Saturday, September 10, 2022

கொங்கேழ் தலங்கள் பத்தியுலா - 28

 

தாரமங்கலம் கைலாசநாதர் தரிசனம்



அழகிய கற்சிற்பங்களுக்கு புகழ் பெற்ற இவ்வாலயம் சேலம் மேட்டூர் சாலையில் அமைந்துள்ளது.  தமிழகத்தின் எல்லா ஊர்களிலிருந்தும், சேலத்துக்கு பேருந்துகள் மற்றும் இரயில் போக்குவரத்து வசதி உள்ளது. சேலம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்தும், இரயில் நிலையத்திலிருந்தும், பத்து நிமிடங்களுக்கு ஒரு நகரப் பேருந்து வீதம் தாரமங்கலத்துக்கு இயக்கப்படுகிறது.

இக்கோவில்  ஒரே நேரத்தில் கட்டப்பட்டது  அல்ல. 10 ஆம் நூற்றாண்டில் இதன் சில பகுதிகள் இருந்தன. 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கெட்டி முதலி அரச பரம்பரையினர் இக்கோவிலை விரிவு படுத்திக் கட்டியுள்ளனர். பிற்காலத்தில் மும்முடிச் சோழனும், சீயாழி மன்னனும் இக்கோயிலைப் புதுப்பித்து திருவிழாக்களைக் கொண்டாடி வந்துள்ளனர். வணங்காமுடி மன்னர் காலத்தில் இக்கோவில் முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. கோவிலைச் சுற்றி மிகப்பெரிய கற்மதிற்சுவர் எழுப்பப்பட்டுள்ளது. இது 13 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.


ஆலயத்தின் முன்கோபுரம் 90 அடி உயரத்தில் ஐந்து அடுக்குகளைக் கொண்டது. ஒரு பெரிய தேரைக் குதிரைகளும் யானைகளும் மூலவரை நோக்கி  இழுத்துச் செல்வதைப் போன்ற தோற்றத்தில் இக்கோபுரம் அமைந்துள்ளது. கோவில் என்பது இறைவனின் இருப்பிடம் என்பதை தாண்டி மக்களின் பாதுகாப்பு அரண் என்னும் கொள்கையில் இக்கோவில்மைந்துள்ளது. எதிரி நாட்டு படை தாக்க வரும் போது பொன் பொருள் மக்களை பாதுகாக்கும் வீதம் இக்கோவில் அமைக்கப்பட்டுள்ளது. இராஜகோபுரம் 90அடி உயரம் கொண்டது வாசல் 20 அடி கொண்ட வேங்கை மரத்தினால் ஆன கதவுகள் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கோபுர வாசல் கதவிலும் 60 கூர்மையான உலோக குமிழ்கள் வீதம் மொத்தம் 120  கூரிய உலோக குமிழ்கள் அமைக்கப்பட்டுள்ளது. யானை வைத்து கதவுகளை உடைக்கும் அக்காலத்தில் யானை முட்டி மோதி உடைக்கும் போது அதன் மத்தகத்தை குத்தி கிழித்துவிடும்படி நுணுக்கமாக அமைக்கப்பட்டுள்ளது சிறப்பு. கோபுரத்தை அடுத்துள்ள சிவப்பு பவளக்கல் படிகளில் 5 நிமிடம் அமர்ந்தாலே போதும் நம் உடலில் உள்ள வெப்பம் தணிந்து விடும்.

இத்தலத்திற்கு தாரமங்கலம் என்ற பெயர் ஏற்பட்டதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. சிவபெருமானுக்கும், பார்வதிக்கும் இங்கு திருமணம் நடந்தது என்றும், திருமால் தாரை வார்த்துக் கொடுத்து மணவிழாவினை நடத்தியதால் ‘தாரமங்கலம்’ என்ற பெயர் வந்ததென்றும் கூறுவர்.

இக்கோவிலிலுள்ள இறைவனை சந்திரனும், சூரியனும் வந்து தொழுது செல்வதாகக் கூறப்படுகிறது. மேற்கு பார்த்த இச்சிவன் கோயிலில், உள்ள இன்னொரு சிறப்பு, மாசி மாதம்-9,10,11 ஆகிய மூன்று தேதிகளில் சூரியக்கதிர்  மூலவர் இலிங்கத்தின் மீது நேரடியாகப்படும் வகையில் ஆலயம் அமைந்துள்ளது. இம்மூன்று நாட்களிலும், மாலை ஆறரை மணிக்கு, கிழக்கு நோக்கி வரும் சூரியக்கதிர் இராஜகோபுரத்தின் வழியாக வந்து கொடி மரத்தைத் தாண்டி  பிறகு நந்தியின் கொம்பு வழியே கிழக்கு நோக்கி சென்று சிவலிங்கத்தின் மீது மூன்றாம் பிறை வடிவில் விழுகிறது. அதாவது, சூரிய ஒளி மூலஸ்தான சிவலிங்க மூர்த்தி மேல் விழுவதை சூரிய பூஜை என்று கூறுவர். இதை காண்பதற்கு ஏராளமான பக்தர்கள் இவ்வாலயத்தில் கூடுவார்கள்.  சந்திரனுக்கும், சூரியனுக்கும் தாரகாபதி, தாரகன் என்ற பெயர்கள் இருப்பதால் தாரமங்கலம் என்ற பெயர் உண்டாயிற்று என்றும் கூறுவார்கள்.

கிபி 12 ஆம் நூற்றாண்டில் கெட்டி முதலியார் இப்பகுதியை  அரசாண்டு வந்தார், அப்போது பசுக்கள் தினந்தோறும் மேய்ச்சலுக்கு செல்லும் போது ஒரு பசு மட்டும் குறிப்பிட்ட புற்றினில் தினமும் பால் சுரக்கிறது என்று தகவல் வந்தவுடன் அவர் அப்புற்றை தோண்டி பார்த்தபோது சிவலிங்கம் காணப்பட்டது, பிறகு அவர் அங்கே வழிபாடு செய்ததாகவும்,  பிறகு வந்த மன்னர்கள் கோவில் எழுப்பியதாகவும் வரலாறு கூறப்படுகிறது.

இக்கோவிலை, முதலில் கட்டத் துவங்கியவர் மும்முடி கட்டிமுதலி என்பவராவார், அவருக்கு பிறகு, சீயாளமுதலி அவருக்கு பிறகு வணங்காமுடி கட்டிமுதலி என்பவர்தான் கட்டி முடித்தார் என்று கூறப்படுகிறது. அதற்கு அடையாளமாக மைய மண்டபத்தின் முன்பாக மூன்று பிள்ளையார் சிலைகள் வைத்து வழிபடப்படுகிறது, இம்மூன்று சிலைகளும் மூன்று தலைமுறைகளை குறிக்கிறது.

கோவில் வளாகத்தில் சித்தி விநாயகர் சன்னதி இருக்கிறது. இது ஒன்பதே கருங்கற்களால் அமைக்கப்பெற்றது. கல்மேடை அமைக்கப்பட்டு, அதன்மீது விநாயகர் சன்னதி அமைக்கப்பட்டுள்ளது. விமானம் வரை முழுதும்  கற்களால் ஆனது. கோவிலின் வேலைகள் நடந்து கொண்டிருக்கும் போது சிற்பியின் மகனான சிறுவன் இந்த ஒன்பது கல் கோவிலைக் கட்டியதாக ஒரு வரலாறு கூறப்படுகிறது.




இக்கோவிலுக்கு கிழக்கே அதாவது பேருந்து நிலையம் அருகில் ஒரு தெப்பக்குளம் இருக்கிறது. இக்குளத்தில் சிவந்த கற்களால் கட்டப்பெற்ற கைப்பிடிச் சுவர்கள் சுற்றிலும் இருக்கின்றன. குளத்தின் நடுவில் நீராழி மண்டபம் உள்ளது. இக்குளத்து தண்ணீரை ‘கங்கை தீர்த்தம்’ என்கிறார்கள். ஏனென்றால், மூலவர் கைலாசநாதருக்கு அபிஷேகம் செய்யும் பால், இளநீர், திரவியங்கள் நேரடியாக அங்கிருந்து குழாய் மூலம் இக்குளத்திற்கு வந்து சேரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. எனவே  இதனை கங்கை தீர்த்தம் என்கிறார்கள். இரண்டாவது கோவில் தெப்பகுளம் எண்கோண வடிவில் அமைந்துள்ளது. இதன் சிறப்பு என்னவென்றால் ஒரு மூளையில் நாம் கல் எரிந்தால் அதன் எட்டு பக்கமும் மோதி மீண்டும் பழைய இடத்தை வந்தடையும்.

