Monday, October 17, 2022

கொங்கேழ் தலங்கள் பத்தியுலா - 29

அயோத்தியாபட்டிணம் தரிசனம்

இராஜகோபுரம்

இந்த யாத்திரையின் நிறைவாக அடியோங்கள் தரிசித்த தலம் சேலத்திற்கு அருகில் அமைந்துள்ள அயோத்தி ஆகும்.  சேலத்தில் இருந்து சுமார் 15 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது, அயோத்தியாபட்டிணம்  கோதாண்டராம சுவாமி திருக்கோவில். சேலம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து ஆத்தூர் அல்லது அரூர் செல்லும் பேருந்தில் சென்று,  அயோத்தியாபட்டணம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கிக் கொள்ள வேண்டும். அங்கிருந்து அரூர் சாலையில், நடந்து செல்லும் தொலைவிலேயே கோவில் அமைந்துள்ளது. சேலம் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து கோம்பூர் செல்லும் நகரப் பேருந்தில் சென்றால், கோவில் முன்பாகவே இறங்கிக்கொள்ளலாம்.

இத்தலம் வட அயோத்தியின் மகிமைக்கு சற்றும் குறைவில்லாதது என்றே சொல்லலாம். ஆம்! அயோத்தியாவாசிகள் தரிசிப்பதற்கு முன்னதாகவே, இராமபிரான் தமது பட்டாபிஷேகக் கோலத்தைக் காட்டியருளிய திருத்தலம் இது.  இங்குள்ள அருள்மிகு கோதண்டராமர் ஆலயத்திற்கு சென்றால்,  பட்டாபிஷேக கோலத்தில்  நாம்  அவரை தரிசிக்கலாம்.  ஆதிகாலத்தில் இப்பகுதியில் பரத்வாஜ முனிவரின் ஆசிரமம் அமைந்திருந்தது. இலங்கையில் இராவண வதம் முடிந்து திரும்பிய இராமபிரான், இவ்வழியே வரும்போது, முனிவரைச் சந்தித்தார். பரத்வாஜ முனிவரின் வேண்டுகோளின்படியும், விபீஷ்ணனின் பிரார்த்தனையை ஏற்றும் இத்தலத்தில், சீதாபிராட்டியுடன் சேர்ந்து பட்டாபிஷேகக் கோலத்தை காட்டியருளினாராம் இராமபிரான். ஆக, அயோத்தியில் பட்டாபிஷேக கோலத்தில் காட்சி தருவதற்கு முன்பாகவே, இங்கு முதன்முதலாக பட்டாபிஷேகக் கோலத்தில் காட்சி தந்ததால்தான் இவ்வூர் அயோத்தியா பட்டணம் என்று அழைக்கப்படுவதாகக் கூறுகின்றனர். இங்கு, இராமர் மூன்று நாட்கள் தங்கி இருந்ததாராம். இராமரின் பாதத்தடங்கள் இங்குள்ளதால் இக்கோயிலுக்கு இப்பெயர் வந்ததாகவும் கூறப்படுகிறது.


மூலவர் விமானம்

வெளியே இராஜகோபுரத்திற்கு எதிரே கொங்கு மண்டலத்திற்கே உரிய விளக்குத்தூண். நெடிதுயர்ந்த  ஐந்து நிலை இராஜகோபுரம்  நம்மை வரவேற்கின்றது. இராஜகோபுரத்தின் வழியே  உள்ளே நுழைந்தவுடன் இராமர் பாதத்தை தரிசிக்கின்றோம். பரத்வாஜ முனிவர் வழிபட்ட இராமர் பாதம் என்கின்றனர். அடுத்து  எகாதசி பீடத்தின் மேல் பலி பீடம்  மற்றும் உயர்ந்த கவசம் பூண்ட கொடி மரம்,  கருடாழ்வார் சன்னதி, மற்றும் குதிரை வீரர்களைக் கொண்ட தூண்களைக் கொண்ட மஹா மண்டபத்தை தரிசிக்கிறோம்.  மண்டபத்தின் மேல் தசவதார சுதை சிற்பங்கள் அலங்கரிக்கின்றன. உயர்ந்த மதிலுடன் கூடிய ஒரு விலாசமான பிரகாரத்துடன் ஆலயம் அமைந்துள்ளது. பிரகாரத்தில் நந்தவனம் அமைந்துள்ளது.

