாமி புஷ்கரணின் சிறப்பை இவ்வாறு கூறுகின்றது

ஸ்ரீவைகுண்டவிரக்தாய ஸ்வாமிபுஷ்கரணி தடே,
ரமயா ரமமாணாய வேங்கடேசாய மங்களம்.


பொருள்: திருவைகுண்டத்தில்  பரவாசுதேவனாய்  பக்த ரக்ஷணம் செய்யும் எம்பெருமான், திருமலையில் சுவாமி புஷ்கரணி தீரத்தில் திருவேங்கடமுடையான்  உருவத்தில் அர்ச்சையாய் எழுந்தருளி பக்த ரக்ஷணம் என்னும் காரியத்தை சிறப்பாக செய்து கொண்டிருக்கின்றான். ஸ்ரீமஹாலக்ஷ்மியும் திருமலையில் தனிக்கோவில் கொண்டிராமல் திருவேங்கடமுடையான் திருமார்பையே தன்  கோயிலாகக் கொண்டான்   அத்தகைய திருவேங்கடமுடையானுக்கு எல்லா மங்களங்களும் உண்டாகட்டும்.

வருடத்தில் நான்கு நாட்கள் சுவாமி புஷ்கரணியில் தீர்த்தவாரி என்னும் சக்கரஸ்நானம் நடைபெறுகின்றது. புரட்டாசி பிரம்மோற்சவத்தின் நிறை நாள் திருவேங்கடவனின் திருவோணத்தன்று சக்கரஸ்நானத்தின் போது மலையப்பசுவாமி  உபய நாச்சியார்களுடன் எழுந்தருளி வராக சுவாமி ஆலய முகப்பில் சுவாமி புஷ்கரணி முன் மண்டபத்தில்  சுதர்சனருடன் திருமஞ்சனம் கண்டருளி பின் சக்கர ஸ்நானம் நடைபெறுகின்றது. 




மார்கழியில் வைகுண்ட துவாதசியன்று சக்கர ஸ்நானம் நடைபெறுகின்றது.   வைகுண்ட ஏகாதசிக்கு  அடுத்த நாளான  வைகுண்ட துவாதசியும் அதே அளவிற்கு புண்ணியமான நாள் எனவே  வைகுண்ட துவாதசி அன்றும் திருமலையில்  வைகுண்ட பிரதட்சணம் பக்தர்கள் தரிசனத்திற்காக திறந்திருக்கின்றது.  அன்று விசேஷமாக சக்கரஸ்நானம் நடைபெறுகிறது.திருமாலுடைய திவ்ய ஆயுதமான சுதர்சன சக்கரம் கர்ப்பகிரகத்திலிருந்து      வெளியே கொண்டு வரப்பட்டு ஆலயத்தின் வடகிழக்கு திசையில் இருக்கும் மிகவும் புனிதமான சுவாமி புஷ்கர்ணியில்  சக்கரஸ்நானம் நடைபெறுகின்றது. இது முக்கோடி துவாதசி சக்கர ஸ்நானம் என்று அறியப்படுகின்றது. 



இரத சப்தமி சக்கரஸ்நானம் 



தை மாத வளர்பிறை சப்தமி தினத்தன்று பெருமாள் சூரியனுக்கு அருளும் விதமாக  காலை முதல் இரவு வரை சூரிய பிரபை, சேஷ வாகனம், கருட வாகனம், ஹனுமந்த வாகனம், கற்பக விருட்ச வாகனம்,  சர்வ பூபால வாகனம், சந்திரப்பிரபை என்று  ஏழு வாகனங்களில் சேவை சாதித்து அருளுகின்றார். அன்றைய தினம் மதியம் சக்கரஸ்நானம் நடைபெறுகின்றது. அப்போது பக்தர்கள் தங்கள் உடம் மேல் ஏழு எருக்க இலை வைத்து உடன் நீராடுகின்றனர்.  வாகன சேவையுடன் சக்கரஸ்நானமும் நடைபெறுவதால் இது அர்த்த பிரம்மோற்சவம் (பாதி பிரம்மோற்சவம்) என்றழைக்கப்படுகின்றது. 







