திருச்செங்கோடு மாதொருபாகர் தரிசனம் -2
ஆதிசேஷனின் இரத்தத்தின் காரணமாக மலை சிவந்தநிறமாக இருப்பதால் செங்கோடு
என்று பெயர் பெற்றது என்பது ஐதீகம். செங்கோட்டின்
பெரிய மலைமுகடு நாகமலை என்றும், சிறிய முகடு நந்திமலை என்றும் அழைக்கப்படுகிறது. மேலமாட வீதியிலிருந்து பார்த்தால் இம்மலை பார்ப்பதற்கு நாகம் போன்றிருப்பதால் நாகாசலம் நாககிரி என்றும் பெயர்
பெற்றது. மேலும் நாகாசலம், நாகமலை, நாககிரி, உரககிரி என்றும்
அழைக்க்கின்றனர். இத்தலம் அமைந்துள்ள மலையானது ஒரு
புறம் பார்க்கும் பொழுது ஆணாக தோற்றமளிக்கிறது. வேறு இடத்தில் பெண் போல தோற்றம் அளிக்கிறது.
"வெந்த
வெண்ணீ றணிந்து விரிநூல் திகழ்மார்பினல்ல
பந்தணவும்
விரலாள் ஒரு பாகம் அமர்ந்தருளிக்
கொந்தணவும்
பொழில்சூழ் கொடிமாடச் செங்குன்றூர் நின்ற
அந்தணனைத் தொழுவார் அவலம் அறுப்பவரே”.
இறைவர்: அர்த்தநாரீஸ்வரர். (முருகன் - செங்கோட்டு வேலவர்). ஆதி கேசவ பெருமாள்.
இறைவியார்
திருப்பெயர்: பாகம்பிரியாள்.
தல மரம்: இலுப்பை, வன்னி
தீர்த்தம்
: தேவ தீர்த்தம். பிரம தீர்த்தம்
வழிபட்டோர்: சம்பந்தர், கபிலதேவ நாயனார், பட்டினத்துப் பிள்ளையார்,
சேக்கிழார், கேதார கௌரி.
அடியேனுடன் படித்த இரு நண்பர்களின் பிள்ளைகளின் திருமணம் திருச்செங்கோட்டில் நடைபெற்றதால் இரு முறை வந்த போது அங்குலம் அங்குலமாக தரிசிக்கும் பாக்கியம் கிட்டியது. ஒரு முறை மலையேறும் பாதையில் உள்ள நாகத்தை தரிசிக்க வேண்டி இறங்கி வந்தோம். சிற்பக்கலைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு இத்தலம். அவற்றை பின்னர் காண்போம். வாருங்கள் இனி மலையேறலாம்.
பசுவன் கோவில்
என்றழைக்கப்படும் இதற்கு பிறகு உள்ள பகுதி நாகமலை என்றழைக்கப்படுகின்றது. செல்லும் போது ஆதிசேஷன் ஐந்து தலைகளையும் விரித்துப்
இப்பகுதியின் வலப்பக்கத்தில் நின்ற நிலையில் இலிங்கத் திருமேனியைச் சுமந்துகொண்டிருக்கும்
60 அடி நீளச் சிற்பக் காட்சியைக் கண்டு பிரமித்துப் போய்விடுவோம்! இந்நாகத்தின் மீது
மஞ்சள், குங்குமம் பூசி வழிபடுகின்றனர். நாகதோஷம் உள்ளவர்கள், சிறப்பு வழிபாடு செய்கின்றனர். பலர் பலியிட்டு பொங்கல் வைத்து நாகருக்கு படையலிட்டு
வணங்குவதை கண்டோம். அடுத்து உள்ள வாகன வழியாக
செல்பவர்களும் நாகர் பள்ளம் வரை சென்று நாகரை தரிசிக்க முடியும். இடதுபுறமுள்ள நாகம்
கால வேறுபாட்டால் இடி, மின்னல் தாக்குதல்களால் வெடிப்புகள் ஏற்பட்டு சிதைந்த நிலையில்
காணப்படுகிறது. நாகரை தரிசித்து மேலே உள்ள சில மண்டபங்களை கடந்து சென்றால் அறுபதாம்
படி என்னும் 'சத்தியப்படியினை' அடையலாம். இப்படியின் இறுதியில் முருகப்பெருமான் உள்ளார்.
ஒரே சீராக அறுபது படிகளை உடைய இவ்விடம் சிற்பக்கலைக்கு ஒரு சிறந்த எடு்த்துக்காட்டாக
விளங்குகிறது. இம்மலையில் உள்ள 1206 படிகளிலேயே
இப்படிகள்தான் மிகவும் சிறப்பு வாய்ந்தத படியாகும். அன்றைய காலத்தில் கொடுத்தல் வாங்கல்
மற்றும் எண்ணற்ற தீர்க்க முடியாத வழக்குகளில் உண்மை நிலையை அறிய இப்படியினை பயன்படுத்தினார்கள்.
இப்படியின் மீது நின்று சத்தியம் செய்து கூறும் செய்திகளை சென்னை உச்சநீதிமன்றமே ஒப்புகொண்டதாக
கூறுவார்கள். இதனையடுத்து
நாடார் மண்டபம், செட்டிக்கவுண்டர் மண்டபம், தேவரடியார் மண்டபம்,
இளைப்பாற்றி மண்டபம், கோபுர வாயில் மண்டபம், நிறுத்த (அல்லது) ஆமை மண்டபம், விலாச மண்டபம்,
குகை மண்டபம், திருமுடியார் மண்டபம், கோடி அர்ச்சணை மண்டபம், சிங்கத்தூண் மண்டபம்,
அறுபதாம் படி மண்டபம் ஆகியவை மலையேறும் படிகளில் உள்ளன. இடையில் பல சுனைகள் உள்ளன, அடியோங்கள் சென்ற சமயம்
பெரும்பான்மையானவை வறண்டு கிடந்தன. படியேற்றம்
நிறைவு செய்யும் போது வடக்கு இராஜகோபுரத்தை தரிசிக்கின்றோம்.
இத்தலத்தின்
வடக்கு வாசல் இராஜகோபுரம் கிட்டத்தட்ட 85 அடி உயரத்துடன் ஐந்து நிலைகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.
மதில் சுவற்றில் சிவ சிவ என்ற மந்திரம் ஒளிர்கின்றது. மேற்கு, தெற்கு வாயில்களிலும்
இராஜகோபுரங்கள்
உள்ளன. கிழக்குப்பகுதியில் மலை உள்ளது.
படிகளின் வழியே செல்லும்போது பெரிய மலைக்கும் சிறிய மலைக்கும் இடையே
அமைந்துள்ள நாகர்பள்ளம் எனும் இடத்தைப் தரிசிக்கலாம்.
இராஜகோபுரத்தை
கடந்து வலம் வந்தால் ஆதிசேஷன் சன்னதி. பிரம்மாண்டமாக ஐந்து தலைகளுடன் எழுந்தருளியுள்ளான்
நாகராஜன். மஞ்சள்பொடி தூவி பக்தர்கள் வழிபடுவதால் பொன் வர்ணத்தில் மிளிர்கிறான் சேஷன்.
அடுத்து உமையொருபாகருக்கு
இணையாக அருள்பாலிக்கும் செங்கோட்டுவேலவரை முதலில் தரிசனம் செய்கின்றோம். திருக்கயிலையில்
ஞானபழம் கிட்டாததால் முருகப்பெருமான் கோபமுற்று
கயிலையில் அம்மையப்பனை விட்டு பிரிந்து காடு, மலை, வனம், வனாந்திரங்களை கடந்து திருவாவினன்குடி
குன்றின் மேல் நின்றார் (பழனி) அங்கிருந்து கயிலை தன் கண்களுக்கு தெரிந்ததால் அங்கிருந்து
புறப்பட்டு கொங்கின் மீதுள்ள நாகாசலம் வந்தடைந்தார். நாகாசலத்திலிருந்து கயிலை தன்
கண்களுக்கு தெரியாததால் இவ்விடமே தான் தங்குவதற்கு ஏற்றதென்று எண்ணி திருச்செங்கோட்டில்
செங்கோட்டுவேலவராக கோவில் கொண்டார் என திருச்செங்கோடு தல புராணம் குறிப்பிடுகிறது.
மாலோன் மருகனை மன்றாடி மைந்தனை வானவர்க்கு
மேலான தேவனை மெய்ஞான தெய்வத்தை மேதினியிற்
சேலார் வயற்பொழிற் செங்கோடனைச் சென்று கண்டு தொழ
நலாயிரம் கண் படைத்திலனே இந்த நான்முகனே – என்று பாடியபடி
நிச்சயமாக செங்கோடனின் அழகை அனுபவிக்க 'நாலாயிரம் கண்கள் தேவை'.
என்பதை உணரலாம்.
மேலும்
இரு பாடல்களில்
"சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு
வெற்பனைச் செஞ்சுடர்வேல்
வேந்தனைச் செந்தமிழ் நூல் விரித்தோனை விளங்கு வள்ளிக்
காந்தனைக்
கந்தக் கடம்பனைக் கார்மயில் வாகனனைச்
சாந்துணைப்
போதும் மறவாதவர்க்கொரு தாழ்வில்லையே". என்றும்
"தெய்வத் திருமலைச் செங்கோட்டில் வாழுஞ் செழுஞ்சுடரே
வை வைத்த
வேற்படை வானவனே மறவேன் உனையான்
ஐவர்க்
(கு) இடம்பெறக் காலிரண்டு ஒட்டி அதிலிரண்டு
கை வைத்த வீடு குலையுமுன்னே வந்து காத்தருளே" - என்றும்
பாடியுள்ளார்.
அவரே
கந்தர் அநுபூதியில் பாடிய ஒரே தலம் திருச்செங்கோடு தலம் தான் அப்பாடல்
"கூகா வென என்கிளை கூடியழப்
போகாவகை மெய்ப்பொருள் பேசியவா
நாகாசல வேலவ நாலுகவித்
தியாகா சுரலோக சிகாமணியே". மேலும் திருப்புகழில்
அன்பாக வந்து
என்று துவங்கி “செஞ்சாலி கஞ்சமொன்றாய் வளர்ந்த செங்கோடமர்ந்த
பெருமாளே” என்றும், கரையற வுருகுதல்
என்று துவங்கி “ஜெகதல மிடிகெட விளைவன வயலணி செங்கோடமர்ந்த பெருமாளே” என்றும், சத்தியை யொக்க
இடத்தினில் வைத்த தகப்பனு மெச்சிட தத்துவ தற்பர
முற்றுமுணர்த்திய சர்ப்ப கிரிச்சுரர் பெருமாளே…. என்று அர்த்தநாரீஸ்வரரையும்
சேர்த்து பாடியுள்ளார். மேலும்
காலனிடத் தணுகாதே - காசினியிற் பிறவாதே
சீலஅகத் தியஞான - தேனமுதைத் தருவாயே
மாலயனுக் கரியானே - மாதவரைப் பிரியானே
நாலுமறைப் பொருளானே -
நாககிரிப் பெருமாளே. என்றெல்லாம்
பல்வாறாக போற்றிப் பாடியுள்ளார்.
செங்கோடனின் உற்சவத் திருமேனியை மஹா மண்டபத்தில் தரிசிக்கலாம். கிருத்திகை நாட்களில் தங்கக் கவசம் சார்த்தி, தங்கமயிலேறித் தங்கக்காவடியுடன் புறப்பாடு நடைபெறுகின்றது. சன்னதி முன்பு ஒருபுறம் விநாயகர், மறுபுறம் அருணகிரிநாதர், நக்கீரர் சிலையும் உள்ளது.
செங்கோட்டு வேலவர் சன்னதியில் இருந்து மாதொருபாகரை தூரத்திலிருந்து இலவசமாக தரிசனம் செய்பவர்கள் செல்ல வழி உள்ளது. கட்டணம் செலுத்தி தரிசனம் செய்பவர்கள் அருகே மஹா மண்டபத்தில் நின்று தரிசனம் செய்ய இயலும். கட்டண வழியாக செல்லும் போது அர்த்த நாரீஸ்வரர் சன்னிதிக்குத் தென்புறம் கிழக்கு நோக்கிய நாரிகணபதி சன்னிதியையும், தென்மேற்குப் பகுதியில் வெண்ணிற லிங்கத்துடன் நாகேஸ்வரர் சன்னிதியும், சிறிய அர்த்தநாரீஸ்வரர் உற்சவ திருமேனியையும் தரிசிக்கலாம். கேதராகௌரி, மரகதலிங்கத்தைப் பூஜித்து, இறைவனின் பாகத்தை பெற்றதாக வரலாறு சொல்லப்படுகிறது. கேதாரகௌரி உற்சவத் திருமேனி உள்ளது. சிலாரூப தக்ஷிணாமூர்த்தி அழகுடையதாகத் திகழ்கிறது.
மூலவர் அர்த்தநாரீஸ்வரர்
சன்னிதி மேற்கு நோக்கியுள்ளது. ஆனால் சன்னிதிக்கு முன் வாசல் சுவாமிக்கு எதிரே இல்லை.
மாறாக ஒன்பது துவாரங்கள் கொண்ட கல்லாலான பலகணி உள்ளது. மஹா மண்டபத்தின் தெற்கு வாயில்
வழியாகச் சென்றுதான் ஈருருவம் ஓருருவமான பெருமானை நாம் தரிசிக்க முடியும்.
பொருள்: மேம்பட்ட மூவிலை வடிவான நல்ல சூலத்தை ஒரு கையில் ஏந்தியவனாய்த் திருமுடியில்
தடுத்த கங்கையோடு, பிறையையும் சடையின் கண் அணிந்து, தேன் பொருந்திய பொழில்கள் சூழ்ந்த
கொடிமாடச் செங்குன்றூரில் பொருந்திய தோழனாய் விளங்கும் சிவபெருமானின் திருவடிகளைத்
தொழுபவர்களின் வினைகள் வேர்ப்பற்றோடு நீங்கும் என்று அம்மையின் ஞானப்பாலுண்ட பாலறாவாயர்
பாடிப்பரவிய அம்மையப்பரை
அற்புதமாக தரிசிக்கலாம். இப்பதிகத்தில் பல பாடல்களில் மலையரையன் பொற்பாவை கூறனை
வழிபட நம் வினைகள் அனைத்தும் அகலும் என்று
ஆளுடையபிள்ளையார் அறுதியிடுகிறார்.
2 comments:
//இம்மண்டபம் மற்றுமல்ல இவ்வாலயம் முழுமையுமே ஒரு கலைப்பொக்கிஷம் என்பதில் எவ்வித ஐயமும் தேவையில்லை. ஆகையால் எப்போது சென்றாலும் அவசரமாக செல்லாமல், நிதானமாக தரிசிக்குமாறு செல்லுங்கள்.//
என் கணவர் பார்த்து இருக்கிறார் இந்த கோவில் . அவர்களும் நின்று நிதானமாக பார்க்க வேண்டிய கோவில் என்று சொல்லி இருக்கிறார்கள்.
கோவிலை தரிசிக்க செல்பவர்களுக்கு தேவையான குறிப்பு.
பதிவு மிக அருமை. அருணகிரிநாதர் அருளிய கந்தர் அலங்கார பாடல்கள் பகிர்வுக்கு நன்றி. மற்றும் கோவில் படங்கள் எல்லாம் அருமை.
//சிலந்தியை தேள் கவ்வும் காட்சி ஆகிய சிற்ப விநோதங்கள் இம்மண்டபத்தில் அற்புதமாக அமைந்துள்ளன.//
கலைநயத்தை அழகாய் சொன்னது எல்லாம் நினைவில் வைத்து கொள்ள வேண்டியது.
சிவ சிவ. மிக்க நன்றி அம்மா.
Post a Comment