இவ்வாலயம் மிகச் சிறந்த சிற்பக் கலைக்காக போற்றப்படுகிறது,  ஒவ்வொரு கல்லும் ஒரு கவி பாடுகின்றது.  இங்குள்ள தூண்கள், தட்டினால் இசை எழுப்பக்கூடிய தனித்தன்மை வாய்ந்தவைகளாகும்.       திருமலை நாயக்கரால் கட்டப்பட்ட இம்மண்டபம், இராமரின் கதையை எடுத்துக்கூறும் வகையில் அமைக்கப்பெற்ற மிகப்பெரும் சிலைகள் பல உள்ளன. கோவில் மகா மண்டபத்தில் மொத்தம் 28 தூண்கள் அழகு செய்கின்றன. இத்தூண்களில் அனைத்தும் மிகுந்த கலைநயத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. இராமரின் பெருமைகளைப் பறைசாற்றும் விதத்தில் தத்ரூபமாகச் சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன.  இராமர், சீதை, இலட்சுமணம், பரதன் சிலைகலையும் தரிசிக்கலாம். அவை ஒவ்வொன்றும் இராமாயண காலத்துக்கே நம்மை அழைத்துச் செல்கின்றன.   மேலும் கஜேந்திர மோட்சம், கிருஷ்ணன் லீலைகள், தசாவதாரக் காட்சி, ஆகியவற்றை சித்தரிக்கும் சிற்ப வேலைப்பாடுகள் மிக அழகாக செதுக்கப்பட்டுள்ளது. மண்டபத்தின் உட்புறம் உள்ள 4 தூண்கள் அதிசயத்தக்க வேலைப்பாடு கொண்டவையாகும். இத்தூண்களை தட்டினால் ஏழு சுரங்களும் இசை ஒலிகளாய் வெளிப்படுவது வியப்பிற்குரிய ஒன்றாகும். இம்மண்டபத்தைக் கட்டிய சிற்பியும், நாக்கு அறுபட்ட நிலையில் தூண் சிற்பமாகத் திகழ்கிறார்!  இக்கோவில் பற்றிய இரகசியங்கள் வெளியே தெரியாமல் இருக்க வேண்டியே சிற்பியின் நாக்கு துண்டாக்கப்பட்டதாகக் கூறுகின்றனர்.

புஷ்பக விமானத்தில் இராமபிரான் வந்து இறங்கியதால் இம்மண்டபமானது தேர்  போன்று வடிவமைக்கப்பட்டிருக்கிறது. வடக்கு வாசல், தெற்கு வாசல் என இரண்டு வாயில்கள் இம்மண்டபத்தில் இருக்கின்றன. இதன் மேற் கூரையில் திகழும் இராமாவதார மகிமைகளை உணர்த்தும் ஓவியங்கள், மிக அற்புதம்! இயற்கை மூலிகை வண்ணப்பூச்சுகளைக் கொண்டு வரையப்பட்ட இவ்வோவியங்கள் அழகுக்கு அழகு சேர்க்கின்றன. பல வருடங்களை கடந்தும் அவை இன்றும் புதிது போல உள்ளது.  மண்டபத்தின் கூரையின் மையத்தில் அஷ்டதிக் பாலகர்கள் மற்றும் கவிழ்ந்த தாமரை அதைக் கொத்தும் கிளிகளுடன் கூடிய சிற்பம் மிக அருமையாக அமைந்துள்ளது.  இம்மண்டபத்தை திருமலை நாயக்கர் கட்டியதாகச் சொல்லப்படுகிறது. இதை மெய்ப்பிககும் வகையில், மண்டபத்தில் உள்ள கல்தூண்களில் திருமலை நாயக்கர், அவரது மனைவி  மற்றும் அவர்களுடைய பிள்ளைகளின் சிற்பங்களைக் காணலாம். நாயக்கர் காலத்து வண்ண மூலிகை ஓவியங்கள் மற்றும் புலிச் சின்னங்கள் கோவில் மண்டப விதானத்தில் வரையப்பட்டு இருப்பதால் நாயக்கர் ஆட்சி காலத்தில் தான் இக்கோவில் கட்டப்பட்டது என்பதை உறுதிப்படுத்துகிறது.


வாருங்கள் இனி மூலவர் பட்டாபிஷேக இராமரை சேவிக்கலாம். கிழக்கு நோக்கிய திருமுக மண்டலத்துடன்  இராமரும் சீதையும் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருக்கின்றனர். கருவறையில் இராமபிரான் இடது காலை, வலது காலின் மேல் வைத்து சுகாசனத்தில் கம்பீரமாக அமர்ந்து இருக்கிறார். இடது பாகத்தில் சீதாதேவி பத்மாசன கோலத்தில் இடது காலை, வலது காலின்மேல் வைத்து, தனது வலது கையில் தாமரை மலரையும், இடதுகை கீழ்நோக்கிய படியும் எழிலாக அமர்ந்து இருக்கிறார். சீதாதேவியின் இடது பாகத்தில் இலட்சுமணன் உடைவாள் ஏந்திய நிலையிலும், இராமரின் வலது பக்கத்தில் பரதன் வெண்கொற்றக் குடையை ஏந்தி நிற்கவும், சத்ருக்னன் வடக்கு பார்த்த நிலையில் வெண்சாமரம் வீசுவது போலவும், அனுமன் இரு கை கூப்பி வணங்கிய நிலையிலும், மேற்கே சுக்ரீவன் வணங்கிய நிலையிலும், அங்கதன் நின்ற கோலத்திலும் காட்சி தருகின்றார். எதிரே விபீடணன் அமர்ந்த நிலையில் காணப்படுகிறார். சென்னையிலிருந்து இக்கொரோனா காலத்திலும் ஆர்வமாக வந்திருக்கிறீர்களே என்று அனைவரையும் பொறுமையாக சேவை செய்து வைத்தார் பட்டர்.  இராமரின் மகிமைகளை உணர்ந்த கடையெழு வள்ளல்களில் ஒருவரான- தகடூர் என்ற தருமபுரியை ஆண்ட அதியமான்  இத்திருத்தலத்தின் மூலஸ்தானத்தைக் கட்டியதாகச் சொல்கிறார்கள்.

 கோயிலின் வடக்கு வாசலுக்கு எதிராக ஆழ்வார்கள் சன்னதியையும்,  தெற்கு வாசலுக்கு எதிராக சக்கரத்தாழ்வார் சன்னதியையும் தரிசிக்கலாம். ஆஞ்சநேயருக்கும்  தனி சன்னதி உள்ளது. சித்ரா பௌர்ணமியன்று இவர் மீது சூரிய ஒளி விழுந்து கொண்டிருந்ததாம் தற்போது கட்டிடங்கள் உயர்ந்து விட்டதால் சூரிய ஒளி மறைக்கப்பட்டு விட்டதாம். இத்திருத்தலத்தில், வடதிசையில்  தனியாக சிறு சன்னதியில் உள்ள ஆண்டாளுக்குப் பூரம் நட்சத்திரத்தன்று மாலை 4 மணி முதல் 6 மணி வரை கூட்டுப் பிரார்த்தனை நடைபெறுகிறது. அப்போது ‘திருப்பாவை’ சேவிக்கப்படுகிறது. திருமணத் தடை உள்ளவர்கள், புத்திர பாக்கியம் இல்லாதவர்கள், இக்கூட்டு வழிபாட்டில் கலந்து கொண்டு  சூடிக் கொடுத்த சுடர்க் கொடியை தரிசித்தால், தங்களுடைய குறைகள் நிவர்த்தி ஆகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.


இத்தலத்தின் தல விருட்சம் - வன்னி மரம். புரட்டாசி மாதத்தின் ஐந்து சனிக் கிழமைகளிலும் சிறப்பு வழிபாடு நடைபெறுகின்றது. மூன்றாவது சனிக் கிழமை இராமர்-சீதை கல்யாண உற்சவம் நடைபெறும். சித்திரை மாதத்தில் வரும் இராம நவமி அன்று இத்திருத்தலத்தில் மிகப்பெரிய அளவில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அன்று வழங்கப்படும் நீர்மோர் தானம் புகழ்பெற்றது.


இவ்வாறாக தரிசிக்க நினைத்த இரண்டு தலங்களை தவிர்த்து அனைத்து தலங்களையும் அருமையாக அவனருளினால் தரிசித்தோம்.  பின்னர் அங்கிருந்து கிளம்பி இரவு சென்னை சுகமாக வந்து சேர்ந்தோம். எவ்வாலயத்திலும் கூட்டம் இருக்கவில்லை, யாத்திரைக்குப் பின்னும் யாருக்கும் எவ்வித சுகவீனமும் ஏற்படவில்லை. நேரமின்மையின் காரணமாகவே இரு தலங்களை தரிசிக்க இயலாமல் போனது. இவ்வாறு அவனருளால் இந்த யாத்திரை மிகவும் அருமையாக  அமைந்தது. இது வரை தொடர்ந்து வந்த அனைவருக்கும் நன்றி. சமயம் கிடைத்தால் தாங்களும் சென்று தரிசித்து விட்டு வாருங்கள்.

இப்பகுதிக்கு யாத்திரை செல்லும் அன்பர்கள் அவசியம் தரிசிக்க வேண்டிய இரு மிக சிறப்பு வாய்ந்த தலங்கள் கோவைக்கு அருகில் அமைந்துள்ளன இப்பகுதியில் யாத்திரை செய்யும் அன்பர்களுக்கு உதவும் வண்ணம் அத்தலங்களைப் பற்றியும் காணலாம் அன்பர்களே.நாம் தரிசிக்கின்ற முதல் தலம் மேலைச்சிதம்பரம் என்றழைக்கப்படும் தேவார வைப்புப் பாடல் தலமான பேரூர். இப்புத்தகத்தின் நிறைவாக நாம் தரிசிக்கப்போகின்ற தலம் முருகனின் ஏழாம் படைவீடு என்று புகழ் பெற்ற மருதமலை ஆகும். வாருங்கள் முதலில் சுந்தருக்காக எம்பெருமானும் எம்பிராட்டியும் உழவனும் உழத்தியுமாக நாற்று நட்ட தலமான பேரூரை தரிசிப்போம் அன்பர்களே.

2 comments:

கோமதி அரசு said...

//தரிசிக்க நினைத்த இரண்டு தலங்களை தவிர்த்து அனைத்து தலங்களையும் அருமையாக அவனருளினால் தரிசித்தோம். பின்னர் அங்கிருந்து கிளம்பி இரவு சென்னை சுகமாக வந்து சேர்ந்தோம். எவ்வாலயத்திலும் கூட்டம் இருக்கவில்லை, யாத்திரைக்குப் பின்னும் யாருக்கும் எவ்வித சுகவீனமும் ஏற்படவில்லை. நேரமின்மையின் காரணமாகவே இரு தலங்களை தரிசிக்க இயலாமல் போனது. இவ்வாறு அவனருளால் இந்த யாத்திரை மிகவும் அருமையாக அமைந்தது.//

அவன் அருளாலே அவன்தாள் வணங்கி வந்து விட்டீர்கள் மகிழ்ச்சி.

அயோத்தியாபட்டிணம் கோதாண்டராம சுவாமி திருக்கோவில் பற்றிய விவரங்கள், படங்கள் எல்லாம் அருமையாக இருந்தது.
அடுத்து பேரூரை தரிசிக்க வருகிறேன்.
அடிக்கடி பார்த்த கோயில்.

S.Muruganandam said...

மிக்க நன்றி அம்மா.