மேலும்  ஆவணி மாத சுக்லபட்ச சதுர்த்தசியான   அனந்த பத்மநாப சதுர்த்தசியன்று பகவான் நாராயணன் அனந்தன் அல்லது ஆதிசேஷன் என்ற பெயருடன் பாதாள லோகத்திலிருந்து  பூமியை தன் ஆயிரம் தலைகளால் தாங்கி கால சக்கரத்தை நடத்துகிறார். இவ்வாறு தன் தலைகளால் ஒரு கல்பத்தில் பூமியை தாங்க ஆரம்பித்த நாள் இது என்பது ஐதீகம். அனந்த பத்மநாப சதுர்த்தசியன்று சக்கர ஸ்நானம் நடைபெறுகின்றது. 

திருமலை செல்லும் அனைவரும் நேரத்துடன் சென்று சுவாமி புஷ்கரணியில் நீராடி உடலும், உள்ளமும் தூய்மையடைந்து பெருமாளை சேவிக்குமாறு வேண்டிக்கொள்கிறேன். 

இத்தொடரின் மற்ற பதிவுகளைக் காண இங்கு சொடுக்குங்கள்

சேவை தொடரும் . . . . . . . 

Tuesday, August 9, 2016

நானேயோ தவம் செய்தேன் - 8

திருமலைஆர்ஜிதசேவைகள்

 பூங்காவில்   கீதோபதேச காட்சி


அதிகாலை சுப்ரபாதம், தோமாலசேவா, அர்ச்சனை என்று தொடங்கி, பின்னர் கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், வசந்தோற்சவம், சகஸ்ர தீபாலங்கார சேவா, ஏகாந்த சேவை என்று தினமும் பல ஆர்ஜித சேவைகள்  திருமலையில் நடைபெறுகின்றன.

வார ஆர்ஜித சேவைகளில் திங்கட்கிழமைகளில் விசேஷ பூஜையும், செவ்வாய்க்ழ்மைகளில் அஷ்டதள பாத பத்மார்ச்சனை, புதன் கிழமைகளில் சகஸ்ர கலசாபிஷேகம், வியாழக்கிழமைகளில் திருப்பாவாடை சேவை, வெள்ளிக்கி ழமைகளில் வஸ்தலங்கார சேவை, பூராபிஷேகம்,  நிஜபாத தரிசனம் என்று பல ஆர்ஜித சேவைகள்  திருமலையில் நடைபெறுகின்றன.

வருடத்தில் ஒரு முறை தெப்போற்சவம், வசந்தோற்சவம், பத்மாவதி பரிநயனம், ஜேஷ்டாபிஷேகம், புஷ்பப் பல்லக்கு, பவித்ரோற்சவம், புஷ்ப யாகம் முதலிய ஆர்ஜித சேவைகளும், கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் வருடத்திற்கு நான்கு முறையும் நடைபெறுகின்றது.



ஒவ்வொரு சேவைக்கும் குறிப்பிட்ட கட்டணம் மற்றும் சமயம் உள்ளது.  இந்த ஆர்ஜித சேவைகளுக்கு முதலிலேயே இணையம் மூலமும்,   திருமலை-திருப்பதி சேவா மையங்கள் மூலமாகவும் முன்பதிவு செய்து கொள்ளலாம்.  திருமலையில் விஜயா வங்கி கவுண்டரிலும் சில டிக்கெட்கள் வழங்குகின்றனர். அடியோங்கள் ஸ்ரீவாரி சேவையின் போது வசந்தோற்சவம் மற்றும்  சகஸ்ர தீபாலங்கார சேவையையும், எங்கள் குழுவில் ஒருவர் திங்கட்கிழமை காலை விசேஷ பூஜையிலும் கலந்து கொள்ளும் பாக்கியம் கிட்டியது.

இந்த ஆர்ஜித சேவைகள் எல்லாம் உற்சவ மூர்த்தி மலையப்ப சுவாமிக்கான சேவைகள். சேவை முடிந்தவுடன் மூலவரின் தரிசனமும் கிட்டுகின்றது. வைகுண்ட துவாரம் -1  வழியாக சென்று அரை மணி நேரத்தில்மூலவரை தரிசித்து வரமுடிகின்றது.  ரூ 300/- சிறப்பு டிக்கெட்வாங்கி மூலவரை மட்டும் சேவித்து வருவதை விட வசந்தோற்சவ டிக்கெட் வாங்கி மூலவர், உற்சவர் இருவரையும் சேவிப்பதுடன் குறிப்பிடப்பட்ட சமயத்தில் தரிசனமும் கிட்டுகின்றது. ஆனால் குறிப்பிட்ட அளவு டிக்கெட்டுகள்தான் உள்ளன என்பதால் முன்பதிவு ஆரம்பிக்கும் நாளில் முன்பதிவு செய்தால்தான் டிக்கெட் கிட்டும்.


கருடாழ்வார் 

இனி அடியோங்களின் அனுபவம். தினமும் விஜயா வங்கிக் கவுண்டருக்கு சென்று  மறுநாள் அடியோங்களுக்கு ஏற்றவாறு       (சேவை இல்லாத நேரத்தில்) ஏதாவது ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் உள்ளனவா என்று பார்ப்போம். ஒரு நாள்வசந்தோற்சவத்திற்கான டிக்கெட் கிட்டியது. இந்த சேவை வசந்தோற்சவ  மண்டபத்தில் நடைபெறுகின்றது. மாலை 3 மணிக்கு இந்த சேவை துவங்குகின்றது என்றாலும் 1 மணிக்கே வந்துவிட வேண்டியிருந்தார்கள். காலையில் கல்யாணோற்வம், ஊஞ்சல் சேவை கண்டருளி,  உபய நாச்சியார்களுடன் மலையப்பசுவாமி வசந்தோற்சவ  மண்டபத்திற்கு எழுந்தருளி, ஆர்ஜித பிரம்மோற்சவமும், வசந்தோற்சவமும் கண்டருளுகின்றார். அந்த மண்டபத்தில் மேடைக்கு அருகில்  ஆர்ஜித பிரம்மோற்சவ உபயதாரர்களையும்,   அவர்களுக்குப் பின்னால் வசந்தோற்சவ உபயதாரர்களையும் அமர வைக்கின்றனர்.  எனவே அடியோங்களுக்கு இரு சேவைகளையும் சேவிக்கும் பாக்கியம் கிட்டியது.

இம்மண்டபத்தில் மலையப்பசுவாமி உலா வரும் வாகனங்கள் எல்லாம் வைக்கப்பட்டுள்ளன மற்றும் பிரம்மோற்வத்தின் அருட்காட்சிகள் எல்லாம் எழிலார்ந்த தஞ்சாவூர் ஓவியங்களாக மிளிர்கின்றன.  ஆர்ஜித பிரம்மோற்சவத்தில் மலையப்பசுவாமி, கருட வாகனம், ஹனுமந்த வாகனம் மற்றும் பெரிய சேஷ வாகனத்தில் சேவை சாதித்தருளுகின்றார். ஒவ்வொரு வாகனத்திலும்  பெருமாள் எழுந்தருளும் போது ஆரத்தி காட்டப்படுகின்றது அனைவரும் திவ்யமாக பெருமாளை சேவிக்கின்றனர். ஆர்ஜித பிரம்மோற்சவம் நிறைவடைந்தவுடன் அதன் உபயதாரர்கள் மூலவரை தரிசிக்கச் செல்கின்றனர். அதன்பிறகு வசந்தோற்சவ உபயதாரர்கள் பெருமாளின் அருகில் வந்து அமர்ந்து கொண்டு பெருமாளுக்கும், உபய  நாச்சியார்களுக்கும் நடைபெறும் திருமஞ்சனத்தைக் கண் குளிர, மனம் குளிர சேவிக்கின்றனர், பால், தயிர், தேன், இளநீர், மஞ்சள், சந்தனம் என்று விரிவாக திருமஞ்சனம் நடைபெறுகின்றது. அப்போது வேத பண்டிதர்கள் புருஷ ஸூக்தம், ஸ்ரீ ஸூக்தம் விண்ணப்பம் செய்கின்றனர். அதுவும் பெருமாளுக்கு சந்தனத்தால் அருமையாக அலங்காரம் செய்து, துளசி மாலை சார்த்தி  பின்னர் புனித நீரினால் சகஸ்ரதாரா தட்டின் வழியாக திருமஞ்சனம் செய்யும் போது உண்மையிலேயே ஒரு தெய்வீக உணர்வை பெறுகிறோம். எத்தனையோ முறை தொலைக்காட்சியில் பார்த்திருந்தாலும், நேரில்சேவிக்கும்போது அப்படியே மெய்சிலிர்க்கின்றது.



பின்னர்அலங்காரம் நடைபெற்றது, பெருமாளின்  கற்பூர ஆரத்தி சேவித்து மகிழ்ந்தோம்.  அனைவருக்கும், புனித நீர் தெளித்தனர் அதை பெற்று ஜென்ம சாபல்யம் அடைந்தோம். திருமஞ்சன மஞ்சளும், சந்தனப் பிரசாதமும் கிட்டியது. இவ்வாறு இரண்டு ஆர்ஜித பிரம்மோற்வங்களையும் சேவித்து, திருமலையப்பனையும் அரை மணி நேரத்தில்அருமையாகசேவித்துமிகவும்மனதிருப்தியுடன்சேவாசதன்திரும்பினோம்.

மறு நாளும் காலையில் சேவை என்பதால் மாலை சகஸ்ரலங்கார தீபோற்சவத்திற்கான டிக்கெட் கிட்டியது அதை சேவித்தோம். ஆர்ஜித பிரம்மோற்சவம், வசந்தோற்சவம் கண்டருளி, அந்தி சாயும் நேரத்தில் மலையப்பசுவாமி சகஸ்ரலங்கார மண்டபத்திற்கு எழுந்தருளுகின்றார். அதற்கு முன் அந்த மண்டபம் மலர்களால்  நேர்த்தியாக அலங்கரிக்கப்படுகின்றது. அனைத்து அகல் விளக்குகளும் ஏற்றப்பட்டு மாலை கங்குலில் மண்டபம் எழிலாக ஒளிர்கின்றது. அந்த அற்புத சூழலில் மலையப்ப சுவாமியும் உபய நாச்சியார்களும் நாம் எல்லோரும் உய்ய  பொன்னூசல் கண்டருளுருகின்றனர். முதலில் வாய்ப்பாட்டு இசையுடன் முன்னும் பின்னுமாக ஆடி அருளுகின்றார், அடுத்து நாதஸ்வர இசையை இரசித்துக்கொண்டே பக்கவாட்டில் ஆடி அருளுகின்றார். சுமார் 15  நிமிடங்களுக்கு மேல் இச்சேவை  நடைபெறுகின்றது.  பக்தர்கள் அனைவரும் பக்தியும் எம்பெருமானை கண்டு ஆனந்தப்பரவசம் அடைகின்றனர்.  நிறைவாக கோபுர ஆரத்தி தரிசனமும், கற்பூர ஆரத்தி தரிசனமும் கிட்டுகின்றது. பின்னர் மலையப்பசுவாமி மாடவீதி வலம் வந்து பக்தர்களுக்கு சேவை சாதித்து அருளுகின்றார்.

அன்னமாச்சார்யார்

சகஸ்ரதீபாலங்கார சேவையை சேவித்த அன்பர்கள் வைகுண்ட வளாகம்-1 வழியாகச் சென்று மூலவர் திருமலையப்பனை தரிசித்துவிட்டு வருகின்றனர். இவ்வாறு அடியோங்கள் மூன்றாவது முறையாக சுவாமியை தரிசனம் செய்தோம். அடுத்த இரு நாட்கள் அடியோங்களுக்கு வைகுண்ட வளாகம்-2 எழுமலையப்பனை சேவிக்கக் காத்திருக்கும் பக்தர்களுக்கு அன்னம் பாலிக்கும் சேவை செய்யும் பாக்கியம் கிட்டியது. அதில் ஒரு நாள் கூட்டம் குறைவாக இருந்ததால் சேவை நிறைவு பெற்ற பிறகு வரிசையில் என்று  நின்று சுமார் 2 மணி நேரத்தில் திருவேங்கடவனை நான்காவது முறையாக சேவிக்கும் பாக்கியம் கிட்டியது.

சேவையின் நிறைவாக திங்கட்கிழமையன்று  தேவஸ்தானத்தினர் ஏற்பாடு செய்த இலவச சேவையை ஐந்தாவது முறையாக சேவித்தோம். திருமலைக்கு சென்றும் கூட்டம் அதிகம், டிக்கெட் கிட்டவில்லை என்று சுவாமியை தரிசிக்காமல் திரும்பி வந்த நாட்களும் உண்டு ஆனால் அவன் அருளால் எட்டு நாட்களில் ஐந்து தடவை பெருமாளை சேவிக்கும் பாக்கியம் கிட்டியது என்பதனால்தான் இத்தொடருக்கு “நானேயோ தவம் செய்தேன்” என்று தலைப்பு.

ஸ்ரீவாரி சேவையின் போது அடியோங்களுக்கு  நாராயண இரதம் என்றழைக்கப்படும் இலவச பேருந்து சேவை

  சிறிய திருவடி - பெரிய திருவடி அலிப்பிரி 

மிகவும் உதவியாக இருந்தது. ஆகவே அந்த சேவையைப் பற்றிய ஒரு சிறு குறிப்பு. அதிகாலை ஐந்து மணிக்கு இந்த சேவை துவங்குகின்றது. இரவு 11 மணி வரை தொடர்ச்சியாக நடைபெறுகின்றது.  தரிசனத்திற்காக  பக்தர்கள் செல்ல வேண்டிய வைகுண்ட வளாகங்கள், பேருந்து நிலையங்கள், அனைத்து தங்கும் விடுதிகள், டிக்கெட் கவுண்டர் என்று அனைத்து முக்கிய இடங்களையும் இணைக்கும் வகையில் சுற்றிக்கொண்டு வருகின்றது பேருந்துகள்.    ஒரு சுற்று முடித்தபின் சுமார் பத்து நிமிடம் ஓய்வு. பின்னர் அடுத்த சுற்று, பேருந்தில் ஒரு நடத்துனரும் உள்ளார் அவர் பக்தர்களுக்கு வழிகாட்டியாகவும் விளங்குகின்றார். திருமலை செல்லும் அன்பர்கள் குறிப்பாக வயோதிகர்கள், முடியாதவர்கள் இச்சேவையை பயன்படுத்திக்கொள்ளுமாறு  வேண்டிக்கொள்கிறேன்.


இத்தொடரின் நிறைவாக சுவாமி புஷ்கரிணி தீர்த்தமாடல் மற்றும், பத்மாவதித்தாயார் தரிசனத்தையும் பற்றிக்காணலாம் அன்பர்களே.

Wednesday, August 3, 2016

நானேயோ தவம் செய்தேன் -7

திருமண வரம்அருளும்ஸ்ரீநிவாசமங்காபுரம்

கல்யாண வெங்கடேஸ்வரர்


இராஜ கோபுரம் 

திருப்பதிக்கு வரும் பலருக்கு,  பத்மாவதித் தாயார்அருளும்அலமேலுமங்காபுரம்பற்றித்தெரிந்த அளவிற்கு, அவர்பத்மாவதித்தாயாரை திருமணம்புரிந்த பின்திருமலை செல்வதற்கு முன் தங்கிய ஸ்ரீநிவாசமங்காபுரம்குறித்து சரியாகத்தெரிவதில்லை. இந்தக்கோயிலின்மகத்துவம்அறிந்த வெகு சிலரே, மாறாத இளமைக்கோலத்தில்காட்சிதரும்ஸ்ரீகல்யாணவேங்கடேஸ்வரரைதரிசிக்கும்பாக்கியம்பெறுகின்றனர். திருமலையில்கிடைக்காத பெருமாளின்பாததரிசனம், இங்கே கிடைக்கிறது!


திருப்பதி- மதனப்பள்ளி சாலையில்சுமார் 19 கி.மீ. தொலைவில்உள்ளது ஸ்ரீநிவாசமங்காபுரம்.ஆதியில்அகத்தியமுனிவர்இங்கேஆஸ்ரமம்அமைத்து தங்கி இருந்தார். பத்மாவதித்தாயாரை மணம்முடித்த பெருமாள், புதுமணத்தம்பதிகள் மலையேறக்கூடாது என்ற சம்பிரதாயத்துக்கு இணங்க, அகத்தியரின்வேண்டுகோளை ஏற்று, ஆறு மாத காலம்இந்தத்தலத்தில்தங்கி இருந்தாராம். பிறகு பெருமாள், 'ஸ்ரீவாரிமெட்டு' என்ற பாதை வழியாக திருமலைக்குச்சென்றார்.

புஷ்கரணி

ஸ்ரீநிவாசமங்காபுரத்தில்தான்... ஸ்ரீபத்மாவதி தாயாரை மணம்முடிக்க, தன்னைச்சுற்றிலும்புற்று வளரும்அளவிற்கு கடுந்தவம்புரிந்தாராம்பெருமாள்! கோயில்வளாகத்தில்இன்றும்புற்றுகள்பல உள்ளன.பெருமாள், புற்றின்அடியில்தோன்றியதால், கோபுரத்தில்விமானஸ்ரீநிவாசர்இல்லை.
மாசி மாதத்தில்வருடாந்திர பிரம்மோத்ஸவம், பக்தர்கள்பிரார்த்தித்துக்கொண்டு நடத்திவைக்கும்கல்யாணஉற்ஸவம்தவிர, இன்னொரு விழாவும்இந்தக்கோயிலில்பிரசித்தம் 'சாக்ஷத்காரம்' என்று கொண்டாடப்படும்அந்தவிழாஏற்பட்டகதைசுவாரஸ்யமானது.


 காஞ்சிபுரத்தைச்சேர்ந்த நடுத்தர மாத்வா குடும்பத்தில்பிறந்தவர்சுந்தரராஜ சுவாமி. விவசாயம்தான்இவரதுதொழில். ஒருநாள்அதிகாலை இவருக்கு ஒருகனவு .புற்றுகளும்முட்புதர்களும்சூழ்ந்தபாழடைந்தமண்டபம்..பெருமாள்சங்கு, சக்ரத்துடன்தோன்றி, ''இங்கு, நீண்டநாட்களாகபசியோடுகாத்திருக்கிறேன், வருகிறஆஷாடமாதம் (ஆடி) உத்தரபல்குனிநட்சத்திரம், சுத்தசப்தமிநாளில்நீஇந்தஇடத்துக்குவந்துபூஜைசெய்'' என்றார். அடுத்தஇரண்டுநாட்கள் இதே கனவு, இவர் அந்தபாழடைந்தமண்டபத்தைத்தேடிபுறப்பட்டார்.பலநாட்களாகதேடியபின்ஒருநாள்அதிகதாகம்எடுக்கதண்ணீர்தேடிஅலைந்தபோதுபெருமாள்ஆட்டுஇடையன்வடிவில்தோன்றிதான்இருந்தஇடத்தைக்காட்டிக்கொடுத்தார்.
மண்டபம்இருந்தது ஆனால்சுவாமிவிக்கிரகங்களை காணவில்லை. பீஜப்பூர்கோல்கொண்டா சுல்தான்களின்படையெடுப்புகளின்போது அவர்களால்சுவாமி விக்கிரகங்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக, கருவறை இருப்பதே தெரியாதபடி சுவர்எழுப்பி மறைத்திருந்தார்கள் ஸ்ரீவைணவர்கள். அந்தகருவறை சுவரை உடைத்தபோது திருப்பதிப்பெருமாளைப் போலவே கல்யாண வெங்கடேஸ்வரரை கண்டு உருகி, அருகில் உள்ள கிராமங்களில் உஞ்சவிருத்தி செய்து பெருமாளுக்கு ஆராதனம் செய்ய ஆரம்பித்தார் சுந்தரராஜசுவாமி. இவருக்குப்பின் தற்போது புதுப்பொலிவுடன்  திருப்பதி தேவஸ்தானத்தினாரால் இவ்வாலயம் பராமரிக்கப்படுகின்றது. 

உபய நாச்சியார்களுடன் கல்யாண வெங்கடேஸ்வரர் 
 
பெருமாள் அகத்தியர் ஆசிரமத்தில் இருந்து திருமலைக்கு எழுந்தருளுவதற்கு முன் இரு வரங்கள் அளித்தார். முதலாவது ஏது காரணத்தினாலும் திருமலை வரமுடியாதவர்கள் (புதிதாக மணமானவர்கள், வயோதிகர்கள்)இங்கு சேவிக்க திருமலையில் சேவித்த பயன் கிட்டும். இரண்டாவது இங்கு கல்யாண உற்சவத்தில் கலந்துகொண்டுகாப்புக்கட்டிக்கொண்டால், திருமணதோஷங்கள் நீங்கி, விரும்பிய வண்ணம் மணம் கை கூடும். ஆகவே இன்றும் பலர் திருக்கல்யாண உற்சவத்தில் பங்கேற்றுக்கொண்டு காப்புக்கட்டிக்கொள்கின்றனர்.


இவ்வாலயத்திற்கு அடியோங்கள் இலவச பேருந்து மூலமாக வந்து சேர்ந்தோம். மாலை சுமார் 6  மணிக்கு வந்து சேர்ந்தோம். இரவு 8  மணிக்குத்தான் ஏகாந்த சேவை அதற்கான டிக்கெட் 7:30  மணிக்குத்தான் தருவார்கள். எனவே பெருமாளை திவ்யமாக சேவித்தோம். நெடிதுயர்ந்த  ஐந்து நிலை இராஜகோபுரம் எதிரே அஷ்ட கோண புஷ்கரணி சுத்தமாக பராமரித்திருக்கின்றனர். ஆலயத்தின் உள்ளே நுழைந்தோம் தங்கக் கவசம் பூண்ட பலி பீடம், கொடி மரம். திருக்கோவில் உயரத்தில் அமைந்துள்ளது. முழுவதும்கற்றளியாகபலஅற்புதகற்சிற்பங்களுடன் எழிலாக அமைந்துள்ளது ஆலயம் ஒரே பிரகாரம் சுற்றி வந்து படிகளில் ஏறி பெருமாளை சேவிக்கச் சென்றோம். மஹா மண்டபத்தில் அற்புதமான கற்சிற்பங்கள், கருடன் நெடியோனாகதிருக்கரங்களை கூப்பிய வண்ணம் சேவை சாதிக்கும் அழகைக் கண்டோம். இரண்டு காண்டாமணிகள் இம்மண்டபத்தில் உள்ளன.

அர்த்த மண்டபத்தில் நுழைந்தவுடன் பெருமாளின் திருமுக தரிசனம் கிட்டுகின்றது. அருகில் சென்று பெருமாளை நிதானமாக சேவிக்க முடிகின்றது. நின்ற கோலத்தில் இளமைக் கோலத்துடன் நான்கு திருக்கரங்களுடன் சேவை சாதிக்கின்றார் கல்யாண வெங்கடேஸ்வரப்பெருமாள்,  பள்ளி கொண்ட கோலத்தில் அரங்கநாதரும், அமர்ந்த கோலத்தில் லக்ஷ்மிநாராயணரையும் சேவிக்கின்றோம். பட்டர் பொறுமையாக மூலவர்களுக்கும்,   உற்சவ மூர்த்திகளுக்கும் ஆரத்தி சேவித்து தீர்த்தம், சடாரி அளித்தனர். திவ்யமாக பெருமாள்களை சேவித்தபின் வெளியில் வரும் போது திருமலை போலவே இங்கும் எந்நேரமும் பிரசாதம் வழங்குகின்றனர். பிரசாதத்தை சுவீகரித்துக்கொண்டு புஷ்கரணி கரையில் அமர்ந்து கொண்டு ஏகாந்த சேவைக்கான அனுமதி சீட்டு அளிக்கும் வரை பெருமாளை தியானித்துக்கொண்டு இருந்தோம்.


மாசி மாத பிரம்மோற்ஸவத்திற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. பெருமாளும் வலம் வந்தார் திவ்யமாக சேவித்தோம். புகைப்படங்களும் எடுத்துக்கொண்டோம். பிரம்மோற்ச்வத்தின் போது நரசிம்மராக சிம்ம வாகனத்தில் பெருமாளை சேவிப்பது மிகவும் விசேஷம் என்று கூறினார்கள். மேலும் கருடசேவையின் போது  திருமலையில் இருந்து திருமலையப்பனுக்கு சார்த்தப்படும் லக்ஷ்மி ஹாரம் கொண்டு வரப்பட்டு சார்த்தப்படுகின்றதாம். 

திருத்தேர்


7:30 மணிக்கு அனுமதி சீட்டு அளித்தனர், பிறகு சென்று வரிசையில் நின்றோம். சமயம் வந்தவுடன் உள்ளை அனுமதித்து அனைவரையும் அமர வைத்தனர். ஏகாந்த சேவை ஆரம்பமானது. யாரும் எந்தவித ஒசையெழுப்ப வேண்டாம் என்று வேண்டிக்கொண்டனர்.  பெருமாளை உறங்க வைக்க நாயனம் வாசிக்கின்றனர். நிசப்தமான சூழ்நிலையில் இனிமையான இசையும் பெருமாளின் எழிலும்  நம்மைச் சொக்க வைக்கின்றது.  இனிமையான இசையில் கட்டுண்டு அமர்ந்திருந்தோம் பின்னர் பெருமாளுக்கு ஆரத்தி காண்பித்து  மெதுவாக கர்ப்பகிரகத்தின் விளக்குகளின் ஒளியை குறைத்து  திரையிடுகின்றனர். வெளியே வரும்போது பெருமாளுக்கு நைவேத்யம்செய்தபிரசாதமும்அளித்தனர். இவ்வளவு அருமையாக சேவை அளித்த பெருமாளுக்கும்இக்கோவிலைப்பற்றிக் கூறிய  நண்பருக்கும் நன்றி கூறி பேருந்து மூலம் திருப்பதி வந்து பின்னர் திருமலை வந்து சேர்ந்தோம். வரும் பதிவில் திருமலையில் என்னென்ன ஆர்ஜித சேவைகளை அடியோங்கள் சேவித்தோம் என்பதைப் பற்றிக் காணலாம் அன்பர்களே. 


இத்தொடரின் மற்ற பதிவுகளைக் காண இங்கு சொடுக்குங்கள்

சேவை தொடரும் . . . . . . .