கடந்த ஐநூறு ஆண்டுகளுக்கும் மேலாக, தமிழகத்தில் புதிதாக கோவில் கட்டுவதற்காவோ அல்லது சிற்பங்கள் செய்வதற்காகவோ கோவில் நிர்வாகிகளிடம், சிலை வடிக்கும் சிற்பிகள் ஒப்பந்தம் செய்து தாம்பூலம் வாங்கும் போது, தாரமங்கலம், தாடிக்கொம்பு, பேரூர், பெரியபாளையம் கோயிலில் உள்ள சிற்பங்கள் நீங்கலாக மற்ற கோவில்களில் உள்ளதை போன்ற சிற்பங்களை நாங்கள் செய்து கொடுக்கிறோம் என்று என்று சொல்லித்தான் இன்றளவும் ஒப்புதல் கொடுக்கிறார்கள் என்பதிலிருந்து இக்கோவிலில் உள்ள சிற்பங்களின் சிறப்பை நாம் உணரலாம். கல்லில் கலை வண்ணம் மட்டுமல்ல கதையும் சொல்லியிருக்கிறார்கள் அக்கால சிற்பிகள். வாருங்கள் அச்சிலைகளின் நுணுக்கத்தை இரசிக்கலாம்.

ஆலயத்தின்  உட்பிரகார தூண்கள் எல்லாவற்றிலும் அற்புதமான சிற்ப வேலைப்பாடு அமைந்த திருவுருவங்கள் காணப்படுகின்றன. உலகத்திலேயே மிகச்சிறிய உயிரினமான எறும்புகள் நுழைவதற்காக துளைகளை விட்டு செதுக்கிய சிலை இக்கோவிலில்  உள்ளது. எறும்புகள் நுழைந்து வரும் அளவுக்கு மட்டுமே துவாரம் உள்ள ஒரு மனிதனின் முகம் அமைக்கப்பட்டுள்ளது. ஊர்ந்து கொண்டிருக்கும் எறும்புகள் அச்சிற்பத்தின் காது வழியாக உள்ளே சென்று பின்னர் மூக்கு வழியாக வெளியே வரலாம். பிறகு தாடியில் உள்ள துவாரங்கள் வழியே உள்ளே நுழைந்து மறுபக்கம் சென்று மற்றொரு காது வழியாக வெளியே செல்லும் வகையில் நுண்ணியதான துவாரங்களைக் கொண்டதாகக் கல்லில் சிலை செதுக்கியுள்ளனர்.

வளைந்த வாளுடனும், நீண்ட தாடி, தலைப்பாகையுடனும் படை எடுத்து வரும் மாலிக்கபூரின் வீரர்கள், அதை எதிர்த்து குறுவாள், கேடயத்துடன் எதிர்கொள்ளும் தமிழக மன்னர்களின் போர்க் காட்சிகள் பல செதுக்கப்பட்டுள்ளது. சோழ, பாண்டிய நாடுகளில் இருந்த செல்வங்களை எல்லாம் கொள்ளையிட்ட பின்னர் அவற்றைத் தன்னுடன் வந்திருந்த யானை மற்றும் ஒட்டகங்களின் மீது பொதி மூட்டையாய் ஏற்றிக் கொண்டு திரும்பிச் செல்லும் காட்சியும் சித்திரங்களாக உள்ளது. தன்னுடைய தாய் நாட்டுக்குத் திரும்பிச் செல்லும் மாலிக்கபூரை இப்பகுதியில் வழிமறித்துத் தாக்குதல் நடத்த கெட்டி முதலியின் வீரர்கள் போர் வியூகம் அமைத்துள்ள காட்சியும், பின்னர், மதுரையில் கொள்ளையடித்த செல்வங்களை எல்லாம் யானை மற்றும் ஒட்டகங்களின் மீது ஏற்றிக் கொண்டு வந்த மாலிக்கபூரின் வீரர்கள் மீது தாக்குல் நடத்தி, அவர்கள் கொண்டு வந்த செல்வங்களை எல்லாம் கெட்டி முதலியின் வீரர்கள் பறித்துக் கொண்ட பிறகு, முதுகில் சுமையில்லாமல் யானை ஒன்று மாலிக்கபூரோடு செல்வது போன்ற ஒரு காட்சியும் ஆலயத்தின் கற்சுவரில் செதுக்கப்பட்டுள்ளது.

பெண்ணிற்கு பெரியது மானமா…. தானமா… என்பதை விளக்கும் வகையில் இங்கு உள்ள சிற்பம் ஒன்றை அமைத்துள்ளனர். சிவபெருமான் வயோதிகராக வந்து ஒரு குடியானவப் பெண்ணிடம் “பிச்சை” கேட்கிறார். அப்போது அப்பெண், அன்னத்தை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு வெளியே வரும்போது, காற்று வேகமாக வீசியதால் அப்பெண்ணின் மார்புச் சேலை விலகி விடுகிறது. தானத்தை விட “மானமே” பெரிதெனக் கருதிய அவள்;, தன்னுடைய இடக்கையால் மார்புச் சேலையை இழுத்து மூடுகிறார், அப்போது பறந்து வந்த ஒரு கிளி, பெண்ணின் வலது கையிலிருக்கும் அகப்பை சாதத்தை எச்சம் செய்து விடுகிறது. இறைவனுக்கு உணவு எடுத்துக் கொண்டு செல்லும் காட்சி மிகுந்த முக மலர்ச்சியோடும், கிளி சாப்பிட்டு எச்சமாகி விட்டதால், கோபத்தில் முகம் வாடியுள்ள காட்சியும் இரண்டு சிலைகளில் மிக அழகாக வடித்துள்ளனர்.

இம்மண்டபத்தில் இருக்கும் ஒவ்வொரு தூணும், ஒரே கல்லில். செய்யப்பட்டது. முன்னால் இரண்டு சிறிய தூண்களும், பின்னால், ஒரு பெரிய தூணும் இருக்கும் வகையில் அடிக்கப்பட்ட இருபத்தி மூன்று தூண்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில், கணக்கிடமுடியாத சிற்ப வேலைப்பாடுகளை காணமுடிகிறது. சிவனின் பல தோற்றங்களும், பிரம்மாவின் அவதாரங்களும் கல்லில் அற்புதமான சிலைகளாக வடிக்கப்பட்டுள்ளன.

 இரதி, மன்மதன் சிலையும், இராமர் அம்பு விடும் காட்சியும் மிகவும் நுணுக்கமாக அமைத்துள்ளனர். அதாவது, இராமன் அம்புடன் பதுங்கியிருக்கும் இடத்திலிருந்து பார்த்தால், வாலியும், சுக்ரீவனும் இருப்பது தெளிவாகத் தெரியும், ஆனால், வாலி இருக்குமிடத்திலிருந்து பார்த்தால், இராமர் பதுங்கியிருப்பது தெரியாது.

அதுபோலவே, இரதியை, மன்மதன் மறைந்திருந்து பார்க்கும் காட்சியும் அமைந்துள்ளது, அன்னப்பறவையின் மீது அமர்ந்திருக்கும் இரதி இருக்குமிடத்திலிருந்து மன்மதனை காணமுடியாது, ஆனால், கிளியின் மீது அமர்ந்திருக்கும் மன்மதன் பார்த்தால், இரதியை தெளிவாக காணமுடியும் வகையில் இச்சிற்பங்களை அமைத்துள்ளார்கள்.

மற்றொரு குறிப்பிடத்தக்க சிற்பம் 18  திருக்கரங்களுடன் நடனமாடும் ஊர்த்துவத்தாண்டவர் சிற்பம். காளியுடன் போட்டியில் ஆடும் போது விழுந்த தனது காதணியை தரையில் இருந்து காலால் எடுத்து மீண்டும் காதுகளுக்கு வைக்கும் காட்சி அழகாக செதுக்கப்பட்டுள்ளது. எதிரே நடனமாடும் காளியும் அற்புதம்.

கம்பா ஆற்றிலிருக்கும் மணலை சிவலிங்கமாக பிடித்து வைத்து பார்வதி பூஜை செய்து கொண்டிருக்கும் காட்சி, ஆதி காலத்தில் ஐந்து தலையுடன் இருக்கும் ஆணவம் கொண்ட பிரம்மாவின் தலைகளில் ஒன்றை  சிவபெருமான் கொய்த பிறகு நான்கு முகங்களுடன்  இருக்கும் காட்சியும் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. முதலில் ஐந்து தலையுடன் இருக்கும் பிரம்மா அடுத்த சிற்பத்தில் நான்முகனாக காட்சி அளிக்கிறார்.

தூண்களில் உள்ள மற்ற சில அற்புத  சிற்பங்கள், பார்வதி, பிக்ஷாடணர், மோகினி அவதாரத்தில் மகாவிஷ்ணு, பதஞ்சலி, வியக்ரபாதர் , ஜைமினி முனி, ஹயக்ரீவர்,  அகோர வீரபத்திரர், அக்னி வீரபத்திரர், பிரதோஷ நாயகர், தட்சிணாமூர்த்தி, துவாரபாலகர்கள், மாணிக்கவாசகர்.

சுவாமி கைலாசநாதராக எழுந்தருளியிருப்பதால்  மகா மண்டபத்தில் மூலவரின் சன்னதிக்கு முன்புறம் சிவனுக்கும், பார்வதிக்கும் திருக்கயிலையில் நடக்கும் திருமணக்காட்சி அற்புதமாக செதுக்கப்பட்டுள்ளது, மஹாவிஷ்ணு  பார்வதியை சிவனுக்கு கரம் பிடித்து கொடுக்கும் காட்சி மூலவர் சன்னதியின் மேலே சிறப்பாக செதுக்கப்பட்டுள்ளது.

மூலவருக்கு முன்புறம் உள்ள மண்டப மேற்கூரையில், ஏழு அடி நீளமும் அகலமும் கொண்ட ஒரே கல்லில், விரிந்த எட்டு தாமரை இதழ்கள் காணப்படுகிறது, ஒவ்வொரு தாமரை இதழின் மீதும் தன் வாலால் ஒட்டிப் பிடித்தபடி ஒரு கிளிகள் தொங்கிக்கொண்டு தாமரை பூவின் நடு தண்டின் மீது போட்டிருக்கும் ஒரு கல் வளையத்தை தன் அலகால் பிடித்துக்கொண்டிருக்கும் வண்ணம் செதுக்கப்பட்டுள்ளது. அக்கல் வளையத்துக்கு கீழே இன்னொரு கல் வளையம் போட்டுள்ளனர், அந்த இரண்டாவது கல் வளையத்தை நீளமான கம்பு இருந்தால் நாம் சுற்றிவிட்டுப்பார்க்க முடியும். இத்தாமரை இதழை சுற்றிலும் அஷ்டதிக்பாலகர்கள் தங்களின் வாகனங்கள் மீது அமர்ந்திருக்கும் சிற்பமும், அவர்களுக்கு அருகில் பணிப்பெண்கள் நிற்கும் சிற்பமும் செதுக்கப்பட்டுள்ளது. இவற்றின் நடுவே எட்டு கற்சங்கிலிகள் தொங்கவிடப்பட்டுள்ளது. கற்பனைக்கும் எட்டாத இக்காட்சியை பார்த்து பிரமிக்காதவர்கள் யாரும் இருக்கமுடியாது.

மண்டபத்தின் முன்பக்கம் உள்ள தூண்களில் “யாழி” மற்றும் “குதிரை”களில் பயணம் செய்யும் வீரர்களின் காட்சிகள் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. இவற்றில், முதல் “யாழி”யின் வாயில் உள்ளே இருக்கும் கல் செதுக்கி வெளியே எடுக்கப்பட்டு வெற்றிடமாக உள்ளது. இரண்டாவது “யாழி”யின் வாயில் கல் பந்து போலவே உருட்டப்பட்டு, உள்ளே ஒட்டிக்கொண்டிருக்கும்படி அமைத்துள்ளனர். மூன்றாவது “யாழி”யின் வாயில் உள்ளே இருக்கும் கல்லை ஒரு பந்து போன்ற வடிவில் செதுக்கி யாழியின் பற்களுக்கிடையில் வாயிற்குள்ளேயே உருண்டோடும் படி செய்துள்ளார்கள், நான்காவது குதிரையின் வாயில் இருந்த கற்களை இரண்டு பந்துகளாகவும், ஐந்தாவது குதிரையின் வாயிற்குள் மூன்று கற்பந்துகள் இருக்கும் வண்ணம் நேர்த்தியாக சிறப்பாக செதுக்கியுள்ளனர்.

மூலவர் கைலாசநாதர் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கின்றார். அவருக்கு எதிரில், வலப்பக்கம் சிவகாமி அம்மையாரும், இடப்பக்கம் சுப்பிரமணியரும் தரிசனம் தருகின்றனர். இம்மூவரையும் ஒரே இடத்திலிருந்து தரிசிக்கும் வகையில், முன்பக்கம் ஒரு இடத்தில் குறியிட்டு காட்டப்பட்டுள்ளது.

கோயிலின் உட்பிரகாரத்தில், தெற்கு பார்த்த நிலையில் ஜுரகரேஸ்வரர் இத்தலத்தில் எழுந்தருளியிருக்கிறார். இவர் 3 தலை, 3 கால்களோடு இருப்பது சிறப்பு. இவருக்கு ஞாயிற்று கிழமைகளில் விபூதி கொண்டு அர்ச்சனை செய்து அதை தினமும் நெற்றியில் இட்டு வந்தால் தீராத ஜூரமும் தீர்ந்துவிடும் என்கிறார்கள். தவிர மிளகு ரசம் வைத்து சாதம் படைத்து வடைமாலை சாத்தி அபிஷேகம் செய்தால் காய்ச்சல் மற்றும் தீராத வியாதிகள் குணமடைகின்றன என்கிறார்கள்.

இத்தலத்திலேயே வெகு சிறப்பான சன்னதி பாதாளலிங்கம் சன்னதியாகும், மகாமண்டபத்தின் வடமேற்கு மூலையில், தலத்தின் கீழ்பகுதியில் ஒரு காற்று புக முடியாத அறைக்குள் இருக்கும் இப்பாதாள லிங்கத்திற்கு பச்சை கற்பூரம் வைத்து செவ்வாய் கிழமை தோறும் அபிஷேகம் செய்தால் கல்யாண பாக்கியம், புத்திர பாக்கியம் மற்றும்  தொழில் விருத்தி ஆகியவை கை கூடுகின்றன என்கிறார்கள்.

மேலும் இராஜகோபுரத்திற்கு அருகில் அவிநாசி லிங்கேஸ்வரர் சன்னதி அமைந்துள்ளது. அற்புதமான கற்சிற்பங்கள் நிறைந்த ஆலயத்தை தரிசித்த பின்   அடுத்து அயோத்தியாபட்டிணத்தை நடையடைப்பதற்கு முன்னர் தரிசிக்க வேண்டும் என்பதால் கிளம்பினோம். தரிசனம் கிடைத்ததா? என்று தெரிந்து கொள்ள தொடர்ந்து வாருங்கள் அன்பர்களே.

 

2 comments:

கோமதி அரசு said...

தாரமங்கலம் கைலாசநாதர் தரிசனம் மீண்டும் கிடைத்தது மகிழ்ச்சி.
பல வருடம் ஆகி விட்டது. கோவிலின் சிறப்புகளை நீங்கள் சொல்லி கொண்டு வரும் போது யாழியின் வாயில் கல் உருண்டையை ஆட்டிப்பார்த்த நினைவால் அந்த வரியை எதிர்பார்த்து படித்தேன். படத்தோடு விளக்கி விட்டீர்கள்.

அருமையான பதிவு.
அடுத்த கோவிலை தரிசிக்க தொடர்கிறேன்.

S.Muruganandam said...

மிக்க நன்றி. தொடர்வது அயோத்தியாபட்டிணம் இராமர் ஆலயம்.அவரையும் சேவியுங்கள் அம்மா.