Tuesday, August 2, 2022

கொங்கேழ் தலங்கள் பத்தியுலா - 26

                          திருச்செங்கோடு மாதொருபாகர் தரிசனம் - 3



அர்த்தநாரீஸ்வரர், மாதொருபாகர், உமையொருபாகர், ஈருருவமும் ஓருருவமானவர் அர்த்தாம்பிகேசர், அர்த்தசிவாம்பிகை, வவ்விய பாகத்து இறைவர்,  சிவசக்தி என்றெல்லாம்  அழைக்கப்படும் இத்தல மூலவர், சுமார் 6 அடி உயரம் உள்ள உளி படாத சுயம்புத் திருமேனியாக பாதி ஆணாகவும், பாதி பெண்ணாகவும் மேற்கு நோக்கி தரிசனம்  அளிக்கிறார்.  இங்குள்ள அர்த்தநாரீஸ்வரர் மூலவர் திருவுருவம் கற்சிலை அன்று, சித்தர்களால் வெண்பாஷணம் என்று அழைக்கப்படும் மிகுந்த நச்சுத்தன்மை உடைய பல வகை மூலிகைகளால் உருவாக்கப்பட்டது. இந்த பாஷாணமானது வெண்குஷ்டம் போன்ற பல நோய்களை தீர்க்கும் சக்தி உடையது. ஆகவே பெருமானுக்கு செய்யும் அபிஷேக தீர்த்தம் மற்றும் பெருமானின் பாதத்தில் இருந்து வரும் சுனை நீர் தீர்த்தம் ஆகியவைகளை தொடர்ந்து பருகினால் இன்று மருத்துவர்களால் குணமாக்க முடியாத பல நோய்கள் குணமாகின்றன என்று மக்களால் முழுமையாக நம்பப்படுகிறது. மிகப்பழமையான சிலை என்பதால் அபிஷேகம் செய்து திருவருவம் சற்று மாறி காட்சி தருகிறது. தற்சமயம் மதியம் ஒருவேளை மட்டுமே பெருமானுக்கு அபிஷேகம் நடைபெறுகிறது. அர்ச்சனையின் போது எங்கும் இல்லாத புதுமையாய் ஒரு நாமம் அம்பிகைக்குரிய பெண்பாலாகவும், அடுத்த நாமம் சிவனுக்குரிய ஆண்பாலாகவும் அமைந்து அர்ச்சிப்பது இத்திருத்தலத்தின் தனிச்சிறப்பாகும்
.

 தெற்கு இராஜ கோபுரம்

உளிபடாதது விடங்கம் - அடியில் சதுரபீடம். சுவாமியின் நெற்றில் பள்ளம் - சந்தனத்தை திலகமாக அப்பியுள்ளார்கள்.  வலது திருக்கரத்தால் தண்டாயுதத்தை தாங்கியவாறு பராபரையின் பாகமாகிய இடது திருக்கரத்தை  இடையில் பிடித்திருக்க உடலை சற்று வலதுபுறமாக சாய்த்து மகரகுண்டம் காதில் அசைய முத்துமணி இரத்தினம் இடது காதில் அணி செய்ய தாமரையும் நீலோற்பலமும் ஒரே சமயத்தில் மலர்ந்திருப்பதை போல ஒன்றுக்கொன்று உற்று நோக்கிய கண்களில் இனிய தோக்கும் பூண்டு பச்சைநிற  பட்டாடை இடது தொடையையும், புலித்தோலாடை வலது தொடையும், அலங்கரிக்க முப்புரி நூல் ஒரு பக்க மார்பிலும், சுவர்ண சிமிழ் போன்ற நெருங்கிய தனபாரம் மறுபக்கமும், இயமனை உதைத்த நாக வீர வெண்குடையும், அணிந்த திருவடி ஒருபாகமும், அழகிய சிலம்பின் பிரபை விளங்கிய திருவடி ஒரு பாகமும் கொண்டு அம்மையப்பனாய் ஒரே திருமேனியாய் காட்சியளிக்கிறார் அம்மையப்பர். அவரை வணங்கும் போது அபிராமி பட்டரின்

உமையும் உமையொரு பாகரும் ஏக உருவில் வந்து  

எமையும் தமக்கன்புசெய்யவைத்தார், இனி எண்ணுதற்குச்

சமயங்களும் இல்லை, ஈன்றெடுப்பாள் ஒரு தாயும் இல்லை,

அமையும், அமையுறு தோளியர் மேல் வைத்த ஆசையுமே என்ற பாடலையும் பாடி தரிசித்தோம்.

மூலவரின் காலடியில் இருக்கும் தேவதீர்த்தம், எக்காலத்திலும் வற்றாமல் சுரந்து கொண்டே இருக்கும். மூலவரை தரிசிக்க வருபவர்களுக்கு இத்தீர்த்தம் வழங்கப்படுகிறது. வைகாசி விசாகத்தன்று இவருக்கு திருக்கல்யாண வைபவம் நடக்கும். அப்போது அர்த்தநாரீஸ்வரருக்கு அர்ச்சகர்கள் தாலி அணிவிப்பார்கள். அம்பிகை தனியே இல்லாததால் இவ்வாறு செய்கிறார்கள்.

கேதாரகௌரி அம்பாள் வழிபட்ட மரகதலிங்கத்திற்கு தினமும் பால் அபிஷேகம் நடைபெறுகின்றது. இவரை மார்கழி மாதத்தில் அதிகாலை 5 மணிக்கு முன்னர் மட்டுமே தரிசிக்க முடியும்.

                ஊர்த்துவ தாண்டவர்                                            தில்லைக்காளி


அர்த்தநாரீஸ்வர மூர்த்தம் சிவபெருமானின் 25 மூர்த்தங்களுள் ஒன்று, வலது புறம் ஐயனும் வாம பாகம் என்னும் இடப்புறம் அம்மையுமாக எழுந்தருளி அருள் பாலிக்க்கும் கோலம். மாணிக்க வாசகர் தொன்மைக் கோலம் என்று பாடியதையும் அபிராமி பட்டர் உமையும் உமையொரு பாகரும் ஏக உருவு என்றும், வவ்வியபாகத்து இறைவர் என்றும்  திருமூலர் பரஞானம், அபரஞானம் இரண்டையும் வழங்கும் அற்புதக்கூத்து என்றும் போற்றுகின்றனர்.    

உமையம்மை வழிபாட்டு நெறியை வலியுறுத்தும் பரமாகமம் என்ற நூலில்  உமையம்மையானவள் தான் மட்டும் தனித்து நின்று ஒன்றாய்  அருளும்போது மோக்ஷத்தையும் இறைவன் என்ற தன் கணவனாகிற சிவனோடு உடனாய் நின்று அருள்கிற போது உலகியல் சார்ந்த வீடு, மனைவி,  மக்கள், செல்வம் போன்ற விருப்பங்களை நிறைவேற்றும் யோகத்தையும், ஆண்பாதி, பெண் பாதியாக ஒரே வடிவத்தில் இருவேறாக தோன்றுவதால்  ஞானத்தையும் அருள்கிறாள் என்று கூறியுள்ளது.

1. உடல் சார்ந்து பசி, தாகம், பிணி, மல, ஜல அவஸ்தைகள் குறைவுபடுதல்,
2. உள்ளம் சார்ந்து காமம், கோபம், பற்று, காதல், ஆணவம், பொறாமை போன்ற தீய குணங்கள் அற்றுப் போதல்.
3. அறிவு சார்ந்து - ஐயம், திரிபு, பொய் இவை அற்றுப் போதல்.
4. ஆன்மா சார்ந்தது - துன்ப இன்பங்கள் அற்றுப் போதல் என்பதாகும்.
5. இவைகளுக்கு மாறாக உடல் எடை குறைதல். எப்பொழுதும் உண்ணாமல் இருக்கும் போதும் சுறுசுறுப்பாக இருத்தல்.
6. உள்ள உணர்வுகளால் பாதிக்கப்படாமல் அமைதியுற்று இருப்பான்.
7. அறிவு முக்காலத்தையும் அறியும் ஆற்றல் பெற்றும், ஆன்மாவானது இறைவனோடு தொடர்பு பெற்றுயிருப்பதே ஞானம்.


இப்பண்புகள் அனைத்தும் ஞானம் என்ற ஒரே சொல்லால் குறிப்பிடப்படுகின்றது. இத்தகைய மேலான ஞானத்தை அருள்வதற்காக உமையம்மையை ‘‘உமையும் உமையொருபாகரும் ஏக உருவில் வந்து’’ என்று  அபிராமி  பட்டர் கூறுகின்றார்.

அக்னி வீரபத்திரர்

ஸ்ரீலலிதா சகஸ்ரநாமத்தில் நிறைவாக  அதன் சாரமாக  வருகின்ற திருநாமங்களான “ஸ்ரீசிவா சிவசக்த்யைக்ய ரூபிணி ஸ்ரீலலிதாம்பிகா” அர்த்தநாரீஸ்வரரையே குறிக்கின்றது.  விளக்கும் ஒளியும், வாக்கும் அர்த்தமும் போல சிவனும் சக்தியும் ஒன்றான உருவமே  சர்வ மங்களகரமான ஸ்ரீலலிதாம்பிகை. அகிலம் அனைத்தும் உருவாவதும் பின்னர் அவை அனைத்தும் லயம் ஆவதும் சிவ சக்தியிடம்தான் என்பது தாத்பர்யம்.

ஸ்ரீலலிதா த்ரிசதியில் உள்ள ஒரு நாமம் “ஈச்வரார்த்தாங்க – சரீராயை  நம:“ அதாவது பரசிவத்தின்பாதி  சரீரம் உடையவள்.

ஸ்ரீருத்ரத்தில் “யா தே ருத்ர சிவா தனூ: சிவா விச்வாஹ பேஷஜீ   சிவா ருத்ரஸ்ய பேஷஜீ ||  - ருத்திரனே! எந்த பரதேவதை உன்னுடைய பாதி சரீரமோ அம்மங்கள ஸ்வரூபிணி உலகுக்கெல்லாம் மருந்து போன்றவள், உனக்கும் மருந்தாகியவள் என்று போற்றுகிறது.

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்தன்று சிவபெருமான் ஆதியும் அந்தமும் இல்லாத அருட்பெருஞ்சோதியாக தரிசனம் தருவதும் சிவ சக்தி ஐக்ய சொரூப அர்த்தநாரீஸ்வரராகத்தான். எனவே அந்தி சாயும் நேரத்தில் அர்த்தநாரீஸ்வரர் ஆனந்தமாக ஆடிக்கொண்டு எழுந்தருளும் போது மலை மேல் தீபம் ஏற்றப்படுகின்றது.

அர்த்தநாரீஸ்வர ஸ்தோத்திரம்

அம்ருதாணர்வ மத்யோத்யத் ஸ்வர்ண த்வீபே மனோரமே ||

கல்பவ்ருக்ஷ வனாந்தஸ்தே நவமாணிக்க மண்டபே  ||

நவரத்னமய ஸ்ரீமத்ஸிம்ஹாஸன கதாம்புஜே ||

த்ரிகோணாந்த ஸமாஸீனம் சந்த்ர ஸூர்யாயுத ப்ரபாம்  ||

அர்த்தாம்பிகா ஸமாயுக்தம் பரவிபக்தி விபூஷணம் ||

கோடி கந்தர்ப்ப லாவண்யம் ஸதா ஷோடஸ வார்ஷிகம்  ||

மந்தஸ்மித முகாம்போஜம் த்ரிநேத்ரம் சந்த்ரசேகரம் ||

திவ்யாம்பர ஸ்ரதாலபம் திவ்யாபரண பூஷிதம் ||

பாண பாத்ரம் ச சின்முத்ராம் த்ரிசூலம் புஸ்தகம் கரை ||

வித்யா ஸம்ஸதி பிப்ராணாம் ஸதாநந்த முகேக்ஷணம் ||

மஹா ஷோடாதி தாஸேஷ தேவதாகண ஸேவிதம் ||

ஏஹம் ஏத்தாம் புஜே த்யாயேத் அர்த்தநாரீஸ்வரம் சிவம் ||

பும்ரூபம் வாஸ்மரேத் தேவி  ஸ்த்ரிரூபம்வா விசிந்தயேத்  ||

அதவே நிஷ்களம் த்யாயேத் ஸச்சிதானந்த லக்ஷணம் ||

ஸர்வ தேஜோமயம் த்யாயேத் சராசர விக்ரஹம் ||

(இந்த ஸ்லோகத்தின்  பொருளையும் சரியாக உச்சரிக்கும் முறையையும்  தயவு செய்து அவரவர்கள் குரு முகமாக அறிந்து கொள்ளவும்)

அர்த்தநாரீஸ்வரர் உற்சவத் திருமேனியை மஹா மண்டபத்தில் தரிசிக்கின்றோம். மிக அற்புதமான பஞ்சலோகத்  திருமேனி.  ஆண்பக்கத்தில் வலத்திருக்கரத்தில் சாய்வாக  தண்டாயுதம், பெண்பக்கத்தில் இடுப்பில் வைத்த திருக்க்கர அமைப்பு, மார்பில் பெண் பக்கத்தில் கொங்கை, இடையில் வாம பாகம் குறுகியும்,  திருவடிகளில் ஒன்றில், சிலம்பு மற்றொன்றில் கழல், கண்களில் கூட ஆண், பெண் பாக வேறுபாடு ஒரு மயிரிழையில் அகலமாகவும் குறுகலாகவும் காட்டப்பட்டுள்ளன.  வைகாசிப் பெருவிழாவின் போது தேருக்கு எழுந்தருளுபவர் இவரே.

சீர்பெற்ற செழுஞ் சடையுந் திருக்குழலுஞ் சிவந்த நோக்குங்

கூர்பெற்ற  கயல்விழியுங் குழைப்பணியுங் குழைத்தோடுங் குமுதவாயுங்

தார்பெற்ற கதைக்கரமுஞ் சரிக்கரமுந்  தடவுரமந் தனப்பொன்மார்பு

பேர்பெற்ற வதட்டுகிறு மிகற்பதமுஞ் சிலம்படியு மிதைபஞ் சேர்ப்பாம்

பொருள்: அழகு தங்கிய குளிர்ந்த சடையும், அழகிய கொண்டையும், சிவந்த நெற்றிக் கண்ணும், கூர்மையான மீன் போன்ற திருவிழியும், நாகக்குண்டல திருச்செவியும், இரத்தின தோடணிந்த திருச்செவியும், ஆம்பல் பூப்போன்ற வாயும், தண்டாயுதம் பற்றிய திருக்கரமும், வளையணிந்த திருக்கரமும், விசாலமான மார்பும், பொன் மணியாரம் பூண்ட முலை மார்பும், புலித்தோலாடையணிந்த இடையும், சவுந்தரியமான பூந்துகிலணிந்த சிற்றிடையும், வீரக்கழலணிந்த திருவடியும், சிலம்பணிந்த சிற்றடியுமாய் விளங்கும் அர்த்தசிவாம்பிகையை அருமையாக தரிசித்தோம்.

இம்மண்டபத்தில் அம்மை வாமபாகம்  பெற்ற வரலாறு, முருகர் இடைச்சிறுவனாக வந்து பாண்டிப்புலவரை வென்ற வரலாறு ஆகிய தல வரலாறுகள் அருமையான ஓவியங்களாக வரையப்பட்டுள்ளன. 

சுவாமி திருகதவத்தில் உள்ள கட்டை விரல் உயரமான சிவலிங்கம் மற்றும் சோமாஸ்கந்த மூர்த்தங்கள்.

அர்த்தநாரீஸ்வரரை தரிசனம் செய்து விட்டு வெளியே வந்தவுடன் உள்ளது  நிருத்த மண்டபம். இதன்  தூண்களில் காளி, இரதி, மன்மதன், போன்ற சிற்பங்கள் மிகவும் கலை நுணுக்கத்துடன் அமைந்துள்ளன. இம்மண்டபத்தை சபா மண்டபம் என்று கூறுவர். சிலப்பதிகார உரையாசிரியார் அடியாருக்கு நல்லாரை சிறப்பித்த இடம் இவ்விடம் என்று கூறுவர்.

ஆதிசேஷன், மகாவிஷ்ணு ஆகியோர் இங்குள்ள சிவபெருமானை வழிபட்டுள்ளனர். ஆதிகேசவப் பெருமாள் என்ற பெயரில் மகாவிஷ்ணு தனிசன்னதியில்  அருள் பாலிக்கிறார். ஆதிகேசவப் பெருமாள்  கிழக்கு நோக்கிய திருமுகமண்டலத்த்துடன் நின்ற திருக்கோலத்தில் நீளாதேவி, பூதேவியுடன் சேவை சாதிக்கின்றார்.  உற்சவத் திருமேனிகளும் உள்ளன. பெருமாளுக்கு எதிரில் பலிபீடமும் கருடாழ்வாரும் சொல்லின் செல்வனாகிய அனுமனின் திருவுருவமும் உள்ளது.


பெருமாள் சன்னதி விமானம்

வைகாசி மாதத்தில் நடைபெறும் விசாக தேர்திருவிழாவின் போது இப்பெருமானுக்கும் திருவிழா நடைபெறும். அர்த்தநாரீஸ்வரருக்கு கொடியேற்றம் செய்த நான்காம் நாள் இப்பெருமானுக்கு கொடியேற்றம் நடைபெறும். அதன்பிறகு  அர்த்தநாரீஸ்வரர் நகருக்கு எழுந்தருளுவார் அப்போது அவருடன் சேர்ந்து ஆதிகேசவ பெருமானும் நகருக்கு  வருவார். பின் ஆதிகேசவபெருமாள் திருக்கல்யாணம் கண்டருளி,   திருத்தேரில் எழுந்தருளி நான்கு இரத வீதி வழியாக ஊர்வலம் நடைபெறும். சிவராத்திரியன்று இவருக்கும் நாலு கால பூசை நடைபெறுவது ஒரு தனி சிறப்பு, ஏகாதசியன்று கருட சேவை தந்தருளுகிறார். 

இனி ஆதிகேசவராக இவ்வாலயத்தில் பெருமாள் எழுந்தருளிய வரலாறு.  நாராயண மூர்த்தி நரசிம்ம உருவில் அசுரன் இரணியனின் வயிற்றை பிளந்து அதிலிருந்து வழிந்த குருதியை குடித்ததால் ஏற்ப்பட்ட பித்தத்தால் அலைந்து திரிந்தார் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அதை கண்ட சிவபெருமான் சரப பட்சியாக உருவெடுத்து நரசிங்கத்தை கொத்தி தூக்கி கொண்டு அண்ட பகுதிக்கு பறந்து சென்று நரசிங்கத்தை குலுக்கினார். அதனால் பெருகிய குருதி வெளியே கொட்டியது. அதன் பின் நரசிங்கம் பெருமாளாக உருமாறியது அதனால் திருமால் தனக்குண்டான பிரம்மஹத்தியை போக்கி கொள்ள கொடிமாடசெங்குன்றூர் வந்து விஷ்ணு தீர்த்தமென்ற ஒரு சுனையை அமைத்து அதில் நீராடி தவம் செய்து ஆதிபரம்பொருளை வணங்கினார். அவ்வாறு தனது பிரம்மஹத்தி நீங்கிய பின் ஏகாந்த இடமாகவும், எழில் மிகுந்த இனிமை தரும் புனித பூமியாகவும் இருந்ததால் இப்பகுதியிலேயே கோவில் கொண்டார் என திருச்செங்கோடு தல புராணம் குறிப்பிடுகிறது. 

அர்த்தநாரீஸ்வரர் சன்னதிக்கு எதிரே நாகலிங்கேஸ்வரர் சன்னதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.  இச்சன்னதியில் சிவபெருமான் சதாசிவ மூர்த்தமாக இலிங்கவடிவத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கின்றார். இச்சன்னதியின் முன் மண்டபத்தின் தூண்களில் அமைந்துள்ள குதிரை வீரர்கள் அற்புதமான கலை  நுணுக்கம் நிறைந்தவை. இம்மண்டபத்தின் கூரையிலும், கருவறை சுவற்றிலும் அருமையான கற்சிற்பங்களை கண்டு களிக்கலாம்.

 இப்பகுதியின்  திருமணம் செய்து கொண்ட புதுமண தம்பதிகள் முதன் முதலில் மலை மேல் உள்ள அம்மையப்பனை வழிபட்டு அதன் பின்னரே தங்களது இல்வாழ்க்கையை துவங்குவது பாரம்பரியமாக கருதப்படுகிறது. எனவே முகூர்த்த நாளன்று ஏராளமான திருமணங்கள் இக்கோவிலில் நடைபெறுகின்றன. ஒரே நேரத்தில் நாகேஸ்வரர் சன்னதி முன் மண்டபத்திலும், ஆமை மண்டபத்தில் பல திருமணங்களும் நடைபெறுகின்றன.  வரிசை முறையில் ஒரு திருமணத்திற்கு பிறகு அடுத்தடுத்து வரிசையாக  திருமணங்கள் நடைபெறுகின்றன. 

இதைத் தவிர பஞ்சலிங்கம், நடராஜர், அம்மன், பிள்ளையார் சன்னிதிகளும் உள்ளன. தெற்குப்  பகுதியில் 63 நாயன்மார்களின் திருவுருவங்களை தரிசிக்கலாம்.  மலை மீது அமைந்துள்ள இக்கோவில் பண்டைய காலத்தில் நாகவழிபாட்டினையும், வேட்டுவர்கள் தங்களின் குலதெய்வமான பெண் தெய்வத்தை வணங்கிய இடமாகவும் திகழ்ந்துள்ளது.

இவ்வாலயம் தமிழக சிற்பக் கலைத்திறனுக்கு ஒரு சிறந்த உறைவிடமாகும் அர்த்தநாரீஸ்வரர் சன்னிதியின் முன் மண்டபத்தின்   வெளிப்புற தூண்களில் வரிசையாக  குதிரை அல்லது யாளி மீது உள்ள வீரர்களைத் தாங்கிய சுமார் 30 ஒற்றைக் கற்தூண்கள் சிற்ப வேலைப்பாடுமிக்கவை. இம்மண்டபத்தில் அமைந்துள்ள உள்  தூண்களில் பல்வேறு அற்புதமான நுணுக்கமான கலைவேலைப்பாட்டுடன் வடிவமைக்கப்பட்ட சிற்பங்கள் நிறைந்திருக்கின்றன. சிவபெருமானின் பல்வேறு வடிவங்களையும், கிருஷ்ண லீலைகளயும் கண்டு களிக்கலாம். சுந்தரர் முதலையுண்ட பிள்ளையை கொணர்ந்த சிற்பமும் அமைந்துள்ளது சிறப்பு.  மண்டபத்தின்  மேற்கூரையில் ஒரே கல்லினால் செதுக்கப்பட்ட பல வடிவங்களை உடைய கற்சங்கலி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இம்மண்டபத்தில் பலகணிக்கு எதிரே  ஆமை மண்டபம் என்று அழைக்கப்படும் சிறியமண்டபம் ஒன்று உள்ளது. இதன் மேல்பகுதி மரத்தாலானது. வைகாசி விசாக திருவிழாவின் போது இறைவனை இம்மண்டபத்தில் எழுந்தருள செய்து சிறப்பு வழிபாடு நடைபெறும். அப்போது இதன் மேல்பகுதியில் மலர்களை கொட்டி இயந்திரத்தின் மூலம் இயக்கினால் இதில் உள்ள துவாரத்தின் வழியாக ஒவ்வொரு பூவாக இறைவனின் மீது விழும் இந்நிகழ்ச்சியைக்காண கண்கோடி வேண்டும். இத்தலத்தில் முதலாம் இராஜராஜன், சுந்தரபாண்டியத் தேவர், மைசூர் கிருஷ்ணராஜ உடையார் காலத்திய கல்வெட்டுக்கள் உள்ளன.

இக்கோவிலின் தல விருட்சம் இலுப்பை மரம். இம்மரம் கோவிலின் வடக்குப் பகுதியில் நடராஜர் சன்னிதிக்கும், சிவலிங்க சன்னிதிக்கும் இடையில் அமைந்துள்ளது.


ஒரே தலையுடன் ஆறு பெண்கள்

இறைவன் அர்த்தநாரீஸ்வரரை திருஞானசம்பந்தர் முதலாம் திருமுறையின் 107-வது திருப்பதிகத்திலும், திருநீலகண்ட திருப்பதிகம் எனும் 116-வது திருப்பதிகத்திலும் பாடியுள்ளார்.  திருப்பைஞ்ஞீலி, திருஈங்கோய்மலை முதலான தலங்களுக்குச் சென்று பதிகங்கள் பாடி வழிபட்ட ஞானசம்பந்தர், வழியெங்கும் பல தலங்களை தரிசித்து வழிபட்டபடியே, திருச்செங்கோட்டுக்கு வந்தார். சிவனாரை தரிசித்து பதிகம் பாடியவர், அடுத்து திருநணா என்கிற பவானிக்குச் சென்றுவிட்டு, மலையின் மீதும் இறைவனின் மீது கொண்ட ஈர்ப்பால், மீண்டும் திருச்ச்செங்கோடு வந்து தங்கினாராம். அத்தனை அழகும் கம்பீரமும் வாய்ந்தது இம்மலை என வர்ணிக்கிறது ஸ்தல புராணம்.  இங்கு வந்தபோது, அவருடன் வந்த அடியார்களை 'நளிர்சுரம்' பற்றி வருத்த 'அவ்வினைக் கிவ்வினை' என்னும் பதிகம்பாடி, 'தீவினைவந்தெம்மைத் தீண்டப் பெறா திருநீலகண்டம்' என ஆணையிட்டு அந்நாடு முழுவதும் பிணிதீர்த்தார் என்பது பெரியபுராண வரலாறு. இன்றைய கொரோனா நுண்கிருமி வாதையிலிருந்து விடுபட இப்பதிகத்தை ஓதினால் அன்பர்கள் நலம் பெறலாம் என்பதால் இந்நூலில் இறுதியில் இடம் பெற்றுள்ளது. அப்ப்பதிகத்தின் முதல் பாடல் 

"அவ்வினைக் கிவ்வினையாமென்று சொல்லும்ஃதறிவீர்

உய்வினை நாடாதிருப்பதும் உந்தமக்கு ஊனமன்றே

கைவினை செய்தெம்பிரான் கழல் போற்றது நாமடியோம்

செய்வினை வந்தெமைத் தீண்டப் பெறா திருநீலகண்டம்".


இத்தலத்தில்  மாதந்தோறும் கீழ்கண்ட திருவிழாக்கள் சிறப்பாக நடைபெறுகின்றன. சித்திரையில் சித்ரா பெளர்ணமி, வைகாசியில் வைகாசி விசாகப்பெருந்திருவிழா, பத்திரகாளியம்மன் திருவிழா, ஆனியில் நடராஜர் திருமஞ்சனம், ஆவணியில் விநாயகர் சதுர்த்தி, புரட்டாசி மலைக்கோவில் கெளரி விரதம், நவராத்திரி விரதம், ஐப்பசியில் பெரிய மாரியம்மன் திருவிழா, கார்த்திகையில் திருமலையில் கார்த்திகை தீபம், மார்கழியில் ஆருத்ரா தரிசனம், தையில் திருமலை படி திருவிழா, மாசியில் மாசி மகம், சிவராத்திரி திருவிழா, பங்குனியில் உத்திரவிழா. சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் அமாவாசை தினத்தன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் படிவழியாகவும், மலைப்பாதை வழியாகவும் சென்று அம்மையப்பனை தரிசிக்கின்றனர். பௌர்ணமி, அமாவாசை மற்றும் அவரவர் ஜென்ம தினங்களில் மலையை கிரிவலம் வருகின்றனர்.


மலைக்கோவிலில், பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி, சஷ்டி உள்ளிட்ட மாதாந்திர விசேஷ நாட்களிலும், வைகாசி விசாக தேர் திருவிழா, புரட்டாசி மாத கேதார  கவுரி விரதம், பார்வதி தேவி மற்றும் பிருங்கி முனிவர் வழிபாடு செய்த மார்கழி மாத மரகதலிங்க வழிபாடு ஆகியவற்றில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். இனி இத்தலத்தின் சிறப்ப்ய் விழாக்களைப் பற்றி சுருக்கமாக காணலாம். 

கேதார கெளரி விரதம்

சிவபெருமான் தன் பாகத்தின் பாதியை அம்மைக்கு வழங்கிய நிகழ்ச்சி ஆவணி மாதம் வளர்பிறை அஷ்டமியில்  தொடங்குகிறது. கேதார கௌரி அம்ம்மனுக்கு சிறப்பு பூசைகள் நடைபெறுகின்றது.   புரட்டாசி கிருஷ்ணபட்ச தேய்பிறையில் சதுர்த்தியில் கேதார கெளரி விரத விழாவாக இன்றும் இம்மலையில் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. மஹாலய அமாவாசையன்று அர்த்தநாரீஸ்வரர் பிருங்கியுடன் திருக்காட்சியருளுகின்றார்.  இவ்விழாவின் போது பெண்கள் தன் கணவரின் நலன் வேண்டி காப்புக் கட்டிக்கொண்டு  சக்தியை (பார்வதி தேவியை) குறித்து 21 நாட்கள் விரதமிருப்பர்.

ஆதிநாகேஸ்வரர் பூஜை

அருள்மிகு நாகேஸ்வரர் வழிபாட்டு குழுவினரால் ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமை அன்று ராகுகாலம் 4-30 மணிமுதல் 6-00 மணிவரை சுவாமிக்கு சிறப்பு பூஜைகளும், வழிபாடுகளும் மற்றும் விளக்கு பூஜையும் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. நாகாச்சலம் என்று அழைக்கப்படும் இத்திருத்தலத்தில் நடைபெறுகின்ற இப்பூஜையில் கலந்து கொள்ளும், நாகசர்ப்ப தோஷம் மற்றும் பிற தோஷங்கள் உள்ள திருமணமாகாத பெண்கள், ஆண்களுக்கு திருமணம் நல்ல முறையில் அமையும் என்று மக்களால் நம்பப்படுகிறது.

வைகாசி விசாகப் பெருவிழா

பிரதி வருடம் வைகாசி மாதம் கொண்டாடப்படும் தேர்த்திருவிழாவானது திருச்செங்கோடு மாநாகரம் முழுவதும் 14 நாட்களுக்கு மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இத்திருவிழாவின் போது இறைவனின் தரிசனத்தை காண ஏழுகரைநாட்டு மக்களும் திருச்செங்கோட்டில் கூடியிருப்பார்கள். பிருங்கி முனிவரின் சாபத்தால் புலி வடிவம் பெற்றிருந்த சயங்கலம் என்ற நகரை தலைநகரமாக கொண்டு ஆட்சி செய்த பாண்டிய மன்னன் சிங்கவர்மன் தன் சாபவிமோசனத்திற்காக திருச்செங்கோடு வந்து நாகமலையை மூன்று முறை கிரிவலம் வந்து இறைவனை வணங்கி சுய உருவை பெற்றார். அந்நாளில் அப்புலி தங்கிய குகையை மக்கள் அன்று கூட்டுப்புலி குகை என்று கூறினர். இந்நாளில் அவ்விடத்தை கூட்டப்புலி என்றும் கூட்டப்பள்ளி என்றும் மக்கள் கூறுகின்றனர். இதனை போற்றும் வகையிலும் இறைவனுக்கு நன்றி செலுத்தும் வகையிலும் மன்னன் தன் நாடு சென்று ஏராளமான செல்வங்களுடன் திருக்கொடி மாடசெங்குன்றூர் வந்து இறைவனுக்கு பல திருப்பணிகளை செய்து பின் சிறப்புமிகு தேர்திருவிழாவினையும் கொண்டாடினார் என்று அறியப்படுகிறது.

 இத்திருவிழாவின் முதல் நிகழ்ச்சியாக கொடியேற்றம் நடைபெறும்    இத்திருவிழாவின் போது அர்த்தநாரீஸ்வரர், ஆதிகேசவபெருமாள் சுவாமிகள் மலைமேல் இருந்து கீழே நகருக்கு எழுந்தருளுகின்றனர். பின் தேரோட்டம், சுவாமிகள் திருத்தேரில் எழுந்தருள  திருக்கொடிமாடசெங்குன்றூரின் நான்குமாட வீதி வழியாக தேர்த் இழுக்கும் விழா மிகச்சிறப்பாக நடைபெறும் இவ்விழாவின் இறுதியில் அதாவது 14-ம் நாள் அதிகாலை இருள்பிரியும் நேரத்தில் தன் பரிவாரங்களுடன் மிகச்சிறப்பான வாண வேடிக்கையுடன் திருமலைக்கு செல்லுவார். இவ்வாறு திருச்செஙகோட்டு மக்களால் வைகாசி விசாகத்திருவிழா ஆண்டுதோறும் மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டுவருகிறது.  வைகாசி திருவிழாவின் 14 நாட்கள் நிகழ்ச்சிகள்

1 ஆம் நாள் திருவிழா - காலையில் அர்த்தநாரீஸ்வர சுவாமிக்கு கொடியேற்றம் நடைபெறும் அதன் பிறகு மண்டபக்கட்டளைகள் நடைபெறும்

2, 3-ஆம் நாள் திருவிழா - மலைமேல் உள்ள மண்டபத்தில் மும்மூர்த்திகளுக்கும் மண்டபக்கட்டளை நடைபெறும்

4 ஆம் நாள் திருவிழா - காலை ஆதிகேசவ பெருமானுக்கு கொடியேற்றம் நடைபெறும். பிறகு அன்று இரவு சுவாமிகள் மலைமேலிருந்து புறப்பாடு. மலை கீழ் வந்து வண்ண வாணவேடிக்கையுடன் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் நான்கு வீதிகளின் வழியாக வலம் வரும் இத்திருவிழா மிகச்சிறப்பாக நடைபெறுகிறது

5, 6, 7, 8 ஆம் நாள் திருவிழா - இத்திருவிழாவின் போது சுவாமிகளுக்கு திருச்செங்கோட்டை சுற்றி உள்ள ஊர்மக்களின் சார்பாக சிறப்பான பூஜைகள் மற்றும் கட்டளைகள் நடைபெறும்

9 ஆம் நாள் திருவிழா - காலை 9-00 மணிக்கு மேல் அர்த்தநாரீஸ்வரர், விநாயகர், செங்கோட்டு வேலவர் திருத்தேரில் எழுந்தருளல். அன்று விநாயகர், செங்கோட்டு வேலவர் திருத்தேர் வடம்பிடித்தல் நடைபெறும்

10 ஆம் நாள் திருவிழா - ஆதிகேசவ பெருமான் திருத்தேரில் எழுந்தருளல். அர்த்தநாரீஸ்வரர் திருத்தேர் வடம் பிடித்தல்

11 ஆம் நாள் திருவிழா - அர்த்தநாரீஸ்வரர் திருத்தேர் இழுத்தல் மிகச் சிறப்பாக நடைபெறும்

12 ஆம் நாள் திருவிழா - அர்த்தநாரீஸ்வரர் திருத்தேர் நிலைநிறுத்தம் மாலை ஆதிகேசவ பெருமான் திருததேர் இழுத்தல், நிலை சேர்த்தல் மிகச் சிறப்பாக நடைபெறும்.

13 ஆம் நாள் திருவிழா - சுவாமிக்கு மண்டபக்கட்டளையும் திருக்கல்யாணமும் சிறப்பாக நடைபெறும்

14 ஆம் நாள் திருவிழா - திருவிழாவின் இறுதி நாள் நிகழ்ச்சியாக நடைபெறும் திருவிழாவாவின் போது சுவாமிகள் 14-ம் நாள் அதிகாலை இருள்பிரியும் நேரத்தில் தன் பரிவாரங்களுடன் மிகச்சிறப்பான வாண வேடிக்கையுடன் திருமலைக்கு மீண்டும் செல்லுவார்.

-"செம்மையுடன்

 அங்குன்றா தோங்கும் அணிகொள் கொடிமாடச்

 செங்குன்றூர் வாழுஞ் சஞ்சீவியே" – என்று திருஅருட்பாவில் வள்ளலார் பாடிய திருச்செங்கோட்டுத் தலத்தின் தரிசனத்தை திவ்யமாக நிறைவு செய்த பின் விஸ்வரூப அனுமனையும், நரசிம்மரையும் தரிசிக்க  நாமக்கல்லுக்கு கிளம்பி சென்றோம். 

 


No comments: