Thursday, July 14, 2022

கொங்கேழ் தலங்கள் பத்தியுலா - 24

                                          திருச்செங்கோடு மாதொருபாகர் தரிசனம் -1


ஏகம்பத்துறை எந்தாய் போற்றி
பாகம் பெண் உரு ஆனாய் போற்றி

இக்கொங்கேழ் தலங்களின் யாத்திரையின் மூன்றாம் நாள் அதிகாலை எழுந்து திருச்செங்கோட்டில் மாதொரு பாகரையும், செங்கோட்டு வேலவரையும் தரிசிக்க சென்றோம். திருச்செங்கோட்டில் வந்து தங்கியதால் அன்றைய தினம் மதியத்திற்குள் திருச்செங்கோடு, நாமக்கல், தாராமங்கலம், அயோத்தியாபட்டினம் தரிசித்து இரவுக்குள் சென்னை திரும்பவும் முடிந்தது.  வாருங்கள் முதலில் திருச்செங்கோட்டை தரிசிக்கலாம் அன்பர்களே.

ஈங்கோய்மலை, மற்றும் கொடுமுடியில் நாம் கண்ட அதே வரலாறுதான் இம்மலை தோன்றியதற்கான வரலாறு ஆகும். தேவர்கள் எல்லாம் இரதமாகவும், பிரம்மன் சாரதியாகவும், மேரு மலை வில்லாகவும், வாசுகி நாணாகவும், மஹா விஷ்ணு அம்பாகவும், அக்னி தேவன் அம்பு முனையாகவும், வாயுவே விசையாகவும், விளங்க, திரிபுர அசுரர்களை அழிக்கப் புறப்பட்டு தன் புன்சிரிப்பால் திரிபுரங்களை அழித்தார். அதற்கு பின் ஒரு சமயம் ஆதிசேஷனுக்கும், வாயுவுக்கும் தங்களில் யார் பெரியவர் என போட்டி வந்தது. ஆதிசேஷன் தனது ஆயிரம் படங்களால் மேரு மலையை இறுக சுற்றிக்கொண்டார்.  வாயுபகவான் தன் பலத்தை நிரூபிக்க சகல அண்டங்களும் குலைய, மலைகள் நிலை குலைய,  நட்சத்திரங்கள் உதிர, பூமி அதிர சண்டமாருதமாக வீசினான். சகல உயிரினங்களும் படும் துன்பத்தை கண்டு இரக்கம் கொண்ட முனிவர்கள் அனந்தனிடம் வேண்டிக்கொள்ள அவன்  ஒரு சிகரத்தை பற்றியிருந்த ஒரு படத்தை  சற்றே தளர்த்தினான். எனவே வாயு அச்சிகரத்தை பெயர்த்தெறிந்தான். பறந்த அச்சிகரம் மூன்று துண்டுகளாகி மூன்று இடங்களில் விழுந்தன. அவையாவன தெற்கு சமுத்திரத்தில் விழுந்த துண்டு இலங்கை தீவானது, இரண்டாவது துண்டு திருகோணமலையானது. மூன்றாவது துண்டானது நாவலந்தீவில், தெற்கு திசையில் மூவேந்தர்களில் முதன்மையானவர்களான,   சேரர்களின் கொங்கு தேசத்தில்  அனந்தனின் ஒரு படத்துடன்  செம்மலையாக விழுந்தது. அது திருச்செங்கோடு, நாககிரியாக விளங்குகிறது. இம்மலைக்கு பிரளய காலத்திலும் அழிவில்லை என்று தலபுராணம் கூறுகிறது.




இக்கோவில் ஈரோட்டிலிருந்து 20 கி.மீ. தொலைவிலும், சேலத்திலிருந்து 45 கி.மீ.தொலைவிலும் அமைந்துள்ளது.  அருகில் உள்ள தொடர்வண்டி நிலையம் சென்னை – கோயமுத்தூர் பாதையில் உள்ள சங்ககிரி துர்க்கம் ஆகும்.

மலையின் அடிவாரத்தில் பரிமளவல்லி அம்பாள் (சுகந்த குந்தளாம்பிகை) உடனுறை  கயிலாசநாதர்  ஆலயம் உள்ளது. இவர் நிலத்தம்பிரான் என்றழைக்கப்படுகின்றார்.   திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில், தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் 211வது தலம். கொங்கு நாட்டு தலங்களில் நான்காவது  சிவத்தலமாகும். திருஞானசம்பந்தர் இரு பதிகங்கள் பாடியுள்ளார். தேவாரப் பதிகங்களில் ‘கொடிமாடச் செங்குன்றூர்’ என்று பாடப்பெற்ற சிவ தலம், தற்போது ‘திருச்செங்கோடு’ என்று கூறப்படுகிறது. இறைவனுக்கு அர்த்தநாரீஸ்வரர் என்றும், மலைத்தம்பிரான் என்றும்  அம்பாளுக்கு பாகம்பிரியாள் என்றும் பெயர் வழங்கப்பட்டு வருகிறது. செங்கோட்டு வேலவர் எனப்படும் முருகனுக்கு தனி சன்னிதி அமைந்துள்ளது. 

 

கோடு என்றால் மலை என்றும் மலையுச்சி என்றும் அர்த்தம். செங்கோடு, செங்குன்றம், செம்மலை, தெய்வத்திருமலை  என பல பெயர்களுடன் திகழ்கிறது திருச்செங்கோடு. செவ்வண்ணக் கல்லால் அமைந்த செங்கோட்டு மலை என்று அறியலாம்.

சம்பந்தர், கபிலதேவ நாயனார், பட்டினத்துப் பிள்ளையார், சேக்கிழார், இத்தலத்தைப் பாடியுள்ளனர். இத்தலம் பற்றிய குறிப்புக்கள் சிலப்பதிகாரம், தேவாரம், கந்தர் அநுபூதி, கந்தர் அலங்காரம் முதலியவைகளில் உள்ளன. இத்தலத்திற்கு வீரகவிராஜபண்டிதரால் பாடப்பட்ட தலபுராணம் உள்ளது.  இனி இத்தலத்தின் தனி சிறப்புகள் சிலவற்றைப் பற்றிக்காணலாம் அன்பர்களே.

சீர்கெழு செந்திலும், செங்கோடும், வெண்குன்றும் என்று இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் போற்றிய இத்தலம்  கொங்கேழ் தலங்களில் மலை மேல் அமைந்த ஒரே சிவத்தலம்.

தோலும் துகிலும் குழையும் சுருள் தோடும்
பால் வெள்ளை நீறும் பசுஞ் சாந்தும் பைங்கிளியும்
சூலமும் தொக்க வளையுமுடைத் தொன்மைக்
கோலமே நோக்கிக் குளிர்ந்தூதாய் கோத்தும்பீ!

என்று மாணிக்கவாசகர் திருக்கோத்தும்பியில் பாடியபடி மாதொருபாகராய் சிவபெருமான் அருள் பாலிக்கும் தலம். மூலவர் அர்த்தநாரீஸ்வரர் வெண்பாஷணத்தால் ஆன சுயம்பு திருமேனி கொண்டு அருள்பாலிக்கிறார். சிவபெருமான் மட்டுமல்ல அவரது அம்சமான முருகரும் செங்கோட்டு வேலவராக அருள் பாலிக்கின்றார். சைவ-வைணவ ஒற்றுமைக்கு இலக்கணமாக ஆதி கேசவராக பெருமாளும் உடன் அருள் பாலிக்கின்றார். நாக தோஷ பரிகாரத்தலம். சிவபெருமான் மதுரையில் திருவிளையாடல் புரிந்தது போல் முருகப்பெருமான் திருவிளையாடல் புரிந்த தலம்.   அது போல் மதுரையில் கல் யானை கரும்பு உண்டது போல இத்தலத்தில் நந்தி கடலை உண்டதாம். ஆளுடையப்பிள்ளையார் பதிகம்பாடி அன்பர்கள் விஷ சுரம் தீர்த்த தலம். விறன்மிண்ட நாயனார் அவதாரத் தலம்.

அர்த்தநாரீஸ்வரர் என்ற பெயரில், அர்த்தம் என்றால் பாதி என்று பொருள்; நாரி என்றால் பெண் என்று பொருள். சிவன் பாதி, பார்வதி பாதி என்று ஆணுருவம், பெண்ணுருவம் இணைந்து இருப்பதால்  அர்த்தநாரி + ஈஸ்வரர் (சிவன்) என்பது அர்த்தநாரீஸ்வரர் என்ற பெயர் கொண்டது. 

அர்த்தநாரீஸ்வரர்  எனும் பெயர் மட்டுமின்றி வேறு சில பெயர்களும் இருக்கின்றன. 1) உமையொரு பங்கன் 2) மங்கையொரு பாகன் 3) மாதொரு பாகன், என இம்மூன்று பெயர்களாலும் கூட அர்த்தநாரீஸ்வரர் அழைக்கப்படுகிறார்.

சிவனின்றி சக்தியில்லை, சக்தியின்றி சிவனில்லை என்பதை விளக்கும் உருவமாக திகழ்கிறது இந்த அர்த்தநாரீஸ்வரர் உருவம். வாழ்வியலில், ஆணின்றி பெண்ணும், பெண்ணின்றி ஆணும் சாத்தியமில்லை இல்லை என்ற பொருளையும் தருகிறது அர்த்தநாரீஸ்வரர் மூர்த்தம். 

காஞ்சி கைலாசநாதர் கோயிலில் இருக்கும் அர்த்தநாரீஸ்வரர் வடிவமே தென்னிந்தியாவிலேயே காணப்படும் பழைய வடிவங்களில் ஒன்று எனக் கூறப்படுகிறது. இங்கு பார்வதி வீணையுடனும், சிவன் காளையில் ஏறி அமர்ந்திருக்கும் கோலத்தில் காணப்படுகிறார்கள். 


இத்திருச்செங்கோடு தலத்தில்  மூலவராக அமைந்திருக்கிறார் அர்த்தநாரீஸ்வரர். இங்கு உமாதேவியாருக்கு அர்த்தநாரீஸ்வரி, பாகம்பிரியாள் என்ற பெயர்களும் இருக்கின்றன. இங்கு அர்த்தநாரீஸ்வரர் மாதொருபாகன் என்றும் அழைக்கப்படுகிறார். 

அம்மை சிவபெருமானின் திருமேனியில்  பாகம் பெற்றதால் பாகாயி என்றனர். இச்சொல்லே மருவி பாவாயி என வழங்குகிறது. இறைவனை குல தெய்வமாக கொண்டவர்கள் தங்கள் ஆண் குழந்தைகளுக்கு அர்த்தநாரீ என்றும் பெண் பிள்ளைகளுக்கு பாவாயி என்றும் பெயரிடும் சம்பிரதாயம் உண்டு.


வடக்கு இராஜ கோபுரம் - செங்கோட்டு வேலவர் விமானம் 


இனி அர்த்தநாரீஸ்வரராக எம்பெருமான் எழுந்தருளியதற்கான காரணம் என்ன என்று காணலாம். ஒரு சமயம் கயிலை மலை மீது பார்வதி தேவியுடன், சிவபெருமான் அமர்ந்திருந்தார். அப்பொழுது சிவனைக் தரிசிக்க வந்த பிருங்கி முனிவர்  வண்டு வடிவம் எடுத்து அம்மையை விலக்கி சிவனை மட்டும் வணங்கி வலம் வந்தார்.  ஆனால் பார்வதி தேவியை வணங்கவில்லை.  அதனால் பார்வதி தேவி கோபமடைந்தார்.  சினம் கொண்ட பார்வதி தேவி பிருங்கியின் உடலில் உள்ள சதை மற்றும் இரத்தம் நீங்குமாறு சாபமளித்தார்.  பிருங்கி முனிவர் சதையும் இரத்தமும் நீங்கி எலும்பு தோல் போர்த்திய உடம்பினைப் பெற்றார்.  சிவன் தம்முடைய தளர்வடைந்த நிலையினைக் கண்டு இரக்கமுற்றார்.  சிவன் பிருங்கி முனிவருக்கு மூன்றாவது காலாக ஊன்று கோலினை அளித்தார். ஊன்று கோலினை பெற்ற முனிவர் மகிழ்ச்சி அடைந்து, சிவனின் முன்பாக நடனம் ஆடி பக்தியைச் செலுத்தினார்.  இதனைக் கண்ட பார்வதி தேவி மனம் வருந்தி சிவனில் பாதி உருவை அடையவேண்டும் என்று கருதி சிவனை நோக்கி கேதார கௌரி விரதம்  என்ற கடுமையான தவத்தினை மேற்கொண்டார். சிவன் மனமகிழ்ந்து தம்முடலில் பாதியினைத் தருவதாக வரமளித்தார்.  பார்வதி தேவி இடப்பக்கம் பெற்று சிவனுடன் ஒன்றிணைந்து அர்த்தநாரீஸ்வரராகக் காட்சி அளித்தார்.  பிருங்கி முனிவர் இருவரையும் வணங்க வேண்டிய நிலை ஏற்பட்டு வணங்கினார். திருச்செங்கோட்டில் மூலவரின் பாதத்தின் அருகில் மூன்று கால்களுடன் பிருங்கி முனிவரையும்,  கேதார கௌரியாகிய உமையம்மை வழிபட்ட மரகத லிங்கத்தையும் தரிசிக்கலாம்.  


மதுரையம்பதிக்கு வந்த ஹேமநாதப் புலவரிடம் விறகு விற்கும் எளியோனாக வந்து, ஈசன் வென்றதைப் போலவே,  ஈசனின் மகனான செங்கோட்டு வேலவர், திருச்செங்கோடு நகரின் பெருமையை உலகறியச் செய்ய ஆடிய திருவிளையாடல் பற்றி காணலாம்.  செங்கோட்டு வேலவரின் மீது தணியாத பக்திகொண்டவர் குணசீலர் என்ற பக்தர். ஒருமுறை திருச்செங்கோட்டுக்கு பாண்டிப்புலவரேறு என்ற அறிஞர் ஒருவர் வருகை புரிந்தார். இவரை வாதில் வெல்வது என்பது முடியாத காரியம். கல்வியில் இமயமான இவரை எதிர்த்து, எல்லாப் பகுதி புலவர்களும் தோற்றனர். இந்நிலையில், அவர் திருச்செங்கோட்டுக்கு வருகை தந்தார். அப்போது அவர், தன்னை எதிர்க்க திருச்செங்கோட்டில் யாருமே இல்லை என்ற நிலையில் கோயிலுக்கு வந்தார். அங்கு, குணசீலர் என்ற முருக பக்தரைச் சந்தித்தார். அவர்களுக்குள் எழுந்த வாதம் இறுதியில் சவாலாக முடிந்தது. குணசீலரை நாளை போட்டிக்கு வர அழைப்பு விடுத்தார் பாண்டிப்புலவரேறு. இது என்ன சோதனை என்று குணசீலன் இரவெல்லாம் செங்கோட்டு வேலவரை வேண்டிக் கொண்டிருந்தார்.

மறுநாள் காலை, போட்டிக்காக பாண்டிப்புலவரேறு மலையின்மீது ஏறிக்கொண்டிருக்கும்போது, நாக மலையைப் பார்த்து “இது சர்ப்ப சைலம் என்றால் ஏன் படமெடுத்து ஆடவில்லை என்று பொருள் வரும் படிப் “சமரமுகத் திருச்செங்கோடு சர்ப்பசயிலமெனில் அமரிற்படம் விரித்து ஆடாததென்னே” என்று பாட ஆரம்பித்தார் ஆனால்  அப்பாடலை முடிக்க முடியாமல் திணறினார். எத்தனை யோசித்தும் அடுத்த  அடி  வரவே இல்லை. அங்கு ஆடு மேய்த்துக் கொண்டிருந்த சிறுவன் ஒருவன் உடனே, “அஃது குமரன் திருமால் முருகன் மயில்வாகனம் கொத்துமென்றே" -  என்று பாடி அவரை வியக்க வைத்தான். ஆடு மேய்க்கும் சிறுவனுக்கு இத்தனை அறிவா என வியந்து, அவனைப் பற்றிக் கேட்க, அவனோ, தான் குணசீலரின் கடைமாணாக்கன் என்று சொன்னான். புத்தி தெளிந்தது பாண்டிப்புலவரேறு என்னும் புலவருக்கு. வந்திருப்பது முருகன் என்றும், அவனது அருளைப்பெற்ற குணசீலரை எதிர்ப்பது ஆபத்து என்று உணர்ந்தார். குணசீலரிடம் மன்னிப்பு கேட்டு, செங்கோட்டு வேலவரை வணங்கி விடைபெற்றார் அப்புலவர். மலை அடிவாரத்தில் அந்நிகழ்ச்சி நடைபெற்றது. இன்றும் வைகாசிப் பெருவிழாவில் இச்சம்பவம் நினைவு கூறப்படுகிறது.

மேற்கு இராஜகோபுர முன் மண்டபம்

கோவை மாவட்டத்தில் உள்ள காடாம்பாடி என்ற ஊரைச் சேர்ந்தவர் பாததூளி. இவரது மனைவி சுந்தரியம்மாள். இத்தம்பதியருக்கு மகப்பேறு வாய்க்கவில்லை. எனவே அவர்கள் திருச்செங்கோடு உமையொருபாகனை வழிபட்டு உமைபாகன் எனும் மகனைப் பெற்றனர். உமைபாகனுக்கு 5 வயது ஆகியும் பேசாமல் ஊமையாக இருந்தமையால், தேரோட்டத்தில் கலந்து கொண்டு தேர்க்காலில் மகனை உருட்டிவிட்டனர். உமைபாகன் மீது தேர் ஏறிச் சென்றப் பின்பு அவன் பேசத்தொடங்கினான். இவ்வதிசயத்தின் சாட்சியாக அவ்விடத்தில் மடம் நிறுவி தான, தருமம் செய்து வந்துள்ளனர். அவர்களது மரபில் பிறந்தவர்கள் ஒன்றிணைந்து திருச்செங்கோடு மலை மீது  மேற்கு இராஜகோபுரம் அமைத்துத் தந்துள்ளனர். இவ்வரலாற்றை ஒரு கல்லில் பொறித்து இராஜகோபுரத்தின் அருகில் பதித்துள்ளனர்.

No comments: